முன்னோக்கு

அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடுக் கட்சியின் தேர்தல் வெற்றியில் இருந்து படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கிழக்கு ஜேர்மனியின் எர்ஃபர்ட்டில் நடந்த ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் பேரணியில், துரிங்கியாவில் AfD இன் தலைவர் பிஜோர்ன் ஹோக் கையசைக்கிறார். [AP Photo]

தூரிங்கியா மற்றும் சாக்சோனி மாநிலத் தேர்தல்களில் அதிதீவிர வலதுசாரிக் கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (Alternative for Germany - AfD) தேர்தல் வெற்றியும் ஜேர்மனியில் மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கத்திலுள்ள கட்சிகளுக்கான படுதோல்வியும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு முக்கியமான படிப்பினைகளைக் கொண்டிருக்கின்றன.

ஊடகங்கள் மற்றும் அரசியல் வருணனைகளின் வெள்ளத்திற்கு இடையே, நாஜி சர்வாதிகாரம் முடிந்து எட்டு தசாப்தங்களுக்குப் பின்னர், ஒரு அதி வலதுசாரி தீவிரவாத கட்சி ஏன் மீண்டுமொருமுறை ஜேர்மன் மாநில பாராளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக ஆக முடியும் என்பதற்கான விளக்கத்தை ஒருவர் வீணாக தேடுகிறார்.

செப்டம்பர் 1 அன்று இடம்பெற்ற மாநில தேர்தலில் AfD, தூரிங்கியாவில் 32.8 சதவீத வாக்குகளையும் சாக்சோனியில் 30.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இத்தனை சதவீத வாக்குகள், 1932 நவம்பரில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், நாஜிக்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் பெற்ற 33.1 சதவீத வாக்குகளுக்கு ஏறத்தாழ சமமாகும். இவ்விதத்தில் தூரிங்கியாவில் புதிய மாநில பாராளுமன்றத்தில் AfD இதுவரையில் மிக பலமான கன்னையாக உள்ளதுடன், சாக்சோனியில் CDU ஐ விட (ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் - Christian Democratic Union of Germany ) ஒரேயொரு இடம் மட்டுமே பின்தங்கி உள்ளது.

ஜேர்மனியின் மத்தியிலுள்ள கூட்டாட்சி கூட்டணி அரசாங்கத்தின் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சியினர் (SPD), பசுமைக் கட்சியினர் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் (FDP) கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, அவர்கள் தூரிங்கியாவில் வெறும் 10.2 சதவீத வாக்குகளையே பெற்றனர், இது AfD ஐ விட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகும். சாக்சோனியில் அவர்கள் ஒட்டுமொத்தமாக 13.3 சதவீத வாக்குகளையே பெற்றனர்.

இந்த பெரும் அரசியல் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம், ஒரு நீதிமன்ற உத்தரவின்படி ஒரு “பாசிசவாதி” என்று விவரிக்கக் கூடிய AfD மற்றும் அதன் உள்ளூர் தலைவரான பியோர்ன் ஹொக் (Björn Höcke) இன் குணாதிசயத்தில் தங்கியிருக்கவில்லை. மாறாக, இதனை அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின், குறிப்பாக “இடது” என்று சொல்லப்படுபவற்றின் வலதை நோக்கிய திருப்பத்தின் ஒரு விளைபொருள் என்று விளக்கப்பட வேண்டும். மேலும், அவர்கள் AfD க்கு சிவப்புக் கம்பளம் விரித்து அதற்கான அனைத்துக் கதவுகளையும் திறந்தனர்.

SPD, பசுமைவாதிகள் மற்றும் FDP ஆகியவை ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் கூட்டாட்சி அரசாங்கத்தை எடுத்துக் கொண்டதில் இருந்து, அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலது பக்கத்துக்கு திருப்பத்தை எடுத்துள்ளன. அவர்களின் கொள்கையின் ஒவ்வொரு அம்சமும் போர் மற்றும் இராணுவ மீள்ஆயுதமயமாக்கலால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது. அவை இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை ஏறத்தாழ இரட்டிப்பாக்கியுள்ளன, ரஷ்யாவிற்கு எதிரான போரில் 23 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி உக்ரேனுக்கு ஆதரவளித்துள்ளன, இது அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டையும் விட அதிகமாகும்.

இந்த கட்சிகள் அமெரிக்க நடுத்தர தூர ஏவுகணைகளை ஜேர்மன் மண்ணில் நிலைநிறுத்த ஒப்புக்கொண்டனர். ஒரு அணுஆயுத விரிவாக்கம் ஏற்பட்டால், மாஸ்கோவை தாக்ககூடிய இந்த ஆயுதங்கள் ஜேர்மனியை முதன்மையான போர்க்களமாக மாற்றும்.

ஹிட்லரின் வேர்மாக்ட் (Wehrmacht — நாஜி ஜேர்மனியின் ஒன்றிணைந்த ஆயுதப்படையாகும்) தோற்கடிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக, ஜேர்மன் டாங்கிகள் மீண்டுமொருமுறை ரஷ்ய மண்ணில் உருண்டு வருகின்றன. போருக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் மிருகத்தனமாக ஒடுக்குகின்ற மற்றும் யூத இனப்படுகொலையில் பங்கெடுத்த இரண்டாம் உலகப் போரின் நாஜி ஒத்துழைப்பாளர்களை கதாநாயகர்களாக போற்றுகின்ற கியேவ் ஆட்சியுடன் ஜேர்மன் அரசாங்கம் கூடிவேலை செய்து வருகிறது.

“யூதர்கள் மீதான இனப்படுகொலைக்கு ஜேர்மனியே பொறுப்பு” என்று குறிப்பிட்டு ஒவ்வொரு இஸ்ரேலிய போர் குற்றத்தையும் ஜேர்மன் அரசாங்கம் நியாயப்படுத்தி வருகின்ற வேளையில், சோவியத் யூனியனில் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஜேர்மன் அழிப்புப் போருக்குப் பலியாகிவிட்ட போதிலும், இந்தக் கருத்து ரஷ்யாவிற்குப் பொருந்தாது. லெனின்கிராட்டில் மட்டும், ஜேர்மன் முற்றுகையால் 1.1 மில்லியன் பேர் படுகொலை செய்யப்பட்டனர்-அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆவர்.

காஸாவில், ஜேர்மன் அரசாங்கம் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை நிபந்தனையின்றி ஆதரித்து வருகிறது. பாலஸ்தீனியர்கள் மிருகத்தனமாக கையாளப்படுவது நாஜிக்களின் குற்றங்களை மீண்டும் நினைவூட்டுகிறது. அதை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் எவரும் அவதூறு செய்யப்படுவார்கள், மிரட்டப்படுவார்கள் மற்றும் துன்புறுத்தப்படுவார்கள். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மற்றும் போர் எதிர்ப்பு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

சமூக உதவி, அடிப்படை குழந்தைகள் நலன், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீதான செலவுகளைக் குறைப்பதன் மூலமாக சமூக ஜனநாயகக் கட்சி / பசுமைக் கட்சி / தாராளவாத ஜனநாயகக் கட்சிகளின் கூட்டணி ஈவிரக்கமின்றி இத்தகைய கொள்கைகளுக்கான செலவுகளை தொழிலாள வர்க்கத்தின் மீதும் மற்றும் சமூகத்தில் மிகவும் பலவீனமாக இருப்பவர்கள் மீதும் சுமத்தி வருகிறது. தாராளமான அரசு உதவியின் காரணமாக பங்கு விலைகளும் செல்வந்தர்களின் செல்வமும் தொடர்ந்து உயர்ந்து வருகின்ற அதேவேளையில், தொழிலாளர்களின் நிஜமான வருமானங்கள் மிகவும் மோசமான அளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.

இந்த பிற்போக்குத்தனமான சூழலில், செழித்து வளரும் AfD யானது, ஆளும் உயரடுக்கால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அகதிகளுக்கு எதிராக பேரினவாதத்தை தூண்டிவிடுவதன் மூலம், ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சியான கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியும் AfD ஐ வலதில் இருந்து முந்த முயல்கின்றன. தேர்தலுக்கு முன்னும் பின்னும் வாரங்கள் அகதிகளுக்கு எதிரான இடைவிடாத அரசியல் தூண்டுதலால் குறிக்கப்பட்டன.

1998ல் சமூக ஜனநாயகக் கட்சி பசுமைக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிக்கு வந்தபோது, அது முந்தைய தசாப்தங்களின் சமூக ஆதாயங்களை நிகழ்ச்சி நிரல் 2010 மூலம் அழித்து, ஜேர்மனியில் முன்பு இல்லாத ஒரு பெரிய குறைந்த ஊதியத் துறையை உருவாக்கியது.

ஜேர்மன் அதிபர் ஓலஃப் ஷொல்ஸ் (Olaf Scholz) இன் கீழ், சமூக ஜனநாயகக் கட்சி இந்த நாசமாக்கும் வேலையை அதன் உச்சக்கட்டத்திற்கு கொண்டு வந்தது. எஞ்சியிருக்கும் நலன்புரி அரசு மற்றும் ஜனநாயக உரிமைகள் யுத்த ஜாம்பவான்களுக்காக பலியாக்கப்படும். எப்பொழுதும் முதலாளித்துவத்தை பாதுகாக்க உதவும் சமூகப் பங்காளித்துவக் கொள்கை இறுதியில் திவாலாகிவிட்டது.

நீண்டகாலத்திற்கு முன்னரே தொழிலாளர்களின் கட்சி என்ற நிலையை இழந்து விட்ட சமூக ஜனநாயகக் கட்சி, ஏனைய அனைத்து முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே பெருநிறுவனங்கள், வங்கிகள், அரசு எந்திரம் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மில்லியன் கணக்கான மக்களை பீடித்துள்ள எரியும் சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு விடையைக் கொடுக்க அது இலாயக்கற்றதாக உள்ளது. செல்வந்த, சுயநலமிக்க நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் கட்சியான பசுமைக் கட்சிக்கும் இதுவே பொருந்துகிறது.

இதுதான் AfD இன் வலதுசாரி வாய்வீச்சாளர்களுக்கு சமூக அதிருப்தியை அதன் சொந்த நோக்கங்களுக்காக சுரண்டிக் கொள்வதற்கு உதவுகிறது. ஆனால் யாரும் ஏமாறக் கூடாது. AfD ஒரு வலதுசாரி, பாசிசவாத கட்சியாகும். இது நாஜிக்களைப் போலவே, முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் மிகவும் மூர்க்கமான பிரிவுகளுக்காக பேசுகிறது.

உக்ரேனில் போர் பற்றி அதன் விமர்சனம் இருந்தபோதிலும், ஜேர்மன் அரசாங்கத்தின் இராணுவவாதம் போதுமான அளவு செல்லவில்லை என்று AfD நம்புகிறது. ஜேர்மனி அமெரிக்காவைச் சாராமல் சுதந்திரமாகப் போரை நடத்தும் வகையில், அதிக இராணுவச் செலவுகள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரி வருகிறது.

மேலும், வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை கட்டுப்படுத்துதல், நலன்புரி நலன்களைப் பெறுபவர்களை வேலை செய்ய கட்டாயப்படுத்துதல், பணக்காரர்கள் மீதான வரிகளை குறைத்தல் மற்றும் எதேச்சாதிகார போலீஸ் அரசை உருவாக்குதல் போன்றவற்றுக்கு AfD அழைப்பு விடுக்கிறது. ஜேர்மனியில் மட்டும் கிட்டத்தட்ட 200,000 பேர் நோய்த்தொற்றால் இறந்திருந்தாலும், கோவிட்டுக்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளை AfD நிராகரிக்கிறது. தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும், பலவீனப்படுத்தவும் இனவெறி மற்றும் இனவாதத்தை தூண்டி வருகின்ற AfD ஆனது, நாஜிக்களின் குற்றங்களைக் குறைத்து மதிப்பிடுவதுடன், நவ-நாஜிக்கள் மற்றும் தீவிர வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது.

தொழிற்சங்கங்கள் என்பன, பணிநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் சுமூகமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக எந்தவொரு தொழில்துறை நடவடிக்கையையும் நசுக்கும் அல்லது காட்டிக்கொடுக்கும் இணை மேலாளர்கள் மற்றும் நிறுவன போலீஸ்காரர்களைக் கொண்ட ஒரு பெரும் எந்திரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

1990களில், இடது கட்சியும் அதன் முன்னோடியான PDS (Party of Democratic Socialism - ஜனநாயக சோசலிசக் கட்சி) யும் 8,000 நிறுவனங்களையும் மில்லியன் கணக்கான வேலைகளையும் அழித்த ஜேர்மன் ஒருங்கிணைப்பின் விளைவுகள் மீதான சீற்றத்திற்கு ஒரு களஞ்சியமாக சேவை செய்தன. எங்கெல்லாம் அவை அரசாங்கப் பொறுப்பை ஏற்றனவோ, அங்கெல்லாம் இக்கட்சிகள் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரைப் போலவே வலதுசாரி கொள்கைகளையே பின்பற்றி வந்தன. மேலும், அவற்றுடன் அவை நெருக்கமாக வேலை செய்கின்றன.

இடது கட்சியும் இப்போது பொறிந்துவிட்டது. சாக்சோனியில், மாநில பாராளுமன்றத்தில் மீண்டும் நுழைவதுக்கு கட்சி போராடியது. தூரிங்கியாவில், 10 ஆண்டுகளாக அரசாங்கத்தை வழிநடத்தி வந்த இடது கட்சி, ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை இழந்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டது. இடது கட்சி இப்போது வலதுசாரி CDU ஒரு பாதுகாப்பான பெரும்பான்மையை பெறுவதற்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

குறிப்பாக, AfD இன் செல்வாக்கு பலமாக இருக்கும் கிழக்கு ஜேர்மனி, ஒன்றிணைவுக்குப் பிந்தைய தொழில்துறை சீரழிவில் இருந்தும், திட்டநிரல் 2010 இன் விளைவுகளில் இருந்தும் ஒருபோதும் மீளவில்லை. ஆனால், அதன் செல்வாக்கு நாட்டின் மேற்குப் பகுதியிலும் வளர்ந்து வருகிறது. தேசியளவில், இந்த அதிவலது கட்சி கருத்துக்கணிப்புகளில் 16 இல் இருந்து 19 சதவீதத்திற்கு இடையில் உள்ளது.

இந்த அடிப்படை அரசியல் இயக்கவியலை ஏறத்தாழ எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் காண முடியும். “இடது” அல்லது “ஜனநாயக” கட்சிகள் என்று சொல்லப்படுபவை வெகுஜனங்களின் மிக அடிப்படையான சமூக மற்றும் ஜனநாயக தேவைகளைப் பூர்த்தி செய்ய இலாயக்கற்றிருப்பது, வாக்காளர்களை அதி வலதுசாரி மற்றும் பாசிசவாத கட்சிகளை நோக்கி உந்தித் தள்ளுகிறது.

அமெரிக்காவில், தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ள ஜனநாயகக் கட்சியினர் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களைப் பின்தொடர்கின்றனர், வேலைநிறுத்தங்களை ஒடுக்குகிறார்கள், உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் போர்களை முன்னெடுத்து வருகின்றனர் என்ற உண்மையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ஆதாயமடைகிறார்.

அமெரிக்காவில் தொழிலாளர் தினத்தன்று உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு வெளியிட்ட அறிக்கையில், “வோல் ஸ்ட்ரீட், இராணுவ-உளவுத்துறை முகமைகள் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகள் ஆகியவற்றின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சி, பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் சமூக பேரழிவைத் தீர்க்கும் கொள்கைகளுடன் பேசவோ அல்லது முன்னெடுக்கவோ இலாயக்கற்று இருக்கிறது. இதுதான் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு சமூக கோபத்தை சுரண்டுவதற்கான திறனை வழங்குகிறது. எவ்வாறிருப்பினும் தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: ட்ரம்பும் அவரது MAGA (அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு) இயக்கமும் அமெரிக்க-பாணியிலான பாசிசவாதத்தின் ஒரு புதிய வடிவமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில், ஜார்ஜியா மெலோனியின் எழுச்சிக்கு முன்னதாக, கம்யூனிஸ்ட் கட்சியின் வாரிசுகளால் மூன்று தசாப்தங்களாக காட்டிக்கொடுக்கப்பட்டது. பிரான்சில், பல சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்கள் மற்றும் ஜனாதிபதிகளின் வலதுசாரி போக்கில் இருந்தும், ஜோன்-லூக் மெலோன்சோனின் திவாலான கொள்கைகளில் இருந்தும் மரின் லு பென் ஆதாயமடைகிறார்.

இந்த திவாலான கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் பாசிச ஆபத்தை எதிர்த்துப் போராட முடியாது. அவர்கள் எங்கெல்லாம் அதிகாரத்திற்கு வந்தாலும், யுத்தக் கொள்கைகளையும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேபோல் அவர்கள் பாசிஸ்டுகளுடன் ஒத்துழைக்கவும் வெட்கப்பட மாட்டார்கள். CDU இல், AfD உடனான கூட்டணிக்கான அழைப்புகள் ஏற்கனவே சாக்சோனி மற்றும் துரிங்கியாவில் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியினர் எப்போதும் தங்கள் “குடியரசுக் கட்சி சகாக்களுடன்” இரு கட்சி இருகட்சி உடன்பாட்டிற்கு முயன்று வருகின்றனர்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தில், சாக்சோனி மற்றும் தூரிங்கியாவில் AfD உடனான ஒரு கூட்டணிக்கான அழைப்புகள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியினர் எப்போதும் அவர்களின் “குடியரசுக் கட்சி சகாக்களுடன்” இருகட்சி உடன்பாட்டிற்கு முயன்று வருகின்றனர்.

அனைத்து ஸ்தாபக கட்சிகளும் தேர்தல் முடிவுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகதிகள் மீதான தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி AfD இன் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றன. செவ்வாயன்று, கூட்டாட்சி அரசாங்கக் கட்சிகள், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் மாநில அரசாங்கங்கள் அடங்கிய, பேர்லினில் நடைபெற்ற அகதிகள் தொடர்பான உச்சிமாநாடு, எல்லைகளை இன்னும் கூடுதலாக மூடுவது மற்றும் அகதிகளுக்கான உதவிகளை வெட்டுவது குறித்து விவாதித்தது.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பரந்த பெரும்பான்மையினரிடையே சமூக அதிருப்தியும் இராணுவவாதம் மற்றும் போருக்கான எதிர்ப்பும் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களுக்கு ஒரு தெளிவான, அரசியல் முன்னோக்கு தேவை.

வறுமை, வேலையின்மை, போர் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை முதலாளித்துவ அமைப்புமுறையை ஒழிப்பதன் மூலமும், சமூகத் தேவைகளுக்குப் பதிலாக பணக்காரர்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாத ஒரு சோசலிச சமூகத்தைக் கொண்டு வருவதன் மூலமும் மட்டுமே சமாளிக்க முடியும். பெரும் சொத்துக்களையும் பெருநிறுவனங்களையும் பறிமுதல் செய்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராமல், எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படாது.

அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து, உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்காக, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, அதை அணிதிரட்டும் ஒரு உலகளாவிய மூலோபாயத்தின் மூலம்தான் இந்த இலக்கை அடைய முடியும். இதுவே ஜேர்மனியின் அபிவிருத்திகளில் இருந்து எடுக்கப்பட வேண்டிய அடிப்படை முடிவாகும். இந்த முன்னோக்குக்காகவே, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதர அமைப்புகளும் போராடி வருகின்றன.

Loading