முன்னோக்கு

பிரெஞ்சு தேர்தலுக்குப் பிறகு, புதிய மக்கள் முன்னணி வலது பக்கம் ஊசலாடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜோன்-லூக் மெலன்சோன், நடுவில் நிற்பவர், பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாவது சுற்றுக்குப் பிறகு உரை நிகழ்த்துகிறார். [AP Photo/Thomas Padilla]

பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திடீர்த் தேர்தல்களில் புதிய மக்கள் முன்னணி (NFP) வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடதுசாரி உணர்வுகளின் எழுச்சி, அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் (RN) வெற்றியைத் தடுத்ததோடு, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குழுமக் (Ensemble) கூட்டணியின் தோல்விக்கும் வழிவகுத்தது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் வங்கிகளின் ஆட்சிக்கும், ஒவ்வொரு முக்கிய பிரச்சினையிலும் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட கொள்கைகளை திணிக்கும் பொலிஸ் அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்கள். ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்த உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் மக்ரோனின் அழைப்பை எழுபது சதவீத மக்கள் நிராகரிக்கின்றனர். காஸா இனப்படுகொலை மீது பரவலான வெறுப்பு உள்ள நிலையில், பொய்யான பயங்கரவாத எதிர்ப்புக் குற்றச்சாட்டுகளின் கீழ் அதனை எதிர்ப்பவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு வாக்கெடுப்பின்றி மக்ரோனால் திணிக்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்களை 70 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர். தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் சரணடைந்து இதற்கு எதிரான வேலைநிறுத்தங்களை கைவிடும் வரை பாரிய எதிர்ப்பு போராட்டங்களைத் தாக்குவதற்கு அவர் பொலிசை அனுப்பினார்.

எவ்வாறாயினும், புதிய மக்கள் மக்கள் முன்னணி, அதன் சொந்த திவாலான, சந்தர்ப்பவாத தேர்தல் மூலோபாயத்தின் விளைபொருளாக, தேர்தலுக்குப் பின்னர் வலப்புறம் நோக்கி கூர்மையாக ஊசலாடுகிறது. இது தேசிய பேரணி கட்சிக்கு எதிராக மக்ரோனுடன் கூட்டணியில் நுழைந்தது. அத்தோடு, மக்ரோனையும் அவரது குழுமக் கூட்டணியையும் (Ensemble) வலுப்படுத்த அதன் சொந்த வேட்பாளர்களை விலக்கிக் கொண்டது. தேர்தலுக்குப் பிறகு, முதலாளித்துவ அரசில் வலதுசாரி சக்திகளுடனான பேச்சுவார்த்தைகளில் முழுக் கவனம் செலுத்திய மெலன்சோன், பலமுறை மக்ரோனிடம் தன்னை பிரதம மந்திரியாக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அதை மக்ரோன் செய்ய மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், மெலோன்சோனின் “ஜனரஞ்சக” கட்சியான அடிபணியாத பிரான்ஸ் (LFI) மற்றும் பெருவணிகர்களின் சோசலிசக் கட்சி (PS) ஆகியவற்றுக்கு இடையே பிளவுகள் வெடித்ததால், புதிய மக்கள் முன்னணியை உருவாக்கிய வேறுபட்ட கட்சிகளின் வண்ணமயமான கூட்டணி சிதைந்து வருகிறது. புதிய மக்கள் முன்னணிக்கு மத்தியதர வர்க்க போலி-இடது குழுக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்துள்ளன. ஆனால், அதன் அழுகிய அடித்தளங்கள் மிக விரைவாக, மிகத் தெளிவாகத் தெரிய வருகின்றன.

மக்ரோன் பாராளுமன்ற பாரம்பரியத்தை மதிக்க மறுத்து, மெலன்சோனை பிரதம மந்திரியாக நியமிக்க மறுத்தாலும் கூட, புதிய மக்கள் முன்னணியின் பெரும்பகுதியினர் மக்ரோனுடன் வெளிப்படையாக நட்பு கொள்ள தயாராகி வருகின்றனர். கிளெமென்டின் ஆடெய்னைச் (Clementine Autain) சுற்றியுள்ள சக்திகள் மெலோன்சனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சியைவிட்டு வெளியேறி, சோசலிசக் கட்சி மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்க அச்சுறுத்தி வருகின்றன. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஃபேபியன் ரௌசல் புதிய மக்கள் முன்னணி “செவிசாய்க்க வேண்டும்” என்று கோருகையில், சோசலிசக் கட்சியின் ஐரோப்பிய வேட்பாளரான ரஃபேல் குளக்ஸ்மேன், “அது தன்னை விஞ்ச வேண்டும்” என்று கோருகிறார்.

இவ்வாறு முதலாளித்துவ அரசுக்கும் மக்ரோனுக்கும் உள்ள தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தடுப்பதன் மூலம், தேசிய பேரணியின் தலைவரான மரின் லு பென்னை புதிய மக்கள் முன்னணி பலப்படுத்துகிறது. அத்துடன், பிரெஞ்சு மக்களுக்கு விரோதமான வங்கிகளின் கருவியாக “இடதுகளைக்” கண்டித்துக்கொண்டே இருப்பதற்கும், சோசலிசக் கட்சியினது கடந்தகால அரசாங்கங்களின் சிக்கனக் கொள்கைகள் மீதான ஏமாற்றம் மற்றும் கசப்புணர்வால் தேசிய பேரணி கட்சிக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆதரவை ஒருங்கிணைப்பதற்கும் இது ஒரு பாதையைத் திறந்து விடுகிறது.

பிரான்சின் ஊழல் நிறைந்த அரசியல் ஸ்தாபனத்தின் நிலைமை அரசியல் உறவுகளின் உண்மையான நிலையை கேலிக்கூத்தாக்குகிறது. பிரான்சிலும் சர்வதேச அளவிலும், ஏகாதிபத்தியம், பாசிசம், இனப்படுகொலை, பொலிஸ் அரசு ஆட்சி, மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு மிகப்பெரும் மக்கள் எதிர்ப்பு உள்ளது. மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு எதிரான போராட்டம் என்பது செயற்கையாக பாராளுமன்றத்துடன் மட்டுப்படுத்தப்பட முடியாது, மாறாக வர்க்கப் போராட்டத்திற்கான ஒரு உண்மையான புரட்சிகர வேலைத்திட்டத்திலேயே வெளிப்பாட்டைக் காண வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களின் எதிர்த்தாக்குதல் தயாரிக்கப்பட்டு தொடங்கப்பட வேண்டும். முதலாளித்துவத்திற்கு வெகுஜனங்களின் புறநிலை புரட்சிகர எதிர்ப்பை வெளிப்படுத்தும் கோரிக்கைகள் மீது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடது உணர்வை அணிதிரட்ட வேண்டும். இது, மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு எதிராக முன்னோக்கி செல்லும் பாதையை அமைப்பதோடு, முதலாளித்துவ வர்க்கத்துடனும் பிரான்சின் “பணக்காரர்களின் ஜனாதிபதியுடனும்” பாசிச எதிர்ப்பு உணர்வை பலவீனப்படுத்தும் கூட்டணியுடன் கட்டிப்போடும் புதிய மக்கள் முன்னணியில் உள்ள சக்திகளால் விரிக்கப்பட்ட பொறியையும் முறியடிக்கும்.

மெலோன்சோன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் நட்பு நாடுகளான கிரேக்கத்தில் SYRIZA மற்றும் ஸ்பெயினில் Podemos (”தீவிர இடதுகளின் கூட்டணி”) போன்றவற்றின் பங்கை பிரான்சிற்குள் மீண்டும் செய்ய புதிய மக்கள் முன்னணி நகர்கிறது. 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரிசாவின் ஸ்ராலினிச-ஜனரஞ்சக கூட்டணி, ஐரோப்பிய ஒன்றியம் திணித்த சிக்கனக் கொள்கைகளை முடிவுகட்டுவதாக உறுதியளித்தது. அதிகாரத்தில் இருந்தபோது, வலதுசாரி சுதந்திர கிரேக்கர்களுடன் (ANEL) ஒரு கூட்டணியை உருவாக்கிய சிரிசா, அதன் வாக்குறுதிகளை உடனடியாக காட்டிக் கொடுத்தது, ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்ட வெட்டுக்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை சுமத்தியது மற்றும் அகதிகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய தடுப்பு முகாம்களை அமைத்தது.

2019 இல் ஆட்சிக்கு வந்த Podemos, பெருவணிகர்களின் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) தலைமையிலான தொழிலாளர்-விரோத அரசாங்கத்தில் தடையின்றி தன்னை இணைத்துக் கொண்டது. COVID-19 க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோரி வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களைத் தாக்குவதற்கு இது பொலிசை அனுப்பியது. அத்தோடு, ஐரோப்பிய பிணையெடுப்புகளில் பில்லியன் கணக்கான யூரோக்களை பெரிய வணிகங்களுக்கு விநியோகித்ததை மேற்பார்வையிட்டது. மேலும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் உலோகத் தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. இது 2022 இல் நேட்டோ-ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், உக்ரேனில் உள்ள நவ-நாசி அசோவ் பட்டாலியனுக்கு ஆயுதங்களை வழங்கியதுடன், காஸா இனப்படுகொலைக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பியது.

தற்போதைய வெடிக்கும் அரசியல் சூழ்நிலையில், மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இது போன்ற துரோகங்கள் அழிவுகரமான விளைவுகளையே ஏற்படுத்தும். பிரான்சிலும், அனைத்து ஏகாதிபத்திய நேட்டோ நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ தலைவர்கள், வெகுஜனங்களின் கோபத்துக்கு மத்தியில் மரண பயத்தில் வாழ்கின்றனர். அவர்கள் வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போர்களையும், உள்நாட்டில் வர்க்கப் போர் மற்றும் சர்வாதிகாரத்தையும் வெளிப்படையாக சதி செய்து தயாரித்து வருகின்றனர். “பல்வேறு அடக்கப்பட்ட கோபங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்கக்கூடும்” என்பதால், அதி தீவிர வலதுசாரி ஜெனரல் பியர் டூ வில்லியே ஒரு தீவிர வலதுசாரி இதழில், “நாம் நினைத்துப் பார்க்க முடியாததைப் பற்றி சிந்திக்க வேண்டும். … சட்டத்தின் ஆட்சி வெளிப்படையாக மரியாதைக்குரியது, ஆனால் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒருவர் மூலோபாய ரீதியாக சிந்திக்க வேண்டும்” என்று எழுதினார்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த நோக்கத்திற்காக பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

ஏகாதிபத்திய போர் வேண்டாம்! ரஷ்யாவுடனான போரை நிறுத்தி, நேட்டோவை அகற்று! ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பிரெஞ்சு படைகளை வெளியேற்று!

பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் நிறுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு மக்ரோன் திணித்த பரந்த இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு, அவரது ஓய்வூதிய வெட்டுக்களால் நிதியளிக்கப்பட்டது, அது ரத்து செய்யப்பட வேண்டும். நேட்டோவை அகற்றி அதன் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அணுஆயுத யுத்தத்தை அச்சுறுத்தும் ஏகாதிபத்திய நேட்டோ கூட்டணியை விட்டு பிரான்ஸ் வெளியேற வேண்டும் என்று தொழிலாளர்கள் கோர வேண்டும். மத்திய கிழக்கு அல்லது ஆபிரிக்காவில் நவ காலனித்துவப் போர்களுக்காக குவிக்கப்பட்ட துருப்புக்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும்.

காஸா இனப்படுகொலையை நிறுத்து! இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை துன்புறுத்தாதே!

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் காஸா இனப்படுகொலைக்காக இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆயுதங்கள் தயாரிப்பதையும், வழங்குவதையும் தடுக்க வேண்டும். காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது போலியான பயங்கரவாத எதிர்ப்பு அல்லது யூத எதிர்ப்புக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடுப்பது முடிவுக்கு வர வேண்டும், மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகள் நீக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றங்களால் இனப்படுகொலை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த பிரெஞ்சு மற்றும் நேட்டோ அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

ஐந்தாம் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க!

பொலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்து, வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டக்காரர்களை பாரியளவில் கைது செய்வதன் மூலம், மக்ரோன் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார். நாசிக்களை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிரான, நாசி SS பிரிவு ஒத்துழைப்புக் கூட்டாளிகளின் தொடர்ச்சியாக வந்தவர்களே மக்ரோனின் CRS கலகப் பிரிவு போலீசாராகும். இது, 1948 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் 1968 பொது வேலைநிறுத்தம் ஆகியவற்றின்போது CRS=SS முழக்கத்தை நினைவூட்டுகிறது. அத்தோடு, 1958 அரசியலமைப்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கலைக்கப்பட வேண்டும். இந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே கடந்த மாதம் மக்ரோன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தி முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்துவப் போவதாக அச்சுறுத்தினார்.

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் வங்கி பிணையெடுப்புகளை ரத்து செய்! வேலைகள் மற்றும் சமூக திட்டங்களுக்கு பில்லியன்களை வழங்கு!

மக்ரோனின் சட்டவிரோத ஓய்வூதிய வெட்டுக்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும், சமூகத்தின் மீதான வங்கிகளின் ஜனநாயக விரோத கட்டளைகளை உடைக்க வேண்டும். சமூகத் திட்டங்கள் மற்றும் வேலைகளுக்கு பணம் இல்லை என்ற பொய்யை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். ஐரோப்பாவின் பணக்கார பில்லியனர்களைக் கொண்ட நாடாக பிரான்சை மாற்றிய தொடர் வங்கிப் பிணையெடுப்புகளில், கடந்த தசாப்தங்களாக நிதியப் பிரபுத்துவம் பிடுங்கிய நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை கையகப்படுத்துவதின் மூலம் பொது நிதிக்கு பணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தி, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்துவதை நிறுத்து!

தேசியவாதத்தை தூண்டுவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தை போராட்டத்தில் அணிதிரட்டுவதை பிளவுபடுத்தும் முதலாளித்துவத்தின் முயற்சிகளுக்கு இடைவிடாத எதிர்ப்பு தேவைப்படுகிறது. ஆவணமற்ற தொழிலாளர்களின் பாரிய நாடுகடத்தல்களை விரைவுபடுத்துவதற்கும், பிரெஞ்சு குடியுரிமையிலிருந்து இரட்டைக் குடியுரிமையைப் பறிப்பதற்கும், அத்துடன் மக்ரோன் மற்றும் புதிய மக்கள் முன்னணியால் ஆதரிக்கப்படும் குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும், தேசிய பேரணி கட்சி விடுக்கும் அழைப்புகளை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். புகலிடத்தை மறுக்கும் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள், கிரேக்கத்தில் சிரிசாவால் கட்டப்பட்டதைப் போன்ற பாரிய தடுப்பு முகாம்களை உருவாக்குதல் மற்றும் பிரெஞ்சு பள்ளிகளில் முஸ்லிம் மத ஆடைகளைத் தடை செய்யும் அவமானகரமான சட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக !

ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் போர், பாசிசம், இனப்படுகொலை மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மத்தியில், பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் சக்திவாய்ந்த கூட்டாளிகளாக உள்ளனர். தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும், பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்போராட்டப் பாதையில் தடையாக இருப்பார்கள். தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த சாமானிய போராட்ட அமைப்புகளை கட்டியெழுப்புவதும், பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதும், முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளாக மாற்றுவதும், முன்னோக்கி செல்லும் பாதையாகும்.

Loading