ஜனநாயகக் கட்சியினரும், பெருநிறுவன ஊடகங்களும் கமலா ஹாரிஸின் வலதுசாரி வேட்பாளர் நியமனத்தைப் பெருமைப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஜனநாயகக் கட்சியின் அரசியல் ஸ்தாபகமும் அதன் பெருநிறுவன மற்றும் வோல் ஸ்ட்ரீட் நிதியியல் ஆதரவாளர்களும், ஜனாதிபதி ஜோ பைடென் அவரது மறுதேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்திற்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் குளிர்காலக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி ஜோ பைடென் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் பேசுகிறார். வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 3, 2023 [AP Photo/Patrick Semansky]

பெருநிறுவன ஊடகங்களில் ஒரு சாத்தியமான போட்டியாளராக குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செனட்டர் மற்றும் ஆளுநர் உட்பட, கிட்டத்தட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உயர்மட்ட ஜனநாயகக் கட்சியாளரும் ஞாயிறு அல்லது திங்களன்று ஹாரிஸை வழிமொழிந்தனர். இதில் ஆளுநர்கள் மிச்சிகனின் கிரெட்சன் விட்மர், கலிபோர்னியாவின் கவின் நியூசோம், பென்சில்வேனியாவின் ஜோஷ் ஷாபிரோ மற்றும் கென்டக்கியின் ஆண்டி பெஷர், அத்துடன் செனட்டர்கள் எலிசபெத் வாரன், கிறிஸ் மர்பி மற்றும் ரஃபேல் வார்னாக் ஆகியோர் அடங்குவர்.

பைடென் மறுதேர்தல் பிரச்சாரத்தில் அவர் வகித்த அதே பாத்திரத்தில், ஹாரிஸ் ஜனாதிபதிக்கான பிரச்சாரத்தின் இணைத் தலைவராக இருப்பார் என்று விட்மர் அறிவித்தார்.

நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு எண்ணிக்கையின்படி, அனைத்து 23 ஜனநாயகக் கட்சி ஆளுநர்களும், 51 செனட்டர்களில் 41 பேரும், பிரதிநிதிகள் சபையின் 212 உறுப்பினர்களில் 184 பேரும் ஹாரிஸுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஒரேயொரு செனட்டர் மட்டுமே அவரை வழிமொழிவதற்கு பகிரங்கமாக மறுத்துவிட்டார், மேற்கு வேர்ஜினியாவின் ஜோ மன்சின், இந்தாண்டு தொடக்கத்தில் அவர் சுயேட்சை வேட்பாளராக காங்கரஸில் அமரும் வரையில் ஜனநாயகக் கட்சி உள்குழுவில் மிகவும் வலதுசாரி உறுப்பினராக இருந்தார்.

பைடெனை போட்டியில் இருந்து வெளியேற்றுவதற்கான அழுத்தமான பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த சபையின் சபாநாயகர் எமெரிட்டா நான்சி பெலோசி, ஹாரிஸை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிட ஒரு நாள் காத்திருந்தார். ஆனால், இறுதியாக திங்களன்று பிற்பகல் அவ்வாறு செய்தார். காங்கிரஸின் இரண்டு உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரான செனட் பெரும்பான்மை தலைவர் சார்ல்ஸ் சூமர் மற்றும் அவையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் ஆகியோர் பகிரங்கமாக நடுநிலை வகித்து வருகின்றனர். கட்சித் தலைமையால் கட்டளையிடப்பட்ட ஒரு மூடிய கதவு நிகழ்முறையில் ஹாரிஸ் “முடிசூட்டப்படவில்லை” என்ற பாசாங்கைப் பேணுவதற்காக, வெளிப்படையாக அவ்வாறே விடயம் உள்ளது என்றாலும், அவர்கள் பகிரங்கமாக நடுநிலை வகித்து வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியினர் அடையாள அரசியலை ஊக்குவிப்பதை ஒட்டி, காங்கிரஸின் கறுப்பின காகஸ், காங்கிரஸின் ஹிஸ்பானிக் காகஸ் மற்றும் இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல்வேறு பிற குழுக்கள் ஹாரிஸ் பிரச்சாரத்தைத் தழுவிக் கொண்டுள்ளன. 2016 இல் டொனால்ட் ட்ரம்பிடம் ஹிலாரி கிளிண்டன் தோற்பதற்கு முன்னர் இருந்ததைப் போலவே, வருங்கால “முதல் பெண் ஜனாதிபதிக்காக” அல்லேலூயா பாடல்கள் பாடப்படுகின்றன, இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றின் ஜனாதிபதி வேட்புமனுவைப் பெற்ற முதல் கறுப்பின பெண்மணி மற்றும் முதல் ஆசிய-அமெரிக்கருக்கான கரவொலியால் இது ஊதிப் பெருப்பிக்கப்படுகிறது.

ஹாரிஸுக்கு பைடெனின் சொந்த ஒப்புதலைத் தொடர்ந்து, அவர் தனது விலகல் கடிதத்தை வெளியிட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு ட்விட்டர் / எக்ஸ் இல் வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையில், பைடெனின் மறுதேர்தல் பிரச்சாரத்தின் வளங்கள் முழுவதுமாக ஹாரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரச்சார அதிகாரிகள் அனைத்து ஊழியர்களிடமும் இப்போது ஹாரிஸுக்கு வேலை செய்வதாகக் கூறினர்.

தேர்தல் பிரச்சார இயக்கம் “ஜனாதிபதி பதவிக்கு ஹாரிஸ்” என்று மறுபெயரிடப்பட்டுள்ளது, மேலும் அதன் வங்கிக் கணக்குகளில் அது வைத்திருந்த 96 மில்லியன் டாலர்கள் பிரச்சார பணத்திற்கு அவருக்கு முழு அணுகல் உள்ளது. முதல் 24 மணி நேரத்தில் ஹாரிசின் பிரச்சாரத்திற்கு 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நன்கொடைகள் வந்ததால் இந்த தொகை விரைவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி உத்தியோகபூர்வ ஜனநாயகக் கட்சியின் ஆன்லைன் இணைய தளத்திற்கு சிறு அளவிலான டாலர்கள் நன்கொடைகளாக கிடைத்தது.

“பெரிய நன்கொடையாளர்களிடமிருந்து “ஹாரிஸிற்கு” பணக் குண்டு” என்ற தலைப்பின் கீழ் பொலிடிகோ வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, பில்லியனர்கள் மற்றும் பல மில்லியனர்கள் நன்கொடையாளர்களும் தங்கள் ஒப்புதலைக் காட்டினர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் போட்டியில் இருந்து பைடென் விலகியதிலிருந்து பைடெனுக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கைக் குழு (PAC), 150 மில்லியன் டாலர்கள் புதிய நிதியைப் பெற்றதாக பியூச்சர் ஃபார்வர்ட் (Future Forward) அறிவித்தது. பைடெனின் வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணி, பல பெரிய நன்கொடையாளர்கள் அவரது மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு அளித்த வாக்குறுதிகளில் 90 மில்லியன் டாலர்களை நிறுத்தி வைக்க முடிவு செய்ததாகும்.

கமலா ஹாரிஸ் நியமனத்திற்கு ரப்பர் முத்திரை குத்த மாநாட்டு பிரதிநிதிகளும் அணிதிரட்டப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்களிக்கப்பட்ட முதல் மூன்று மாநில பிரதிநிதிகள் —வட கரோலினா, தென் கரோலினா மற்றும் டென்னசி— ஹாரிஸை ஆதரித்து பெருவாரியாக வாக்களித்தனர். நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் பிரதிநிதிகள் திங்களன்று அவரை சந்திக்க இருந்தனர். இந்த மற்றும் பிற உள்கட்சித் தேர்தல்களில் ஹாரிஸ் ஏறத்தாழ ஒருமனதான வாக்குகளைப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

வேட்பு மனுவுக்கு ஹாரிஸை சவால் விடுவதற்கு, ஒரு வேட்பாளருக்கு 300 மாநாட்டு பிரதிநிதிகளின் ஆதரவு தேவைப்படும். அவர்களில் 50 பேருக்கு மேல் ஒரு மாநிலத்தில் இருந்து வரக்கூடாது. இதுபோன்றவொரு சவாலை இதுவரை எவரும் அறிவிக்கவில்லை, செனட்டர் மன்சின் திங்களன்று தான் ஒரு வேட்பாளராக இருக்கப் போவதில்லை என்று கூறினார்.

ஜனநாயகக் கட்சி தலைவர்களும் அவர்களின் பெருநிறுவன ஊடக கூட்டாளிகளும் தளர்ந்து போன பைடெனை விட ஹாரிஸை ஒரு இளைய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான வேட்பாளராக சித்தரிப்பதன் மூலமாக தங்களின் தொய்ந்து வரும் தேர்தல் வாய்ப்புகளைப் புதுப்பிக்க நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளையில், உக்ரேனில் ரஷ்யாவுடனான முழுவீச்சிலான போரையும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையையும் ஆதரிக்கும், ஜனநாயகக் கட்சியினரின் வலதுசாரி வேலைத்திட்டத்தில் சிறிதளவும் மாற்றம் கூட இல்லை. மேலும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் அவை நடத்தி வருகின்றன.

அதேபோல் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் அரசு வழக்கறிஞராக பணியாற்றியது உட்பட, ஹாரிஸின் சொந்த வலதுசாரி அரசியல் வரலாறு குறித்தும் அங்கே எந்த விவாதமும் இல்லை. டொனால்ட் ட்ரம்ப் இரண்டு தேர்தல்களில் அவரது பிரச்சாரத்திற்கு பங்களிப்பு செய்யும் அளவுக்கு அவர் சட்டம்-ஒழுங்கு வழக்கு விசாரணையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.

2019-2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஹாரிஸின் சாதனை குறித்து உலக சோசலிச வலைத் தளம் பல விரிவான பகுப்பாய்வுகளை செய்தது. அப்போது அவர் முதலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார், பின்னர் எந்தவொரு வாக்குகளும் உண்மையில் கட்சியின் வேட்புமனு தேர்தல்களில் போடப்படுவதற்கு முன்னரே வெளியேறினார். பின்னர் பைடென் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார்.

ஹாரிஸின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு மரண அடியாக நிரூபணமான அரசியல் சங்கடத்தை ஒரு ஆய்வு பின்வருமாறு குறிப்பிட்டது:

ஜனநாயகக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களைப் போலவே, ஹாரிஸும் ட்ரம்புக்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக காட்டிக் கொள்ள முயன்று வருகிறார். அதேவேளையில், அவரைப் பொறுத்த வரையில், “மிதமான” முன்னணி வேட்பாளரான பைடெனுக்கும் கட்சியின் “இடது” பிரிவைச் சேர்ந்த அவரது இரண்டு பிரதான சவாலாளர்களான பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் ஆகியோருக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிளவுபடுத்த முனைந்து வருகிறார். ஒரு முன்னாள் வழக்குத்தொடுனர் என்ற முறையில், அவர் ட்ரம்பை ஆக்ரோஷமாக சவால் செய்வார் என்ற ஆலோசனையுடன், பைடெனின் “தேர்ந்தெடுக்கப்படுதல்” வாதத்தை இணைத்து, ஹாரிஸ் அதை இரண்டு வழிகளிலும் பெற முயற்சித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் அவருடைய சட்டம்-ஒழுங்கு பின்னணியைப் பயன்படுத்திக் கொண்டு அவரை வருங்கால தேசிய பதவிக்கான வேட்பாளராக நிலைநிறுத்த முயன்றனர் என்பதை நாம் குறிப்பிட்டோம்:

செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஹாரிஸை ஊக்குவித்து, வரவு-செலவுத் திட்டம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதித்துறை உட்பட அவருக்கு முக்கிய குழு பணிகளை வழங்கினர். அங்கு உச்ச நீதிமன்ற நியமனதாரரும், இப்போது நீதிபதியுமான பிரெட் கவனாக் ஐ விசாரிப்பதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக அவர் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டார்.

2017 இல் உளவுத்துறை குழுவில் அவர் நியமிக்கப்பட்டது மிகவும் அம்பலமானது —இதுபோன்றவொரு முக்கிய பதவி வழங்கப்பட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியாளர் இவர் மட்டுமே ஆவர். அத்துடன் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகம் மற்றும் இராணுவ-உளவுத்துறை இயந்திரத்தைப் பொறுத்த வரையில், ஹாரிஸ் ஒரு “பாதுகாப்பான ஜோடி கரங்கள்” என்பதற்கான ஒரு அறிகுறியாக இருந்தார்.

இராணுவ-உளவுத்துறை இயந்திரத்தின் மிக உயர்ந்த மட்டங்களுடன் ஹாரிஸ் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டுள்ளார். 2016 கிளிண்டன் ஜனாதிபதி பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும், கமலாவின் தோல்வியுற்ற 2020 ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கியவருமான அவரது சகோதரியான மாயா, உபெர் (Uber) இன் பொது ஆலோசகரும் ஒபாமா நிர்வாகத்தில் முன்னாள் அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரலுமான இருக்கின்ற டோனி வெஸ்ட்டை மணந்துள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் மைக்கேல் அலெக்சாண்டரின் 2010 புத்தகமான தி நியூ ஜிம் க்ரோவின் வரைவுகளையும் மாயா ஹாரிஸ் திருத்தினார். நியூ யோர்க் டைம்ஸின் சிறந்த விற்பனையாளர் பட்டியலில் கணிசமான நேரத்தை செலவிட்ட இந்த படைப்பு, அமெரிக்காவில் ஒரு புதிய இன சாதி அமைப்புமுறை நிலவுகிறது என்றும், அது பெரும்பாலும் ஏழை வெள்ளையர்களின் நடவடிக்கைகளால் அமல்படுத்தப்பட்டது என்றும், இது ஒரு குறிப்பிடத்தக்க சமூகப் பிளவாக வர்க்கம் குறித்த எந்தவொரு மற்றும் அனைத்து பரிசீலனைகளையும் விட மிக அதிகமாக இருந்தது என்றும் வாதிட்டது.

உலக சோசலிச வலைத் தளம் இதற்கு பின்வருமாறு கருத்து தெரிவித்தது:

எவ்வாறிருப்பினும், அமெரிக்க அரசியலில் இனம் மற்றும் பாலின அரசியலைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், ஹாரிஸின் ஜனாதிபதி வேட்பாளரின் வீழ்ச்சியானது, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு குறிப்பிடத்தக்க பிடியைப் பெற அடையாள அரசியலின் இயலாமையை எடுத்துக்காட்டுகிறது. மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினரைப் பொறுத்த வரையில், ஹாரிஸ் தனது அடையாளத்தை இடைவிடாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தது, அவர் எந்த விதத்திலும் ஒரு முற்போக்கான வேட்பாளர் என்பதை அவர்களை நம்ப வைக்க சிறிதும் உதவவில்லை. மாறாக, அவர் ஒரு பெருநிறுவன-சார்பு ஜனநாயகக் கட்சியாளராக, ஒட்டுமொத்த கட்சியின் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டார்.

பெருநிறுவ அமெரிக்கா நிச்சயமாக அவரது உண்மையான வர்க்க விசுவாசத்தை அங்கீகரித்தது. பைடென் அவரை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்த பின்னர், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிதியாளர்கள் “நிம்மதி பெருமூச்சு” விட்டதாக எழுதியது, அதேவேளையில் தொழில்துறை வெளியீடான அமெரிக்கன் பேங்கர் அவரது நிலையான பிரச்சார நிதியுதவியானது, நிதியியல் தொழில் வல்லுநர்கள் மற்றும் அவர்களின் மிகவும் நம்பகமான சட்ட நிறுவனங்களிடம் இருந்து வந்ததாக குறிப்பிட்டது. அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முடிப்பதற்கு சற்று முன்னதாக, கமலா ஹாரிஸ் எண்ணெய் தொழில்துறை செல்வத்தின் கோர்டன் கெட்டி உட்பட அதிகளவிலான பில்லியனர் ஆதரவாளர்களை பெருமைபீற்றினார்.

அந்த நேரத்தில், ஆகஸ்ட் 2020 இல், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் பின்வருமாறு எழுதினார்:

இந்த பிரம்மாண்டமான அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில், இவ்வளவு துயரங்களின் பின்னணியில், நியூ யோர்க்கின் ஏமாற்றுக்காரரான பாசிசவாத ட்ரம்ப் மற்றும் டெலாவேரில் இருந்து ஒரு பெருநிறுவன மோசடி மற்றும் கலிபோர்னியாவில் இருந்து ஒரு முன்னாள் வழக்குத்தொடுனர் தலைமையிலான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆகிய இரண்டுக்கும் இடையே “தெரிவு” வழங்கப்பட உள்ளது. இது அமெரிக்க அரசியலின் இழிந்த நிலை குறித்து அனைத்தையும் கூறுகிறது.

இப்போது பெருநிறுவன மோசடியில் இறங்கியுள்ள நிலையில், முன்னாள்-வழக்குத்தொடுனர் மேலே நகர்ந்துள்ள நிலையில், இரண்டு முதலாளித்துவ கட்சிகளும் கடுமையாக வலதிற்கு நகர்ந்துள்ள நிலைமைகளின் கீழ், அமெரிக்க மக்களுக்கு மீண்டும் அந்த “விருப்பத்தேர்வு” வழங்கப்படும்.

குடியரசுக் கட்சியானது, “முதல் நாளிலிருந்தே” ஒரு சர்வாதிகாரியாக செயல்பட சூளுரைக்கும் ஒரு ஜனாதிபதியை மீட்சி செய்வதற்கான ஒரு வெளிப்படையான பாசிசவாத கருவியாக இருக்கிறது. உக்ரேனில் ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்துவதிலும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையைத் தக்க வைத்துக் கொள்வதிலும், சீனாவுக்கு எதிரான இன்னும் பெரிய போருக்குத் தயாரிப்பு செய்வதிலும் ஜனநாயகக் கட்சி முழுமையாக ஒருங்குவிந்துள்ளது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியில் இருந்து சுயாதீனமாகவும் அவற்றுக்கு எதிராகவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே மையப் பிரச்சினையாக உள்ளது.

Loading