6. ஏகாதிபத்திய சகாப்தம் தனது நவீன வடிவத்தில் 19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் வெளிப்பட்டது. முதலாளித்துவ தொழிற்துறையின் துரித விரிவாக்கமானது தன்னுடன் சேர்த்து தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியையும், முதலாளித்துவத்திற்கும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நவீன தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையிலான வர்க்க போராட்டத்தின் எழுச்சியையும் சேர்த்துக் கொண்டு வந்தது. இந்த வரலாற்று நிகழ்வுப்போக்கு தத்துவார்த்த ரீதியாக மார்க்சிச அபிவிருத்தியில் எதிர்பார்க்கப்பட்டிருந்ததுதான். இந்த புதிய தத்துவத்தின் முதல் பெரிய படைப்பான 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' 1847 நவம்பரில், தொழிலாள வர்க்கத்தின் முதல் பெரிய புரட்சிகர போராட்டங்களின் காலத்திலேயே வெளியிடப்பட்டது. கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கெல்சின் படைப்பினால், வரலாற்று நிகழ்வுபோக்கினை ஆளும் புறநிலை விதிகளின் கண்பிடிப்பால் மனிதகுல நிலைமையின் பொது முன்னேற்றத்திற்கான கற்பனாவாத செயற்திட்டங்கள் அகற்றப்பட்டு கடந்து செல்லப்பட்டன. ஏங்கெல்ஸ் தன்னுடைய சிறப்பு மிகுந்த படைப்பான டூரிங்கிற்கு மறுப்பில் (Anti-Duhring) விளக்கியபடி:
பொருள்சார் வரலாற்றுக் கருத்தாய்வு நிறுவப்பட்டது. அதாவது;....உற்பத்தியும், உற்பத்திக்கடுத்து உற்பத்தி செய்த பொருட்களின் பரிவர்த்தனையும் தான் அனைத்து சமூக கட்டுமானத்திற்குமான அடிப்படையாகும்; வரலாற்றில் தோன்றியிருக்கும் ஒவ்வொரு சமூகத்திலும், செல்வம் பகிர்ந்து கொள்ளப்படும் முறை மற்றும் சமூகம் வர்க்கங்களாகவோ அல்லது பிரிவுகளாகவோ பிரிக்கப்பட்டிருக்கும் முறையானது என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமைகின்றது. இந்த கண்ணோட்டத்தில், அனைத்து சமூக மாற்றங்கள் மற்றும் அரசியல் புரட்சிகளுக்கான இறுதி காரணங்களும், மனிதர்களின் மூளைகளில் அல்லாமல், இறுதி உண்மை மற்றும் நீதிக்குள்ளான மனிதனின் சிறந்த விளக்கத்தில் அல்லாமல், உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையின் முறைகளிலான மாற்றங்களில் தான் காணப்படுவதற்குரியதாகிறது. அவை ஒவ்வொரு குறிப்பிட்ட சகாப்தத்தின், மெய்யியலில் அல்லாமல், பொருளாதாரத்தில் தேடுவதற்குரியவை. நடப்பு சமூக அமைப்புகள் பகுத்தறிவிற்கு ஒவ்வாதவையாகவும் நியாயமற்றவையாகவும் இருக்கின்றன, பகுத்தறிவானவை பகுத்தறிவிற்கு ஒவ்வாதவை ஆகி விட்டது, சரி என்றிருந்ததும் தவறாகி விட்டது என்பதாக வளரும் மனப்போக்கானது, முந்தைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு இயைந்திருந்த சமூக ஒழுங்கு இனியும் காப்பாற்றப்பட்டிராத வகையில் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறைகளில் மாற்றங்கள் ஓசையின்றி நிகழ்ந்திருக்கின்றன என்பதன் சான்றே ஆகும். வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள இணக்கக் குறைபாடுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளும், ஏறக்குறைய அபிவிருத்தியுற்றதொரு சூழலில், உற்பத்தியின் மாற்றப்பட்ட முறைகளுக்குள்ளாகவே தான் இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து அறியப்படுவதாகிறது. இந்த வழிவகைகள், மூளையில் இருந்து உதித்து இனி கண்டுபிடிக்கப்பட வேண்டியதில்லை, மாறாக இருக்கும் உற்பத்தியின் சடவாத உண்மைகளில் இருந்து மூளையின் உதவி கொண்டு கண்டறியப்பட வேண்டியவையே.[1]
7. 1867ம் ஆண்டு மூலதனம் (Capital) வெளிவந்தது தொழிலாள வர்க்கத்திற்கு முதலாளித்துவ உற்பத்தி முறையை நிர்ணயிக்கும் விதிகள் பற்றிய புரிதலைக் கொடுத்தது. ஒரு கணிசமான தொழிலாள வர்க்கத்தின் கவனத்தை மார்க்சின் உன்னதமான படைப்பு எட்டுவதற்கு சில பல ஆண்டுகள் பிடித்தன என்றாலும், மூலதனம் நவீனகால சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கான விஞ்ஞானபூர்வமான அஸ்திவாரத்தை ஸ்தாபித்தது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், குறிப்பாக ஜேர்மனியில், மார்க்சிசத்தின் செல்வாக்கின்கீழ் வந்த நிலையில், ஐரோப்பா முழுவதும் வெகுஜன சோசலிச கட்சிகள் நிறுவப்படுவதற்கான சமூக, தத்துவார்த்த அஸ்திவாரங்கள் வெளிப்பட்டன. 1889ல் இரண்டாம் அகிலம் அமைக்கப்பட்டமை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஐக்கியத்திற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்றளவிலான மைல் கல்லாகும். இது 1864ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் முதலாம் அகிலத்தை நிறுவியபோது இருந்ததைவிடவும், அதாவது முதலாளித்துவம் மற்றும் தொழிற்துறையின் உழைக்கும் வர்க்கத்தின் வளர்ச்சியை பொறுத்தவரையில், முதிர்ச்சியடைந்த புறநிலை அஸ்திவாரங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. முதலாம் அகிலம் கலைக்கப்பட்ட 1872 மற்றும் 1889 இடையிலேயான காலம் முதலாளித்துவம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான வளர்ச்சியை கண்ட பருவம் ஆகும். அடுத்த கால் நூற்றாண்டில் முதலாளித்துவம் மற்றும் சர்வதேச தொழிலாள இயக்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளில் முரண்பாடான போக்குகள் இருந்த நிலையைக் காண்கிறோம். மேலேழுந்த வாரியாகக் காணும்போது, பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் உறுதி இரண்டும் இக்காலத்தில் முக்கிய கூறுபாடுகள் போல் இருந்ததாக தோன்றும். இந்த வடிவமைப்பிற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சி, குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில், பாராளுமன்ற மற்றும் தொழிற்சங்க பாதைகளின் வழி முன்சென்றது. இருப்பினும், போலியான அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கின் ஸ்திரத்தன்மையின் அடித்தளத்தில், தீவிரமான உள்முக அழுத்தங்களும் பெருகிக் கொண்டிருந்தன. 19ம் நூற்றாண்டு கடைசி தசாப்தம், மற்றும் 20ம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் ஆகியவற்றில் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியுடன் சேர்த்து பெரும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு இடையே பெருகிய முறையில் ஆபத்தான போட்டித்தன்மை அதிகரிப்பும் வெளிப்பட்டது. அதே நேரத்தில் பெருகிய பொருளாதார நெருக்கடிகள் வர்க்க சமரசத்தின் புறநிலை அஸ்திவாரங்களை கீழறுத்ததுடன், வர்க்கப் பதட்டங்களின் உக்கிரத்தை விளைவித்தன.
8. வளர்ச்சியடைந்து காணப்பட்ட இந்த புறநிலை அடிப்படையிலான முரண்பட்ட வடிவமானது சமூக ஜனநாயக கட்சிக்குள்ளாக, குறிப்பாக ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD), அதிகரித்த பதட்டத்திற்கு அடித்தளமாக இருந்தது. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ கொள்கைவழி வர்க்க போர் குறித்ததாக இருந்தது; ஆனால் அதன் சொந்த வளர்ச்சியே, பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிற் சங்கங்களின் வலிமைப்படுத்தலை தன்னுடன் கொண்டுவந்த ஜேர்மன் முதலாளித்துவம் மற்றும் அதன் தேசிய தொழில்துறையின் விரிவாக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. முதலாளித்துவ வளர்ச்சியின் காலமானது, தொழிலாள வர்க்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் (இதனையே லெனின் பின்னர் "தொழிலாளர் பிரபுத்துவம்" என அழைத்தார்) ஒரு பிரிவை, அதன் நலன்களை முதலாளித்துவ அமைப்புடன் ஒருங்கிணைக்கும் வகையில் முதலாளிகள் பேணிவளர்த்தெடுப்பதற்கு அனுமதித்தது. ஒவ்வொரு நாட்டிலும் வெளிப்பட்ட, இரண்டாம் அகிலத்துக்குள் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியின் புறநிலை அடித்தளமாக இது இருந்தது. இந்த சந்தர்ப்பவாதம் தனது மிகவும் அபிவிருத்தியுற்ற தத்துவார்த்த வெளிப்பாட்டை எட்வார்ட் பேர்ன்ஸ்ரைனின் எழுத்துகளில் கண்டது; இவர் முதலாளித்துவ அமைப்பின் புறநிலை முரண்பாடுகள் மற்றும் அவற்றின் புரட்சிகர தாக்கங்கள் மீதான மார்க்சிச பகுப்பாய்வை நிராகரித்தார். மார்க்சிச தத்துவத்தின் அறிவியல் அடிப்படையையும் நிராகரித்த பேர்ன்ஸ்ரைன், சோசலிசமானது முதலாளித்துவ அபிவிருத்தி விதிகளுக்கு அவசியமான சடரீதியான தொடர்பு எதனையும் கொண்டிராத ஒரு உயர்நிலை அறநெறி இலக்காக நோக்கப்பட வேண்டும் என வாதிட்டார். இத்தகைய வாதங்கள் அகநிலை கருத்துவாத மெய்யியலின் பல்வேறு பிரிவுகளின் பரந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. அதிலும் குறிப்பாக மார்க்சிச சடவாதத்திற்கு முற்றிலும் குரோதமான புதிய கான்ட்டிச வாதத்தை (New Kantian) பிரதிபலித்தன.
9. திருத்தல்வாத மார்க்சிச-விரோத போக்குகளின் வலிமையானது, அபாயமான அளவுக்கு தொடர்ச்சியற்றதாகவும் அகநிலைவாத அவதானங்களை அடித்தளமாக கொண்டிருக்கும் அவற்றின் வாதங்களின் புத்திஜீவித்தன பலத்தை பிரதிபலிக்கவில்லை. மாறாக திருத்தல்வாதமானது, சோசலிஸ்டுகளால் தலைமை தாங்கப்பட்டபோதிலும் உழைக்கும் வர்க்கத்திற்கு முதலாளித்துவ சமூகத்தின் மீது ஒரு புரட்சிகர தாக்குதலுக்கான எந்த உண்மையான வாய்ப்பினையும் வழங்காத நிலையிலான புறநிலை சூழல்களின் அடிப்படையில் அபிவிருத்தியடைந்தது. இவ்வாறாக, சமூக ஜனநாயக இயக்கத்திற்குள்ளாக, குறிப்பாக ஜேர்மனியில், ஒரு விநோதமான இரட்டை வேடவாதம் எழுந்தது. இதன் தலைவர்கள் புரட்சிகர மார்க்சிசத்தின் மொழிநடையை பயன்படுத்தினார்கள் என்றாலும் கட்சியின் அன்றாட நடைமுறை வேலையானது சீர்திருத்தவாதத்தின் எல்லைகளுக்காக நடைபெற்றது. பேர்ன்ஸ்ரைனின் வடிவாக்கங்கள் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற் சங்கங்களின் அன்றாட நடைமுறையின் இந்த சீர்திருத்தவாத குணநலனை பிரதிபலித்ததுடன் அதனை நியாயப்படுத்தின. 1899ல், பிரான்சில் சோசலிச தலைவரான மில்லரண்ட் முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு மந்திரியாக ஆனபோது, பேர்ன்ஸ்ரைனின் தத்துவார்த்த திருத்தல்களின் அரசியல் தாக்கங்கள் தெளிவான வெளிப்பாட்டினைக் கண்டன.
Marx-Engels Collected Workers, Volume 25 (New York: International Publishers, 1987), pp. 254-55.