மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த திங்களன்று, பிரெஞ்சு நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் ஒரு சுற்று பேச்சு வார்த்தைகளை முடித்த பின்னர், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கூட்டி, ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, ஜூலை 7 இடம்பெற்ற தேர்தல்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற ஜோன்-லூக் மெலோன்சோன் தலைமையிலான புதிய மக்கள் முன்னணியில் (NFP) இருந்து ஒரு பிரதம மந்திரியை மக்ரோன் நியமிக்க மாட்டார் என்று எலிசே ஜனாதிபதி மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தேர்தல் முடிவுகளை மக்ரோன் நசுக்கியமை, பிரெஞ்சு ஜனநாயகத்தின் தீர்க்க முடியாத நெருக்கடியையும் நவ-பாசிசவாதத்துடனான அவரது சொந்த ஆழமான உறவுகளையும் அம்பலப்படுத்தி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை திரட்டுவதை அனுமதிக்க அவர் மறுத்ததானது, பிரான்சை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஒரு அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது. ஆனால், இந்த நிலைப்பாட்டை விளக்குவதற்கு, அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணி மற்றும் மக்ரோனின் சொந்த குழுமக் (Ensemble) கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய மக்கள் முன்னணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எலிசே மாளிகை கூறியதுடன், NFP உருவாக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் கவிழ்க்க அவர்கள் ஒன்றிணைவர் என்று உறுதியளித்ததாக குறிப்பிட்டது.
பெரும்பாலான பிரதிநிதிகளுடனான கூட்டணியால் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் கட்சிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட புதிய மக்கள் முன்னணி அரசாங்கம், தேசிய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் இதர அனைத்துக் குழுக்களாலும் உடனடியாக தணிக்கை செய்யப்படும். எனவே அத்தகைய அரசாங்கம், உடனடியாக 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பெரும்பான்மைக்கு எதிராக இருக்கும். கலந்தாலோசிக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், நமது நாட்டின் நிறுவன ஸ்திரத்தன்மை இந்த விருப்பத்தை எடுக்க வேண்டாம் என்று நம்மை கட்டாயப்படுத்துகிறது.
ஒரு புதிய மக்கள் முன்னணி அரசாங்கத்தைத் தடுப்பதற்கு RN உடன் இணைந்து செயல்படுவதற்கான மக்ரோனின் சூளுரை, தொழிலாள வர்க்கத்துடன் ஒரு வெடிக்கும் மோதலைத் தூண்டுகிறது. கடந்த ஆண்டு ஓய்வூதிய வெட்டுக்களுக்குப் பிறகு, பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த கலகத் தடுப்பு போலீஸை அனுப்பிய பிறகு, மக்களுக்கு எதிராக ஆட்சி செய்ததற்காக மக்ரோன் தொழிலாளர்கள் மத்தியில் வெறுக்கப்படுகிறார். பிரெஞ்சு மக்களில் முழுமையாக 91 சதவீதத்தினர் மக்ரோனின் வெட்டுக்களை நிராகரிக்கின்றனர். அதேவிகிதத்தினர் ரஷ்யாவுடனான போருக்காக உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புகளை அனுப்புவதற்கான அவரது அழைப்பை எதிர்க்கின்றனர்.
ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு, ஏகாதிபத்தியப் போர் மற்றும் பாரிய வங்கிப் பிணையெடுப்புகளை நோக்கி முதலாளித்துவ வர்க்கம் சமூக செல்வத்தை இடைவிடாமல் திருப்பி விடுவது, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தில் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் சிதைவதற்கு வழிவகுக்கிறது.
வெளியேறவிருக்கும் பிரதம மந்திரி காப்ரியேல் அட்டலின் காபந்து அரசாங்கம் சமூக செலவினங்களை முடக்க ஒரு சிக்கன வரவு-செலவு திட்டக் கணக்கைத் தயாரிக்கத் தொடங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காபந்து அரசாங்கங்கள் பாரம்பரியமாக வரவு-செலவு திட்டக்கணக்கு முடிவுகளை எடுக்க முடியாது என்பதால், இது மக்ரோன் ஆட்சியின் சட்டவிரோதத்தன்மையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது சிக்கன நடவடிக்கைகள், உலகளாவிய ஏகாதிபத்தியப் போர் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைக்கு பிரெஞ்சு மற்றும் நேட்டோ ஆதரவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் கடுமையான எதிர்ப்பைத் தூண்டும்.
இந்த எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் அரசியல்ரீதியாக கழுத்தை நெரிப்பதற்கும் எத்தகைய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது என்பது குறித்து பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை 7 தேர்தல்களுக்கு முன்னதாக, மக்ரோன் ஒரு அதிவலது அரசாங்கத்தை நிறுவுவதற்கு தயாரிப்பு செய்வதற்காக அதிவலது தேசிய பேரணி கட்சியுடன் விரிவான விவாதங்களை நடத்தினார். ஆயினும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பிரதான நகரங்களில், நவ-பாசிசவாதிகளைத் தடுக்க NFP க்கு வாக்களித்த நிலையில், தேர்தல்கள் RN இன் வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை, மாறாக NFP இன் வெற்றிக்கு இட்டுச் சென்றன.
எலிசே ஜனாதிபதி மாளிகையின் அறிக்கை NFP இல் உள்ள மெலோன்சோனின் கூட்டாளிகளுக்கு —பிரதானமாக பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதன் பாரம்பரிய கூட்டாளிகளான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் பசுமை கட்சியினருக்கு —ஒரு அழைப்பை விடுத்தது. புதிய மக்கள் முன்னணியை உடைக்குமாறும், மெலோன்சோனைக் கைவிட்டு, பாரம்பரிய வலதினால் ஆதரிக்கப்படும் ஒரு அரசாங்க கூட்டணியில், மக்ரோனின் கூட்டணி கட்சிகளில் இணைவதற்கும் அது அவர்களுக்கு அழைப்புவிடுத்தது. சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரை “மற்ற அரசியல் சக்திகளுடன் ஒத்துழைக்க” மன்றாடிய அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:
LIOT குழு மற்றும் EPR, MoDem, Horizons, Radicaux மற்றும் UDI குழுக்களுடனான கலந்துரையாடல்கள் ஒரு கூட்டணிக்கான பாதை மற்றும் பல்வேறு அரசியல் உணர்வுகளுக்கு இடையே சாத்தியமான ஒத்துழைப்பைக் கோடிட்டுக் காட்டியது. இந்த குழுக்கள் தங்களுக்கு அப்பாற்பட்ட ஒருவரின் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளன.
ஆனால், இப்போதைக்கு, சோசலிஸ்ட் கட்சியும் அதன் கூட்டாளிகளும் மக்ரோனின் அழைப்பை நிராகரித்துள்ளதோடு ஒட்டுமொத்த புதிய மக்கள் முன்னணியும் அரசாங்கத்தை அமைக்க அவர் மறுப்பதைக் கண்டித்துள்ளனர். சோசலிஸ்ட் கட்சியானது, மக்ரோனின் “சகிக்க முடியாத கொள்கையை ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு” என்று கூறியதுடன், “ஒரு இடதுசாரி அரசாங்கத்தை நிராகரிப்பது, மக்ரோன் அதன் வேலைத்திட்டத்தை நிராகரிக்கிறார் மற்றும் அதன் மீது அவமதிப்பு கொண்டிருக்கிறார்” என்றும் தாக்கியது.
பசுமைக் கட்சி தலைவர் மரின் டோண்டலியர் மக்ரோனின் “அபாயகரமான ஜனநாயக பொறுப்பின்மையை” ஒரு “வெட்கக்கேடு” என்று கண்டித்ததுடன், “பிரெஞ்சு மக்களின் விருப்பத்திற்காக தொடர்ந்து போராடுவதாக” உறுதியளித்தார். அவர்களில் முக்கால்வாசி பேர் மக்ரோன் ஆட்சியை முறித்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
PCF ன் தேசிய செயலரான ஃபாபியன் ரூசெல் கூறுகையில், “லூசி காஸ்டெட்ஸ் தலைமையிலான ஒரு பரந்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக” மட்டுமே அவர் மக்ரோனை பகிரங்கமாக சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். 37 வயதான இந்த நிதி அமைச்சக அதிகாரத்துவவாதியை, NFP இன் முன்மொழியப்பட்ட பிரதம மந்திரியாக மெலோன்சோன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மெலோன்சோன் அவரது பங்கிற்கு, தேசிய பாராளுமன்றத்தில் மக்ரோன் மீது பதவிநீக்க குற்றவிசாரணை கொண்டு வருவதற்கான ஒரு தீர்மானத்தை முன்வைக்க அவரது அடிபணியா பிரான்ஸ் கட்சி விடுத்த அச்சுறுத்தல்களை மீண்டும் கூறினார். “வெகுஜன மற்றும் அரசியல் விடையிறுப்பு விரைவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்,” என்று ட்வீட் செய்த அவர், “பதவிநீக்க குற்ற விசாரணைக்கான தீர்மானம் முன்வைக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
கடந்த செவ்வாயன்று, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (UE) மற்றும் தேசிய உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கம் (UNL) ஆகியவை “இமானுவல் மக்ரோனின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக” தேசியளவிலான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு, UE-UNL போராட்டங்களில் இணையுமாறு அடிபணியா பிரான்ஸ் அழைப்பு விடுத்தது. எவ்வாறிருப்பினும், இப்போதைக்கு, செப்டம்பர் 7 அன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள UE-UNL போராட்டங்களுக்கு PS ஆதரவு அறிக்கையையோ அல்லது அழைப்பையோ விடுக்கவில்லை.
அனைத்திற்கும் மேலாக, மக்ரோனின் பொலிஸ்-அரசு சர்வாதிகாரத்தை வீழ்த்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட, இளைஞர்கள் மத்தியில் ஒரு சக்திவாய்ந்த இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்பும் பிரான்சில் மக்ரோனும் அவரது அனைத்து நேட்டோ கூட்டாளிகளது அரசாங்கங்களும் தொடுத்துள்ள வர்க்கப் போரும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்: NFP மற்றும் குறிப்பாக சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு ஆழ்ந்த விரோதமான ஒரு முதலாளித்துவ கட்சியான PS தலைமையிலான ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை கட்டியெழுப்பும் ஒரு தேசிய முன்னோக்கில் இதைச் செய்ய முடியாது.
அரசாங்கத்தை அமைப்பதைத் தடுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள தீர்க்க முடியாத வேறுபாடுகளின் அனைத்து அறிவிப்புகளுக்கும், இந்த வெவ்வேறு கட்சிகளைப் பிரிக்கும் கொள்கை வேறுபாடுகள் உண்மையில் ஒப்பீட்டளவில் சிறியவையாகும். உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பவும், நாட்டில் இராணுவ போலீஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளை வலுப்படுத்தவும் NFP தனது வேலைத்திட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளது. வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போர் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போர் என்ற அடிப்படை வேலைத்திட்டத்தில், PS மற்றும் மெலோன்சோன், மக்ரோனின் கொள்கையிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.
அனைத்திற்கும் மேலாக, மக்ரோன் மீது பதவிநீக்க குற்றவிசாரணை நடத்துவதற்கான மெலோன்சோனின் அச்சுறுத்தல்களுக்கு இடையே, புதிய மக்கள் முன்னணி அரசாங்கத்தை அவர் ஏற்கப் போவதில்லை என்று மக்ரோன் வலியுறுத்திய போதிலும், அவர்கள் முன்மொழிந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் அடிப்படை வடிவமும் அதேபோன்றே உள்ளது.
தேசிய பாராளுமன்றத்தில் 577 இடங்களில் 193 இடங்களை NFP கொண்டுள்ளது. இத்தகைய நிலைமைகளின் கீழ், மெலோன்சோனின் அச்சுறுத்தலுக்கு உள்ளான பதவி நீக்கத் தீர்மானம் தோல்வியடையும். மக்ரோனின் ஆரம்ப ஜனாதிபதி பதவிக்காலத்தில் அவருக்கு எதிராக LFI சமர்ப்பித்த கண்டனத் தீர்மானங்களும் தோல்வியடைய உள்ளன. அனைத்திற்கும் மேலாக, புதிய மக்கள் முன்னணி என்ன அரசாங்கத்தை அமைத்தாலும், அது அடிபணியா பிரான்ஸ் கட்சியின் மெலோன்சோனை உள்ளடக்கி இருந்தாலும் கூட, மக்ரோனுடனும் மற்றும் மக்ரோன் தற்போது முன்மொழிந்து வருவதைப் போல, அவருடன் கூட்டணி சேர்ந்த சிறிய, வலதுசாரி கட்சிகளது தொகுப்புடனும் ஓர் உடன்பாட்டை அது எட்டுவதைச் சார்ந்திருக்கும்.
உண்மையில், PS தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்ததன் மூலம், LFI க்கு அமைச்சர்கள் இல்லை. மெலோன்சோன் மற்றும் அவரது கட்சியினர் அரசாங்கத்தில் பங்கு பெறுவார்களா என்பது குறித்து NFP யில் இருந்து மக்ரோனை மிகத் தெளிவாகப் பிரிக்கும் பிரச்சினையில் தான் ஒரு சமரசத்திற்குத் தயாராக இருப்பதாக மெலோன்சோன் சமிக்ஞை செய்துள்ளார்.
மக்ரோனுடன் அவர்களுக்கு அடிப்படை வேறுபாடுகள் இல்லை என்பதால், மெலோன்சோனும் புதிய மக்கள் முன்னணியும் தேர்தல் முடிவுகளை மக்ரோன் நசுக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்புவிடுக்க இதுவரையில் மறுத்து வந்துள்ளன. மக்ரோனுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்குகின்ற நிலையில், இளைஞர்களும் தொழிலாளர்களும் புதிய மக்கள் முன்னணி அதிகாரத்துவங்களிடம் இருந்து விலகி, அவர்களின் சொந்த போராட்டத்தின் கட்டுப்பாட்டை எடுப்பதே இன்றியமையாத பிரச்சினையாகும். காஸா இனப்படுகொலை, ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் ஊதிய குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான சமீபத்திய காலகட்டத்தின் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.