முன்னோக்கு

சிரியாவுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய-துருக்கிய தாக்குதலை பப்லோவாத அரசியல் ஏமாற்றுக்காரர்கள் பாராட்டுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அல் கொய்தாவுடன் இணைந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆயுதக்குழு சிரியாவை கைப்பற்றியதானது, ஊழல் நிறைந்த நடுத்தர வர்க்க பப்லோவாத கட்சிகளின் உற்சாகமான கொண்டாட்டங்களை சர்வதேச அளவில் தூண்டியுள்ளது. 1953 இல் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட மைக்கேல் பாப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான போக்கின் வழித்தோன்றல்கள் அல்லது கூட்டாளிகளான இந்த அமைப்புகள், ஏகாதிபத்தியத்தின் செய்தித் தொடர்பாளர்களாக செயல்பட்டு வருகின்றன. சிரியாவில் ஏறக்குறைய 14 ஆண்டுகால அமெரிக்க-நேட்டோ போரை ஒரு ஜனநாயகப் புரட்சியாக அவர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.

சிரியாவின் பழைய சுவர் நகரமான டமாஸ்கஸில் உள்ள உமையாத் மசூதியின் முற்றத்தில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) இன் கொடியை முகமூடி அணிந்த நபர் ஒருவர் எடுத்துச் செல்கிறார். செவ்வாய் கிழமை.

சிரியாவில் கட்டவிழ்ந்து வருவது ஒரு புரட்சியல்ல. மாறாக, அந்நாட்டை பிற்போக்குத்தனமான, ஏகாதிபத்தியம் தலைமையிலான சக்திகளின் துண்டாடுதல் ஆகும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி வந்த சிரிய அரசு தற்போது இல்லாமல் போய்விட்டது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகியவை இந்தப் பிராந்தியத்தில், அவற்றின் நலன்களை ஈவிரக்கமின்றி பின்தொடர்கின்றன. வாஷிங்டனும் இஸ்ரேலிய இராணுவமும் சிரிய இராணுவத் தளங்களை அழிக்க ஒரு பாரிய குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. சன்னி இஸ்லாமியவாத HTS கொலைப் படைகள் சிறுபான்மை ஷியா அலவைட்டுக்கள் மீதான குறுகிய மதவெறி கொலைகளின் காணொளிகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால், இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு, காஸாவில் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையையும் சிரியா துண்டாடப்படுவதையும் பார்த்து, “நாங்கள் மத்திய கிழக்கின் முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று பெருமைபீற்றும் போது, போலி-இடதுகளும் பப்லோவாத கட்சிகளும் இதற்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளன.

“அசாத் வம்சத்தின் முடிவு, சிரியாவிலுள்ள மக்கள் மற்றும் அங்குள்ள சிறுபான்மையினரின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் நீதிக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று பிரெஞ்சு பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA - New Anti-capitalist Party) எழுதியதுடன், “அவரது ஆட்சியின் முடிவில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.

இலத்தீன் அமெரிக்காவின் மொரேனோவாத (Morenoite) போக்கான சர்வதேச தொழிலாளர் கழகம்-நான்காம் அகிலம் (LIT-CI : International Workers League-Fourth International) என்ற அமைப்பு “13 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சர்வாதிகாரத்தை சிரிய புரட்சி தோற்கடித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இதன் போட்டி அமைப்பான தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியம்-நான்காம் அகிலம் (UIT-CI : International Unity of Workers-Fourth International) “சிரிய மக்களுக்கும் இந்த முதல் புரட்சிகர வெற்றிக்கும் நாங்கள் ஆதரவளித்து எங்கள் ஒற்றுமையை அறிவிக்கிறோம்” என்று அறிவித்தது.

ஆஸ்திரேலியாவின் சோசலிச மாற்றுக் (SA - Socialist Alternative) கட்சியைச் சேர்ந்த கொரி ஓக்லே (Corey Oakley), “ஒரே இரவில், சிரியா மத்திய கிழக்கில் மிகவும் சர்வாதிகார நாடாக இருந்து சுதந்திரமான நாடாக மாறியுள்ளது. HTS ஆனது, அல் கொய்தாவிலிருந்து பிரிந்த பின்னர் 2017 இல் அதன் தற்போதைய பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, குறிப்பாக இந்த எழுச்சியின் போது, அது இதர மதக் குழுக்கள் மற்றும் சிறுபான்மையினரின் சகிப்புத்தன்மையை வலியுறுத்தியுள்ளது...” என்று அவர் தெரிவித்தார்.

சமூக வலைத் தளம் முழுவதும் பரவியுள்ள HTS குழுக்களினது அலவைட் மக்கள் மீதான படுகொலைகள் பற்றிய காணொளிகளானது, இணையம் முழுவதும் பரவியுள்ள இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் கட்சிகளும் தனிநபர்களும் நடைமுறையில் அல் கொய்தா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உடன்பாட்டைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.

சிரியாவின் இராணுவக் கட்டமைப்பை அழித்து, அதை அமெரிக்க நட்பு நாடுகளுக்கு இடையே பிரித்து வைக்கும் நோக்கத்தில், அமெரிக்கப் போர் விமானங்கள் 75 வான்வழித் தாக்குதல்களையும், இஸ்ரேலியப் போர் விமானங்கள் 400-க்கும் மேற்பட்ட தாக்குதலையும் சிரியா மீது நடத்தியுள்ளன. துருக்கிய ஆதரவிலான சுதந்திர சிரிய இராணுவம் (FSA – Free Syrian Army) வடக்கில் குர்திஷ்-தேசியவாத படைகளைத் தாக்கி வருகிறது. இது அப்பிராந்தியத்தைக் கைப்பற்றி ஒரு குர்திஷ் அரசு உருவாவதைத் தடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இஸ்ரேல் ஒட்டுமொத்த கோலான் குன்றுகளையும் கைப்பற்றியதுடன், இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள சிரிய பிராந்தியத்திற்கும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸுக்கும் இடையே ஒரு “சூனிய” இடைத்தடை மண்டலத்தை அமைக்க சூளுரைத்துள்ளது.

இன்று சிரியாவில் நடந்து கொண்டிருப்பது ஏகாதிபத்திய-சார்பு, போலி-இடது கட்சிகளின் ஒரு தசாப்தத்திற்கும் மேலான பொய்களின் கசப்பான பலனாகும். தொழிலாள வர்க்க எழுச்சிகள் 2011 இல் எகிப்திய மற்றும் துனிசிய ஆட்சிகளை வீழ்த்தியதில் இருந்து ஏறக்குறைய 14 ஆண்டுகளாக, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில், இது ஒரு ஜனநாயகப் புரட்சி என்ற மோசடி சாக்குப்போக்கின் கீழ், பிற்போக்குத்தனமான, ஏகாதிபத்திய ஆதரவு சன்னி இஸ்லாமிய பயங்கரவாத ஆயுதக் குழுக்களை அவர்கள் ஆதரித்து வந்துள்ளனர்.

“2011 சிரிய புரட்சி அனைத்து அரபு கிளர்ச்சிகளிலும் மிகப்பெரியது” என்று வாதிடும் ஓக்லே, “பஷர் அல் அசாத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தீய உத்தியானது, —அரை மில்லியன் மக்களை படுகொலை செய்தல், நகரங்களை தரைமட்டமாக்குதல், பல்லாயிரக்கணக்கானவர்களை சிறைபிடித்து சித்திரவதை செய்தல், மில்லியன் கணக்கானவர்களை நாடுகடத்துதல்— அரபுப் புரட்சியை அதன் முதல் மாதங்களில் உயிர்ப்பித்த ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றிய அனைத்துக் கனவுகளையும் நொறுக்கியது” என்று மேலும் குறிப்பிடுகிறார்.

சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு இடதுசாரி எதிர்ப்பைக் கண்டனம் செய்வதற்காக, 2011 இல் “தன்னிச்சையான ஏகாதிபத்திய-எதிர்ப்பு [knee-jerk anti-imperialism]” என்ற வார்த்தையைப் பாதுகாத்த ஓக்லே, இஸ்லாமியவாதிகளை போதுமானளவுக்கு ஆயுதபாணியாக்க வாஷிங்டன் மறுத்ததே சிரியப் போருக்குக் காரணம் என்று கூறுகிறார்:

கிளர்ச்சியாளர்கள் கோரிய ஆயுதங்களை வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அது ஆட்சியைத் தோற்கடிக்க அவர்களை அனுமதித்திருக்கும். இதர அரசுகளும் இந்த ஆயுதங்களை வழங்குவதை தடுத்தனர். இந்த காட்டிக்கொடுப்பானது, சிரிய புரட்சியை மேற்கத்திய இடதுசாரிகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் அவதூறாகப் பேசுவதைத் தடுக்கவில்லை. அவர்கள் சர்வாதிகாரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான சிரிய அபிலாஷைகளை ‘சிஐஏ மற்றும் மொசாட்டின் சதி’ என்று வெட்ககேடான முறையில் நிராகரித்தனர். …

ஆயினும்கூட, எல்லாவற்றையும் மீறி, எல்லா நம்பிக்கைகளுக்கும் எதிராக, அசாத் திடீரென்று போய்விட்டார். இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், வடக்கு நகரமான அலெப்போவில் தொடங்கிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒரு அசாதாரண நாடு தழுவிய எழுச்சியாக மாறி ஆட்சியை தோற்கடித்தது.

அசாத் “திடீரென்று” மற்றும் “அனைத்து நம்பிக்கைக்கும்” எதிராக HTS ஆல் தூக்கியெறியப்பட்டார். உண்மையில், சிரிய இராணுவமும் அதன் கூட்டாளிகளும் சிரிய கிளர்ச்சிக்கு மிகக் குறைந்த மக்கள் தளமே இருப்பதாக அறிந்திருந்தனர். வடக்கு சிரியாவில் இரண்டு வார HTS தாக்குதலுக்குப் பின்னர், அசாத் ஆட்சி கவிழ்ந்து திடீரென அதிகாரத்தை அதனிடம் ஒப்படைத்தபோது அவர்களே அதிர்ச்சியடைந்தனர். மில்லியன் கணக்கான மக்களின் ஒரு புரட்சியை படுகொலை செய்ய இராணுவம், விமானப்படை மற்றும் இரசாயன ஆயுதங்களை திரட்டியதாக அசாத் பற்றி அவர்கள் வரைந்த சித்திரம் ஒரு அரசியல் கட்டுக்கதை ஆகும்.

2011ல் எகிப்திலும், துனிசியாவிலும் தொழிலாள வர்க்க எழுச்சிகள் வெடித்தன. அனைத்து இன, மத பின்னணியைச் சேர்ந்த தொழிலாளர்களை அணிதிரட்டிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், கலகம் அடக்கும் பொலிசாருடன் இரத்தந்தோய்ந்த மோதல்களுக்கு இட்டுச் சென்றன. தொழிலாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் ஆயுதங்களைக் கேட்க நினைக்கவில்லை, ஏனென்றால் வாஷிங்டன் அவர்களுக்கு எதிராக எகிப்து மற்றும் துனிசிய ஆட்சிகளை ஆயுதமயமாக்கிக் கொண்டிருந்தது. எவ்வாறிருப்பினும், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான கட்டளைகளுக்கு இராணுவம் கீழ்ப்படியாதபோது, இந்த ஆட்சிகள் வீழ்ச்சியடைந்தன, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொருளாதாரம் முடக்கப்பட்டது.

இஸ்லாமிய பினாமி படைகளைப் பயன்படுத்தி லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ போரின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரிய “கிளர்ச்சி”, முற்றிலும் மாறுபட்ட குணாம்சத்தைக் கொண்டிருந்தது. முதலில், குறுகிய மதவாத இஸ்லாமிய ஆயுதக் குழுக்களாலும், பின்னர் குர்திஷ்-தேசியவாத ஆயுதக் குழுக்களாலும் வழிநடத்தப்பட்ட “கிளர்ச்சி”, தாக்கிவிட்டு ஓடும் தாக்குதல்கள், பயங்கரவாத குண்டுவெடிப்புகள், மற்றும் இறுதியில் துருக்கி அல்லது ஜோர்டான் போன்ற அண்டை அமெரிக்க-கூட்டணி அரசுகளின் தளங்களில் இருந்து படையெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதை ஒரு “புரட்சி” என்று ஊக்குவிக்கும் இழிவான பணி பப்லோவாத மற்றும் போலி-இடது வட்டாரத்தின் தோள்களில் விழுந்தது. பப்லோவாதிகள் சிரிய “கிளர்ச்சியாளர்களின்” அணியில் குதித்த போது, என்ன வர்க்க சக்திகள் சம்பந்தப்பட்டிருந்தன, இயக்கத்தின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் தலைமை என்ன என்ற கேள்வியை அவர்கள் எப்போதும் போலப் பொய்மைப்படுத்தினர் அல்லது புறக்கணித்தனர். சிரியப் போரின் போது, ​​பப்லோவாதிகள் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தின் சூழலில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.

இந்த ஒருங்கிணைப்பு, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் கில்பேர்ட் அஷ்காரிடம் (Gilbert Achcar) பூரண வெளிப்பாட்டைக் காண்கிறது. 2011 இல், போர் மூலோபாயம் குறித்து ஆலோசனை வழங்க CIA ஆதரவிலான சிரிய தேசிய கவுன்சில் தலைவர்களைச் சந்தித்ததாக அவர் பெருமைபீற்றிக் கொண்டார். இப்பொழுது பிரிட்டிஷ் இராணுவத்திற்கு ஊதியம் பெறும் ஆலோசகராக சேவையாற்றி வரும் அஷ்கார், சிரியா துண்டாடப்பட்டு வருவதை பாராட்டும் அதேவேளையில், HTS படைகள் மீதும் மக்கள் எதிர்ப்பு வெடிக்கக்கூடும் என்ற அபாயம் குறித்து எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

“கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்டவிழ்ந்த வியக்கத்தக்க வரலாற்று நிகழ்வுகளை அவதானிக்கையில், முதலில் நினைவுக்கு வருவது நிம்மதியும் மகிழ்ச்சியும்தான்,” என்று டிசம்பர் 11 அன்று அஷ்கார் எழுதினார். இருப்பினும், “இட்லிப் பகுதியில் வசிப்பவர்களே எட்டு மாதங்களுக்கு முன்புதான் HTS இன் கொடுங்கோன்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர், அல்-ஜூலானியை தூக்கி எறிய வேண்டும், அவரது அடக்குமுறை கருவிகளை கலைக்க வேண்டும் மற்றும் அவரது சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும்” என்று அஷ்கார் மேலும் சேர்த்துக் கொண்டார்.

யதார்த்தத்தில், பப்லோவாதிகள் பிற்போக்கு சக்திகளுக்கு உற்சாகமூட்டும் தலைவர்களாக இருந்து, இந்த யுத்தம் முழுவதிலும் சேவையாற்றி, அவர்களை புரட்சியாளர்களாக பொய்யாக ஊக்குவித்து வருகின்றனர். “கிளர்ச்சியாளர்களின்” ஏகாதிபத்திய-ஆதரவு அரசியலை மறுத்த அவர்கள், சுதந்திர சிரிய இராணுவத்தை (FSA) ஒரு மதச்சார்பற்ற சக்தியாக சித்தரிப்பதுடன், தொழிலாளர்கள் புரட்சிகர உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்களை (LCC - Local Coordination Committees) கட்டமைத்து வருவதாக கூறினர். யதார்த்தத்தில், சிரிய “கிளர்ச்சியாளர்களுக்கு” பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக்குகளின் ஆட்சிகள் மற்றும் CIA ஆல், ஆபரேஷன் டிம்பர் சைக்மோர் (Timber Sycamore) போன்ற திட்டங்கள் மூலமாக நிதியளிக்கப்பட்டன.

இன்று சிரிய “கிளர்ச்சியின்” வெற்றி, இந்த விஷயத்தில் அவர்களின் பிரச்சார பொய்களை திட்டவட்டமாக மறுக்கிறது. பாரிய வேலைநிறுத்தங்கள் எதுவும் அங்கு நடக்கவில்லை. உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்கள் எங்கும் காணப்படவில்லை. குர்துகள் மீது இனப் போரை நடத்த துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் (Recep Tayyip Erdogan) இஸ்லாமிய ஆட்சியுடன் FSA கூட்டு சேர்ந்தது. வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலை ஆட்சியுடன் கூட்டு சேர்ந்து, அல் கொய்தாவால் அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. இந்த அடிப்படையில், பப்லோவாதிகள் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சிரியப் போர் மற்றும் பப்லோவாதக் கட்சிகளின் பாத்திரம் பற்றி செய்த எச்சரிக்கைகள், சிரியாவின் துண்டாடுதல் ஒரு ஆழமான உறுதிப்படுத்தல் ஆகும். சமூகத்தின் உயர்மட்ட 10 சதவீத சக்திகளின் சடரீதியான நலன்களை முன்னெடுக்க ஜனநாயக சொற்றொடர்களை பயன்படுத்தும் வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு அடுக்குகளை பப்லோவாத கட்சிகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

2013 இல், உலக சோசலிச வலைத் தளம், துனிஸில் உள்ள உலக சமூக மன்றத்தில், இப்போது கலைக்கப்பட்ட சர்வதேச சோசலிச அமைப்பால் தயாரிக்கப்பட்டு, அதன் கல்வித்துறை ஆதரவாளர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச சிரிய போர் ஆதரவு மனுவை ஆய்வு செய்தது. இந்த அரங்கம், “நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகளுக்கு முதுகு சொறிவதற்கும், பானங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், மற்றும் ஏராளமான அரசு உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் மற்றும் ஸ்தாபக முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் நலன்கள் மற்றும் மூலோபாயங்களை விவாதிப்பதற்கும் வாய்ப்பளித்தது” என்று நாங்கள் குறிப்பிட்டோம்.

சிரியாவில் இடம்பெற்றவரும் போர் “சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான மக்கள் புரட்சி” என்பதை “உலகிற்கு நினைவூட்டுவதற்கான” மனுவின் உறுதிமொழிக்கு பதிலளித்து, நாங்கள் பின்வருமாறு எழுதினோம்:

உலகிற்கு “நினைவூட்டப்பட” வேண்டும் என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏகாதிபத்திய ஆதரவுடைய கூலிப்படைகளால் சிரியாவில் நடத்தப்பட்டு வருகின்ற இரத்தந்தோய்ந்த படுகொலைகள் என்பன, “சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கானது” என்பது ஒரு புறம் இருக்கட்டும், ஆனால், ஒரு “மக்கள் புரட்சியுடன்” கூட எந்த ஒற்றுமையையும் கொண்டிருக்கவில்லை...

கடந்த டிசம்பரில், அல் நுஸ்ரா [HTS இன் முந்தைய பெயர்] கிட்டத்தட்ட 600 பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி, ஆயிரக்கணக்கான சிரிய அப்பாவி மக்களைக் கொன்றதாக அமெரிக்க அரசாங்கமே அறிவித்துள்ளது. எதிர்த்தரப்பு சக்திகளே முக்கிய செய்தி ஊடகத்திடம், அவர்கள் அலெப்போவைச் சுற்றியுள்ள மருந்து ஆலைகள் மற்றும் தானியக் களஞ்சியங்கள் போன்ற ஆலைகளை கொள்ளையடித்து அழிப்பதாக கூறியுள்ளன. ஓராண்டிற்கு முன்பு ஹௌலாவில் நடந்ததைப் போன்ற குறுகிய மதவாத படுகொலைகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு...

கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் லெவன்ட் பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி பெரிய மற்றும் புரிந்துகொள்ள முடியாத மர்மம் எதுவும் இல்லை. சிரியப் போர் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் (அதன் தீவிர பிற்போக்குத்தனமான வளைகுடா நாடுகளின் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன்) மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய அரசியலை வன்முறையாக மறு ஒழுங்கமைப்பதற்கான முயற்சிகளின் சமீபத்திய அத்தியாயமாகும்.

அல் கொய்தா சக்திகளிடம் அசாத் அதிகாரத்தைக் கையளித்தமையானது, முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சமரசமற்ற எதிர்ப்பை ஊர்ஜிதப்படுத்துகிறது. இது சிரிய தேசியவாத பாத்திஸ்ட் ஆட்சியின் துரோகத்தையும், நேட்டோ சக்திகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளின் ஆதரவுடன் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு எதிராக, ஒரு காலத்திற்கு அசாத்தின் படைகளை இராணுவரீதியில் ஆதரித்த ரஷ்ய மற்றும் ஈரானிய ஆட்சிகளின் திவால்நிலையையும் அம்பலப்படுத்துகிறது. சிரியாவை அல் கொய்தாவிடம் சரணடைய தயாரிப்பு செய்த அரபு லீக் மற்றும் சிரிய எதிர்த்தரப்பு அதிகாரிகளுடன் அசாத் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

1917 ரஷ்ய மற்றும் 1979 ஈரானியப் புரட்சிகளில், புரட்சிகர கடந்த காலத்தைக் கொண்டிருக்கின்ற ரஷ்ய மற்றும் ஈரானிய தொழிலாள வர்க்கங்கள் இரண்டுமே, அதன் ஆட்சிகளுடன் ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டுள்ளன. 1991 இல், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து எழுந்த முதலாளித்துவ கொள்ளைக்கூட்டத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் சுலோகம்: “கடவுளே, 20ஆம் நூற்றாண்டில் நமக்குப் போதுமான புரட்சி இருந்தது!”

சந்தேகத்திற்கு இடமின்றி அசாத்தின் ஆட்சி பிற்போக்குத்தனமாக இருந்தபோதிலும், அவரைத் தூக்கியெறிவது சிரிய தொழிலாள வர்க்கத்தின் பணியாக இருக்கிறதே அன்றி, ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்துள்ள பிற்போக்குத்தனமான பிராந்திய முதலாளித்துவ ஆட்சிகளின் பணியாக இல்லை.

மறுபுறம், சிரியா துண்டாடப்பட்டதை பாராட்டும் பப்லோவாத சக்திகள், ஏகாதிபத்தியத்தின் இழிவான பிரச்சாரகர்களாக உள்ளனர். தாங்கள் ஆதரிக்கும் அல்கொய்தா சக்திகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அவர்கள் சுருக்கமாக ஒப்புக்கொண்டாலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தங்கள் பிணைப்பிற்கு ஒரு மெல்லிய அரசியல் மூடுதிரையை வழங்கும் நோக்கத்துடன், அவர்கள் எப்படியும் இந்த சக்திகளுக்கான ஆதரவை தொடர்கின்றனர்.

சிரியா, “ஆழமான வடுவாகவும் ஆயுதக் குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டு” இருப்பதாகவும், “கடக்கப்பட வேண்டிய தடைகளை எதிர்கொள்ளும் பிரமாண்டமான சிக்கல்களை” அது எதிர்கொள்கிறது என்பதையும் ஓக்லே ஒப்புக்கொள்கிறார். இவற்றில் ஒன்று, அவர் ஊக்குவிக்கும் சன்னி இஸ்லாமிய சக்திகளின் பிற்போக்குத்தனமான மற்றும் ஒடுக்குமுறை குணாம்சத்தை ஓக்லே திடீரென ஒப்புக்கொள்கிறார். மேலும், “வடமேற்கில் இட்லிப்பை பல ஆண்டுகளாக HTS கட்டுப்படுத்தி வந்துள்ளது. அந்த சமயத்தில், அது போராட்டங்களை ஒடுக்கியது, ஆனால் அசாத் ஆட்சி அல்லது ISIS குற்றவாளிகள் என்ற அளவுக்கு தொலைதூரத்தில் எதுவும் இல்லை” என்று ஒக்லே குறிப்பிடுகிறார்.

ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிராக, சிரியாவில் இருக்கும் பல இன, மதப் பின்னணிகளைக் கொண்ட தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். 2011 எகிப்திய மற்றும் துனிசிய எழுச்சிகளில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த சக்தியை, உலகப் போர் மற்றும் இனப்படுகொலைக்குள் முதலாளித்துவம் இறங்குவதை முடிவுக்குக் கொண்டுவர, அணிதிரட்ட வேண்டும்.

எவ்வாறாயினும், காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை மனச்சோர்வடையச் செய்யும் மற்றும் இப்போது சிரியா துண்டாடப்படுவதைப் புகழ்ந்து பேசும் பப்லோவாத ஏமாற்று வித்தைக்காரர்களிடம் ஒரு அரசியல் கணக்கீடு இதற்குத் தேவைப்படுகிறது. தங்களை இனப்படுகொலையின் எதிர்ப்பாளர்கள் என்று அவர்கள் காட்டிக் கொள்கின்றனர். ஆனால், இஸ்ரேலிய இராணுவம் சிரியாவின் பாதுகாப்பற்ற மக்கள் மீது அதே ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசும்போது அதை ஆதரிக்கின்றனர். தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சோசலிச, சர்வதேசிய மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் போராட்டத்தில் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே ஏகாதிபத்திய போரை நிறுத்த முடியும்.

Loading