தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) நிறுவப்பட்ட ஒரு மாதத்துக்கு பின்னர், சுரங்க தொழிலாளர்கள் அவர்களின் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவாக நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்த வேளையில், அரபு எண்ணெய் தடையின் பாதிப்பால் ஹீத் அரசாங்கம் (Tory Party) வாரத்திற்கு மூன்று நாள் வேலையை அமல்படுத்த நிர்பந்திக்கப்பட்டது. சுரங்கத் தொழிலாளர்களது தேசிய சங்கம் (National Union of Mineworkers - NUM) 1974 ஜனவரியில் முழு வேலைநிறுத்த நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர், அரசு வன்முறையைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை நசுக்க, அவரால் மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஹீத், பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்தார். ஆனால் அதற்கு மாறாக, அந்த வேலைநிறுத்தம் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் தொடர்ந்ததுடன், தொழிற் கட்சியை நோக்கி ஊசலாடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் பரந்த பகுதியினரின் ஆதரவையும் வென்றது. WRP, ஹீத் அரசாங்கத்தைக் கீழிறக்கவும், புதிய தேர்தலுக்கும் மற்றும் தொழிற் கட்சி அரசாங்கம் திரும்ப வருவதற்கும் அழைப்பு விடுத்து வந்தது. அது, முன்பே, கழகத்திலிருந்து கட்சியாக மாற்றுவதற்கான அதன் வேலைத்திட்டத்திலேயே, “சோசலிச கொள்கைகளுக்கான ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான கோரிக்கையானது, அரசு அதிகாரத்துக்காக தொழிலாள வர்க்கத்தைத் தயார் செய்வதில் பிரிக்க முடியாத ஒரு படியாகும், ஏனென்றால் அது எல்லாவற்றுக்கும் மேலாக சீர்திருத்தவாதத்தில் இருந்து முறித்து கொள்வதை அர்த்தப்படுத்துகிறது” என்று வலியுறுத்தி இருந்தது. (அதே நூல், பக்கம் 132-33)
ஒரு சிறுபான்மை அரசாங்கமாக தொழிற் கட்சி அதிகாரத்துக்குத் திரும்பியது, மேலும் இந்த அபிவிருத்தி தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு ஆழமான விளைவுகளைக் கொண்டிருந்தது. வெறும் நான்கு மாதங்களுக்கு முன்னர் தான், அது தனது கட்சியை நிறுவுவதற்கான அடித்தளத்தை, டோரியை கீழிறக்கி தொழிற் கட்சி அரசாங்கத்தை திரும்பக் கொண்டு வருவதற்கான போராட்டத்தின் மீது அமைத்திருந்த நிலையில், இந்தளவுக்கு ஒரு குறுகிய காலத்திற்குள் இந்த முன்னோக்கு நிறைவேறியதால் அந்த புதிய அமைப்பு வெகு விரைவிலேயே ஒரு மோசமான நெருக்கடிக்குச் சென்றது. இந்த குறிப்பிட்ட பணியின் அடிப்படையில் நூற்றுக் கணக்கானவர்கள் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டிருந்தனர், மேலும், அவர்கள் தொழிற் கட்சி ஆட்சிக்கு திரும்பிய உத்வேகமான மனோநிலையில் இருந்ததால், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அவர்களின் உண்மையான அரசியல் கல்வியைத் தொடங்குவதற்கு முன்னரே கட்சியில் இருந்து நழுவத் தொடங்கி இருந்தனர்.
புகழ்பெற்ற டோரி-எதிர்ப்பு இயக்கத்தின் செல்வாக்கு மேலோங்கி இருந்த காலத்தில் நிலவிய, தொழிற் கட்சிக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையிலான பரந்தளவிலான உடன்பாடுகள், இப்போது, தொழிற் கட்சி அரசாங்கத்தின் யதார்த்தத்திற்கு எதிராக வந்தது, அதன் முதல் நடவடிக்கையே தொழிற்சங்க கோரிக்கைகளின் அடிப்படையில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை கணக்குத் தீர்ப்பதாக இருந்தது. WRP தலைமை அதன் வேலைத்திட்டத்தை மறுவரையறை செய்ய நிர்பந்திக்கப்பட்டதுடன், அது ஆளும் சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பின் மீதும் மற்றும் அதன் ட்ரொட்ஸ்கிச அடையாளத்தைப் புதுப்பித்து இனங்காட்டி கொள்வதன் மீதும் தன்னை நிலைநிறுத்தியது. ஆனால் முந்தைய இரண்டு வருடங்களாக மத்தியவாதத்திற்கு (centrism) வழங்கப்பட்டிருந்த சலுகைகள், தலைமைக்குள் எதிர்ப்பை உருவாக்காமல் மறுநோக்குநிலை கொள்ள முடியாதென்பதை அர்த்தப்படுத்தியது. அனைத்திற்கும் மேலாக, இத்தகைய மாற்றங்களுக்கு இடையே, பிரான்சின் மத்தியவாத பேரரசு திருப்பித் தாக்கியது! டோரி தாக்குதல்களின் முதல் நாட்களில் கட்சியை விட்டு வெளியேறி இருந்த இரண்டு நடுத்தர வர்க்க கோழை ஓடுகாலிகள் —ரொபின் பிளிக் (Robin Blick) மற்றும் மார்க் ஜென்கின்ஸ் (Mark Jenkins)— தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உள்ளே ஒரு கன்னையை உருவாக்கும் நோக்கில், “புலட்டின்” குழுவை (Bulletin) உருவாக்க OCI உடன் ஒத்துழைக்கத் தொடங்கினர். இறுதியில் கம்யூனிச விரோதிகளாக ஆகவிருந்த இந்த அயோக்கியர்களின் திட்டவட்டமான குறிக்கோள், கட்சியின் தலைமையில் இருந்து ஹீலியை இறக்க வேண்டும் என்பதாக இருந்தது. தொழிலாளர்களின் ஒரு கணிசமான பகுதியினர் உள்ளடங்கலாக மத்தியவாத அடிப்படையில் ஆட்சேர்ப்பை உள்ளீர்த்திருந்த ஸ்தாபக வேலைத்திட்டத்தில் இருந்து எழுந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த குழப்பத்தின் வடிவில், அவர்களது நடவடிக்கைக்கு ஒரு வளமான களம் அமைந்திருந்தது. அதற்கும் கூடுதலாக, கட்சியின் மூத்த உறுப்பினர்களே, உண்மையில், OCI க்கு எதிரான போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்த அடிப்படை கோட்பாடுகள் மற்றும் அரசியல் படிப்பினைகளைக் கிரகித்துக் கொண்டிருக்கவில்லை.
இப்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளவாறு, 1974 கோடையில், பிளிக்கும் ஜென்கின்சனும் அலன் தொர்னட்டுடனும் மற்றும் WRP இன் ஏனைய பல மத்திய குழு உறுப்பினர்களிடமும் இரகசிய தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர். கௌலி நகர (Cowley) பிரிட்டிஷ் லேய்லன்ட் ஆலையில் ஒரு முக்கிய தொழிற்சங்க பொறுப்பு வகித்திருந்த தொர்னட், கட்சியின் தொழில்துறை அங்கமான அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளராக இருந்தார். அவர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் மேற்கு பிராந்தியப் பகுதி, டோரி-எதிர்ப்பு காலகட்டத்தில் கணிசமாக வளர்ந்திருந்தது.
பிளிக்-ஜென்கின்சன் குழு WRP ஐ வலதிலிருந்து தாக்கியது — முதலாளித்துவ நெருக்கடியின் ஆழம் மீதான அதன் வலியுறுத்தல் மற்றும் 1973-74 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி அபாயங்கள் குறித்த அதன் எச்சரிக்கைகளை (இது பின்னர் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது டோரி அமைச்சரவைக்குள் எழுந்த நெருக்கடி சம்பந்தமாக, முதலாளித்துவப் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு விபரமான அறிக்கையில் உறுதியாயிற்று) ஏளனப்படுத்தியது; தொழிற் கட்சி மற்றும் TUC அதிகாரத்துவம் மீதான WRP இன் விமர்சனங்களைக் கண்டித்ததுடன், Wedgewood (Tony) Benn இன் முகத்திரையைக் கிழித்தமைக்காக குறிப்பாக Workers Press ஐ தாக்கியது.
தொழிற் கட்சி அரசாங்கத்தின் முன்னால், கட்சியின் பெரும்பாலான பகுதிகள் அரசியல்ரீதியில் நிராயுதபாணியாக இருந்தமையால் அவர்களின் தாக்குதல் துல்லியமான செயல்விளைவைக் காட்டியது. அதற்கும் மேலாக, 1973-74 காலகட்டத்தில் மத்தியவாதத்தின் “அடிப்படை உரிமை” சம்பந்தமான விலகல்களை அடிப்படையாக கொண்டு தொழிலாளர் பிரிவுகளுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியிருந்த தொர்னட், குறிப்பாக தொழிற் கட்சி ஸ்திரமின்றி அதிகாரத்தை தக்க வைத்திருந்த மற்றும் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் உடனடி அவசியத்தை முகங்கொடுத்திருந்த நிலைமைகளின் கீழ், இப்போது தொழிற் கட்சி அரசாங்கம் மீது WRP தலைமை கடுமையான தாக்குதல்களுக்குத் திரும்பியதை எதிர்த்தார்.
தொர்னட் கன்னை ஊனக் காலுடன் பிறந்ததாகும். அதன் நிஜமான மூலங்கள் குறித்து, அது கட்சித் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் பொய்யுரைத்தது. இடைமருவு வேலைதிட்ட அணுகுமுறையைச் செயல்படுத்த தவறியமைக்காக ஹீலி தலைமையை விமர்சித்த அதேவேளை, அது ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள் முற்றிலும் ஒரு புதிய கருத்துருவை அபிவிருத்தி செய்தது —அதாவது கன்னைகளுக்கான ஒரு "இடைமருவு வேலைத்திட்டத்தை" உருவாக்குதல்— இதில், கட்சியின் கீழ் மட்ட அணியினர் ஏற்று கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று எதை அது நம்புகிறதோ அதிலிருந்து தொடங்கி, அந்த சிறுபான்மை படிப்படியாக கூடுதல் கோரிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது, இவை மூலோபாயரீதியாக ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளை திட்டமிட்டு சிதறடிப்பதையும், திருத்தல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும், உச்சக்கட்டமாக நான்காம் அகிலத்துக்கு எதிராக எதிர்ப்புரட்சியை விளைவிப்பதையும் இலக்குகளாக கொண்டுள்ளன.
ஓர் அரசியல் அர்த்தத்தில், தொர்னட்டின் வேலைத்திட்டம் மற்றும் அவருக்கான மேடையை எழுதிய மூன்று விட்டோடிகளுடன் (OCI இல் சேர்ந்திருந்த ஜோன் ஆர்சர், பிளிக் மற்றும் ஜென்கின்ஸ் உடன் செயல்பட்டு வந்தார்) அவர் இரகசியமாக ஒத்துழைத்தபோது, அவர் WRP க்குத் தலைமை தாங்கிகுவதற்கான எந்தவொரு உரிமையையும் இழந்தார். அவர் ஜனநாயக மத்தியவாதத்தின் மிகவும் அடிப்படையான விதிமுறைகளை மீறி, குரோதமான கட்சி-விரோத சத்திகளின் ஒரு முகவராக செயல்பட்டார் என்ற உண்மை, நவம்பர் 4, 1980 இல் அவரின் குரு, ரொபின் பிளிக் எழுதிய ஓர் அறிக்கையில் நிரூபிக்கப்பட்டது:
“[உடைவுக்குப் பின்னர் தொர்னட் நிறுவிய தொழிலாளர் சோசலிச கழக (WSL)] தலைமை அதன் சொந்த மூலம் குறித்து ஓர் உண்மையான விபரங்களை வழங்குவதற்கு அது தொடர்ந்து மறுத்து வருவதால், இந்த அறிக்கை எழுதப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொர்னட் எதிர்ப்பை வெளியேற்ற வழிவகுத்த சம்பவங்களில், புலட்டின் குழுவின் மீதும் மற்றும் என் பாத்திரம் மீதும், தொழிலாளர் சோசலிச கழகத்திற்கும் (WSL) மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் (WRP) இக்கும் இடையிலான விவாதத்தின் மீது கருத்துரைப்பதில் இருந்து இதுவரையில் விலகியே இருந்தேன். ஆனால் இது WSL உறுப்பினர்களுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரமென இப்போது நான் உணர்கிறேன். முன்வரலாறை நேரடியாக முன்வைப்பதற்கு WSL தலைமைக்குப் போதுமானதையும் விட அதிக நேரம் வழங்கப்பட்டுவிட்டது...
“தொர்னட் எதிர்ப்பின் விதைகள், முதன்முதலில், என்னாலும் மற்றும் மார்க் ஜென்கின்சாலும், மற்றொரு முன்னாள் SLL உறுப்பினராலும் (இப்போது WRP), ஜனவரி 1974 இல் இருந்து, புலட்டின் பதிப்பில் விதைக்கப்பட்டன. புலட்டின் சஞ்சிகை, எங்களிடம் இருந்த WRP உறுப்பனர்களின் முகவரிகளுக்கு எல்லாம் அனுப்பப்பட்டது, அது குறித்து அவர்களின் எண்ணம் எதுவாக இருக்கும் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அனுப்பினோம். இவ்விதத்தில் தான், WRP இன் ஏனைய மேற்கு பிராந்திய உறுப்பினர்களுடன் சேர்ந்து, அது மத்திய குழு உறுப்பினர் Kate Blakeney கையிலும் கிடைத்தது. மேற்கு பிராந்தியத்தில் அதை வாசித்த ஏனையோரில் அலன் தொர்னட்டும் உள்ளடங்குவார்...
“Kate Blakeney தான் மேற்கு பிராந்திய WRP இல் எனக்கு கிடைத்த முதல் தொடர்பாக இருந்தார், அவரை, அவர் இல்லத்தில், ஆகஸ்ட் மாத இறுதியில் மார்க் ஜென்கின்ஸ் சந்தித்தார். வெகு விரைவிலேயே, மற்றொரு சந்திப்பில் மார்க் ஜென்கின்ஸ் உடன் சேர்ந்து நானும் சந்தித்தேன். புலட்டினில் WRP இன் விமர்சனங்களுடன் Kate Blakeney கணிசமான உடன்பாட்டை தெரிவித்தார். அவர், அலன் தொர்னட், ஜோன் லிஸ்டர், டோனி ரிச்சார்ட்சன், சாத்தியமான மற்ற சிலர் உள்ளடங்கலாக மேற்கு பிராந்தியத்தில் அதிகாரபூர்வமற்ற ஆனால் இரகசிய எதிர்ப்பு நிலவுவதாக அப்பெண்மணி எங்களுக்குத் தெரிவித்தார். அதற்கு தெளிவான அடித்தளம் இல்லை, அல்லது WRP எங்கே தவறாக போயிருந்தது என்பதன் மீது புரிதல் இல்லை, அதற்கு பதிலாக WRP இன் தேசியளவிலான செயல்பாட்டுடன் பல்வேறு காரணங்களுக்காக அதிருப்தி அடைந்தவர்கள் ஒருங்கிணைந்து வருகிறார்கள். அங்கே குறிப்பாக ஹீலியை திடீரென உயர்மட்ட தலைமை பதவிக்கு மேலுயர்த்தியதற்கு, 'அதிரடி' ட்ரொட்ஸ்கிச மாற்றத்திற்குள்ளான வனசா ரெட்கிறேவ் (Vanessa Redgrave) போன்றோரின் எதிர்ப்பு இருந்தது"
தொர்னட் அணியின் கொள்கையற்ற குட்டிமுதலாளித்துவ மற்றும் தொழிற்சங்கவாத (syndicalist) தோற்றுவாய்கள் மீது இதை விட அதிக இழிவுபடுத்தும் ஓர் குற்றப்பத்திரிகை வேறெதுவும் இருக்க முடியாது, அது, எல்லா வலதுசாரி எதிர்ப்புகளைப் போலவே, ஆரம்பத்தில் கட்சி "ஆட்சி" விரோதமாக ஒன்றுதிரண்டது என்றாலும் பின்னர் அவர்களின் அரசியலை வெளிப்படுத்தியது. “1974 செப்டம்பர் மத்தியில், ஒரு நாள் நள்ளிரவில், Reading இற்கு அருகாமையில் M4 நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் பாதை ஒன்றில்" எப்படி அந்த கன்னை நிறுவப்பட்டது என்பதை பிளிக் இன் அறிக்கை விபரித்தது.
“அலன் தொர்னட் இன் காரில் அக்கூட்டம் நடந்தது. அவர் தன்னுடன் Kate Blakeney ஐ அழைத்து வந்திருந்தார். என்னுடன் SLL இன் பழைய உறுப்பினர், என்னை முன்நகர்த்தி சென்றவர், நிக் பெக் (Nick Peck) வந்திருந்தார். முதல் சந்திப்பில் நாங்கள் WRP இன் நெருக்கடி குறித்தும், அதன் மீதான அலன் தொர்னட்டின் கண்ணோட்டங்கள் மற்றும் அதற்கான சாத்தியமான காரணங்களைக் குறித்தும், கௌலியின் சூழ்நிலை குறித்தும், மற்றும் அங்கேயும் தேசியளவிலும் WRP தொழில்துறை செயல்பாடுகள் மீது WRP இன் குழுங்குழுவாத கொள்கைகளின் சாத்தியமான விளைவுகள் குறித்தும் விவாதித்தோம். ஹீலி தலைமைக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் ஒத்துழைப்பை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் நாங்கள் மீண்டும் சந்திக்க சம்மதித்தோம்.”
என்ன ஈனத்தனமான கோழைக் கும்பல்: அந்த வெறிச்சோடிய துணைச் சாலையில், மயான அமைதி நிலவும் நள்ளிரவில், அது, முதலாவதாக தொழில்துறை கொள்கையின் அடிப்படையிலும், இரண்டாவதாக, அதன் "தேசிய செயல்திறன்" அடிப்படையிலும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு வரலாற்று பாத்திரம் வகித்திருந்த, நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த கட்சி தலைமையைத் தூக்கியெறிய திட்டம் தீட்டியது. WRP தலைமையின் தலைவிதி பற்றி ICFI க்கு எந்த கவலையுமில்லை என்பதைப்போல! அங்கே, ட்ரொட்ஸ்கிசம் குறித்தோ அல்லது நான்காம் அகிலம் குறித்தோ எந்த குறிப்பும் இல்லை.
“அடுத்த சில நாட்களில் —இது செப்டம்பர் மத்தியில்— அலன் தொர்னட் மற்றும் Kate Blakeney உம் புலட்டின் குழுவுடன் மட்டும் (இதன் அர்த்தம், பாதுகாப்பு பிரச்சினை மீதான கண்ணோட்டத்தில், என்னுடன்) அவர்கள் ஒத்துழைக்க கூடாது என்பதில் மட்டுமல்ல, மாறாக ஹீலிக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தை நடத்த மேற்கு பிராந்திய தோழர்கள் பலர் போதுமான உடன்பாட்டை பகிர்ந்து கொள்வதால் அவர்களை நம்பலாம் என்பதால் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் உடன்பட்டார்கள். WRP மத்திய குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக அலன் தொர்னட் ஓர் அறிக்கை தயாரித்தால், அதை ஹீலி, சிறுபான்மையினர் மற்றும் கன்னைகளது உரிமைகளுக்கான WRP இன் கட்சி விதிமுறைகளின்படி அனுமதிக்க கடமைப்பட்டிருப்பார் என்பதால் அந்த சுதந்திரங்களைச் சாதகமாக்கி, அந்த அடிப்படையில், அலன் தொர்னட் ஒரு எதிர்ப்பு நீரோட்டத்தைக் கட்டமைக்க இருந்தார்."
இது, பின்னர் தொர்னட் வாதிட்டவாறு அவர் உரிமைகளை WRP தலைமை மறுத்தது என்ற பிந்தைய வாதங்களை கேலிக்கூத்தாக்குகிறது. அராஜகவாத அடிப்படையில் அவர் அவரின் கன்னையை ஒழுங்கமைத்த போதுதான் அதுபோன்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்தன.
“இந்த போராட்டத்தை நடத்துவதில் அலன் தொர்னட் மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கு தேவைப்பட்டால், பிரதானமாக அரசியல்-எழுத்துக்களில், எந்தவித உதவியும் நான் வழங்கலாம் என்பதில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த புரிதலின் அடிப்படையில் தான், நான் அலன் தொர்னட் மீதான முதல் எதிர்ப்பு ஆவணத்தின் கணிசமான பகுதிகளை எழுதினேன்.
“நான் பொறுப்பேற்று இருந்தவைகளில் பிரதானமானவை:
“(அ) இடைமருவு வேலைதிட்டம் சம்பந்தமான பகுதி
“(ஆ) தொழிலாளர்கள் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு பகுதி
“(இ) பெருநிறுவனவாதம் (Corporatism) சம்பந்தமான ஒரு பகுதி
“(ஈ) சமூக ஜனநாயகம் சம்பந்தமான ஒரு பகுதி
“அந்த ஆவணத்தின் பிற பகுதிகளில் இடைச்செருகல் செய்வதற்கும், கருத்துரைப்பதற்கும் நான் அனுமதிக்கப்பட்டேன். இரண்டாம் ஆவணத்திற்கும் இது பொருந்தும், இந்த சந்தர்ப்பத்தின் போது, விகிதாசாரரீதியில் அதன் ஒரு சிறிய பகுதிக்கு, பிரதானமாக தொழிலாளர்கள் கட்டுப்பாடு மற்றும் கன்னைகள் சம்பந்தமான பிரிவுகளுக்கு, நான் பொறுப்பாக்கப்பட்டு இருந்தேன். இரண்டு ஆவணங்களுமே WSL இன் "ட்ரொட்ஸ்கிசத்திற்கான போர்" என்பதில் முற்றிலும் அவர்களுக்குச் சொந்தமானதாக மறுபிரசுரம் செய்யப்பட்டன.
“வேர்கர்ஸ் பிரஸ் ஆண்டுவிழா கூட்டத்திற்கும் மற்றும் மத்திய குழுவுக்குமான அவர் உரைகளைத் தயாரிப்பதில் நான் அலன் தொர்னட்டிற்கும் உதவினேன், அவர் தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் இடைமருவு கோரிக்கைகள் சம்பந்தமான அவரின் முதல் எதிர்ப்பு ஆவணத்தில் உள்ளடங்கி இருந்த கருத்துருக்களில் சிலவற்றை அவற்றில் தான் அபிவிருத்தி செய்தார்.
“தொடர்புகள், தொலைபேசி மூலமாக, குறைந்தபட்சம் ஒரு முறையேனும், நாளாந்த அடிப்படையில் நடந்தன, ஆனால் சில வேளைகளில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளிலும் நடந்தன, நான் ஆக்ஸ்போர்ட் அல்லது ரீடிங் செல்வேன் அல்லது மேற்கு பிராந்திய WRP உறுப்பினர்கள் அக்டனில் என் வீட்டுக்கு வருவார்கள். சந்திப்புகள் மேற்கு பிராந்திய எதிர்ப்பில் இருந்த முன்னணி பங்கெடுப்பாளர்களின் இடங்களிலும் Francois de Massot உடனும் நடந்தன.
“தவிர்க்கவியலாத அரசியல் கருத்துவேறுபாடுகள் இருந்த போதிலும், இந்த ஒத்துழைப்பானது 1974 இல் WRP மாநாடுக்குச் சற்று முன்னர் எதிர்ப்பு வெளியேற்றப்பட்ட போதும் மற்றும் அதுவரையிலும் நீடித்திருந்தது. உண்மையில் அலன் தொர்னட் மற்றும் ஹீலிக்கு இடையே (ஆக்ஸ்போர்ட்டிலோ அல்லது இலண்டனிலோ) ஒவ்வொரு கூட்டத்துக்கு முன்னரும், அலன் தொர்னட் அவர் தரப்பு வாதத்தை சிறந்த முறையில் முன்வைப்பதற்கும், ஹீலி அல்லது WRP தலைமையின் மற்றவர்கள் வைக்கும் எந்தவொரு சாத்தியமான வாதங்களை எதிர்கொள்வதைக் குறித்தும் விவாதிக்க என்னைத் தொடர்பு கொள்வார். அத்தகைய எதிர்கொள்ளல்களுக்குப் பின்னர், எனக்கு, வழமையாக தொலைபேசியில், ஒரு விபரமான அறிக்கை கிடைக்கும் என்றாலும் சில நேரங்களில் இலண்டனில் சந்திப்பு நடந்தால், நேரடியாகவே, ஏறக்குறைய அவை நடந்து முடிந்த உடனேயே எனக்கு விபரங்கள் கிடைத்துவிடும். எப்படி பார்த்தாலும், மத்திய குழு விவகாரங்கள் WRP இன் சாமானிய உறுப்பினர்களுக்கு கிடைப்பதற்கு வெகு முன்னரே எனக்கு முழுமையாக வழங்கப்பட்டிருக்கும். (உண்மையில் இது ஆகஸ்டில் Kate Blakeney உடன் முதல் தொடர்பு ஏற்பட்டபோது வரையில், இவ்வாறு தான் இருந்தது.)
“அலன் தொர்னட் அவரது இரண்டாவது ஆவணத்தின் தொழில்நுட்ப தயாரிப்புக்காக புலட்டின் குழுவைச் சார்ந்திருந்தார், அது (மறுநகலாக்கம் இல்லை என்றாலும்) WRP மாநாட்டில் அவர் ஒப்படைக்க வேண்டியிருந்ததால் அதற்கு முன்னதாக ஜோன் ஆர்ச்சரால் அவருக்காக அது எழுதப்பட்டது. வெளியேற்றப்பட்ட WRP உறுப்பினர்கள் மேற்கு பிராந்தியத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு தமக்கு ஆதரவளிப்பதற்காக, WRP மாநாட்டுக்கான இடம் கூட புலட்டின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
"அக்டோபர் 1974 இல் ஒரு தட்டச்சு இயந்திரமும் கையுமாய் நான் இரயிலில் ஆக்போர்ட் வந்தடைந்தேன், அங்கிருந்து ஒரு வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டேன், அங்கே ஒட்டுமொத்த இரவும் அலன் தொர்னட் சமர்பித்த இரண்டாம் ஆவணத்தின் ஒரு பகுதியை எழுத செலவிட்டேன் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது."
பின்வரும் ஆலோசனையை வழங்கி பிளிக் அவரின் அறிக்கையை நிறைவு செய்தார்:
"WSL தலைமை அதற்கு தெரிந்த உண்மையை தொடர்ந்து மறுக்கின்ற வரை, பொய்யென அறிந்தவற்றை உண்மையென நிரப்பிக் கொண்டிருக்கும் வரை, WSL ஆல் பரப்பப்பட்ட அதன் கடந்த காலம் பற்றிய பொய்களில் இருந்து WRP அரசியல் ஆதாயம் பெறுவது அதற்கு எளிதாக இருக்கும். இந்த அறிக்கையை விடுப்பதன் மூலமாக, அந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்ட அனைவரைக் குறித்தும் குறைந்தபட்சம் ஓர் உண்மையான விபரங்களைப் பெறுவதற்காக அச்சம்பவங்கள் மீது கேள்விகளைத் தூண்டுமென நான் நம்புகிறேன்" (மூலக்கடிதத்தில் இருந்து மேற்கோளிடப்பட்டது)
தொர்னட், கட்சிக்கு விரோதமான சக்திகளின் ஓர் அரசியல் முகவராக செயல்பட்டு வருகிறார் என்ற ஹீலியின் குற்றச்சாட்டுக்களை இந்த ஆவணம் உறுதிப்படுத்துகிறது. அதன் உரிமைமீறல்கள் மீதான தொர்னட் அணியின் எதிர்ப்புகள் முற்றிலும் நேர்மையற்றதாக மற்றும் கபடத்தனமாக இருந்தன. எந்தவொரு உள்கட்சி கன்னையின் நிஜமான அரசியல் பதாகையும், அது பயன்படுத்துகின்ற அணுகுமுறைகள் மூலமாக அம்பலப்படுகிறது. அவரின் சொந்த கட்சிக்கு பகிரங்க விரோதமான சக்திகளின் உதவியைக் கோரியதில், தொர்னட் புறநிலைரீதியாக தொழிலாளர் புரட்சி கட்சியை அழிக்க ஏற்பாடு செய்தார். அவர் உறுப்பினராக இருந்த அக்கட்சிக்கு எதிராக ஒரு சதியில் ஈடுபட்டதன் மூலமாக, அவர் அவரின் தலைமையைச் சரி செய்யவோ, கொள்கை அடிப்படையில் WRP இன் ஒற்றுமையைப் பேணவோ, மற்றும் உறுப்பினர்களுக்கு கல்வியூட்டவோ அவருக்கு விருப்பமிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்.
அவருடைய சொந்தக் கட்சிக்கு எதிராக சதி செய்தமை, பின்னர் அரசியல் வழிமுறையை மீறி விட்டதாக தலைமையைக் கண்டனம் செய்தமை ஆகியவை தொர்னட்டின் அரசியல் இரட்டைவேஷத்தின் உச்சக்கட்டமாகும். கம்யூனிச இயக்கத்திலிருந்து 45 ஆண்டு கால அனுபவங்களைத் திரட்டியிருந்த ஹீலி, ஒருமுறை பார்த்ததுமே கட்சி-எதிர்ப்பு கும்பலை இனங்கண்டார். ஆனால் அவற்றின் மூலங்கள் என்னவாக இருந்தாலும், அரசியல் வேறுபாடுகள் மீது ஒரு விரிவான கலந்துரையாடலை வைப்பதற்கு முன்னரே, தலைமை, அமைப்புரீதியிலான அடித்தளத்தில் தொர்னட்டை வெளியேற்றிய செயல் அரசியல்ரீதியில் புத்திசாலித்தனமானதா என்பது முற்றிலும் மற்றொரு விடயமாகும். இது சம்பவத்திற்குப் பின்னர் புத்திசாலித்தனமாக இருப்பது சம்பந்தமான பிரச்சினை இல்லை. தொர்னட் காட்சிக்கு வருவதற்கு முன்னரே, ட்ரொட்ஸ்கிச இயக்கம் கொள்கையற்ற சிறுபான்மையோரைக் கையாள்வதில் பெரும் அனுபவத்தை பெற்றிருக்கிறது — அதில் மிகவும் பிரபலமானது சாக்ட்மன்-பேர்ன்ஹாம்-அபேர்ன் போக்குகளாகும். ஒரு காரியாளரை அரசியல்ரீதியில் தெளிவுபடுத்துவது தான் எந்தவொரு கன்னை போராட்டத்திலும் —ஒரு விசுவாசமற்ற கும்பலுடன் சம்பந்தப்பட்டவராக இருந்தாலும் கூட— மேலோங்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதை அனுபவம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு கற்றுத் தந்துள்ளது.
1935 இல் ILP உறுப்பினருடனான ஒரு விவாதத்தில், ட்ரொட்ஸ்கி இவ்விதம் குறிப்பிட்டார்: “குட்டி-முதலாளித்துவ போக்குகளை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் அனுமதிப்பதுதான் சிறந்தது, அப்போதுதான் அவை தங்களைத்தாங்களே அம்பலப்படுத்தி கொள்ளக்கூடும்," என்றார். (பிரிட்டன் குறித்து ட்ரொட்ஸ்கியின் எழுத்துகள், தொகுதி 3, நியூ பார்க், பக்கம் 123)
மேற்குறிப்பிட்ட பந்தியில், ட்ரொட்ஸ்கி ஒரு பொறுப்புமிக்க எதிர்ப்பை குறித்து குறிப்பிட்டு கொண்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிடும் அம்சம் பரந்துபட்ட சூழ்நிலைகளுக்கும் பொருந்தியது. ஹீலி, நான்காம் அகிலத்தின் கடந்தகாலப் போராட்டங்களின் படிப்பினைகளில் கவனம் செலுத்தி இருப்பாரேயானால், அவர் 1945-46 இல் மோறோ-கோல்ட்மன் கன்னையைக் கனன் எப்படி கையாண்டார் என்பதை நினைவுகூர்ந்திருப்பார். அந்த அனுபவம், ஹீலியின் சொந்த வளர்ச்சியில் வகித்த பாத்திரம் சற்றும் குறைந்ததல்ல.
பரந்த பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) மத்திய குழு மற்றும் அரசியல் குழுவின் கனன்வாத பெரும்பான்மைக்கு (Cannonite majority) எதிராக, ஃபீலிக்ஸ் மோறோ மற்றும் ஆல்பேர்ட் கோல்ட்மனும் ஓர் எதிர்ப்பினை அபிவிருத்தி செய்தார்கள். அவர்கள் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் (RCP) தேசிய செயலர் ஜோக் ஹாஸ்டனுடன் நெருக்கமாக ஒத்துழைத்தார்கள், அப்போது ஹீலி அக்கட்சியில் சிறுப்பான்மையினரில் இடம் பெற்றிருந்தார். சாக்ட்மன்வாதிகளுடன் ஐக்கியத்தைக் கோரி, மோறோவும் கோல்ட்மனும் SWP தலைமைக்குள் தொழிலாளர் கட்சியின் ஒரு கன்னையாக செயல்பட்டார்கள். 1945 இன் தொடக்கத்தில், மொறோவும் கோல்ட்மனும் SWP அரசியல் குழுவின் அனைத்து நடைமுறைகள் மீதும், சமீபத்திய சில நிமிட நடைமுறைகள் வரையில், முழு விபரங்களையும் சாக்ட்மனுக்கு வழங்கி அக்குழுவின் கூட்டங்களில் இருந்து வெளியேறினர் என்பதை கனன் ஸ்தாபித்து காட்டினார். அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதை அவர் முழுதும் நியாயப்படுத்தி இருக்கலாம்; அனைத்திற்கும் மேலாக, அவரே அந்த நடவடிக்கை எடுத்திருந்தால் SWP உறுப்பினர்களில் பெரும் பெரும்பான்மையினரின் ஆதரவைக் கூட அவர் பெற்றிருக்கக்கூடும்.
ஆனால், கனன் அத்தகைய அமைப்புரீதியான நடவடிக்கைகளை இரண்டு காரணங்களுக்காக எதிர்க்க தீர்மானித்தார். முதலாவது, மோறோ மற்றும் கோல்ட்மன் உடனான கருத்துவேறுபாடுகள், அவர்களின் ஆத்திமூட்டும் நடவடிக்கைகள் இருந்தபோதினும், ஓர் உடைவை நியாயப்படுத்த போதுமானளவுக்கு அபிவிருத்தி அடைந்திருக்கவில்லை என்றவர் அஞ்சினார். அவர்கள், இரண்டாம் உலகப் போரின் முடிவில் SWP வேகமாக விரிவடைந்த போக்கில் 1940 க்குப் பின்னர் கட்சியில் இணைந்த மற்றும் SWP க்கும் சாக்ட்மனின் குட்டி-முதலாளித்துவ மத்தியவாத குழுவுக்கும் இடையே அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்து கொண்டிராத, கட்சி பகுதிகளிடையே வெற்று "ஐக்கிய" உணர்வுகளைப் பிரதிபலித்தார்கள் என்பதை அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். நான்காம் அகிலத்தின் ஐரோப்பிய பகுதிகளுக்குள் சிறுபான்மையின் இயல்பு பற்றி குழப்பம் நிலவுவதையும் அவர் அறிந்து கொண்டார். மோறோ மற்றும் கோல்ட்மன் இருவரும் நான்காம் அகிலத்துக்குள் கணிசமான கௌரவத்தைப் பெற்றிருந்தார்கள்: பின்னவர் ட்ரொட்ஸ்கியின் வழக்குரைஞர் என்ற முறையிலும், முன்னவர் ஸ்பெயினில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்பதன் ஆசிரியர் என்ற முறையிலும் கௌரவத்தைப் பெற்றிருந்தனர். இத்தகைய நிலைமைகளின் கீழ் ஓர் உடைவை ஏற்பதென்பது, சிறுபான்மையின் உருவாக்கத்திற்கு காரணமான அரசியல் பிரச்சினைகளை கையாளமுடியாது போய்விடும் என்பதால், படுமோசமான பிழையாக இருக்குமென கனன் நம்பினார். இரண்டாவதாக —இது கனனுக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காரணியாக இருந்தது— அந்த தருணத்தில், அந்த உடைவானது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவான பகுதிகளிடையே தெளிவாக புரிந்து கொள்ளத்தக்க கருத்துவேறுபாடுகள் மீது நடந்திருக்காது என்பதாகும்.
ஆகவே, கனனின் முன்முயற்சியால், SWP அரசியல் குழு மோறோ மற்றும் கோல்ட்மனுக்கு கவனமான வார்த்தைகள் இடப்பட்ட ஒரு கடிதத்தை அனுப்பியது, அதில் அது உடைவுக்கு போதுமான தளம் இல்லை என்பதை எடுத்துக்காட்டியதுடன், அமைப்புரீதியான குற்றச்சாட்டுக்களை தீர்ப்பதற்கும் மற்றும் மேற்கொண்டு அரசியல் விவாதத்திற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்கவும் அரசியல் குழுவைச் சந்திக்க அவர்களுக்கு அழைப்புவிடுத்தது. இது வெறுமனே கட்சி பற்றிய பொதுக் கருத்தை அதன் தரப்புக்கு வென்றெடுப்பதற்கான குறுகிய கால தந்திர நடவடிக்கையல்ல. இந்த தலையீட்டின் விளைவாக, மோறோ-கோல்ட்மன் கன்னை உடனான உள்போராட்டம் ஓர் ஆண்டுக்கும் மேலாக —மே 1946 இல் கோல்ட்மன், சாக்ட்மன்வாதிகளுடன் இணைய இராஜினாமா செய்யும் வரையில்— தொடர்ந்து கொண்டிருந்தது. கட்சி மாநாட்டில் உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டதற்கு பின்னர், நவம்பர் 1946 இல் விட்டுக்கொடுக்க இயலாத வேலைத்திட்டத்தின் மீதான கருத்துவேறுபாடுகளின் அடிப்படையில் மோறோ வெளியேற்றப்பட்டார். அத்தருணத்தில், மோறோ இன்னும் அவர் தன்னை ஒரு சோசலிசவாதி தான் என்பதை ஒருபோதும் நம்பாத அளவுக்கு கருத்துவேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருந்தன. அவர் மாநாட்டு அரங்கை விட்டு வெளியேறி, ஏறத்தாழ உடனடியாக புரட்சிகர இயக்கத்தைக் கைவிட்டார், பின்னர் விரைவிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர் ஆனார்.
அந்த ஆழமான போராட்டத்தின் போது, தொழிலாளர்களின் இயக்கத்திற்குள் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சாக்ட்மன்வாத போக்குக்கும் இடையிலான கருத்துவேறுபாடுகளின் முழுமையான கருத்தோட்டமும், அவை எந்த உண்மையான சமூக சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்தன என்பதும் தெளிவாக நிலைநாட்டப்பட்டது. 1940 இல் முளைவிட்டு ஆரம்ப வளர்ச்சி கட்டத்திலேயே ஸ்தாபித்துக் காட்டப்பட்ட அந்த கருத்துவேறுபாடுகளின் சமரசப்படுத்த முடியாத தன்மை, பனிப்போரின் தாக்கத்தின் கீழ், வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் சாக்ட்மன் வைத்திருந்த அரசியல் தொடர்புகள் ஒரு நேரடி அரசியல் வடிவத்தை எடுத்து வந்தன என்ற நிலைமைகளின் கீழ் மீண்டும் பரிசோதித்து பார்க்கப்பட்டன.
தொர்னட்டுக்கு எதிரான போராட்டத்தில் அதுபோன்ற எந்த விளக்கமும் இடம் பெறவில்லை, அது ஏறத்தாழ அது தொடங்கிய உடனேயே முடிந்து போனது. பிளிக் மற்றும் ஜென்கின்ஸ் மூலமாக, WRP க்குள் ஒரு கன்னையை ஏற்படுத்துவதற்கான OCI இன் திறமை, மத்தியவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அபிவிருத்திசெய்ய தவறியதன் விளைபொருள் என்பதை ஹீலி அங்கீகரிப்பதற்குப் பதிலாக, ஹீலியின் தலைமை அமைப்புரீதியான ஒரு தீர்வுக்கு நகர்ந்ததன் மூலமாக முந்தைய தவறையே மீண்டும் செய்தது.
அங்கே கருத்தில் கொள்ளத்தக்க கூடுதல் காரணிகளும் இருந்தன. தொர்னட்டின் தளம், பகுதியாக, கட்சி ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் பாதையிலேயே கட்டப்பட்டிருந்தது. 1974 இன் இரண்டு தேர்தல்களிலும், போட்டியிட்ட WRP வேட்பாளர்களுக்கு தொர்னட்டின் எதிர்ப்பானது, WRP இன் உயிர்வாழ்வுக்கு அடித்தளமாக, ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுப்படவேண்டும் என்ற அதன் வேலைத்திட்டத்தின் மீது கவனம்செலுத்தப்பட்டதன் தவிர்க்கவியலாத விளைவாக இருந்தது. இந்த அடித்தளத்தில் WRP க்குள் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டிருக்கையில், கட்சி “குறுங்குழுவாதத்தை” நோக்கி திரும்புவதாக தான் கண்டதற்கு தொர்னட், எதிர்ப்பை காட்டியது புரிந்து கொள்ளத்தக்கதேயாகும். அனைத்திற்கும் மேலாக, இடைமருவு வேலைதிட்டத்தைப் பயன்படுத்துதல் தொடர்பாக —குறிப்பாக தொழிலாளர்களின் கட்டுப்பாடு மீதும் மற்றும் நஷ்டஈடு கொடுக்காமல் தேசியமயமாக்கல் மீதான கோஷம் மீதும்— அவர் எழுப்பிய கருத்து வேறுபாடுகள், புரட்சிகர சோசலிச கொள்கையின்பால் வென்றெடுக்காமல் டோரி-எதிர்ப்பின் அடித்தளத்தில் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்த தொழிலாளர் கூறுபாடுகளில் இருந்து வந்த அழுத்தங்களைப் பிரதிபலித்தது. இந்த அர்த்தத்தில், அவரது கொள்கையற்ற அணுகுமுறைகள் இருந்தபோதிலும், தொர்னட் WRP க்கு உள்ளே ஒரு பெரிய செல்வாக்கு வட்டத்தை பிரதிநிதித்துவம் செய்தார். இந்த செல்வாக்கு வட்டத்துள் இருந்தவர்களின் அரசியல் குழப்பத்திற்கு ஹீலியும் பண்டாவும் தான் பொறுப்பாளிகள் என்பதோடு, இப்போது அதே நபர்களை உண்மையான ட்ரொட்ஸ்கிசத்துக்கு வென்றெடுக்க வேண்டியவர்களாக அவர்கள் இருந்தார்கள். குறிப்பாக சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கம் மீண்டும் டோரிக்களால் பதவியிலிருந்து இறக்கப்படும் விளிம்பில் இருந்தது என்ற நிஜமான கவலைகள் நிலவிய நிலைமைகளின் கீழ், சமூக ஜனநாயகவாதிகளுக்கு ஒரு புரட்சிகர எதிர்ப்பை ஒழுங்கமைக்க அவர்கள் எதிர்ப்பு காட்டியபோது, தொழிற் கட்சியை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக தொழிலாளர்களை சர்வசாதாரணமாக கட்சியில் இணைய வரவேற்பது என்பது, அரசியல்ரீதியில் கூறுவதானால், மோசமான நடவடிக்கையாக இருந்தது. தொர்னட் போக்கு பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தினுள் சக்தி வாய்ந்த சமூக ஜனநாயக உணர்வுகளைப் பிரதிநிதித்துவம் செய்தது — மேலும் இந்த போக்கை வெளிப்படுத்தியவர்களுடன் அமைப்புரீதியில் ஒரு தீர்வு என்பது தொழிற்சங்கங்களுக்குள் கட்சியின் வேலைகள் மீது ஒரு பாதகமான விளைவை மட்டுமே கொண்டு வரக்கூடியதாக இருந்தது.
தொர்னட் எழுப்பிய அரசியல் கருத்து வேறுபாடுகள், 1974 இலையுதிர்காலத்தில் எந்தளவுக்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்ததோ, அவை தொழிலாள வர்க்கத்தின் முன்னால் ஓர் உடைவை நியாயப்படுத்தக் கூடிய மட்டத்தை எட்டியிருக்கவில்லை என்பது விடயங்களை இன்னும் மோசமாக்கின. OCI இன் முகவராக தொர்னட் செயல்படுகிறார் என்பதை, எவ்வளவு தான் அவர்கள் புத்திசாலித்தனமாக இருந்தாலும், ஹீலியும் பாண்டாவும் போதுமானளவுக்கு உணர்ந்திருக்கவில்லை. 1940 இல் சிறுபான்மைக்கு எதிராக அமைப்புரீதியில் முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமென ட்ரொட்ஸ்கி கனனுக்கு எச்சரித்து வலியுறுத்துகையில், "உங்களின் அகநிலையான மதிப்பீடுகள் சரியாக இருந்தாலும் கூட, நீங்கள் அதன் அடிப்படையில் மட்டும் செயல்படக்கூடாது, மாறாக அனைவருக்கும் தெரிந்திருக்ககூடிய புறநிலையான உண்மைகளின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும்," என்றார். மேலும் அமைப்புரீதியிலான பொறுமையின்மை "எப்போதும் தத்துவார்த்த அலட்சியத்துடன் அநேகமாக பொருந்தியிருக்கும்" என்று அவர் எச்சரித்தார். (மார்க்சிசத்தை பாதுகார், நியூ பார்க், பக்கம் 198)
சிறுபான்மையை அச்சுறுத்தவும், அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்குரிய விடயமாக ஆக்குவதற்கும் ஹீலி பலமாக நடுத்தர வர்க்க கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களைச் சார்ந்து நின்று, தொர்னட்டுக்கு எதிராக கட்சி எந்திரத்தைத் திரட்டிப் போராடினார். தொர்னட் குழுவுக்கு எதிராக உடல்ரீதியிலான வன்முறை பயன்படுத்தப்பட்டது. ஒரு கட்டுப்பாட்டுக் குழுவை உருவாக்க ஹீலிக்கு உதவ சிரில் ஸ்மித் போன்ற கூறுபாடுகள் அவர்களின் இலண்டன் வசிப்பிடங்களில் இருந்து வெளிக்கொணரப்பட்டன, அதேவேளை லீட்சில் பல ஆண்டுகளாக அழுதுபுலம்பிக்கொண்டிருந்த சுலோட்டர், ஹீலி கோடரியை தாழ்த்தியதும் ஒரு பொருத்தமான மார்க்சிச பிரார்த்தனை வழங்கி, தொர்னட்டை தூக்கிலிடுவதில் மதகுருவின் பாத்திரம் வகிக்க வரவழைக்கப்பட்டார். ஹீலி, கட்சிக்குள் கருத்து வேறுபாடு கொண்டவர்களைக் கையாள, ட்ரொட்ஸ்கி கையாண்ட விதத்தைக் கையாளவில்லை மாறாக எட்டாம் ஹென்றியைப் போல அணுகினார், அதை செய்கையில் தொர்னட்டின் தலையைச் சுற்றி ஒரு தியாகியின் ஒளி வட்டத்தை உருவாக்குவதில் தான் அவர் வெற்றி பெற்றார்.
தொர்னட்டின் வெளியேற்றத்துடன் பல நூறு கட்சி உறுப்பினர்களை விலை கொடுத்ததுடன், அடிப்படைத் தொழிற்துறையில் அதன் மிக முக்கிய பகுதியை துடைத்தழித்தது. அரசியல்ரீதியில் பொறுப்பற்ற கன்னை அணுகுமுறைகள், கட்சியின் அடித்தளத்தை நடுத்தர வர்க்கத்துக்குள் சாய்த்ததுதான் நேரடி விளைவாக இருந்தது. ஹீலி யாருடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைத்து வந்தாரோ அந்த தொழிலாளியால் கைவிடப்பட்டதால் காயப்பட்ட ஹீலி, அதை ஒரு தனிப்பட்ட காட்டிக்கொடுப்பு என்று கருதி அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய நிலையில், ரெட்கிறேவ் மற்றும் மிட்செல் போன்ற சக்திகள் மேலுயர்ந்தனர்.
OCI உடனான விளங்கப்படுத்தப்படாத உடைவுக்கு மேலேயே நடந்த தொர்னட்டின் அதிகாரத்துவ வெளியேற்றம், WRP க்கு ஓர் அரசியல் பேரழிவாக இருந்தது. முதல் எடுத்துக்காட்டாக, அடிப்படை சர்வதேச பிரச்சனைகள் கைவிடப்பட்டிருந்தன. இப்போது பிரிட்டிஷ் இயக்கத்தின் அரசியல் வழி சம்பந்தமான அடிப்படை பிரச்சினைகளுக்கு பதில் கூறாமல் விடபட்டன. தொர்னட்டின் குறிக்கோள்கள், விருப்பங்கள் மற்றும் நோக்குநிலை என்னவாக இருந்தாலும், அவரது கன்னையின் தோற்றமானது, தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்க அபிவிருத்தியின் முக்கிய பிரச்சினைகளுடன் பிணைந்திருந்தது. மார்ச் 1974 இல் தொழிற் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தமையும் 1974 அக்டோபரில் மீண்டும் அது தேர்வானமையும் மார்க்சிச முன்னணி படையின் மீது அளப்பரிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியதுடன் தத்துவார்த்த விளக்கத்தையும் கோரியது, அவ்வாறான விளக்கம் இல்லையென்றால் தந்திரோபாய பெருவளம் தவிர்க்க முடியாதவாறு சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளுக்குள் சீர்கெடும்.
இந்த அர்த்தத்தில், தொர்னட் உடனான போராட்டம், WRP தலைமைக்கு, சமூக ஜனநாயகத்திற்கு எதிராக போராடும் அதன் திறமைக்கு மாபெரும் முதல் சோதனையாக இருந்தது. ஹீலி தன்னை நினைவுகூரந்துகொள்வதைப் போலவே, பழைய RCP க்கு உள்ளே ஹாஸ்டன் உடனான அவரின் சொந்த மோதல்கள், தொழிற் கட்சி உடனான மார்க்சிச முன்னணிப் படையின் உறவு பற்றிய சர்ச்சைக்குரிய கேள்வி மீது எழுந்தன. அகிலம் அந்த பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து, உள்ளடங்கியிருந்த நிலைப்பாடுகளை ஒரு நடைமுறை சோதனைக்கு உட்படுத்தும் வழிவகைகளைச் சிந்தித்தது. ஹீலி நுழைவுவாத கன்னைக்குத் தலைமை தாங்கினார் அதேவேளையில் ஹாஸ்டனோ "வெளிப்படையான கட்சி" தலைமையைப் பேணினார். இறுதியில், ஹீலி நிலைப்பாட்டின் சரியான தன்மை பரிசோதிக்கப்பட்டது என்பதுடன், பிரிட்டிஷ் பகுதியின் தலைவராக அவர் உருவாவதற்கு அந்த அனுபவம் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
1974 இல் WRP தலைமை, தொழிற் கட்சிக்கு எதிரான போராட்டம் சம்பந்தமாக நீண்டகால தந்திரோபாயங்களை அபிவிருத்தி செய்வதற்கான அவசியத்தை எதிர்கொண்டிருந்தது. தொழிற் கட்சிக்குள் பெரும் பகுதியினரை வென்றெடுப்பதைத் தயாரிக்கும் முகமாக, முதலில் அது அதன் சொந்த கட்சிக்குள் தொழிலாளர்களை வெல்ல வேண்டியிருந்தது. இதுவரையில் அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் தொர்னட்டைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இந்த தொழிலாளர்களுக்கு கட்சியின் பகுப்பாய்வினது சரியான தன்மையை புரிந்து கொள்ளும் நிலைமைகளை உருவாக்குவது ஒரு புத்திசாலித்தனமான தலைவரின் பொறுப்பாக இருந்தது. ஆனால் அது முயற்சிக்கப்படவில்லை, அது திட்டவட்டமாக ஏனென்றால், ஹீலி முகாமிற்குள் கணிசமான குழப்பம் நிலவியதால் ஆகும்.
டோரி-எதிர்ப்பு தாக்குதலைக் கட்டமைந்திருந்த நிலையில், குறிப்பாக 1972 கோடையில் பென்டொன்வில் (Pentonville) இல் ஐந்து துறைமுக தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக பரந்த வேலைநிறுத்தம் வெடித்ததும், SLL தலைமை, அனைத்து குட்டி முதலாளித்துவ திருத்தல்வாத குழுக்களைப் போல் அல்லாமல், டோரி அரசாங்கத்தை தொழிலாள வர்க்கம் கீழிறக்கும், கீழிறக்க முடியுமென்ற உச்சநம்பிக்கையை கொண்டிருந்த நிலையில் — தொழிற் கட்சி அரசாங்கத்தின் வெற்றியானது சமூக ஜனநாயகத்துடன் இறுதி களத்திற்கான முன்நிபந்தனைகளை துரிதமாக உருவாக்கும் என்று நம்பத் தொடங்கியது. குரோம்வெல்லியன் (Cromwellian) புரட்சி குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டிருந்த ஹீலி, வரவிருந்த தொழிற் கட்சி அரசாங்கத்திற்கும் 1640 வரை நீண்ட பாராளுமன்றத்திற்கும் இடையே சமாந்தரங்களை காணவில்லை. இந்த ஒப்பீட்டுடன், தொழிற்சங்கங்களின் பலத்துடன் தொழிற் கட்சி ஆட்சிக்கு வரும்போது, ஆழமடைந்து வந்த உலக நிதியியல் ஸ்திரமின்மை நிலைமைகளின் கீழ், அது முதலாளித்துவத்திற்கு பொருந்தாத தீவிர மாற்றங்கள் மீது தொழிலாள வர்க்க கோரிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை மேலெழும் என்பதை அவர் முன்அனுமானிக்க முயன்றார்.
ஆனால் வரலாறு, ஹீலி அனுமானித்திராத ஒரு சுற்றுவழியை எடுத்தது. 1974 இல் இருந்து அவர்கள் வேறொரு வகையான ஒரு நீண்ட பாராளுமன்றத்தை முகங்கொடுத்தார்கள். டோரிகளின் வீழ்ச்சியும் தொழிற் கட்சி திரும்ப அதிகாரத்திற்கு வந்தமையும் சமூக ஜனநாயகத்தின் நிலைக்கும் தன்மையின் மீது புதிய சுற்று பிரமைகளை உருவாக்கியது. இது எல்லாவற்றுக்கும் முதல் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் பிரதிபலித்தது. தொர்னட் எதிர்ப்பு மேலெழுந்ததால் முன்வைக்கப்பட்ட பொறுமையான அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தை நடத்துவதற்கு ஹீலி தலைமை தகைமையற்றிருந்தது என்பது, பிரிட்டனில் வர்க்க போராட்டத்தின் உள்ளடக்கத்தில், WRP மீது சமூக ஜனநாயகக் கட்சியினர் ஒரு முக்கிய வெற்றி பெற்றிருந்தனர் என்பதை அர்த்தப்படுத்தியது. OCI முகவர்களிடமிருந்து WRP ஐ காப்பாற்றும் பெயரில், ஹீலி WRP ஐ அரசியல் இரத்த ஆற்றில் மூழ்கடித்தார், அது இயக்கத்தைப் பாரியளவில் பலவீனப்படுத்தியது. உள்கட்சி போராட்டத்தின் விளைபயனாக அரசியல் தெளிவை எட்டுவதற்குப் பதிலாக, பிரிட்டனில் அந்த போராட்டத்திலிருந்து மேலெழுந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதற்கு முந்தைய 21 ஆண்டுகளில் வேறெந்த காலத்தையும் விட அதிகமாக நோக்குநிலை பிறழ்ந்திருந்தது.
தொர்னட் வெளியேற்றத்தற்கு முன்னர் எந்த நேரத்திலும், பிரிட்டிஷ் பகுதிக்குள் நடந்த போராட்டம் அனைத்துலகக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கவில்லை என்பதையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். WRP விவகாரங்களில் ICFI சுதந்திரமான பாத்திரம் வகிக்க முடியாது என்று வெளிப்படையாக நம்பிய ஹீலி, அதை வெறுமனே அமைப்புரீதியில் பிரிட்டிஷ் இயக்கத்தின் ஒரு தொங்குதசையாகவே பார்த்தார். இந்த விடயத்தில், தொர்னட்டின் கண்ணோட்டங்கள், ஹீலியிலிருந்து ஏதேனும் விதத்தில் வித்தியாசப்பட்டிருந்தது என்பதற்கும் அங்கே எந்த ஆதாரமும் இல்லை.