Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னர்

24-1. அனைத்துலகக் குழு விளக்கியதைப் போன்று: “1985-86 பிளவானது நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு வரலாற்று மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1953ல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது முதல், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட போராட்டத்தின் உச்சகட்டமே இதுவாகும். பப்லோவாத சந்தர்ப்பவாதத்தால் உருவாக்கப்பட்ட ஐக்கியமின்மை மற்றும் குழப்பத்தின் நீண்ட காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள உண்மையான ட்ரொட்ஸ்கிசவாதிகள், அதாவது புரட்சிகர மார்க்சிஸ்டுகள், அனைவரும் அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ் பலப்படுத்தப்படுவதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன.”[56]

24-2. தொழிலாளர் புரட்சிக் கட்சி உடனான பிளவு, அனைத்துலகக் குழுவின் பகுதிகளுக்கு இடையில் முன்னெப்போதுமில்லாதளவு சர்வதேச ஒத்துழைப்பின் அபிவிருத்திக்கும், அனைத்துலக இயக்கத்திற்குள் மார்க்சிசத்தின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது. “தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது எப்படி 1973-1985 ” என்ற தலைப்பில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவு குறித்த ஒரு நீளமான பகுப்பாய்வை அனைத்துலகக் குழு முன்வைத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஓடுகாலிகளில் எவரும் அதை நிராகரிக்காதது ஒரு புறம் இருக்க, சவால் செய்யக்கூட வரவில்லை. பண்டாவின் ட்ரொட்ஸ்கிச விரோத வசைமாரிகளுக்கு டேவிட் நோர்த் தனது “நாம் காக்கும் மரபியம்” (“The Heritage We defend”) புத்தகத்தில் பதிலளித்தார். அது நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டம் குறித்த மிகமுக்கியமான அம்சங்களை தெளிவுபடுத்தியது. அந்த வேலைகளும், அதனுடன் எண்ணற்ற ஏனைய கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளுமே இயக்கத்தின் காரியாளர்களுக்குக் கற்பிப்பதற்கும், அத்துடன் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் மீது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் சீரழிவு கொண்டிருந்த தாக்கத்தில் இருந்து மீள்வதற்கும் அடிப்படையாக இருந்தன.

24-3. இந்த பிளவு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைகளை உருமாற்றியது. கட்சியின் தலைமையும் உறுப்பினர்களும் அனைத்துலகக் குழுவை முழுமையாக ஆதரித்ததோடு அனைத்துலகக் குழுவின் ஆவணங்கள் மற்றும் மையப் பிரச்சினைகளும் முழுமையாக கலந்துரையாடப்பட்டன. அடுத்த இரண்டு ஆண்டு காலங்களின் போது, கீர்த்தி பாலசூரியா அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டப் பணிகளில், குறிப்பாக நிரந்தரப் புரட்சித் தத்துவம் தொடர்பாக, கவனத்தைச் செலுத்தினார். 1987 மார்ச்சில் வெளியான நான்காம் அகிலம் (தொகுதி 14, எண் 1) இதழுக்கு பாலசூரியாவும் டேவிட் நோர்த்தும் எழுதிய தலையங்கக் கட்டுரை, பண்டா 1960களின் பிற்பகுதியில் மாவோவையும் ஹோ சி மின்னையும் புகழ்ந்து தள்ளியது வரை பின்சென்று, அவர் நிரந்தரப் புரட்சியைக் கைவிட்டது குறித்த ஒரு தெளிவான அம்பலப்படுத்தலை செய்தது. அதே இதழில், பாலசூரியாவுக்கும் (பிரிட்டிஷ்) சோசலிச தொழிலாளர் கழக தலைவர்களுக்கும் இடையில் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக நடந்த கருத்துப் பரிமாற்றங்களும் வெளியாகியிருந்தன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அனைத்துலகக் குழுவுடன் இணைந்து, இந்தியாவில் தனது அரசியல் வேலையை புதுப்பித்து விரிவாக்கியது.

24-4. இந்தப் பிளவு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அதிகரித்து வந்த உள்நாட்டுப் போரின் வடிவத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நேரடியாக முகங்கொடுத்த, தேசியப் பிரச்சினை சம்பந்தமான ஒரு முக்கியமான கலந்துரையாடலுக்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டது. 1986ல் கீர்த்தி பாலசூரியா, “தமிழர் போராட்டமும் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் துரோகமும்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். 1970களின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தை முழுமையாக அலட்சியம் செய்து, இலங்கை தேசிய அரசுக்கு ஆதரவு கொடுத்த நிலைப்பாட்டில் இருந்து, 1979 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விமர்சனமற்ற ஆதரவு வழங்கும் நிலைப்பாடு வரையான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத திருப்பங்களை அக்கட்டுரை அம்பலப்படுத்தியது. “தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட விடயத்தில் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் வரலாற்றுப் பதிவுகளை இந்த ஆய்வு தெளிவாக்குவதைப் போல், ட்ரொட்ஸ்கிசவாதிகளாக வேடம்தரித்த இந்த கயவர் கூட்டம், தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை திட்டமிட்டுக் காட்டிக் கொடுத்தது. எல்லாவற்றுக்கும் மேல், இலங்கையில் நிரந்தரப் புரட்சித் தத்துவ முன்னோக்கிற்காகப் போராடிய ஒரே கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அழிப்பதற்கு அவர்கள் தோல்விகண்டும் கூட நனவுடன் வேலை செய்துள்ளனர்,” என்று அக்கட்டுரையை அவர் முடித்திருந்தார்.

24-5. இந்த பிளவுக்குப் பிந்தைய காலகட்டம், இலங்கை முதலாளித்துவத்தின் கூர்மையான அரசியல் நெருக்கடியான காலகட்டத்துடன் சமாந்தரமானதாக இருந்தது. ஐ.தே.க. அரசாங்கம் வடக்கில் மோசமான இராணுவப் பின்னடைவுகளையும், தெற்கில் பொருளாதாரச் சரிவினாலும் அரசாங்கத்தின் சந்தை-சார்புக் கொள்கைகளின் தாக்கத்தாலும் எரியூட்டப்பட்ட சமூக அமைதியின்மையின் வளர்ச்சியையும் எதிர்கொண்டது. பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளுக்கு உடன்பட்டதன் மூலம், கால அவகாசத்தைப் பெறுவதற்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா முனைந்தார். 1985ல் பூட்டான் தலைநகரான திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, “அமைதிக்கான ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக” எதிர்க்கட்சிகளின் அரசியல் உதவியை சேர்த்துக் கொள்வதன் பேரில், ஜெயவர்த்தனா 1986ல் கொழும்பில் சகல கட்சி வட்ட மேசை மாநாட்டுப் பேச்சுவார்த்தைகளை தொடக்கி வைத்தார். ஐ.தே.க. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில், குட்டி முதலாளித்துவ தீவிரவாத நவசமசமாஜக் கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான, முன்னாள் ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு இடதுசாரிக் குழுவான ஸ்ரீலங்கா மஹஜனக் கட்சி உடன் சேர்ந்து கொண்டது. அதன் விளைவுக்கு அவர்கள் அனைவரும் அரசியல் பொறுப்பாளிகளாவர். அந்த மாநாட்டின் விளைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியத் துருப்புகளை அனுப்புவதற்கு ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் 1987 ஜூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஒரு அமைதி உடன்படிக்கையை அமுல்படுத்தும் சாக்குப் போக்கில், இந்த இராணுவ நடவடிக்கையின் உண்மையான நோக்கம், தமிழ் கெரில்லாக்களை நிராயுதபாணியாக்குவதும் ஒப்பந்தத்தின் விதிகளுக்கு எதிராக எழும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்குவதுமே ஆகும். அரசாங்கத்தின் வட்ட மேசை மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.க. பங்கேற்க மறுத்ததோடு, ஜே.வி.பி.யுடன் சேர்ந்து, எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திற்கும் எதிராக இனவாத பிரச்சாரமொன்றை முன்னெடுத்தது.

24-6. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத நிலைப்பாட்டில் இருந்து, வட்டமேசைப் பேச்சுவார்த்தைகளையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் எதிர்த்து, இராணுவத் தலையீட்டிற்கு எதிராக இலங்கையிலும் இந்தியாவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக அழைப்பு விடுத்த ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே. ஜெயவர்த்தனாவினதும் ராஜீவ் காந்தியினதும் அரசாங்கங்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து எழுந்துள்ள, துருப்புகளை அனுப்புவதற்கான முடிவு, தொழிலாள வர்க்கத்திற்கும் கிராமப்புற வெகுஜனங்களுக்கும் எதிராக குறிவைக்கப்பட்ட ஒன்றாகும், மற்றும் அது தமிழ் மக்களுக்கு ஒரு பொறியாகும் என்று கட்சி எச்சரித்தது. 1986 ஜூனில் வட்ட மேசை மாநாட்டின் மத்தியில், இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டத்திற்காகப் பிரச்சாரம் செய்ததற்காக விஜே டயஸ், புரூட்டன் பெரெரா, ரூமன் பெரெரா ஆகிய மூன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களை பொலிஸ் கைது செய்து, ஆறு வாரங்களுக்கு தடுத்து வைத்திருந்தமை தற்செயலான ஒன்றல்ல. விடுவிக்கப்பட்ட சிறிது காலத்தில், புரூட்டன் பெரெரா புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக இளைஞர் பிரிவுத் தலைவரான விரான் பீரிசுடன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பகுதிகளும் முன்னெடுத்த பரவலான சர்வதேசப் பிரச்சாரத்தின் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தனது “அமைதி” சூழ்ச்சி மீதான எந்தவொரு விமர்சனத்தையும் பற்றிய ஐ.தே.க.யின் கூர்ந்து அறியும் திறனால்தான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அச்சுறுத்தி அமைதியாக்க செய்வதற்காக இந்த முயற்சி தூண்டிவிடப்பட்டது என்பது தெளிவு.

24-7. இந்திய இலங்கை உடன்படிக்கையானது, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க இந்திய அரசாங்கத்தின் மீதும் அதன் இராணுவத்தின் மீதும் நம்பிக்கை வைத்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அத்தனை தமிழ் ஆயுதக் குழுக்களையும் பற்றிய ஒரு அழிவுகரமான அம்பலப்படுத்தலாகும். ஒரு தனியான முதலாளித்துவ ஈழத்தை உருவாக்குவதற்கு இந்திய முதலாளித்துவத்தின் ஆதரவை பெறுவதே அவர்களது முன்னோக்காக எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆயினும், இந்திராவினதும் ராஜீவ் காந்தியினதும் அரசாங்கங்களுக்கு, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை; அவர்கள் பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாக ஆவதற்கான புது டில்லியின் குறிக்கோளை முன்நகர்த்தவே தமிழர் போராட்டத்தை சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். 1987ல், கொழும்பை நெருக்குவதற்காக அதுவே ஊக்குவித்த தமிழர் கிளர்ச்சியை நசுக்குவதற்கு இந்தியாவின் இராணுவரீதியிலான தலையீடு, இந்தியாவில் அமைதியின்மையைத் தூண்டியதுடன் தெற்காசியாவில் யுத்தத்துக்குப் பிந்திய பிற்போக்கு அரசு அமைப்பு முறையை கீழறுப்பதற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ, மற்றும் புளொட் உட்பட புது டில்லிக்கு மிக நெருக்கமான கருவிகள், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு துணை அமைப்புகளாக செயல்பட்டதுடன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவரான வரதராஜப் பெருமாள் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குக்கான மாகாண முதலமைச்சரானார். இந்திய இராணுவம் தனது சவாலற்ற கட்டுப்பாட்டை ஸ்தாபிக்க முனைந்த நிலையில், பரவலான கைதுகள், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் கொலை நடவடிக்கைகளையும் அது நாடியதால், தமிழ் மக்களை அந்நியப்படுத்தியதோடு விடுதலைப் புலிகளுடன் மோதலுக்கும் இட்டுச் சென்றது. ஆயினும், தனது போராளிகள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் கூட, விடுதலைப் புலிகள் இந்தியா மீதும் ராஜீவ் காந்தி மீதும் தமது விசுவாசத்தைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தி வந்தனர்.

24-8. இந்திய-இலங்கை ஒப்பந்தம், இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களிடையேயும் சர்வதேச புலம்பெயர் சமூகத்திடையேயும் ஒரு பரந்த அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. ஐரோப்பாவில், தங்களது அமைப்புகள் சோரம் போனதற்கான பதில்களைத் தேடிக் கொண்டிருந்த இளம் தமிழ் போராளிகள் ஏராளமாக கலந்து கொண்ட பல கூட்டங்களில் கீர்த்தி பாலசூரியா உரையாற்றினார். மிகத் தொலைநோக்குடைய பிரிவினர், அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் தொழிலாள வர்க்க நோக்குநிலையின் அடிப்படையில் மட்டுமே தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) இணைந்துகொண்டதோடு ஐரோப்பாவிலும் தெற்காசியாவிலும் அதன் வேலைகளில் பலம்வாய்ந்த பங்களிப்பை செய்தனர்.


[56]

உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் [The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, (Detroit: Labor Publications, 1988), p. 45.]