முன்னோக்கு

ட்ரம்ப் ஜனாதிபதி பதவியும் நிதியச் செல்வந்த தட்டுக்களின் மிதமிஞ்சிய பேராசை கொண்ட கோரிக்கைகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது, ஏனென்றால் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் நிதியச் செல்வந்த தட்டுக்கள் அவரது நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே அவர்களின் மிக உயர்ந்த மட்ட செல்வவளத்தை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளன.

[AP Photo/Seth Wenig]

எதிர்பார்த்ததை விட அதிகமான பணவீக்க எண்களின் காரணமாக நேற்று வோல் ஸ்ட்ரீட்டில் சிறிது பின்னடைவு இருந்தபோதிலும், டோவ் ஜோன்ஸ் (Dow Jones) கடந்த 10 நாட்களில் 44,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது, அதேவேளையில் S&P 500 குறியீடு புதிய சாதனைகளை எட்டியுள்ளது, ஒரு கட்டத்தில் 6,000 புள்ளிகளைக் கூட கடந்துள்ளது.

ஊக வணிக வெறியின் மற்றொரு அறிகுறியாக, முதன்மை கிரிப்டோகரன்சியான (cryptocurrency) பிட்காயினின் விலை ஒரு கட்டத்தில் $90,000 டாலரை தொட்டது. இது $100,000 டாலரை எட்டக்கூடும் என்ற முன்னறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்த அதன் பகுப்பாய்வில், உலக சோசலிச வலைத் தளம் இவ்வாறு விளக்கியது, ட்ரம்பின் வெற்றி ஒவ்வொரு திருப்பத்திலும், அதன் மிக அடிப்படையான மட்டத்தில், ஜனநாயகக் கட்சியினரால் அனுசரணை வழங்கப்பட்டிருந்த போதினும், ட்ரம்பின் எழுச்சியானது, அனைத்து பொருளாதார மற்றும் சமூக உறவுகளிலும் ஒரு சிறிய நிதியச் செல்வந்த தட்டு மேலாதிக்கம் செலுத்தும் சமூக உறவுகளின் யதார்த்தத்துடன் அரசியல் மேற்கட்டுமானத்தின் ஒரு வன்முறையான மறுஒழுங்கமைப்பைக் குறிக்கிறது.

இதுவரையான ட்ரம்பின் அமைச்சரவை நியமனங்கள் இந்த பகுப்பாய்வை விரைவாக ஊர்ஜிதம் செய்துள்ளன. இந்த பதவிகள், சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கான அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம் என்ற மாகா [MAGA - Make America Great Again] திட்டநிரலின் மிகவும் உரத்த குரல் கொடுக்கும் பிரதிநிதிகளால் நிரப்பப்பட வேண்டும். இதற்கு புளோரிடா காங்கிரஸ் உறுப்பினர் மாட் கெய்ட்ஸ் (Matt Gaetz) அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டிருப்பதும், அத்துடன் நிதியச் செல்வந்த தட்டுக்களின் முழு அளவிலான உறுப்பினர்களும் சான்றளிக்கின்றனர்.

நிதி மூலதனத்தின் திறந்த ஆதிக்கமாக இந்தப் புதிய ஆட்சியின் உண்மையான தன்மை வெளிப்படுகிறது. இதனை உலகின் மிகப்பெரும் பணக்காரரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் சுமார் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள உயிரியல் தொழில்நுட்ப மற்றும் நிதித் துறை முதலாளி விவேக் ராமசாமி ஆகியோரை அரசாங்கச் செயல்திறன் துறையின் தலைமைப் பொறுப்பில் நியமித்ததில் காணலாம்.

முக்கிய சமூக சேவைகளுக்கு எதிராக இயக்கப்படும் அரசாங்க செலவினங்களில் 2 டிரில்லியன் டாலர் வெட்டுக்கான இலக்கை நிர்ணயித்துள்ள மஸ்க், இது “வலியை” ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். வருடாந்தர 6.5 ட்ரில்லியன் டாலர் அரசாங்க செலவினங்களில் நிலவும் “பாரிய விரயத்தை” இந்தப் புதிய நிர்வாகம் அகற்றும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது நிதி மூலதனத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. இப்பார்வை, உலக ஆதிக்கத்திற்கான தனது போராட்டத்தில் இராணுவச் செலவுகளைத் தவிர, அனைத்து அரசாங்கச் செலவுகளையும் “விரயம்” என்று கருதுகிறது. ஏனெனில், தொழிலாள வர்க்கத்தின் உழைப்பால் உருவாக்கப்பட்ட சமூக வளங்கள், இலாபமாக கையகப்படுத்தப்படுவதற்குப் பதிலாக திசைதிருப்பப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சி நிரலில் மற்றொரு சமமான குறிப்பிடத்தக்க அம்சமும் உள்ளது. நிதி மூலதனத்தின் செயற்பாடுகள் மீது, குறிப்பாக பெரிய வங்கிகளின் செயற்பாடுகள் மீது ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்ட நெறிமுறைகளில் எஞ்சியிருப்பவற்றை அகற்றுவதாகும். அது நீண்டகாலமாக அரசாங்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்து வந்துள்ளதுடன், இப்போது கட்டுப்பாடற்ற நடவடிக்கை பற்றிய அதன் கனவுகள் நனவாகும் என்ற எதிர்பார்ப்பில் கொண்டாடி வருகிறது.

புதிய துறையானது “பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தத்தை இயக்கும் மற்றும் முன்பு பார்த்திராத அரசாங்கத்திற்கு தொழில்முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும்” என்று ட்ரம்ப் கூறினார். பணயத்தில் என்ன உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு தயாரிப்பதற்கான இரகசிய திட்டத்துடன் ஒப்பிடத்தக்க, நமது காலத்தின் “மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project)” என்று அவர் இந்த முன்முயற்சியை அழைத்தார். ஜூலை 2026 க்குள் முடிக்க திட்டமிடப்பட்ட அவர், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் இது “அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும்” என்று கூறினார்.

உண்மையில், அது துல்லியமாக எதிர்மாறாக இருக்கும், ஏனென்றால் “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்ற அடிப்படைக் கோட்பாட்டிற்கு அது அர்ப்பணிக்கப்படாது, மாறாக ஏற்கனவே மிகப் பெரியளவில் உள்ள சமூக சமத்துவமின்மையை மோசமாக்கும்.

நிதியச் செல்வந்த தட்டுக்களின் கற்பனைக் கனவுகள் நிஜமாவது போல் தோன்றினாலும், எந்தவொரு அதிகார ஆசை கொண்ட ஜனாதிபதி மற்றும் அவரது அணியையும் விட மிகவும் வலிமையான ஒரு அடிப்படைப் பொருளாதார உண்மைநிலை அங்கே நிலவுகிறது.

பங்குச் சந்தையின் சாதனை உயரங்களை நோக்கிய பாய்ச்சல், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தையோ ட்ரம்பின் கீழ் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளையோ காட்டவில்லை. மாறாக, இது அதன் ஆழமாக நோய்வாய்ப்பட்ட இயல்பையே வெளிப்படுத்துகிறது.

இந்தத் தீங்குகளின் துரித வளர்ச்சி பிட்காயினின் எழுச்சியில் வெளிப்படுகிறது. குற்றவியல் தன்மை கொண்ட பரிவர்த்தனைகளைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாத நிதிச் “சொத்து” என அழைக்கப்படுவது புதிய உச்சங்களை எட்டுகிறது. அதற்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை, ஆனால் ஊக வணிகத் தன்மை கொண்டது. அது ஆர்வத்துடன் தேடப்படுவதால் அதற்கு “மதிப்பு” உள்ளது, மேலும் அது “மதிப்பு” கொண்டதாகக் கருதப்படுவதால் ஆர்வத்துடன் தேடப்படுகிறது.

இப்போது சாதனை உச்சத்தை எட்டும் பங்குகளுக்கும் இதைச் சொல்லலாம். மார்ச் 2009 இல், 2008 உலகளாவிய நிதிய நெருக்கடிக்குப் பிறகு, S&P 500 குறியீடு 666 ஆக இருந்தது. அப்போதிருந்து, இது ஒன்பது மடங்கு அதிகரித்து சுமார் 6,000 ஆக உள்ளது.

உண்மைப் பொருளாதாரத்தின் (real economy) செயல்பாட்டை அளவிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP – gros domestic product) 2009 இல் சுமார் 14.5 டிரில்லியன் டாலராக இருந்தது. இன்று, இது தோராயமாக $29.4 டிரில்லியனை எட்டியுள்ளது, இரண்டு மடங்கு அதிகம்.

இப்புள்ளிவிவரங்கள் ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகவணிகத்தால் உந்தப்படும் நிதிய அமைப்புமுறைக்கும் அது அடித்தளமாக கொண்டுள்ள உண்மையான பொருளாதாரத்திற்கும் இடையே பெருகிய பிளவை விளக்குகின்றன.

பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றல், நாணயம் மற்றும் பொருட்கள் சந்தைகளில் ஊக வணிகம், கடன் மறுநிதியளிப்பு மற்றும் எண்ணற்ற பிற நடவடிக்கைகள் போன்ற நிதிப் பரிவர்த்தனைகள் மூலம் எவ்வளவு இலாபம் உருவாக்கப்பட்டாலும், மதிப்பின் ஒரு கூடுதல் அலகு கூட உருவாக்கப்படுவதில்லை.

எனினும், முடிவான பகுப்பாய்வில், நிதிச் சொத்துக்கள் தனித்த உலகில் இருப்பதாகத் தோன்றினாலும், அவை உண்மையில் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார மதிப்பையும், உற்பத்தி நடைமுறையில் அவர்களிடமிருந்து எடுக்கப்படும் அதிகப்படியான உபரி மதிப்பையும் பிரதிபலிக்கின்றன.

இதனால்தான், நிதி மலை மேலும் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சுரண்டலை தீவிரப்படுத்தவும், நிதி மூலதனத்திற்கு கிடைக்கக்கூடிய செல்வத்திலிருந்து மிகச் சிறிய அளவிலேனும் குறைக்கப்படும் சமூக சேவைகள் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவரவும் கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன.

ட்ரம்பால் முன்னெடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் வெறுமனே அவரது காய்ச்சல் பிடித்த மூளையில் இருந்து முளைத்தவை அல்ல. அவைகள் பல தசாப்தங்களாக முதலாளித்துவ அரசு மற்றும் அதன் ஸ்தாபனங்களால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாகும்.

சமீபத்திய வரலாறு 2008 நிதிய நெருக்கடியைத் தொடர்ந்து பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு பாரிய அரசாங்கப் பிணையெடுப்புக்களைக் கண்டுள்ளது. அதுவே குறைந்தபட்சம் 1980 களில் இருந்து வந்த ஊகவணிகங்களின் விளைவாகும்.

அதன்பின் பெடரல் ரிசர்வ் (அமெரிக்க மத்திய வங்கி) வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அண்மித்து குறைக்க முன்வந்ததுடன், முக்கியமாக அரசாங்கக் கடன்களை பாரியளவில் கொள்முதல் செய்வதன் அடிப்படையில், அச்சடித்துப் பணத்தைப் புழக்கத்தில் விடும் அதன் திட்டத்தின் மூலமாக ஊகவணிகத்திற்கு இன்றியமையாத இலவசப் பணத்தை வழங்கியது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் கூட 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடங்கியவுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் மறைக்கப்பட்டன.

உலகின் மிகவும் பாதுகாப்பான நிதிச் சந்தையாக கருதப்படும் அமெரிக்க கருவூலம் மார்ச் 2020 இல் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெடரல் அதன் பொறிவைத் தடுக்க ஒரு கட்டத்தில் வினாடிக்கு 1 மில்லியன் டாலர் செலவழித்து, ஒரு சில வாரங்களிலேயே நிதிய அமைப்புமுறைக்குள் சுமார் 4 ட்ரில்லியன் டாலரைப் பாய்ச்சியது.

இது, மஸ்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் போன்ற பிரமுகர்களை உள்ளடக்கிய செல்வந்த தட்டுக்களின் கரங்களில் கூடுதலாக செல்வவளம் குவிவதற்கு இட்டுச் சென்றது, ஆகவே 800 பில்லியனர்கள் இப்போது மொத்தமாக 6.2 ட்ரில்லியன் டாலர் செல்வவளத்தைக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவாக, அமெரிக்கா வரலாற்றிலேயே மிகவும் கடன்பட்ட நாடாக ஆகியுள்ளது, ஏறத்தாழ 36 ட்ரில்லியன் டாலர் கடனுடன் உள்ளது, அங்கு அரசாங்க செலவினங்களில் ஒவ்வொரு ஏழு டாலரிலும் ஒரு டாலர் கடந்த கால கடன்களுக்கான வட்டிக்கு செல்கிறது.

இந்த அமைப்புமுறையானது ஒரு நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, அது ஏற்கனவே நெருக்கடியில் உள்ளது. ஒரு நெருக்கடியின் போது, சமூகத்தின் இரண்டு அடிப்படை வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாள வர்க்கமும் அவற்றின் அடிப்படை சமூக நலன்களுக்கு ஏற்ப செயல்படுகின்றன என்பது மார்க்சிசத்தின் வரலாற்று சடவாத வழிமுறைக்குள் மிக முக்கியமான உட்பார்வைகளில் ஒன்றாகும்.

ஒரு கொள்ளையடிக்கும் நிதியச் செல்வந்த தட்டின் தலைமையில், முதலாளித்துவ வர்க்கம் அதன் ஆழ்ந்த தேவைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு தடையற்ற தாக்குதலுக்கு பாதை தெளிவுபடுத்தப்பட வேண்டும், அவ்விதத்தில் கட்டுப்பாடற்ற நிதி மூலதனம் மனிதகுலத்திற்கு என்ன விலை கொடுத்தாலும் இலாப திரட்சிக்கான அதன் இடைவிடாத உந்துதலை சுதந்திரமாக தொடர முடியும்.

ட்ரம்ப் மற்றும் அவரது வாய்வீச்சு கோரிக்கைகளின் தன்மை குறித்து தொழிலாள வர்க்கத்திற்கு என்னதான் பிரமைகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், விரைவிலோ அல்லது தாமதமாகவோ அவர் ஆட்சிக்கு எதிராக போராட இட்டுச் செல்லப்படும். அது தனது வரலாற்று சடரீதியான நலன்களுக்காகப் போராடவும் நிர்ப்பந்திக்கப்படும்.

ஆனால் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. ஆளும் தன்னலக்குழு ஓரளவிற்கு சந்தையை தனக்காக சிந்திக்க அனுமதிக்க முடியும் என்றாலும், தொழிலாள வர்க்கம், குறிப்பாக இளைஞர்கள் உட்பட அதன் முன்னணிப் படையானது, அதன் மீது செலுத்தப்படும் தாக்குதல்களை தோற்கடிப்பதற்கு உயர்ந்த அரசியல் நனவு மற்றும் புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் புரிதலை முதலாளித்துவத்தின் அடிப்படை விதிகளையும், அவை அரசியல் மேற்கட்டுமானத்தில் வெளிப்படும் விதத்தையும் உள்வாங்குவதன் மூலமாக மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். இதற்கு, உலக சோசலிச வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் பகுப்பாய்வை கவனமாக ஆய்வு செய்து, பின்னர் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்து அதைக் கட்டியெழுப்ப முடிவெடுக்க வேண்டும்.

Loading