முன்னோக்கு

எலோன் மஸ்க் உலகளாவியளவில் பாசிச வலதுசாரிகளை ஊக்குவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ் (X) ஆகியவற்றின் உரிமையாளருமான எலோன் மஸ்க், தனது பிரமாண்டமான செல்வத்தை - கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர் - உலகெங்கிலும் உள்ள பாசிச சக்திகளுக்கு நிதியளிக்கவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்துகிறார்.

இந்த வார தொடக்கத்தில் புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் மார்-ஏ-லாகோ மாளிகை வளாகத்தில் நிக் கேண்டி (Nick Candy), எலோன் மஸ்க் மற்றும் நைஜல் ஃபராஜ் (Nigel Farage). Reform UK ஆல் வெளியிடப்பட்ட புகைப்படம் [Photo: Stuart Patterson/PA]

கடந்த வெள்ளியன்று, மஸ்க் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்களில், ஜேர்மனியின் நவ-நாஜி மாற்றீடு (AfD - Alternative für Deutschland) கட்சிக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். மேலும், “AfDயால் மட்டுமே ஜேர்மனியைக் காப்பாற்ற முடியும்” என்று X தளத்தில் பதிவிட்ட ஓர் அறிக்கையில் எலான் மஸ்க் அறிவித்தார்.

சான்சிலர் பதவிக்கான AfD வேட்பாளர் ஆலிஸ் வைடெல் (Alice Weidel), “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி!, சோசலிஸ்ட் [முன்னாள் அதிபர் ஏஞ்சலா] மேர்க்கெல் எமது நாட்டை அழித்தார், “சோவியத் ஐரோப்பிய ஒன்றியம்” ஜேர்மனியையும் அழித்துக் கொண்டிருக்கிறது என்று ஆர்வத்துடன் பதிலளித்தார்.

11 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்ட AfD, ஒரு தீய குடியேற்ற எதிர்ப்பு மற்றும் அகதிகளுக்கு எதிரான கட்சியாகும். தூரிங்கியா மாநிலத்தின் கட்சியின் தலைவரான பியோர்ன் ஹொக் (Björn Höcke) நாஜி சுலோகங்களைப் பயன்படுத்தியதற்காக ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஆவர். ஒரு நீதிமன்ற தீர்ப்பின்படி, அவரை ஒரு பாசிசவாதி என்று அழைக்க முடியும். ஹொக்கும் ஏனைய முன்னணி அங்கத்தவர்களும் நாஜிக்களின் மூன்றாவது பேரரசின் குற்றங்களைக் குறைத்துக் காட்டியுள்ளனர். மேலும், யூத இனப்படுகொலை மீதான “வெட்கக்கேடான” ஒரு கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளனர். 2018 இல், AfD, தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட் (Alexander Gauland), ஹிட்லர் மற்றும் நாஜிக்களை “ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றில் வெறும் பறவையின் ஒரு துளி” என்று குறிப்பிட்டார்.

ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் கட்சிகள், குறிப்பாக சமூக ஜனநாயகக் கட்சி (SPD - Social Democratic Party) மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU - Christian Democratic Union) மீதான பரந்த வெறுப்பைச் சாதகமாக்கிக் கொண்டு, AfD சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. செப்டம்பரில், நாஜி காலத்திற்குப் பின்னர், தூரிங்கியாவில் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் அதிவலது கட்சியாக AfD ஆனது.

ஜேர்மன் அரசியலில் மஸ்க்கின் தலையீடு, இந்த வாரம் ட்ரம்பின் மார்-அ-லாகோ ரிசார்ட்டில் பிரிட்டனின் பாசிசவாத சீர்திருத்த ஐக்கிய இராச்சிய (Reform UK ) கட்சியின் தலைவர் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage) மற்றும் கட்சியின் பொருளாளர் நிக் கேண்டி (Nick Candy) ஆகியோருடன் நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து வந்தது. ஃபாராஜின் கூற்றுப்படி, அவர்கள் “மேற்கைக் காப்பாற்ற” மஸ்க்குடன் கலந்துரையாடினர். சீர்திருத்த ஐக்கிய இராச்சிய கட்சியின் இரண்டு தலைவர்களும் அக்கூட்டத்தைத் தொடர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டனர், “ட்ரம்ப் கள விளையாட்டு குறித்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம், மற்ற விடயங்கள் மீது தொடர்ந்து விவாதங்கள் நடத்துவோம்,” என்று அறிவித்தனர்.

மஸ்க் 100 மில்லியன் பவுண்டுகள் (127 மில்லியன் டாலர்) நன்கொடையாக தனது கட்சிக்கு வழங்க முடியும் என்பது ஃபரேஜுக்கு உடனடி அக்கறையாக இருந்தது. இது நடைமுறைக்கு வந்தால், இங்கிலாந்திற்கு வழங்கப்படும் மிகப்பெரிய அரசியல் நன்கொடையாக இருக்கும்.

மஸ்க் நட்பு கொண்ட மற்ற பாசிசவாதிகள் மற்றும் நவ-நாஜிக்களில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் (Giorgia Meloni) ஒருவராவர். மெலோனி 2022 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மஸ்க் பலமுறை அவரைச் சந்தித்துள்ளார். மெலோனியின் இத்தாலி சகோதரர்கள் கட்சியும் (Brothers of Italy) அதன் தோற்றமும் முசோலினியில் இருந்து வருகிறது.

மேற்கத்திய அரைக்கோளத்தில் மஸ்க் ஆர்ஜென்டினாவின் அதிவலது ஜனாதிபதி ஜேவியர் மிலேயை (Javier Milei) ஆதரித்துள்ளார். அவரை மஸ்க் மற்றும் ட்ரம்ப் இருவரும் இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைக்கு ஒரு முன்மாதிரியாக உயர்த்திப் பிடித்துள்ளனர். பொதுச் சேவைகள், தொழிலாளர் பாதுகாப்புகள் மற்றும் பெருநிறுவன சுரண்டல் மீதான அனைத்து விதிமுறைகளையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட “ மிலேய் மாதிரியை” மஸ்க் பாராட்டியுள்ளார்.

மஸ்க் பாசிச வலதுசாரிகளை ஊக்குவிப்பது, அவரது சொந்த அரசியல் சார்புகளுடன் ஒத்திருக்கிறது. இது நிறவெறி தென்னாபிரிக்காவில் அவரது குடும்ப பின்னணியில் இருந்து செல்கிறது. ட்ரம்பின் பிரதான நிதி மற்றும் அரசியல் ஆதரவாளராக மேலெழும் நிகழ்முறையில், மஸ்க் “டார்க் மாகா (Dark MAGA)” என்று அவர் அழைத்ததை தழுவிக் கொண்டுள்ளார். அதேவேளையில் அதிவலது மற்றும் நவ-நாஜி தனிநபர்கள் மற்றும் குழுக்களை திட்டமிட்டு ஊக்குவிப்பதற்காக X டுவிட்டரில் அவரது உரிமையைப் பயன்படுத்துகிறார்.

உலகெங்கிலும் அதிவலதின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மஸ்க் வகிக்கும் மத்திய பாத்திரம் இன்னும் அடிப்படையான அரசியல் புள்ளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: அதாவது, பில்லியனர்கள் ஜனநாயகத்திற்கு நச்சுத்தன்மை கொண்டவர்கள். முதலாளித்துவ செல்வந்த தட்டுக்கள் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு செல்வ வளத்தை குவித்துள்ளன. உலகின் பத்து மிகப் பெரிய செல்வந்தர்கள் —அவர்களில் ஒன்பது பேர் அமெரிக்கர்கள்— இப்போது கூட்டாக 2.1 ட்ரில்லியன் டாலர்களை வைத்திருக்கின்றனர். இது பெரும்பாலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும்.

உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, அமெரிக்காவில், ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது, சமூக யதார்த்தத்திற்கு பொருத்தமான விதத்தில் அரசியல் வடிவங்கள் வன்முறையாக மறுஅணிதிரண்டு வருவதை குறிக்கிறது. அமெரிக்காவில் ஜனவரி 20ம் தேதி பதவிக்கு வரவிருக்கும் அரசாங்கம், தன்னலக்குழுவால் மற்றும் அவர்களுக்காக அமைக்கப்பட்டு, சமூக வேலைத்திட்டங்களை அழிக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை பாரியளவில் அதிகரிக்கும் கொள்கையில் உறுதிபூண்டுள்ள ஒரு அரசாங்கமாகும்.

ஆனால், இதே நிகழ்ச்சிப்போக்குகள் ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் வெளிப்படையாக உள்ளன. முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு செல்வந்தர்களை பிணை எடுக்க டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்துள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் ஒரு புதிய உலகளாவிய போரைத் தொடங்கியுள்ளன. இதற்கு சமூகம் முழுவதையும் இராணுவவாதத்திற்கு அடிபணியச் செய்வது அவசியமாகிறது. இதன் அரசியல் விளைவு பாசிசத்தை நோக்கி திரும்புவதாகும்.

அதிவலதின் வளர்ச்சியானது, சர்வாதிகாரம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் மீதான ஒரு தாக்குதலுக்கான பரந்த மக்கள் ஆதரவால் உந்தப்படவில்லை. மாறாக, அதிதீவிர வலது நவ-பாசிச கட்சிகள் பின்வருவனவற்றில் இருந்து ஆதாயமடைய முடிகிறது 1) முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் கணிசமான பிரிவுகளின் ஆதரவு; மற்றும் 2) அரசியல் ஸ்தாபகத்திற்குள் பரந்த வெகுஜனங்களின் நலன்களின் எந்த வெளிப்பாடும் இல்லாமை. அதிவலதை ஊக்குவிப்பதற்கான பெயரளவிலான “இடது” கட்சிகளின் விடையிறுப்பு எதிர்ப்பு அல்ல, மாறாக அதற்கு தகவமைத்துக் கொள்வதும் சரணடைதலும் ஆகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகள் மீதான ஒரு நேரடித் தாக்குதல் அவசியப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் வெள்ளியன்று குறிப்பிட்டதைப் போல, “மஸ்க் தனது செல்வவளத்தை பாசிசவாத தலைவர்களுக்கும் அவர்களது கட்சிகளுக்கும் நிதியாதாரம் வழங்க பயன்படுத்தியமையானது, ‘முதலாளித்துவவாதிகளின் தனித்தனி குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்’ நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி எழுப்பிய கோரிக்கையின் பொருத்தத்திற்கு சாட்சியமளிக்கிறது.”

ட்ரொட்ஸ்கி எழுதினார், “சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் சோசலிச வேலைத்திட்டம், அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக தூக்கிவீசி அதன் பொருளாதார மேலாதிக்கத்தைக் கலைப்பது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்போதைய இடைமருவு காலகட்டத்தின் போது, தேசிய உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத தொழில்துறையின் பல முக்கிய கிளைகளை அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் ஒட்டுண்ணித்தனமான குழுவை பறிமுதல் செய்வதற்கான கோரிக்கையை முன்னெடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கக் கூடாது.”

மஸ்க் விஷயத்தில், சந்தர்ப்பம் நிச்சயமாக உத்தரவாதம் அளிக்கிறது. மஸ்க் மற்றும் சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாதத்தை ஊக்குவிப்பதற்கான அவரது உலகளாவிய சூழ்ச்சிக்கு தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பானது, மில்லியன் கணக்கான மக்களை சுரண்டுவதன் மூலமாக கட்டியெழுப்பப்பட்ட அனைத்து முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்துடன் சேர்த்து அவரது செல்வவளத்தைப் பறிமுதல் செய்வதற்கான போராட்டமாக இருக்க வேண்டும். மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு அதில்தான் தங்கியுள்ளது.

Loading