முன்னோக்கு

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்துவோம்! எதேச்சதிகாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நாடெங்கிலுமான நகரங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் துணை இராணுவப்படைப்பிரிவுகளை அனுப்பி இருப்பதானது மக்களுக்கு எதிரான ஒரு போர் பிரகடனத்திற்கு நிகராக உள்ளது. அப்பட்டமாக குடியுரிமைகள் சட்டத்தை மீறி, அரசியலமைப்பைத் தூக்கியெறிவதற்கான அச்சுறுத்தலுடன், வெள்ளை மாளிகையின் சதிகாரர்கள் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்த முயன்று வருகிறார்கள். “அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்தை நேர்மையுடன் நிர்வகிப்பது" என்ற அவரின் பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறி, ட்ரம்ப் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைக்கவும் மரண தண்டனை விதிக்கவும் சதித்திட்டம் தீட்டி வருகிறார்.

கடந்த இரண்டு வாரங்களாக, உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் (DHS) கூட்டாட்சி முகவர்கள் ஒரேகன் போர்ட்லாந்தின் வீதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மாநில மற்றும் நகர அரசுகளின் ஆட்சேபணைகளை மதிக்காமல் வெள்ளை மாளிகை இந்த படைப்பிரிவுகளை அணிதிரட்டி உள்ளது. இவற்றை அது பொலிஸ் வன்முறைக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை இலக்கு வைத்து முன்பினும் அதிக வன்முறையான ஒடுக்குமுறை நடவடிக்கையைத் தொடுக்க பயன்படுத்தி வருகிறது.

இராணுவ உடைகளுடனான அடையாளம் வெளிக்காட்டாத முகவர்கள் நிராயுதபாணியான போராட்டக்காரர்களைப் பிடித்து, உரிய காரணமின்றி இடந்தெரியாத இடத்திற்கு கொண்டு செல்வதற்காக அடையாளம் குறிக்கப்படாத வாகனங்களில் அவர்களை ஏற்றிச் சென்றுள்ளனர். சுடக்கூடிய துப்பாக்கிகள் ஏந்திய SWAT குழுக்கள் அமைதியான போராட்டக்காரர்களைக் குற்றஞ்சாட்டி, கைத்தடிகளைக் கொண்டு அவர்களை அடித்து, கண்ணீர் புகைக்குண்டுகளையும், பலத்த ஒளி-ஒலி எழுப்பும் குண்டுகளையும் வீசியுள்ளன. ஒரு போராட்டக்காரரின் தலையில் இரப்பர் தோட்டாவால் இலக்கு வைத்து சுடப்பட்டதால், அதில் அவர் தலையில் காயமேற்பட்டது.

ட்ரம்பின் இந்த அதிரடிப்படை துருப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்கு வைத்து போர் தொடுப்பதற்காக கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை எந்திரத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. இதில் புலம்பெயர்வு மற்றும் சுங்க அமுலாக்கத்துறை (ICE) மற்றும் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை (CPB) இன் முகவர்களும் இடம்பெற்றுள்ளனர், இவை ஒவ்வொன்றும் செனட்டால் உறுதி செய்யப்படாத "இடைக்கால" இயக்குனர்களால் தலைமைதாங்கப்படுவதுடன், அவ்விதத்தில் ஜனாதிபதிக்கு மட்டுமே பொறுப்புக்கூற கட்டுப்படுகின்றன. குறிப்பாக BORTAC என்றழைக்கப்படும் CPB இன் உள்ளார்ந்த SWAT குழு அச்சுறுத்தும் விதத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது, இது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் உள்ளடங்கலாக அமெரிக்காவின் பிரதான வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளில் உள்ளடங்கிய ஒரு மூர்க்கமான போர்களத்தில் பரிசோதிக்கப்பட்ட அமைப்பாகும்.

நியூயோர்க், சிகாகோ, கிளீவ்லாந்து, மில்வாக்கி, பிலடெல்பியா, டெட்ராய்ட், பால்டிமோர், ஆக்லாந்து மற்றும் அல்புகுர்க் உட்பட மற்ற நகரங்களிலும் கூட்டாட்சி தலையீடு செய்யப்படுமென கடந்த வாரம் ட்ரம்ப் அறிவித்தார்.

ஜூலை 22 பத்திரிகையாளர் கூட்டத்தில், ட்ரம்ப், "நமது பொலிஸ் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க, அப்புறப்படுத்த, கலைக்க" மற்றும் "நமது சட்ட அமுலாக்க வீரர்கள்" மீது பழிசுமத்த முயலும் "அதிஇடது" மற்றும் "தீவிரக் கொள்கை" என்றவர் குறிப்பிடும் இயக்கத்தைக் கண்டித்தார்.

மின்னிசொடாவின் மினொயாபொலிஸில் மே 25 ஜோர்ஜ் ஃபுளோய்டு படுகொலையைத் தொடர்ந்து அந்நாட்டை மூழ்கடித்துள்ள போராட்டங்கள் தான் ட்ரம்பின் அணித்திரட்டலுக்கான போலிக்காரணங்களாக உள்ளது என்றாலும், ட்ரம்பின் நடவடிக்கைகள் இன்னும் பரந்தளவிலான கவலைகளால் உந்தப்பட்டுள்ளன.

அமெரிக்க ஒரு சமூக மற்றும் அரசியல் வெடிஉலையாக உள்ளது. இந்த தொற்றுநோய் அமெரிக்க சமூகம் மற்றும் அதன் அரசியல் அமைப்புகளது செயற்பிறழ்ச்சி நிலையை அம்பலப்படுத்தி உள்ளது. இலாபம் மற்றும் செல்வவளத்திற்கான முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் இடைவிடாத முனைவுக்கு சமூக தேவைகள் அனைத்தையும் முற்றிலுமாக அடிபணிய வைத்திருப்பது இப்போது கட்டவிழ்ந்து வரும் பேரழிவுக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.

அமெரிக்காவில் 150,000 இக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர், ஒவ்வொரு நாளும் 1,100 இக்கும் அதிகமானவர்கள் கொடூரமாக இந்த கணக்கில் சேர்ந்து வருகிறார்கள். அமெரிக்கா மூன்று மில்லியன் நோயாளிகளைக் கடந்து வெறும் 14 நாட்களில், வியாழனன்று அது கொரோனா வைரஸின் நான்காவது மில்லியன் நோயாளியைப் பதிவு செய்தது. டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா, அரிசோனா மற்றும் மற்ற மாநிலங்களிலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஆனால் இந்த வைரஸ் பரவலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்ற போதினும் கூட, ட்ரம்ப் நிர்வாகம், தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளுக்குத் திரும்ப வேண்டும் அல்லது வேலை விட்டுவிட வேண்டுமென்றும், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது.

தொழிலாளர்கள் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, CARES சட்டத்தின் கீழ் கடந்த மார்ச்சில் கொண்டு வரப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சமூக உதவி பெரிதும் குறைக்கப்பட உள்ளது அல்லது முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. கடந்த வாரம் காங்கிரஸ் சபை கூட்டாட்சி வழங்கும் வேலைவாய்ப்பின்மை உதவிகளின் நீடிப்பை நிறைவேற்றாமல் மறுமதிப்பீடு செய்தது. கடந்த வாரம் வேலைவாய்ப்பின்மைக்கான உதவி கோரியவர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனாக அதிகரித்த அதேவேளையில், வெளியேற்றுவதன் மீதான மத்திய அரசின் கடன் இடைநிறுத்தக் காலம் காலாவதி ஆனது. இதனால் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான ஆபத்தில் விடப்பட்டுள்ளனர்.

சில வாரங்களுக்குள், மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்கள் கொடிய வறுமை நிலை, வீடற்ற நிலை மற்றும் பட்டினியால் அச்சுறுத்தப்படும். ஒரு சமூக போராட்ட வெடிப்பை எதிர்பார்க்கும் ட்ரம்ப் நிர்வாகம், பாரியளவில் ஒடுக்குமுறைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

அதேநேரத்தில், அமெரிக்கா சீனாவுக்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுள்ளது, இது உலகத்தை ஒரு உலக போரின் விளிம்புக்கருகில் தள்ளி வருகிறது. ஹோஸ்டனில் சீனத் தூதரகத்தை மூடுவதென ட்ரம்ப் நிர்வாகம் முன்பில்லாத முடிவை எடுத்த பின்னர் அந்த தூதரகத்திற்குள் அமெரிக்க முகவர்கள் உள்நுழைந்த நிலையில், வியாழக்கிழமை வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ சீனாவுக்கு எதிராக ஓர் ஆத்திரமூட்டும் ஆவேச உரையை வழங்கினார். பொம்பியோவின் பேச்சுக்கு முன்னர், இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்களும் தாக்கும் குழுக்களும் தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய போர்க்கப்பல்களுடன் "அதிநவீன" போர் பயிற்சிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டிருந்தன.

மத்திய அரசானது பொலிஸை அனுப்பியமை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப் முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாகும், இது எட்டு வாரங்களுக்கு முன்னர் ரோஸ் கார்டனில் அவரின் ஜூன் 1 தேசிய உரையில் அறிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு வெளியே அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவப் பொலிஸ் ஒரு வன்முறையான தாக்குதலைத் தொடங்கிய நிலையில், ட்ரம்ப் தன்னைத்தானே "சட்ட ஒழுங்கிற்கான" ஜனாதிபதியாக அறிவித்ததுடன், பொலிஸ் வன்முறையை எதிர்த்து போராடுபவர்களை "உள்நாட்டு பயங்கரவாதிகளாக" முத்திரைக் குத்த 1807 கலகம் ஒடுக்கும் சட்டத்தைக் கையிலெடுக்கவும் அவர் அச்சுறுத்தி வருகிறார்.

ட்ரம்பின் ஆரம்ப ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டீஸ் உட்பட இராணுவத்திற்குள் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டது. ஏனென்றால் அதுபோன்றவொரு கடுமையான நடவடிக்கைக்குப் போதுமான தயாரிப்பு செய்யப்பட்டிருக்கவில்லை என்று அது நம்பியது. ஆனால் இராணுவம் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் என்று நம்புவது அப்பாவித்தனமான அபாயமாக இருக்கும். அவர் கட்டுப்பாட்டில் மற்ற படைகளும் இருப்பதாகவும், இராணுவத்தை அழைப்பதற்கு முன்னதாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ட்ரம்புக்குக் கூறியுள்ள தளபதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் தான், ஐயத்திற்கிடமின்றி வெள்ளை மாளிகையின் சமீபத்திய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ICE மற்றும் BORTAC இன் துணைஇராணுவப் படைகளுக்கு பதிலாக ஏனைய பிரிவுகளால் தாக்குதல்கள் பலப்படுத்தப்பட்டது.

“இங்கே அது நடக்காது,” அதாவது அமெரிக்காவில் ஒருபோதும் ஒரு சர்வாதிகாரம் இருக்க முடியாது என்ற பழைய பழமொழி இப்போது நிராகரிக்கப்பட்டு வருகிறது. அது நடக்கலாம் என்பது மட்டுமல்ல, அது நடந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் நியூயோர்க் டைம்ஸின் ரோஜர் கொஹென் நாஜி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் ஜேர்மனியில் நிலவிய நிலைமையுடன் அமெரிக்காவின் நிகழ்வுகளை ஒப்பிட்டார். அவரின் ஜூலை 24 கட்டுரையான "ஜேர்மன் பார்வையிலிருந்து அமெரிக்க பேரழிவு" என்பதில், கோஹென் பிரௌன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியரும் பேர்லினில் அமெரிக்க பயிலகத்தின் முன்னாள் தலைவருமான மைக்கெல் ஸ்ரைன்பேர்க்கின் கருத்துக்களை மேற்கோளிட்டார்:

ஒவ்வொரு நாளும் அமெரிக்க பேரழிவு மோசமடைந்து வருவதாக தெரிகிறது என்றாலும், குறிப்பாக போர்ட்லாந்தின் சம்பவங்கள் பாசிசத்தின் ஒரு வகை மூலோபாய பரிசோதனையாக என்னை எச்சரிக்கை செய்துள்ளன. அடாவடித்தனமான இராணுவ கன்னைகள், நகரங்களின் ஸ்திரப்பாட்டைக் குலைப்பது, இன்னும் இதர பிற நடவடிக்கைகள் உட்பட, 1933 இல் ஜேர்மனியில் ஜனநாயக வீழ்ச்சியின் கையேடு சரியான இடத்தில் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது.

ஆனால், ஹிட்லருக்கு இருந்ததைப் போல ட்ரம்புக்கு கையிருப்பில் ஒரு பாரிய பாசிசவாத இயக்கம் இல்லை. அவர் அதிவலது சக்திகளை முடுக்கிவிட முயன்று வருகின்ற அதேவேளையில், எகிப்தில் ஜெனரல் அப்தெல் அல்-சிசி அல்லது இலத்தீன் அமெரிக்க இராணுவ சர்வாதிகாரிகளின் சர்வாதிகாரத்திற்கு ஒத்த விதத்தில், அவரின் பிரதான கருவி அரசு எந்திரமாக உள்ளது. கோஹென் அவரே கூட, 1970 களின் இறுதியிலும் 1980 களின் ஆரம்பத்திலும் இரத்தந்தோய்ந்த இராணுவ சர்வாதிகாரத்தால் ஆட்சி செய்யப்பட்ட ஆர்ஜென்டினாவில் அனுபவங்களிலிருந்து நேரடியான சமாந்தரங்களை வரைகிறார்.

இராணுவ ஆட்சிக்குப் பின்னர் 1980 களில் ஆர்ஜென்டினா குறித்து எழுதுவதற்கு நான் செலவிட்ட ஆண்டுகள், வீதிகளிலிருந்து இடதுசாரி அரசியல் எதிர்ப்பாளர்களைப் பிடித்து செல்ல அடையாளம் குறிக்கப்படாத வாகனங்களை —ஆர்ஜென்டினா விசயத்தில் ஃபோர்ட் ஃபால்கன் வாகனங்களை— பயன்படுத்துவது பற்றி குறிப்பாக எனக்கு உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் "காணாமல் போயிருந்தனர்", இந்த வார்த்தையின் காலங்கடந்து நீடித்திருக்கும் உளவியல்ரீதியான பேரழிவை நான் எண்ணற்ற கண்ணீர் நிறைந்த அறைகளில் அளவிட்டிருந்தேன்.

ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்போ கோழைத்தனம் மற்றும் அலட்சியத்தின் கலவையாக உள்ளது. ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவர்கள், நீதிமன்றங்களில் பலவீனமாக சவால்விடுப்பதற்கும் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக அல்ல "குற்றத்திற்கு" எதிராக துணை இராணுவப்படைகளைப் பயன்படுத்துவதற்கு அழைப்புவிடுப்பதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர். போராட்டக்காரர்களைப் பிடிப்பதன் மீது கூட்டாட்சி பொலிஸ் அதிகாரத்தைச் சவால்விடுத்த ஒரேயொரு பிரதான வழக்கில், வெள்ளிக்கிழமை போர்ட்லாந்து நீதிபதி ஒருவர் கைதுகள் தொடரலாமென தீர்ப்பளித்தார்.

ட்ரம்பின் ஜூன் 1 உரைக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியினர் தளபதிகளிலிருந்து ட்ரம்ப் வரையிலான அனைத்து எதிர்ப்பையும் கைவிட்டு, அவர்களை அரசியல் அதிகாரத்தின் நடுவர்களாக தூக்கிப் பிடித்தது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் கூறுகையில், நவம்பருக்குப் பின்னர் ட்ரம்ப் அதிகாரத்திலிருந்து இறங்க மறுக்கலாம் என்பதே அவரின் "மிகப்பெரிய பெருங்கவலை" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதுபோன்றவொரு சூழலில் அவரைப் பலவந்தமாக வெளியேற்ற இராணுவம் தலையீடு செய்யுமென அவர் நம்புவதே அவரின் விடையிறுப்பாக உள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில், ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் சொந்த வலதுசாரி ரஷ்ய-விரோத பிரச்சாரம் அடிப்படையிலான அவர்களின் பதவிநீக்க குற்றவிசாரணையின் தோல்வியைக் கண்டிருந்தனர். ட்ரம்ப் அப்பட்டமாக அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்கின்ற நிலையில், ட்ரம்பைப் பலவந்தமாக வெளியேற்றுவதற்கான பாரிய ஆர்ப்பாட்டங்களை அவர்கள் செய்யவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு புதிய பதவிநீக்க குற்றவிசாரணைக்கு கூட எந்த ஆலோசனையும் கூறப்படவில்லை.

ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க வெள்ளை மாளிகை இப்போது அரசியல் சூழ்ச்சியின் கட்டுப்பாட்டு அறையாக விளங்குகிறது.

இந்த சூழ்நிலைக்கு நீண்டகாலமாக தயாரிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் களவாடப்பட்டு இப்போது இரண்டு தசாப்தம் ஆகியுள்ளது, அப்போது அமெரிக்க உச்ச நீதிமன்றம் புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்குத் தலையிட்டு, தேர்தலை ஜோர்ஜ் டபிள்யு. புஷ் வசம் ஒப்படைத்தது, அதை ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்கவே இல்லை.

ஓராண்டுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்கள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" அறிவிப்பதற்காக ஆளும் வர்க்கத்தால் முடிவில்லாத போருக்கும் பொலிஸ் அரசு முறைமைகளைப் பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கும் சாக்குபோக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. நவம்பர் 2002 இல் இருகட்சிகளது ஒருமனதான ஆதரவுடன் உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஸ்தாபிக்கப்பட்டது, இதன் கீழ் தான் ICE மற்றும் CPB அதிகாரம் செயல்படுகின்றன. அது, தேசிய பாதுகாப்புச் சட்டம் (PATRIOT Act), அமெரிக்க வடக்கு கட்டளையகம், குவான்டனாமோ வளைகுடா சிறைமுகாம் கட்டமைப்பு, சிஐஏ சித்திரவதைக் கூடம், NSA உளவுபார்ப்பு என பல நடவடிக்கைகளின் பாகமாக இருந்தது.

இந்த அதிகாரங்கள் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் விரிவாக்கப்பட்டன. அது நீதி விசாரணையின்றி அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்ய ஜனாதிபதிக்கு உரிமை இருப்பதாக பிரகடனம் செய்து, விக்கிலீக்ஸின் ஜூலியன் அசான்ஜை இன்னலுக்கு உட்படுத்துவதை முன்னெடுத்தது மற்றும் அமெரிக்காவுக்குத் தப்பி வரும் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்ய சித்திரவதை முகாம்களின் வலையமைப்புக்குச் சட்டப்பூர்வ கட்டமைப்பை உருவாக்கியது.

பெருநிறுவன உயரடுக்கின் குற்றகரத்தன்மைக்கு ட்ரம்ப் ஆளுருவாக உள்ளார். ஆனால் ஜனநாயகத்தின் முறிவும் சர்வாதிகாரத்தின் அபாயமும் அவரின் உளவியல் சார்ந்த தனிமனித பண்பின் விளைவுகள் கிடையாது.

வேறு ஒவ்வொன்றையும் போலவே, இந்த தொற்றுநோயும் சர்வாதிகாரத்தை நோக்கிய போக்கின் அடியிலிருக்கும் இதைத் தீவிரப்படுத்தி வேகப்படுத்தி உள்ளது. பில்லியனர்கள் தங்களைத்தாங்களே பாரியளவில் செல்வசெழிப்பாக்கிக் கொள்ள இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டுள்ள அதேவேளையில், பரந்த பெருந்திரளான மக்களோ முற்றிலும் கடுமையான நிலைமையை முகங்கொடுத்துள்ளனர். ஆயிரக் கணக்கான எண்ணற்ற உயிர்களை விலையாக கொடுத்து, அதன் நலன்களைச் செயல்படுத்துவதற்கு இந்த செல்வந்த தட்ட தீர்மானகரமாக இருப்பது ஜனநாயகத்துடன் பொருந்துவதாக இல்லை. சமூக யதார்த்தத்துடன் அரசியல் வடிவங்கள் அணிசேர்ந்து வருகின்றன.

அவரின் எல்லா ஈவிரக்கமற்றத்தன்மையை பொறுத்த வரையில், ட்ரம்பின் நடவடிக்கைகள் அவநம்பிக்கைமிக்க மற்றும் அச்சத்திற்குள்ளான ஒரு மனிதரின் நடவடிக்கைகளாக உள்ளன. அவரும் அவர் நிர்வாகமும் வெறுக்கப்படுகின்றன என்பது அவருக்குத் தெரியும். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கப் போவதாக அவர் கூறும் அச்சுறுத்தலே, அவர் நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவில்லை என்பதையும் வன்முறை மூலமாக மட்டுமே அது அதிகாரத்தில் இருக்க முடியும் என்பதையும் ஒப்புக் கொள்வதாக உள்ளது.

தொழிலாளர்கள் தாக்குதல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எல்லா வேலையிடங்களிலும் தொழிலாள வர்க்க குட்டியிருப்பகுதிகளிலும், துணை இராணுவப் படை பிரிவுகளின் நடவடிக்கைகள் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

ஆனால், அனைத்திற்கும் மேலாக, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது, சாரத்தில், முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் அரசுக்கு எதிரான ஒரு போராட்டம் என்பதை தொழிலாளர்களும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் வர்க்க போராட்ட அணுகுமுறைகள் பயன்படுத்த வேண்டிய வேண்டும். ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஆளும் உயரடுக்குகளின் சூழ்ச்சிகளைத் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தை மாற்றி சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக எதிர்கொள்ளப்பட வேண்டும்.

அவர்களின் கோபத்தை எந்தவொரு முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் திருப்பி விடுவதற்கான எல்லா முயற்சிகளையும் தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். போர் ஊக்குவிப்பு மூலமாகவோ அல்லது இனவாத-வகுப்புவாத அரசியல் பிளவின் மூலமாகவோ அவர்களின் ஒற்றுமையை உடைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அவர்கள் விட்டுக்கொடுப்பின்றி எதிர்க்க வேண்டும். “வெள்ளையின அமெரிக்கா" மற்றும் "கறுப்பின அமெரிக்காவுக்கு" இடையில் தான் அடிப்படை மோதல் இருப்பதாக ஜனநாயகக் கட்சி ஊக்குவிக்கும் வாதம் மோசடியானதும் பிற்போக்குத்தனமானதும் ஆகும். இல்லை, மோதல் தொழிலாள வர்க்கத்திற்கும் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்கும் இடையே நிலவுகிறது.

சம்பவங்களே இதை எடுத்துரைக்கின்றன, முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ட்ரம்ப் அடுத்து என்ன செய்வாரென பொறுத்திருந்து பார்ப்போம் என்பதற்கு பதிலாக, தொழிலாள வர்க்கம் நடவடிக்கையில் இறங்க வேண்டும். முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதைப் விட அதிக வேகமாக முன்நகருமா என்பதை அருவமானமுறையில் தீர்மானிக்க முடியாது. அது போராட்டத்தின் மூலமாகவே தீர்மானிக்கப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சி உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் அவசரமாக அழைப்புவிடுகின்றது: போராட்டக் களத்தில் ஒதுங்கி இருப்பதை இப்போது கைவிட வேண்டிய நேரமிது! இப்போது ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரமிது! சோசலிச சமத்துவக் கட்சியிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் சகோதரக் கட்சிகளிலும் இணையுங்கள்.

Loading