ICFI
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

அனைத்துலகக் குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

168. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மையப்பணி ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னணியை தொழிலாள வர்க்கத்தினுள் கட்டி எழுப்புவதே ஆகும். அது தொழிலாள வர்க்கத்தின் பரந்த தன்னியல்பான போராட்டங்களில் தலையிடவும் ஆளும் வர்க்கத்தின் பரந்த தன்னியல்பான போராட்டங்களில் தலையிடவும் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகளான தொழிற்சங்க அதிகாரத்துவம், ஸ்ராலினிஸ்டுகள், திரிபுவாதிகள் மற்றும் மத்தியவாதிகளுடன் போரிட்டு அவர்களை ஆயுதபாணியாக்கக்கூடியதாக இருக்கும். எப்போதும் அனைத்துலகக் குழுவின் ட்டொட்ஸ்கிஸ்டுகள், பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரமான பாதையை நிலைநாட்டப் போராட வேண்டும். இதனால் இது எல்லாவிதமான சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிரான ஈவிரக்கமற்ற போராட்டத்தினை நடாத்துவதை வேண்டி நிற்கிறது. தொழிலாள வர்க்கம் அடைந்த ஐக்கியமின்மைக்கும், பின்னடைவுக்குமான முக்கிய காரணம் சந்தர்ப்பவாதிகளின் அரித்தழிக்கக்கூடிய செல்வாக்கேயாகும்.

169. புரட்சிகர சர்வதேசியவாதம் சந்தர்ப்பவாதத்தின் அரசியல் எதிரிடையாகும். ஒரு குறிப்பிட்ட தேசிய சூழலின் உள்ளே உள்ள அரசியல் வாழ்வின் யதார்த்தங்கள் என அழைக்கப்படுவனவற்றிற்கு திட்டவட்டமான அடிபணிதலை சந்தர்ப்பவாதம் ஏதோ ஒருவகையில் வெழிப்படுத்துகிறது. சந்தர்ப்பவாதம் எப்போதுமே குறுக்கு வழிகளைத் தேடுகிறது. ஏதோ ஒரு தேசிய தந்திரோபாயத்தினை உலக சோசலிசப் புரட்சியின் அடிப்படை வேலைத்திட்டத்திற்கு மேலாக உயர்த்துகின்றது. ''உலக சோசலிசப் புரட்சி'' வேலைத்திட்டத்தினை மிகவும் அருவமானது எனக் கருதிவிட்டு சந்தர்ப்பவாத பேராசையாளர்கள் மிக ஸ்தூலமான தந்திரோபாயங்கள் பின் செல்கின்றனர். சந்தர்ப்பவாதி தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசியப் பண்பை ''மறந்து'' போக விரும்புவதோடு மட்டுமல்லாமல் அவர் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நெருக்கடியின் உண்மையையும் ''புறக்கணிக்கின்றனர்.'' உலக முரண்பாடுகளை, அடிப்படைத் தோற்றமாகக் கொண்டுள்ள இவை சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும். எந்தவொரு தேசியரீதியிலான தந்திரோபாயமும், கட்சியின் அரசியல் ஆயுதசாலையில் அதன் பாத்திரம் எவ்வளவுதான் முக்கியத்துவமுள்ளதாய் இருப்பினும் (உ-ம்; தொழிற் கட்சியை அமைக்கும்படி கோரும் வேர்க்கஸ் லீக்கின் அழைப்பு அல்லது ஆஸ்திரேலிய சோசலிச தொழிலாளர் கழகம் தொழிற் கட்சியின் இடதுசாரிகள் மேல் கோரிக்கை வைத்தல்) அனைத்துலகக் குழுவின் உலக மூலோபாயத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில், அதனை ஒன்றில் அதற்கு மேலாக உயர்த்தினாலும் சரி அல்லது அதற்கு சமமாக விளக்கினாலும் சரி அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை பேணிக்காக்க முடியாது. எனவேதான் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் இயங்குகின்ற நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்கங்களுக்கு, அவை அளிக்கும் பிரதான வரலாற்றுப் பங்களிப்பு உலக சோசலிசப் புரட்சி முன்நோக்குக்கான கூட்டானதும், ஒன்றுபட்டதுமான போராட்டமேயாகும்.

170. இந்த நிலைப்பாட்டில் இருந்தே கட்சி நிதானமாக தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியறிவூட்டி சோசலிச வர்க்க நனவினை வளர்த்தெடுக்கின்றது. ஒரே விஞ்ஞான புரட்சிகர கோட்பாடான மார்க்சிசத்தின் அடிப்படையினால் மட்டுமே அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தொழிலாள வர்க்க அமைப்பினைப் பெறமுடியும். மார்க்சிசம், தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ரீதியான புரட்சிகரப் பாத்திரத்தின் நனவுபூர்வமான வெளிப்பாடாகும். இது மட்டுமே ஏகாதிபத்தியத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. இது தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கி உபரி உழைப்பைத் திருடும் முதலாளித்துவச் சுரண்டலை, லாபநோக்குமுறையின் அடிப்படை முரண்பாடுகளை அம்பலப்படுத்துகின்றது. இதுவே வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு தோற்றத்தின் அத்தியாவசியமான அரசியல் சாராம்சத்தினை வெளிக்காட்டுகின்றது. இத்தகைய விஞ்ஞான அடிப்படையின் மேல் தான் சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தையும், தந்திரோபாயத்தையும் விரிவாக்குகின்றது.

171. மார்க்சிசம் என்பது தொழிலாள வர்க்கத்தினால் தன்னியல்பாக உருவாக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல. புரட்சிகரக் கட்சியினின்று தனித்து தொழிலாள வர்க்கம், தொழிற்சங்க நனவுக்கு அப்பால் மேலும் எதனையும் அபிவிருத்தி செய்யமுடியாது என்பதையே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முழு வரலாறும் எடுத்துக்காட்டுகின்றது. தொழிற்சங்கவாதம் கூலிகள், வேலைநிலைமைகளை முன்னேற்றும் பொருட்டு பரந்த தொழிலாளர் அமைப்புக்களை அமைத்து மற்றும் பாதுகாப்பதன் மூலம் வேலைகொள்வோருக்கு எதிராக ஐக்கியப்படவேண்டியதன் அத்தியாவசியத் தேவையை அங்கீகரிக்கின்றது. முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தின் கசப்பான வரலாற்று அனுபவங்களின் மூலம் இது தொழிலாள வர்க்க இயக்கத்தின் உள்ளே தன்னியல்பாக எழுகின்றது. ஆனால் தொழிற்சங்க நனவு, அது எவ்வளவுதான் போர்க்குணம் மிக்கதாய் இருப்பினும் முதலாளித்துவ நனவாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது. இது கூலி முறையின் கீழ் தொழிலாளர்களின் நிலைமைகளை உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளதேயன்றி கூலி அடிமை முறையையே ஒழித்துக் கட்டி விடுவதை அல்ல. நெருக்கடியினால் தொழிலாள வர்க்கம் முன்னோக்கி தள்ளப்படுகையில், முதலாளித்துவம் உருவாக்கிய புதைசேற்றிலிருந்து வெளியேற அது தீர்க்கமாக முயல்கின்றது. கட்சியின் தலையீடு இல்லாமல் தொழிற்சங்க போராட்டத்தை ஒரு இன்றியமையாத பாகமாகக் கொண்ட உலக அளவிலான வர்க்கப் போராட்டத்தின் முழு அரசியல், புரட்சிகர உள்ளடக்கத்தை அதனால் புரிந்துகொள்ள முடியாது.

172. கட்சியும் அதன் அங்கத்தினர்களும் தொழிலாள வர்க்கத்தின் உள்ளே கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்திற்கும், கொள்கைகளுக்கும் எப்போதும் போராடவேண்டும். இது தொழிலாளர்களின் உடனடியான மனோநிலைகளுடனும், நனவுடனும் முரண்பட்டு குறுங்காலத்தில் கட்சியை வெகுஜனங்களில் இருந்து தனிமைப்படுத்தும் விளைவினைக் கொண்டுவரினும் கூட தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைக் கூறப் பின்வாங்கக் கூடாது. அனைத்துலகக் குழு குறிப்பிட்டுள்ளதைப் போன்று; ''பாட்டாளி வர்க்கம் தனது நீண்டகால வரலாற்றுப் பணிகளை விஞ்ஞான ரீதியில் புரிந்துகொள்ள அதற்கு கல்வியறிவூட்டுவது ஒரு கொள்கைசார்ந்த நிலைப்பாட்டை வேண்டிநிற்பதை மார்க்சிஸ்ட் புரிந்திருக்கிறான். ஆதலால் அவன் தொழிலாள வர்க்கத்தினை அரசியல் ரீதியில் தெளிவுபடுத்துதலை நிராகரிப்பதன் மூலம் வாங்கப்படும் குறுகியகால நலன்களுக்குப் பதிலாக தற்காலிக தனிமைப்படலையே விரும்புகிறான். (போர்த் இண்டர்நேஷனல், மார்ச் 1987)

173. தொழிலாள வர்க்கத்தின் நனவினை அதன் புறநிலை வரலாற்றுக் கடமைகள் வேண்டிநிற்கும் மட்டத்திற்கு உயர்த்தும் போராட்டமும் 'தன்னியல்புக்கு தலை வணங்காமையும்' அனைத்து வகையான சந்தர்ப்பவாதத்திற்கும் எதிரான மார்க்சிசத்துக்கான போராட்டத்தின் இதயமாக விளங்குகின்றது. மற்றும் கம்யூனிசத்தின் அடிப்படைகளுக்கும் இட்டுச் செல்கின்றது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதியதுபோல், ''கம்யூனிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் உடனடி நோக்கங்கள் சித்தி பெறுவதற்காக, உடனடி நலன்கள் நிறைவேற்றம் பெறுவதற்காகப் போராடுகிறார்கள். ஆனால் தற்காலத்திய இயக்கத்தில் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து பேணிப்பாதுகாக்கின்றனர்.''

174. அனைத்துலகக் குழுவின் வேலையானது, நான்காம் அகிலத்தின் ஸ்தாபன பத்திரத்தில் ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்தி செய்யப்பட்ட இடைமருவு வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 50 ஆண்டுகளின் பயணத்தின் பின்னரும் முக்கியமான கோட்பாட்டு, மூலோபாய, வேலைத்திட்ட கருத்துருக்கள் அவற்றின் எந்தவொரு வரலாற்றுத் தொடர்பினையும் இழந்துவிடவில்லை. ட்ரொட்ஸ்கி பிரேரித்த, குறிப்பாக 'இடைமருவு' கோரிக்கைகள் கூட நகரும் அளவுத்திட்ட கூலியும், நேரமும், தொழிற்சாலை குழுக்கள், தொழில் இரகசியங்களை ஒழித்தலும் தொழிற்சாலையை தொழிலாளர் கட்டுப்படுத்தலும், தனியார் வங்கிகளை சுவீகரித்தலும், வங்கித் தொழிலை தேசியமயமாக்கலும், தொழிலாளர் பாதுகாப்புப் படைகளை அமைத்தல், தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுதல் தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரமான முறையில் அணிதிரட்டுவதற்கான நடைமுறை நெம்புகோல்கள் போன்று பலம்வாய்ந்த ஆதாரங்களாக இருக்கின்றன.

175. இந்த இடைமருவு கோரிக்கைகளை முன்வைக்கையில் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் உலக நெருக்கடியின் முதிர்ச்சிக்கும் பாட்டாளி மக்களின் நனவின் முதிர்ச்சியின்மைக்கும் இடையேயான இடைவெளியைக் கடக்க முயல்கின்றனர். இதே காரணத்திற்காக, இடைமருவு கோரிக்கைகளை எழுப்புகையில் இவை அடிப்படையாகக்கொண்ட புரட்சிகர சோசலிச முன்னோக்கிலிருந்து தனிமைப்பட்ட விதத்திலோ அல்லது அதற்கு எதிரிடையாகவோ ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இடைமருவு வேலைத்திட்டத்தினை சந்தர்ப்பவாத அடிபணிவுகளுக்கும், மத்தியவாத தட்டிக்கழிப்புகளுக்குமான ஒரு மருந்துச்சீட்டாக மாற்றும் இடைவிடாத முயற்சிகள் பப்லோவாதிகளின் காட்டிக்கொடுப்புகளில் முக்கிய இடம்பிடித்திருந்தது. அதாவது இக்கோரிக்கைகளை அவற்றின் உண்மையான புரட்சிகர அடிப்படையிலிருந்து அப்புறப்படுத்தி, அவற்றை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நிஜ புரட்சிகர வேலைத்திட்டத்திற்கான ஒரு பதிலீடாக வைக்கப்படவேண்டுமென சிபார்சு செய்வதாகும். இந்த திரிபுவாத முறையினை முன்மொழிபவரின்படி இடைமருவு கோரிக்கைகள் வெகுஜனங்களின் பின்தங்கிய நனவினை எதிர்த்துப் போராடுவதற்கு மாறாக அவர்களின் பின்தங்கிய நனவிற்கு அடிபணிந்து போவதற்கான கருவிகளாகும். சாராம்சத்தில் இந்நிலைப்பாட்டினை முன்மொழிபவர்கள் தொழிலாள வர்க்கத்தின் உள்ளே சோசலிச நனவுக்காக எந்தவொரு வெளிப்படையான போராட்டத்தின் அவசியத்தினையும் நிராகரிக்கின்றனர். தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்சிச கலாச்சாரத்தின் வளமான பலாபலன்களை பொறுமையாகப் புகட்டுவது அவசியம் இல்லை என இவர்கள் தெரிவிக்கிறார்கள். மாறாக அவர்களின் இறுதி இலக்கு பற்றிய நனவே இல்லாமல், வெகுஜனங்களைக் கவரக்கூடிய ஒரு சில சாதாரண கோரிக்கைகளை வழங்குவது அவர்களை சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் செல்லும் என நினைக்கின்றார்கள்.

176. பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் தாத்பரியத்தில் இடைமருவு வேலைத்திட்டத்திற்கே மறு அர்த்தம் கற்பிக்கும் முழுமுயற்சி சோசலிசத் தொழிலாளர் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டது. 1963-ம் ஆண்டின் மறு இணைப்பின் பல்லாண்டுகளின் பின்னர் இந்த வேலைத்திட்டத்தை ''ஒரு பலநோக்கு கருவிகள் பெட்டிக்கு'' ஒப்பிட்டது. ''ஆகையால் ஒரு தொழில் வல்லுனன் அதைக் கையாளுவதைப்போல் நாம் செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யவேண்டுமாயின், அந்த வேலைக்குப் பொருத்தமான கருவியை, கருவிகள் பெட்டியில் தேடுகின்றோம். மக்களின் நனவு, வேலைத்திட்டத்தின் இந்த அந்த அம்சங்களின் மீது செயல்படவிருக்கும் அவர்களது தயார்நிலை ஆகியவற்றுக்கேற்றவாறும், வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சிநிலை அளவிற்கேற்றதும் காலப்பொருத்தமானதுமாக எதுவெல்லாம் இருக்கிறதோ அவற்றை இடைமருவு வேலைத்திட்டத்தில் இருந்து வெளியே எடுக்கின்றோம். அத்தருணத்திற்கு ஏற்றதை அது கொண்டிருக்காவிட்டால் ஒன்று அல்லது இரண்டு உபாயங்கள் தேவையாக இருக்கும்.'' (புரட்சிகர வழியில் இடைமருவு வேலைத்திட்டத்தின் பாத்திரம்- ஜோர்ஜ் நோவாக்)

177. ட்ரொட்ஸ்கி இடைமருவு வேலைத்திட்டத்தின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்குகையில் இதற்கு நேரெதிராகச் சொல்லியிருந்தார். இடைமருவு வேலைத்திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு அதிகம் முன்னேற்றமானது என எச்சரிக்கை செய்தவர்களுக்கு பதிலளிக்கையில் ட்ரொட்ஸ்கி கூறியதாவது; ''இங்கு நாம் நம்மையே கேட்கவேண்டும், வேலைத்திட்டம் தொழிலாளர்களின் மனோநிலையுடன் ஒத்துப் போகவேண்டுமா அல்லது நாட்டின் இன்றைய புறநிலை, பொருளாதார, சமூகநிலைமைகளுடன் ஒத்துப்போக வேண்டுமா? இது மிக முக்கியமான கேள்வியாகும்... வேலைத்திட்டமானது தொழிலாளர்களின் பின்தங்கிய நிலைமையைக்காட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான பணிகளைக் கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும். அது சமுதாயத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டுமேயன்றி தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கிய நிலையை அல்ல. அது பின்தங்கிய நிலைமையைத் தாண்டி அதனை வெற்றிகொள்வதற்கான ஒரு கருவியாகும். எனவேதான் நாம் நமது வேலைத்திட்டத்தில் முதல்வரியில் அமெரிக்கா உட்பட முதலாளித்துவ சமுதாயத்தின் சமூக நெருக்கடியின் முழு தீவிரத்தையும் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். எம்மில் சார்ந்திராத புறநிலைமைகளை நாம் ஒத்திப்போடவோ அல்லது திருத்தவோ முடியாது. இந்நெருக்கடியை வெகுஜனங்கள் தீர்த்துக்கொள்வர் என நாம் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால் நாம் நிலைமையை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதுதான் வேலைத்திட்டத்தின் பணி... இந்த நிலைமையில் ஒரு புரட்சிகரக்கட்சி என்ன செய்ய முடியும்? தொழிலாளர்கள் இதற்குப் பக்குவம் அடைந்திருக்கிறார்களோ இல்லையோ இந்நிலைமையில் இருந்து பெருக்கெடுக்கும் வரலாற்றுக் கடமைகளின் புறநிலைமையைப் பற்றி தெளிவான, நேர்மையான விளக்கத்தை முதலிடத்தில் வழங்க வேண்டும். எமது பணிகள் தொழிலாளர்களின் மனோநிலையில் தங்கியிருக்கவில்லை. தொழிலாளர்களின் மனோநிலையை வளர்த்தெடுப்பதே எமது பணியாகும். இதைத்தான் முன்னேறிய தொழிலாள வர்க்கத்திற்கு முன் வேலைத்திட்டம் நெறிப்படுத்தி வழங்க வேண்டும். சிலர் கூறலாம்; நல்லது இந்த வேலைத்திட்டம் விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம், இது புறநிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது- ஆனால் தொழிலாளர்கள் இந்த வேலைத்திட்டத்தை ஏற்காது போனால் இது மலடாகிவிடும். சாத்தியமே, சோசலிசப் புரட்சியைத் தவிர்ந்த வேறுவழியில் நெருக்கடி தீர்க்கப்பட முடியாது இருப்பதால், தொழிலாளர் நசுக்கப்படுவதை மட்டுமே இது குறிக்கின்றது. அமெரிக்கத் தொழிலாளி உரிய காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஏற்காது போயின் அவன் பாசிச வேலைத்திட்டத்தை ஏற்கும்படி நிற்பந்திக்கப்படுவான். அத்தோடு நாம் எமது வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்கத்தின் முன் தோன்றும்பொழுது, அவர்கள் எமது வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதங்களையும் நாம் தரமுடியாது, நாம் இதற்குப் பொறுப்பேற்க முடியாது. நமக்கு மட்டுமே நாம் பொறுப்பேற்க முடியும். (இடைமருவு வேலைத்திட்டம் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி)

178. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு தன்னியல்பான போராட்டத்திலும், சம்பந்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் உடனடிக் காரணமும், உடனடி இலக்குகளும் என்னவாக இருந்தபோதிலும், அனைத்துலகக் குழுவின் பகுதிகள் கையிலுள்ள பொருளாதாரப் போராட்டத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான முழு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்துக்கும் இடையேயான நிலையான தொடர்பினை பொறுமையுடனும் சளைக்காமலும் விளக்கவேண்டும். முதலாளி வர்க்கத்தாலும், தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் உள்ள அவர்களின் அடிவருடிகளாலும் கொடூரத்துடன் திணிக்கப்படும் தேசியவாதத்தின் தொழிலாள வர்க்கத்தினுள் உள்ள அதன் சகல வெளிப்பாடுகளுக்கும் எதிராக விசேட கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியை மறுபகுதிக்கு எதிராக குழிதோண்ட வைக்கும் பாதுகாப்புவாதம், தேசியபிரத்தியேகவாதம், குடிவரவு எதிர்ப்பு உணர்வு, இனவாதம் அனைத்து பின்னேற்றமான பாகுபாடுகளுக்கும் எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் இணக்கமின்றிப் போராட வேண்டும்.

179. ஒரு புறநிலையான பரஸ்பரம் சார்ந்த முழுமை என்ற விதத்தில் உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் காலாவதியான தேசிய அரசுகள் முறைக்கும் இடையேயான சமரசப்படுத்த முடியாத முரண்பாட்டினால் ஆளுமை செய்யப்படும் முதலாளித்துவ உலக நெருக்கடியின் புதிய சட்டமானது, பூகோளரீதியில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிக்கான இயங்கு சக்தியாக இருக்கின்றது. வேறுபட்ட இயல்புள்ள தேசிய மக்களை உடைய சர்வதேச தொழிலாள வர்க்கத்தினை ஒரு இராணுவமாக மாற்றும் மாபெரும் வரலாற்றுக் கடமையை இப்பொழுது நிறைவேற்ற முடியும். ''உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!'' எனும் புரட்சிகர மார்க்சிசத்தின் போர்க் குரலே ஒவ்வொரு நாட்டின் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாகும். நீண்ட காலத்துக்கு முன்பே செத்துப்போய்விட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களின் நாற்றமெடுத்த மிச்சசொச்சங்களான பழைய ஸ்ராலினிச, சமூகஜனநாயகக் கட்சிகள் காலாவதியான தேசிய அரசுமுறையையும் அதன் முதலாளித்துவ எஜமான்களையும் என்றுமில்லாத அளவு ஆற்றொணா நிலையில் பற்றிக்கொண்டுள்ளனர். இவ்வாறு நான்காம் அகிலத்தின் சகாப்தம் வந்துள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கடமையானது, சர்வதேச போராளிகளை ஒழுங்கமைத்து, இந்த வேலைத்திட்டத்தின்பால் தீர்க்கமாக செயல்பட வைத்து, நான்காம் அகிலத்தின் பதாகையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி, வரவிருக்கும் உலக சோசலிசப் புரட்சிக்கான வெற்றியைத் தயார் செய்வதாகும்.