முன்னோக்கு

ஜிம்மி கார்ட்டரின் வலதுசாரி மரபியம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

100வது வயதில் மரணமடைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு (Jimmy Carter), கார்ப்பரேட் ஊடகங்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதிகளான பைடென், ட்ரம்ப், கிளிண்டன், புஷ் மற்றும் உலக முதலாளித்துவத்தின் பல தலைவர்கள், கார்ட்டரை அமைதி மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலர் என்றும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குபவர் என்றும் புகழாரம் சூட்டுவதற்கு கைகோர்த்துள்ளனர். இது, கார்ட்டருக்கு பொது புனிதர் பட்டம் வழங்குவதற்கான சந்தர்ப்பமாக, இவர்களுக்கு மாறியுள்ளது.

ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஏப்ரல் 21, 1977 வாஷிங்டனில் காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்திற்கு முன் ஆற்றல் பற்றி உரையாற்றுகிறார். பிரதிநிதிகள் சபை சபாநாயகர் தோமஸ் “டிப்” ஓ’நீல் வலதுபுறத்தில் உள்ளார். துணை ஜனாதிபதி வால்டர் மொண்டேல் இடதுபுறத்தில் உள்ளார். [AP Photo/AP file photo]

1981 ஜனவரியில் பதவியை இழந்த கார்ட்டரைப்பற்றி, அனைத்து அமெரிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், மேலும் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள், அவரது ஜனாதிபதி பதவி குறித்து எந்த நினைவையும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாக, அவ்வப்போது தூதரகப் பணிகளுடன் உலகின் ஏழ்மையான நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட (மனித குலத்திற்கான வாழ்விடம், கினியா புழு மற்றும் பிற பலவீனப்படுத்தும் நோய்களுக்கு எதிரான பிரச்சாரங்கள்) மனிதாபிமான முயற்சிகளை ஒருங்கிணைத்த அவரது ஜனாதிபதி பதவிக்கு பின்பான காலத்தைப்பற்றி, அவர்கள் ஏதாவது அறிந்திருக்கலாம்.

தொழிலாள வர்க்கத்திற்கான பிரச்சினை கார்ட்டரை வெள்ளை மாளிகையில் அவருக்குப் பின் வந்தவர்களுடன் ஒப்பிட்டு, ஒரு மனிதராக மதிப்பிடுவதல்ல. கீழ்நோக்கிய வளைகோடு சந்தேகத்திற்கிடமின்றி உள்ளது. இது, ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வீழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இது, வயதான போர்வெறியரான பைடென் மற்றும் மனநிலை பிறழ்ந்த பாசிஸ்ட் ட்ரம்பில் உச்சம் அடைந்துள்ளது.

கார்ட்டரின் ஜனாதிபதி பதவிக் கால வரலாறு குறித்த இந்த சுருக்கமான மீளாய்வின் நோக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனைத்து தலைவர்களையும் போலவே, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் நலன்களை அதன் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் பாதுகாத்த ஒரு ஜனாதிபதியைக் குறித்த ஒரு மார்க்சிச மதிப்பீட்டைச் செய்வதாகும்.

கார்ட்டரின் நான்காண்டு ஜனாதிபதி பதவிக் காலமானது, அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய மாற்றப் புள்ளியாக இருந்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தக் கொள்கைகளுடனான அதன் தொடர்பை முறித்துக் கொண்டு, தீவிரமாக வலதிற்கு நகர்ந்து கொண்டிருந்த ஜனநாயகக் கட்சியின் அரசியல் வளைவரை பாதையில் ஒரு உறுதியான மாற்றத்தை இது குறித்தது. இவை 1930 களில் ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தத்தின் கீழ் தொடங்கப்பட்டு, ட்ரூமனின் “நியாயமான ஒப்பந்தம்”, கென்னடியின் “புதிய எல்லை” மற்றும் லிண்டன் ஜோன்சனின் “மாபெரும் சமூகம்” ஆகியவற்றின் ஊடாக தொடர்ந்து, 1960 களில் வியட்நாம் போரில் படுதோல்வியில் முடிவடைந்தன.

நிக்சனுடைய நிர்வாகம், வியட்நாம் போர் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார நிலையின் ஒட்டுமொத்த சரிவால் சிதைந்து மூழ்கியதுடன், ஆகஸ்ட் 1971 இல் டாலர்-தங்க மாற்றுத்தன்மை முடிவுக்கு வந்ததில் மிகவும் அப்பட்டமாக வெளிப்பட்டது. இந்த நிலையில், நிக்சன் கூர்மையாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பினார். ஆனால், வாட்டர்கேட் ஊழலில் அவரது நிர்வாகம் சிதைந்தபோன நிலையில், ஊதியப் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்குமான முயற்சிகளை அவரால் தொடர முடியவில்லை. ஆகஸ்ட் 1974ல் நிக்சன் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதற்கான கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அவருடைய தேர்ந்தெடுக்கப்படாத துணை ஜனாதிபதியான ஜெரால்ட் ஃபோர்டு பதவிக்கு வந்தார். நிக்சனுக்கு ஃபோர்ட் மன்னிப்பு வழங்கியதும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர் தோல்வியுற்றதால், ஆளும் உயரடுக்கு குறைந்தபட்சம் தற்காலிகமாக, சில ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடிய ஒரு மாற்றீட்டைத் தேட முயற்சித்து வந்தது.

நடுவில் இருக்கும் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு பக்கவாட்டில் இஸ்ரேலிய பிரதமர் மெனசெம் பெகின் மற்றும் எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சதாத் உள்ளனர். 1978 செப்டம்பரில் மேரிலாந்தில் உள்ள கார்ட்டரின் கேம்ப் டேவிட் உச்சி மாநாட்டில் மத்திய கிழக்கு அமைதி நகர்வுகள் குறித்த விவாதங்களின் முடிவில், செய்தியாளர்களை இவர்கள் சந்திக்கின்றனர்.  [AP Photo/AP file photo]

நிக்சனின் இராஜினாமாவுக்கு இட்டுச் சென்ற வாட்டர்கேட் ஊடுருவல் மற்றும் மூடிமறைப்பால் மட்டுமல்ல, மாறாக சட்டவிரோத உளவுபார்ப்பு, ஆத்திரமூட்டல் மற்றும் கொலை குறித்த FBI இன் COINTELPRO திட்டம் போன்ற அரசாங்கத்தின் குற்றத்தன்மை குறித்த ஒட்டுமொத்த வரிசையான அம்பலப்படுத்தல்களாலும் மத்தியிலிருந்த கூட்டாட்சி அரசாங்கம் பரவலாக மதிப்பிழந்து போனது. சர்ச் கமிட்டி (Church Committee) விசாரணையில் அம்பலப்படுத்தப்பட்ட CIA மேற்கொண்ட படுகொலைகள், ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டங்கள் ஆகியன, சிலியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் படுகொலை செய்யப்பட்ட இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற குற்றங்களுடன் அமெரிக்க அரசாங்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பல தசாப்த கால போர்கள், ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் படுகொலைகளுக்குப் பின்னர், மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது, இப்போது “மனித உரிமைகளின்” பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது என்ற நகைப்புக்கிடமான பாசாங்குடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரத்தக்கறை படிந்த முன்வரலாற்றை புதுப்பிப்பதே கார்ட்டரின் பணியாக இருந்தது. அதே நேரத்தில், நிக்சன் நிர்வாகத்தின் வெளிப்படையான குற்றவியல் மற்றும் ஊழலை அடுத்து, கார்ட்டர் பக்தி மற்றும் தனிப்பட்ட அடக்கத்தின் ஒரு பிம்பத்தை முன்வைத்து, “உங்களிடம் ஒருபோதும் பொய் சொல்லாத” அரசாங்கத்தை ஸ்தாபிக்க உறுதியளித்தார்.

1974 கடைசியில், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு தன் வேட்புமனுவை கார்ட்டர் அறிவித்த நேரத்தில், அவர் அமெரிக்க மக்களுக்கு முற்றிலும் அறியப்படாத நபர் என்று விவரித்தால் அது மிகையாகாது. கார்ட்டர், “என்னுடைய பார்வை என்ன?” என்ற பிரபலமான வினாடிக்கு வினா நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், போட்டியாளர்கள் யாரும் அவரை ஜோர்ஜியாவின் ஆளுநராக அடையாளம் காண முடியவில்லை என்றும் ஒரு முன்னாள் உதவியாளர் கார்ட்டரைப்பற்றி நினைவு கூர்ந்தார்.

ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், பிப்ரவரி 20, 1978 அன்று டெலாவேர், வில்மிங்டனில் உள்ள படுவா அகாடமியில் நிதி திரட்டும் வரவேற்பு நிகழ்ச்சியில் செனட்டர் ஜோசப் ஆர் பைடெனுடன் (ஜனநாயகக் கட்சி-டெலாவேர்) உரையாடிக் கொண்டிருக்கிறார். [AP Photo/Barry Thumma]

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் உயர்த்தப்பட்டமை ஆளும் வட்டாரங்களில் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சியின் விளைபொருளாகும். உள்நாட்டில் நிதியியல் சிக்கன நடவடிக்கைகள், வெளிநாடுகளில் சோவியத்-விரோத இராணுவவாதம் என நிதியியல் உயரடுக்கால் கோரப்பட்ட கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதற்காக வெறித்தனமான கம்யூனிச விரோத பேராசிரியர் பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கியால் வழிநடத்தப்பட்டு, சேஸ் மன்ஹாட்டன் வங்கியாளர் டேவிட் ராக்பெல்லரால் நிதியளிக்கப்பட்ட முத்தரப்பு ஆணைக் குழுவினரால் கார்ட்டர் அழைக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கார்ட்டருக்கு வெளியுறவுக் கொள்கையின் குருவாக வந்த பிரிஜேஜின்ஸ்கி, பின்னர் கார்ட்டரின் பதவிக்காலம் முழுவதிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை —முன்னர் ஹென்றி கிஸ்ஸிங்கர் வகித்திருந்தார்— வகித்து வந்தார். அங்கு, அவர் மூன்றாம் உலகப் போரை நோக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றைய உந்துதலின் முன்னோடியாக இருந்த உலகெங்கிலுமான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.

பனிப்போரை முடிந்தவரை ஆக்ரோஷமாக நடத்துவதே பிரிஜேஜின்ஸ்கியின் மையக் குவிப்பாக இருந்தது. ஆப்கானிஸ்தானை “ரஷ்யாவின் வியட்நாமாக” மாற்றும் திட்டத்தையும், தென்கிழக்கு ஆசியாவில் வாஷிங்டனால் பாதிக்கப்பட்ட அளவில் ஒரு மூலோபாய பேரழிவையும் உருவாக்கி, சோவியத் யூனியனின் உள்நாட்டு ஸ்திரத்தன்மையை குழிபறிப்பிற்கு உட்படுத்தும் திட்டத்தை உருவாக்கி கொடுத்தவர் பிரிஜேஜின்ஸ்கி ஆவர்.

காபூலில் சோவியத் சார்பு அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்ட இஸ்லாமிய கெரில்லாக்களுக்கு அமெரிக்க இராணுவ உதவி இறுதியில் 1979 இல் ஆப்கானிஸ்தான் மீதான பிற்போக்குத்தன சோவியத் படையெடுப்பைத் தூண்டியது. இந்த நிகழ்வுப்போக்கு, கடந்த தசாப்தத்தில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தூண்டுவதற்கு நேட்டோவின் விரிவாக்கத்தைப் பயன்படுத்திய அமெரிக்க முயற்சிகளுக்கு மிகவும் ஒத்ததாகும்.

கார்ட்டர்-பிரிஜேஜின்ஸ்கி வெளியுறவுக் கொள்கைதான், சவூதியின் பல மில்லியன்களுக்கு உடமையாளரான ஒசாமா பின் லேடனை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வந்து அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை பெற்றெடுத்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு கொடுக்க வேண்டிய ஒரு சிறிய விலைதான் “ஒரு சில கிளர்ந்தெழுந்த முஸ்லிம்கள்” என்று பிரிஜேஜின்ஸ்கி பின்னர் இதனைக் குறிப்பிட்டார். இந்த சோவியத்-விரோத ஒருங்குவிப்பின் பாகமாக, கார்ட்டர் சீனாவுடனான நிக்சன்-கிஸ்ஸிங்கர் நல்லிணக்கத்தை நிறைவு செய்தார். அப்போது, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்ட மாஸ்கோவுக்கு எதிராக பெய்ஜிங்கைப் பயன்படுத்துவதற்காக சீனாவுக்கு முழு இராஜாங்க அங்கீகாரத்தை கார்ட்டர் வழங்கியிருந்தார்.

சமீப நாட்களில், 1979 கேம்ப் டேவிட் உடன்படிக்கைக்கு தரகர் கார்டரின் பங்கு பற்றிய செய்தி ஊடகங்களில் அதிகம் உள்ளது. இது, எகிப்துடன் “சமாதான” உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம், இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான இராணுவ அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வந்தது. இது, பாலஸ்தீனிய மக்கள் மீது தடையற்ற தாக்குதல்களை நடத்த இஸ்ரேலுக்கு சுதந்திரத்தை கொடுத்தது. இந்தப் பாதை நேரடியாக மேற்குக் கரையில் பாசிச யூதக் குடியேற்றக்காரர்கள் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கும் காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கும் இட்டுச் சென்றது.

பாரசீக வளைகுடா எண்ணெய் வயல்களுக்கு எந்த வெளி இராணுவ அச்சுறுத்தல் வந்தாலும், அமெரிக்க இராணுவத் தலையீடு தேவைப்படும், அமெரிக்காவிற்கு ஒரு பெரிய தேசிய பாதுகாப்பு சவாலாக இது எடுத்துக் கொள்ளப்படும் என்ற கார்ட்டரின் அறிவிப்பு பற்றி அதிகம் கூறப்படவில்லை.

“கார்ட்டரின் கோட்பாடு” என்பது, ஈரானியப் புரட்சிக்கு அமெரிக்காவின் பிரதிபலிப்பாக இருந்தது. இது, மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் முக்கிய அமெரிக்க கூட்டாளியாக இருந்த ஷாவின் இரத்தத்தில் நனைந்த ஆட்சியை தூக்கியெறிந்தது. ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ் தொடங்கிய 1990-91 பாரசீக வளைகுடாப் போர் மற்றும் அவரது மகன் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நடத்திய 2003 ஈராக் மீதான ஆக்கிரமிப்பு உட்பட அப்பிராந்தியத்தில் அனைத்து எதிர்கால அமெரிக்க போர்களுக்கும் இந்த கோட்பாடு களம் அமைத்துக் கொடுத்தது.

அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் தற்போதைய குவிமையத்தை பல வழிகளில் முன்கூட்டியே கொண்டிருந்த இந்த திட்டங்கள் அனைத்தும் புரட்சிகர எழுச்சிகளால் தகர்க்கப்பட்டன. ஈரானில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொசாடெக் அரசாங்கத்தை 1953 இல் சி.ஐ.ஏ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலம் தூக்கியெறியப்பட்டதில் இருந்து அந்நாட்டை ஒரு முழுமையான முடியாட்சியாக ஆட்சி செய்து வந்திருந்த ஷாவின் ஆட்சியை தூக்கியெறிந்த ஈரானிய புரட்சியின் மூலம் இந்த திட்டங்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த அடி விழுந்தது. ஈரானில் ஷாவின் இரகசிய போலீசான சாவாக் (Savak), சித்திரவதை மற்றும் படுகொலைக்கான தாரக மந்திரமாக மாறியிருந்தது.

ஷா என்று வரும்போது கார்ட்டர் தன்னுடைய மனித உரிமைகள் பற்றிய வனப்புரையை ஒதுக்கி வைத்தார். ஏனெனில், இஸ்ரேலுடன் சேர்ந்து மத்திய கிழக்கில் அமெரிக்காவின் போலீஸ்காரராக செயற்பட்டுவந்த சர்வாதிகாரி ஷா, அவருடைய இராணுவ மற்றும் எண்ணெய் சக்தியை ஒரு முக்கிய ஏகாதிபத்திய கூட்டாளிக்காக பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு இழிந்த சம்பவத்தில், 1977 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று தெஹ்ரானில் ஷாவினால் கார்டருக்கு விருந்து அளிக்கப்பட்டது. “ஷாவின் மகத்தான தலைமையின் காரணமாக ஈரான், உலகின் மிகவும் சிக்கலான பகுதிகளில் ஒன்றில் ஸ்திரத்தன்மை கொண்ட தீவாக உள்ளது” என்று கார்ட்டர் அறிவித்தார். மேலும், “உங்கள் தலைமைக்கும், உங்கள் மக்கள் உங்கள் மீது காட்டும் மரியாதைக்கும், அபிமானத்திற்கும், அன்புக்கும், இது உங்களுக்குச் செய்யும் மாபெரும் மரியாதையாகும்” என்று கார்ட்டர் அங்கு குறிப்பிட்டார். ஒரே வருடத்தில், ஷாவிற்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்தவுடன், அவர் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

அமெரிக்க அரசாங்கத்தால் 1979 பெப்ரவரியில் நடந்த ஈரானியப் புரட்சியையோ அல்லது அதே ஆண்டில் சிறிய நாடான நிகரகுவாவில் இடம்பெற்ற சான்டினிஸ்டா புரட்சியையோ நசுக்க முடியவில்லை. பனாமாவில் அதிகரித்த தேசியவாத அழுத்தங்களால் கார்ட்டர் 1999 வாக்கில், பனாமா கால்வாய் பகுதியை திருப்பி ஒப்படைப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டார். வியட்நாமை அடுத்து, அமெரிக்க இராணுவ சாகசங்களுக்கு உள்நாட்டில் மக்களின் எதிர்ப்பை ஒட்டி இவை தவிர்க்க முடியாத பின்வாங்கல்களாக இருந்தன. ஆனால், இவை குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பிரிவால் கண்டிக்கப்பட்டதோடு, 1980 ம் ஆண்டில் ரொனால்ட் றேகனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அடிப்படையாயின.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பார்வையில், ஈரானுடனான பணயக் கைதிகள் தொடர்பான மோதலே, இந்த முனையில் இறுதி அடியாக இருந்தது. இது பிரிஜேஜின்ஸ்கி மற்றும் கிஸ்ஸிங்கர் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷாவை “மருத்துவ சிகிச்சைக்காக” அமெரிக்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற முடிவால் தூண்டப்பட்டது.

இதன்பின், ஈரானிய மாணவர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு அமெரிக்கப் பணியாளர்களைப் பிடித்தனர். இந்த பிணைக் கைதிகளுக்கு ஈடாக, ஷா ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும், அதையொட்டி அவர் ஈரானிய மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பாரிய படுகொலை மற்றும் பிற குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிகள் தேசிய பாதுகாப்புக் கொள்கை குறித்த இரண்டு முக்கியமான முடிவுகளுக்கு கார்ட்டரை இட்டுச் சென்றது. முதலாவதாக, ஈரானிய பாலைவனத்தில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் முடிவடைந்த பணயக்கைதிகளை மீட்கும் முயற்சி தோல்வியுற்றதை அடுத்து, கூட்டு சிறப்பு நடவடிக்கைக் கட்டளையகம் (JSOC) உருவாக்கப்பட்டது. இது, அனைத்து சூழல்களிலும் செயல்படக் கூடிய முதன்மை சிறப்பு நடவடிக்கை கடற்படை சீல்கள், விரைவான திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளும் இராணுவ ரேஞ்சர்கள் மற்றும் பிற உயரடுக்கு கொலைகார படைப் பிரிவுகளை உள்ளடக்கிய பயங்கரவாத எதிர்ப்பு படைகளைக் கொண்டிருந்தது.

இரண்டாவதாக, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்தின் தொடக்கமாகும். இது, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கின் புறக்கணிப்பு முதல் ஒரு பாரிய மூலோபாய ஆயுதக் குவிப்பு வரையான, ரீகன் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளை முன்னறிவித்தது. நியூ யோர்க் டைம்ஸ் அவரது இரங்கல் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டது போல, “சமாதான தூதுவர்” கார்ட்டரின் செயற்பாடு இவ்வளவுதான்.

உள்நாட்டுக் கொள்கையில், கார்ட்டரின் கீழ் தொடங்கப்பட்ட மாற்றங்கள் வெளியுறவுக் கொள்கையில் இருந்ததை விட பல வழிகளில் இன்னும் அதிக விளைவுகளைக் கொண்டிருந்தன. இருப்பினும், இவை இன்னும் சுருக்கமாக கூறப்பட வேண்டும். ஒரு நிதிய பழமைவாதியான கார்ட்டர், அத்தகைய பிரச்சினைகளில் ஜனநாயகக் கட்சியினரை விட குடியரசுக் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக உதவியாளர்களிடம் கூறினார்.

1960 களில் ஸ்தாபிக்கப்பட்ட மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவி போன்ற சமூக திட்டங்களின் எந்தவொரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தையும் தடுத்துவந்த கார்ட்டரின் நிர்வாகம், “வறுமைக்கு எதிரான போர்” என்ற அனைத்துப் பாசாங்குகளையும் கைவிட்டது.

அதற்கு பதிலாக, விமானச் சேவை நிறுவனங்கள், சரக்கு ஊர்தி தொழில்துறை, இரயில் பாதைகள், இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் வினியோகம் தொடங்கி பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் மீதான நெறிமுறைகளைத் தளர்த்துவது உட்பட பாரம்பரிய, வலதுசாரி “சுதந்திர சந்தை” பொருளாதாரத்தை கார்ட்டர் தழுவிக் கொண்டார். இதில் அவர், 1979 இல் பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த மார்கரெட் தாட்சர், இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்தன (1977), மற்றும் உலகெங்கிலுமான ஏனைய ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடிக்கு பிரதிபலித்த அதே பாதையையே பின்பற்றினார்.

1973-74 அரபு எண்ணெய் தடையாணையை அடுத்து, அமெரிக்கா அதன் எரிசக்தி செலவுகளைக் குறைப்பது மற்றும் எண்ணெய் இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான மூலோபாய தேவையை வலியுறுத்தி, கார்ட்டர் நிர்வாகம் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மீதான நிலக்கரி நிறுவனங்களின் தாக்குதலுக்கு சார்பாக நின்று கொண்டது. இது, ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்களின் 160,000 க்கும் அதிகமான உறுப்பினர்களின் 111 நாள் வேலைநிறுத்தத்தைத் தூண்டியது. மார்ச் 1978 இல், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அதன் மூன்றாவது மாதம் முடிவடைந்த நிலையில், கார்ட்டர் தொழிலாளர்-விரோத டாஃப்ட்-ஹார்ட்லி சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை சுரங்கத் தொழிலாளர்கள் மீறினர். தேசிய பாதுகாப்புப் படையை அழைத்த பின்னரும் கூட கார்ட்டரால் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. UMW மற்றும் AFL-CIO தொழிற்சங்கங்களின் தலைவர்களின் காட்டிக்கொடுப்புகளினால் மட்டுமே இறுதியாக ஒரு உடன்பாட்டைத் திணித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அமெரிக்காவில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான தொழிலாளர் கழகம் (Workers League) என்று அப்போது அழைக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கம், கார்ட்டர் நிர்வாகத்தின் ஆபத்துகள் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரிப்பதற்காக ஆற்றலுடன் போராடியது. குறிப்பாக, நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது, கட்சியின் செய்தித்தாளான புல்லட்டின், நிலக்கரி வயல்களில் பரவலாக விநியோகிக்கப்பட்டது.

ஒரு UMW தொழிற்சங்க அதிகாரியின் கூற்றுப்படி, வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில், ஜனாதிபதி புல்லட்டின் பத்திரிகையின் நகலைக் காட்டி, அதில் கார்ட்டரும் நிலக்கரி நிறுவனங்களும் திணிக்க முயன்று கொண்டிருந்த ஒப்பந்த முன்மொழிவுகளின் விவரங்கள் இருப்பதாக கோபத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு புல்லட்டின் பத்திரிகை மிகவும் செல்வாக்கு செலுத்தியது.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஒட்டுமொத்தமாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கார்ட்டரின் நீண்ட இரங்கல் குறிப்புகளில், புகழ்ச்சி செய்திகளின் தொனியைத் தவிர, நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் டாஃப்ட்-ஹார்ட்லி சட்டத்தின் தோல்வியுற்ற அழைப்புகள் குறித்து எந்தவொரு குறிப்பும் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 1977-78 வேலைநிறுத்தப் போராட்டத்தின் அனுபவம், தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகளை, குறிப்பாக அப்பலாச்சியா முழுவதிலும், ஜனநாயகக் கட்சியிலிருந்து அந்நியப்படுத்துவதிலும், மற்றும் பெருநிறுவன ஆளும் உயரடுக்கின் தரப்பில் கார்ட்டரின் மீதான அரசியல் நம்பிக்கையை இழந்ததிலும் தீர்க்கமானதாக இருந்தது.

கார்ட்டரின் கீழ் வலது நோக்கிய மாற்றம், சுரங்கத் தொழிலாளர்களை நசுக்குவதில் அவர் தோல்வியுற்றதை அடுத்து விரைவுபடுத்தப்பட்டது. வோல் ஸ்ட்ரீட் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தை அடக்கும் நடவடிக்கைகளைக் கோரியதுடன், 1930 களில் இருந்து 1970 கள் வரை அமெரிக்கத் தொழிலாளர்கள் பெற்ற சமூக நலன்கள் மீது நேரடித் தாக்குதலை சாத்தியமாக்கியது. இந்த சமூகத் தாக்குதலுக்கு தலைமை தாங்க, வங்கியாளர் போல் வோல்க்கரை ஆகஸ்ட் 1979ல் பெடரல் ரிசர்வ் வாரியத்தின் தலைவராக கார்ட்டர் நியமித்தார். வோல்க்கர் வட்டி விகிதங்களை கேள்விப்பட்டிராத அளவிற்கு 20 சதவிகிதத்திற்கு உயர்த்தி, அமெரிக்கப் பொருளாதாரத்தை மந்த நிலைக்குத் தள்ளினார். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்களில் விலைவாசி பணவீக்கம், குறிப்பாக மத்திய கிழக்கு நெருக்கடிகளால் உந்தப்பட்டு, விரைவாக அதிகரித்து வரும் வேலையின்மையுடன் இணைந்து கொண்டது.

அதே நேரத்தில் கிறைஸ்லர் பெருநிறுவனத்தை, மத்தியிலுள்ள கூட்டாட்சியின் பிணை எடுப்புக்காக, பெருநிறுவனவாதத்தின் முதல் முக்கிய நடவடிக்கையாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தை கார்ட்டர் இணைத்துக்கொண்டார். UAW தொழிற்சங்கத் தலைவர் டக்ளஸ் பிரேசர் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவிற்கு கொண்டுவரப்பட்டார். மேலும் தொழிற்சங்கம், “வேலைகளைக் காப்பாற்றுதல்” என்ற மறைப்பின் கீழ் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற சலுகைகளில் வெட்டுக்களை திணித்தது. இதுவே, தொழிற்சங்கங்கள் எத்தனை மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் அதிகாரத்துவமயப்பட்டவையாகவும் இருந்தாலும், அவை தொழிலாளர் அமைப்புகள் என்பதிலிருந்து, இன்று அவை பெருவணிகங்களுக்கான தொழில்துறை பொலிஸ் படையாக உருமாறுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது.

இந்த செயல்முறையின் போக்கில், கார்ட்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கமான PATCO-வை அடித்து நொறுக்குவதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு பச்சைக்கொடி காட்டினார். என்றாலும், 1980 தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்கும் வகையில், தொழிற்சங்கத்தின் உண்மையான அழிவு ரீகனால் மேற்கொள்ளப்பட்டது. இது 1980கள் முழுவதிலும் உடைந்த மற்றும் காட்டிக்கொடுக்கப்பட்ட வேலைநிறுத்தங்களின் தொழிலாளர்-விரோத வெறியாட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்தது.

உலகளவிலும், அமெரிக்காவிற்குள்ளும் வர்க்கப் போராட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நான்கு ஆண்டுகளின் இந்த வரலாறுதான் கார்ட்டர் நிர்வாகம் குறித்த எந்தவொரு மதிப்பீட்டையும் தெரிவிக்க வேண்டும். இந்த திறனாய்வு, கார்ட்டர் ஜனாதிபதியாக இருந்தபோது செய்ததைப் போலவே, இன்று அமெரிக்க தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மையமான அரசியல் பிரச்சினையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அதாவது, ஜனநாயகக் கட்சி மற்றும் ஒட்டுமொத்த பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான இருகட்சி அமைப்புமுறையின் அரசியல் தளைகளில் இருந்து முறித்துக் கொண்டு, சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக, அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பது அவசர அவசியம் ஆகும்.

Loading