முன்னோக்கு

அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுதினத்தில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இதேதினத்தில், 1917 நவம்பர் 7 அன்று காலை, லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான பெட்ரோகிராட் சோவியத்தின் புரட்சிகர இராணுவ கமிட்டி, ரஷ்ய குடிமக்களுக்கு ஒரு பிரகடனத்தை விநியோகம் செய்தது. அது கூறியது:

இடைக்கால அரசாங்கம் தூக்கிவீசப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரமானது, பெட்ரோகிராட் பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் கோட்டையின் தலைமையாக இருக்கும் பெட்ரோகிராட் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகளது சோவியத்தின் அங்கமான, புரட்சிகர இராணுவ குழுவின் கரங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

மக்கள் எந்தக் காரணத்துக்காக போராடினார்களோ —ஒரு ஜனநாயக சமாதானத்தை உடனடியாக வழங்குவது, நிலம் நிலப்பிரபுக்களின் உடைமையாக இருப்பதை ஒழிப்பது, தொழிற்துறை மீது தொழிலாளர்களின் கட்டுப்பாடு, ஒரு சோவியத் அரசாங்கத்தின் உருவாக்கம் ஆகியவை— அது உறுதியளிக்கப்பட்டிருக்கிறது!

தொழிலாளர்கள், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சி நீடுழி வாழ்க!

விளாடிமிர் லெனின்

அன்று மாலையில், மூன்று மாதங்களுக்கு முன்பாக முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தினால் ஒரு அரசுக் குற்றவாளியாகக் கண்டனம் செய்யப்பட்டிருந்த லெனின், தலைமறைவில் இருந்து வெளியில் வந்து சோவியத்தின் பிரதிநிதிகள் ஒன்றுகூடியிருந்த அரங்கத்திற்குள் நுழைகையில் ஆரவாரம் பெருக்கெடுத்த வரவேற்பை பெற்றார். அந்த நாளின் அசாதாரண நிகழ்வுகளை கண்ட அமெரிக்க சோசலிச செய்தியாளர் ஜோன் ரீட், ”நேசிக்கப்பட்டவர் மற்றும் வணங்கப்பட்டவர், வரலாற்றில் வெகு சில தலைவர்களே இங்ஙனம் இருந்திருக்கிறார்கள்” என்று இந்த போல்ஷிவிக் தலைவரைக் குறித்த நினைவிலிருந்து அகலாத ஒரு விவரிப்பை விட்டுச் சென்றார். லெனின், “ஆழமான சிந்தனைகளையும் எளிமையான வார்த்தைகளைக் கொண்டு விளக்குகின்ற, ஒரு ஸ்தூலமான சூழ்நிலையை பகுப்பாய்வு செய்கின்ற ஆற்றலை” கொண்டு ”முழுக்க தனது புத்திஜீவித்திறத்தால் தலைவராக இருந்த ஒரு விசித்திரமான மக்கள் தலைவராக இருந்தார். உடன் புத்திக்கூர்மையும், மகத்தான புத்திஜீவித அஞ்சாமையும் இருந்தது” என்று அவர் எழுதினார்.

உரையாற்றும் இடத்திற்குச் சென்ற லெனின், அங்கிருந்த பிரதிநிதிகளுக்கான உரையை பின்வரும் வார்த்தைகளுடன் தொடங்கினார்: “தோழர்களே, போல்ஷிவிக்குகள் எப்போதும் தேவையென கூறிவந்துள்ள, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சியானது சாதிக்கப்பட்டிருக்கிறது.”

ரஷ்யா அப்போது வரையிலும் கூட ஜூலியன் நாட்காட்டி முறையையே பின்பற்றி வந்ததால், இடைக்கால அரசாங்கம் தூக்கிவீசப்பட்டதானது வரலாற்றில் அக்டோபர் புரட்சியாக நுழைந்தது. ரஷ்யாவின் நாட்காட்டி மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு 13 நாட்கள் பின்தங்கி இருந்தாலும், போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியமையானது, அரசியல் ரீதியாக, ரஷ்யாவை உலக வரலாற்றின் முன்னிலைக்குத் தள்ளியது. போல்ஷிவிக்குகளின் தலைமையிலான கிளர்ச்சியானது எட்டு மாதங்களுக்கு முன்பாக, 1917 பிப்ரவரியில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவை ஆட்சி செய்திருந்த ஜாரிச எதேச்சாதிகாரம் தூக்கியெறியப்பட்டதில் தொடங்கியிருந்த ஒரு அரசியல் போராட்டத்தின் உச்சகட்டமாக இருந்தது.

பிப்ரவரி புரட்சியின் போது பெண்களின் அணிவகுப்பு

1917 பிப்ரவரி-மார்ச்சில் நிகழ்ந்த எழுச்சியானது ரஷ்யாவில் வெடித்திருந்த புரட்சியின் அரசியல் முன்னோக்கு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்த ஒரு நெடிய போராட்டத்தை கட்டவிழ்த்தது. முதலாளித்துவ கடேட் கட்சி, சீர்திருத்தவாத மென்ஷிவிக்குகள், மற்றும் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட சோசலிச புரட்சியாளர்கள் கட்சி ஆகியவை, புரட்சியை அடிப்படையாக தேசியவாத அம்சங்களுடன் கண்டன. ஜாரிச ஆட்சி தூக்கிவீசப்பட்டமையானது, ஒரு தேசிய-ஜனநாயகப் புரட்சிக்கு மேலானதாக ஏதொன்றும் இல்லை என்று அவர்கள் வலியுறுத்தினர். பிரான்ஸ் அல்லது பிரிட்டனின் மாதிரியில், ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ரஷ்ய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒருவகையான நாடாளுமன்ற குடியரசைக் கொண்டு ஜாரிச ஆட்சியைப் பிரதியிடுவதுடன் புரட்சியின் கடமைகள் முடிந்து விடுவதாக அவர்கள் கருதினர்.

உண்மை நடைமுறையில், முதலாளித்துவ கடேட் கட்சியானது, புரட்சிகர எழுச்சியைக் கண்டு அஞ்சியும் பரந்த மக்களை வெறுத்தும், இருந்த சமூக அமைப்பிலான எந்த மாற்றங்களும் தமது செல்வத்திற்கு அச்சுறுத்தலாக நின்றதையிட்டு அவற்றை எதிர்த்தது. மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச புரட்சியாளர்களை பொறுத்தவரை, அவர்களது சீர்திருத்தவாத வேலைத்திட்டங்கள் முதலாளித்துவ சொத்துகளில் எந்த குறிப்பிடத்தக்க உள்நுழைவையும் தவிர்த்து வைத்தன. ரஷ்யா, ஒரு சோசலிசப் புரட்சிக்கு இன்னும் கனிந்திருக்கவில்லை என்று அவர்கள் வலியுறுத்தினர். சோசலிசத்திற்கான உருமாற்றம் ஒரு நடைமுறைசாத்தியமாகும் நிலைக்கு இன்னும் பல தசாப்த கால முதலாளித்துவ அபிவிருத்தி அவசியமாக இருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்த முன்னோக்கின் உள்ளடக்கத்திற்குள்ளாக, முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக தூக்கிவீசுவதும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை ஏற்பதும் முற்றிலுமாய் நிராகரிக்கப்பட்டன. தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்கு அரசியல்ரீதியாக அடிபணியச் செய்வதென்பது, 1914 இல் தொடங்கியிருந்த ஏகாதிபத்திய உலகப் போரின் இரத்தவெள்ளத்தில் ரஷ்யா பங்கேற்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது என்ற அர்த்தத்தைக் கொடுத்தது.

நாடுகடந்து வாழ்ந்த லெனின் 1917 ஏப்ரலில் திரும்புவதற்கு முன்பாக, பெட்ரோகிராட்டில் இருந்த பிரதான போல்ஷிவிக் தலைவர்கள், -லேவ் காமனேவ் மற்றும் ஜோசப் ஸ்ராலின்- தொழிலாள வர்க்க சோவியத்துக்களை (கவுன்சில்) மென்ஷிவிக்குகள் இடைக்கால அரசாங்கத்திற்கு அடிபணியச் செய்வதை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஜாரிச ஆட்சி தூக்கியெறியப்பட்டதன் மூலம், ஏகாதிபத்திய போரிலான ரஷ்யாவின் பங்கேற்பு எதேச்சாதிகார ஜேர்மனிக்கு எதிரான ஒரு ஜனநாயகப் போராட்டமாக உருமாற்றப்பட்டிருந்தது என்றும், ஆகவே தொழிலாள வர்க்கம் அதற்கு ஆதரவளித்தாக வேண்டும் என்றுமான மென்ஷிவிக் வாதத்தை காமனேவும் ஸ்ராலினும் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதே அதிலிருந்து பிறக்கக் கூடியதாகும். ரஷ்ய முதலாளித்துவத்தின் அப்பட்டமான ஏகாதிபத்திய நலன்களுக்கு, “ஜனநாயக அமைதி” குறித்த கபடமான சொற்றொடர்களைக் கொண்டு இனிப்பு பூசப்பட்டது.

1917 ஏப்ரலில் லெனின் ரஷ்யாவுக்கு திரும்பியமை, போல்ஷிவிக் கட்சியின் நோக்குநிலையில் ஒரு அதிரடியான மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. பெட்ரோகிராட் சோவியத்தில் இருந்த இடைக்கால அரசாங்கத்தின் கூட்டாளிகளுக்கும், அத்துடன் போல்ஷிவிக் தலைமையில் இருந்த ஒரு கணிசமான கன்னைக்கும் எதிரான விதத்தில், லெனின், அதிகாரம் சோவியத்துகளுக்கு மாற்றப்படுவதற்கு அழைப்புவிடுத்தார். மென்ஷிவிக்குகளை மட்டுமல்லாது போல்ஷிவிக்கின் தலைமையில் இருந்த லெனினின் தோழர்கள் அநேகம் பேரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்திய, இந்த புரட்சிகரக் கோரிக்கையின் அடிப்படையாக இருந்தது, ரஷ்யப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் குறித்த ஒரு ஆழ்ந்த மாறுபட்ட கருத்தாக்கமாகும்.

1917 பிப்ரவரியில் இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம்

ஏகாதிபத்திய உலகப் போர், உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நின்றது என்பதை 1914 ஆகஸ்டின் வெகு தொடக்கத்தில் இருந்தே லெனின் வலியுறுத்தி வந்திருந்தார். போரினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்தவெள்ளத்திலான படுகொலைகள், முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய முரண்பாட்டில் இருந்து எழுந்தவையாகும். முதலாளித்துவ ஆட்சிகள் போரின் மூலமாகத் தீர்ப்பதற்கு முனைந்த, ஏகாதிபத்திய அமைப்புமுறையின் முரண்பாடுகள், அவசியமான முறையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஒரு புரட்சிகர பதிலிறுப்பைத் தூண்டியிருந்தன.

ரஷ்ய புரட்சியின் உலக வரலாற்று உள்ளடக்கம் குறித்த இந்தப் புரிதல்தான், லெனின் நாடு திரும்பியதற்குப் பின்னர் போல்ஷிவிக் கட்சியை வழிநடத்தவிருந்த கொள்கைகளது அடிப்படையை உருவாக்கின. ரஷ்ய புரட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் ஆரம்பமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். 1917 ஏப்ரலில் போல்ஷிவிக் கட்சியின் ஏழாவது காங்கிரசைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர் தெரிவித்தார்:

புரட்சியை தொடக்கும் மகத்தான பெருமை, ரஷ்ய பாட்டாளி வர்க்கத்திற்கு கிடைத்திருக்கிறது. ஆயினும், ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் இயக்கமும் புரட்சியும் உலக புரட்சிகர பாட்டாளி வர்க்க இயக்கத்தின், (உதாரணத்திற்கு ஜேர்மனியை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு நாளும் கூடுதல் உத்வேகம் பெற்று வருகிறது) ஒரு பாகம் மட்டுமே என்பதை அது மறந்து விடக் கூடாது. இந்த கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே நாம் நமது கடமைகளை வரையறை செய்ய முடியும்.

ஏப்ரலுக்கும் அக்டோபருக்கும் இடையில் வந்த மாதங்களில், கட்சி அங்கத்தவர்களுக்கும் மற்றும் போல்ஷிவிக் துண்டறிக்கைகள், செய்தித்தாள்கள் மற்றும் பிரசுரங்களை வாசித்து வந்த பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும், புரட்சியின் சர்வதேசத் தன்மை குறித்த புரிதலைப் புகட்டி அவர்களது நனவை மேலுயர்த்துகின்ற ஏராளமான கட்டுரைகளை லெனின் எழுதினார். போல்ஷிவிக் புரட்சியை இரகசியமாக தீட்டப்பட்ட ஒரு “சதி”யாக அல்லது “ஆட்சிக்கவிழ்ப்பாக” கூறுபவர்கள், ஒரு சோசலிசப் புரட்சிக்கான லெனினின் விண்ணப்பங்கள் தொழிற்சாலைகளிலும், சிப்பாய்களது முகாம்களிலும் மற்றும் ரஷ்யாவின் அத்தனை முக்கிய நகரங்களிலும் இருந்த வீதிகளிலும் வாசிக்கப்பட்டன, ஆராயப்பட்டன மற்றும் விவாதிக்கப்பட்டன என்ற உண்மையை வெறுமனே உதாசீனம் செய்கின்றனர்.

செப்டம்பரில், அதிகாரத்தைப் பிடிப்பதற்கு ஒரேயொரு மாதத்திற்கு முன்பாக, போல்ஷிவிக் கட்சி, நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற லெனினின் துண்டறிக்கையை பிரசுரம் செய்தது. போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டத்தையும் நோக்கங்களையும் லெனின் வழங்கியதில், திருட்டுத்தனம் வரை போகத் தேவையில்லை, எந்தவித ஐயமளிப்புக்குமே கூட இடமிருக்கவில்லை. மலைப்பூட்டக் கூடிய வரலாற்று நனவின் ஒரு மட்டத்துடன், லெனின், போல்ஷிவிக் கொள்கைகள் எந்த புறநிலை அவசியத்தின் வெளிப்பாடுகளாக இருந்தன என்பதை விளக்கினார்:

போர் என்பது, கொள்ளை வெறி கொண்ட முதலாளிகளின் நலன்களுக்காகத்தான் சண்டையிடப்படுகிறது மற்றும் அவர்கள் மட்டுமே அதனால் இலாபமடைகின்றார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றாலும் அது அவர்களின் தீய எண்ணத்தின் ஒரு விளைபொருள் அல்ல. போர் உலக முதலாளித்துவத்தின் அரை நூற்றாண்டு கால அபிவிருத்தி மற்றும் அதன் பில்லியன் கணக்கான இழைகள் மற்றும் தொடர்புகளின் ஒரு விளைபொருளாகும். மூலதனத்தின் அதிகாரத்தை தூக்கியெறிந்துவிட்டு, அரசு அதிகாரத்தை, இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றாமல், ஏகாதிபத்தியப் போரில் இருந்து வெளியேவருவதும், ஒரு ஜனநாயகரீதியானதும் நிர்ப்பந்தமற்றதுமான சமாதானத்தை சாதிப்பதும் சாத்தியமில்லாததாகும்.

1917 பிப்ரவரி-மார்ச் ரஷ்ய புரட்சியானது ஏகாதிபத்தியப் போர் ஒரு உள்நாட்டுப் போராக உருமாற்றம் கண்டதன் தொடக்கமாகும். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கி, இந்தப் புரட்சி அதன் முதல் அடியை எடுத்தது; ஆனால் போர் முடிவுக்கு வருவதை ஒரு நிச்சயமானதாக ஆக்க வேண்டுமென்றால், அரசு அதிகாரம் பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றப்படுவது என்ற ஒரு இரண்டாவது அடியெடுப்பும் அதற்கு அவசியமாயுள்ளது. இது ஒரு உலகளவிலான “உள்நுழைவின்”, முதலாளித்துவ நலன்களது எல்லைக்குள்ளான உள்நுழைவுவின் தொடக்கமாக இருக்கும்; இந்த முனையில் உடைத்துக் கொண்டு உள்நுழைவதன் மூலமாக மட்டும்தான் பாட்டாளி வர்க்கம் போரின் பயங்கரங்களில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்ற முடியும், அமைதியின் ஆசிர்வதிப்புகளை அதற்கு ஆஸ்தியளிக்க முடியும்.

ஜூலை நாட்களுக்கு —தொழிலாள வர்க்கம் இடைக்கால அரசாங்கத்தினால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது— பின்னர் லெனின் தலைமறைவாகத் தள்ளப்பட்டார். மே மாதத்தில் ரஷ்யாவுக்கு திரும்பி வெகுவிரைவில் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் இணைந்திருந்த லியோன் ட்ரொட்ஸ்கி சிறைப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் ஜெனரல் கோர்னிலோவின் கருக்கலைந்த எதிர்ப்புரட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், செப்டம்பரில் அவர் விடுதலை செய்யப்பட்டார், பெட்ரோகிராட் சோவியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து வந்த வாரங்களில், ட்ரொட்ஸ்கி மாபெரும் வெகுஜனத் தலைவராகவும் புரட்சியின் மகத்தான பேச்சாளராகவும் எழுந்தார். போல்ஷிவிக் கட்சியின் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பில் அவர் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகித்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி

போல்ஷிவிக் எழுச்சிக்கு ட்ரொட்ஸ்கி தலைமை கொடுத்தபோது, அதில் ஒரு மேதமைக் கூறு இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும் அக்டோபர் புரட்சியில், லெனினுக்கு சளைத்ததல்லாத, ட்ரொட்ஸ்கியின் பாத்திரம், உலக வரலாற்றில் ரஷ்ய புரட்சியின் இடம் குறித்த அவரது பகுப்பாய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாய் இருந்தது. சொல்லப் போனால், ட்ரொட்ஸ்கி, 1905 வாக்கிலேயே, நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த தனது விவரிப்பில், ரஷ்யாவில் ஜாரிச எதேச்சாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகப் புரட்சியானது அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றக் கூடிய ஒரு சோசலிசப் புரட்சியாக அத்தியாவசியமாக அபிவிருத்தி காணும் என்பதை முன்கணித்திருந்த முதலாமானவராக இருந்தார்.

ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கடமைகள் ஒரு சோசலிசப் புரட்சிக்கு “இன்னும் தயாராகவில்லை” என்பதாய் சொல்லப்பட்ட ரஷ்யாவின் பொருளாதாரப் பின்தங்கிய நிலையால் தீர்மானிக்கப்பட்டவையாக இருந்தன என்பதான கூற்றுகளை சவால்செய்தது. “பொருளாதாரரீதியாகப் பின்தங்கியதொரு நாட்டில்” 1905 இல் அவர் எழுதினார், “மிக முன்னேறிய முதலாளித்துவத்தின் ஒரு நாட்டை விடவும் விரைவாக பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வர முடியும்.”

ஆனால் தொழிலாள வர்க்கம் அதன் புரட்சியை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்? ட்ரொட்ஸ்கி, 1917 நிகழ்வுகளுக்கு வெகு முன்பாகவே எழுதினார்:

தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் ஆட்சியின் தலையெழுத்தை, ஆகவே ஒட்டுமொத்த ரஷ்ய புரட்சியின் தலையெழுத்தை, ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சியின் தலையெழுத்துடன் இணைப்பதைத் தவிர அதற்கு வேறு எந்த மாற்றும் இல்லை. ரஷ்ய முதலாளித்துவ புரட்சியின் ஒரு தற்காலிகமான சந்தர்ப்பவசமான நிலைமைகளால் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிற அந்த பிரம்மாண்டமான அரசு-அரசியல் அதிகாரத்தை அது ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகின் வர்க்கப் போராட்டத்தின் மட்டங்களுக்குள் பாய்ச்சும். அரசு அதிகாரம் அதன் கைகளில் இருக்க, எதிர்ப்புரட்சி பின்னால் நிற்க, ஐரோப்பாவின் பிற்போக்குத்தனம் அதன் முன்னால் நிற்க, அது உலகெங்கும் இருக்கின்ற அதன் தோழர்களுக்கு ‘உலகத் தொழிலாளர்களே, ஐக்கியப்படுங்கள்!’ என்ற அதன் பழைய அணிதிரட்டல் அறைகூவலை, இந்த முறை இறுதித் தாக்குதலுக்கான ஒரு அழைப்பாக அனுப்பி வைக்கும்.

* * * * *

1917 அக்டோபர் வரையிலுமே மில்லியன் கணக்கான சிப்பாய்களின் உயிர்களைக் காவு வாங்கியிருந்த முதலாம் உலகப் போரின் கொடுங்கனவான யதார்த்தத்திற்கு மத்தியில், போல்ஷிவிக் எழுச்சியின் செய்தி பரந்த மக்களின் நனவு முழுக்க ஒரு மின் அதிர்ச்சி போல ஊடுருவியது. பிப்ரவரி புரட்சி ஒரு ரஷ்ய நிகழ்வாக இருந்தது. ஆனால் அக்டோபர் புரட்சியோ ஒரு உலகை-மாற்றுகின்ற நிகழ்வாக இருந்தது. 1847 இல் வெறும் ஒரு “பூதமாக” இருந்தது இப்போது, ஒரு தொழிலாள வர்க்க எழுச்சியின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்திருந்த ஒரு புரட்சிகர அரசாங்கமாக உருவெடுத்து நின்றிருந்தது.

ரோஸா லுக்செம்பேர்க்

அப்போதும் சிறையில் இருந்து வந்த ரோஸா லுக்செம்பேர்க், புரட்சி குறித்து கேட்டறிந்த பின், ரஷ்யாவிலான அபிவிருத்திகளைப் பின்தொடரும் பொருட்டு காலைச் செய்தித்தாள்களுக்காக காத்திருந்து பொறுமையிழந்த நிலையில் ஒரு நண்பருக்கு இதுகுறித்து எழுதினார். உலக ஏகாதிபத்தியத்தின் ஆயுதமேந்திய எதிர்ப்புக்கு முகம்கொடுக்கும் நிலையில் புரட்சி தப்பிப் பிழைக்க முடியுமா என்ற சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார். ஆயினும், இந்த புரட்சிகர நிகழ்வின் மகத்தான தன்மை குறித்து அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை, லெனினும் ட்ரொட்ஸ்கியும் —அவர் பல வருடங்களாக அறிந்திருந்த தோழர்கள்— சாதித்திருந்த விடயம் குறித்து அவர் தனது பிரமிப்பை வெளிப்படுத்தினார். போல்ஷிவிக் தலைமையிலான எழுச்சி, “ஒரு உலக-வரலாற்று நடவடிக்கை, இதன் உதாரணம் பல யுகங்கள் வாழும்” என்று லுக்செம்பேர்க் எழுதினார்.

பல வருடங்களுக்குப் பின்னர், அக்டோபர் புரட்சியின் இருபத்தியைந்தாவது ஆண்டு தினத்தை கொண்டாடுகையில், அமெரிக்க ட்ரொட்ஸ்கிசத் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் உலகமெங்கிலும் இருந்த சோசலிஸ்டுகள் மீது 1917 ஏற்படுத்திய தாக்கத்தை நினைவுகூர்ந்தார்:

முதன்முறையாக, புரட்சிகர நடவடிக்கையின் ஒருங்குவிக்கப்பட்ட தன்மையில், மார்க்சிசத்தின் உண்மையான அர்த்தம் குறித்த ஒரு விளங்கப்படுத்தலை நாங்கள் பெற்றோம். முதன்முறையாக, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி மற்றும் ரஷ்ய புரட்சியின் தலைவர்களது உதாரணங்கள் மற்றும் பாடங்களில் இருந்து ஒரு புரட்சிகரக் கட்சியின் உண்மையான அர்த்தத்தை நாங்கள் கற்றோம். அந்தக் காலத்தை நினைவில் கொள்பவர்கள் —அவர்களது வாழ்க்கை ரஷ்ய புரட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது— உலகின் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இதுவரை அறிந்தவற்றில் மாபெரும் முன்மாதிரியான மற்றும் கல்வியூட்டும் சக்தியாக அதனை இன்று கருதிப்பார்க்க வேண்டும்.

அக்டோபர் புரட்சி, உலக வரலாற்றின் மாபெரும் மற்றும் மிக முற்போக்கான நிகழ்வுகளில் ஒன்றாய் இடம்பிடிக்கிறது. மனித நாகரிகத்தின் அபிவிருத்தியில் மாபெரும் மைல்கற்களாக நிற்கக் கூடிய உலக-வரலாற்று நிகழ்வுகளின் —சீர்திருத்தக் காலம், அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி போன்றவை— சங்கிலியின் பாகமாக அது இருக்கிறது.

அக்டோபர் புரட்சி, உலகளாவிய அளவில் ஏற்படுத்திய தாக்கம் கணக்கிட முடியாததாகும். முதலாளித்துவ சுரண்டலுக்கும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் ஒரு உலகளாவிய இயக்கத்தைப் பற்ற வைத்த ஒரு நிகழ்வாக அது இருந்தது. இருபதாம் நூற்றாண்டில், உலகின் எந்த ஒரு பகுதியிலும், தொழிலாள வர்க்கம் ஒரு முக்கியமான அரசியல் அல்லது சமூக வெற்றியை, அதை எட்டியதற்கான கணிசமான நன்றிக்கடனை அக்டோபர் புரட்சிக்குக் கொண்டிராமல், பெற்றிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்ப்பதும் கூட கிட்டத்தட்ட சாத்தியமில்லாததாகும். சோவியத் அரசை ஸ்தாபித்தது, அக்டோபர் புரட்சியின் முதல் மகத்தான சாதனையாக இருந்தது. போல்ஷிவிக் புரட்சியின் வெற்றி, தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது, மற்றும் சமூகத்தை ஒரு முதலாளித்துவமல்லாத மற்றும் சோசலிச அடிப்படையில் ஒழுங்கமைப்பது ஆகியவற்றின் சாத்தியத்தை நடைமுறையில் விளங்கப்படுத்திக் காட்டியது.

சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகம், போல்ஷிவிக்-தலைமையிலான எழுச்சியின் உடனடி விளைபொருளாக இருந்தபோதும், இந்த அரசின் உருவாக்கம் மட்டுமே அக்டோபர் புரட்சியின் முழு வரலாற்று முக்கியத்துவத்தையும் உள்ளடக்கியதாகி விடுவதில்லை. 1917 அக்டோபரில் சோவியத் அரசு ஸ்தாபிக்கப்பட்டமையானது, உலக சோசலிசப் புரட்சியின் புதிய சகாப்தத்தில் முதல் அத்தியாயமாக மட்டுமே இருந்தது.

அத்தியாயத்திற்கும் சகாப்தத்திற்கும் இடையிலான இந்த வித்தியாசம் என்பது சோவியத் ஒன்றியத்தின் தலையெழுத்து மற்றும் சமகால உலகத்தின் தலையெழுத்து இரண்டையுமே புரிந்து கொள்வதற்கு இன்றியமையாததாகும். 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது 1917 இல் ஸ்தாபகம் செய்யப்பட்ட அரசின் முடிவைக் குறித்து நின்றது. ஆனால் அது உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பது, அக்டோபர் புரட்சி தனது அடித்தளமாகக் கொண்டிருந்த சர்வதேச சோசலிச முன்னோக்கு கைவிடப்பட்டதன் —இது 1920களின் ஆரம்பத்திலேயே தொடங்கி விட்டது— விளைபயனாக இருந்தது. 1924 இல் ஸ்ராலின் மற்றும் புக்காரினால் முன்நிறுத்தப்பட்ட, தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் ஸ்ராலினிச வேலைத்திட்டம், சோவியத் ஒன்றியத்தின் தேசியவாத சீரழிவில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. ட்ரொட்ஸ்கி எச்சரித்ததைப் போல, ஸ்ராலினிச தேசியவாதம் —இது துரிதமாக வளர்ந்து வந்த ஒரு அதிகாரத்துவ உயரடுக்கிடம் அரசியல் ஆதரவைக் கண்டது— சோவியத் ஒன்றியத்தின் தலையெழுத்தை, உலக சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து பிரித்தது. உலக சோசலிசப் புரட்சிக்கான ஒரு சாதனமாக 1919 இல் ஸ்தாபிக்கப்பட்டிருந்த கம்யூனிச அகிலம், சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்புரட்சிகர வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு தொங்குதசையாக கீழ்ப்படுத்தப்பட்டது. ஸ்ராலினின் துரோககரமான மற்றும் நோக்குநிலைபிறழ்வான கொள்கைகள் ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பல பிற நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் நாசகரமான தோல்விகளுக்கு இட்டுச் சென்றது.

1936 இல் ஸ்ராலின் பாரிய பயங்கரத்தை (Great Terror) தொடக்கினார், இது அடுத்த நான்கு ஆண்டுகளின் போது தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் சோசலிச புத்திஜீவிகளுக்குள்ளும் இருந்த புரட்சிகர சர்வதேசியவாதத்தின் முன்னணிப் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட அத்தனை பேரையும் உருரீதியாக அழிப்பதில் முடிவடைந்தது. ட்ரொட்ஸ்கி 1940 இல் மெக்சிகோவில் படுகொலை செய்யப்பட்டார்.

* * * * *

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது உலக முதலாளித்துவத்துக்கான ஒரு மிகப்பெரும் வெற்றியாக கூறி போற்றப்பட்டது. என்றென்றைக்குமாக கம்யூனிசம் மற்றும் சோசலிசம் எனும் பூதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றனர். வரலாறு ஒரு முடிவுக்கு வந்திருந்தது! அக்டோபர் புரட்சி நாசத்தில் முடிந்திருந்தது! என்றெல்லாம் கூறப்பட்டது. முந்தைய 74 ஆண்டுகளின் போது என்ன நடந்திருந்தது என்பதைக் கவனமாக ஆய்வு செய்தால், அவை இத்தகைய பிரகடனங்களுக்கு ஆதரவாக இல்லை என்பது உண்மையே. சோவியத் ஒன்றியத்தின் பிரம்மாண்டமான சாதனைகளில் —இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டதில் இதன் மையமான பாத்திரம் மட்டுமல்லாது, சோவியத் மக்களின் சமூக மற்றும் கலாச்சார நிலைமைகளில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றங்களும் இதில் அடங்கும்— எதுகுறித்தும் பேசப்படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் வரலாறு குறித்த அடிப்படையான பொய்மைப்படுத்தலானது, சோவியத்தின் சாதனைகள் குறித்த அத்தனை நினைவுகளையும் கூட்டு நினைவில் இருந்து மறக்கடிப்பதற்கான அதன் முயற்சிகள் தவிர, சோசலிசத்தின் தலையெழுத்தை அக்டோபர் புரட்சியின் ஒரு தேசியவாத விவரிப்பின் அடிப்படையில் வரையறை செய்வதற்கான முயற்சியாகவும் இருந்து வந்திருக்கிறது, அதன்படி போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியமையானது ரஷ்ய வரலாற்றின் ஒரு தடம்புரண்ட, முறையற்ற, இன்னும் குற்றவியல்தனமானதும் கூடவான ஒரு நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது. அதன் பொருட்டு, அக்டோபர் குறித்த உண்மையான போல்ஷிவிக் கருத்தாக்கம் கேலிக்குள்ளாக்கப்பட வேண்டும் அல்லது உதாசீனப்படுத்தப்பட வேண்டும். அக்டோபர் புரட்சிக்கு எந்த நீடித்துநிற்கின்ற வரலாற்று மற்றும் அரசியல் பொருத்தத்தையும் காட்டிவிடக் கூடாது.

புரட்சியின் போது பெட்ரோகிராட்டில் உள்ள வல்கன் தொழிற்சாலையில் செம்படை பிரிவு

ஆயினும், அக்டோபர் புரட்சிக்கு அத்தனை நியாயபூர்வதன்மையையும், பொருத்தத்தையும், மற்றும் பெருமையையும் இல்லாது செய்கின்ற நோக்கம் கொண்டதாக இருக்கின்ற இந்த பிற்போக்குத்தனமான விவரிப்பு, ஒரேயொரு சின்ன விடயத்தைச் சார்ந்திருக்கிறது: உலக முதலாளித்துவ அமைப்புமுறையானது, இருபதாம் நூற்றாண்டில் போருக்கும் புரட்சிக்கும் வழிவகுத்த முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும், அவற்றில் இருந்து கடந்து வந்திருக்க வேண்டும்.

துல்லியமாக இந்த இடத்தில்த்தான், அக்டோபர் புரட்சியையும் சோசலிசத்தை அடைவதற்கான வருங்கால முயற்சிகள் அத்தனையையும் மதிப்பிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் தகர்ந்து போகின்றன. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் கடந்து சென்றிருக்கும் கால் நூற்றாண்டு இடைவிடாத மற்றும் தீவிரமடைகின்ற சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் குறிக்கப்பட்டிருக்கிறது. நாம் இடைவிடாத போரின் ஒரு சகாப்தத்தில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1991 இல் ஈராக் மீது அமெரிக்கா முதலில் படையெடுத்தது முதலாக, அமெரிக்க குண்டுகளாலும் ஏவுகணைகளாலும் அழிக்கப்பட்டிருக்கின்ற உயிர்களின் எண்ணிக்கை எளிதாய் ஒரு மில்லியனை தாண்டும். புவியரசியல் மோதல்கள் தீவிரமடைகின்ற நிலையில், ஒரு மூன்றாம் உலகப் போரின் வெடிப்பானது மேலும் மேலும் தவிர்க்கமுடியாததாக பார்க்கப்படுகிறது.

2008 இன் பொருளாதார நெருக்கடி, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நொருங்கும் தன்மையை அம்பலப்படுத்தியது. ஒரு நூற்றாண்டின் மிக உயரிய மட்டங்களிலான சமத்துவமின்மையின் பின்புலத்தில் சமூகப் பதட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரியமான ஸ்தாபனங்கள் தீவிரப்பட்டுச் செல்லும் சமூக மோதலின் அழுத்தத்தை தாங்கவியலாமல் நிற்கின்றன, ஆளும் உயரடுக்கினர் முன்னெப்போதினும் பகிரங்கமாக எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்புகின்றனர். ட்ரம்ப் நிர்வாகம் என்பது முதலாளித்துவ ஜனநாயகம் உலகளாவிய மட்டத்தில் உடைந்ததன் ஒரேயொரு அருவெறுப்பூட்டும் வெளிப்பாடு மட்டுமே. முதலாளித்துவ அரசை இயக்குவதில் இராணுவம், போலிஸ் மற்றும் உளவு முகமைகளின் பாத்திரம் முன்னினும் பகிரங்கமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டு வருடம் முழுவதும், அக்டோபர் புரட்சியை மதிப்பிழக்கச் செய்யும் நோக்குடனான ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அக்டோபரின் “பொருத்தமின்மை” குறித்த அறிவிப்புகள் எல்லாம் இந்த கண்டனங்களில் வியாபித்திருக்கும் வெறிக்கூச்சல் தொனியால் பொய்யாகிப் போகின்றன. அக்டோபர் புரட்சியானது ஒரு வரலாற்று நிகழ்வாக அல்ல, மாறாக நின்றுநிலைக்கின்ற மற்றும் அபாயகரமான சமகால அச்சுறுத்தலாக அணுகப்படுகிறது.

அக்டோபர் புரட்சி மீதான கண்டனங்களின் கீழமைந்திருக்கும் அச்சமானது வரலாற்றுப் பொய்மைப்படுத்தலில் ஒரு முன்னணி கல்வியறிஞரான பேராசிரியர் சோன் மக்மீக்கென் எழுதி சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் வெளிப்பாட்டை கண்டது. அவர் எழுதுகிறார்:

அணு ஆயுதங்களைப் போல, 1917 இல் தொடக்கி வைக்கப்பட்ட சித்தாந்த சகாப்தம் பிறந்தது, லெனினிசத்தின் சோசகமான உண்மை என்னவென்றால், ஒருதடவை அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அதனை கண்டுபிடிக்காமலிருக்க வைக்க இயலாது. சமூக சமத்துவமின்மை எப்போதும் நம்முடன் இருக்கவே செய்யும், அதனுடன் சேர்ந்து அதனை ஒழிப்பதற்கு நல்லுள்ளம் கொண்ட சோசலிஸ்டுகளின் உத்வேகமும் இருக்கத்தான் போகிறது.... கடந்த நூறு ஆண்டுகள் நமக்கு எதையேனும் கற்றுத்தந்திருக்கிறது என்றால், அது நம் எல்லைகளையும் கொள்ள வேண்டும், சிறப்பான சமூகத்திற்கு வாக்குறுதியளிக்கும் ஆயுதபாணியான தீர்க்கதரிசிகளின் எதிர்ப்புச் சக்தியையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான்.

அக்டோபரில் நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரையில், பத்தியாளர் பிரெட் ஸ்டீபன்ஸ் பின்வருமாறு எச்சரிக்கிறார்:

முதலாளித்துவத்தையும் நிதிச் சேவைகளையும் குற்றமாக்கும் முயற்சிகள், எதிர்பார்க்கக் கூடிய முடிவுகளையும் கொண்டிருக்கின்றன... ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது, பாக்டீரியாவும் (சோசலிசம்) ஒழிக்கப்படவில்லை, அதற்கு நமது நோயெதிர்ப்புத் திறனும் இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

இந்த வசனங்களில் எல்லாம் வெளிப்படுத்தப்படும் கவலைக்கு அடிப்படை இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் குறைந்த வயதினரில் (“Millennials” - 28 வயதுக்குக் குறைவானவர்கள்) மிகப்பெரும் சதவீதத்திலானோர் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் வாழ்வதைக் காட்டிலும் ஒரு சோசலிச அல்லது கம்யூனிச சமூகத்தில் வாழ்வதையே விரும்புகின்றனர் என்று புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

* * * * *

அக்டோபர் புரட்சியின் இந்த நூற்றாண்டு வருடம் முழுவதிலும், அதன் மூலங்களையும் முக்கியத்துவத்தையும் ஆய்வு செய்வதன் மூலமும் விளக்குவதன் மூலமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதனைக் கௌரவித்திருக்கிறது. அக்டோபர் புரட்சி தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற உலகின் ஒரேயொரு அரசியல் போக்காக இந்த முக்கியமான வரலாற்று வேலையை அது மேற்கொண்டிருந்தது. இந்த வேலைத்திட்டத்தை பாதுகாத்தலானது வரலாற்றுவழியாக ட்ரொட்ஸ்கி, முதலில் இடது எதிர்ப்பாளர்களின் தலைவராகவும் பின்னர் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகராகவும், அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டமும் கோட்பாடுகளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் தேசியவாத காட்டிக்கொடுப்புக்கும் திரிப்புக்கும் இலக்கானதற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வேரூன்றியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக சாதிக்கப்பட்ட அத்தனையையும் அக்டோபர் புரட்சியின் ஒரு விளைவாகப் பாதுகாக்கின்ற அதேநேரத்தில், அதற்காக அதிகாரத்துவ ஆட்சியின் பிற்போக்கான கொள்கைகளுக்கு, சரணாகதியை விடுங்கள், தகவமைத்துக் கொள்கின்ற ஒரு வடிவத்தைக் கூட அது ஒருபோதும் எடுத்தது கிடையாது.

இவ்வாறாக, நான்காம் அகிலமானது உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் சமகால வெளிப்பாடாக இருக்கிறது. தீர்க்கமுடியாத முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய காலகட்டத்தில், இந்த வேலைத்திட்டமானது மீண்டும் செறிவான பொருத்தத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் புரட்சி வெறுமனே வரலாற்றில் மட்டும் வாழவில்லை, அது நிகழ்காலத்திலும் வாழ்கிறது.

உலக சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைந்து கொள்வதற்கு உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

அக்டோபர் புரட்சியின் உதாரணம் நீடுழி வாழ்க!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவோம்!

உலக சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறுவோம்!

Loading