நவ-பாசிசவாதிகளின் ஆதரவுடன் வலதுசாரி பிரெஞ்சு அரசாங்கத்தை வழிநடத்த மக்ரோன் பார்னியரை நியமிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜூலை 7 தேர்தல்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களுடன் முன்னொருபோதும் இல்லாதளவில் ஏழு வார கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், வியாழனன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மிஷேல் பார்னியரை (Michel Barnier) பிரதமராக நியமித்தார். தேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையின் ஆதரவை வென்றெடுக்கக்கூடிய ஒரு அமைச்சரவையை தேர்ந்தெடுக்க பார்னியேர் இப்போது முயற்சிப்பார்.

பிரான்சின் புதிய பிரதமர், மிஷேல் பார்னியர், வலது, மற்றும் வெளியேறும் பிரெஞ்சு பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal), இடது, வியாழக்கிழமை, செப்டம்பர் 5, 2024 அன்று பாரிஸில் பதவி ஏற்றல் விழாவிற்கு வருகிறார் [AP Photo/Michel Euler]

மதிப்பிழந்த, வலதுசாரி குடியரசுக் கட்சியின் ஓர் உறுப்பினரான பார்னியரை தேர்ந்தெடுத்துள்ள மக்ரோன், தேர்தல்களை காலில் போட்டு மிதித்து, அதிவலதுசாரிகளை உத்தியோகபூர்வ அரசியலின் மையத்தில் இருத்துகிறார். ஜோன்-லூக் மெலன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP) ஜூலை 7 தேர்தல்களில் 182 இடங்களுடன் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. மக்ரோனின் குழுமக் (Ensemble) கூட்டணி 163 இடங்களையும், அதிவலது தேசிய பேரணி (National Rally – RN) 143 இடங்களையும் வென்றன, ஏனென்றால் தேசிய பேரணியின் வெற்றியைத் தடுப்பதாக என கூறிக்கொண்டு புதிய மக்கள் முன்னணி குழும வேட்பாளர்களை ஆதரித்தது.

மெலோன்சோனின் ஆதரவுடன் தனது கட்சியை பொறிவில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருந்த பிரான்சின் ஜனாதிபதி, அதிவலது ஆதரவுடன் ஆட்சி செய்யக்கூடிய ஒரு வலதுசாரி பிரதம மந்திரியை இப்போது பெயரிட்டுள்ளார். LR உம் குழுமக் கூட்டணியும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் 233 இடங்களை மட்டுமே கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. 577 இடங்கள் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில் பார்னியேருக்கு 289 இடங்கள் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் நேற்று, RN நிர்வாகிகள், பார்னியரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் ஒரு மத்திய பாத்திரம் வகித்ததாகவும், குறைந்தபட்சம் ஆரம்பத்திலாவது அவரது அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

ஒரு மக்ரோன்-பார்னியர் அரசாங்கம் வன்முறையான வலதுசாரி கொள்கைகளைத் திணித்து, தாமதமின்றி விரைவிலேயே, தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பைத் தூண்டும். பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களின், எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் கொள்கைகளுக்கு, குறிப்பாக, ரஷ்யாவை எதிர்த்துப் போரிட துருப்புக்களை அனுப்புவதன் மூலம் உக்ரேனில் நேட்டோ போரை தீவிரப்படுத்தவும், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக செலவினங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொள்வதற்கும் அது உறுதிபூண்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் (Brexit) பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த, பிரதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக அறியப்படும் 73 வயதான பார்னியர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவவாதி ஆவார். அவர் கடுமையான சிக்கனத்தையும், பெருநிறுவன வரி குறைப்புகளையும் ஆதரிப்பவர். 'உரிமை பெற்ற மக்களை (entitled people) ' உருவாக்குகிறது என கருதி சமூக செலவினங்களை அவர் கண்டிக்கிறார், மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (renewable energy) எதிர்க்கிறார். பெரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் பாரிய வேலைநிறுத்தங்களுக்கு இடையே, 2023 ஆம் ஆண்டில் மக்ரோன் திணித்த இரண்டாண்டுகள் ஓய்வூதிய அதிகரிப்பை 64 ஆக உயர்த்துவதற்கும் அப்பால், ஓய்வூதிய வயதை இன்னும் கூடுதலாக ஓராண்டுக்கு அதிகரிக்க அவர் முன்மொழிந்துள்ளார்.

குறிப்பாக பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பார்னியேர் வன்முறையான புலம்பெயர்ந்தோர்-விரோத, வெளிநாட்டவர் விரோத நிலைப்பாடுகளை ஏற்றுக் கொண்டார் . 2021 இல், பிரான்சுக்குள் புலம்பெயர்வதற்கு ஐந்தாண்டு தடைக்கு அழைப்பு விடுத்தார், இல்லையெனில் “இன்னும் அதிகமான பிரெக்ஸிட்கள் இருக்கும்” என்று கூறினார். பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு விதிகளை மீறுவதற்கு 'சுதந்திரமாக செயல்பட வேண்டும்' என்று கோரிய அவர் , புலம்பெயர்வு தொடர்பான முடிவுகள் “ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் நீதித்துறையால்” அல்லாமல் சட்ட அமலாக்கத்தால் எடுக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்.

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய இயந்திரத்தில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த பார்னியே, நேட்டோவின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றார். உக்ரேனில் நடந்துவரும் போரில், முன்னதாக மக்ரோனால் முன்னெடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரெஞ்சு இராணுவ சுயாட்சி கொள்கைகளை விமர்சித்த அவர், நேட்டோவை ஐரோப்பிய பாதுகாப்பின் ஒரு “தூண்” என்று புகழ்ந்து தள்ளினார்.

“சாத்தியமான அளவுக்கு ஸ்திரமாக இருக்கவும், பரந்த ஐக்கியத்தை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறவும்” நோக்கம் கொண்டு, பார்னியேர் “நாட்டிற்கும் பிரெஞ்சு மக்களுக்கும் சேவையாற்றும் ஒரு ஐக்கியத்திற்கான அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவார்” என்று குறிப்பிட்டு, எலிசே ஜனாதிபதி மாளிகை ஒரு சம்பிரதாயமான அறிக்கையில் பார்னியேரின் நியமனத்தை அறிவித்தது.

பார்னியரை தேர்ந்தெடுப்பதில் தாங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்ததாகவும், அவரது அரசாங்கம் தங்களுக்கு ஏற்புடைய கொள்கைகளை செயல்படுத்தும் வரையில், அவர்கள் அதை மிதக்க வைக்க இருப்பதாகவும் நேற்று அதிவலதுசாரி RN நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர்.

RN தலைவர் மரின் லு பென் நாடாளுமன்றத்தில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், “நாங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகளைக் கோரியுள்ளோம், அதாவது, RN வாக்காளர்களை மதிக்கக் கூடிய ஒரு பிரதம மந்திரியை நாம் கொண்டிருக்க வேண்டும். … திரு. பார்னியர் அந்த அளவுகோலை நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன். ஏனைய விடயங்களைப் பொறுத்த வரையில், கணிசமான விடயங்களில், திரு பார்னியரின் பொதுக் கொள்கை அறிக்கை என்ன கொண்டுவரும் என்பதையும், வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் அவசியமான சமரசங்களை அவர் எவ்வாறு மேற்கொள்கிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

பெல்ஜிய ஸ்தாபக நாளேடான Le Soir, RN “புதிய பாராளுமன்றத்திற்கான நடுவர் நிலையில் உள்ளது” என்று முடிவுக்கு வந்த அதேவேளையில், “பார்னியர் என்ற ஒரே பெயர் மட்டுமே [லு பென்] உடனடியாக வீட்டோ செய்யவில்லை” என்று Courrier International எழுதியது.

RN ஆல் ஆதரிக்கப்படும் பார்னியர் அரசாங்கத்தின் அறிவிப்பு, தேர்தல் முடிவுகளை காலடியில் போட்டு நசுக்குகிறது. பெருந்திரளான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு அதிவலது அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக, NFP வேட்பாளர்களுக்கு அல்லது NFP ஆல் ஆதரவளிக்கப்பட்ட குழுமக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். மக்களில் பெரும் பெரும்பான்மையினர் மேலதிக ஓய்வூதிய வெட்டுக்கள், காசாவில் இனப்படுகொலை மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ விரிவாக்கம் ஆகியவற்றை எதிர்த்து வருகின்ற நிலைமைகளின் கீழ் இடம்பெற்ற வாக்களிப்பு, கொள்கையில் மாற்றத்தை கட்டாயப்படுத்தும் என்ற பரந்த எதிர்பார்ப்புகள் இருந்தன.

தேர்தல்களைத் தொடர்ந்து வந்த ஏழு வார கால பேச்சுவார்த்தைகளின் போது, மக்ரோனும் நவ-பாசிசவாதிகளும் முந்தைய மக்ரோன் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான அரசியல் திட்டநிரலை எவ்வாறு பின்தொடர்வது என்பது குறித்து, தொடர்ச்சியான சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

புதிய மக்கள் முன்னணி மற்றும் அதனுடன் இணைந்த மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 7) மக்ரோனின் தேர்தல் திருட்டுக்கு எதிராக தேசியளவிலான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. மக்ரோனுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றாலும், இது தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அரசியல் முன்னோக்கு மற்றும் நோக்குநிலை குறித்த ஆழமான கேள்விகளை முன்நிறுத்துகிறது. உண்மையில், தேர்தல் முடிவை மதித்து மக்ரோனுக்கு கீழ் சேவையாற்ற ஒரு பிரதம மந்திரியை நியமிக்க மக்ரோனுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக தொழிலாளர்களால் ஒரு தேசிய, முற்றிலும் “ஜனநாயக” அடிப்படையில் போர், இனப்படுகொலை மற்றும் சமூக பிற்போக்குத்தனத்தை எதிர்த்துப் போராட முடியாது.

பிரான்சிலும், அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள், ஆழமடைந்துவரும் உலகப் போர், சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் முதலாளித்துவத்தின் ஒரு சர்வதேச நெருக்கடியில் வேரூன்றிய பொலிஸ்-அரசு ஆட்சிகள், ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை தேசிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முறையீடு செய்வதன் மூலம் தீர்க்க முடியாது. அவை இன்று வெட்கமின்றி உள்நாட்டில் தங்கள் பாசிச அனுதாபத்தையும், வெளிநாடுகளில் போர் மற்றும் இனப்படுகொலைக்கான தங்கள் ஆதரவையும் காட்டுகின்றன. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை.

உண்மையில், பார்னியே அரசாங்கத்தின் பெயரை குறிப்பிட்டிருப்பது மெலோன்சோன் மற்றும் அவரது அடிபணியாத பிரான்ஸ் (La France insoumise – LFI) கட்சியின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. அவர், பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), பசுமைக் கட்சி மற்றும் தேர்தல்களில் மக்ரோனை ஆதரித்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவற்றுடன் ஒரு கூட்டணியாக புதிய மக்கள் முன்னணியை (NFP) உருவாக்கினார். மக்ரோனின் அதிவலது சதித்திட்டங்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில், அதன் வாக்காளர்களை, குறிப்பாக நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு எந்த முறையீடும் செய்ய NFP மறுத்துள்ளது. இவ்விதத்தில் மக்ரோன் ஒரு அதிவலது-ஆதரவிலான அரசாங்கத்தை மக்ரோன் நிறுவுவதற்கு வசதியாக ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

இப்போது, NFP அரசியல்வாதிகள் மக்ரோனைத் தாக்கி வருகின்றனர், அடிபணியாத பிரான்ஸ் கட்சியைப் பொறுத்த வரையில், செப்டம்பர் 7 போராட்டங்களில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கின்றனர். “தேர்தல் பிரெஞ்சு மக்களிடமிருந்து திருடப்பட்டுள்ளது. அந்த செய்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது,” என்று ட்வீட் செய்த மெலோன்சோன், “சாத்தியமான மிக சக்திவாய்ந்த அணிதிரட்டலுக்கு” அழைப்புவிடுத்துள்ளார்.

மக்ரோன் “ஒரு சர்வாதிகாரியாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். மிஷேல் பார்னியரின் பெயரைக் குறிப்பிடுவதன் மூலமாக, வாக்குப் பெட்டியில் மக்கள் இறையாண்மையையும் வாக்காளர்களின் தெரிவுகளையும் ஜனாதிபதி மதிக்க மறுக்கிறார்,” என்று மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மதில்டே பனோட் கருத்துரைத்தார். செப்டம்பர் 7 போராட்டங்களில் பங்கேற்பதன் மூலமாக, “ஒரு ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு” எதிராக போராடுமாறு அவர் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சோசலிஸ்ட் கட்சி மக்ரோனைக் கண்டிக்க அழைப்புவிடுத்த அதேவேளையில், தேர்தலில் வாக்களித்த “மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள் மீது மக்ரோனின் மொத்த அவமதிப்பு” மற்றும் “தேசிய பேரணி மற்றும் அதன் யோசனைகள் அதிகாரத்திற்கு வந்ததை” கண்டித்து ​​NFP கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மக்ரோனின் கொள்கைகளுடன் முறித்துக் கொள்ளும்” ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அதன் “தேர்தல் பிரச்சாரத்தின் போது அது அளித்த மனப்பூர்வமான சூளுரை”யை அது மீண்டும் வலியுறுத்தியது.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முதல் பணி, அவர்களின் போராட்டங்களை போலி-இடது கட்சிகள் மற்றும் NFPயின் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் நாசமாக்க முடியாது என்பதை உறுதி செய்வதாகும். மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் கசப்பான உதாரணம், மக்ரோன் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டபோதும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மௌனம் சாதித்து வந்தன. இது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மக்ரோன் அரசாங்கத்திற்கும், பொலிஸ் அரசை வீழ்த்த அச்சுறுத்தும் தொழிலாள வர்க்க இயக்கத்திற்கும் இடையிலான ஒரு தெரிவை முகங்கொடுக்கின்ற நிலையில், அவர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக மக்ரோனை ஆதரிப்பார்கள்.

ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை மற்றும் பொலிஸ்-அரசு பிற்போக்குத்தனத்திற்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பின் அடிப்படையில், NFP அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, மக்ரோன் மற்றும் தேசிய பேரணி கூட்டணிக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத பிரச்சினையாகும். இதற்கு, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான புரட்சிகர சோசலிச எதிர்ப்பின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் இயக்கத்துடன் இணைக்கின்ற சாமானிய தொழிலாளர் போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading