இந்த திருப்பத்தின் வர்க்க அடித்தளத்தை, 1974-75 இலேயே அத்தியாவசியத் தொழிற்துறையில் இருந்த கட்சியின் தொழிற்சங்க காரியாளர்களது அழிவில் முன்கூட்டியே காணக்கூடியதாக இருந்தது. அது கட்சி தலைமையில் நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்கு அபாயகரமாக வளர்ச்சி அடைவதற்கான நிலைமைகளை உருவாக்கி இருந்தது. ஹீலி அதிகரித்தளவில் சார்ந்திருந்த றெட்கிறேவுகள் மற்றும் அலெக்ஸ் மிட்செல், அத்துடன் கட்சித் தலைமையகத்தில் செயலாற்றி வந்த டஜன் கணக்கான வர்க்க உணர்வற்ற மற்றும் மேலோட்டமான நபர்கள் போன்ற சக்திகளால் இது பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. கட்சிக்குள் இந்த சமூக அடுக்குத்தான் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் எதிர்வர்க்க நலன்கள் ஊடுருவுவதற்கான பிரதான வழித்தடமாக (transmission belt) ஆகியிருந்தது. சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான 1975-79 "போராட்டம்" குட்டி-முதலாளித்துவ தீவிரவாத கூறுபாடுகள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி பொறுமையிழந்திருந்ததையும் மற்றும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு திட்டமிட்ட போராட்டத்தை நடத்துவதற்கான அவர்களின் இயாலாமையையும் பிரதிபலித்தது. அனைத்திற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தில் எந்தவித முன் அனுபவமும் இல்லாது, ஃப்ளீட் வீதி (Fleet Street) மற்றும் மேற்கு முனையில் (West End) இருந்து WRP இன் அரசியல் குழுவுக்குள் நுழைந்திருந்த பத்திரிகையாளர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் கூறுபாடுகள் கட்சி முன்னொருபோதும் அறிந்திராத சடரீதியான ஆதாரவளங்கள் கைவருவதற்கான தொடர்புகளை வழங்கின. தொழிலாள வர்க்கத்திற்குள் கட்சி உறுப்பினர்களின் நாளாந்த போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு, பெரும் பணத்தொகை திரட்டப்பட்டது. இவ்விதத்தில் மத்திய தலைமையானது, சாமானிய கீழ்மட்ட உறுப்பினர்களிடமிருந்து சுதந்திரமாக செயற்படுவதற்கான நிலையை பெற்றுக்கொண்டு ஜனநாயக மத்தியத்துவத்தின் அடித்தளங்களையே அழித்தது.
ஹீலியைச் சுற்றியிருந்த உயரதிகார நபர்களினது ஒரு பரிவாரத்தின் "மேல் அடுக்கு" என்றும், முடிவெடுக்கும் நடைமுறைகளில் எந்த பாத்திரமும் வகிக்க மறுக்கப்பட்டு வெறுமனே கட்டளைகளை ஏற்று வந்த நூற்றுக் கணக்கான கீழ்மட்ட உறுப்பினர்கள் நிரம்பிய "கீழ் அடுக்கு" என்றும் கட்சி பிளவுபடுத்தப்பட்டது. இது கட்சிக்குள் ஒட்டுமொத்தமாக அரசியல் உறவுகளில் தொடர்ச்சியான சீரழிவை உண்டாக்கியது. தலைமையோ, வர்க்க போராட்ட மட்டத்தில் கட்சிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான நிஜமான உறவுகளை அதிகரித்தளவில் உணர்ந்துகொள்ளமுடியாததாக இருந்தது. தலைமை அலுவலகத்திற்கும் WRP கிளைகளுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் நிர்வாகரீதியான தன்மையை ஏற்றதுடன், ஒரு வர்த்தக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கும் வட்டார கிளை அலுவலகத்திற்கும் இடையிலான உறவைப் போல இருந்தது. பல உறுப்பினர்களே அறிந்திராத அளவுக்கு ஹீலியே கூட கண்காணாத பிரமுகராக ஆகியிருந்தார் — மேலும் அவரும் அவர்களைக் குறித்து வெகு குறைவாகவே அறிந்திருந்தார். பெய்ரூட், டமஸ்கஸ், பாக்தாத், அபுதாபி மற்றும் திரிப்போலிக்கான அவரது விஜயங்கள் சந்தேகத்திற்கிடமின்றி கிளாஸ்கோ, ஷெர்ஃபீல்ட், மான்செஸ்டர் மற்றும் கார்டிஃப்புக்கான அவர் விஜயங்கள் விட மிகவும் அடிக்கடி நடந்தன.
மத்திய கிழக்கில் WRP இன் அழைப்புச்சீட்டாக அவர் வனசா ரெட்கிறேவைப் பெரிதும் சந்தர்ப்பவாதரீதியில் பயன்படுத்தியதன் அடிப்படையில், ஹீலியின் உயரப் பறந்து கொண்டிருந்த இராஜதந்திரமும் மற்றும் பரந்தளவிலான ஆதார வளங்களை அவர் திடீரென அணுக முடிந்ததும், கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிலும் தொழிலாள வர்க்கத்துடனான அதன் உறவுகளிலும் ஒரு அழிவுகரமான விளைவை ஏற்படுத்தி இருந்தது. அதன் நிஜமான உத்தேசம் என்னவாக இருந்தாலும், அதுவொரு நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக இருந்தது, இந்த நிகழ்ச்சிப்போக்கின் மூலமாக WRP அன்னிய வர்க்க சக்திகளின் அரசியல் பிடியில் மாட்டிக் கொண்டது. அது ஒரு சரியான போக்கை எடுக்க வேண்டிய மிக அவசியத்தில் இருந்த அந்த தருணத்தில், மத்திய கிழக்கில் அதன் பணிகளின் "வெற்றி", ஆரம்பத்தில் இருந்தே இதில் ஓர் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்துடன் தொடர்பற்ற ஒரு நிலைப்பாடு இருந்த நிலையில், அது பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தினுள் ஊடுருவுவதில் அரிதாகவே தங்கியிருக்கும் நிலைமையில் இருந்தது. பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்கான போராட்டத்தில் WRP அபிவிருத்தி செய்திருந்த பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு இடையிலான நெருக்கமான உற்ற தொடர்பு சீராக கீழறுக்கப்பட்டது. தொழிலாள வர்க்கத்திலிருந்து தனிமைப்படுவதும் இத்தகைய கொள்கைகளைக் கைவிடுவதும் ஒன்றுக்கொன்று பொருத்தமான விகிதத்தில் அதிகரித்தது. ஒரு குறிப்பிடத்தக்க உண்மை இந்த நிகழ்ச்சிப்போக்கை எடுத்துக்காட்டுகிறது. மே 1979 தேர்தலில், தொழிலாளர்கள் —கலஹன் மீது அவர்களுக்கு வெறுப்பு இருந்தபோதினும்— உறுதியாக டோரிக்களுக்கு எதிராக வர்க்க வாக்குகளைப் பதிவு செய்ய வாக்குச்சாவடிகளுக்கு அணிவகுத்த நிலையில் தொழிற் கட்சிக்கு வாக்குகள் அதிகரித்தன. 1975 இல் இருந்து WRP தலைவர்கள் சமூக ஜனநாயகவாதிகளை எதிர்த்த அவர்களின் போராட்டங்களுக்கு தொழிற் கட்சி மீதான ஒரு சர்வஜனவாக்கெடுப்புக்கு விடுத்திருந்த அழைப்பிற்கு அடிப்படையாக WRP தலைவர்கள் எந்த சமூக சக்தியைச் சார்ந்திருந்ததோ அந்த நடுத்தர வர்க்கத்திற்குள் வலதை நோக்கி கூர்மையான ஊசலாட்டம் இருந்ததன் ஒரு நேரடி விளைவாகவும், தாட்சர் அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் வாக்கு எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, WRP பின்வருமாறு பெருமைபீற்றியது: "தொழிற் கட்சியின் அதிகார வெற்றிக்காக நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை ." (நியூஸ் லைன், மே 5, 1979) WRP இங்கே தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் அரசியல் உணர்வற்ற தன்மையை புகழ்ந்துரைக்கிறது.
அக்கட்டுரை இவ்வாறு கூறுமளவுக்குச் சென்றது: "தொழிற் கட்சி மற்றும் TUC தலைவர்களால் தொழிலாள வர்க்கம் தலைமையின்றி விடப்பட்டிருப்பதே, தொழிற் கட்சியிலிருந்து பெறப்படும் கடந்த நாலரை ஆண்டுகால மிகவும் அத்தியாவசிய படிப்பினை, இதுவே பொது தேர்தலில் தோல்விக்கான காரணம் என்று நாங்கள் நம்புகிறோம்."
நியூஸ் லைன் ஆசிரியர் குழு, இந்த பிரகடனத்தைச் செய்தபோது, அதற்கு முந்தைய நான்காண்டுகளில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பாத்திரம் குறித்து மிகவும் நாசகரமான குற்றச்சாட்டையே அவர்கள் வரைந்திருந்தனர் என்பதை அனேகமாக உணர்ந்திருக்கவில்லை.
தொழிலாள வர்க்கம் தலைமையின்றி விடப்பட்டிருந்தது என்றால், அதனது புரட்சிகர முன்னணிப் படையும் மற்றும் அரசியல்ரீதியில் நனவுபூர்வமான அதன் பிரிவுகளும் WRP தலைமையால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்ததாலாகும். அதன் தோற்கடிப்புவாத சாகசத்தை நிறைவேற்றி இருந்த நிலையில் இப்போது அது அதன் விளைவுகளுக்காக அஞ்சி நடுங்கிய சந்தர்ப்பவாதிகளாக பின்வாங்கியிருந்தது.