முன்னோக்கு

அமெரிக்க பாணி பாசிசத்தை இயல்பாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வியாழன் அன்று, டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட நிலையில், அதன் முழு ஆழமான எதிர்வினையை அடைவதற்கு முன்பே, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, ஏற்கனவே அமெரிக்க பாணி பாசிசத்திற்கான அரசியல் வாகனமாக குடியரசுக் கட்சியை மாற்றுவதை நிரூபித்துள்ளது.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதன் துணை ஜனாதிபதி வேட்பாளர் சென் ஜே.டி.வான்ஸுடன் இணைந்து கைதட்டுகிறார். R-Ohio, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு,  Tuesday, July 16, 2024 in Milwaukee.  [AP Photo/Nam Y. Huh]

அனைத்து பாசிச இயக்கங்களின் பொதுவான பண்புகள், - சோசலிசம் மற்றும் மார்க்சியத்தின் மீதான வெறுப்பு, தீவிர தேசியவாதம், ஒரு பெரிய தலைவரின் விருப்பத்திற்கு கீழ்படிதல் – ஆகியவற்றுடன் அமெரிக்காவின் வரலாற்றிலிருந்து பெறப்பட்ட அம்சங்களுடன் இந்த மாநாடு இணைந்துள்ளது.

எனவே, ஹிட்லர் மற்றும் நாசிக்களால் யூதர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று குடியரசுக் கட்சியினர், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அரக்கமயமாக்கலுக்கு இலக்காகக் கொண்டுள்ளனர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் யூத விரோதமும் பரவலாக உள்ளது. இதற்கான கருத்தியலின் அடித்தளம் ஜேர்மானிய கட்டுக்கதை உருவாக்கத்தால் அல்ல, மாறாக சுவிசேஷ கிறிஸ்தவ அடிப்படைவாதத்தால் வழங்கப்படுகிறது.

சிடுமூஞ்சித்தனமான மன்ஹாட்டன் மோசடியாளர், பல தசாப்தங்களாக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அநாகரிகம் ஆகியவற்றுடன், சாதாரண நாளிதழின் பரபரப்பான செய்திகளில் இருந்தவர், இன்று கிறிஸ்துவ இரட்சகராக சித்தரிக்கப்படுகிறார். மாநாட்டில் பேச்சாளருக்குப் பின் பேச்சாளர், கடந்த சனிக்கிழமை படுகொலையில் இருந்து ட்ரம்ப் தப்பித்ததை, அமெரிக்க அரசியலில் கடவுளின் நேரடித் தலையீடு என்று அறிவித்தனர்.

பில்லியனர் ட்ரம்ப் தலைமையில் கட்சியை வழிநடத்துவர்களில், பெரும்பாலனவர்களின் பிராமாண்டமான செல்வத்தைப் பற்றி மாநாடு விவாதிக்காத அதே வேளை, ஏழைப் பின்னணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் (துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜே.டி. வான்ஸ் உட்பட) தங்கள் தொழிலாள வர்க்க வேர்களை உயர்த்திக் காட்டியதுடன், மோசடியான போலி ஜனரஞ்சகத்தை இதில் சேர்த்துக்கொண்டனர். கட்சி மேடையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வரிக் குறைப்புக்கள் மற்றும் பிற கொள்கைகள் உழைக்கும் மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதற்கான எந்த குறிப்பும் இல்லை.

கடந்த செவ்வாய் பேச்சாளர்கள் இந்த கருப்பொருள்களை ஒரு கிளர்ச்சியான பிற்போக்கு இணக்கத்தின் காட்சியில் எதிரொலித்தனர். இருப்பினும் கார்ப்பரேட் ஊடகங்களால், நவம்பர் தேர்தல்களில் வெற்றியை நோக்கி முன்னேறி வரும் ஒரு கட்சியின் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டமாக இது கருதப்பட்டது.

சில உதாரணங்கள்:

அரிசோனாவை சேர்ந்த அமெரிக்க செனட் வேட்பாளரான காரி லேக், “இன்று இரவு இந்த பெரிய அரங்கில் உள்ள அனைவருக்கும்” தனது அன்பை அறிவித்தார். ஆனால் விதிவிலக்காக, “கடந்த எட்டு ஆண்டுகளாக நீங்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைப் பற்றி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று ஊடகங்களைப் பற்றி குறிப்பிட்டார். ட்ரம்பின் “திருட்டு தேர்தல்” பொய்களின் தீவிர பாதுகாவலராக காரி லேக் உள்ளார். மேலும், ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டோலைத் தாக்கியவர்களை “அவரது நம்பமுடியாத தேசபக்தி ஆதரவாளர்களுக்கான” வாழ்த்துரையையும் அவர் இதில் உள்ளடக்கியிருந்தார்.

மிச்சிகன் அமெரிக்க செனட்டர் வேட்பாளரும், முன்னாள் FBI முகவரும், காங்கிரஸ்காரருமான மைக் ரோஜர்ஸ் பின்வருமாறு கூறினார்:

அமெரிக்காவைப் பாதுகாப்பதுக்காக நான் உழைத்த எல்லா நேரத்திலும், பைடென்-ஹாரிஸ் திறந்த எல்லைக் கொள்கை போன்ற எதையும் நான் பார்த்ததில்லை. போதைவஸ்து மற்றும் வன்முறை கும்பல்கள், சீன உளவாளிகள், பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள தனிநபர்களுக்கு அவர்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்.

புளோரிடாவைச் சேர்ந்த செனட்டர் ரிக் ஸ்காட், இரண்டாவது பைடென் நிர்வாகத்தை பின்வருமாறு முன்னறிவித்தார், அதில்:

ஜனநாயகக் கட்சியினர், தெற்கு எல்லையை அழித்து, பல சட்டவிரோத குடியேறிகளை எமது நாட்டிற்குள் உள்வாங்கினர். சட்டவிரோத போதைப்பொருள் குழுக்கள் அடிக்கடி எங்கு வேண்டுமானாலும் சென்று சம்பாதிக்கத் தொடங்கியது. இதன்மூலம் ஜனநாயகக் கட்சியினர் மோசடி செய்வது எளிதாக இருந்தது

இது, தாராளவாதிகளும் யூதர்களும் அமெரிக்காவின் வெள்ளையர்களை “மாற்றியமைக்க” மில்லியன் கணக்கான குடியேறிகளை கொண்டு வர சதி செய்கிறார்கள் என்று கூறும் நவ-நாசிக்களின் “மாபெரும் மாற்றுக் கோட்பாட்டின்” சற்றே சுத்தம் செய்யப்பட்ட பதிப்பாகும்.

பைடென் மற்றும் கமலா ஹாரிஸுக்குப் பிறகு ஜனாதிபதி பதவிக்கு மூன்றாவது இடத்தில் உள்ள பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன், அமெரிக்காவின் ஸ்தாபகமானது மத அடிப்படையிலானது என்று கூறினார்: “எங்கள் உரிமைகள் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவர்கள் கடவுளிடமிருந்து வந்தவர்கள்.”

மதத்தின் இந்த உறுதிமொழியை மாநாட்டிலிருந்த மக்கள் ஆரவாரம் செய்து கைதட்டிப் பாராட்டினர். மீண்டும் அவர் “தீவிரமான விழிப்புள்ள முற்போக்கு இடதுசாரிகளைக்” கண்டித்து, பின்வருமாறு கூறினார்:

இந்தக் கொள்கைகளுக்கு அவமதிப்பு உள்ளது. சரியா? அமெரிக்கா என்னவாக வேண்டும் என்பதில் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமான பார்வை உள்ளது. அவர்கள் இந்த அஸ்திவாரங்களைத் தகர்த்தெறிந்து, எல்லையற்ற, சட்டமற்ற மார்க்சிய, சோசலிச கற்பனாவாதமாக நம்மை மாற்ற விரும்புகிறார்கள்.

பைடென் நிர்வாகம் ஒரு இரக்கமற்ற ஏகாதிபத்திய அரசாங்கமாகும், அது பாசிச குடியரசுக் கட்சியைப் போலவே சோசலிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் பிடிவாதமாக எதிராக உள்ளது. மாநாட்டில், ஜோன்சனின் பேச்சு, பல பேச்சாளர்களால் எதிரொலிக்கப்பட்டது. டிரம்ப் & கோ உண்மையில் அஞ்சுவது ஜனநாயகக் கட்சியினரைப் பற்றி அல்ல, மாறாக உண்மையான புரட்சிகர சோசலிச இயக்கத்தின் தலைமையிலான தொழிலாள வர்க்கத்தின் அச்சுறுத்தலே என்பதை நிரூபிக்கிறது.

செவ்வாய் இரவு, மாநாட்டு அமர்வு இறுதி மணிநேரத்தில் டிரம்ப் மற்றும் வான்ஸ் வந்த பிறகுதான் அரசியல் பின்னடைவின் உண்மையான பரிமாணங்கள் தெளிவாகத் தெரிந்தன. வருங்கால சர்வாதிகாரியும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரும், கட்சியின் உச்ச தலைவருக்கு அவரது முன்னாள் போட்டியாளர்கள் சாஷ்டாங்கமாக வணங்குவதை பார்க்கும் நோக்கத்திற்காக வந்திருந்தனர். அவர்களில், 2016ல் டிரம்பிற்கு எதிராக போட்டியிட்ட செனட்டர் டெட் குரூஸ் மற்றும் செனட்டர் மார்கோ ரூபியோ, அத்துடன் இந்த ஆண்டு வேட்புமனுவுக்கு அவரை சவால் செய்த முன்னாள் ஐ.நா. தூதர் நிக்கி ஹேலி மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் அடங்குவர்.

இந்த நான்கு பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரங்களைச் செய்தனர், இதில் ஹேலி, தோல்வியுற்ற படுகொலை முயற்சி வரை மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை, மற்றும் டிசாண்டிஸ், ஆரம்பத்தில் அவருக்கு பேசுவதுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இரண்டு பெரிய முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்த வரையில், நவீன அமெரிக்க வரலாற்றில் ஒருவேளை மிகவும் பிற்போக்குத்தனமான கொடுமையை வழங்கியவர் குரூஸ் தான்.

இவர், யூதர்களுக்கு எதிரான பல நாசிக்களின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில், புலம்பெயர்ந்தோரை அரக்கத்தனமாக்குவதில் கவனம் செலுத்தினார். பைடென் பதவியேற்றதிலிருந்து 11.5 மில்லியன் புலம்பெயர்ந்தோர் “படையெடுப்பை” மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், அவர்களை கொலைகாரர்கள், கற்பழிப்பாளர்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்கள் என்று அவர் சித்தரித்தார். அவர்கள் “இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களை” கைப்பற்றி “பாலியல் அடிமை வாழ்க்கைக்கு” விற்கின்றனர் என்று குறிப்பிட்டார். உண்மையில், அமெரிக்காவில் பிறந்தவர்களை விட புலம்பெயர்ந்தோர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் குறைவு என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் காட்டினாலும், புலம்பெயர்ந்தோர் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்பான சில உயர்மட்ட வழக்குகளை அவர் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்தோரின் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதாக தனது பார்வையாளர்களைக் கிளறி, “இன்றிரவு, நான் கேட் மற்றும் லிங்கன் மற்றும் ரேச்சலுக்காக பேசுகிறேன். இன்றிரவு, நான் பைடெனைக் கண்டித்து டிரம்பை வாழ்த்துவதற்காக ஜோஸ்லினுக்காக பேசுகிறேன்” என்று க்ரூஸ் கூறினார்.

மாநாட்டின் இறுதிப் பேச்சாளர்களில் ஒருவரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ் இருந்தார். ட்ரம்பின் கீழ் வெள்ளை மாளிகையின் முன்னாள் செய்திச் செயலாளராகவும், இப்போது ஆர்கன்சாஸின் ஆளுநருமாக இருக்கும் இவர், பாசிச முன்னாள் ஜனாதிபதியின் மதப் புகழ்ச்சியை, ஜுரம் எறுமளவுக்கு சுருதியைக் கொண்டு வந்தார். “கடவுள் அந்த கொலையாளியிடமிருந்து ஜனாதிபதி டிரம்பை காப்பாற்றினார். ஏனென்றால் கடவுள் அவரை இன்னும் முடிக்கவில்லை, மேலும் அவர் நிச்சயமாக அமெரிக்காவையும் முடிக்கவில்லை” என்று கூறினார்.

இந்த கேவலமான காட்சிக்கு பிரதான கார்ப்பரேட் ஊடகங்களின் அணுகுமுறை, ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஆளும் உயரடுக்கு இரண்டாவது ட்ரம்ப் ஜனாதிபதி பதவியை வரவேற்பதற்கு எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது மற்றும் ட்ரம்பை நீண்டகாலமாக எதிர்க்கும் பிரிவுகள், குறிப்பாக வெளியுறவுக் கொள்கையில், அவர்களின் நலன்களின் நம்பகத்தன்மையற்ற மற்றும் ஒழுங்கற்ற பிரதிநிதியாக இருக்கிறது என்பதற்கான குறிப்பைக் கொடுத்துள்ளது,

மாநாட்டின் அரசியல் உள்ளடக்கம் எந்த வகையிலும் அசாதாரணமானது அல்லது முன்னெப்போதும் இல்லாதது என்று ஊடகங்களில் எந்த குறிப்பும் இல்லை. குடியரசுக் கட்சி ட்ரம்பின் கட்சியாக மாறுகிறது என்று பண்டிதர்கள் கூறினர். ஆனால், யாரும் “பாசிசம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை அல்லது இந்த மாற்றம் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மரண அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று யாரும் பரிந்துரைக்கவில்லை.

சந்தேகமில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மைய முன்னுரிமைகள், எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரேனில் போர் மற்றும் உலகளாவிய ஆக்கிரமிப்பு வேலைத்திட்டம் (காஸாவில், ஈரானுக்கு எதிராக, இறுதியில் சீனாவுக்கு எதிராக) ஆகியவை பராமரிக்கப்பட்டு, முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதிசெய்ய, திரைக்குப் பின்னால், இராணுவ-உளவுத்துறை எந்திரம் மற்றும் வோல் ஸ்ட்ரீட் பிரதிநிதிகள் டிரம்பின் உள் நபர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் அருவருப்பான காட்சி, புதன்கிழமை தொடர்ந்து வியாழன் முடிவடைந்தது. இது ஒரு கட்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஒரு தனி நபரின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக அமைப்பின் வெளிப்பாடு ஆகும். அதிகரித்து வரும் உலகப் போர் மற்றும் தீவிர சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் நிலைமைகளின் கீழ், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அழுக்கு மற்றும் பின்தங்கிய தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

ஒரு மாதத்தில் தங்கள் சொந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியினர், இதே செயல்முறையின் மற்றொரு வெளிப்பாடாக இருப்பர்.

Loading