ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

தொழிலாளர் புரட்சிக் கட்சி ஏன் நொருங்கியது?

1985 ஆம் ஆண்டு கோடையில் தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் திடீரென வெடித்த அரசியல் நெருக்கடியும், அது, அதன் மத்திய தலைமைக்குள் பேரழிவுக்கான பிளவாக வேகமாக அபிவிருத்தி அடைந்ததும் நான்காம் அகிலத்தை பொறுத்தமட்டில் அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். ஒரு சில வாரங்களுக்கு உள்ளேயே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மிகப்பழையதும் ஸ்தாபக பிரிவும் உண்மையில் சிதறுண்டுபோனது. சோசலிச இயக்கத்தில் 140 ஆண்டுகால அனுபவத்தை கூட்டாகப் பிரதிநிதித்துவம் செய்த தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களான ஜெரி ஹீலி, மைக்கல் பண்டா, கிளீவ் சுலோட்டர் தூக்கி எறியப்பட்டது கிட்டத்தட்ட ஒரே இரவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் இதுவரை கண்டிராத மிக விஷத்தன்மையான குழு மோதலுக்கு இட்டுச் சென்றது. மூன்று தசாப்தங்களாக நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பு இருந்தபோதிலும் சுலோட்டரும் பண்டாவும் குழுத்தடுப்பரண்களின் ஒரு புறமும் ஹீலி மற்றொருபுறமும் காணப்பட்டனர். பண்டாவிற்கும் சுலோட்டருக்கும் இடையிலான உறுதியற்ற ஒத்துழைப்பு உடைவதற்கு நீண்டகாலம் எடுப்பதற்கு முன்னரே அவர்கள் ஹீலிக்கு எதிராக தொடுத்ததை விட சற்றும் குறையாத ஆவேசத்துடன் மரணத்திற்கான போரில் ஈடுபட்டனர்.

ஆயினும், 1985 ஜூலைக்கும் அக்டோபருக்கும் இடையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி நொருங்கியது, கடந்த தசாப்தத்தின் பொழுது கட்சியின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட முன்னரே தீர்மானிக்கக்கூடிய சீரழிவினை கவனத்தில் எடுக்காதவர்களுக்கு மட்டுமே இன்னமும் வியப்பாக இருக்கும். பிளவின் அபிவிருத்தியை சூழ எழுந்த சூழ்நிலைகள் —1985 மார்ச்சில் சுரங்க தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் முடிவினை தொடர்ந்து சோர்வு நிலையும் அரசியல் திசைவழி இன்மையும் மத்திய குழுவிற்குள் பரஸ்பரம் நாசம் விளைவிக்கும் அநாகரீக சண்டை, ஹீலி சம்பந்தப்பட்ட கீழ்த்தரமான ஊழலின் வெடிப்பு, ஹீலி தனது செல்வாக்கை தகாத வழியில் ஈடுபடுத்தலை அரசியல்குழு கோட்பாடற்ற முறையில் மூடிமறைத்தது, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிதிநிலை அமைப்பின் திடீர் சீர்குலைவு, அனைத்துலகக் குழுவை ஏமாற்றுவதற்கான சதித்திட்டம்— தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமைக்குள்ளே நிகழ்ந்த கட்டுப்பாடற்ற சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியிலிருந்தும் தேசியவாத சீரழிவில் இருந்தும் தோற்றம் பெற்றன.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உருவாக்கத்தில் இருந்து வந்த முழு அபிவிருத்தியின் மார்க்சிச ஆய்விலிருந்து தவிர்க்கமுடியாமல் ஊற்றெடுக்கும் இந்த முடிவானது, ஹீலிவாத அமைப்பின் நொருங்குதலில் இருந்து வெளிவந்த ஒன்றை தவிர, அனைத்து விதமான போக்குகளாலும் நிராகரிக்கப்பட்டது. சிறப்பாக பிளவிற்கு முன்னரே ஹீலி தலைமைக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பை பிரதிநிதித்துவம் செய்த, தங்களுடைய போராட்டத்திற்கு சர்வதேசியத்தை அடிப்படையாக கொண்டிருந்த புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் (ICP) உறுப்பினர்களைத் தவிர ஏனைய அனைவரும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நெருக்கடிக்கான குற்றச்சாட்டை, ட்ரொட்ஸ்கிசத்தின் மீதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மீதும் வைத்தனர். ஏதாவது ஒரு வழியில் அவர்கள் கூறும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவு, (அவர்கள் ஏதாவது சீரழிவு நடந்துள்ளது என்று ஏற்றுக் கொள்ளும்வரை) ட்ரொட்ஸ்கிச கோட்பாட்டிற்கான போராட்டத்தின் தவிர்க்கமுடியாத விளைபொருள் என்கின்றனர்.

அவர்களது தாக்குதலின் வெளிவடிவம் எவ்வாறுதான் வேறுபட்டிருந்தாலும், அனைத்துலகக் குழுவிற்கு குரோதமான அனைத்துப் போக்கினரும் ஒரு மையப் புள்ளியில் உடன்பட்டனர். அதாவது ட்ரொட்ஸ்கிசம் தன்னைத்தானே தொழிலாள வர்க்கத்தினுள் வேருன்றிக்கொள்ள வரலாற்றுரீதியாக கையாலாகாததாகிவிட்டது மற்றும் அதன் தனிமைப்படலின் விளைபயனே நான்காம் அகிலத்தினுள் பிளவிற்கும் அனத்துவித அரசியல் சீரழிவுக்கும் காரணமாகும் என்பதாகும்.

அனைத்துலகக் குழுவிற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு, ஹீலி தன்னுடைய ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பாளர்களை, “சுத்தமான நீரின் சுத்தத்திலும் பார்க்க, மிகச் சிறு எண்ணிக்கையினரது சுத்த சோசலிசத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று குற்றஞ்சாட்டினார். (தொழிலாளர் புரட்சிக் கட்சி அரசியல் குழுவின் அறிக்கை மே 30, 1986). அவரது கூட்டாளி குட்டி முதலாளித்து கிரேக்க தேசியவாதி சவாஸ் மிஷேல், “ட்ரொட்ஸ்கிசத்தின் தனிமைப்படல் மற்றும் தோல்விகளது காலத்தின் நடைமுறைகளுக்கு பிற்போக்குத்தனமாக திரும்புவதை …” (நான்காம் அகிலத்துக்கான புதிய சகாப்தம், ஜனவரி 21, 1986) முன் வைத்ததற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை பகிரங்கமாக கண்டனம் செய்தார். “தோல்விகளதும் தனிமைப்படல்களதும்” காலத்தின் பொழுது நான்காம் அகிலத்தின் முதன்மைத் தலைவர் லியோன் ட்ரொட்ஸ்கிதான் என்ற வகையில், மிஷேல் எதிர்த்துப் போராடும் நடைமுறைகள், சோசலிச புரட்சியின் உலக கட்சியை நிறுவியதிலும் கட்டியெழுப்பியதிலும் தொடர்புடையவை அதாவது ஸ்ராலினிசத்திற்கும் மத்தியவாதத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு எதிரானதாகும். மார்க்சிச கோட்பாடுகளுக்கும் வேலைத்திட்டத்திற்குமான போராட்டம் “நான்காம் அகிலத்தின் மீதும் உலகத் தொழிலாளர்கள் மீதும் தோல்விகளைத் திணிக்கும் வேலையை அர்த்தப்படுத்துகிறது” (அதேபக்கம்) என்று அவர் அறிவித்தார்.

இன்னொரு அறிக்கையில், ஹீலி தனது செயற்பாடுகளை பாதுகாக்கும் பொருட்டு சந்தர்ப்பவாதத்தின் தேவையினை வலியுறுத்தி, அனைத்துலகக் குழுவின் முன்னணி ஆதரவாளரான டேவிட் நோர்த்தினை பின்வருமாறு தாக்கினார், “அவரை பொறுத்தமட்டில் முக்கிய பிரச்சினை கோட்பாட்டு தூய்மையை பேணுவதுதான் (அது) மிகச்சிறிய கலந்துரையாடல் குழுவில் மட்டும் சாத்தியமானது: (எண்ணிக்கை, கோட்பாட்டு தூய்மையற்ற தன்மையை மட்டுமே ஊக்குவிக்கும்.)” (நியூஸ் லைன், பெப்ரவரி 14, 1986)

சுருங்கக் கூறினால், அதாவது, ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளைக் காட்டிக் கொடுக்காமல் தொழிலாள வர்க்கத்துக்குள் இயக்கத்தைக் கட்டுவது சாத்தியமில்லை என்பதுதான் ஹீலியின் நிலைப்பாடு. ட்ரொட்ஸ்கிசத்தை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் போக்கினர், அதன் வழிகாட்டும் கோட்பாட்டுக்கு, எந்தக் கோட்பாடுகளும் இல்லை! என வெளிப்படையாக அறிவிப்பது இதுதான் முதல்தடவையாகும்.

பண்டா, சற்றே ஓரளவு டாம்பீகத்துடன் இதே நிலைப்பாட்டை பகிர்ந்து கொள்வதுடன், ட்ரொஸ்கிச இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவிற்கும் வந்தார். இப்போது காலாவதியாகிப் போய்விட்ட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கன்னையான சுலோட்டர்-பண்டா-புரூஸ் கன்னை அனைத்துலகக் குழுவுடனான அதன் பிளவுக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த, பெப்ரவரியில் வெளியிடப்பட்ட கேவலமான பத்திரத்தில், பண்டா அறிவித்தார்:

“அது நிச்சயமாக தற்செயலானதல்ல —உண்மையில் அது 1953 இல் அனைத்துலகக் குழுவில் இதே கருத்துருவிலிருந்து தர்க்கரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் மேலும் தொடர்கிறது— அமெரிக்காவின் வேர்க்கஸ் லீக்கையும் உள்ளடக்கி, அனைத்துலகக் குழுவின் எந்த ஒரு தனிப் பிரிவும் 32 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்துக்கான நிலைத்திருக்கக்கூடிய முன்னோக்கை விரிவாக்க முடியவில்லை” (வேர்க்கஸ் பிரஸ், பெப்ரவரி 7-1986)

பண்டாவினால் தாக்குதல் செய்யப்பட்ட கருத்துருவைத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அடிப்படையாக கொண்டிருந்தது. அது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர மேலாதிக்கமாகும், கட்சி சம்பந்தமான லெனின்-ட்ரொட்ஸ்கியின் தத்துவமாகும். ஸ்ராலினிசத்துக்கும் மத்தியவாதத்துக்கும் தொழிலாளர் இயக்கத்திலுள்ள அனைத்து வகையான ஏஜன்டுகளுக்கும் எதிரான வரலாற்றுரீதியான போராட்டத்தின் கருத்துருவை பொய்யென நீரூபிக்கும் விதமாக அவர் முதலாளித்துவ வர்க்கத்தின் முந்தானையில் மீண்டும் கட்டிப்போடுகிறார்.

மேற்கண்ட மேற்கோளிட்ட வரிகளை எழுதுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் பண்டா கூறியது மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாகும் “கட்சி, செயல்தந்திரம் மற்றும் வேலைத்திட்டம் பற்றிய பிரச்சினைகளின்பால் அல்ல, ஆனால் புரட்சிகர ஒழுக்கநெறியின் மிகஅடிப்படை பிரச்சினையின் பேரில்தான் பிளவுபட்டிருக்கிறது.” (நியூஸ் லைன், நவம்பர் 2, 1985) இது ஹீலியுடனான பண்டாவின் பிளவு, கோட்பாடு மற்றும் வேலைத்திட்டம் பற்றிய எந்தப் பிரச்சினையுடனும் முழுமையாக சம்பந்தமில்லாதது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான ஆடம்பரமான மத்தியதர வர்க்க வழியைத்தவிர வேறெதுவும் கிடையாது.

“புரட்சிகர ஒழுக்கநெறிக்கான” மற்றொரு இரட்சிப்பாளர் கிளீவ் சுலோட்டர் ஆவார். ஹீலியைப் போலவே தன்னுடைய சீரழிவும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் “தனிமைப்படலின்” விளைவு என்றார். “ட்ரொட்ஸ்கியின் மரணத்தின் பின் நான்காம் அகிலம் மகத்தான மக்கள் போராட்டங்களிலிருந்து தனிமைப்படலை கடந்து செல்லும் தகுதியை நிரூபிக்கவில்லை.......… வெற்றிகரமான மார்க்சிச தத்துவத்தின் அபிவிருத்திக்கு எதிரான யுத்தத்தில் இந்த தனிமைப்படலும் சிறுபான்மையும் தீர்க்கமான காரணியாகத்தான் இருந்தன.” (வேர்க்கஸ் பிரஸ், ஏப்ரல் 26, 1986). உடம்போடு ஊறிப்போன சந்தர்ப்பவாதிகளுக்கும் முழு மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றோடு பரிட்சயம் இல்லாதவர்களுக்கும் நம்பத்தகுந்ததாகத் தோன்றும் இந்த அறிக்கை, அடிப்படையில் ஹீலியுடன் உடன்பாட்டில் உள்ளது. அவர் கூறிக்கொள்ளும் ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளால் மார்க்சிசத்தை அபிவிருத்தி செய்யமுடியாது. ஏனெனில் அவர்கள் சிறுபான்மையினராவர். அவர்கள் சிறிய அளவினர் ஏனெனில் தொழிலாள வர்க்கத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஏன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்? சுலோட்டர் பதிலைக் கூறவில்லை. ஆனால் ஹீலியால் ஆழ்ந்த நோக்குடன் பதிலிறுக்கப்பட்ட, “தனிமைப்படல் என்பது கோட்பாடுகளுக்காக செலுத்தப்படும் தவிர்க்க முடியாத விலை” என்பதை உற்று நோக்குவதைக் காணமுடியும்.

அவர்கள் தனிமைப்படலைப்பற்றி பேசும்பொழுது, நிச்சயமாக, அது தொழிலாள வர்க்கத்திடமிருந்தல்ல, ஸ்ராலினிச மற்றும் சமூகஜனநாயக அதிகாரத்துவத்திடமிருந்தும், பல்வேறு தேசியவாத, குட்டி முதலாளித்துவ தீவிரவாத போக்குகளிலிருந்தும்தான். தங்களை ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளாக பேணிக்கொண்டு வருபவர்கள், அரைக்காலனித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்க இயக்கத்திற்குள்ளே செல்வாக்கு மிக்க பதவிகளில் இடம்பெற்றிருப்பவர்கள் அல்லது மக்கள் மத்தியில் அல்லது நடுத்தர வர்க்கத்திற்குள்ளே தற்போது பின்வருவனவற்றை அனுபவித்து வருபவர்களின் இலஞ்சம் மற்றும் மோசடிகளை நிராகரிக்கும்வரை “தனிமைப்படலில்” தான் இருப்பார்கள்.

பிளவிற்கு பின்னர் அனைத்துலகக் குழுவை கைவிட்டு வெளியேறிய மற்றொரு குழு, அனைத்து ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு போக்குகளையும் ஒட்டு மொத்தமாக தெளிவானவடிவில் வெளிப்படுத்தியது. ஹீலியின் சீரழிவும் நான்காம் அகிலத்துக்குள் முன்னைய அனைத்துப் போராட்டங்களும் ட்ரொட்ஸ்கிசத்தின் முழு திவாலையும் எடுத்துக்காட்டுகிறது என்று பெருவின் லிகா கம்யூனிஸ்டா பிரகடனப்படுத்தியது. “சிறிய புரட்சிகர பிரிவு வடிவத்தில் மக்களிடம் இருந்து தனிமைப்படுவது அதிகரித்து வருகிறது” (Comunismo, மார்ச் 1986) என்பதில் அவர்களின் குற்றச்சாட்டு இருந்தது.

பெருவில் தேசிய முதலாளித்துவ வர்கத்துக்கு எதிரான புரட்சிகர பேராட்டத்தை கைவிடும் அவர்களது முடிவை நியாயப்படுத்தும் முகமாக, “நாற்பதுகளின் தசாப்தத்தில் அல்பானியா, சீனா, யூகோஸ்லாவியா, கிழக்கைரோப்பா, வியட்னாம், கொரியா, அல்ஜீரியா முதலியவற்றில் உலகப் புரட்சியின் அபிவிருத்தி மறு-முன்முயற்சி எடுக்கையில், அதன் ஓரத்தில்” நான்காம் அகிலம் உட்கார்ந்திருந்தது என அவர்கள் கூறினர்.

“ட்ரொட்ஸ்கிச இயக்கம் இந்த அபிவிருத்திகளில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை...... குறுங்குழுவின் செயற்பாடானது, மக்கள் திரளின் தலைமையில் எந்தவித நேரடி கடமையிலிருந்தும் இருந்து அவர்களை விடுவித்தது, இந்த அபிவிருத்திகளை திமிர் பிடித்தவகையில் புறக்கணிக்கவோ அல்லது வரையறை செய்யவே அவர்களை அனுமதித்தது”. (அதேபக்கம்) அவர்கள் ஆட்சேபிக்கும் வரையறை செய்தல் என்பது தேசிய முதலாளித்துவ வர்க்கம், ஸ்ராலினிச அதிகாரத்துவம், குட்டி முதலாளித்துவ தீவிரவாதம், மத்தியவாதம் போன்ற அந்தவகையான மார்க்சிச பதங்களாகும்.

இந்தக் குழுவின் தத்துவார்த்த தலைவர் ஜோஸ். பி, பாட்டாளி வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் வர்க்க அடிப்படைதான் மக்களிடம் இருந்து அது தனிமைப்படலுக்கான காரணம் என்பதன் மூலம் இந்த பகுப்பாய்வை அதன் இறுதியளவிற்கு எடுத்து சென்றுள்ளார்: “புறநிலை ரீதியாக புரட்சிகர சமூக சக்திகளுக்கு முழு எதிரிடையான சமூக சக்திகளில் வேருன்றியுள்ள இயக்கம் என்பது பற்றிய பிரச்சினை வெளிப்படையானது. ஆகையால் அது புறநிலை ரீதியாக அழிக்கப்பட வேண்டும்.” (அதேபக்கம்)

இந்தப் பத்திரம் வெளியிட்டு நீண்டநாள் கூட ஆகவில்லை கிளீவ் சுலோட்டர் அந்த ஆசிரியருடன் கை குலுக்குவதற்காக பெருவிற்கு விரைந்தோடிச் சென்றார் அந்த அவசரத்தில் அமைப்பின் தொலைபேசி எண்ணை மறந்து விட்டார், லீமா விமான நிலையத்தில் பல நாட்களாக கதியற்று விடப்பட்டிருந்தார்.

இந்த அனைத்து ஓடுகாலிகளும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நெருக்கடிக்கு திரித்து விளக்கமளிப்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சி அதன் சாரத்தில், இன்றைய உலகில் முன்னணி ட்ரொட்ஸ்கிச விரோத அமைப்பான அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ஆல் வழங்கப்பட்ட ஆய்வுடன் முழுமையாக ஒத்திருக்கிறது. 1985 டிசம்பர் 2ல் Intercontinental Press, இதழில், சோசலிச தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான டக் ஜென்னஸ், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவின் மூலத்தை கண்டறிய, அதன் தலைவர்கள், பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக ‘மரபுவழி’ ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்த 1961-63 க்கு திரும்பிச் செல்கிறார்:

“கியூபப் புரட்சி, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் எதிர்பார்க்கப்பட்ட வழியில், அதாவது அது ‘நிரந்தர புரட்சித் தத்துவத்தின்’ அடிப்படையில் அபிவிருத்தி அடையவில்லை. நான்காம் அகிலத்தின் பகுதியென்று தம்மைக் கருதிக்கொண்ட பெரும்பான்மையான சத்திகள் எப்படியாயினும் முழுமனதுடன் புரட்சியை தழுவிக்கொண்டனர், தங்குதடையின்றி வந்து கொண்டிருந்த வர்க்கப் போராட்ட வழியை கணக்கில் கொண்டு தங்கள் தத்துவத்தை தகவமைத்துக்கொள்ள தொடங்கினர்.

“மாறாக ஹீலியும் அவரை பின்பற்றுபவர்களும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை மறுத்தளிக்க முடியாத கொள்கை என்ற மட்டத்திற்கு உயர்த்தினார்கள். இந்த நிலைப்பாட்டில் இருந்து கியூபப் புரட்சி, ட்ரொட்ஸ்கிசக் கட்சியால் தலைமை தாங்கப்படாததால், அது சோசலிசப் புரட்சி இல்லை என அவர்கள் கருதினர்.” (பக்கம் 726)

இந்த அறிக்கை, அனைத்துலகக் குழுவிற்குள் ஜூன் 1963 இல் உண்டான பிளவு தாங்கள் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை நிராகரித்ததால் ஏற்பட்டது என்பதை SWP திருத்தல்வாதிகள் முதன் முறையாக ஏற்றுக் கொண்டதை குறித்தது. இந்த அறிக்கை இப்பொழுது, ‘ஹீலி ஆதரவோ’ அல்லது ‘ஹீலி எதிர்ப்போ’ என்பதாக அல்லாமல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை தாக்குகின்ற அனைவரதும் நிலைப்பாட்டின் உண்மை முக்கியத்துவத்தை காட்டுகிறது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவு, ‘காலாவதியாகிவிட்ட’ ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை அது பாதுகாத்ததன் விளைபொருள் என பிரகடனம் SWP செய்தது. எல்லா கந்தல்களின் ஓடுகாலிகளும் உடன்படுகிறார்கள். ஆகையால் ஹீலி, தொழிலாள வர்க்கத்தை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுக்க முடியாது என்று கூறுவதன் மூலம், கோட்பாடுகளில் அவரது காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்துகையில், இந்த தீர்க்கமான விஷயத்தில் ஓடுகாலிகள் அவருடன் உடன்பட்டு போனார்கள்.

இந்த எல்லா ஓடுகாலிகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கிற்கு ஒரு திட்டவட்டமான விஞ்ஞானரீதியான பதம் உண்டு: அதுதான் கலைப்புவாதம் . அவர்கள், சந்தர்ப்பவாதத்தின் படுபிற்போக்கு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள் — அது இப்பொழுது ட்ரொட்ஸ்கிசத்தோடு துண்டித்துக்கொண்டு, அதன் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாட்டை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், அதன் தேசியப் பிரிவுகளையும் அழிப்பதை வேண்டிநிற்கிறது.

இந்தப் போக்கின் வர்க்க அடிப்படை, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட புரட்சிகர முன்னோக்கின் உறுதித்தன்மையில் இனிமேலும் நம்பிக்கை வைக்காத, அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் ஏகாதிபத்திய அழுத்தத்திற்கு அடிபணிந்து போகும், குட்டி முதலாளித்துவ வர்க்கப் பிரிவாகும். இந்தப் போக்கு, தொழிலாள வர்க்கம், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களால் மீண்டும் மேலாதிக்கம் செய்யப்பட்ட பிரதான ஏகாதிபத்திய மையங்களிலும், பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரவாத குட்டி முதலாளித்துவ சக்திகள் மேலாளுமை செய்கின்ற குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் அதிகமாக வெளிப்பட்டது.

ஹீலியால் உருவகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பவாத சீரழிவு, பிரிட்டனில் மட்டுமல்லாமல் ஏனைய பகுதிகளிலும் குறிப்பாக கிரிஸ், பெரு, ஸ்பெயின், மற்றும் ஆஸ்திரேலியா (கடைசி நாட்டில், வலதுசாரி சிறிய சிறுபான்மையினர் சோசலிச தொழிலாளர் கழகத்தை அழிக்க எடுத்த முயற்சிகள் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டன) போன்ற நாடுகளிலும் வலதுசாரிப் போக்கினர் வளர்வதற்கு வசதி செய்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் பிளவு வெளிப்பட்டதும், இந்த சந்தர்ப்பவாத சக்திகளின் முழுதாக்குதல், ஒரு கலைப்புவாத போக்காக உருமாற்றம் அடைந்தன, “குப்பை ட்ரொட்ஸ்கிசம்!” என்பது அவர்களின் போர்முழக்கமானது.

இதன் காரணமாகத்தான், வெடிக்கும் தன்மையதாய் மற்றும் எதிர்பாராததாய் இருப்பினும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அனைத்துக் கலைப்புவாதிகளிடமிருந்தும் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் பிரிந்து போதல், உலகம் முழுவதிலும் புரட்சிகர முன்னணிப் படை வளர்வதற்கான முன்நிபந்தனை ஆகவும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் இயக்கத்தில் ஏகாதிபத்திய குட்டி முதலாளித்துவ முகவாண்மைகளிடமிருந்து பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதற்கான முன் நிபந்தனையாகவும் இருந்தது.

கலைப்புவாதிகள் மத்தியில் உள்ள எமது எதிர்ப்பாளர்களைப் போலல்லாமல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெறும் குற்றச்சாட்டுக்களால் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ளவில்லை. அனைத்து கலைப்புவாதிகளும் குட்டிமுதலாளித்துவ பண்டிதர்மார்களை தங்கள் தலையில் சுமந்துகொண்டு, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நொருங்கலை விளக்குவதற்கு அனைத்து வகையான ஆழ்ந்த கோட்பாடுகளையும் எடுத்து கூறும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் அவர்களில் ஒருவர்கூட கடந்த தசாப்தத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் மற்றும் வர்க்க நிலைப்பாட்டை பற்றி அக்கறையுடன் கூடிய ஆய்வினை எடுத்துக் கொள்ளவில்லை. இது வெறுமனே தனிநபர் பலவீனம் பற்றிய பிரச்சினையல்ல. தொழிலாளர் புரட்சிக் கட்சி எப்படி சீரழிந்தது என்பதற்கான எந்தவொரு புறநிலையான பகுப்பாய்வையும் அவர்கள் விரும்பவில்லை. தொழிலாள வர்க்கம் அனுபவத்தின் படிப்பினைகளால் ஆயுதபாணி ஆக்கப்படும் என்ற பயத்தால், பதிலாக அவர்கள் அங்கு அதிகஅளவு குழப்பமும் மனச்சோர்வும் நிலவும் சூழ்நிலைக்கே முக்கியத்துவம் கொடுத்தனர், அதில்தான் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் சோசலிசப் புரட்சியின் செல்தகைமை சம்பந்தமாக அவர்களின் கேள்விக் குறிகளை விட்டுச் செல்ல முடியும்.

எவ்வாறாயினும், அனைத்துலகக் குழு தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவு குறித்து தேவையான ஆய்வை நடத்தியுள்ளது — அது, இச்சீரழிவு ஒவ்வோர் அடியிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தையும் உலக சோசலிச புரட்சியில் அதன் சர்வதேச மூலோபாயத்தையும் கைவிட்டதால் நேர்ந்துள்ளது என்பதை மறுக்கமுடியாத வகையில் நிரூபிக்கிறது. கலைப்புவாதிகள், இந்த சீரழிவுடன் முறித்துக்கொள்வதை பிரதிநிதித்துவம் செய்வதிலிருந்து விலகி, அதன் மிகவும் நோய்வாய்பட்ட உற்பத்தியாக இருக்கின்றனர்.