ICFI
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

33. ஸ்ராலினிஸ்டுகளும், சமூகஜனநாயகவாதிகளும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்ததை குற்றம் சாட்டுவது எவ்வாறாயினும் போதுமானதல்ல. கேள்வி எழுப்பப்பட வேண்டும்; இந்தக் காலத்தில் நான்காம் அகிலத்தின் பங்கு என்ன? ஏன் அது தொழிலாள வர்க்கத்தின் தலைமையை ஸ்ராலினிஸ்டுகளிடமிருந்தும் சமூக ஜனநாயகவாதிகளிடமிருந்தும் பிடுங்கி எடுத்து அதனை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியவில்லை?

34. இந்தக் கேள்விக்கான பதில் 1953ல் இருந்து நான்காம் அகிலத்தின் வரலாற்றின் ஆய்வில் தங்கியிருக்கிறது. அப்படியான ஒரு ஆய்வு காட்டுவது என்னவென்றால், மே, ஜூன் 1968ல் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் வெடித்தெழுவதற்கு முந்தைய 15 வருட காலங்களில் நான்காம் அகிலம் பப்லோவாத, சந்தர்ப்பவாத வளர்ச்சியினால், மிக மோசமாக பலவீனப்படுத்தப்பட்டிருந்தது.

35. 1951ன் ஆரம்பத்திலேயே மூன்றாவது உலக மகாநாட்டில், அப்பொழுது நான்காம் அகிலத்தின் செயலாளராக இருந்த பப்லோ ஒரு முன்னோக்கை முன்வைத்தார். அது ஸ்ராலினிசத்தின் மாற்றமுடியாத எதிர்ப்புரட்சித் தன்மை பற்றிய ட்ரொட்ஸ்கியின் அடிப்படை மதிப்பீட்டுக்கு சவால் விட்டது மட்டுமல்லாமல், அதன் இடத்தில் அதிகாரத்துவத்தின் சுயசீர்திருத்தம் எனும் பல இடங்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட தத்துவத்தை முன்வைத்தது; அவரது நெருங்கிய கூட்டாளியான ஏர்னெஸ்ட் மண்டேலின் ஆதரவுடன் அவர் பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரமான தலைமைப் பங்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு மத்திய, உலக புரட்சிகர மூலோபாயத்தை நிராகரிக்கும்படி பிரேரித்தார். பதிலாக அவர் நிலவுகின்ற தேசிய நிலைமைகளினால் நிர்ணயிக்கப்பட்ட சந்தர்ப்பவாதத் தந்திரங்களினால் வழிகாட்டப்பட்ட, தேசியக் கட்சிகளின் ஒரு கூட்டாக நான்காம் அகிலத்தை உடைக்க செயல்பட்டார். நடைமுறையில் பப்லோவின் முன்னோக்கு, ஒரு குறிப்பிட்ட நாட்டில் தொழிலாளர் இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய எந்தவொரு அரசியல் சக்திகளுக்கும் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக, முதலாளித்துவ தேசியவாத அல்லது குட்டிமுதலாளித்துவ தீவிரவாத சக்திகளுக்கு நான்காம் அகிலத்தின் பகுதிகளை அரசியல் ரீதியாக கீழ்ப்படியச் செய்வதையே அர்த்தப்படுத்தியது. ''அனைத்து ஸ்தாபன வழிப்பட்ட சிந்தித்தல்களை, அது சம்பிரதாய சுதந்திரமாகவோ அல்லது வேறு விதமாகவோ இருப்பினும் பரந்த இயக்கத்தினுள் அது ஒவ்வொரு நாட்டினுள்ளும் அதனை வெளிப்படுத்துகின்றவாறு உண்மையான ஒருங்கிணைப்புக்கு அல்லது இந்த இயக்கத்தினுள் செல்வாக்கு செலுத்தப்படக்கூடிய ஒரு முக்கியமான நீரோட்டத்தினுள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம்'' என பப்லோ வலியுறுத்தினார்.

36. நான்காம் அகிலத்தை அரசியல் ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் கலைத்துவிட அச்சுறுத்திய இந்த சந்தர்ப்பவாத தோற்றத்தை தோற்கடிப்பதற்காக சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) அமைப்பாளரான ஜேம்ஸ் பி. கனனின் முன் முயற்சியில் அனைத்துலகக் குழு ஆரம்பிக்கப்பட்டது. 1953 நவம்பரில் பிரிட்டனிலும் மற்றும் பிரான்சிலுமுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஆதரவுடன் கனனால் வெளியிடப்பட்ட பகிரங்கக் கடிதம் பப்லோவாதிகளை வெளியேற்றும்படி அறை கூவியது.

37. பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் புறநிலை ரீதியான விளைபயன்கள் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் வெளிக்கொண்டுவரப்பட்டன. சிறப்பாக கொலைபாதக சர்வாதிகாரியின் 1953ம் ஆண்டு மரணத்திற்கும், பெப்ரவரி 1956ல் குருஷ்சேவ், ஸ்ராலினின் சில குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கும் இடையில் ஏற்பட்ட ஸ்ராலினிசத்தின் பெரும் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. இதையடுத்து நவம்பர் 1956ல் ஹங்கேரியப் புரட்சி நசுக்கப்பட்டதோடு பப்லோவின் அதிகாரத்துவ சுயசீர்திருத்த தத்துவமானது, முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டது. பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டமானது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்த போதிலும். கனனும், சோசலிசத் தொழிலாளர் கட்சியும் 1957ல் இருந்து பப்லோவாதிகளுடன் கோட்பாடற்ற முறையில் மீண்டும் இணைவதற்குத் திரும்ப ஆரம்பித்தனர். இந்த அபிவிருத்தி சோசலிசத் தொழிலாளர் கட்சியானது, என்றும் மேலும் வெளிப்படையாக ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரின் தீவிரவாதத்திற்கு அடிபணிந்தும், வழமையான பாட்டாளி வர்க்க நோக்கு நிலையைக் கைகழுவி விட்டதும் ட்ரொட்ஸ்கிசத்தை வரலாற்று ரீதியாகக் காட்டிக் கொடுத்ததாக அமைந்ததோடு, அது சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தைப் பாரதூரமாகக் கீழறுத்தது.

38. காஸ்ட்ரோவினுடைய குட்டிமுதலாளித்துவ ஜூலை 26 இயக்ககத்தை சோசலிசத் தொழிலாளர் கட்சி அரவணைத்து, அதை ட்ரொட்ஸ்கிசத்தின் நியாயபூர்வமான ஒரு பிரதியீடு என்று பிரகடனப்படுத்தியதோடு, கியூபாவில் ஒரு தொழிலாளர்களின் அரசு அமைக்கப்பட்டாயிற்றென்று அறிவித்தது. இது நேரடியாக பப்லோவாதிகளுடன் மறு இணைப்புச் செய்து ஐக்கிய செயலாளர் குழுமத்தை அமைக்க இட்டுச் சென்றது. காஸ்ட்ரோவை சோசலிசத் தொழிலாளர் கட்சி போற்றிப் புகழ்வதற்கு மையமாக அமைந்தது என்னவென்றால் பின்தங்கிய நாடுகளில் ஜனநாயகப் புரட்சிகளை முழுமையாக்குவதற்கு சோசலிசப் புரட்சியும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் தேவையில்லை என்று கோரியதாகும். இந்த நிலைப்பாட்டின் மறுபக்கத்தின் அடிப்படையானது என்னவென்றால், பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை எல்லா தேசிய முதலாளித்துவப் பகுதிகளில் இருந்தும் நிலைநாட்டி, நான்காம் அகிலத்தின் பகுதிகளை அமைத்து, ஜனநாயகப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்காகப் போராடுவதற்கான தேவையில்லை என்பதாய் இருந்தது. மறு இணைப்பை நிராகரித்து அனைத்துலகக் குழுவின் பதாகையைத் தற்காத்து நின்ற பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் இந்தக் காட்டிக்கொடுப்பு எதிர்க்கப்பட்டது. என்றாலும் அனைத்துலகக் குழு நான்காம் அகிலமாக இருந்ததன் ஒரு சிறிய சிறுபான்மையையே கொண்டிருந்தது. பப்லோவினதும் மண்டேலினதும், ஹேன்சனினதும் தலைமையைப் பின் தொடர்ந்த உலகம் முழுவதும் உள்ள இயக்கங்களில் சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்பட்ட வெற்றி, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துக்கு அழிவுகரமான விளைபயன்களை ஏற்படுத்தியது.

39. இது மறு இணைப்புச் செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் எடுத்துக்காட்டப்பட்டது, 1964 ஜூனில் பப்லோவாத சர்வதேசத்தின் இலங்கைப் பிரிவான லங்கா சம சமாஜக் கட்சி, (LSSP) நாட்டின் முன்னணி முதலாளித்துவ கட்சியான பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஒரு கூட்டரசாங்கத்தில் நுழைந்தது. 1953ல் அனைத்துலகக் குழு அமைக்கப்படுவதை லங்கா சம சமாஜக் கட்சி எதிர்த்ததுடன், அதைத் தொடர்ந்து பப்லோவாதிகளுடன் SWP ன் மறு இணைப்புக்கான தயாரிப்பில் மையப் பங்கு வகித்தது. நான்காம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் லங்கா சம சமாஜக் கட்சி இலங்கையில் அதன் வேலையில் அனைத்து அடிப்படை ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளையும், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முக்கியமான போக்குகளையும் வரிசைக்கிரமமாக நிராகரித்தது. இந்தக் காட்டிக் கொடுப்புகள் பப்லோவாதிகளால் மூடி மறைக்கப்பட்டன. ஜூன் 1963ல் மறு இணைப்புக்கான மகாநாட்டில் சேர்த்துக்கொண்ட தீர்மானம் பிரகடனப்படுத்தியதாவது; ''எமது இலங்கைப் பிரிவு 1960ல் SLFP இன் மிதவாத முதலாளித்துவ அரசாங்கத்துக்கு ஆதரவளித்த அதன் தவறான அணுகுமுறையை முற்போக்கான முறையில் திருத்திக் கொண்டது. மக்கள் செயலுக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து, அது அதன் நேற்றய தேர்தல் கூட்டாளிகளுக்கு எதிராக மக்களின் தலைமையின் முன்னணியில் அதனை நிறுத்திக் கொள்ளத் தயங்கவில்லை.'' சரியாக ஒரு வருடத்தின் பின் LSSP, SLFP தலைமையிலான கூட்டரசாங்கத்துடன் இணைந்தது. இந்தக் காட்டிக்கொடுப்பு ஆசியா முழுவதும் சோகமான பிரதி விளைவுகளைக் கொண்டிருந்தது. அது உடனடியாக ஸ்ராலினிச மற்றும் மாவோயிச கட்சிகளின் நிலையைப் பலப்படுத்தியது. இந்தக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு லங்கா சம சமாஜக் கட்சி நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசப் போராடி இருக்குமாயின் சுக்குநூறாக்கப்பட்டிருக்கும். இந்த அர்த்தத்தில் சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு, 1965ல் மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கொள்கைகளினால் முழுமையாக நிராயுதபாணியாக்கப்பட்டிருந்த இந்தோனேசிய தொழிலாள வர்க்கத்தின் அழிவுகரமான தோல்விக்கு நேரடியாகப் பங்களித்தது.

40. பப்லோவாத சந்தர்ப்பவாதம் ஆயிரக்கணக்கான ட்ரொட்ஸ்கிச ஊழியர்களை வரிசைக்கிரமமாக தவறான வழியில் இட்டுச் சென்று, இறுதியாக நான்காம் அகிலத்தின் ஒரு பெரும் பகுதியை அழித்தது. ஸ்ராலினிஸ்டுக்களின், சமூக ஜனநாயகவாதிகளின் வெளிப்படையான துரோகத்திற்கு ஒரு வெற்றிகரமான சவாலாக தொழிலாள வர்க்கம் வருவதிலிருந்து திசை திருப்புவதில் முக்கியமான அரசியல் பங்கை பப்லோவாதிகள் வகித்தனர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாட்டாளி வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தி இல்லையென்று பப்லோவாதிகள் முழுமையாக நிராகரித்து, மாணவர்களை ஒரு புதிய புரட்சிகர முன்னணி எனப் போற்றினர். (மண்டேலின் ''சிவப்பு பல்கலைக் கழகங்கள்'' தத்துவம்) அத்துடன் பரந்த தொழிலாள வர்க்க இயக்கங்களின் ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாத தலைமைக்கு எந்த ஒரு அரசியல் சவால் ஏற்படுவதையும் எதிர்த்தனர்.

41. இலத்தீன் அமெரிக்காவில் பப்லோவாத இடைநிலைவாதத்தின் சந்தர்ப்பவாதத்தின் எதிர்ப் புரட்சிகரத் தன்மை தீர்க்கமாக நிலைநாட்டப்பட்டது. உள்ளூர் ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாதக் கட்சிகளின் விதிவிலக்கான பலவீனமுள்ள சூழ்நிலைமை ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு தொழிலாள வர்க்க தலைமையை வென்றெடுப்பதற்காக ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பவாதத்தை வழங்கியது. ஆனால் காஸ்ட்ரோயிசத்தை, பெரோனிசத்தை மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதத்தின் ஏனைய வடிவங்களையும் பப்லோவாதிகள் போற்றிப் புகழ்ந்தனர். 1970களின் பயங்கரமான தோல்விகளுக்கு கிரிமினல் பங்களிப்புக்களாக இருந்தனர். ஆகஸ்டு 1971ல் இராணுவத்தின் கைகளில் பொலிவிய தொழிலாள வர்க்கத்தின் தோல்வி நேரடியாக இடைநிலைவாத POR இனால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் காரணத்தினாலாகும். சிலியில் பப்லோவாதிகளின் கலைப்புவாதக் கொள்கைகள் அலண்டேயின், ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்களுக்கு வசதியளித்தது. அலண்டே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் மூன்று வருடங்களுக்கும் சற்றுக் குறைவாக, சிலி தொழிலாள வர்க்கம் ஒரு உண்மையான புரட்சிகர நிலைமையை எதிர்கொண்ட பொழுது பப்லோவாதத் தலைவர் லூயிஸ் விட்டல் ஏற்கனவே தனது கட்சியை குட்டி முதலாளித்துவ MIR இனுள் கலைத்தபின் பின்வருமாறு எழுதினார்; ''கேள்விக்கிடமற்ற உண்மை என்னவென்றால், இரண்டாம் உலகப் போரின் பின்னைய காலகட்டப் புரட்சிகள், நாளின் நடப்பாக இயங்குகின்ற கொரில்லாப் போர்த் தந்திரத்தை முன்வைத்தன. அதன் கேந்திர மையம் நாட்டுப்புறத்திலாகும்.'' இந்த சொற்கள் 1960களில் பப்லோவாத முன்னோக்குகளின் குணாம்சங்களாக இருந்தது. ட்ரொட்ஸ்கிசத்தின் முழு வேலைத்திட்ட மரபையும் கைவிடுவதற்கு தத்துவார்த்த நியாயப்படுத்தலை வழங்கியது. ஆர்ஜென்டீனாவில் 1963- மறு இணைப்பினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் தவறான வழிகாட்டல், எந்த அளவும் குறைவில்லாத பயங்கரமான பிரதி விளைவுகளைக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எர்னஸ்டோ சேகுவாராவை ட்ரொட்ஸ்கிக்கு சம இணையான அரசியல் தத்துவவாதியென துதிபாடிய மண்டேலின் வழிகாட்டலின் கீழ் பப்லோவாத இயக்கத்தின் ஒரு பிரிவினர் நகர்ப்புற கொரில்லா போர்த் தந்திரங்களின் பக்கம் திரும்பினர். மேலும் சரீர ரீதியாக அழித்தொழிக்கப்பட்டனர். மொரேனோவாலும், ஹான்சனினாலும் தலைமை தாங்கப்பட்ட மற்றைய பிரிவு இழிவான முறையில் பெரனிடமும் முதலாளித்துவ அரசிடமும் சரணாகதி அடைந்தது. அனைத்துப் பப்லோவாதப் பிரிவுகளின் காட்டிக்கொடுப்புக்களின் இணைந்த உற்பத்தியே 1976ல் ஜெனரல் விடெலாவின் வெற்றியாகும்.

42. 1968-75 இடையிலான முக்கிய வருடங்களில் உலகநிலைமை பிரமாண்டமான சர்வதேச தொழிலாள வர்க்க எழுச்சியினாலும், பொருளாதாரக் கொந்தளிப்பினாலும் ஆட்டம் கண்டிருந்தபோது, ஏகாதிபத்தியம் உயிர் பிழைப்பதை சாத்தியமாக்கிய ஒரு முக்கியமான துணைப் பங்கை, பப்லோவாத இடைநிலைவாதிகளின் சந்தர்ப்பவாதம் அது ஸ்ராலினிசம், சமூகஜனநாயகம், மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு வழங்கிய அதன் உதவியின் மூலம் வகித்தது. அது இடைநிலைவாதம் ஏகாதிபத்தியத்தின் இரண்டாம்தர ஏஜென்சி எனும் ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை ஊர்ஜிதம் செய்தது. இயற்கையாகவே குட்டிமுதலாளித்துவ தோல்விவாதிகள், பாட்டாளி வர்க்கத்தின் கையாலாகாத தலைமைபற்றி அதிமேதாவித்தனமாக பேசிய அதேசமயம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு புதிய வளமான சந்தர்ப்பங்களைக் கண்டார்கள். மரணித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் 1980ம் ஆண்டுகள் வரையிலும் கூட எப்படி உயிர்வாழ முடிந்தது என்பது சம்பந்தமாக அவர்கள் ஸ்தூலமாக ஆராய அக்கறை கொள்ளவில்லை. பப்லோவாதிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய சொந்தக் கொள்கைகளின் புறநிலையான முக்கியத்துவம் பற்றியோ வரலாற்று விளைபயன்கள் பற்றியோ, ஆராய அவர்கள் சிறிதும் கரிசனை கொள்ளவில்லை. மத்தியவாதிகள், தீவிரவாதிகளின் வர்க்கநிலை இழந்த அறிவுஜீவிகளின் அனைத்துக் குட்டிமுதலாளித்துவ சகோதரத்தன்மை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறன்களை முன்கூட்டியே உதறித் தள்ளும்படி செய்து, அதன் தோல்வி தவிர்க்க முடியாதது என ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள், 1964ல் இலங்கையிலும், 1968ல் பிரான்சிலும், 1973ல் சிலியிலும், 1974ல் கிறீஸ் மற்றும் போர்த்துக்கல்லிலும் ஒரு சரியான மார்க்சிசக் கொள்கையின் விளைபயன்கள் என்னவாக இருந்திருக்கும் என்பதைப் பற்றிக் கூட ஒரு பொழுதுமே சிந்திக்கவில்லை.

43. மறுபுறம் அனைத்துலகக் குழுவானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலப்பகுதியில், பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாய ரீதியான அனுபவங்களிலிருந்து தீர்க்கமான படிப்பினைகளை அகழ்ந்தெடுத்து, வரவிருக்கும் புரட்சிகர வெடித்தெழுதல்களுக்கான தயாரிப்புக்களுக்கு அதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது; உலக சோசலிசப் புரட்சியின் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டி சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்த, சந்தர்ப்பவாதத்துக்கும், மத்தியவாதத்துக்கும் எதிராக சமரசமற்ற சளையாத போராட்டம் தேவையானது.