Print Version|Feedback
Resolution of the SEP (US) Fifth National Congress
The Resurgence of Class Struggle and the Tasks of the Socialist Equality Party
சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஐந்தாவது தேசிய காங்கிரஸ் தீர்மானம்
வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்
8 August 2018
இத் தீர்மானம் 2018 ஜூலை 22-27 வரை அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் ஐந்தாவது தேசிய காங்கிரசால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த் காங்கிரசுக்கு ஒரு அறிக்கை வழங்கினார். “ஜூலியன் அசாஞ்சை விடுதலைசெய்!” என்ற தீர்மானத்தையும் காங்கிரஸ் நிறைவேற்றியது.
அறிமுகம்
1. உலக முதலாளித்துவ அமைப்புமுறையானது சீரழிந்து செல்லும் வாழ்க்கை நிலைமைகள், செல்வம் அதீதமாக ஓரிடத்தில் குவிந்திருப்பது, தீவிரமடையும் வர்க்க மோதல், மற்றும் நீண்டகாலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் ஸ்தாபனங்கள் மதிப்பிழப்பது ஆகியவற்றால் தூண்டப்பட்ட பரந்த-அடிப்படையிலான அதிருப்தியை குணாம்சமாய் கொண்ட ஒரு கூர்மையான சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் காலகட்டத்தில் நுழைந்திருக்கிறது. முதலாளித்துவம் அதன் இயல்பிலேயே நியாயமற்றதாக இருக்கிறது என்பதும் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையான மாற்றங்கள் அவசியமாக உள்ளன என்பதுமான உணர்வு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களது கணிசமான பிரிவுகள் மத்தியில் பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த பரந்த-அடிப்படை கொண்ட உணர்வானது முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கி செலுத்தப்படும் ஒரு வெகுஜன அரசியல் இயக்கமாக இன்னும் அபிவிருத்தி கண்டிருக்கவில்லை என்கிற அதேவேளையில், சோசலிசத்துக்கான ஆர்வமும் ஆதரவும் துரிதமாக பெருகிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய நிறுவனமய-அதிகாரத்துவ முகமைகளான, பிரதானமாய் முதலாளித்துவ-ஆதரவு சமூக ஜனநாயக மற்றும் அதனுடன் தொடர்புடைய முன்னாள்-சீர்திருத்தவாத கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மூலமாக அதன் மீது திணிக்கப்பட்டிருந்த அரசியல் கால்விலங்குகளை தொழிலாள வர்க்கம் உடைத்தெறியத் தொடங்குவதன் அறிகுறிகள் தெளிவாகத் தென்படுகின்றன.
2. 1930களுக்குப் பிந்திய காலத்தில் உலக முதலாளித்துவம் இத்தகையதொரு அடிப்படையான நெருக்கடியை எதிர்கொண்டதில்லை. உண்மையில், அன்றாட செய்தி அறிக்கைகள் 1930களின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. அந்த தலைவிதிநிர்ணய தசாப்தத்தில் போல, முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரிப்பதுடன், கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அச்சுறுத்துகின்றன. அத்துடன் 1930களில் போல, உலக ஏகாதிபத்தியத்தின் “கொடுமைக் குறியீடு” (brutality index) சீராக அதிகரிக்கிறது. மனிதாபிமான நடிப்புகள் அகன்று கொண்டிருக்கின்றன. காஸாவில் நிராயுதபாணியான பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்படுவது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளால் நியாயப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அக்கொலைகள் பாராட்டையும் பெறுகின்றன. அமெரிக்க-விநியோக ஆயுதங்களைக் கொண்டு யேமனுக்கு எதிராக சவுதி அரேபியாவால் இழைக்கப்படும் படுபயங்கர அட்டூழியங்கள் ஊடங்களில் செய்தியாக முன்வைக்கப்படுவதும் கூட அரிதாக இருக்கிறது. ஏகாதிபத்தியப் போர்களாலும் பொருளாதாரக் கொள்கைகளாலும் நிராதரவாகவும் வீடிழந்தவர்களாகவும் ஆக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள், ஏதோ அவர்கள் வாழ்வதே அநாவசியம் என்பதைப் போல நடத்தப்படுகின்றனர். அமெரிக்காவின் ஜனாதிபதி வட கொரியா போன்ற ஒரு சிறிய நாட்டின் மீது, “உலகம் ஒருபோதும் கண்டிராத ஆவேச”த்திற்கு அதாவது, பத்து மில்லியன் கணக்கில் உயிரிழக்கச் செய்யக்கூடிய ஒரு அணுஆயுதத் தாக்குதலுக்கு, பகிரங்கமாக அச்சுறுத்துகிறார்; அமெரிக்காவிலும் சரி அல்லது சர்வதேச அளவிலும் சரி ஆளும் வட்டாரங்களில் எந்த குறிப்பிட்டுச் சொல்லப்படும்படியான எதிர்வினையும் அதற்கு இல்லை. மத்திய தரைக்கடலில் புலம்பெயர் மக்கள் மூழ்குவதும், அச்சுறுத்தப்பட்ட அகதிகள் அடைப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்படுவதும், இன்னும் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதும் கூட, “புதிய இயல்பு” ஆகியிருக்கின்றன. மனிதனால் உண்டாக்கப்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு —இவை ஆயிரக்கணக்கானோரை உயிரிழக்கச் செய்திருக்கின்றன, பத்து மில்லியன் கணக்கில் இடம்பெயரச் செய்திருக்கின்றன மற்றும் ஒரு உலகளாவிய பேரழிவுக்கு அச்சுறுத்துகின்றன— ஆகியவை இந்த நெருக்கடிகளை மேலும் மோசமடையச் செய்திருக்கின்றன.
3. முதலாளித்துவ நெருக்கடியின் வீச்சு, ஆளும் வர்க்கத்தின் அரசியல், கலாச்சார மற்றும் தார்மீக சீரழிவில் வெளிப்படுத்தப்படுகிறது. வரிசையாக ஒவ்வொரு நாடாய், அதிதீவிர தேசியவாத கட்சிகள் அரசின் மிக உயர்ந்த மட்டங்களுக்கு உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததன் எண்பத்தியைந்து ஆண்டுகளின் பின்னர், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அப்பட்டமான பாசிஸ்டுகள் (ஜேர்மனிக்கான மாற்றுகட்சி) பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றனர், இத்தாலியில் பாசிச Lega கட்சி ஒரு கூட்டணி அரசாங்கத்தில் இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய சமூக ஜனநாயக மற்றும் பழமைவாதக் கட்சிகள், அவற்றின் அடிவரை இற்றுப்போய், அதி-வலது வேலைத்திட்டத்திற்கு தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கங்கள், சமூக எதிர்ப்பில் பீதியடைந்து, எதேச்சாதிகார ஆட்சிவடிவங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன; இணையத்தை தணிக்கை செய்வதற்கான ஒரு பரிதாபகரமான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கின்றன.
4. வர்க்க ஆட்சியின் உலகளாவிய நெருக்கடி அதன் மிக முன்னேறிய வெளிப்பாட்டை உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் காண்கிறது, உலக அமைப்புமுறையின் அத்தனை முரண்பாடுகளையும் இந்நாடு தனக்குள் குவித்து வைத்திருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டமையானது அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையை சமிக்கை செய்தது. அவரது முதலாளித்துவ எதிரிகள் அவரை நரகத்தில் இருந்து எழுந்து வந்த அசுரனைப் போல சித்தரிப்பதற்கு முனைகின்ற போதிலும், ட்ரம்ப் —இவரது செல்வம் பல தசாப்தங்களாக நிதி, ரியல் எஸ்டேட், கேஸினோ சூதாட்டம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளின் மூலமாக மோசடியாக ஈட்டப்பட்டதாகும்—அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஒட்டுமொத்த அமைப்புமுறையின் நடவடிக்கைகளையும் வியாபித்திருக்கின்ற குற்றவியல்தனம் ஆகியவற்றின் உருவடிவத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
5. அமெரிக்க ஏகாதிபத்தியம் உதயமான சமயத்தில், அமெரிக்கா உலகின் தலைமை சக்தியாக எழுந்து கொண்டிருந்த சமயத்தில், ஜனாதிபதி தியோடார் ரூஸ்வெல்ட் “மென்மையாக பேசுங்கள் ஒரு பெரும் கம்பை கையில் வைத்திருங்கள்” (“Speak softly and carry a big stick”) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார். ஆனால், அதன் உலகளாவிய எதிரிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி காணக்காண, அமெரிக்க ஏகாதிபத்தியமானது அதன் உலகளாவிய நிலையைத் தக்கவைக்க இராணுவ வலிமையைப் பயன்படுத்தவே அதிகமாக முனைந்து வந்திருக்கிறது. “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவதற்கு” ட்ரம்ப் விடுக்கும் மூர்க்கத்தனமான மிரட்டல்கள் தேசிய நெருக்கடி மற்றும் வீழ்ச்சியின் ஒரு அச்சமுற்ற உணர்வில் இருந்து எழுவதாகும். ஆனால் அமெரிக்காவின் “மகத்துவத்தை” மீட்சி செய்வதற்கு அவர் பிரயோகிக்க விழையும் வழிமுறைகள் கண்டிப்பாக நாசத்திற்கே இட்டுச் செல்ல முடியும். ட்ரம்ப்பின் “அமெரிக்கா முதலில்” கொள்கையானது இரண்டாம் உலகப் போர் முதலாக அமெரிக்காவின் மேலாதிக்கம் எதன் மூலமாக செலுத்தப்பட்டு வந்திருந்ததோ அந்த ஸ்தாபனங்களை பொறுப்பற்று சிதைத்துக் கொண்டிருக்கிறது. மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள முக்கியமான கூட்டாளிகளை அந்நியப்படுத்திக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்ல, அமெரிக்க கண்டத்தின் உள்ளும் கூட கனடா மற்றும் மெக்சிகோ மீதான ஏககாலத்திலான கண்டனங்கள் மூலமாக அமெரிக்காவை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
6. அமெரிக்காவின் பாரம்பரியமான கூட்டாளிகளுக்கு, பொருளாதாரத் தடைகளது அச்சுறுத்தல்களுக்கு பயந்து அமெரிக்காவின் கட்டளைகளுக்கு தலைவணங்குவதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறுவழியிருக்காது என்று ட்ரம்ப் கணக்குப் போடுகிறார். ஆனால், அவர் தொடர்ந்து அவமதிக்கின்ற முதலாளித்துவ ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களது கோபம் மற்றும் அதிருப்திகளைக் காட்டிலும், ட்ரம்ப்பின் ஆவேசங்கள் உலகெங்குமான பரந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற கோபம்தான் அமெரிக்காவுக்கு மிகவும் அபாயகரமானதாகும். தனது ஏகாதிபத்திய வேட்டைகளை “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகள்” ஆகிய பதாகைகளின் பின் மறைப்பதற்கு அமெரிக்கா செய்கின்ற முயற்சிகள், ஏற்கனவே தசாப்த கால போர்களால் அரிக்கப்பட்டு, முழுமையாக மதிப்பிழந்து விட்டிருக்கிறது. உலகெங்குமான பரந்த மக்கள் மத்தியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எழுகின்ற உலகளாவிய எதிர்ப்பு ஒரு முக்கியமான அரசியல் காரணியாக, குறிப்பாக அது அமெரிக்காவிற்குள் பெருகும் சமூக தீவிரப்படலுடன் ஒரேநேரத்தில் நிகழ்வதுடன் மற்றும் அதனுடன் சங்கமிக்கின்ற நிலையில், உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
7. ட்ரம்ப் நிர்வாகமானது தாக்குப்பிடிக்க முடியாத சமூக சமத்துவமின்மை மட்டங்களைக் கொண்ட ஒரு நாட்டின் தலைமையில் இருக்கிறது. அதன் நடவடிக்கைகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் முட்டுச் சந்தின் வெளிப்பாடுகளாகும். ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், “பயங்கரவாதத்தின் மீதான போர்” “புலம்பெயர்வோர் மீதான போர்” ஆக உருமாறிக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக செலுத்தப்படுகின்ற ஜனநாயக-விரோத மற்றும் போலிஸ் அரசு நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்தின் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி கொள்கைகளுக்கு எழுகின்ற அத்தனை சமூக எதிர்ப்புக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.
8. ஜனநாயக ஆட்சி வடிவங்களுடனான முறிவு, அரசு எந்திரத்திற்குள்ளான ஆவேச மோதல்களுடன் கரம்கோர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ஜனாதிபதி அவரது கோபாவேச வார்த்தைக்கணைகளை வீசுகிறார், அதேவேளையில் ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்காவில் ரஷ்யர்கள் “பிளவினை விதைக்கின்ற”தாக நவ-மெக்கார்த்திய கற்பனாகதைகளை விரித்துரைக்கின்றனர். ட்ரம்ப்புக்கு ஜனநாயகக் கட்சியில் இருந்தோ அல்லது ஊடகங்களின் பகுதிகளில் இருந்தோ வருகின்ற எதிர்ப்பில், கண்ணியத்தை விடுங்கள், ஏதோவொரு மூலையில் முற்போக்கானதும் கூட ஏதும் கிடையாது. அவை ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிற்போக்கான கன்னையையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை —குறிப்பாக ரஷ்யா தொடர்பாக— அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால மூலோபாய நலன்களைப் பலவீனப்படுத்துகின்றன என்ற அடிப்படையில் தான் அவர்கள் பிரதானமாக ட்ரம்ப்பை எதிர்க்கின்றனர்.
9. ஆளும் வர்க்கம் பழைய ஆட்சி வடிவங்களை அகற்றி, சமூகத்தின் ஒருசிலவராட்சி குணாம்சத்துக்கு ஏற்றவாறான அரசின் கட்டமைப்புகளைக் கொண்டுவருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிபோக்கு, சமூக சமத்துவமின்மைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் எழுகின்ற பெருகிய மற்றும் கூடிய நனவுடனான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. தொழிற்சங்கங்களால் பல தசாப்த காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், வர்க்கப் போராட்டத்தின் மிக அடிப்படையான வடிவமான வேலைநிறுத்த நடவடிக்கைகளது அளவானது ஒரேயடியாக உயர்ந்திருக்கிறது. இந்த உலகளாவிய நிகழ்ச்சிபோக்கில் ஈரானில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்காவில் மாநில அளவிலான ஆசிரியர் வேலைநிறுத்தங்களது ஒரு வரிசை, ஜேர்மனியில் பாரிய வேலைநிறுத்தங்கள், பிரான்சில் வலது-சாரி தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் அணிதிரள்வு மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுமையிலும் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களது வேலைநிறுத்தங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
10. வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படலானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மீதும் மற்றும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் மீதும் பிரம்மாண்டமான பொறுப்பை சுமத்துகிறது. தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கை நிலைமைகள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதலை எதிர்த்து நிற்பதற்கு முனைகிறது. ஆயினும், முதலாளித்துவத்தின் நெருக்கடியும் போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் ஆளும் உயரடுக்குகள் செய்கின்ற நனவான தயாரிப்புகளும் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவைக் காட்டிலும் மிகத் துரிதமான வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் யதார்த்தத்தை அங்கீகரிப்பது, வரலாற்றுப்பார்வையற்ற அகநிலைவாதத்தின் மிக கிட்டப்பார்வையுடையதும் பயனற்றதுமான வடிவமான அவநம்பிக்கையை, நியாயப்படுத்துவதாக ஆகாது. மாறாக, தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்திருக்கும் வரலாற்றுக்கடமைகளை அவசியமாக்குகின்ற மட்டத்திற்கு அதன் அரசியல் நனவை உயர்த்துவதற்கு, கடந்த கால வர்க்கப் போராட்ட வரலாற்று அனுபவங்கள் மற்றும் இன்றைய தின புறநிலை நெருக்கடி ஆகியவை குறித்த ஒரு புரிதலில் வேரூன்றிய, மாபெரும் உறுதிப்பாட்டை அது கோருகிறது.
11. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை நெருக்கடிக்கும் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவுக்கும் இடையிலான உறவு மாறாத ஒன்றல்ல, மாறாக மாற்றமடையும் ஓன்றாகும். வழமையான நம்பிக்கைகளை பலவீனப்படுத்தி சமூக நனவை தீவிரப்படுத்தத்தக்க வெடிப்பான நிகழ்வுகளுக்கு —எல்லாவற்றையும் விட, வர்க்க மோதலின் உண்மை அனுபவத்தில் இருந்து எழுபவை— பஞ்சமிருக்கப் போவதில்லை. தத்துவார்த்த உட்பார்வையாலும் வரலாற்று அறிவினாலும் பக்குவப்படுத்தப்பட்ட ஒரு மார்க்சிசக் கட்சி மட்டுமே, “திடீரென” வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்களது வடிவை எடுக்கத்தக்க ஆழ-வேர்கொண்ட நிகழ்ச்சிபோக்குகளை கண்டறிய முடியும், பகுப்பாய்வு செய்ய முடியும், அவற்றுக்குத் தயார் செய்ய முடியும். ஆகவே, ஒரு புரட்சிகர இயக்கம் கட்டியெழுப்பப்பட இயலுமா என்று ஊகிப்பதல்ல புரட்சிகரக் கட்சியின் கடமை. என்ன சாதிக்கப்பட முடியும் என்ன சாதிக்கப்பட முடியாது என்பது போராட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.
12. ட்ரொட்ஸ்கி 1940 இல், இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களுக்கு மத்தியில், எழுதிய மதிப்பீடு அதற்கு எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னும் அதிக சக்தியுடன் பொருந்துகிறது:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் போல, வெறுமனே பொருளாதார வாழ்க்கையின் ஒரு மிகத் துரிதமான மற்றும் மிக ஆரோக்கியமான அபிவிருத்தியை உத்திரவாதம் செய்கிறதான கேள்வியாக, இனியும் அது இன்று இல்லை: இன்று அது மனிதகுலத்தை தற்கொலையில் இருந்து காப்பாற்றுவது குறித்த பிரச்சினையாக இருக்கிறது. அது, துல்லியமாக சந்தர்ப்பவாதக் கட்சிகளது கால்களுக்குக் கீழே உள்ள அடிநிலத்தை முற்றிலும் துண்டிக்கும் வரலாற்றுப் பிரச்சினையின் கூரிய தன்மையாக இருக்கிறது. இதற்கு நேரெதிராக, புரட்சிக் கட்சியானது, வளைந்துகொடுக்க முடியாத வரலாற்று அவசியத்தை அது முன்னெடுக்கிறது என்ற உண்மையின் நனவில் வற்றாத சக்தியின் ஒரு ஊற்றுமூலத்தைக் காண்கிறது.
நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டுகள்
13. இந்த வரலாற்று சூழ்நிலைக்குள்ளாக, புரட்சிகரக் கட்சியானது அதனளவிலேயே புறநிலை நெருக்கடியின் விளைவைத் தீர்மானிப்பதில் ஒரு மிகமுக்கிய காரணியாக இருக்கிறது. புரட்சிகரக் கட்சியின் தலையீட்டின் தாக்கத்தை தவிர்த்து விட்டு, புறநிலை குறித்து மதிப்பிடுவதும் அரசியல் சாத்தியங்களை யதார்த்தரீதியாக எடைபோடுவதும், மார்க்சிசத்திற்கு முற்றிலும் அந்நியமானதாகும். ஒரு மார்க்சிச புரட்சிகரக் கட்சி வெறுமனே நிகழ்வுகள் குறித்து கருத்திடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை, அது பகுப்பாய்வு செய்கின்ற நிகழ்வுகளில் தலையீடு செய்து, தனது தலைமையின் ஊடாக தொழிலாளர்களது’ அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தில் உலகை மாற்றுவதற்கு அது முனைகின்றது.
14. இந்த ஆண்டு, 1938 செப்டம்பரில் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் எண்பதாவது ஆண்டு ஆகும். நான்காம் அகிலம் உயிர்வாழ்ந்த எண்பது ஆண்டுகளில் அறுபத்தியைந்து ஆண்டுகள் அதன் வேலைகள் அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 2018 இன் சாதகமான நிலையில் இருந்து பார்க்கையில், 1938 இல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தில் அடித்தளமாக இருந்ததும், 1953 இல் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த பகிரங்க கடித வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டதுமான வரலாற்று பகுப்பாய்வு, கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டம் ஆகியவை வரலாற்று அபிவிருத்தியின் ஒட்டுமொத்தப் பாதைவழியாலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
15. ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டத்தின் வரலாற்று மற்றும் அரசியல் நியாயம் குறித்த அத்தனை கேள்விகளுக்குமே, 1989-1991க்கு இடையிலான காலத்தில் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டு கிழக்கு ஐரோப்பா முழுமையிலும், சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் வியட்நாமிலும் முதலாளித்துவம் மறுஅறிமுகம் செய்யப்பட்டதன் மூலமாக, தீர்க்கமாகவும் மறுக்கவியலாமலும், பதிலளிக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவமானது, ட்ரொட்ஸ்கி காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி (1936 இல் எழுதப்பட்டது) என்ற நூலில் கணித்திருந்தவாறாக, 1917 அக்டோபர் புரட்சியின் பின் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துறவுகளைக் கலைத்தது. 1989-91 நிகழ்வுகள் ஸ்ராலினிசத்துக்கு எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டத்தை ஊர்ஜிதம் செய்ததோடு மட்டுமன்றி, சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சிகளில் அரசு அதிகாரமானது ஒரு புதிய சுரண்டல் சமூகத்தின் வடிவில் ஒரு புதிய ஆளும் வர்க்கத்தினால் செலுத்தப்பட்டது என்பதாகக் கூறிய ட்ரொட்ஸ்கிச-விரோதப் போக்குகளது தத்துவார்த்த திவால்நிலையையும் அம்பலப்படுத்தியது. ஆனால் மக்ஸ் சாக்ட்மன் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களால் பெரும் உற்சாகத்துடன் கண்டறியப்பட்ட இந்த சுரண்டுவோரது “புதிய வர்க்கம்” அவர்களது தத்துவத்திற்கு முற்றிலும் முரண்படுகின்ற ஒரு விதத்தில் செயல்பட்டது. வரலாற்றின் வேறெந்தவொரு ஆளும் வர்க்கத்தையும் போலல்லாமல், அது தானாகவே தன்னைக் கலைத்துக் கொண்டதாம்! புதிய சொத்து வடிவங்களது காவலர்களாக இருப்பதற்கெல்லாம் வெகுதூரத்தில், அதிகாரத்துவ ஆட்சிகள், ட்ரொட்ஸ்கி முன்கணித்ததைப் போல, முதலாளித்துவத்தை மீட்சி செய்வதற்கும் ஒரு முதலாளித்துவ வர்க்க மறுஒழுங்கிற்குமான அரசியல் சாதனமாக நிரூபணமாயின.
16. 1953 இல் அனைத்துலகக் குழுவானது, ட்ரொட்ஸ்கிச-விரோத திருத்தல்வாதத்தின் புதிய வடிவம் ஒன்றிற்கு, மிகப் பிரதானமாக மிஷேல் பப்லோவாலும் ஏர்னெஸ்ட் மண்டேலாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போக்கு, ஸ்ராலினிச ஆட்சிகள் சோசலிசம் அடையப்படுவதற்கான வழிவகைகளாக இருந்ததாக கூறியதற்கு எதிராக ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் பல நூற்றாண்டுகளுக்கு ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளுக்கு தலைமையில் இருக்கும் என்றது. இந்த நோயுற்ற முன்னோக்கானது ஸ்ராலினிச அதிகாரத்துவங்களை வரலாற்றின் பிரதான முற்போக்கு சக்தியாக உயர்த்திக் காட்டியது, தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துவ தலைமைக்கு அழுத்தம் கொடுக்கின்ற ஒரு இரண்டாம் நிலை சமூக சக்திக்கு மேலான எதுவுமில்லை என்பதாகக் கீழிறக்கியது, அத்துடன் நான்காம் அகிலத்திற்கான தேவையை முற்றிலுமாக மறுத்தது. பப்லோவாதிகள், பலவிதமான முதலாளித்துவ தேசியவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிரப்பட்ட இயக்கங்களின் மீது தமது அரசியல் மதிப்பை காட்டிக்கொண்டனர். எகிப்தில் நாசர், அல்ஜீரியாவில் பென் பெல்லா, அர்ஜெண்டினாவில் பெரோன், குறிப்பாக கியூபாவில் காஸ்ட்ரோ (பப்லோவாதிகளது கதாநாயகர்களில் சிறப்பாக அறியப்பட்டவர்களை மட்டும் குறிப்பிடுவதானால்) ஆகியோர், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரப் போராட்டம் இல்லாமல் ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சியின் தலைமை இல்லாமல், சோசலிசத்திற்கான ஒரு புதிய பாதைக்கு உதாரணபுருஷர்களாக போற்றப்பட்டனர்.
17. 1953 இல் பப்லோவாதிகளுடனான பிளவானது நான்காம் அகிலத்திற்குள்ளாக ட்ரொட்ஸ்கிச-விரோத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு நீண்டநெடிய அரசியல் போராட்டத்தின் தொடக்கத்தை மட்டுமே குறித்து நின்றது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கும் “மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும்” இடையிலான யுத்தம் என்பது வெறுமனே வார்த்தை யுத்தம் அல்ல. அது புறநிலை அரசியல் நிலைமைகளில் இருந்து எழுந்தது, உண்மையான வர்க்க சக்திகளது நலன்களைப் பிரதிபலித்தது. தொழிலாள வர்க்கத்தை தனது சொந்த நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்ய குட்டி-முதலாளித்துவம் செய்த முயற்சிகளது அரசியல் வெளிப்பாடாக பப்லோவாதம் இருந்தது. போருக்குப் பிந்தைய எழுச்சி, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளுக்கு அப்போதும் கணிசமாக இருந்து வந்த செல்வாக்கு, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த வர்க்க நனவு மற்றும் புரட்சிகர வர்க்கப் போராட்டம் ஆகிய நிலைமைகளின் மட்டத்திற்கு, நான்காம் அகிலத்திற்குள்ளாக சக்திகளுக்கு இடையிலான உறவு பப்லோவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. பிரிட்டனில் 1970களில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைவர்கள் முன்பு பாதுகாத்து வந்திருந்த —1953 இல் பப்லோ மற்றும் மண்டேலுக்கு எதிரான போராட்டத்திலும் பின்னர் 1963 இல் அமெரிக்க சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சி பப்லோவாதிகளுடன் மறுஇணைவு காண்பதை எதிர்த்தும்— கோட்பாடுகளில் இருந்து பின்வாங்கியமை அனைத்துலகக் குழுவை அழிக்க அச்சுறுத்தியது.
18. WRP இன் பப்லோவாத பாதைக்கு வேர்க்கர்ஸ் லீக்கிற்குள்ளாக (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) 1982 முதல் 1985 வரையான காலத்தில் எழுந்த எதிர்ப்பு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட வேலைத்திட்டத்தைப் பாதுகாத்து ஒட்டுமொத்த அனைத்துலகக் குழுவையும் அணிதிரளச் செய்வதில் தீர்மானகரமானதாக நிரூபணமானது. 1985 டிசம்பரில் தொழிலாளர் புரட்சிக் கட்சி இடைநீக்கம் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து 1986 பிப்ரவரியில் அதனுடன் முறைப்படியான உடைவு ஏற்பட்டதன் பின்னர், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைத்துலகக் குழுவின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றனர். இந்த தீர்மானகரமான வெற்றியானது, சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் இறுதியான மரண நெருக்கடியில் இருந்தமை, நிலவிய வெகுஜன தொழிலாளர் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் உலக முதலாளித்துவத் தாக்குதலுக்கான பதிலிறுப்பில் சர்வ சரணாகதியானமை, மற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்திற்கு முகம் கொடுத்த நிலையில் முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் வெளிப்பட்ட கையாலாகாத்தனம் ஆகியவற்றின் பின்புலத்தில் நடந்ததென்பது, தற்செயலானதல்ல. ஏகாதிபத்தியத்தின் இந்த முகமைகள் பலவீனப்பட்டமையானது பப்லோவாத சக்திகளைப் பலவீனமாக்கியது.
19. 1985-86 உடைவுக்குப் பிந்தைய காலத்தில், அனைத்துலகக் குழுவானது, மார்க்சிசத் தத்துவத்தையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழுமையான பாரம்பரியத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அரசியல் தெளிவுபடுத்தல் மற்றும் அமைப்புரீதியான ஒழுங்கமைப்பின் ஒரு நிகழ்ச்சிபோக்கிற்கு தொடக்கமளித்தது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியின் ஒரு புதிய காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆற்றவிருக்கும் சுயாதீனமான மற்றும் தீர்மானகரமான பாத்திரத்தை முன்எதிர்பார்த்து முன்பு நிலவிய அனைத்துலகக் குழுவின் லீக் வடிவங்கள் புதிய சோசலிச சமத்துவக் கட்சிகளாக மாற்றப்படுவது மேற்கொள்ளப்பட்டது. 1998 பிப்ரவரியில் உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டமை —இது இணையத்தின் புரட்சிகர ஆற்றல்வளத்தை உணர்ந்து கொண்டு அதைத் திறனுடன் பயன்படுத்திக் கொள்கின்ற ஒரு முன்கண்டிராத தொடக்கமளிப்பாக இருந்தது— புரட்சிகர மார்க்சிசத்தின் ஆதரவாளர்களும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் செல்வாக்கும் மிகப் பரந்த அளவில் விஸ்தரிக்கப்படுவதை சாத்தியமாக்கியது.
20. நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளும் வேலைத்திட்டமும் வரலாற்றினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதிலும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதிலும் அது இப்போது மிக இன்றியமையாத சக்தியாக இருக்கிறது.
சமூக நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படலும்
21. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் —சர்வதேசப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானது, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் இலாபம் தனியார்வசமாவதற்கும் இடையிலானது— புவியரசியல் மோதல் மற்றும் ஒரு மூன்றாம் உலகப் போர் அபாயம், சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி, சர்வதேச அளவில் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு, மற்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படல் ஆகியவற்றில் வெளிப்படுகின்றன.
22. 2008 நிதிப் பொறிவுக்குப் பின் இப்போது பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன, அது ஒரு அவ்வப்போது வந்துபோகும் சரிவைக் குறிக்கவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு ஒழுங்குமுறையான நெருக்கடியைக் குறித்தது. 2009 ஜனவரியில், சோசலிச சமத்துவக் கட்சி இந்த நெருக்கடிக்கு “சமூகரீதியாக நடுநிலையான” பதிலிறுப்பு எதுவும் இருக்க முடியாது என்றும், “எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஆளும் உயரடுக்கின் மிக சக்திவாய்ந்த பகுதிகளது நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாய் கொண்டிருந்தன” என்றும் எச்சரித்தது. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதும், சர்வதேச அளவில் இராணுவரீதியான வன்முறையை விரிவாக்குவதும், பெரும் ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களை மோசமடையச் செய்வதுமே இந்த நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பாக இருக்கப் போகிறது என்று நாங்கள் கணித்தோம்.
23. இந்த பகுப்பாய்வு சரியானதாக நிரூபணமாகியிருக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில், உலகின் ஆளும் வர்க்கங்கள், அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில், சொத்துக் குமிழிகளை ஊதிப்பெருக்குவதற்காக டிரில்லியன் கணக்கான டாலர்களை சந்தைக்குள் பாய்ச்சியிருக்கின்றன; சிக்கன நடவடிக்கைகளின் திணிப்பு, ஊதிய வெட்டுகள் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான ஒரு இடைவிடாத தாக்குதல் ஆகியவற்றின் மூலமாகவே இதற்கு விலைகொடுக்கச் செய்யப்படுகிறது. இதன் பின்விளைவுகள் உலகெங்கும் நிலவுகிற சமூக உறவுகளது நிலை மற்றும் சமூக சமத்துவமின்மையின் மட்டங்களில் வெளிப்படத் தெரிகிறது.
24. நவீன வரலாற்றில் வேறெந்தவொரு புள்ளியிலும் விட நிதி உயரடுக்கின் கைகளில் செல்வம் மிக அதிக அளவில் குவிந்திருக்கிறது. ஆலோசனை நிறுவனமான காப்ஜெமினியின் (Capgemini) ஜூன் 2018 “உலக சொத்து அறிக்கை”யின் படி, உலக மில்லியனர்களின் (18.1 மில்லியன் பேர்) செல்வம் 2017 இல் முதன்முறையாக 70 டிரில்லியன் டாலர்களைக் கடந்திருந்தது, இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். Wealth-X மே மாதத்தில் வெளியிட்ட “பில்லியனர் கணக்கெடுப்பு” என்ற இன்னுமொரு அறிக்கை, உலகளாவிய பில்லியனர்கள் எண்ணிக்கை, 2016க்கும் 2017க்கும் இடையில் 15 சதவீதம் அதிகரித்து, 2754 பேராக உயர்ந்திருந்தது என்பதையும், இந்த பில்லியனர்களது செல்வமதிப்பு 24 சதவீதம் வரை அதிகரித்து 9.2 டிரில்லியன் டாலர் (இது ஒட்டுமொத்த கோளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதத்திற்கு நிகரானதாகும்) என்ற முன்கண்டிராத அளவாக அதிகரித்திருந்தது என்பதையும் கண்டறிந்தது. இந்த சொத்து அதிகரிப்பில் மையமான காரணியாக பங்குச் சந்தை அதிகரிப்பு இருக்கிறது, உலகளாவிய சந்தை முதலீடாக்கம் 2017 இல் 21.8 சதவீதம் வளர்ந்திருந்த நிலையில், டோ ஜோன்ஸ் துறை சராசரி கடந்த தசாப்தத்தில் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது.
25. அதீத செல்வக் குவிப்பானது, ஒரு அசாதாரணமான மட்டத்திற்கு, அரசாங்கத்தின் ஆதரவுடனான நிதி ஊகவணிகத்தால் —“பண பாய்ச்சல்” என்ற அதன் நீண்ட-கால செயல்பாட்டு வேலைத்திட்டம் இதற்கு ஆகச்சிறந்த உதாரணம்— எரியூட்டப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் சந்தை ஊகவணிகம் தாக்குப்பிடிக்கமுடியாத மட்டங்களை எட்டியிருக்கிறது என்பதற்கான பெருகும் அறிகுறிகள் இருக்கின்றன. மொத்த விளிம்புக் கடன் (அதாவது, பங்குகள் வாங்க பயன்படுத்த கடனாகப் பெற்ற பணம்) இப்போது சுமார் 670 பில்லியன் டாலர்களாய் இருக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாகும், 1929 பொறிவுக்குப் பிந்தைய காலத்தின் எப்போதைய ஒரு சமயத்தை விடவும் இது அதிகமான அளவில் இருக்கிறது. ஒட்டுமொத்த பங்குச் சந்தை செல்வத்தில் ஐந்து பங்குகள் —ஃபேஸ்புக், ஆப்பிள், அமசன், கூகுள் மற்றும் நெட்ஃபிளிக்ஸ்— மட்டும் 10.6 சதவீத பங்கினைக் கொண்டிருக்கின்றன.
26. அரசாங்க-ஒப்புதலுடனான சந்தை சூதாட்டம் நிதிய ஒருசிலவராட்சிக் குழுவை வளப்படுத்தியிருக்கின்ற அதேசமயத்தில், பரந்த மக்களின் நிலைமைகளோ அதிர்ச்சியூட்டும் வேகத்தில் மோசமடைந்து கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் Credit Suisse வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, “உலகின் 3.5 பில்லியன் ஏழ்மையான மனிதர்கள் ஒவ்வொருவரும் 10,000 டாலருக்கும் (7,600 பவுண்டுகள்) குறைவான அளவுக்கே சொத்துக்கள் கொண்டிருக்கின்றனர். உலகின் உழைக்கும் வயது மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதமாக இருக்கின்ற இந்த மக்கள் கூட்டாக உலக செல்வத்தின் வெறும் 2.7 சதவீதத்தையே கொண்டிருக்கின்றனர்.” அமெரிக்காவில் மூன்றே பேரான ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் மொத்த மக்கள்தொகையில் செல்வத்தில் கீழிருக்கும் பாதிப் பேரை விடவும் அதிகமான பணத்தை கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் வருவாய் ஈட்டுவோரில் தலைமையில் இருக்கும் 1 சதவீதத்தின் வருவாய் பங்கு 1980 இல் 10 சதவீதமாக இருந்ததில் இருந்து 2016 இல் 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, அதேநேரம் கீழிருக்கும் 50 சதவீதத்தினரின் வருவாய் பங்கோ அதேகாலகட்டத்தில் 20 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக சரிவுகண்டது.
27. சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சியானது எண்ணற்ற வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. நாட்டின் பெரும் பகுதிகளை போதைமருந்து நெருக்கடி ஆட்டிப்படைக்கிறது. போதைப்பழக்கம், குடிப்பழக்கம் மற்றும் தற்கொலைகளால் இறப்புவிகிதத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு கூர்மையான அதிகரிப்பானது 2016இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக எதிர்பார்ப்பு ஆயுளில் ஒரு வீழ்ச்சியை உண்டாக்கியது. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் 10,000 டாலருக்கும் குறைவான சேமிப்புகளைக் கொண்டிருப்பவர்களாக, ஓய்வு பெறமுடியாதவர்களாக இருக்கிறார்கள். ஒபாமாகேர் திட்டத்தின் பாதிப்பினால் ஆரோக்கியப் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன, கல்லூரி மாணவர்களது மொத்தக் கடன் அளவு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாய் இருக்கிறது. ஒபாமா நிர்வாகம் செய்த வாகனத் துறை மறுசீரமைப்பு பகுதி-நேர மற்றும் மலிவூதிய வேலைகள் வெடித்துப் பரவுவதற்கு முன்முனையாக இருந்தது. பொது உள்கட்டமைப்பு சூறையாடப்பட்டதன் குற்றவியல் பின்விளைவுகள் ஃபிளிண்ட் நீர் நெருக்கடியிலும் போர்ட்டோ ரிக்கோ மரியா புயலால் பெற்ற நாசத்திலும் —இதில் 5,000 அல்லது அதற்கு அதிகமான பேர் கொல்லப்பட்டனர்— அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
28. எப்போதும் ஒரு கட்டுக்கதை குணாதிசயத்தையே கொண்டிருந்த “அளவற்ற வாய்ப்புகளது நாடு”, மலிவூதியங்கள், கடன், நிரந்தர பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையின் ஒரு நாட்டிற்கு வழி விட்டிருக்கிறது. ஒரு பிள்ளை அதன் பெற்றோரை விட அதிகமாய் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பானது, கடந்த அரை-நூற்றாண்டு காலத்தில், 90 சதவீதத்தில் இருந்து 50 சதவீதத்திற்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. பெரிய முதலாளித்துவ நாடுகளில் வேறெந்த நாட்டை விடவும் அதிக குழந்தை இறப்பு விகிதத்தையும், குறைந்த எதிர்பார்ப்பு ஆயுளையும் கொண்ட நாடாக அமெரிக்கா இப்போது இருக்கிறது.
29. இந்த உண்மைகள் மிக நீண்டகாலத்திற்கான அரசியல் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன. 2010 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதன் வேலைத்திட்டத்தில் SEP கூறியவாறாக, “இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் மிகப்பரந்த செல்வமும் அதிகாரமும் தான் தொழிலாள வர்க்கத்தை பெருநிறுவன கட்டுப்பாட்டிலான இரண்டு-கட்சி அமைப்புமுறைக்கு கீழ்ப்படியச் செய்வதில் மிக முக்கியமான புறநிலைக் காரணமாய் இருந்தன. ..ஆயினும் புறநிலைமைகளிலான மாற்றம் அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள இட்டுச் செல்லும். முதலாளித்துவத்தின் யதார்த்தமானது சமூகத்தின் பொருளாதார ஒழுங்கமைப்பில் ஒரு அடிப்படையான மற்றும் புரட்சிகரமான மாற்றத்திற்காகப் போராடுவதற்கு பல காரணங்களை தொழிலாளர்களுக்கு வழங்கும்.”
30. நனவிலான இந்த மாற்றங்கள் ஏற்கனவே நிகழ்ந்தேறி வருகின்றன. சமூக நனவின் மிக அடிப்படையான வெளிப்பாட்டையும் கூட தடுப்பதற்கான ஒரு இடைவிடாத பிரச்சாரம் வேறெந்தவொரு நாட்டிலும் இந்தளவு இருந்திருக்கவில்லை. ஆயினும், இளம் வயதினர் மத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் சோசலிசம் குறித்த ஒரு சாதகமான பார்வையையே கொண்டிருக்கின்றனர் என்பதையும், இன்னும் பலர் ஒரு முதலாளித்துவ சமூகத்தைக் காட்டிலும் ஒரு சோசலிச சமூகத்தில் வாழ்வதையே விரும்புகின்றனர் என்பதையும் ஏராளமான கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இது மார்க்சிசத்தின் கருத்தாக்கங்களை நிரூபணம் செய்கின்ற ஒரு அருமையான மாற்றம் என்பதோடு வர்க்கப் போராட்டத்தின் முடிவு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் முடிவு குறித்த குட்டி-முதலாளித்துவ தத்துவங்கள் அத்தனையையும் மறுதலிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பும் உலகப் போர் அபாயமும்
31. அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சிக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உள்நாட்டிலான பதிலிறுப்பாக சமூக எதிர்ப்புரட்சி இருக்கிறது. ஏகாதிபத்திய வன்முறை வெடிப்பு அதன் சர்வதேசப் பதிலிறுப்பாக இருக்கிறது. 1928 இல், பெருமந்தநிலையின் வெடிப்புக்கு முந்தைய ஆண்டில், பகுப்பாய்வு செய்த லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்: “எழுச்சிக் காலகட்டத்தை விடவும் நெருக்கடியின் காலகட்டத்தில், அமெரிக்க வல்லாதிக்கமானது மிக முழுமையாகவும், மிக பகிரங்கமாகவும், மற்றும் மிகவும் இரக்கமற்றும் இயங்கும். அமெரிக்கா பிரதானமாக ஐரோப்பாவை விலைகொடுத்தே அதன் சிக்கல்கள் மற்றும் துன்பங்களில் இருந்து தப்பித்து வெளியில் வருவதற்கு விழையும், இது ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அல்லது ஐரோப்பாவிலேயே நடப்பினும் சரி, அமைதியாகவோ அல்லது போர் மூலமாகவோ நடப்பினும் சரி.”
32. போர் என்பது அமெரிக்க கொள்கையின் ஒரு நிரந்தர அம்சமாக ஆகி விட்டிருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் ஒரு “ஒற்றைத்துருவ தருண”த்தை (“unipolar moment”) பிரகடனம் செய்தனர். பனிப்போர் காலத்தின் போது அதன் பிரதான போட்டியாளராக இருந்த நாடு காணாமல் போனதென்பது, அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தின் அடித்தளங்களது தேய்வுக்குமான எதிர்நடவடிக்கைக்கான மையப்பொறிமுறையாக தனது இராணுவ வலிமையை கடிவாளமற்று பயன்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தினால் பொருள்விளக்கமளிக்கப்பட்டது.
33. ஒரு கால்-நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த கொள்கையானது வெளிப்படையாகவே தோல்வியடைந்திருக்கிறது. 2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் இராணுவ வன்முறையின் ஒரு பரந்த தீவிரப்படலுக்கான சாக்கினை வழங்கியது, 2002 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “முன்கூட்டித் தாக்கும் போர்” என்ற சித்தாந்தத்தில் இது உரத்துக் கூறப்பட்டது. அமெரிக்காவின் தலைமையிலான அல்லது அதனால் ஆதரவளிக்கப்பட்ட ஒரு வரிசையான போர்கள் மற்றும் படையெடுப்புகள் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரேன், யெமன் மற்றும் இன்னும் பல பிற நாடுகளை நாசம் செய்திருக்கின்றன. ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்டு, முழு சமுதாயங்களையும் அழித்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மாபெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கிய போதும், இந்தப் போர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியைத் தீர்ப்பதில் தோல்விகண்டிருக்கின்றன. அவை இப்போது சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவில் வாஷிங்டனினின் பாரம்பரியக் கூட்டாளிகளாய் இருந்த நாடுகள் ஆகியவற்றுடனான ஒரு மோதலாக அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கின்றன.
34. அமெரிக்கா உலகப் போருக்கு செயலூக்கத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. 2017 டிசம்பரில் வெளியிடப்பட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு மூலோபாயமானது, பெரும் சக்திகள் பங்குபெறும் ஒரு பெரும் போருக்கான தயாரிப்புத்தான் அமெரிக்க இராணுவத் திட்டமிடலுக்கு மையமாக இருக்கிறது என்பதை முதன்முறையாக வெட்டவெளிச்சமாக்கியது. உலக வரலாற்றில் இரண்டு தரப்புகளுமே அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடிய முதல் மோதலாக அமையவிருக்கும் அத்தகையதொரு போரானது, மனிதகுலத்தின் உயிர்வாழ்க்கையையே அச்சுறுத்துவதாக அமையும். “பயங்கரவாதம் அல்ல, பெரும் சக்திகளிடையேயான மோதல்தான் இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான கவனமையமாக இருக்கிறது” என்று பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் அறிவித்தார், ரஷ்யாவையும் சீனாவையும் “திருத்தல்வாத சக்திகள்” என்று கூறி அவர் தனிப்படுத்திக் காட்டினார். கடந்த காலத்தின் அமெரிக்காவின் “மூலோபாய இயலாமை”, “இராணுவத் திறனை” கட்டியெழுப்பவும் “புதிய ஆயுத முறைகளை” பெறுவதற்கும் தவறியமை, மற்றும் மிக முக்கியமாக, போரானது “வெகு தூரத்தில் இருந்தபடியே, மிகக் குறைந்த சேதங்களுடன் விரைவாக வெற்றிகாணப்பட்டு விட முடியும்” என்பதான சிந்தனை ஆகியவை குறித்து இந்த மூலோபாய ஆவணம் புலம்புகிறது.
35. அமெரிக்காவால்-தூண்டப்பட்ட கால் நூற்றாண்டு காலப் போர்களுக்கும் பெரும் சக்திகளுடையேயான மோதல்கள் எழுந்ததற்கும் உலகப் போரின் அபாயத்திற்கும் இடையில் ஒரு உட்பொதிந்த தொடர்பு இருக்கிறது. SEP இன் தலைவரான டேவிட் நோர்த், 2016 ஜூலையில் எழுதியவாறாக:
உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பின் மூலோபாய தர்க்கமானது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான நவகாலனித்துவ நடவடிக்கைகளை தாண்டி நீண்டுசெல்வதாகும். ரஷ்யா மற்றும் சீனாவுடன் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் அமெரிக்காவின் மோதல்களது உள்ளடங்கிய கூறுகளாகவே நடைபெற்று வரும் போர்கள் இருக்கின்றன. ஆயினும், ரஷ்யா மற்றும் சீனா உடனான மோதலின் இருதயத்தானமாய் அமைந்திருக்கும், உலக மேலாதிக்கத்திற்காய் நடைபெற்று வருகின்ற போராட்டத்திலான சமீபத்திய கட்டமானது, அமெரிக்காவுக்கும் ஜேர்மனி (எதிரியாகும் சாத்தியம் கொண்ட மிக முக்கியமான நாட்டைக் குறிப்பிடுவதானால்) உள்ளிட்ட அதன் இன்றைய நாள் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளுக்கும் இடையிலான உட்பொதிந்த மற்றும் வெடிப்புசாத்தியம் கொண்ட பதட்டங்களை மேற்பரப்புக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் தவறான புரிதல்களால் விளைந்தவையல்ல. கடந்தகாலம் அறிமுக உரை மட்டுமே. 1990-91 இல் அனைத்துலகக் குழு முன்னெதிர்பார்த்தவாறாக, உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முயற்சியானது உலக அரசியலின் மேற்பரப்பின் கீழ் கொதிநிலைக்கு வந்து கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான பகைமைகளை மீண்டும் பற்றவைத்திருக்கிறது. [கால் நூற்றாண்டு காலப் போர், முன்னுரை]
36. ஜூன் மாதத்தில், ட்ரம்ப் நிர்வாகமும் ஐரோப்பா மற்றும் கனடாவின் அரசாங்கங்களும் பரஸ்பரம் கண்டனங்களைப் பரிமாறிக் கொண்டதற்கு மத்தியில், ஜி7 உச்சிமாநாடு வரலாற்றுமுக்கியத்துவம் கொண்ட பொறிவைக் கண்டதானது அதிகரித்துச் செல்லும் அட்லாண்டிக்-கடந்த பிளவின் மிக சமீபத்தியதும் மிகத் தீவிரமானதுமான வெளிப்பாடாக இருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் “அமெரிக்கா முதலில்” பொருளாதார தேசியவாதமும் ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்தான பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இறக்குமதிகள் மீது தண்டத் தீர்வைகளை விதிக்கின்ற மிரட்டலும் இந்த மோதலுக்கான உடனடிக் காரணமாக இருக்கிறது. வர்த்தகம் தொடர்பாக மட்டுமல்லாமல், ஈரான் அணு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலமாக ஈரானை போரைக் கொண்டு மிரட்டுகின்ற அமெரிக்காவின் கொள்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு காட்டுவது குறித்தும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பிளவுகள் வளர்ந்து செல்கின்றன. எவ்வாறாயினும், பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே பெருகிச் செல்லும் மோதல்களுக்கு, டொனால்ட் ட்ரம்ப்பின் குறிப்பான ஆளுமையை மட்டுமே காரணம் என்று கூற முடியாது. சந்தைகள், வளங்கள் மற்றும் உழைப்பு ஆகியவற்றுக்கான அணுகலுக்கு இந்த சக்திகளுக்கு இடையே பெருகிச் செல்லும் மோதலின் வெளிப்பாடுகளாய் அவை இருக்கின்றன.
37. அமெரிக்காவில் இருந்து சுயாதீனப்பட்டு தங்களை மறுஆயுதபாணியாக்கிக் கொள்வதும் தமது நலன்களைத் திட்டவட்டம் செய்வதுமே ஐரோப்பாவில் உள்ள ஏகாதிபத்திய சக்திகளின் பதிலிறுப்பாக உள்ளது. “ஐரோப்பியர்களாகிய நாம், நமது தலைவிதியை நமது கைகளில் கொண்டிருந்தாக வேண்டும்” என்று ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கெல் ஜூன் மாதத்தில் அறிவித்தார். ஐரோப்பா இனியும் “அமெரிக்கா நம்மை ஏற்கனவே பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்று பல தசாப்தங்களாக சற்று அசட்டையாக நாம் நம்பி வந்ததைப் போல” நம்பிக்கொண்டிருக்க முடியாது. ஜேர்மனியும் ஐரோப்பாவும் “ஐரோப்பாவில் நமது கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களை ஊக்குவித்தாக வேண்டும், கனடா அல்லது ஜப்பானுடனான கூட்டின் சாத்தியத்துடன்.” ஜேர்மன்-பிரெஞ்சு தலைமையின் கீழான ஒரு சுயாதீனமான ஐரோப்பிய இராணுவத் தலையீட்டுப் படைக்கும், மேர்கெலின் கீழ், ஜேர்மனி தனது ஆதரவை நீட்டியிருக்கிறது.
அரண்மனைக் கவிழ்ப்பா அல்லது வர்க்கப் போராட்டமா
38. சமூக சமத்துவமின்மையின் தாக்குப்பிடிக்க முடியாத மட்டங்களும் நிரந்தர மற்றும் விரிவடைந்து செல்கின்ற போர் ஆகியவற்றின் தாக்கங்களும் அதன் அரசியல் வெளிப்பாட்டை அமெரிக்காவிற்குள் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவில் காண்கிறது.
39. ட்ரம்ப்பின் பதவியேற்பு அதி-வலது, பாசிச மற்றும் அதிதீவிர தேசியவாத அரசியலை அரசு எந்திரத்தின் மிக உயரிய மட்டங்களுக்குள் கொண்டுவந்திருக்கிறது. 2016 தேர்தலின் போது, ட்ரம்ப் சமூக அதிருப்தி மற்றும் விரக்திக்கு தனது வாய்வீச்சைக் கொண்டு விண்ணப்பம் செய்தார், “மறந்துபோன மனிதன்” குறித்த பொய்யான மற்றும் வெற்று வாய்வீச்சைப் பிரயோகித்தார். ஆயினும், நிர்வாகத்தின் உண்மையான சமூகப் பிரதிநிதித்துவமானது, செல்வந்தர்களுக்கான பாரிய வரி விலக்குகள், இராணுவ நிதிஒதுக்கீட்டில் ஒரு கூர்மையான அதிகரிப்பு, மற்றும் பொதுக் கல்வி, அரசாங்க நெறிமுறைகள், சமூக வேலைத்திட்டங்கள் மீதான மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதலை தீவிரப்படுத்துவது ஆகிய அதன் செயல்பாடுகளில் வெளிப்படுத்தப்படுகிறது.
40. புலம்பெயர்ந்த மக்களை அவதூறு செய்வது ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையின் மையமாக இருக்கிறது, அம்மக்கள் கெஸ்டபோ-பாணி சோதனையிடல்கள், கைதுகள் மற்றும் திருப்பியனுப்பல்களைக் கொண்டு பீதிகொள்ளச் செய்யப்பட்டுள்ளனர். எல்லைகளில் பிள்ளைகள் அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, கூண்டுகளில் அடைக்கப்படுவதும், அதன்பின் உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதும், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் முகச்சுளிப்பையும் உருவாக்கியிருக்கிறது. ஆளும் வர்க்கத்திற்குள்ளான மோதல்களுக்கான ட்ரம்ப்பின் பதிலிறுப்பில் அவர், அதீத தேசியவாதம் மற்றும் ஜனரஞ்சக வாய்வீச்சின் அடிப்படையில் அதி-வலது சக்திகளை அணிதிரட்ட முயலுகின்ற தனது பாசிசவாத விண்ணப்பத்தை இரட்டிப்பாக்குகிறார். அமெரிக்க சமூகத்தினை குணாம்சப்படுத்துவதாக இருக்கின்ற சமூக சமத்துவமின்மையின் அவலட்சணமான மட்டங்களுக்கு ஏற்கனவே ஒட்டச் சுரண்டப்பட்டு விட்டிருக்கின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களது அடுக்கினை பலிகடாவாக்குவது தான் நோக்கமாய் இருக்கிறது.
41. குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமைகள் ஆகியவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வருங்காலப் போர்களுக்கு தயாரிப்புக்களமாக இருக்கின்றன. குடியேற்றப்பிரிவு போலிசுக்கு, சட்டவிரோத தேடுதல்கள் மற்றும் பறிமுதல்கள் செய்வது, குடியுரிமைக்கான சான்று கேட்பது மற்றும் பள்ளிகளிலும் வேலையிடங்களிலும் மக்களை மொத்தம் மொத்தமாக தடுத்து வைப்பது என அனைவரது ஜனநாயக உரிமைகளை மீறிச் செயல்படுவதற்கான வெகு-ஆழமான அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தின் கீழ் எழுப்பப்பட்ட சிறை மையங்கள் நவீன-கால குவிப்பு முகாம்களாக விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஒடுக்குமுறை எந்திரம் அனைத்து சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு எதிராகவும் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட இருக்கிறது.
42. ட்ரம்ப் நிர்வாகம் மூலமாக, அமெரிக்க ஆளும் வர்க்கமானது திரும்பிச் செல்ல முடியாத ஒரு கோட்டைத் தாண்டி சென்றிருக்கிறது. 2000 ஆண்டு தேர்தல் திருடப்பட்டு அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 5-4 தீர்ப்பின் மூலமாக ஜனாதிபதி பதவி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு கையளிக்கப்பட்ட நிகழ்வு நடந்து இப்போது 18 வருடங்களாகிறது. அந்த சமயத்தில் உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியதைப் போல, தேர்தலின் முடிவும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அதனை ஏற்றுக் கொண்டமையும் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக இனியும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக வாதிடுகின்ற எந்தப் பிரிவும் இருக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டியது. தேர்தலைப் பின்தொடர்ந்து, தேசப்பற்று சட்டம், உள்நாட்டு வேவுபார்ப்பு, “அசாதாரணவிதத்தில் கைதிகள் ஒப்படைப்பு”, அரசு-ஏற்பாட்டு சித்தரவதை மற்றும் குவாண்டனமோ விரிகுடா ஆகியவற்றுடன் எப்போதைக்குமாய் தொடர்புபடுத்தப்பட்ட “பயங்கரவாதத்தின் மீதான போர்” வந்து சேர்ந்தது. உரிய நிகழ்முறை இல்லாமல் அமெரிக்கக் குடிமக்கள் உள்ளிட எவரொருவரையும் படுகொலை செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு உள்ள உரிமையை நிலைநாட்டியதன் மூலமாக ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை ஒபாமா நிர்வாகம் தீவிரப்படுத்தியது.
43. அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக இருக்கும் ட்ரம்ப்பின் விமர்சகர்களது முதுகெலும்பற்றதும் பிற்போக்கானதுமான தன்மைதான் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மாபெரும் சொத்தாக இருக்கிறது. ஐரோப்பாவில் போலவே, அமெரிக்காவிலும், சமூக கோபம் மற்றும் அதிருப்திக்கு எந்த முற்போக்கான பாதையும் இல்லாதிருப்பதில் இருந்து அதி-வலது ஆதாயமடைந்து கொண்டிருக்கிறது.
44. "அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்” என்ற அறிக்கையில் SEP இன் அரசியல் குழு விளக்கியது:
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் உட்பட அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக இருக்கும் ட்ரம்ப்பின் எதிரிகள் அனைவருமே பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் ஒரு கன்னைக்காகவே பேசுகின்றனர். ட்ரம்புக்கு எதிரான அவர்களது பிரச்சாரத்தில் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வழிமுறைகள், இராணுவ/உளவு ஸ்தாபகத்திற்குள்ளும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கிற்குள்ளும் இருக்கின்ற கூறுகளுடன் சேர்ந்து திரைமறைவில் சதி செய்வது உள்ளிட அடிப்படையாக ஜனநாயக-விரோதமானவையாக இருக்கின்றன. இவை ஒரு அரண்மனை சதியின் வழிமுறைகளாகும்.
45. ஜனநாயகக் கட்சியின் தன்மையினாலேயே 2016 இல் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட சாத்தியமாக இருந்தது. ஹிலாரி கிளிண்டன் வோல் ஸ்ட்ரீட், இராணுவ-உளவு எந்திரம் மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சலுகையுடைய பிரிவுகள் ஆகியவற்றின் வேட்பாளராக அடையாள அரசியலை ஊக்குவிப்பதன் மூலமாக களத்தில் நின்றார். கிளிண்டனை ஆதரிக்க பேர்னி சாண்டர்ஸ் எடுத்த முடிவானது —சமூக எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்பி விடுகின்ற நோக்கம் கொண்டிருந்த ஒரு பிரச்சாரத்தின் உச்சமாய் இது இருந்தது— சமூக அதிருப்திக்கு ட்ரம்ப் விண்ணப்பம் செய்வதற்கு பாதையை திறந்து விட்டது.
46. தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில், ட்ரம்புக்கான அத்தனை எதிர்ப்பையும் உளவு எந்திரத்தின் சக்திவாய்ந்த கன்னைகளது சதிகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு —இவை ரஷ்ய-விரோதப் பிரச்சாரத்தையும் FBI இன் முன்னாள் தலைவரான ரோபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணையையும் மையமாகக் கொண்டிருந்தன— பின்னால் திருப்பி விடுவதற்கே ஜனநாயகக் கட்சியினர் வேலைசெய்திருக்கின்றனர். ரஷ்யாவில் உள்ள விளாடிமிர் புட்டின் அரசாங்கத்துடன் இணக்கம் காட்ட விழைவதற்காக ட்ரம்ப் நிர்வாகத்தை கண்டனம் செய்யும் ஜனநாயகக் கட்சியினர், அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் மீதும் புலம்பெயர்ந்தவர்கள் மீதுமான அதன் தாக்குதலை, செல்வந்தர்களுக்கான அதன் வரிவெட்டுக்களை மற்றும் உலகப் போருக்கான அதன் படிப்படியான தயாரிப்புகளை உதாசீனம் செய்திருக்கின்றனர், மூடிமறைத்திருக்கின்றனர் மற்றும் அவற்றுக்கு வழிவகை அமைத்தும் தந்திருக்கின்றனர்.
47. ஜனநாயகக் கட்சியினரின் ரஷ்ய-விரோதப் பிரச்சாரம் மூன்று முனைகள் கொண்டதாய் இருக்கிறது: (1) மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு —சீனாவுடன் மோதுவதற்கு ஒரு முன்நிபந்தனையாக இது எதிர்கொள்ளப்பட்டாக வேண்டும் என்று பார்க்கப்படுகிறது— ஒரு பிரதானமான முட்டுக்கட்டையாக இராணுவ மற்றும் உளவு முகமைகளின் மேலாதிக்கமான கன்னைகளால் பார்க்கப்படுகின்ற ரஷ்யாவுக்கு எதிராக ஒரு கூடுதல் மூர்க்கமான வெளியுறவுக் கொள்கையை அமலாக்குவது; (2) “போலிச் செய்திகள்” மற்றும் “ரஷ்யத் தலையீடு” ஆகியவற்றை எதிர்த்துப் போரிடுவதான சாக்கின் கீழாக, ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலுக்கான கட்டமைப்பை உருவாக்குவது அத்துடன் இணையத் தணிக்கையின் ஒரு ஆட்சியை திணிப்பது; மற்றும் (3) முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எந்த சவாலையும் முன்நிறுத்திவிடா வண்ணம் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது கோபத்தைத் திருப்பிவிடுவது.
48. ரஷ்ய-விரோதப் பிரச்சாரம் தவிர, ஜனநாயகக் கட்சியினர் பிரதானமாக கவனம் செலுத்தும் விடயமாக #MeToo இயக்கத்தை —இது பாலியல் தாக்குதல் மற்றும் வன்முறையை எதிர்ப்பதான மறைப்பின் கீழாக உரிய நிகழ்முறைகளுக்கான உரிமை உள்ளிட அடிப்படை ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்துவதற்கும் இல்லாதொழிப்பதற்குமான ஒரு சூனிய-வேட்டை சூழலை உருவாக்குவதற்கே சேவை செய்திருக்கிறது— ஊக்குவிப்பது இருந்து வந்திருக்கிறது. #MeToo பிரச்சாரமானது தொழிலாள வர்க்கப் பெண்கள் உள்ளிட தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளை முற்றிலுமாக உதாசீனம் செய்திருக்கிறது. இடைவிடாது பாலியல் தொடர்பாகவே சிந்தித்துக் கொண்டிருப்பது ஜனநாயகக் கட்சியின் வசதியான உயர் நடுத்தர-வர்க்கத்திடம் நற்பெயர் பெற்றுத் தரலாம், ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் பாலினம், நிறம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றைக் காட்டிலும் தமது வர்க்க நிலையில் இருந்து எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவே பிரதான கவலை கொண்டிருக்கின்ற பரந்த எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களிடம் இது எந்த வரவேற்பையும் பெறவில்லை.
49. ட்ரம்ப் பதவியேற்று ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பின்னர், அவருக்கு எதிரான ஜனநாயகக் கட்சியினரின் மூலோபாயம் உருக்குலைந்து கிடக்கிறது. நிர்வாகம் துணிச்சல் பெற்று வருகிறது, உச்சநீதிமன்றம் உள்ளிட அரசின் அத்தனை ஸ்தாபனங்களின் மீதும் அதி-வலதுகளது கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கான அதன் முயற்சிகளை அது முன்தள்ளிக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், ஜனநாயகக் கட்சியினரோ, சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும் ஒடுக்குவதற்குமான தமது முயற்சிகளை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கின்றனர். வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒரு பில்லியன அடாவடியாளருக்கு எதிராக ஒரு பாரிய வெகுஜன இயக்கம் எழுவதைக் காட்டிலும் அவர்களுக்கு அச்சமூட்டக் கூடியது வேறேதுமில்லை. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முகம்கொடுக்கும் நிலையில் முதலாளித்துவ அரசின் ஸ்தாபனங்களை பலவீனப்படுத்துகின்ற எதுவொன்றையும் செய்வதற்கு அவர்கள் விரும்பவில்லை.
சிஐஏ ஜனநாயகக் கட்சியினரும் போலி-இடதுகளும்
50. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு ஜனநாயகக் கட்சியின் பதிலிறுப்பானது அதன் வர்க்கத் தன்மையாலும் அரசியல் சாமுத்திரிகா லட்சணத்தினாலும் தீர்மானிக்கப்படுகிறது. நிதி மூலதனத்தினதும் இராணுவ-உளவு எந்திரத்தினதும் ஒரு கட்சியாக, அமெரிக்க சமூகத்தின் மிகச் செல்வந்த 10 சதவீதத்தினரில் இடம்பெறுமளவுக்கு ஆண்டுவருவாய் கொண்ட வசதியான உயர் நடுத்தர-வர்க்கத்தின் ஒரு பரந்த அடுக்கினால் ஆதரவளிக்கப்படுவதாக இக்கட்சி இருக்கிறது. இந்த வசதியான சமூக அடுக்கின் வருவாய் அமெரிக்கர்களது பரந்த பெரும்பான்மையின் வருவாயை விடவும் மிக அதிகம் என்ற அதேவேளையில், இந்த சலுகையுடைய 90-99 சதவீதத்திற்குள் இருக்கின்றோர், செல்வந்தர்களது உச்சத்தில் இருக்கும் 1, 0.1, அல்லது 0.01 சதவீதத்தினருடன் ஒப்பிடுகையில் தமது வருவாய் கொண்டிருக்கும் மிகப்பெரும் வித்தியாசத்தைக் குறித்து நன்கு விழிப்போடுள்ளனர். பாரிய வறுமை நிலவுவதைக் காட்டிலும் மிகவும் செல்வம்படைத்த 10 சதவீதத்தினர் மத்தியில் தமக்குப் பாதகமான வகையில் செல்வம் பகிர்ந்து கொள்ளப்படுவது குறித்துத்தான் அவர்களுக்கு மிகவும் அதிகமான அதிருப்தி இருக்கிறது. மிகப் பணக்கார அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற மிகப் பரந்த செல்வத்தில் ஒரு குறைவை ஏற்படுத்திவிட அவர்களால் முடியாதபோதும் கூட, உயர்நடுத்தர வர்க்கத்தின் உறுப்பினர்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் உச்சத்தை சுற்றிய இடத்தில் சிதறிவிழும் கூடுதல் பணத்திற்காக தமக்குள் ஒரு ஆக்ரோஷமான போராட்டத்தை நடத்துகின்றனர்.
51. ஜனநாயகக் கட்சியால் ஊக்குவிக்கப்படுகின்ற இன, பாலின மற்றும் பாலியல் அடையாள அரசியலானது பெருநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு எந்திரத்திற்குள்ளான பதவிகளுக்கான அணுகலுக்காக உயர்-நடுத்தர வர்க்கத்திற்குள் நடக்கின்ற இழிவான மோதல்களுடன் பிணைந்ததாய் இருக்கிறது. இப்போது வழமையாகி விட்டிருக்கும் ஏதேனும் ஒரு அல்லது வேறொரு தனிமனிதரின் மீதான “நுண்நிலைமூர்க்கத்தனங்கள்”, (“microaggressions”) நிறவெறி மற்றும் எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானதாய், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு அடிப்படையிலான கண்டனங்கள், அடையாள அரசியலின் ஆயுதப்பிரயோகத்தையே அன்றி வேறெதனையும் குறிக்கவில்லை.
52. போலி-இடதுகளின் பிரிவுகள் “99 சதவீதத்தின் ஒரு புதிய கட்சி”க்கு அழைப்பு விடுப்பதை முன்னெடுத்திருக்கின்றன. இந்த சுலோகமானது ஆண்டுக்கு 25,000 டாலர் சம்பாதிப்பவர்களது நலன்களுக்கும் (மணிக்கு 12 டாலர் வருவாய் கொண்ட ஒரு வேலையின் ஆண்டுவருவாய்) ஆண்டுக்கு 250,000 டாலர் முதல் 1,000,000 டாலர் வரை (முதலீடுகள் மீதான வருவாய் இல்லாமல்) சம்பாதிப்பவர்களது நலன்களுக்கும் இடையில் பொதுவானது எதுவும் கிடையாது என்பதையே குறிக்கிறது. சமூகரீதியாக அபத்தமானதும் அரசியல்ரீதியாக பிற்போக்குத்தனமானதுமான இந்த சுலோகம் தொழிலாள வர்க்கத்தை உயர்-நடுத்தர வர்க்கத்திற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் கீழ்ப்படியச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
53. 2018 இடைத்தேர்தலில் உலக சோசலிச வலைத் தளம் ஆவணப்படுத்தியிருப்பதைப் போல, ஜனநாயகக் கட்சி முன்கண்டிராத ஒரு எண்ணிக்கையில் முன்னாள் உளவு முகவர்களையும் முன்னாள் இராணுவத்தினரையும் நிறுத்தியிருக்கிறது. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) போன்ற அமைப்புகளில் வெளிப்படுகின்றவாறாக, “சிஐஏ ஜனநாயகக் கட்சியினரின்” அரசியலானது, உயர்-நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அரசியலுடன் மோதலுடையது அல்ல, மாறாக அதனுடன் பொருந்திப் போகக் கூடியதாகும். “அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா” இல் உலக சோசலிச வலைத் தளம் கூறியது:
ஆளும் வர்க்கத்தில் இருந்து சுயாதீனமற்று இருப்பது நடுத்தர வர்க்க அரசியலின் குணாம்சமாகும். அது ஜனநாயகக் கட்சியின் மீது செல்வாக்கு செலுத்தி முதலாளித்துவ அமைப்புமுறையின் மிககுறைந்த சீர்திருத்தங்களுக்கு அதன் ஆதரவை வெல்வதற்கு விழைகிறது. இந்த அரசியல் சூழல்வட்டத்திற்குள் இருக்கின்ற சற்று இடது-தாராளவாத கூறுகள் சமூக-சமத்துவமின்மை பிரச்சினைகளைக் குறிப்பிடுகின்ற அதேவேளையில், அவை, மிகவும் கோட்பாடற்ற விதத்தில், ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடனான அரை-சீர்திருத்தவாத விண்ணப்பங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுடன் ஒன்றுகலக்கின்றன. அவற்றின் சிறப்புசலுகையுடைய சொந்த பொருளாதார நிலையானது பெருநிறுவன இலாபங்கள் மற்றும் பங்கு விலைகளின் முன்கண்டிராத ஏற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்ற உண்மையுடன் இது பிணைந்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் மீது ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தை பராமரிப்பதே அவற்றின் பிரதான அரசியல் செயல்பாடாக இருக்கிறது.
54. ஜனநாயகக் கட்சிக்கு அரசியல் அதிகாரத்தை ஒட்டவைக்கும் முயற்சியில் DSA அதிகளவில் ஒரு மையமான பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. 2016 தேர்தலுக்குப் பின்னர், DSA இன் உறுப்பினர் எண்ணிக்கை 7,000 இல் இருந்து 37,000 ஆக அதிகரித்துள்ளது. முதலாளித்துவத்திற்கு ஒரு சோசலிச எதிர்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களது ஒரு அடுக்கின் ஆதரவை அது வென்று கொண்டிருப்பதோடு, இந்த மனோநிலையை ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்பி விடுவதற்கும் அது முனைகிறது. ஜூன் மாதத்தில் நியூயோர்க் சட்டமன்ற முதனிலைத் தேர்தல் ஒன்றில் இப்போதிருக்கும் சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் கிரவ்ளியைத் தோற்கடித்த DSA அங்கத்தவர் அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ் இன் பிரச்சாரம், இந்த பாத்திரத்தை விளங்கப்படுத்துகின்றது. பிரதிநிதிகள் சபையில் நான்காவது உயரிய ஜனநாயகக் கட்சி பிரதிநிதியான கிரவ்ளியை தோற்கடிக்க சமூக அதிருப்தியை சுரண்டிக் கொண்ட ஒகாசியோ-கோர்டேஸ், பெருநிறுவன ஊடகங்களால் பாராட்டப்படுகின்ற நிலையில், அவரது ஸ்தாபக நற்சான்றுகளை துரிதமாக பூச்சுவேலை செய்வதை நோக்கி நகர்ந்தார். “ICE ஐ ஒழிப்பதற்கு” —உண்மையில், அதன் அத்தனை கொடுமையான குணங்களையும் தக்கவைத்துக் கொண்டு அதற்கு ஒரு புதிய பெயர் சூட்டுவதற்கு— DSA மற்றும் ஒகாசியோ-கோர்ட்டெஸ் விடுத்திருக்கும் அழைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைமையின் ஒரு பிரிவால் கையிலெடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
55. ஒகாசியோ-கோர்ட்டெஸ் முதனிலை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நியூயோர்க் டைம்ஸில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் (“நவீன தலைமுறை சோசலிஸ்டுகள் வருகிறார்கள்” [The Millennial Socialists Are Coming] — மிஷேல் கோல்ட்பேர்க்), சோசலிசத்தில் பெருகும் ஆர்வம் குறித்த அச்சம் மற்றும் DSA போன்ற குழுக்களின் செயல்பாடு இரண்டும் வெளிப்பட்டன. கோல்ட்பேர்க் எழுதுகிறார்: ”உற்பத்தி சாதனங்களை மக்கள் கட்டுப்பாட்டில் வைப்பது குறித்த பேச்சு என்பது பல பழைய ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு, இன்னும் மிக தாராளவாதியானவர்களுக்கும் கூட, வெறுப்புக்குரியதாய் இருக்கிறது. இளைஞர்களுக்கு அது நிறையவே மேம்பட்டதாய் தெரிகிறது: ஜனநாயகக் கட்சியினரில் 18 முதல் 34 வயதைச் சேர்ந்தவர்களில் 61 சதவீதம் பேர் சோசலிசத்தை சாதகமான ஒன்றாக காண்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று காட்டுகிறது. பெருமந்தநிலை, அதிகரித்துச் செல்லும் கல்விக்கான செலவு, சுகாதாரக் காப்பீட்டை நம்பவியலாத நிலை மற்றும் வேலையிடங்களில் பெருகும் நிச்சயமற்ற நிலை ஆகியவற்றின் கலவையானது இளைஞர்களை அரித்துவிழுங்கும் பொருளியல் பாதுகாப்பின்மைக்குள் விட்டிருக்கிறது. அவர்களுக்கு கம்யூனிசத்தின் பரவலான தோல்வி குறித்த எந்த நினைவும் இல்லை, ஆனால் அவர்களைச் சுற்றிய திசையெங்கிலும் முதலாளித்துவத்தின் தோல்விகள் குறித்தே நினைவிருக்கிறது.”
56. ஜனநாயகக் கட்சி அதன் மறுஅலங்காரத்திற்கான ஒரு வழிவகையாக அதன் கதவுகளை DSAக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் திறந்து விட வேண்டும் என்பதே கோல்ட்பேர்க் வந்தடைகின்ற முடிவாக இருக்கிறது:
ஒகாசியோ-கோர்ட்டெஸ் போன்று அங்கே நிறைய வேட்பாளர்கள் இருக்கின்றனர், ஜனநாயகக் கட்சி அவர்களை வரவேற்க வேண்டும். ஒரு அண்மை அமைப்பாக கட்சியை மறுகட்டுமானம் செய்கின்ற வேலையைச் செய்வதற்கு அவர்களது இளமை, ஆர்வம் மற்றும் விருப்பம் அதற்கு அவசியமாயிருக்கிறது. கட்சியின் தலைமை விரும்புகிறதோ இல்லையோ அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
57. உண்மையில், DSA மற்றும் அதனையொத்த போலி-இடது கட்சிகளின் வேலைத்திட்டத்தில் உண்மையான சோசலிசத்தின் எந்த சுவடுகளும் கிடையாது. வரம்புபட்ட சமூக சீர்திருத்தங்களுக்கான அவற்றின் ஆலோசனைகள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடனும் தொழிலாள வர்க்கத்தின் மீது பெருநிறுவனத் தொழிற்சங்கங்கள் அமைப்புரீதியாக மேலாதிக்கம் செய்வதைப் பாதுகாப்பதுடனும் தொடர்புபட்டுள்ளன. அதாவது, தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு போரை நடத்திக் கொண்டிருக்கின்ற ஸ்தாபனங்களுக்கு ஒரு போலி-இடது மறைப்பை அவை வழங்குகின்றன.
58. போலி-இடது குழுக்கள் ஒன்று ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றன அல்லது அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு நேர்மையற்ற நியாயப்படுத்தல்களை வழங்குகின்றன. அமெரிக்காவில் ISO இன் குறிப்பான பாத்திரமானது, அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் சிஐஏ இன் கொள்கையை போலி-இடது அரசியலின் சூழல்வட்டத்திற்குள்ளாக மிகத் தெளிவாக வார்த்தைகளில் வடிப்பதாக இருக்கிறது. இது சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்கான அமெரிக்க-ஆதரவு பிரச்சாரத்தின் மிக உத்வேகமான ஆதரவாளராக இருப்பதோடு சிரியாவிலும் ரஷ்யாவுக்கு எதிராகவும் ஒரு கூடுதல் மூர்க்கமான இராணுவத் தலையீட்டுக்கு அழைப்பு விடுக்கின்ற அரசின் கன்னைகளுடன் நெருக்கமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
59. ஏகாதிபத்தியத்திற்கு போலி-இடது அளிக்கும் ஆதரவானது, அதன் மிகக் கொடுமையான வெளிப்பாட்டை இலண்டனில் ஈக்வடார் தூதரகத்தில் மாட்டிக் கொண்டவராக, அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் (அங்கு அவர் வேவுபார்த்த குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுப்பார்) ஆபத்திற்கு முகம்கொடுப்பவராக இருக்கின்ற விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் பத்திரிகையாளருமான ஜூலியன் அசாஞ்சிற்கு எதிராய் தீவிரப்பட்டுச் செல்லும் அச்சுறுத்தல்கள் விடயத்தில் அது காட்டும் மௌனத்தில் காண்கிறது.
60. உயர்-நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகளது துரோகப் பாத்திரம் ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காக இருக்கிறது. கிரீசில், “தீவிர இடதுகளின் கூட்டணி” சிரிசா, மூன்றரை ஆண்டுகளாக ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை கொடுத்திருக்கிறது, இச்சமயத்தில் அது ஐரோப்பிய வங்கிகளின் கோரிக்கைகளை கடமையுடன் அமல்படுத்தி வந்திருப்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள்-விரோதக் கொள்கையை முதல்-வரிசையில் நின்று செய்துமுடிப்பதாகவும் செயல்பட்டிருக்கிறது. ஜேர்மனியில் இடது கட்சியானது, பாசிச AfD இன் வேலைத்திட்டத்தை பெருமளவில் ஏற்றுக்கொண்டு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை ஆதரித்துக் கொண்டும் அமல்படுத்திக் கொண்டும் இருக்கிறது.
61. அரசியல் ஸ்தாபகத்தின் கன்னைகளால் DSA, ISO, மற்றும் பிற போலி-இடது குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதற்கு இணையாக உலக சோசலிச வலைத் தளத்தை ஒடுக்குவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. DSA உடன் இணைந்த ஜாக்கோபின் பத்திரிகை நியூ யோர்க் டைம்ஸால் தொடர்ச்சியாக மேற்கோளிடப்படுவதோடு, கூகுள் தேடல்களிலும் பிரதானமாக இடம்பிடித்து விடுகின்ற அதேவேளையில், உளவுமுகமைகள் மற்றும் அரசுடன் நெருக்கமான தொடர்புடன் கூகுள், ஃபேஸ்புக் மற்றும் பிற இணைய நிறுவனங்களால் அமல்படுத்தப்படுகின்ற தணிக்கை பொறிமுறைகளது பிரதான இலக்காக உலக சோசலிச வலைத் தளம் ஆகியிருக்கிறது. பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்பதற்கும் சோசலிசத்திற்காகப் போராடுவதற்குமான ஒரு வழியை எதிர்நோக்கும் நிலையில், அரசுக்கும் முதலாளித்துவ அரசியல் எந்திரத்திற்கும் துணை உறுப்புகளாக சேவை செய்கின்ற அமைப்புகளை நோக்கி அவர்கள் திசைதிருப்பப்படுகின்றனர்.
வேலைநிறுத்த நடவடிக்கை மீழெழுச்சியடைவதன் முக்கியத்துவம்
62. ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான உண்மையான இயக்கமானது, ஆளும் வர்க்கத்தில் இருந்தோ அல்லது உயர் மத்தியதர வர்க்கத்தில் இருந்தோ தோன்றப்போவதில்லை. மாறாக பரந்த வெகுஜனங்களில் இருந்தே, அதாவது அரசியல் வாழ்வில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தில் இருந்தே தோன்றும். முதலாளித்துவ நெருக்கடியின் யதார்த்தம் ஏற்கனவே இந்த ஆண்டு தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் குறிப்பிடத்தக்க ஆரம்ப வெளிப்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் கிட்டத்தட்ட ஒழுங்கமைக்கப்பட்ட எல்லா வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாட்டையும் அடக்கிவைத்தன. ஆனால் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மேற்கு வேர்ஜினியா, ஓக்லஹோமா, நியூ ஜேர்சி, அரிசோனா, வட கரோலினா, கொலராடோ, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் ஆசிரியர்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களிலும் வெளிநடப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வேர்ஜினியாவில் தொலைத் தொடர்புத் தொழிலாளர்களும் கலிபோர்னியா பல்கலைக்கழக சேவை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்திருந்தனர்.
63. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது மார்க்சிசத்தின் அடிப்படை தத்துவார்த்த கோட்பாடுகளையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் விளக்கிகூறப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட அரசியல் முன்னோக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. இது வெளிப்படுத்தியதாவது:
இனம், பாலினம் அல்லது பாலியல் அடையாளமோ அன்றி, வர்க்கமே அமெரிக்க மற்றும் உலக சமுதாயத்தின் அடிப்படை சமூக பிரிவாகும். ஜனநாயகக் கட்சியினரும் அவர்களின் அரசியல் ஒட்டுண்ணிகளும் தொழிலாள வர்க்கத்தை இனவாதிகள் என்றும் பிற்போக்கானவர்கள் என்றும் அவதூறு செய்த, "குடியரசு" மாநிலங்களிலேயே இந்த ஆண்டு பல வர்க்கப் போராட்டங்கள் வெடித்தமை, "சிவப்பு" மற்றும் "நீல" மாநிலங்களாக அமெரிக்கா பிளவுபட்டுள்ளது என்ற மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.
போர், சர்வாதிகாரம், தணிக்கை மற்றும் சமத்துவமின்மைக்கும் எதிரான ஒரு இயக்கம் காலூன்றிக்கொள்ள வேண்டிய அடிப்படை புரட்சிகர சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும்.
வர்க்கப் போராட்டமானது ஒரு சர்வதேசப் போராட்டமாகும். 1988ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எழுதியது போல், "முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய தோற்றங்களின் படி, வர்க்கப் போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேச தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஆரம்ப வடிவிலான போராட்டங்கள் கூட, அதன் நடவடிக்கைகளை சர்வதேச மட்டத்தில் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது."
தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் அமைப்புகள் அல்ல. மாறாக அவை நிர்வாகத்தினதும் மற்றும் சமத்துவமின்மைக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் விரோதமான எதிர்ப்பை தடுக்கவும் ஒடுக்கவும் சேவை செய்கின்ற அரசினதும் பெருநிறுவனத்தினதும் கருவியாகும்.
64. ஆசிரியர்களின் பிரதான வேலைநிறுத்தங்கள் ஒவ்வொன்றும் அடிமட்ட ஆசிரிய உறுப்பினர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டன, தொழிற்சங்கங்களால் அல்ல. இந்த வேலைநிறுத்தங்களில் முதலாவதில், மேற்கு வேர்ஜீனியாவில், தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே விரிவடைந்த சுயாதீனமான உள்ளூர் வேலைநிறுத்த அலை, ஆசிரியர்களின் அமைதியின்மையை உணர்விழக்கச்செய்து கட்டுப்படுத்தும் நோக்குடன், ஒரு மட்டுப்படுத்தப்பட்ட மாநிலம் பூராவுமான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க தொழிற்சங்கங்களை நெருக்கியது. மாநிலத்தின் பில்லியனர் ஆளுநருடன் ஒரு உடன்பாட்டின் அடிப்படையில், தொழிற்சங்கங்கள் வேலைக்கு திரும்புமாறு கட்டளையிட்ட போது, ஆசிரியர்கள் எதிர்த்து நின்று வேலைநிறுத்தத்தை தொடர நெருக்கினர். அப்போது தொழிற்சங்கங்கள், ஜனநாயகக் கட்சியைச் சூழ உள்ள போலி-இடது அமைப்புக்களின் ஆதரவுடன், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகளில் எதனையும் வெற்றிகொள்ளாமல் போராட்டத்தை முடித்துக்கொள்வதற்கான தமது முயற்சிகளை தீவிரப்படுத்தின. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கவும் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதற்கும் செயற்பட்டு, ஒவ்வொரு வேலைநிறுத்தத்திலும் இதேபோன்ற பாத்திரத்தை வகித்தன.
65. சில மாநிலங்களில் உள்ள பொதுத்துறை தொழிற்சங்கங்கள், அவை செலுத்த வேண்டிய தொகைக்கு சமாந்தரமான தொகையை தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் அவர்களை சந்தா செலுத்தக் கோரும் “முகவர் கட்டணம்” பற்றிய பொதுத்துறை தொழில்வழங்குனர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் உடன்பாட்டின் அடிப்படையில், அதுதொடர்பான உயர் நீதிமன்றத்தில் ஜனூஸ் எதிர் AFSCME (Janus v. AFSCME) வழக்கில், தொழிற்சங்க வக்கீல்களின் வாய்மூல விவாதத்தில், தொழிற்சங்கங்களின் உண்மையான செயல்பாடு வெளிப்பட்டது. இல்லினோய் இல் AFSCME 31வது கவுன்சிலை பிரதிநிதித்துவப்படுத்தும் டேவிட் ஃப்ரெட்ரிக் கூறியதாவது: "முகவர் கட்டணத்துக்கான இந்த ஒப்பந்தத்திற்காக பேரம்பேசப்பட்டு வந்த பிரதான விடயம், வேலைநிறுத்தம் மீதான வரையறையே ஆகும். பல கூட்டு பேரம் பேசல் ஒப்பந்தங்களில் அதுதான் உண்மை." ஃபிரெட்ரிக் தொடர்ந்தார்: "கட்டணம் என்பது பரிமாற்றம் ஆகும். தொழிற்சங்க பாதுகாப்பு என்பதே வேலைநிறுத்தம் செய்யமால் இருப்பதற்கான பரிமாற்றமாகும்." நீதிமன்றம், முகவர் கட்டணங்களை அங்கீரிப்பதற்கு மாநிலங்களை அனுமதிக்கும் முந்தைய தீர்ப்பை மாற்றுவதற்கு தீர்ப்பளித்தால், "நாடு பூராவும் முன்கண்டிராதளவு தொழிலாளர் அமைதியின்மையை அதிகரிக்க முடியும்” என அவர் எச்சரித்தார்.
66. தொழிற்சங்கங்களின் குணாம்சம், ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கம் மூழ்கியுள்ள ஊழல் மோசடியில் வெளிப்படையானது. ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள UAW அதிகாரிகளுக்கு 1.5 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஃபியட் கிறைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (FCA) நிர்வாகிகள் செலுத்தியது பற்றியதே இந்த மோசடியாகும். UAW இந்த பணத் தொகைக்கு கைம்மாறாக, தினசரி எட்டு மணித்தியால வேலையை இல்லாமல் செய்து, ஒரு புதிய வர்க்க "இரண்டாம் அடுக்கு" தொழிலாளர்களின் ஊதியங்களை பாதியாக குறைத்து, மற்றும் தொழிற்சங்கத்துக்கு சந்தா செலுத்திய போதும் உரிமைகள் அற்ற தற்காலிக பகுதி நேர ஊழியர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் ஒப்பந்தங்களை மிரட்டல் மற்றும் மோசடி மூலம் நடைமுறைப்படுத்தியது.
67. தொழிற்சங்கங்களின் பண்பானது அடிப்படையில், தனிப்பட்ட தலைவர்களின் ஊழலில் மட்டுன்றி, இந்த அமைப்புகளுக்கே உரிய தன்மையிலும் உலகப் பொருளாதாரத்தின் கட்டமைப்பிலான மாற்றத்திலும் வேரூன்றியுள்ளது. தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள், பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் எழுச்சிக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவுக்கும், மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகளுக்கான போராட்டத்தைக் கூட கைவிடுவதன் மூலமே பிரதிபலித்துள்ளன. அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து, தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் நலன்கள் வீழ்ச்சி கண்ட போதிலும் கூட, தொழிற்சங்க நிர்வாகத்தின் வருமானம் தொடர்ச்சியாக அதிகரிப்பதை உறுதிசெய்யும் தொழிற்சங்க-முகாமைத்துவ பங்காண்மையை நெருக்கமாக்கி, தொழிற்சங்க எந்திரம் தன்னை முன்னரை விட மேலும் நேரடியாக பெருநிறுவன நிர்வாக கட்டமைப்புக்குள் ஒருங்கிணைத்துக்கொண்டுள்ளது.
68. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி ஒரு புறநிலை நிகழ்ச்சிபோக்காகும். "அரண்மனை சதியா அல்லது வர்க்க போராட்டமா" என்ற WSWS கட்டுரை கூறியது போல்:
அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நெருக்கடியின் புறநிலை நிலைமைகள் ஒருங்கிணைவும், பரந்த சமூக நனவின் தீவிரமயமாதலும், வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பில் வெளிப்பாட்டைக் காணும். தொழிற்சங்க அதிகாரத்துவம், ஜனநாயகக் கட்சி மற்றும் பலவிதமான அடையாள அரசியலின் செல்வாக்குமிக்க ஆதரவாளர்களும் வர்க்கப் போராட்டத்தை பல தசாப்தங்களாக அடக்கி ஒடுக்கி வந்தமை முடிவுக்கு வருகின்றது. ஆளும் உயரடுக்கின் சமூக எதிர்ப்புரட்சி அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை எதிர்கொள்ளப் போகின்றது. வேலைத் தளங்கள், சமூகங்கள் மற்றும் முழு நகரங்களிலுமாக சமூகப் போராட்டங்களின் பல்வேறு வடிவங்கள், இன்னும் கூடுதலான தனித்துவமான தொழிலாள வர்க்க அடையாளத்தை, முதலாளித்துவ எதிர்ப்பு நோக்குநிலையை மற்றும் சோசலிச குணாம்சத்தைப் பெறும். தனிப்பட்ட வேலைத் தளங்கள் மற்றும் சமூகங்களிலான போராட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் ஐக்கியப்பட்ட போராடத்துக்குள் ஈர்க்கப்படும்.
வர்க்கப் போராட்டம் மற்றும் பொது வேலைநிறுத்தத்தின் தர்க்கம்
69. அமெரிக்காவானது ஒரு சமூக வெடிமருந்து பீப்பா ஆகும். அமெரிக்காவில் முன் கண்டிராத அளவிற்கு சமூக போராட்டங்கள் வெடிப்பது தவிர்க்க முடியாதது ஆகும். தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினர் மத்தியிலான சமூக நலன்கள் பற்றிய பொதுத்தன்மை, வேறுபட்ட தொழிற்பிரிவுகள் இடையிலான வேறுபாடுகள் அழிந்து போகின்றமை, தொழிலாள வர்க்கத்தின் இன, இனம்சார்ந்த ஒருங்கிணைப்பு, இணைய அடிப்படையிலான சமூக ஊடகத்தின் தாக்கம் ஆகிய பல சமூக காரணிகள், வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதை நோக்கி செயற்படுகின்றன. எனவே, உடனடிப் பிரச்சினை எதுவென்றாலும் அல்லது எங்கென்றாலும், தீவிரமான சமூக எதிர்ப்புக்கள் வெடித்து, வேகமாக விரிவடைந்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்களை போராட்டத்தில் செயலூக்கமான பங்களிப்புச் செய்வதற்கு உந்தித் தள்ளும். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, சமூக போராட்டங்களின் ஒன்றிணைவுகளின் தர்க்கரீதியான விளைவு ஒரு பொது வேலைநிறுத்தம் ஆகும். இது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றிய பிரச்சினையை எழுப்பும்.
70. ஆகையால், பரந்த தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு தயாராவதற்கு, பிரபலமான வேலைத்தளங்கள் மற்றும் தொழிலாளர் பிரதேசங்களில் கமிட்டிகளின் ஒன்றிணைந்த வலயமைப்பை அபிவிருத்தி செய்வதை அவசியமாக்குகின்றது. அத்தகைய குழுக்களுக்கான அவசியங்கள் தொழிலாளர்களின் அனுபவங்களிலிருந்தே எழுகின்றன. அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புகளான தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் போராட்ட அமைப்பிற்கு கடும் விரோதமாக இருப்பது மட்டுமன்றி, பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் ஒப்பந்த விதிமுறைகளை அமல்படுத்துவது உட்பட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பிரதிநிதித்துவத்தை கூட கைவிட்டுவிட்டன. வேலைத்தள மற்றும் தொழிற்சாலை குழுக்கள், வேலை வேகத்தை தீர்மானிப்பதில் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை கோருவதுடன், பல அடுக்கு தொழிலாளர் முறைக்கு முடிவு, அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான மற்றும் வாழ்வதற்கு ஏற்ற ஊதியங்களுடன் எட்டு மணி நேர வேலை, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு முடிவு போன்ற கோரிக்கைகளையும் எழுப்பும்.
71. பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமான, சாதாரண தொழிலாளர்களின் தொழிற்சாலைக் குழுக்களை உருவாக்குவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பானது, பிற்போக்கு அதிகாரத்துவவாதிகளை மட்டுமன்றி, போலி இடதுகளினது அனைத்து போக்குகளையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. "எவ்வளவு துணிச்சல் இருந்தால் சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் மீதான தொழிற்சங்கங்களின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான இறையாண்மையை சவால் செய்கிறது!" ட்ரொட்ஸ்கிசத்துடன் உடன்படுவதாக கூறிக்கொள்ளும் சில போலி இடது செய்திதொடர்பாளர்கள், இடைமருவு வேலைத்திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி கைவிட்டு விட்டதாக குற்றம் சாட்டினர். பெருநிறுவனங்களின் தொழிற்சங்க நிர்வாகிகளின் சார்பிலான இந்த குட்டி முதலாளித்துவ வக்கீல்கள், நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் உண்மையில் ட்ரொட்ஸ்கி என்ன எழுதியுள்ளார் என்பதை ஒருபோதும் வாசித்திருக்கவில்லை அல்லது நீண்ட காலத்திற்கு முன்னரே மறந்துவிட்டனர். அவர்,
முதலாளித்துவ சமுதாயத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தின் பணிகளை மிகவும் நெருக்கமாக செயற்படுத்தும் சுயாதீன, மற்றும், தேவையெனில், தொழிற்சங்கங்கள் பழமைவாத கருவிகளுடன் நேரடியாக முறித்துக் கொண்டாலும் கூட அவற்றுடன் மறுஐக்கியமின்றி போர்க்குணமிக்க அமைப்புக்களை எல்லா சாத்தியமான வழிகளிலும் உருவாக்குமாறு நான்காம் அகிலத்தின் உறுப்பினர்களை அழைத்தார். வகுப்புவாத கன்னைகளை அபிவிருத்தி செய்வதன் காரணமாக வெகுஜன அமைப்புக்களை ஒருவர் நிராகரிப்பது குற்றகரமானது என்றால், புரட்சிகர வெகுஜன இயக்கத்தை வெளிப்படையான பிற்போக்கு அல்லது மறைமுக பழைமைவாத ("முற்போக்கு") அதிகாரத்துவ குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு அடிபணியச் செய்வதை பொறுத்துக்கொண்டிருப்பது அதைவிட குற்றகரமானதாகும். தொழிற்சங்கங்கள் தானாகவே முடிவுக்கு வருவதில்லை; மாறாக அவை பாட்டாளி வர்க்க புரட்சிக்கான பாதையிலே முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
72. தொழிற்சாலை மற்றும் வேலையிட குழுக்களை உருவாக்கப் பரிந்துரைக்கையில், அவை பின்வரும் கேள்வியை எழுப்புவதாக ட்ரொட்ஸ்கி விளக்கினார்: "தொழிற்சாலையின் எஜமானாக யார் இருக்க வேண்டும்: முதலாளித்துவவாதிகளா அல்லது தொழிலாளர்களா?"
இந்தக் குழு தன்னை உருவாக்கத் தொடங்கியதில் இருந்தே, ஒரு உண்மையான இரட்டை அதிகாரம் தொழிற்சாலைக்குள் நிறுவப்பட்டுவிடுகிறது. அது முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டு சமரசமற்ற ஆட்சிகளையும் கொண்டுள்ளதால், அதன் உள்ளர்த்தத்தில் அது இடைமருவு நிலையை பிரதிநிதித்துவம் செய்கின்றது. தொழிற்சாலைக் கமிட்டிகளின் அடிப்படை முக்கியத்துவம், துல்லியமாக விடயத்தில் அடங்கியுள்ளது போல், நேரடியாக புரட்சிகர காலத்துக்கு, அல்லது, முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க ஆட்சிகளுக்கு இடைப்பட்ட புரட்சிக்கு-முந்திய காலகட்டத்துக்கு கதவுகளைத் திறந்து விடுகின்றது.
சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்
73. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் செல்வாக்கை கட்டியெழுப்புவதே அவசரமான அரசியல் பணியாக உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, வளர்ந்துவரும் தொழிலாள வர்க்க இயக்கத்தை ஒரு சமரசமற்ற புரட்சிகர மூலோபாயம் மற்றும் முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவதற்கான குறிக்கோளுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ஊதிய வீழ்ச்சி, சுகாதார பராமரிப்பு மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுக் கல்வி அழிப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல், பொலிஸ் கொடூரம், ஜனநாயக உரிமைகள் அழித்தல், உலக யுத்த ஆபத்து ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை இணைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.
74. சோசலிச சமத்துவக் கட்சியின் அடிப்படைக் குறிக்கோள், ஒரு புரட்சிகர முன்னணிப் படையை கட்டியெழுப்புவதும் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் குறிக்கோள்களைப் பற்றிய அதி உயர்ந்தளவிலான புரிதலை ஏற்படுத்துவதும் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் இயக்கத்தின் இயல்பை தெளிவுபடுத்துவதும் ஆகும். அரச அதிகாரத்தைக் கைப்பற்றி, தனியார் இலாபத்துக்கு மாறாக சமூகத் தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறு ஒழுங்கு செய்வதற்கான ஒரு சோசலிச, சர்வதேச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் இயக்கத்துக்குள் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களை இணைப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி கொள்கைக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
75. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் அரசியல் செயற்பாடு, அரசியல் நிகழ்வுகளின் போக்கோடு மேலும் மேலும் பிணைந்துள்ளன. கடந்த ஆண்டு முழுவதும், அனைத்துலகக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும், இணைய தணிக்கைக்கு எதிரான மற்றும் ஜூலியான் அசாஞ்சை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் முன்னணியில் இருந்தன. பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிற்சாலைக் குழுக்ளை அமைப்பதற்கான பிரச்சாரத்துக்கு ஆசிரியர்கள், வாகன தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகள் மத்தியிலும் ஆதரவு வளர்ந்து வருகின்றது.
76. இருபதாம் நூற்றாண்டில் சமூக புரட்சிகள் பற்றிய ஒரு கற்கையானது, புரட்சிகர போராட்டங்களின் போது சோசலிச கட்சியின் தவறான கொள்கையின் விளைவுகளாலேயே அரசியல் தோல்விகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின்போது (1936-39) POUM இன் கொள்கைகள், தவறான கொள்கைகளால் விளைந்த தோல்வியின் மிகத் துன்பகரமான உதாரணங்களில் முதலிடத்தில் இருந்தன. ஆனால், மார்க்சிச கட்சி ஒரு புரட்சிகர நெருக்கடியை அடையாளங் கண்டு, சரியான நேரத்தில், போதுமானளவு உறுதிப்பாட்டுடன் அதை அணுகி பதிலிறுப்பதற்கு தவறியமையும் மற்றொரு காரணம் ஆகும். 1923ல் ஜேர்மன் புரட்சியின் தோல்வியானது அரசியல் முன்முயற்சியின்மையின் அத்தகயை தோல்விக்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாகும். ஒரு புரட்சிகர இயக்கம், ஆழமடைந்துவரும் நெருக்கடியின் தற்போதைய சூழ்நிலையில், இரண்டாவது தவறை செய்யாமல் தவிர்த்துக்கொள்ள உறுதிபூண வேண்டும்.
77. இந்த முன்னோக்கிலிருந்து ஊற்றெடுக்கும் திட்டவட்டமான பணிகள் பின்வருமாறு:
A. வாகனத்துறை மற்றும் ஏனைய உற்பத்தித் தொழிலாளர்கள்; சுரங்க மற்றும் எஃகு தொழிற்துறைகளில் உள்ள தொழிலாளர்கள்; ஆசிரியர்கள் மற்றும் பிற பொதுத்துறை தொழிலாளர்கள்; சுகாதாரப் பணியாளர்கள்; அமசன், யூ.பி.எஸ். மற்றும் ஏனைய கப்பல் தொழிலாளர்கள்; மற்றும் சேவைத்துறை ஊழியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளில் கட்சியின் தளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதுடன் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிற்சாலை, வேலைத் தளங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் குழுக்களை ஒழுங்கமைக்க சோசலிச சமத்துவக் கட்சி ஒரு ஆக்கிரோஷமான பிரச்சாரத்தை இணைக்க வேண்டும். அமெரிக்காவிற்குள் தொழிலாளர்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் நடவடிக்கைகளோடு ஒருங்கிணைத்து, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஐக்கியம் பற்றிய நனவை உருவாக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து கட்சி கிளைகளும் கட்சிக்கு மிக முன்னேறிய தொழிலாளர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும்.
B. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிசக் கொள்கைகளுக்கும் எதிரான பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு தாக்குதலாகும், மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பொலிஸ் அரச வழிமுறைகள் சகல வடிவிலுமான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பிற்கும் எதிராக பயன்படுத்தப்படும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில், குடியேறியவர்களை துன்புறுத்துவதற்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த பிரச்சாரம், ஜனநாயகக் கட்சிக்கும் அதன் சுற்றுவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புக்களுக்கும் எதிராக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
C. தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். "சோசலிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம்" என்ற அனைத்துலகக் குழுவின் அறிக்கை மற்றும் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தின் இன்றியமையாத அரசியல் அடித்தளங்களைக் கோடிட்டுக் காட்டும் கொள்கைகளுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஆதரவை உறுதிப்படுத்துகிறது:
i. போருக்கு எதிரான போராட்டம், சமூகத்தில் உள்ள பெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது மக்களில் அனைத்து முற்போக்கான சக்திகளையும் தன் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.
ii. நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்துக்கும் இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படை தோற்றுவாயான இந்த பொருளாதார அமைப்பு முறையையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு, இதைத் தவிர வேறு அக்கறையான போராட்டம் இருக்க முடியாததன் காரணமாக, புதிய போருக்கு எதிரான இயக்கமானது, முதலாளித்துவ-விரோத மற்றும் சோசலிச கொள்கையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
III. இதனால், புதிய போர் எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமானதாகவும் எதிரானதாகவும் இருக்க வேண்டும்.
IV. புதிய போர் எதிர்ப்பு இயக்கமானது எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேசரீதியானதாக இருப்பதோடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்ட வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு தொழிலாள வர்க்கம் நிரந்தரப் புரட்சி முன்னோக்குடன் பதிலளிக்க வேண்டும். இதுவே, தேசிய-அரசு அமைப்பு முறையை தூக்கி வீசி உலக சோசலிச கூட்டமைப்பை ஸ்தாபிக்கும் மூலோபாய இலக்காகும். இது உலகளாவிய வளங்களை பகுத்தறிவான முறையில், திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதை சாத்தியமாக்குவதோடு, இதன் அடிப்படையில், வறுமை ஒழிப்பையும் மனித கலச்சாரத்தை புதிய மட்டத்திற்கு உயரத்துவதையும் சாத்தியமாக்கும்.
D. இணைய தணிக்கை மற்றும் ஜூலியான் அசாஞ்சை அடக்குவதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அனைத்து தாக்குதல்களுக்கும் எதிரான பிரச்சாரத்தை தொழிலாள வர்க்கத்தை பரந்தளவில் அணிதிரட்டுவதன் மூலம் தீவிரப்படுத்த வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் இன்றியமையாதது மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்திற்கும் ஜனநாயக உரிமைகள் மிக முக்கியமானவையாகும். வர்க்கப் போராட்டத்தின் ஆரம்ப வெடிப்பு வெளிப்படுத்தியுள்ளவாறு, அரசு மற்றும் தொழிற்சங்கங்களின் கருவிகளான முதலாளித்துவ ஊடகங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமையவும் தொடர்புகொள்ளவும் ஒரு இலவச மற்றும் திறந்த இணையம் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியமான கருவியாகும். உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான தணிக்கையை, சமூக ஊடகங்களை மிகவும் திட்டமிட்ட வகையில் பயன்படுத்துவது உட்பட, அதன் வாசகர்களை விரிவுபடுத்துவது மற்றும் அதன் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு தீவிரமான பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொண்டாக வேண்டும்.
E. பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் தொழிலாள வர்க்க இளைஞர்கள் மத்தியில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பை கட்டியெழுப்ப ஒரு பரந்த மற்றும் செயலூக்கமான பிரச்சாரம் அவசியம். 2018ம் ஆண்டின் முதல் பாதி, பாடசாலை வன்முறைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு உட்பட இளைஞர்களின் அரசியல்மயமாதலின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளைக் கண்டது. இந்த தீவிரமயமாதல் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, சமத்துவமின்மை, போர் மற்றும் வன்முறையின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக நனவுபூர்வமாக வழிநடத்தப்பட்டாக வேண்டும்.
F. 2018 இடைக்கால தேர்தலில் மிச்சிகனின் 12 வது காங்கிரஸ் மாவட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் நைல்ஸ் நிமுத்தின் பிரச்சாரத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை பாதுகாக்க, நிதியியல் தன்னலக்குழுவின் செல்வத்தை சுவீகரிக்க, இராட்சத வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை பொது கட்டுப்பாட்டு பயன்பாட்டு நிலைகளாக மாற்ற, வேலைத் தளங்கள் மற்றும் உற்பத்தி நிகழ்வுகளில் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கவும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதற்கான சோலிச வேலைத்திட்டத்தை இப்பிரச்சாரம் முன்னெடுக்கிறது.
78. கட்சியும் அதன் காரியாளர்களும் இந்த மகத்தான அரசியல் பொறுப்புக்களை நிறைவேற்ற, மார்க்சிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களில், எல்லாவற்றுக்கும் மேலாக 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் எண்பதாண்டுகால வரலாற்றில் உறுதியாக வேரூன்றப்பட்டாக வேண்டும் மற்றும் கல்வியூட்டப்பட்டாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் தொடர்ச்சியை வேறு எந்த அரசியல் இயக்கமும் கொண்டிருக்கவில்லை. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உருபெற்றிருக்கும் மகத்தான வரலாறு, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்திற்குள் கட்டாயம் கொண்டுசெல்லப்பட்டாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் புறநிலை தீவிரமயமாதலும் மற்றும் கட்சியின் நடைமுறை செயற்பாடும் ஒருங்கிணைவதானது, தொழிலாள வர்க்கத்தின் வெற்றிக்கும், முதலாளித்துவத்தை ஒழித்து, உலகப் பொருளாதாரத்தின் சோசலிச மாற்றத்திற்கான நிலைமைகளையும் உருவாக்கும்.