பிரெஞ்சு திடீர் தேர்தல்களில் புதிய மக்கள் முன்னணி வெற்றி பெற்று, ஒரு தொங்கு நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பிரெஞ்சு திடீர் தேர்தலில் ஜோன் லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP) வெற்றி பெற்றுள்ளது. 577 இடங்களைக் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில் NFP ஆனது 182 இடங்களைக் கைப்பற்றியது, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் குழுமக் (Ensemble) கூட்டணிக்கு 168 இடங்களும் அதிவலது தேசிய பேரணிக்கு (RN) 143 இடங்களும் கிடைத்தன. இறுதி வாக்குப்பதிவானது 67 சதவீதமாக இருந்தது, இது 1997 க்குப் பிந்தைய இரண்டாவது சுற்று பாராளுமன்றத் தேர்தல்களில் மிக உயர்ந்தது மற்றும் 2022 பாராளுமன்றத் தேர்தல்களை விட 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

தேசிய பேரணி (RN) கட்சிக்கு வெற்றிவாய்ப்புக் குறித்த ஊடக முன்கணிப்புகளை மீறி மக்ரோனுக்கு ஒரு பின்னடைவாக அமைந்த இந்த தேர்தல் முடிவானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் பிரிவுகளிடையே நிலவும் இடதுசாரி உணர்வையும் மற்றும் பாசிச-விரோத மனோநிலையையும் பிரதிபலிக்கிறது.

தனது ஜனாதிபதி பதவிக்காலம் முழுவதிலும் அதிவலதுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு தலைமை கொடுத்து வருவதாக கூறி வந்துள்ள மக்ரோனுக்கு இது ஒரு படுதோல்வியாகும். யதார்த்தத்தில், அவர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக திட்டமிட்டு ஆட்சி செய்து வருகிறார். மக்கள்தொகையில் 70 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமானவர்கள் அவரது சட்டவிரோத ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்க்கின்றனர். அத்துடன், கடந்த ஆண்டு ஒரு வாக்கெடுப்பு கூட இல்லாமல் அவர் அவற்றை நிறைவேற்றினார் என்பதையும், ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புகளை அனுப்ப அவர் விடுத்த அழைப்பையும் அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

நேற்று இரவு 8 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களுக்குப் பின்னர், தேசிய தொலைக்காட்சியில் பேசிய மெலோன்சோன், அரசாங்கம் அமைக்க புதிய மக்கள் முன்னணிக்கு அழைப்புவிடுக்குமாறு மக்ரோனுக்கு விண்ணப்பம் செய்தார். 'புதிய மக்கள் முன்னணியை ஆட்சி செய்ய அழைக்கும் கடமை ஜனாதிபதிக்கு உள்ளது' என்று கூறிய மெலோன்சோன், ''சாத்தியமில்லை என்று கூறப்பட்ட ஒரு முடிவை வென்றதற்காக' வாக்காளர்களைப் பாராட்டினார்.

'பெரும்பான்மையினர் நாட்டிற்காக வேறொரு தெரிவை செய்துள்ளனர்,' என்பதையும் சேர்த்துக் கொண்ட மெலோன்சோன், 'மக்களின் விருப்பம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். … ஜனாதிபதி விட்டுக்கொடுக்க வேண்டும்' என்று மேலும் குறிப்பிட்டார்.

புதிய மக்கள் முன்னணியானது 'அதன் வேலைத்திட்டம், அதன் வேலைத்திட்டம் மட்டுமே, அதன் அனைத்து வேலைத்திட்டங்களையும்' செயல்படுத்தும் என்று மெலோன்சோன் கூறினார். ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்தும் மக்ரோனின் சீர்திருத்தத்தை ரத்து செய்வது, முக்கிய பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பதன் மூலமாக விலை உயர்வுகளை நிறுத்துவது, மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் 'வாக்கெடுப்பு இல்லாமலேயே, உத்தரவாணைகள் மூலமாக எடுக்கப்பட முடியும்,' என்று குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, மக்ரோன் எலிசே ஜனாதிபதி மாளிகையில் பிரதம மந்திரி காப்ரியேல் அட்டல் மற்றும் பெரும்பான்மை கட்சிகளின் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். முன்னதாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்ரோன் அல்லது அட்டல் உரையாற்றுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர், எலிசே அரண்மனையானது மக்ரோன் ஞாயிறன்று மாலை உரையாற்ற மாட்டார் என்றும், 'இந்த பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவுகள் வருகையில், தொகுதி வாரியாக அவற்றைக் கவனித்து வருவதாகவும்' தெரிவித்தது.

நாடாளுமன்ற பெரும்பான்மையை ஒன்றுதிரட்டும் முயற்சியில் புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பதை தீர்மானிப்பது உட்பட, 'அவசியமான முடிவுகளை எடுப்பதற்கு' முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தின் 'கட்டமைப்பு' வரை மக்ரோன் காத்திருப்பார் என்று எலிசே அறிவித்தது. அட்டல் பின்னர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார், 'கடமை தேவைப்படும் வரை' அதிகாரத்தில் தான் இருக்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.

மக்ரோன் நாளை தொடங்கவுள்ள நேட்டோ போர் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனுக்கான அவரது பயணத்தை இரத்து செய்யப் போவதில்லை, ஆனால் ஒரு நாள் தாமதப்படுத்துவார் என்றும் எலிசே செய்தி வெளியிட்டது. நேட்டோ உச்சி மாநாட்டில், மக்ரோன் போன்ற ஏகாதிபத்திய போர் வெறியர்கள், போர் பொருளாதாரத்திற்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துகின்ற அதேவேளையில், ரஷ்யாவுக்கு எதிரான போரை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பது குறித்து அங்கு விவாதிப்பார்கள். மக்ரோன், அவரது தேர்தல் தோல்விக்கு இடையிலும், மக்களுக்கு எதிராக தொடர்ந்து ஆட்சி செய்ய உத்தேசித்துள்ளார் என்பது தெளிவாக உள்ளது.

இன்று, மக்ரோன், 'நாட்டின் ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக' என்று கூறி, 'இப்போதைக்கு பிரதம மந்திரியாக இருக்க' அட்டலை கேட்டுக் கொண்டார். இவ்வாறாக, பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நேட்டோ போர் சதித்திட்டங்களைத் தொடர மக்ரோன் வாஷிங்டனுக்குப் பறப்பார்.

நேற்றிரவு, RN தலைவர் மரின் லு பென், TF1 தொலைக்காட்சியில் பேசுகையில், அவரது கட்சியானது ஒரு தற்காலிக பின்னடைவை மட்டுமே சந்தித்திருப்பதாக குறிப்பிட்டதுடன், நவ-பாசிசம் ஒருநாள் பிரான்சை ஆட்சி செய்யும் என்றும் சூளுரைத்தார். மேலும் அவர், 'அலை எழுகிறது. இம்முறை அது போதுமான உயரத்திற்கு உயரவில்லை, ஆனால் அது தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது, இதன் விளைவாக, நமது வெற்றி தாமதமாகத்தான் உள்ளது. எங்களிடம் உள்ள இடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க அனுமதிக்கும் ஒரு முடிவால் ஏமாற்றமடைய எனக்கு அதிக அனுபவம் உள்ளது,' என்று ஒரு முடிவை மேற்கோள் காட்டியதுடன் RN இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 'முதலாவது கட்சி' ஆக இருக்கிறது என்று தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், RN நிர்வாகிகள் தங்களை தேர்ந்தெடுக்காததற்காக பிரெஞ்சு மக்கள் மீது மோசமான அச்சுறுத்தல்களையும் கண்டனங்களையும் வெளியிட்ட நிலையில், RN தேர்தல் தலைமையகத்தில் விரக்தி வெடித்தது. 'பிரெஞ்சு மக்கள் முட்டாள்கள், அவர்கள் முட்டாள்களின் மக்கள்!' என்று ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார், அதேவேளையில் RN பாராளுமன்ற உறுப்பினர் ஜூலியன் ஓடூல் இவ்வாறு கூறினார்: 'அடிபணிவதற்கான இந்த நடவடிக்கைக்கான விலையை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். இந்த விருப்பமின்மைக்கான விலையை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.'

ஆனால் வாக்காளர்கள் பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சி மற்றும் மக்ரோனின் வெறுக்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர். வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் (மக்ரோன் மற்றும் அவரது வலதுசாரி கூட்டாளிகளால் மீண்டும் மீண்டும் மிதிக்கப்பட்டது) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ரஷ்யாவிற்கு எதிரான போரின் தீவிரம் மற்றும் காசாவில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அவர் சுமத்திய பொலிஸ்-அரசு வங்கி சர்வாதிகாரம் அகற்றப்பட வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவது போராட்டத்தில் தீர்க்கமானது. இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் ஆதரவாளர்களால் மேலாதிக்கம் செலுத்தப்படும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்திடம் தொழிலாளர்கள் அவற்றை விட்டுவிட முடியாது.

இந்தத் தேர்தல் RN க்கு ஒரு பின்னடைவைக் குறிக்கும் அதே வேளையில் (முந்தைய பின்னடைவுகளைப் போலவே, பிரெஞ்சு பாசிசத்தின் பாரம்பரியத்தை வெளிப்படையாக ஊக்குவிக்கவும், தெரு வன்முறைக்கு ஆதரவளிக்கவும் மரின் லு பென்னின் மறுப்பு RN இல் விமர்சனங்களுக்கு வழிவகுக்கும்) RN தன்னை ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக ஸ்தாபித்துள்ளது.

உத்தியோகபூர்வ பிரெஞ்சு உள்துறை அமைச்சக புள்ளிவிபரங்களின்படி, RN 8.7 மில்லியன் வாக்குகளுடன் முழுமையான எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கிறது, அதைத் தொடர்ந்து NFP க்கு 7 மில்லியன் வாக்குகளும், குழுமக் கட்சிக்கு 6.3 மில்லியன் வாக்குகளும் கிடைத்தன. அங்கே 1.6 மில்லியன் வெற்று அல்லது பழுதடைந்த வாக்குச் சீட்டுகளும், வலதுசாரி குடியரசுக் கட்சிக்கு 1.5 வாக்குகளும் கிடைத்தன. NFP வாக்குகள் வீழ்ச்சியடைந்தன மற்றும் குழுமக் கட்சிகளது வாக்குகள் உயர்ந்துள்ளன, ஏனெனில் RN வேட்பாளர்களைத் தடுப்பதற்கான தந்திரோபாய வாக்களிப்பு ஒப்பந்தங்களில் NFP ஆனது பெரும்பாலும் குழுமக் கட்சியை ஆதரித்தது: 125 தொகுதிகளில் குழுமக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக NFP தனது வேட்பாளர்களை திரும்பப் பெற்றது, அதே நேரத்தில் குழுமக் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே NFP வேட்பாளர்களை ஆதரித்தது.

அனைத்திற்கும் மேலாக, NFP கட்சிக்குள்ளாக, ரஷ்யாவுடனான போரை ஆதரிக்கும் மற்றும் காஸா இனப்படுகொலைக்கான எதிர்ப்பை 'யூத-எதிர்ப்புவாதம்' என்று கண்டனம் செய்கின்ற முதலாளித்துவ அரசாங்கத்தின் நீண்டகால கட்சிகளுக்கு மெலோன்சோனின் தேர்தல் பேச்சுவார்த்தைகள் கணிசமான நிலைப்பாடுகளை வழங்கின. மெலோன்சோனின் சொந்த அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியானது 72 இடங்களையும், பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) 65 இடங்களையும், பசுமை கட்சியினர் 34 இடங்களையும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) 9 இடங்களையும் கைப்பற்றின. பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) எந்த இடத்தையும் வெல்லவில்லை.

NFP கட்சிக்குள்ளாக, சோசலிஸ்ட் கட்சியைச் (PS) சுற்றிய சக்திகள், மக்ரோனுக்கு நீண்டகால விட்டுக்கொடுப்புகளை வழங்குமாறு NFP க்கு அழைப்பு விடுத்து வருகின்றன. ஏனென்றால் உண்மையில் அவைகள் அவரது பிற்போக்குத்தனமான கொள்கைகளை ஆதரிக்கின்றன. இந்த வசந்த காலத்தில் ஐரோப்பியத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரச்சாரத்திற்கு தலைமை கொடுத்த அதேவேளையில், காஸாவில் ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறுத்த ரஃபேல் குளுக்ஸ்மான், ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்: 'நாம் ஒரு தொங்கு நாடாளுமன்றத்தில் இருக்கிறோம், ஆகவே நாம் பெரியவர்களைப் போல செயல்பட வேண்டியிருக்கும், அதாவது, நம்மைத் தாண்டி நாம் பேச வேண்டியிருக்கும், விவாதிக்க வேண்டியிருக்கும், உரையாடலில் ஈடுபட வேண்டியிருக்கும்.'

மக்ரோனுடன், சோசலிஸ்ட் கட்சியின் (PS) முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் போன்ற வெறுக்கப்படும் பிரமுகர்களுடனோ, அல்லது பசுமைக் கட்சியினர் மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தில் உள்ள அவர்களது கூட்டாளிகளுடனோ சமரசம் காண்பதற்கான அழைப்புகளை தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும். மக்ரோனின் தேர்தல் படுதோல்வி மற்றும் RN இன் பின்னடைவை போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த தாக்குதலாக மாற்றுவதே இப்போதைய தீர்மானகரமான பணியாகும்.

Loading