முன்னோக்கு

அமெரிக்காவும் ரஷ்யாவும் வெளிப்படையான போரின் விளிம்பில் உள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அக்டோபர் 26, 2022 அன்று வடமேற்கு ரஷ்யாவின் பிளெசெட்ஸ்கில் (Plesetsk) உள்ள ஒரு ஏவுதளத்திலிருந்து ரஷ்யாவின் அணுசக்தி பயிற்சியின் ஒரு பகுதியாக யார்ஸ் (Yars) கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதிக்கப்படுகிறது. [AP Photo/Russian Defense Ministry Press Service]

அமெரிக்காவும் ரஷ்யாவும் வெளிப்படையான போரின் விளிம்பிற்கு வந்துள்ளன. நேட்டோவின் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்ய பிராந்தியத்தைத் தாக்குவதற்கு, உக்ரேனை அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரைவில் அனுமதிப்பது தொடர்பான அறிக்கைகள் முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், இந்த திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட நியூ யோர்க் டைம்ஸ், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் உக்ரேனுக்கு பெருமளவில் தற்காப்பு ஆயுதங்களை வழங்கிய [பைடெனின்] முந்தைய சலுகைகளை விட, மிகவும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவைப் பற்றிய “விவாதங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

உண்மையில், ஸ்டார்மர் மற்றும் பைடெனுடனான சந்திப்பு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவின் இறுதி ஒப்புதலாக மட்டுமே விளக்கப்பட முடியும். இவர்களின் சந்திப்புக்கு பின்னர் ஸ்டார்மரின் கருத்துக்களைக் குறிப்பிட்ட டைம்ஸ், ஸ்டார்மர் “ஏவுகணைகள் குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அவர் எதிர்பார்க்கிறார்” என்று தெரிவித்துள்ளது.

“ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகள் மீது Storm Shadow குரூஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்க ஒரு முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது” என்று கார்டியன் புதனன்று அறிவித்தது.

ஸ்டார்மர் செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வாஷிங்டனுக்கு வந்தார். தெளிவாக, தொழிற் கட்சியின் பிரதம மந்திரி ஜனநாயகக் கட்சி தலைவருடன் அவசர கலந்துரையாடல்களை நடத்தி திட்டங்களை இறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய நகரங்களைத் தாக்குவதற்கு நேட்டோவின் ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்பது, நேட்டோவை போரில் ஒரு பங்காக ஆக்கிவிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்து ஒரு நாளுக்குப் பிறகு, பைடெனுக்கும் ஸ்டார்மருக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது. இது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தலை எழுப்புகிறது.

இந்த திட்டமிடப்பட்ட அறிவிப்புக்கு பதிலளித்த புட்டின், “இந்த முடிவு எடுக்கப்பட்டால், உக்ரேனில் நடக்கும் மோதலில் நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் போரில் பங்கேற்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்களின் நேரடி பங்கேற்பு, நிச்சயமாக, மோதலின் சாரத்தை, இயல்பை கணிசமாக மாற்றுகிறது” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

போரின் ஒரு பரந்த விரிவக்கம், அதன் அனைத்து பேரழிவு விளைவுகளுடன், முற்றிலும் மக்களின் முதுகுக்குப் பின்னால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டார்மர் உடனான அவரது சந்திப்புக்குப் பின்னர், பைடெனிடம் ஒரு நிருபர், “விளாடிமிர் புட்டினின் போர் அச்சுறுத்தல் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று நேரடியாக கேட்டார். இதற்கு பதிலளித்த பைடென் அதிர்ச்சியூட்டும் ஆணவத்துடன், “ வாயை மூடுங்கள் ” என்று குரைத்தார். இந்த வார்த்தைகள் பத்திரிகைகளை நோக்கி கூறப்பட்டன, ஆனால் அது ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருந்தது: எங்களை கேள்வி கேட்க வேண்டாம்.

அதே கேள்வியை மீண்டும் கேட்டபோது, வெள்ளை மாளிகை ஊழியர்கள் உரத்த குரலில் பத்திரிகையாளர்களை அறையிலிருந்து வெளியேற்றும் முன், “நான் விளாடிமிர் புட்டின் பற்றி அதிகம் நினைக்கவில்லை” என்று பைடென் பதிலளித்தார்.

அணுஆயுத அரசுகளுக்கு இடையிலான ஒரு முழு அளவிலான போருக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்தும் ஒரு முடிவை எடுக்க அமெரிக்காவும் பிரித்தானியாவும் தயாரிப்பு செய்து வருகின்றன. அது அணு ஆயுதங்களுடன் தொடங்காவிட்டாலும், அதன் விளைவுகள் மிகப்பெரியவையாக இருக்கும்.

ரஷ்யாவிற்குள் ஆழமாகத் தாக்க நேட்டோ ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு என்னவாக இருந்தாலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் பகிரங்க போரின் விளிம்பில் உள்ளன என்பதே மறுக்கவியலாத உண்மையாகும்.

ஒரு தடையற்ற இராணுவ தர்க்கம் வேலை செய்கிறது. நேட்டோ சக்திகள், அவற்றின் உக்ரேனிய பினாமிப் படையினர் சோர்வடைந்து இராணுவ தோல்வியை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் பதிலளித்து வருகின்றன. நேட்டோவின் அதிக மற்றும் நேரடியான தலையீட்டின் மூலம் மட்டுமே போரின் முழுத் திட்டமும் மீட்கப்பட முடியும்.

எவ்வாறாயினும், பைடென் நிர்வாகம், புட்டின் உளறுகிறார் என்றும் ரஷ்ய நகரங்கள் மீதான நேட்டோ தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க மாட்டார் என்றும் கூறி, போரை பொறுப்பற்ற முறையில் விரிவுபடுத்துவதால் ஏற்படும் பரந்த ஆபத்துகளை குறைத்து மதிப்பிட முயல்கிறது.

புட்டினின் அறிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டதற்கு, வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை பின்வருமாறு கூறியது: “கடந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் என்ன கூறி வந்தாரோ அதையே இது மிகவும் ஒத்திருக்கிறது, அவர் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்... எனவே இது உண்மையில் அதிபர் புட்டினின் புதிய அறிக்கை அல்ல”. 

நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய நகரங்கள் மீதான தாக்குதல்களை ஊக்குவித்துவரும் குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் எழுதிய ஒரு கடிதத்தில் இந்த வலியுறுத்தல் எதிரொலித்தது. “ரஷ்யாவில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை உக்ரேன் பயன்படுத்தியதோ அல்லது ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதன் இராணுவ ஊடுருவல்களோ (இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷ்ய பிராந்தியத்தின் மீதான முதல் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு) ரஷ்ய விரிவாக்க பதிலைத் தூண்டவில்லை.

கடந்த காலத்தில் அமெரிக்க ஆத்திரமூட்டல்களுக்கு புட்டின் பதிலடி கொடுக்கவில்லை என்பதால், அவர் மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டார் என்ற கூற்று தவறானது மற்றும் வெளிப்படையாக, பைத்தியக்காரத்தனமானது. இந்த அனுமானம் தவறாக இருந்தால் என்ன செய்வது?

உக்ரேனுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையானது, மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நிர்பந்திக்கப்படும் என்ற ரஷ்ய ஆளும் வர்க்கத்தால் பின்பற்றப்பட்ட மூலோபாயம் பொறிந்து போயுள்ளது. ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு சமரசம் காண்பதற்கான புட்டினின் ஒட்டுமொத்த மூலோபாயமும் ஏகாதிபத்தியத்தின் இயல்பு குறித்த ஒரு முழுமையான தவறான புரிதலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இன்று, நேட்டோவின் விரிவாக்கத்துக்கு விடையிறுக்க புட்டினே கூட பெரும் அழுத்தத்தின் கீழ் உள்ளார். இனியும் அவர் பின்வாங்குவதற்கு இடமில்லாமல் போய்விட்டது. புட்டினின் உயர்மட்ட ஆலோசகர் ஒருவர், பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நேர்காணலில், ரஷ்யாவைப் பாதுகாப்பதற்காக அணு ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன என்றும், அவற்றைப் பயன்படுத்த அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன் பங்கிற்கு, உக்ரேனின் இராணுவ நிலை வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், பைடென் நிர்வாகம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், “களத்தில் உள்ள நிலைமைகள் போரின் ஒரு பெரிய தீவிரப்பாட்டிற்கு இட்டுச் செல்லும் என்பதை உறுதிப்படுத்த முயன்று வருகிறது.

நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே, கணக்கிட முடியாத விளைவுகளுடன், ஒரு பாரிய போர் விரிவாக்க நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

2014 லிருந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்து வருகின்ற இணையவழி மே தினக் பேரணிகளுக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் வழங்கிய உரைகளை உள்ளடக்கிய எச்சரிக்கையை எழுப்புதல்: போருக்கு எதிரான சோசலிசம் (Sounding the Alarm : Socialism Against War) என்ற நூலை இந்த மாதம் மேஹ்ரிங் புத்தக வெளியீடு (Mehring Books) வெளியிட்டது. 2014 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முதல் மே தின பேரணியில் டேவிட் நோர்த் உரையாற்றுகையில், பின்வருமாறு எச்சரித்தார்:

சீனா மற்றும் ரஷ்யாவுடனான போர் சாத்தியமற்றது —பிரதான ஏகாதிபத்திய சக்திகள் அணுஆயுத சக்திகளுடன் போர் அபாயத்தை எடுக்காது— என்று நம்புபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் வரலாறு, அதன் இரண்டு பேரழிவுகரமான உலகப் போர்கள் மற்றும் அதன் எண்ணற்ற மற்றும் மிகவும் இரத்தம் தோய்ந்த உள்ளூர் மோதல்களுடன், ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் எடுக்க தயாராக உள்ள அபாயங்களுக்கு போதுமான ஆதாரங்களை வழங்கியுள்ளது. உண்மையில், அவர்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மற்றும் இந்த பூமியின் தலைவிதியையும் கூட அபாயத்திற்கு உட்படுத்த தயாராக உள்ளனர். முதலாம் உலகப் போர் வெடித்து நூறு ஆண்டுகளுக்கும் இரண்டாம் உலகப் போர் தொடங்கி 75 ஆண்டுகளுக்கும் பின்னர், ஒரு மூன்றாம் ஏகாதிபத்திய போர் பேரழிவு அபாயத்திற்கு எதிரான போராட்டம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ளது.

உலகப் போர் அச்சுறுத்தல் குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளம் விடுத்த ஒவ்வொரு எச்சரிக்கையும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் தலையீடும் பாரிய போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் அபிவிருத்தியும் இல்லாமல், போரை நோக்கிய பயணத்தை எதுவும் தடுக்க முடியாது.

ஏகாதிபத்திய போருக்கு வழிவகுக்கின்ற அதே முரண்பாடுகள்தான் சமூகப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தை உருவாக்குகின்றன. இந்த அர்த்தத்தில், பயணிகள் விமானங்களை விநியோகிக்கும் ஒரு பிரதான நிறுவனத்தை மட்டுமல்ல, மாறாக ஒரு முக்கிய அமெரிக்க இராணுவ பாதுகாப்பு ஒப்பந்ததாரரையும் முடக்கியுள்ள போயிங்கில் (Boeing) 30,000 க்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உடனடி ஒப்பந்தச் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும், அது போரே வெளிப்பாடாக இருக்கும் முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த எதிர்ப்பு வெறுமனே தொழிற்சங்க மட்டத்தில் மட்டுமல்ல, மாறாக அரசியல் வழிவகைகளிலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். போயிங் தொழிலாளர்களின் இயக்கம் இராணுவ வெறிபிடித்தவர்களுக்கு எதிரான வர்க்க நடவடிக்கைக்கான ஒரு அணிதிரள்வுப் புள்ளியாக கட்டாயம் மாற வேண்டும். தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading