ICFI
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான், ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

123. முதலாளித்துவம் ஒரு இரண்டாவது பொற்காலத்தில் நுழைந்து கொண்டிருப்பதாகத் தம்மைத் தாமே திருப்திப்படுத்திக் கொண்டுள்ள விரக்தியுற்ற குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளுடன் ஒப்பிடுகையில் நன்கு தொலைநோக்குப் பார்வையுடைய முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் அமெரிக்க மேலாதிக்கத்தின் தகர்வு, பொதுவாகப் பூகோளப் பொருளாதாரம் என அழைக்கப்படும் நாடுகடந்த கம்பனிகளின் உற்பத்தியின் பெருக்கம், வர்த்தகப் பகைமைகளின் உக்கிரம், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் தாக்கங்கள் ஆகியன தீர்வுகாணமுடியாத பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன என்பதை அறிவர். அத்தகைய பிரதிநிதிகளில் ஒருவரான முன்னாள் அமெரிக்க கருவூல செயலாளர் டபிள்யு. மைக்கேல் புளூமென்தல் சமீபத்தில் எழுதியதாவது; ''மிகப் பிரமாண்டமான அளவிலான ஒரு நிஜ உலக மூலதனச் சந்தையும் மற்றும் பல இடைநிலைத் தொடர்புகளும் ஒளியின் வேகத்தைப்போல் விரைவில் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் உலகின் கம்பியூட்டர்கள், தொலைத்தொடர்புகள் வலைப்பின்னல்களின் ஊடாக, பரந்த அளவிலான வழக்கத்திற்கு மாறான நிதி ரீதியான புதிய பண அணிகலன்களும், பணத்தையொத்த கருவிகளும், உள்நாட்டுக்கொள்கை, நாணயமாற்றுவீதங்கள் தொடர்பான வெறும் தேசியரீதியான நடவடிக்கையை காலாவதியாக்கிவிட்டன. தேசிய பண விநியோகம் என்ற கேள்விக்குப் பதிலளிப்பது இனியும் சுலபமான காரியம் அல்ல. தேசிய ரீதியில் பணவிநியோகத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைத் தீர்மானிப்பதும் அதைப் போன்றே கடினமானதாகும். ஆட்டத்தின் நியதிகள் அடிப்படையில் மாற்றம் அடைந்துவிட்டன... பொதுவாகச் சொன்னால் பொருளாதார விவகாரங்களின் பலதுறைகளில் குறைந்தபட்சம் உலகின் பெரிய நாடுகளில் சிலவற்றிலும் இறுதியில் அனைத்திலும்...அந்த தொழில்நுட்பமே தேசிய இறைமை பற்றிய அடிப்படைக் கருத்தினை துரிதமாக காலாவதியானதாக்கிக் கொண்டுள்ளது. தொழில்நுட்பமானது, தனிப்பட்ட உண்மையான பொருளாதார இருப்பை சக்திவாய்ந்த விதத்தில் இனியும் கொண்டிருக்க முடியாத தொகுப்பினைக் கொண்ட ஒரு உலகத்தை சிருஷ்டித்துள்ளது என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. நாம் எதுவும் மாற்றமடைந்து விடவில்லை என்ற விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருவோமாயின், கட்டாயமாக தேசிய கொள்கைகளைப் பிரயோகிப்பதில் நாம் காட்டும் விடாப்பிடியானது, விரக்தியடையச் செய்வதோடு, பெரும்பாலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.'' (வெளிவிவகாரங்கள், பகுதி 66, எண் 3, பக்கம் 585- 95)

124. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நெருக்கடிக்கான காரணி அல்ல. புளூமென்தல் அதற்கு உதவமுடியாது, ஆனால் அதனை அங்கீகரிக்கின்றார். மாறாக 70 ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியினால் முன்வைக்கப்பட்ட ஆய்வு சரியானது என்பதை அவரின் விளக்கம் காட்டுகிறது; ''முதலாளித்துவம் அபிவிருத்திசெய்த முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் தேசிய அரசு எல்லைகளைக் கடந்து வளர்ச்சி கண்டுள்ளன. இன்றைய அரசியல் வடிவத்தில் தேசிய அரசானது இந்த உற்பத்தி சக்திகளைச் சுரண்டுவதற்கு மிகக்குறுகியதாக இருக்கிறது. ஆதலால் நமது பொருளாதார அமைப்பின் இயற்கைப் போக்கு, இந்த அரச எல்லைகளை உடைத்துச் செல்ல முயலுவதாக உள்ளது. பூகோளம் முழுவதும், நிலம், கடல், வெளிப்பரப்பு அதேபோல் உட்புறமும் ஒரு பொருளாதார வேலைத்தளமாகி விட்டன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளுள் பிரிக்கமுடியாதவாறு ஒன்றுடனொன்று தொடர்புள்ளதாக அமைந்துள்ளன. ஆனால் இதனை நிறைவேற்றுகையில் முதலாளித்துவ அரசுகள் ஒவ்வொரு நாட்டினதும் முதலாளித்துவ வர்க்கத்தின் இலாபநலன்களின் பேரில் உலகம் தழுவிய பொருளாதார முறையை கீழ்ப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு இட்டுச் செல்லப்படுகின்றன. ஏகாதிபத்திய அரசியல் 1789-1815, 1848-1859,1864-1866, 1870களில் புரட்சிகளினாலும் யுத்தங்களினாலும் உருவாக்கப்பட்ட பழைய தேசிய அரசுகள் தங்களாலேயே உயிர்வாழ முடியாமற் போய்விட்டதை வேறெதெனையும் விட நன்கு எடுத்துக்காட்டியுள்ளது. இன்று இது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சகிக்கமுடியாத இடைஞ்சலாகி உள்ளது.'' (யுத்தமும் சர்வதேசமும்)

125. உலகப் பொருளாதாரத்தின் அமைதியான அபிவிருத்தியை முதலாளித்துவத்தின் கீழும் அதன் தேசிய அரசமுறையின் கீழும் காண்பது முடியாத காரியம். ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான மோதல்கள், உலகைக் கூட்டாகச் சுரண்டும் முதலாளித்துவ உற்பத்தியாளர்களின் சங்கத்திற்கு நிரந்தரமாகவே இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது என்று ''அதீத எகாதிபத்திய'' கருத்துரு, படுமோசமான திரிபுவாதி கார்ல் கவுட்ஸ்கியால், பழைய தசாப்தங்களுக்கு முன் முன்வைக்கப்பட்டது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரோதம் என்ற கருத்தை ஏகாதிபத்திய சக்திகளுக்கும், சோவியத் அணிக்கும் இடையிலான மோதல் என்பதாய் முழுமையாக வெளித்தள்ளப்பட்டுவிட்டது. பின்னர் பண்டாவினாலும், சுலோட்டரினாலும் வளர்க்கப்பட்டது. இது பிரட்டன் - வூட்ஸ் அமைப்பின் கட்டமைப்பினுள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தற்காலிக மேலாதிக்கத்துக்கு குட்டிமுதலாளித்துவ அடிபணிவேயன்றி வேறல்ல.

126. உலகப் பொருளாதாரத்துக்கும், தேசிய அரசு முறைக்கும் இடையிலான முரண்பாட்டினை ஏகாதிபத்தியம் வெற்றிகரமாகத் தீர்த்து விட்டது என்ற கூற்றை முழுமனதாய் ஏற்றுக்கொண்ட கருத்துருவானது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்து ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மிகவும் உக்கிரமான குரோதங்களின் மறுக்கமுடியாத வளர்ச்சியால் தகர்க்கப்பட்டுவிட்டது.

127. உலகச் சந்தையில் அமெரிக்காவின் மேலாதிக்கம் இழந்ததைக் காட்டும் வகையில் எண்ணற்ற புள்ளிவிபரங்களைக் காட்டமுடியும். 1950 - 1976 வரை அமெரிக்க வர்த்தக நிலுவை 600 கோடி டாலர் உபரிக்கும் 900 கோடி டாலர் பற்றாக்குறைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தது. 1977ல் இருந்து 1981 வரை 2500 கோடி டாலருக்கும் 3,400 கோடி டாலருக்கும் இடைப்பட்ட உறுதியான வர்த்தகப்பற்றாக்குறை காணப்பட்டது. 1982ல் வர்த்தகப் பற்றாக்குறை 3,600 கோடி டாலராக இருந்தது. 1985ல் அது 12,500 கோடி டாலராக எட்டியது. 1970கள் வரை அமெரிக்கா மூலப்பொருட்களையும், பெட்ரோலையும் இறக்குமதி செய்தது. உற்பத்திப் பொருட்களையும், மூலதனப்பொருட்களையும் ஏற்றுமதி செய்தது. இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. 1985ல் ஜப்பானுக்கான அமெரிக்க ஏற்றுமதிகளில் ஐந்து முக்கிய ஏற்றுமதிகள்- மஞ்சள் தானியங்கள், சோயாபீன்ஸ், நிலக்கரி, கோதுமை, பருத்தி- அதேசமயம் ஜப்பானிலிருந்து மோட்டார் வாகனங்கள், அலுவலக எந்திரங்கள், எலக்ட்ரோனிக் உற்பத்தி நுகர் பொருட்கள், செமிகண்டக்டர்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்தது. 1965ல் 65% ஆக இருந்த அமெரிக்க வாகன உற்பத்தியின் பங்கு 1980ல் 20% ஆக வீழ்ச்சி கண்டது. 1980 - 1984க்கும் இடையில் அமெரிக்கா தனது ஏற்றுமதிச் சந்தைப் பங்கில் 23% ஐ இழந்தது. இரும்பு எஃகு உற்பத்தியில் 39.3% ஐ அமெரிக்கா உற்பத்தி செய்தது. 1975ல் உலக எ ஃகு உற்பத்தியில் 39.3% ஐ அமெரிக்கா உற்பத்தி செய்தது. 1975ல் அது 16.4% ஆக வீழ்ச்சி யடைந்தது. 1984ல் அது 8.4% ஆக மட்டுமே இருந்தது. 1973 - 1983க்கும் இடையே அமெரிக்க எஃகு உற்பத்தி 44% ஆக வீழ்ச்சியடைந்தது. 1950களில் ஒருங்கிணைக்கப்பட்ட அமெரிக்க கம்பனிகள், அமெரிக்க சந்தைக்கு 95%க்கும் மேலானதை வழங்கின. இப்பொழுதோ அவற்றின் பங்கு 60%க்கும் குறைவானதாகும்.

128. ஜப்பான் ஒரு தொழில்துறை, மற்றும் நிதித்துறை சக்தியாக வளர்ச்சி கண்டதைக் காட்ட, இதற்கு குறைவுபடாத பரந்த அளவிலான புள்ளிவிபரங்கள் உள்ளன. அவற்றை அமெரிக்காவின் வீழ்ச்சி விபரங்களுடன் ஒப்பிடுகையில், அவை வியப்பூட்டுபவையாக இருக்கின்றன. கடந்த கால்நூற்றாண்டின் போது, அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தகத்தில் ஒரு தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆனால் ஜப்பானிய இறக்குமதிகள் அமெரிக்க ஏற்றுமதிகளைவிட பெருமளவில் அதிகரித்துக் காணப்பட்டன. 1960ல் அமெரிக்கா ஜப்பானுக்கு 140 கோடி டாலருக்கு பொருட்களை விற்பனை செய்தது. 110 கோடி டாலருக்கு பொருட்களை கொள்வனவு செய்தது. 1985ல் அமெரிக்கா2,260 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. 6880 கோடி டாலர் பொருட்களை இறக்குமதி செய்தது. பணவீக்கத்தினைச் சரி செய்யும் பொழுது இது ஏற்றுமதியில் 5 மடங்கு அதிகரிப்பினையும் இறக்குமதியில் 18 மடங்கு அதிகரிப்பையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. 1960ல் ஜப்பானின் தலா வருமானம் அமெரிக்க மட்டத்தில் சுமார் 30%ல் நின்றுகொண்டிருந்தது. 1980ல் இது சுமார் 70%க்கு வளர்ச்சி கண்டது. 1960 - 1980க்கு இடையே உலக மொத்த தேசிய உற்பத்தியில் ஜப்பானின் மொத்தப் பங்கு 300% க்கும் மேலாக அதிகரித்தது.

129. உலக நிதித்துறையில் ஜப்பானின் பாத்திரம் கடந்த 20 வருடங்களாக எந்த விதத்திலும் குறைவுபடாத பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய வெளிநாட்டுக் கடனான 26,400 கோடி டாலர்களுடன் ஒப்பிடுகையில், ஜப்பானின் தேசிய வெளிநாட்டுச் சொத்து இப்பொழுது 30,000 கோடி டாலர்களை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய எட்டு வங்கிகளில் ஏழு வங்கிகள் ஜப்பானுடையதாகும். உலகின் முன்னணி நூறு வங்கிகளில் 25 வங்கிகள் ஜப்பானுடையதாகும். முன்னணி 500 வங்கிகளில் 98 ஜப்பானுடையதாகும். அவை உலக வங்கிக் கடன்களில் 25% கணக்கைக் குறிப்பிடுகின்றன. ஒப்பிடுமிடத்து அமெரிக்க வங்கிகள் அனைத்தும் சர்வதேச வங்கி கடன் சொத்துக்களில் 18% ஐ மட்டுமே கொண்டுள்ளன. லண்டன் நகரில் இயங்கும் 25 பெரும் வங்கிகளில் 12 வங்கிகள் ஜப்பானுடையதாகும். 1986ல் டோக்கியோ பங்குச்சந்தை உலகின் பெரும் சந்தையாகியது. இது உலக பங்கு மதிப்பில் 1\3 பங்கை கணக்கில் கொண்டிருக்கின்றது. நீயூயோர்க் பங்குச் சந்தையின் அளவு சேர்க்கப்படாவிடில், உலகின் ஏனைய பங்குச் சந்தைகளை இணைத்தாலும் அதைவிடப் பெரியது டோக்கியோவே. நொமூரா செக்யூரீட்டிஸ் கம்பெனியின் சந்தை மூலதனம் 5,400 கோடி டாலர்களாகும். இது தனது பெரிய அமெரிக்கப் போட்டியாளரான மெரில் லிஞ் அண்ட் கம்பெனியை விட 10 மடங்கு அதிகமானது. இந்தப்புள்ளி விபரங்கள் 1987 அக்டோபர் வோல்ஸ்ரீட் சரிவுக்கு முன்னைய நிலைமைகளை பிரதிபலிக்கின்றன. அதிலிருந்து டோக்கியோ பங்குவிலைகள் முற்றிலும் மீண்டுவிட்டன. ஆனால் வோல் ஸ்ரீட் கடந்த ஆண்டு மட்டத்துக்கு பெரிதும் கீழேயே நின்று கொண்டிருக்கிறது. வோல் ஸ்ரீட் நெருக்கடி சம்பந்தமாக ஒரு முக்கிய முதலாளித்துவப் பத்திரிகையான 'பாரின் பாலிசியில்' ஓர் உணர்வுபூர்வமான ஆய்வு வெளியாகியது. அது ஆளும் வர்க்கத்தின் முக்கிய பகுதியினரின் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது. ஒரு பொருளாதார அறிஞர் தெளிவாகக் குறிப்பிடுகையில் ''1987 சரிவு பொருளாதார நிதி பலத்தை அமெரிக்காவிடமிருந்து ஜப்பானுக்கு மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறித்துள்ளது.'' என்றார். (1988 - ஸ்பிரில், எண் 7 பக்கம் 71)

130. ஜப்பானிய - அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய போட்டி முன்னொருபோதும் இல்லாத விதத்தில் உக்கிரம் அடைந்து வருகின்றது. ஏற்றுமதி சந்தைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும் மூலப்பொருட்கள், ''மலிவு உழைப்பு'' க்கான வளங்களை பெறுவதற்கும் உலகம் முழுமையும் அமெரிக்காவின் உள்ளும் கூட ஆளும் வர்க்கங்கள் மூர்க்கமாகப் போராடி வருகின்றன. டாலரின் கடும் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஜப்பானியர்கள் அமெரிக்காவில் உள்ள தமது நிதி, தொழில்துறை அந்தஸ்தினை துரிதமாக அதிகரித்துக் கொண்டுள்ளனர். கலிபோர்னியாவில் 11 மிகப்பெரிய வங்கிகளில் 5 வங்கிகள் ஜப்பானியரினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அந்த மாநிலத்தில் மட்டும் அவர்களின் வங்கிச் சொத்து 2,500 கோடி டாலர்கள் என நம்பப்படுகிறது. அமெரிக்கக் காங்கிரசில் ஜப்பானிய இறக்குமதிகளுக்கு எதிரான பாதுகாப்புவாத சட்ட ஷரத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜப்பானிய தொழில் வல்லுனர்களும், நிதியாளர்களும் வெளிநாட்டு உற்பத்தி வசதிகள் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளனர். பாதுகாப்புவாத நடவடிக்கைகளைத் தாண்டி அமெரிக்காவினுள் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அவர்கள் தென்கொரியா, தாய்வான், ஸ்பெயின், மெக்சிக்கோ ஆகியவற்றை வெளிநாட்டு இணைப்புத் தளங்களாக சார்ந்திருப்பதை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.

131. ஜப்பானின் பிரமாண்டமான பொருளாதார பலத்துக்கும் அதன் இன்றைய இராணுவ நிலைக்கும் இடையிலான சமனற்ற நிலையும் அதற்கு நேர்மாறாக அமெரிக்காவின் உலகப் பொருளாதார அந்தஸ்தின் வீழ்ச்சிக்கும் அதனது இராணுவ மேலாதிக்க வலிமைக்கும் இடையிலான வேறுபாடும் இருப்பது இரண்டு ஏகாதிபத்தியப் போட்டியாளர்களுக்கு இடையிலும் பகைமையை தணிப்பதற்கு பதிலாக அதை உக்கிரப்படுத்துகின்றன. ஜப்பானிய முதலாளித்துவ வர்க்கம் அதனுடைய அரசியல் பொருளாதார அபிலாசைகள் அமெரிக்க நலன்களால் இடைவிடாது விரக்திக்குள்ளாகப்படுகின்றது என உணராமல் இருக்க முடியாது. இவை இறுதி ஆய்வுகளில் பின்னையதின் இராணுவ பலத்தில் ஆதரிக்கப்படுகின்றது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்க அதிரடிப்படைகளை இறக்கியமை ஈரானை மிரட்டுவதற்கு மட்டுமன்றி மத்தியகிழக்கில் ஜப்பானின் கேந்திரமான எண்ணெய் வழிகள் எக்கணமும் அமெரிக்காவினால் வெட்டப்படும் என்பதை ஜப்பானுக்கு நினைவூட்டவுமேயாகும். இந்நடவடிக்கையானது ஜப்பானிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு அதன் நாட்டின் கடுமையான மூலப்பொருள் பற்றாக்குறையை நினைவூட்டத் தவறாது, அதன் இன்றைய குறிப்பிட்ட அபிவிருத்தி மட்டத்தில் பார்ப்பின் 1941 ல் இருந்ததைக் காட்டிலும் பேராபத்தானது. நீண்ட காலத்திற்கு இத்தகைய ஒரு நிலைமையை ஜப்பானிய முதலாளித்துவ வர்க்கத்தால் சகித்துக்கொள்ள முடியாது.

132. ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தவிர்க்க முடியாத விதத்தில் உக்கிரம் காணும் மோதல் உலக ஏகாதிபத்திய விவகாரங்களில் ஆழமாக ஸ்திரப்பாட்டைக் குலைக்கும் காரணியாக விளங்குகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து வந்த இரண்டு தசாப்த காலங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கமும், ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதம் சாந்தப்படுத்தப்பட்டது போலிருந்ததும் உலக வர்த்தகத்தின் விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த போருக்குப் பிந்தைய செழுமைக்கான அரசியல் முன் தேவைகளாக விளங்கின. இரண்டாம் உலக யுத்தத்தை உருவாக்கிய அதே பொருளாதார, புவியியல் தப்புவழிகள் ஊடாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உறவுகளின் முறிவும், மேலாதிக்கத்தின் வீழ்ச்சியும் ஒரு வெடிப்புமிக்க சமனற்ற புதிய காலப்பகுதியை முன்னறிவிக்கிறது. இவை ஒரு அமைதியானதும் முற்போக்கானதுமான அடிப்படையில் உலகச் சந்தையை ஐக்கியப்படுத்த முடியாத முதலாளித்துவ வர்க்கத்தின் இயலாமையை நன்கு புலப்படுத்தியுள்ளன. உண்மையில் மேலே மேற்கோளிட்டுக் காட்டப்பட்ட பொருளாதார வல்லுனரின்படி, அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான மோதுதல் ''1930 ஆம் ஆண்டுகளுக்கு சமமான அனுபவத்தை; நிதிக்குழப்பங்கள் பக்கத்து நாட்டிடம் பிச்சை எடுக்கும் கொள்கைகள் உலகளாவிய மந்தத்தை நோக்கியும் சிலவேளை யுத்தத்தை நோக்கியும் வீழ்ச்சியடையுமாறு அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.'' அதே நூல், பக்கம் 82)

133. உலக ஏகாதிபத்திய விவகாரங்களில் ஐரோப்பா இன்னமும் ஒரு பெரும் பாத்திரத்தை வகிக்கிறது. உலகின் பழம் முதலாளித்துவ வர்க்கம், எந்தவிதத்திலும் உலக ஆதிக்கத்துக்கான போராட்டத்தில் இருந்து விலகிக்கொண்டு விடவில்லை. 1992ல் ஒரு தனி ஐரோப்பிய சந்தையை எல்லைக் கட்டுப்பாடுகள் சுங்கத்துறை இல்லாமலும் முடிந்தமட்டும் தனியொரு நாணயத்துடன் நிறுவும் திட்டங்கள் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே வளர்ச்சிகாணும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையன. 33 கோடி மக்களுடன் ஐரோப்பா பெரும் முதலாளித்துவ சந்தையைக் கொண்டுள்ளது. மேலும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அந்த உத்தேச 1992 இணைப்பானது, சர்வதேச ரீதியில் போட்டி மிக்கதாக தொடர்ந்திருக்க உதவும் எனவும் நம்புகின்றது. அமெரிக்கா ஐரோப்பியர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கூட்டுச் சந்தையில் அமெரிக்கப் பொருட்களை விலக்கிவிட எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக பதிலடி கொடுக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது.

134. தனிச்சந்தை எனப்படுவதை உருவாக்கும் திட்டங்கள் தேசிய அரசு முறையை ஒழிப்பதைக் குறிக்காது இருக்கின்றது. ஐரோப்பிய மக்களின் உண்மையான பொருளாதார இணைப்பு முதலாளித்துவ ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட முடியாது. உண்மையில் ஒரு இணைந்த ஐரோப்பிய சந்தையை உருவாக்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தவிர்க்க முடியாத விதத்தில் தேசிய குரோதங்களின் ஆழத்தை அம்பலப்படுத்தியதோடு ஒரு இணைந்த முதலாளித்துவ ஐரோப்பாவை உருவாக்க இயலாமையும் வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் தாட்சர் ஐரோப்பாவின் தேசிய அரச அமைப்பை தாண்டிச் செல்லும் எல்லா பேச்சுக்களையும் ''பகட்டு தேவதை'' கதைகளாக அவமானப்படுத்தியுள்ளார். ''ஐரோப்பிய ஐக்கியத்தினை'' ஆர்வத்துடன் பிரேரிக்கும் பிரான்ஸ், ஜேர்மனியினால் இது பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது சொந்த தேசிய முதலாளித்துவத்துக்கு இது கொணரக்கூடிய நன்மைகளின் கணிப்பீட்டின் அடிப்படையிலேயே தமது நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக தனிச் சந்தைத் திட்டத்தின் பிரதான இலக்கு ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தை உக்கிரமாகச் சுரண்டுவதேயாகும். சமீபத்திய சுவீடிஷ், ஆசியா மற்றும் சுவிஸ் பிரவுன் பொவேரி போன்றவற்றின் இணைப்பு அலைகள் பரந்த அளவிலான வேலைநீக்கங்கள், தொழில்நிலைமை மீதான தாக்குதலுடன் தவிர்க்க முடியாத விதத்தில் இணைந்துள்ளன. ஐரோப்பாவில் ஒரு கோடியே அறுபது லட்சம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் 1\3 பங்கினர் 25 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர்.

135. மேலும் ஒவ்வொரு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமும் தனது நாட்டுத் தொழிலாளர்களைக் காட்டிலும் நல்ல சமூகத் திட்டங்கள், உயர்ந்தமட்ட சம்பளங்கள், வேலைநிலைமைகளைக் கொண்டிருந்ததால் தேசிய முதலாளித்துவம் திட்டமிட்டுள்ள தனிச் சந்தைக்குள் போட்டியிட முடியாது என வலியுறுத்தி வருகின்றார்கள். எனவே பெல்ஜியம் அரசாங்கம் எல்லாவித சம்பள ஏற்றங்களையும் தடைசெய்துள்ளது. பணவீக்கம் வீதத்துடன் சம்பளமட்டத்தை இணைக்கும் வாழ்க்கைச் செலவு ஷரத்துக்களை குறைக்கவேண்டுமெனவும் கோரியுள்ளது. டென்மார்க் அரசாங்கம் 1985 ல் வாழ்க்கைச்செலவு போனசுகளை இரண்டு ஆண்டுகளுக்கு இரத்துச் செய்துள்ளது. மற்றும் பாராளுமன்றம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மீதான அனைத்து உடன்படிக்கைகளையும் செல்லுபடியற்றதாக்கும் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் (ஓராண்டு உடன்படிக்கைகளுக்குப் பதிலாக) தொழிற்சங்கங்கள் பணவீக்க நிலையில் உடன்படிக்கையை பேச்சுவார்த்தைக்கான எவ்வித சரத்துக்கும் இடமில்லாமல் முதல்தடவையாக மூன்றாண்டு சம்பள ஒப்பந்தத்திற்கு உடன்பட்டுள்ளன.