மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டித்தன்மை குறித்த ஓர் அறிக்கை, இவ்வமைப்பின் உயிர்பிழைப்புக்கான நெருக்கடியையும், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் அதைக் கடந்து வருவது சாத்தியமின்மையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த அறிக்கையானது ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும் முன்னாள் இத்தாலிய பிரதம மந்திரியுமான மரியோ டிராகியால் ஐரோப்பிய ஆணையத்திற்காக தயாரிக்கப்பட்டது.
இந்த முடிவுகளை டிராகி நேரடியாக வரையவில்லை — அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியைக் கடக்க முயற்சிக்கும் நோக்கில் முன்மொழிவுகளை முன்வைத்தார் — எனினும் இவை அந்த அறிக்கையிலிருந்து தெளிவாக வெளிப்படுகின்றன.
பந்தயத்தில் என்ன உள்ளது என்பதை டிராகி நன்கு அறிந்திருக்கிறார். அறிக்கையை அறிமுகப்படுத்தும் கருத்துரையில், அவர் தனது பரிந்துரைகள் குறித்து கூறினார்: “இதைச் செய்யுங்கள், இல்லையெனில் மெதுவான சாவு நிச்சயம்.” மேலும் இக்கருத்தை வலியுறுத்த அவர் தொடர்ந்தார்: “இது ஓர் இருப்பியல் சவால்.”
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கடந்த இலையுதிர் காலத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் உருவான இந்த அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி பல தசாப்தங்களாக மெதுவடைந்து, சமீப ஆண்டுகளில் தேக்கமடைந்துள்ளதன் காரணமாக, அதன் பொருளாதார முன்னேற்றத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு முன்னெப்போதிலும் இல்லாத வகையில் பின்தங்கி வருகிறது என்ற உணர்தலில் இருந்து உருவாகியது.
ஐரோப்பா பின்தங்கியுள்ள அனைத்துத் துறைகளையும் இங்கு விவரிக்க இயலாது. அவை பொருளாதாரம் முழுவதும் பரவியுள்ளன. 440 மில்லியன் நுகர்வோர், 23 மில்லியன் நிறுவனங்கள், மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதம் கொண்ட ஒற்றைச் சந்தையுடன், ஐரோப்பா மிகவும் போட்டித்திறன் மிக்க பொருளாதாரமாக இருப்பதற்கான அடித்தளங்களைக் கொண்டுள்ளது என்ற கூற்றுடன் டிராகி தொடங்கினார். ஆனால், இது நடைமுறையில் நிகழவில்லை என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
உற்பத்தித்திறன் வளர்ச்சி பலவீனமடைந்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார், இது “அதன் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஐரோப்பாவின் திறனை கேள்விக்குள்ளாக்குகிறது.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சியானது “கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்காவைவிட தொடர்ந்து மெதுவாக உள்ளது, அதேவேளையில் சீனா வேகமாக முன்னேறி வருகிறது”. 2015 விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மட்டத்திற்கு இடையிலான இடைவெளி 2002 இல் 15 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருந்த நிலையில், 2023 இல் 30 சதவீதமாக விரிவடைந்துள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட டெலிகிராஃப் பத்திரிகையின் பொருளாதார நிருபர் அம்ப்ரோஸ் எவான்ஸ்-பிரிட்சார்டு அண்மையில் சுட்டிக்காட்டிய இதர புள்ளிவிவரங்களின்படி, 1990-ஆம் ஆண்டில் அப்போது 12 நாடுகளைக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.5 சதவீதத்தைக் கொண்டிருந்தது. இன்று 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு வெறும் 16.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.
எகானமிஸ்ட் இதழில் வெளியான ஒரு கருத்துரையில், டிராகி பின்வருமாறு குறிப்பிட்டார்: “கடந்த காலத்தில், மெதுவான வளர்ச்சியை ஒரு சிரமமாகப் பார்க்க முடிந்ததே தவிர, அது ஒரு பேரழிவாகக் கருதப்படவில்லை. ஆனால் இனி அப்படியல்ல. ஐரோப்பாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கும் நிலையில், வளர்ச்சியை அடைய உற்பத்தித்திறனில் அதிக முன்னேற்றம் காண வேண்டியிருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் 2015 முதல் கண்டுவரும் சராசரி உற்பத்தித்திறன் வளர்ச்சியை மட்டுமே தொடர்ந்தால், அது 2050 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியை மாறாமல் வைத்திருக்க மட்டுமே போதுமானதாக இருக்கும்.”
முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றிய வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற நிலைமைகள், மெதுவான விகிதத்தில் இருந்தாலும், மறைந்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் உலக வர்த்தக விரிவாக்கம் சம்பந்தப்பட்ட பனிப்போருக்குப் பிந்தைய சூழ்நிலை இப்போது “மங்கி வருகிறது” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. மேலும் “பலதரப்பு வர்த்தக ஒழுங்கு ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது மற்றும் விரைவான உலக வர்த்தக வளர்ச்சியின் சகாப்தம் கடந்துவிட்டதாகத் தெரிகிறது.”
1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ரஷ்யாவுடனான உறவுகள் “இயல்பாக்கப்பட்ட” நிலையில், ஐரோப்பா அதன் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது. “ஆனால் ஒப்பீட்டளவில் மலிவான எரிசக்தியின் இந்த ஆதாரம் இப்போது ஐரோப்பாவிற்கு பெரும் செலவினால் மறைந்துவிட்டது.”
இதன் விளைவு என்னவென்றால், அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ சக்திகளால் தூண்டப்பட்ட உக்ரேன் போர் தொடங்கியதைத் தொடர்ந்து, 2022 இல் எரிசக்தி விலைகள் அவற்றின் உச்சத்தில் இருந்து சற்றே வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் இப்போதும் அமெரிக்காவை விட 2-3 மடங்கு அதிக மின்சார விலைகளையும், இயற்கை எரிவாயு விலைகள் 4-5 மடங்கு அதிகமாக இருப்பதுக்கும் முகங்கொடுக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு மாற்றத்திற்கான முதல் தேவை “புதுமைகளை துரிதப்படுத்த வேண்டும் மற்றும் புதிய வளர்ச்சி இயந்திரங்களைக் கண்டறிய வேண்டும்” என்பதாகும். இங்கே டிராகி முன்னேறிய தொழில்நுட்பங்களின் அபிவிருத்தியை, குறிப்பாக எதிர்கால வளர்ச்சியை உந்துவதற்காக செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் இந்த நெருக்கடியான பகுதியில் ஐரோப்பாவின் நிலை சரிந்து வருகிறது.
உலகின் முன்னணி 50 தொழில்நுட்ப நிறுவனங்களில் நான்கு மட்டுமே ஐரோப்பாவைச் சேர்ந்தவை. 2013 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், உலகளாவிய தொழில்நுட்ப வருவாயில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு 22 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே வேளையில், அமெரிக்காவின் பங்கு 30 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.
1990-களின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உற்பத்தித்திறன் இடைவெளி அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, “இணையத்தால் முன்னெடுக்கப்பட்ட முதல் டிஜிட்டல் புரட்சியை ஐரோப்பா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதே” என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. தற்போது ஒரு புதிய டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பா “மேலும் பின்தங்கும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.”
“மிகப்பெரிய ஐரோப்பிய கிளவுட் ஆபரேட்டர் (cloud operator) ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் வெறும் 2 சதவீதத்தைக் கொண்டுள்ளது. குவாண்டம் கணினி அடுத்த பெரிய கண்டுபிடிப்பாக உருவாக உள்ளது. ஆனால், குவாண்டம் முதலீட்டின் அடிப்படையில் முதல் பத்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஐந்து அமெரிக்காவிலும், நான்கு சீனாவிலும் உள்ளன. எதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.”
தானியங்கி ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளில் சில புதுமைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், “புதுமையான டிஜிட்டல் நிறுவனங்கள் பொதுவாக ஐரோப்பாவில் விரிவடைவதிலும் நிதி ஈர்ப்பதிலும் தோல்வியடைகின்றன. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிந்தைய கட்ட நிதியுதவியில் ஒரு பெரும் இடைவெளியாகப் பிரதிபலிக்கிறது. உண்மையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாகத் தொடங்கப்பட்டு 100 பில்லியன் யூரோவுக்கு மேல் சந்தை மதிப்பைக் கொண்ட எந்த ஐரோப்பிய ஒன்றிய நிறுவனமும் இல்லை. மாறாக, அமெரிக்காவில் 1 டிரில்லியன் யூரோவுக்கு மேல் மதிப்புள்ள அனைத்து ஆறு நிறுவனங்களும் இந்தக் காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளன.”
1999-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சியும், யூரோ என்ற பொது நாணயத்தின் அறிமுகமும், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களின் ஒரு முயற்சியாகும். இதன் நோக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் சாத்தியமான கட்டமைப்பை உருவாக்குவதும், ஐரோப்பிய கண்டம் போட்டியிடும் தேசிய அரசுகளாக காலாவதியான முறையில் பிரிக்கப்பட்டிருப்பதால் எழும் பிரச்சினைகளை சமாளிப்பதும் ஆகும்.
ஆனால் ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவது எப்போதுமே ஒரு கற்பனாவாதமாகவே இருந்தது. ஏனென்றால், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொன்றும் தேசிய-அரசு அமைப்புமுறையில் வேரூன்றியிருக்கின்றன, அந்த நிலைமைகளின் கீழ் அவற்றுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றனவே அன்றி குறையவில்லை.
இதனால், ஒருங்கிணைந்த தொழில் கொள்கையை உருவாக்கும் முயற்சிகள் முடங்கியுள்ளன. ஒற்றைச் சந்தை “அதிக நிதியியல் இடத்தைக் கொண்ட நாடுகளின் திறனாலும் [இங்கே குறிப்பிடப்படுவது ஜேர்மனி] மற்றும் நிதியியல் கருவிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாமையாலும்” மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டுமொத்தமாக தனது தொழில்துறை இலக்குகளுக்கு நிதியளிப்பதில் பெருந்தொகையை செலவிடுகிறது. எனினும், நிதி வழங்கும் கருவிகள் தேசிய எல்லைகளுக்கேற்ப பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், உறுப்பு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலும் இவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிதறல் பெரிய அளவிலான செயல்பாடுகளைத் தடுக்கிறது. குறிப்பாக, புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்கான முதலீடுகளுக்குப் பெரிய மூலதனத் திரட்டல்களை உருவாக்குவதைத் தடுக்கிறது.”
கார்பன் நீக்கம் மற்றும் பசுமைத் தொழில்நுட்பத்தில் ஐரோப்பா முன்னணி வகிப்பதை இந்த அறிக்கை வலியுறுத்தியது. ஆனால், அது முன்பு அனுபவித்த நன்மைகள் இப்போது சிதைந்து வருகின்றன. 2020-ஆம் ஆண்டிலிருந்து காப்புரிமைக் கண்டுபிடிப்புகள் மந்தமடைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியது. 2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கலங்களுக்கான மூலதன விரிவாக்க முதலீட்டில் 65 சதவீதத்தைக் கொண்டிருந்தது. ஆனால், இது 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வெறும் 10 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அந்த அறிக்கைக்கான முன்னுரையில், டிராகி பின்வருமாறு குறிப்பிட்டார்: உலகளாவிய கார்பன் நீக்க முயற்சி ஐரோப்பிய தொழில்துறைக்கு ஒரு “வளர்ச்சி வாய்ப்பாக” அமைகிறது, எனினும் இது உறுதியானதல்ல.
“பசுமை தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற தொழில்களில் சீனப் போட்டி கூர்மையடைந்து வருகிறது, இது பாரிய தொழில்துறை கொள்கை மற்றும் மானியங்கள், மூலப்பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் கண்டம் தழுவிய அளவில் உற்பத்தி செய்யும் திறன் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையால் உந்தப்படுகிறது.”
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இருமுனைச் சிக்கலை எதிர்கொள்கிறது. ஒருபுறம், கார்பன் நீக்க இலக்குகளை அடைவதற்கான மிகவும் மலிவான வழியை சீனா வழங்கக்கூடும். மறுபுறம், “சீனாவின் அரசு ஆதரவு பெற்ற போட்டியானது, நமது உற்பத்தித்திறன் மிக்கத் தூய்மைத் தொழில்நுட்பம் மற்றும் வாகனத் தொழில்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.”
பசுமைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான முக்கிய கனிமங்களை அணுகுவதற்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், கார்பன் நீக்கம் என்பது இராணுவச் செலவினம் மற்றும் திறன்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. இதனுடன், மிக நவீன கணினி சில்லுகளுக்கான (computer chips) அணுகலும் இணைந்துள்ளது.
“நேரடியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், ஐரோப்பாவுக்கு ஒரு ‘வெளியுறவு பொருளாதாரக் கொள்கை’ அவசியமாகிறது. மேலும், நாம் தயாராக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய இராணுவச் செலவு செய்வதாக உள்ளது, ஆனால் இது நமது பாதுகாப்பு தொழில்துறை திறனின் வலிமையில் பிரதிபலிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
அது “மிகவும் சிதறலாக உள்ளது, இது பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறனைத் தடுக்கிறது. மேலும், தரநிலைப்படுத்தல் மற்றும் சாதனங்களின் ஒருங்கிணைப்பு இல்லாமை காரணமாக பாதிக்கப்படுகிறது. இவை ஒரு ஒருமித்த சக்தியாக செயல்படும் ஐரோப்பாவின் திறனைப் பலவீனப்படுத்துகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
அறிக்கையின் முக்கிய பகுதியில், டிராகி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: முக்கியமான மூலப்பொருட்களுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருப்பது மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலையை அடைந்து வருகிறது. இது விநியோகச் சங்கிலிகளுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. அதே வேளையில், ஐரோப்பாவின் மொத்த பாதுகாப்புச் செலவினம் அமெரிக்காவின் செலவில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது. மேலும், ஐரோப்பிய பாதுகாப்புத் தொழில்துறை பல தசாப்தங்களாக குறைவான முதலீடு மற்றும் கையிருப்புக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது.
“உண்மையான மூலோபாய சுதந்திரத்தை எட்டுவதற்கும் அதன் உலகளாவிய புவிசார் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும், ஐரோப்பாவுக்கு இந்த சார்புகளை நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாப்பு முதலீட்டை வலுப்படுத்தவும் ஒரு திட்டம் அவசியப்படுகிறது.”
தொழில்நுட்பம், கார்பன் நீக்கம் மற்றும் இராணுவத் திறன் ஆகியவற்றில் தனது இலக்குகளை அடைய, ஐரோப்பிய ஒன்றியம் தனது முதலீட்டை 800 பில்லியன் யூரோ வரை உயர்த்த வேண்டும் என டிராகி கணக்கிட்டுள்ளார். இது ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதமாகும். ஒப்பீட்டளவில், 1948-51 காலகட்டத்தில் மார்ஷல் திட்டம் உதவி பெற்ற நாடுகளுக்கு வழங்கிய ஊக்கமானது, அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 2 சதவீதத்திற்கு இடையில் இருந்தது.
இதற்கு அனைத்து ஐரோப்பிய ஒன்றியக் கடன்களும் உள்ளடங்கிய நிதிய அமைப்புமுறையில் ஒரு பெரும் மறுசீரமைப்பு தேவைப்படும். கூட்டாகக் கடன் வாங்குவது ஒரு “மிகவும் உணர்வுபூர்வமான” விவகாரம் என்பதை ஒப்புக்கொண்ட டிராகி, அது “ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக இருக்கும்” என்று கூறினார்.
அந்த உணர்வுகள் உடனடியாக வெளிப்பட்டன. யூரேசியா குழும ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முஜ்தபா ரஹ்மான் பைனான்ஷியல் டைம்ஸுக்கு கூறுகையில், “பாரிஸ் மற்றும் பேர்லினில் உள்ள அரசியல் யதார்த்தங்கள் அவரது பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை பூஜ்ஜியமாக்குகின்றன,” என்றார்.
பேர்லினில் இருந்து வந்த எதிர்வினை அந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியது. ஜேர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் எக்ஸ்/ட்விட்டரில் எழுதுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுக் கடன் வாங்குதல் கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்காது என்றார். நிறுவனங்களுக்கு மானியங்கள் பற்றாக்குறை இல்லை, மாறாக அவை “அதிகாரத்துவம் மற்றும் திட்டமிட்ட பொருளாதாரத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
அவரது டச்சு சகாவான எல்கோ ஹெய்னென் கூறுகையில், ஐரோப்பா வளர வேண்டும் என்பதில் அவர் முழுமையாக உடன்படுவதாகவும், ஆனால் அதற்கு சீர்திருத்தம் தேவைப்படுவதாகவும், “அதிக பணம் எப்போதும் தீர்வு அல்ல” என்றும் கூறினார்.
அந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்டபோது, வான் டெர் லெயன் கூடுதல் கடன் வாங்குவது குறித்த கருத்தை ஆமோதிப்பதைத் தவிர்த்தார். ஆனால், இத்தகைய ஊசலாட்டம் தொடர்ந்தால் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று டிராகி வலியுறுத்தியுள்ளார். “காலந்தாழ்த்துதல் மட்டுமே ஒருமித்த கருத்தைப் பேண முடியும் என்ற மாயையை நாம் கைவிட வேண்டும். உண்மையில், காலந்தாழ்த்துதல் மெதுவான வளர்ச்சியை மட்டுமே விளைவித்துள்ளது, மேலும் அது நிச்சயமாக கூடுதல் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
இப்போதைய பாதையின் தொடர்ச்சியின் பின்விளைவுகளை டிராகி விரிவாக எடுத்துரைக்கவில்லை. ஆனால் அவர் “நலன்புரி” மற்றும் ஐரோப்பாவின் “சமூக மாதிரி” என்றழைக்கப்படும் விஷயங்களில் உள்ள அபாயங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அதாவது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது ஆழ்ந்த தாக்குதல்கள் நடத்துப்படும் என்பதாகும்.
ஆனால் அவரது திட்டம் முன்னேற்றத்திற்கான வழியை வழங்கவில்லை. மாறாக, இது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கத்திற்கு ஓரளவு வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தை சாத்தியமாக்கிய நிலைமைகள் பூகோள முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளங்களிலேயே ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களால் சிதைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் எதிர்கால இணக்கமான பொருளாதார அபிவிருத்திக்கான ஒரு திட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால், முதலாளித்துவத்தின் கீழ் இது சாத்தியமில்லை என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவ்விதத்தில் இந்த அறிக்கையானது, அதன் சொந்த வழியில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மார்க்சிச இயக்கம் போராடி வந்த முன்னோக்கை, அதாவது முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே அத்தகைய எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.