வாஷிங்டனில் இடம்பெறும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, ஐரோப்பாவில் உள்ள இராணுவத் தளங்களை அமெரிக்கா இரண்டாவது அதிக எச்சரிக்கையுடன் வைத்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ராம்ஸ்டீன் விமானத் தளம், ஜேர்மனி, ஜன. 30, 2024. [Photo: Air Force]

அமெரிக்க அதிகாரிகள் இந்த உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையை பகிரங்கமாக விளக்க மறுத்தாலும், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி, 'ரஷ்ய பிரதேசத்தில் உக்ரேன் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக கிரெம்ளினில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு' பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

'உக்ரேனுக்கு பயிற்சி, உளவுத்துறை மற்றும் பிற ஆதரவை வழங்கும் இராணுவத் தளங்கள், தர்க்கரீதியான அடுத்தடுத்த இலக்காக இருக்கலாம்' என்று டைம்ஸ் எழுதியது.

ரஷ்யாவிற்குள்ளேயான தாக்குதலுக்கு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று கூறிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கு 300-கிலோமீட்டர் (186-மைல்) தூரம் செல்லும் நீண்ட தூர ATACMS ஏவுகணைகளை வழங்கத் தொடங்கியது.

கடந்த மாதம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்ய எல்லைக்குள் 'எங்கும்' தாக்குதல் நடத்துவதுக்கு, அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அமெரிக்கா அனுமதிப்பதாக வலியுறுத்தினார்.

திரைக்குப் பின்னால், அமெரிக்க இராணுவ ஒப்பந்தங்களில் நேரடியாக உக்ரேனுக்குள் பணிபுரியும் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் மீதான தடையை நீக்க அமெரிக்கா நகர்கிறது என்று CNN கடந்த மாதம் செய்தி வெளியிட்டது. 'அனுபவம் வாய்ந்த, அமெரிக்க அரசு நிதியுதவி பெறும் அமெரிக்க ஒப்பந்ததாரர்களை உக்ரேனில் நிலைநிறுத்த அனுமதிப்பதன் மூலம், சேதமடைந்த, அதிக மதிப்புள்ள ஆயுத உபகரணங்களை மிக விரைவாக சரிசெய்ய உதவ முடியும்' என்று CNN தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முடிவின் தெளிவான உட்குறிப்பு என்னவென்றால், அமெரிக்க குடிமக்கள் உக்ரேனில் இராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்வது மட்டுமல்லாமல், இந்த முடிவு அமெரிக்க இராணுவத்தால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட கூலிப்படையினரை போர் மண்டலங்களுக்கு அனுப்புவதற்கான கதவையும் திறக்கும்.

கடந்த புதனன்று, உக்ரேனுக்கு மேலும் 2.3 பில்லியன் டாலர் ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்தது. புதன்கிழமை ஒரு அறிக்கையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன்-பியர், 'இந்த ஆயுத தொகுப்பில் உக்ரேனின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள், நகர்ந்து தாக்குதலை மேற்கொள்ளும் உயர் ரக பீரங்கிகளுக்கான வெடிமருந்துகள், ராக்கெட் அமைப்புகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பிற முக்கியமான திறன்கள் ஆகியவை அடங்கும்' என்று கூறினார்.

மேலும், “ஜனாதிபதி பைடென் தெளிவுபடுத்தியுள்ளபடி, ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரேன் வெற்றிபெறும் வரை தொடர்ந்து ஆதரவளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்' என்று கரீன் ஜோன்-பியர் தெரிவித்தார்.

அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்டதில் இருந்து, உக்ரேனுக்கு வழங்கப்பட்ட ஐந்தாவது இராணுவ ஆயுத பொதியாகும் இது என்று பென்டகன் கூறியது. மேலும் பைடென் ஏப்ரல் மாதம் 95 பில்லியன் டாலர் கூடுதல் இராணுவ செலவினப் பொதியில் கையெழுத்திட்டார், இதில் உக்ரேனுக்கான ஆயுதங்களுக்கு $61 பில்லியன் டொலர்களும் அடங்கும்.

இந்த ஆயுத பொதியை அறிவித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், 'எந்த தவறும் செய்யாதீர்கள், உக்ரேன் தனியாக இல்லை, அமெரிக்கா அதற்கான ஆதரவில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. …கிட்டத்தட்ட 50 கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் சேர்ந்து, இன்று ரஷ்ய ஆக்கிரமிப்பை பின்னுக்குத் தள்ளவும் நாளை ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் உக்ரேனுக்குத் தேவையான முக்கியமான ஆயுத திறன்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்' என்று கூறினார்.

'சார்லி' என்று அழைக்கப்படும் தற்போதைய பாதுகாப்பு எச்சரிக்கையானது, இராணுவ நேரடி மோதலில் ஈடுபடாது வெளியே உள்ள இராணுவத் தளங்களில் மிக உயர்ந்த அளவிலான தயார்நிலையைக் குறிக்கிறது.

இந்த நடவடிக்கை குறித்து, நேட்டோவின் முன்னாள் தளபதியான அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் X twitter இல், “நான் 4 ஆண்டுகளாக நேட்டோவின் உச்ச நேச நாட்டுத் தளபதி மற்றும் அமெரிக்க ஐரோப்பியக் கட்டளைத் தளபதியாக, ஐரோப்பாவில் உள்ள டசின் கணக்கான முக்கிய தளங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேன். எங்களிடம் நிறைய அச்சங்கள் இருந்தன, ஆனால் இந்த அளவிலான எச்சரிக்கை எதுவும் தேவையில்லை. தெளிவாக, ஆழ்ந்த கவலை உள்ளது, அது நான் பார்க்கும் எல்லாவற்றுடனும் ஒத்துப்போகிறது” என்று எழுதினார்.

ஏகாதிபத்திய சக்திகளை உலுக்கிவரும் ஆழமான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம் வாஷிங்டனுக்கு வரவுள்ளனர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த வார இறுதியில் நடந்த முதல் சுற்றுத் தேர்தலில் பேரழிவு தரும் பின்னடைவை சந்தித்தார். அதன் இறுதிச் சுற்று வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வருகின்ற வியாழன் பிரிட்டிஷ் தேர்தலில் இதேபோன்ற தலைவிதியை நோக்கி செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், கடந்த வாரம் தனது முதுமையை அம்பலப்படுத்திய பேரழிவுகரமான விவாதத்தைத் தொடர்ந்து, தனது சொந்தக் கட்சி மற்றும் ஊடக உறுப்பினர்களிடமிருந்து ராஜினாமா செய்யும்படி அதிகமான அழைப்புகளை எதிர்கொள்கிறார்.

இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், நேட்டோ சக்திகள் போரில் தங்கள் ஈடுபாட்டை அதிகரிக்க உறுதியாக உள்ளன. உக்ரேனின் நேட்டோ உறுப்புரிமைக்கு வாஷிங்டன் உச்சிமாநாடு ஒரு 'பாலத்தை' நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்க தலைமையிலான நாடுகளின் கூட்டணி பெருகிய முறையில் போரில் நேரடியாக பங்கை வகித்து வருகிறது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர், வாஷிங்டன் உச்சிமாநாட்டின் இலக்குகளில் 'நம்பகமான தடுப்பு மற்றும் பாதுகாப்பிற்கான புதிய நேட்டோ திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்தல், உக்ரேனுக்கான நீண்டகால ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் நேட்டோவில் அதன் எதிர்கால உறுப்பினரை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்' என்றார்.

Carnegie Endowment என்ற சிந்தனைக் குழுவால் வெளியிடப்பட்ட ஒரு கலந்துரையாடலில், முன்னாள் CIA அதிகாரியும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பணியாளருமான எரிக் சியாரமெல்லா, வரவிருக்கும் 'உச்சிமாநாடு மூலம் நேட்டோ, உக்ரேனுக்கான நீண்டகால ஆதரவிற்கான சில வழிமுறைகளை நிறுவனமயமாக்குகிறது. அமெரிக்கா தலைமையிலான உக்ரேனின் பங்காளிகள், ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் மிக விரைவாக எழுந்து நின்றனர்' என்று கூறினார்.

மேலும் அவர் “அமெரிக்காவின் தலைமையில் உக்ரேனில் ராம்ஸ்டீன் குழு அல்லது பாதுகாப்புத் தொடர்புக் குழு என்று அழைக்கப்படும் பலதரப்பு மன்றம் இருந்தது. நேட்டோ நட்பு நாடுகளின் இந்தக் குழுவும், உலகெங்கிலும் உள்ள சில டசின் நாடுகளும் உக்ரேனுக்கான இராணுவ உதவியைத் திரட்ட முயன்றன. உக்ரேனியர்கள் தங்களுக்குத் தேவையானதைப் பெறுவதற்கு இது ஒரு வழிமுறையாகும். கடந்த ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்களில் எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிடுகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவதற்கு ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே கூட்டாளிகள் இந்த தற்காலிகத் திட்டமிடலில் சிலவற்றை நீண்ட கால வடிவங்களுக்கு எவ்வாறு நகர்த்துவது என்று விவாதிக்கத் தொடங்கினர், நேட்டோ இன்னும் இதற்கு ஒரு ஒழுங்கமைக்கும் பாத்திரத்தை வகித்து வருகிறது' என்று தெரிவித்தார்.

Loading