மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டையும் மற்றும் 2016 இல் கைது நடவடிக்கையின் போது பிரெஞ்சு இளைஞரான அடாமா ட்றவுரேயையும் (Adama Traoré) பொலிஸ் படுகொலை செய்தது குறித்து பொலிஸ் வன்முறையை எதிர்த்தும், நீதி கோரியும் சனிக்கிழமை மாலை மத்திய பாரிஸில் உள்ள Place de la Republique சதுக்கம் நிரம்பி வழியும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாரிஸில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 15,000 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கணிசமானளவில் பொலிஸ் குறைத்து மதிப்பிட்டது. இந்த எண்ணிக்கையே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ட்விட்டர் காணொளி காட்சி உண்மையில் இதைப்போல பல மடங்கு அதிகமாகவே உண்மையான எண்ணிக்கை இருந்தது என தெரிவித்தது. அதிலும், ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்திருந்த அடாமா ட்றவுரேக்கான குழு 120,000 பேர் பங்கேற்றதாக கூறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் இளைஞர்களும் மற்றும் ஒவ்வொரு நிறம் மற்றும் இனத்தைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றிருந்தனர். பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலும் பல நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, அவற்றில் பல ஆர்ப்பாட்டங்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உள்ளூர் குழுக்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
ஐரோப்பா முதல் நியூசிலாந்து வரை நூறாயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தூண்டுதலளித்ததான ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலை தொடர்பாக அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு பல வாரங்களுக்கு பின்னர், பிரான்சில் நடைபெற்ற இரண்டாவது பாரிய ஆர்ப்பாட்டமாக இது இருந்தது. அடாமா ட்றவுரே இன் கொலை மூடிமறைக்கப்படுவதை எதிர்த்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவரது குடும்பத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஃபுளோய்ட்டின் கொலை கூட, ஜூன் 2 அன்று ட்றவுரே குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில் மருத்துவ நிபுணர் ஒருவர் வழங்கிய மறு அறிக்கையுடன் ஒத்துப்போனது. பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் பெயர் அறியப்படாத மருத்துவ நிபுணரால் வழங்கப்பட்ட அந்த அறிக்கை, ட்றவுரே இருதய வீக்கத்தால் இறந்துவிட்டார் என்று நிறைவு செய்தது. இது மூன்று பொலிஸ்காரர்கள் வன்முறையாக ட்றவுரேயை கைது செய்தபோது அவர் இருந்த “நிலை சார்ந்த மூச்சுத்திணறல்” ஏற்பட்டு இறந்துபோன காரணத்தை சுட்டிக்காட்டியது. அதாவது பொலிஸ்காரர்கள் அவரை கைது செய்கையில் அவரது வயிற்றில் படும்படி அவரது முகத்தை கீழே அழுத்திய நிலையில் வைத்து நெருக்கி அவரை கைது செய்தனர்.
அடாமாவின் சகோதரியான ஆஷா ட்றவுரே, ஆர்ப்பாட்டத்தின் போது பேசியதுடன், தனது சகோதரரைக் கொன்ற பொலிஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று கோருவதற்கு தொடர்ந்து அணிதிரளும் படி அழைப்பு விடுத்தார்.
“மினியாபொலிஸில் மே 25 அன்று ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்பவர் வெள்ளை பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்டது எனது சகோதரரின் மரணத்தை நேரடியாக எதிரொலிக்கிறது,” என்று அவர் கூறினார். மேலும் அவர், “இன்று இந்த நடவடிக்கைகளை எதிர்த்து பிரெஞ்சு மக்கள் கண்டனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது வெறுமனே ட்றவுரே குடும்பத்தினருக்கான பிரச்சினை என்பதல்ல, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான பிரச்சினை என்பதல்ல, மாறாக இது பிரெஞ்சு மக்களுக்கானது. நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதோ, எந்த மத பின்னணியைச் சேர்ந்தவர்கள் அல்லது என்ன பாலினம் என்பதோ முக்கியமல்ல; மரணம் அல்லது இனவெறி மற்றும் சமூக வன்முறை ஆகியவற்றின் வெறும் பார்வையாளராக எவராலும் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது” என்றும் கூறினார்.
அடாமாவை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் ஆஷா கூறினார், குறிப்பாக அடாமாவை கைது செய்த மூவரில் ஒருவர் குறைந்தது மூன்று அல்லது நான்கு சந்தர்ப்பங்களில் அடாமாவை தனிப்பட்ட முறையில் கைது செய்துள்ளார். சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் வரை எங்களது குடும்பத்தினர் அரசாங்கத்தை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்கள் மறுப்போம் என்று கூறினார்.
அவர்களில் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அடங்குவர். ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவியான 18 வயதான ஸமிரா என்பவர் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார் அதற்கு காரணம் “அடாமாவுக்கு நடந்தது பற்றி நான் கேள்விப்பட்டபோது, இது எனக்கும் நடந்திருக்கக்கூடும் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன் என்றார். மேலும், உங்களுக்கான ஆவணங்கள் உங்களிடம் இல்லாத வரை, நீங்கள் ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. எந்த நேரத்திலும் பொலிசார் உங்களை விசாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய அம்மா என்னை அழைத்தபோது நான் வெளியே செல்கையில் கூட என்னிடம் ஆவணங்கள் உள்ளதா என்று என்னைக் கேட்கிறார்கள்” என்றும் கூறினார்.
ஜூன் 2 அன்று, ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுப்பதற்காக சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது என்று பொலிஸ் அதிகாரி அறிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் குடியரசு சதுக்கத்தில் இருந்து ஓபேரா மாளிகை வரை அணிவகுத்துச் செல்லவிருந்ததாகவும், ஆனால் அணிவகுப்பு நடப்பதைத் தடுக்க பொலிஸ் அனைத்து வழிகளையும் எஃகு தடுப்புகள் கொண்டு தடுத்து சுற்றி வளைத்தனர் என்று ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் காணப்படும் காணொளிகள் கலகப் பிரிவு பொலிசாரின் குழுக்கள் தனிப்பட்ட எதிர்ப்பாளர்களை கொடூரமாகத் தாக்குவதை காட்டுகின்றன, அப்போது அங்கு பிற்பகல் முழுவதுமாக கண்ணீர்ப்புகையும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களையும் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் தாக்குவதற்கு பயன்படுத்திய அதே பொலிஸ் படையினரின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குவதன் பேரில் தற்போதைய ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பிற்கும் மக்ரோன் நிர்வாகம் பதிலிறுத்துள்ளது.
உள்துறை அமைச்சரான கிறிஸ்தோப் காஸ்டனெர், பொலிசார் ஒருவரை கழுத்தை நெரித்து தாக்கும் முறையை தடுப்பதற்கும் மற்றும் இனவெறிச் செயல்களைச் செய்யும் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்வதற்கும் உறுதிமொழிகள் வழங்கியது உட்பட, ஆரம்பத்தில் வெற்றுத்தனமான மற்றும் அர்த்தமற்ற “சீர்திருத்தங்கள்” பற்றி அறிவித்தார்.
பொலிசாரின் அடக்குமுறை நடவடிக்கைகளை குறைப்பதற்கு எதுவும் செய்யாத இந்த ஒப்பனை திட்டங்கள் கூட, அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த பொலிஸ் தொழிற்சங்கங்களால் கண்டிக்கப்பட்டது. காவல்துறை பயிற்சி பள்ளிகளில் இனிமேல் கழுத்தை நெரித்து மூச்சு திணறடிக்கும் பயிற்சி வழங்கப்பட மாட்டாது என்றாலும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான “மாற்று” முறையை தீர்மானிக்க ஒரு உள் ஆணையம் அமைக்கப்படும், இதில் காவல்துறையினருக்கு மின் அதிர்ச்சிகருவிகள் வழங்குவதை விரிவுபடுத்துவதும் அடங்கும் என்று வெள்ளியன்று காஸ்டனெர் அறிவித்தார். மேலும் தனது முந்தைய கூற்றுக்கள் “முட்டாள்தனமானவை” என்றும், அவரால் “தவறாகப் பேசப்பட்டவை” என்றும் அவர் கூறினார். மேலும், பொலிசாரின் “இனவெறிச் செயல்கள்” குறித்த விசாரணைகளையும் பொலிசாரே மேற்கொள்வர் என்றும் தெரிவித்தார்.
ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சியில் (La France Insoumise-LFI) உள்ள பெயரளவிலான “இடது” பிரிவு உட்பட, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், காவல்துறை மற்றும் முதலாளித்துவ அரசுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் விரோதமாக உள்ளது. காவல்துறையின் மறுகட்டமைப்பிற்கு அல்லது மறுஒழுங்கமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத அழைப்புகளுக்குப் பின்னால் அவர்களை வழிநடத்தும் முயற்சியில் மெலோன்சோன் அனைத்து முக்கிய ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றார்.
சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில், மெலோன்சோன் BFM தொலைக்காட்சிக்கு இவ்வாறு தெரிவித்தார்: “பொலிஸ் இல்லாத சமூகத்தைப் பற்றி கனவு காண நமக்கு உரிமை உண்டு. இது ஒரு தடைசெய்யப்பட்ட கனவு அல்ல, இது ஒரு அழகான கனவு, என்றாலும் அது ஒரு கனவாக மட்டுமே இருக்க வேண்டும்.” எல்லா இடங்களிலும் காவல்துறை இருக்க வேண்டும், “ஆனால், ஒழுங்கமைக்கப்பட்ட, ஒழுக்கமான, கீழ்ப்படிதலுள்ள, மேலும் தன்னை ஒதுக்கப்பட்ட ஒரு கோட்டையைப் போல ஒழுங்கமைப்பட்டதாக இல்லாமல் காவல்துறை என்பது இருக்க வேண்டும்.”
இதையொத்த வகையில், மெலோன்சோனின் சக LFI தலைவரான பிரான்சுவா ரூஃபான் (Francois Ruffin), தனது முதன்மை அரசியல் பொறுப்பாக இருக்க வேண்டியது, “போரை தவிர்ப்பதாகும், அதாவது பொலிஸ் மற்றும் மக்களுக்கு இடையிலான கடுமையான கைகலப்பை தவிர்ப்பதாகும். [அவர்களுக்கு இடையேயான] நம்பிக்கை மீறல் புள்ளிவிபரங்களிலிருந்து தெளிவாக தெரிகின்றது. அதை நாம் எவ்வாறு மீட்டெடுப்பது?” என்று சிந்திப்பதாக அவர் முன்னரே தெரிவித்திருந்தார்.
மெலோன்சோனும் LFI உம் நிதிய உயரடுக்கின் வர்க்க உணர்வுள்ள பிரதிநிதிகளாக பேசுகிறார்கள். பொலிஸ் படையினருக்கு அவர்கள் வழங்கும் பாதுகாப்பு என்பது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சவாலில் இருந்து நிதிய தன்னலக்குழுவின் செல்வத்தையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் பணியில் “ஆயுதமேந்திய அமைப்புகளாக” செயல்படும் காவல்துறையின் சமூக செயல்பாட்டை அவர்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் இருந்து உருவானது.
பொலிஸ் படையினர் மத்தியில் வழமையாக நிலவும் இனவெறி மற்றும் பாசிச சார்பு கண்ணோட்டத்தை இந்த வர்க்க செயல்பாட்டின் விளைவு என்பதாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கறுப்பினத்தவரும் மற்றும் வெளிநாட்டில் பிறந்த தொழிலாளர்களும் பெரும்பாலும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பொலிசாரால் குறிவைக்கப்படுவார்கள் என்றாலும், பொலிஸ் வன்முறை ஒவ்வொரு பின்னணியையும் கொண்ட மற்றும் தோல் நிறம் சார்ந்த ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிராகவே நிகழ்த்தப்படுகிறது.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக மூன்று டசின் மக்கள் பொலிசாரால் கொல்லப்படுகிறார்கள் என்ற கணக்கீடு ஒருபுறம் இருந்தாலும், பரிமாணங்களின் படி பல ஒழுங்கைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான பிரிவினர் பலவீனமாக்கப்பட்டு, வன்முறைமிக்க தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, மக்ரோன் நிர்வாகம் தனது சிக்கனத் திட்ட நிரல் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸை பயன்படுத்தி வந்துள்ளது. மேலும், “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களின் போதும், மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்; இரப்பர் தோட்டாக்கள் மற்றும் மின்வெட்டொளி கையெறி குண்டுகளின் (flash-bang grenades) தாக்குதலில் டசின் கணக்கானோர் தங்களது கண்களையும் கைகளையும் இழந்தனர்.
ஃபுளோய்ட் மற்றும் ட்றவுரே ஆகியோரை பொலிசார் கொன்றது குறித்து பல இன எதிர்ப்புக்கள் வெடித்ததன் பின்னணியில், அரசு வன்முறை, போர், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மை மற்றும் கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கு மக்ரோன் நிர்வாகத்தின் குற்றம்மிக்க கவனக்குறைவுடன் கூடிய விடையிறுப்பால் உருவான தீவிரப்படுத்தப்பட்ட நிலைமைகள் ஆகியவை குறித்து இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரவலாக வளர்ந்து வரும் சீற்றம் பற்றி ஆளும் வர்க்கம் நன்கறிந்ததே.
Le Monde நாளிதழில் புதன்கிழமை வெளிவந்த “கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், எலிசே ஒரு கிளர்ச்சி அலை குறித்து அஞ்சுகிறது: ‘எங்களால் இளைஞர்களை இழக்க முடியாது,’” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை, “இளைஞர்களிடையே எழும் கிளர்ச்சியின் அலைகளைக் காண்கையில், நிர்வாகியின் இருதயத்தில் உருவாகும் பயத்தை இனி யாரும் மறைக்க மாட்டார்கள். அமெரிக்கா, பிரான்ஸ் இல்லையென்றாலும், ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் விவகாரம் பிரான்ஸ் மக்கள்தொகையில் இளைமையான பிரிவின் மோசமான நிலைமைகளுக்கான காரணியாக செயல்படுகிறது” என்று தெரிவிக்கிறது.