பிரெஞ்சு திடீர் தேர்தல்களில் பப்லோவாத NPA கட்சியானது புதிய மக்கள் முன்னணியை (NFP) ஆதரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 7 இல் முன்கூட்டிய தேர்தல்களுக்கு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்த பின்னர், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சி மற்றும் பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட புதிய மக்கள் முன்னணியில் (NFP) இணைந்ததன் மூலமாக, புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) தன்னை மீண்டும் ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. அது, வெளிநாடுகளில் ரஷ்யாவுடனான போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் தீவிரப்படுத்த நோக்கம் கொண்ட மெலோன்சோன் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அமைத்து வைத்த அரசியல் பொறிக்குப் பின்னால் தொழிலாளர்களைத் தள்ளி வருகிறது.

ஏப்ரல் 10, 2022 ஞாயிற்றுக்கிழமை, பிரான்சின் பாரிஸில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றின் ஆரம்ப முடிவுகள் குறித்து ஜோன்-லூக் மெலோன்சோன் கருத்து தெரிவிக்கிறார்.

நவ-பாசிசவாத தேசிய பேரணி கட்சி (RN) அதிகாரத்திற்கு வரும் அபாயத்திற்கு எதிராக, இடது ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் என்று வாதிடும் NPA, இந்த கூட்டணிக்கான அதன் ஆதரவை நியாயப்படுத்துகிறது. RN கட்சி இப்போது ஆளும் வர்க்கத்தில் அதிகரித்து வரும் ஆதரவைப் பெற்றுள்ளது, குறிப்பாக RN உடன் கூட்டணிகளுக்கு அழைப்பு விடுக்கின்ற எரிக் சியோட்டியைச் சுற்றியுள்ள குடியரசுக் கட்சியின் கன்னையின் ஆதரவைக் குறிப்பிடுகிறது. NPA இவ்வாறு கூறுகிறது:

இந்த நேரத்தில், RN கட்சி மற்றும் அதன் கூட்டாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையில் இருப்பதால், மக்கள் முன்னணியானது சமூக மற்றும் அரசியல் இடதுசாரிகளுக்கும், நவ-தாராளவாத சீர்திருத்தங்களுக்கு எதிராகவும், இனவெறி எதிர்ப்பு, சூழலியல், பெண்ணிய, LGBTI (லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கை, மற்றும் பாலினக்கலப்பு) போராட்டங்கள் மற்றும் உரிமைகளின் சமத்துவத்திற்கான அனைத்து இயக்கங்களுக்கும் நம்பிக்கையை அளித்து வருகிறது. … “அதிவலது மற்றும் மக்ரோனுக்கு எதிரான வெற்றியானது, குறிப்பாக வேலையிடங்களில், மக்கள் வசிக்கும் அண்டைப்பகுதிகள் மற்றும் இளைஞர்களில், பெருமளவில் அணிதிரளும் நிபந்தனையின் பேரில் மட்டுமே சாத்தியமாகும். தொழிற்சங்க இயக்கம், சுற்றுச் சூழல் போராட்டங்கள், பெண்ணுரிமை இயக்கம், பாலஸ்தீனத்துடன் ஐக்கியத்திற்கான இயக்கம், காலனித்துவ நீக்கம் மற்றும் இனவெறி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவை மக்கள் முன்னணியின் வேலைத்திட்டத்தை ஆழ்ந்த முறையில் ஊட்டி வளர்க்க வேண்டும். அவர்கள் அதன் உயிர் சக்தியாக இருக்க வேண்டும்.

ஆனால் புதிய மக்கள் முன்னணியானது இடதுகளுக்கு பெரிய நம்பிக்கை அல்ல. அதை ஆதரிப்பதன் மூலமாக, திடீர் தேர்தல்கள் மூலமாக மக்ரோன் நடத்த நோக்கம் கொண்டுள்ள ஆளும் ஸ்தாபகத்தின் வலதுசாரி மீள் ஒழுங்கமைப்பில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) இணைந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரையும் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கு ஆளும் ஸ்தாபகத்தை தயாரிப்பு செய்வதற்காக, பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக் ஜூலை 4 இல் திடீர் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்த பின்னர், மக்ரோன் ஜூலை 7 இல் அவரது முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள், வாஷிங்டனில் ஜூலை 9 அன்று நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு அதிகாரிகளை அனுப்பும். அது ரஷ்யாவுடனான போருக்காக உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்ப தயாரிப்பு செய்து வருவதற்கான கொள்கையை மக்ரோன் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வந்துள்ளார். நேட்டோவின் போர் நாட்காட்டி உண்மையில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் தேர்தல் நாட்காட்டியையும், அத்துடன் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) அரசியல் சூழ்ச்சிகளையும் கட்டளையிடுகிறது.

புதிய மக்கள் முன்னணி, காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களால் ஊட்டம் பெற்றுள்ளது என்ற NPA இன் கூற்று ஒரு அரசியல் பொய் ஆகும். சிரியாவில் இருந்து மாலி வரை நவகாலனித்துவப் போர்களை நடத்திய, உள்நாட்டில் சமூக எதிர்ப்புக்களை மிருகத்தனமாக அடக்கிய தொழிலாள வர்க்கத்தின் மறைக்கப்படாத விரோதியான பிரான்சுவா ஹாலண்ட் போன்ற சக்திகளுடன் புதிய மக்கள் முன்னணி கூட்டு வைத்துள்ளது. புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம், பிரெஞ்சு இராணுவ போலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளைக் கட்டியெழுப்புவதற்கும், “அமைதிகாப்பவர்கள்” என்ற பெயரில் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கும் அழைப்புவிடுக்கிறது.

புதிய மக்கள் முன்னணி என்பது 1934-1938 மக்கள் முன்னணி அல்ல. மக்கள் முன்னணி ஒரு காலனித்துவ எதிர்ப்பு சக்தி அல்ல என்று கூற வேண்டும். அன்றைய மக்கள் முன்னணியானது, தாராளவாத தீவிர முதலாளித்துவ கட்சி, ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளின் ஒரு கூட்டணியாக இருந்தது. தீவிரப்போக்கினருடனான கூட்டணியின் விலை சோசலிசப் புரட்சியை கைவிடுவது மட்டுமல்ல, மாறாக இந்தோசீனாவில் இருந்து சிரியா மற்றும் அல்ஜீரியா வரை நீண்டிருந்த அதன் அப்போதைய பரந்த காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தின் மீது பிரான்ஸசின் ஆட்சியை ஏற்றுக்கொண்டிருந்தது. ஆயினும்கூட, அன்றைய மக்கள் முன்னணியானது, இன்றைய புதிய மக்கள் முன்னணிக்கு (NFP) இடதுபுறத்தில் வெகு தொலைவில் இருந்தது.

இன்றைய புதிய மக்கள் முன்னணி, 1930களில் இருந்த அதன் முன்னோடியைப் போல் அல்லாமல், தொழிலாள வர்க்கத்தில் வெகுஜன அடித்தளத்தை கொண்ட எந்தக் கட்சியையும் கொண்டிருக்கவில்லை. முக்கிய சமூக சீர்திருத்தங்களான 8 மணி நேர வேலை, ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் ஆகியவற்றை முன்வைக்கும் பாசாங்கு கூட அதனிடம் இல்லை. மக்ரோன் ஜனாதிபதி பதவியின் கீழ் அது ஒரு அரசாங்கத்தை அமைத்தால், ரஷ்யாவுடனான “மிகவும்-தீவிரமான போருக்கு” பிரான்சை ஆயுதபாணியாக்கவும், தயாரிப்பு செய்யவும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை வெட்டித்தள்ளவும் உள்ள ஒரு போர்-ஆதரவு கூட்டணியாக செயற்படும்.

1930களில், ட்ரொட்ஸ்கிச இயக்கம் பிரெஞ்சு சமூக ஜனநாயகத்தின் பரந்த தொழிலாள வர்க்க அடித்தளத்திற்குள் நுழைந்து ஏகாதிபத்தியம், காலனித்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் பணிகளை பகிரங்கமாக மேற்கொள்ள முடிந்தது.

புதிய மக்கள் முன்னணியில் இணைவதற்கான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) இன்று எடுத்த முடிவானது, ட்ரொட்கிசத்திற்கு அதன் ஆழ்ந்த வேரூன்றிய குரோதத்திற்கு நிரூபணமாக உள்ளது. அது 1971 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பெருவணிக கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) உடன் ஒரு கூட்டணியில் இணைகிறது. சோசலிஸ்ட் கட்சி, அப்போதிருந்து பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதான ஆளும் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இம்மாத ஐரோப்பியத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் முன்னணி வேட்பாளரான ரஃபேல் குளுக்ஸ்மான், காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையை பகிரங்கமாக மறுத்ததுடன், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனை ஆயுதபாணியாக்குவதற்கு அழைப்புவிடுத்தார். உண்மையில், உக்ரேனில் ஏகாதிபத்திய போர் சூழ்ச்சியின் இதயத்தானத்தில் சோசலிஸ்ட் கட்சி (PS) உள்ளது. பிரான்சுவா ஹோலாண்டின் கீழ், மக்ரோன் பொருளாதார அமைச்சராக இருந்த காலத்தில், ரஷ்ய-ஆதரவு உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை ஒரு அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் கவிழ்க்க சோசலிஸ்ட் கட்சி (PS) வாஷிங்டன் மற்றும் பேர்லினுடன் இணைந்து வேலை செய்ததோடு, உக்ரேனில் ஒரு மோதலைத் தூண்டியது, அது இப்போது துரிதமாக அணு ஆயுதப் போராக தீவிரமடைந்து வருகிறது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோவின் இராணுவ சாகசங்களுக்காக ட்ரொட்ஸ்கிசத்தை வெளிப்படையாக நிராகரித்ததன் அடிப்படையில் 2009ல் அது நிறுவப்பட்டதில் இருந்து அதன் ஆதரவின் விளைவுதான் PS உடனான ஒரு வெளிப்படையான கூட்டணியில் NPA வெளிப்பட்டது.

சோசலிசக் கட்சி, லிபியா, சிரியா மற்றும் மாலி போர்களையும் மற்றும் உக்ரேனில் 2014 ஆட்சிக் கவிழ்ப்பையும் ஆதரித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா-உக்ரேன் போர் வெடித்த சிறிது காலத்திற்குப் பின்னர், NPA இன் தலைவர் ஒலிவியே பெசன்ஸநோ உக்ரேனுக்குச் சென்றார். அவர் பிரான்சுக்குத் திரும்பியதும், நேட்டோ உக்ரேனிய ஆட்சிக்கு ஆயுதமளிப்பதையும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நிதித் தடைகளை பாசிச எதிர்ப்பு எதிர்ப்பாக (anti-fascist resistance) ஊக்குவித்து, பின்வருமாறு அறிவித்தார்:

“உக்ரேனியர்கள் வானத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கும் தற்காப்பு ஆயுதங்கள் உட்பட ஆயுதங்களை வழங்குமாறு கோருகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களுடன் அங்கு பேசியவர்கள் உக்ரேனிய எதிர்ப்பை மாற்றியமைக்கும் சக்திகளைத் தவிர வேறு சக்திகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை வலியுறுத்துகின்றனர். பொருளாதாரத் தடைகள் பிரச்சினையில், தன்னலக்குழுக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்காக நாங்கள் போராடுகிறோம், ஆனால் நாங்கள் இன்னும் அங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். பிரிட்டனில், சைப்ரஸில், நாம் செய்யக்கூடியவற்றில் 1 சதவீதம் மட்டுமே இருக்கிறோம்.”

ரஷ்யாவுடனான போருக்கான இந்த சுருக்கமான விளக்கம், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் ஒட்டுமொத்த புதிய மக்கள் முன்னணியின் பாசிச-விரோத பாசாங்குத்தனங்களை அம்பலப்படுத்தும் பொய்களின் ஒரு மூட்டையாகும். உக்ரேனிய ஆட்சியானது ஒரு ஜனநாயக, பாசிச-எதிர்ப்பு ஆட்சி அல்ல, மாறாக ஒரு அதிவலது சர்வாதிகாரமாகும். அதன் தலைவர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரேனிய நாசி-ஒத்துழைப்பாளரான ஸ்டீபன் பண்டேராவுக்கு விசுவாசமான செயல்பாட்டாளர்கள் தலைமையிலான உளவுத்துறை முகமைகள் மற்றும் அதிவலது படைக் குழுக்களின் ஒரு வலையமைப்பின் அடிப்படையில் தேர்தல்கள் மற்றும் விதிகளை நிறுத்தி வைத்துள்ளார்.

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியானது (NPA) அவர்களின் உக்ரேனிய போர் கொள்கையை “இடதுக்கான நம்பிக்கை” என்று முற்றிலும் மோசடியாக சித்தரிப்பதற்கு எதிராக, தொழிலாளர்களும் இளைஞர்களும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மாபெரும் போராட்டங்களின் வரலாற்றை நோக்கித் திரும்புவதன் மூலமாக மட்டுமே தங்களை நோக்குநிலைப்படுத்திக் கொள்ள முடியும். நேட்டோ போர்களுக்கான பப்லோவாத ஆதரவிற்கும், நேட்டோ ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத்துக்குப் பிந்தைய ரஷ்ய முதலாளித்துவ ஆட்சி இரண்டிற்கும் எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பிற்கும் இடையே ஒரு வர்க்கப் பிளவு உள்ளது.

ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியின் பாதுகாவலர்களான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான ஒரு சர்வதேச பிளவில் பப்லோவாதம் 1953ல் எழுந்தது. மிஷேல் பப்லோவும் ஏர்னெஸ்ட் மண்டேலும் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான புரட்சிகர சக்தி என்ற மார்க்சிச கருத்தாக்கத்தை நிராகரித்ததுடன், ட்ரொட்ஸ்கிச இயக்கம் தன்னை ஸ்ராலினிச, சமூக-ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்குள் கரைத்துக் கொள்ள அழைப்புவிடுத்தனர். பப்லோவாதிகள் முன்னர் புரட்சிகரமானதாக ஊக்குவித்திருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், அது அவர்களின் வசதியான நடுத்தர வர்க்க அடித்தளத்தின் நலன்களுக்கு ஏற்ப ஏகாதிபத்திய போருக்கு ஆதரவளிப்பதை நோக்குநிலையாக கொண்டிருந்தனர்.

2009 இல் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பிந்தைய அதன் பரிணாம வளர்ச்சியானது —இக்காலகட்டத்தில் பப்லோவாதிகள் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (Ligue communiste révolutionnaire-LCR) பகிரங்கமாக கலைத்தனர்— அந்த நேரம் WSWS இல் ICFI செய்திருந்த மதிப்பீட்டை ஊர்ஜிதம் செய்கிறது. 2009 இல், அது பின்வருமாறு விளக்கியது:

தன்னைத்தானே கலைத்துக் கொள்வதில் LCR இன் உண்மையான இலக்கு, உண்மையில், ட்ரொட்ஸ்கியின் அரசியல் பாரம்பரியமான தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனம், புரட்சிகர சர்வதேசியவாதம், ஆகியவற்றை கலைத்துக் கொள்வதாகும்: அதாவது, முதலாளித்துவ அரசு, ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயக அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்தின் அனைத்து வகையறாக்களுடனும் ஒத்துழைப்பதற்கு சமரசமற்ற எதிர்ப்பு ஆகும்.

LCR இன் வழிகாட்டும் சித்தாந்தமாக முதலாளித்துவ எதிர்ப்பை தேர்ந்தெடுத்தது, ஐரோப்பிய மற்றும் குறிப்பாக பிரெஞ்சு அரசியலின் பின்னணியில், பின்னோக்கி வலதுபுறம் மற்றும் மேலாதிக்கத்தின் மலிவான நாணயத்தை நோக்கிய ஒரு மகத்தான படியாகும். அரசியல் ரீதியாக தெளிவற்ற, வர்க்க அடிப்படை அல்லது நோக்குநிலையைப் பொருட்படுத்தாமல், சமூக அதிருப்தியின் அனைத்து பழக்கவழக்கங்களையும் அது தழுவுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பியர்-ஜோசப் புரூதோனால் (Pierre-Joseph Proudhon) முன்மொழியப்பட்ட அராஜகவாதத்தில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பியர் புஜாடேயின் (Pierre Poujade) வன்முறையான வலது-ஜனரஞ்சகவாத போராட்டங்கள் வரையில், இடது மற்றும் வலது இரண்டிலுமே, குட்டி-முதலாளித்துவத்தின் பெரும் பிரிவுகளால் தழுவிக் கொள்ளக் கூடிய ஒரு வார்த்தை இது.

ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ மற்றும் மக்ரோனின் தீவிரப்பாடு வெடிப்பார்ந்த பாரிய எதிர்ப்பைத் தூண்டும். உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் அழைப்பை பிரெஞ்சு மக்களில் 68 சதவீதத்தினர் எதிர்ப்பதாக பிப்ரவரி கருத்துக்கணிப்புகள் காட்டியது. மேற்கு ஐரோப்பியர்களில் 88 சதவீதத்தினர் போர் விரிவாக்கத்தை எதிர்ப்பதாகவும், உக்ரேனிய போருக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு காண விரும்புவதாகவும் யூரேசியா குழு கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டியது. ஆனால் இந்த நிகழ்வுகள் ஒரு அவசர எச்சரிக்கையாகும். புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற போலி-இடது கட்சிகளுடன் இணைந்துள்ள தொழிலாளர் அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக சாமானிய தொழிலாளர்களை அணிதிரட்டி, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு இயக்கம் அடிமட்டத்திலிருந்து மட்டுமே கட்டியெழுப்பப்பட முடியும்.

அத்தகைய இயக்கத்தின் அரசியல் அடிப்படையானது, ஸ்ராலினிசம் மற்றும் புதிய மக்கள் முன்னணிக்கு (NFP) எதிராக ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் ஆகும். அனைத்திற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l’égalité socialiste -PES) புதிய மக்கள் முன்னணி (NFP) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிக்கு (NPA) ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பாக கட்டியெழுப்புவது அவசியமாகும். ஜனநாயகம் இல்லாமல் சோசலிசம் இருக்க முடியாததைப் போலவே, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான தொழிலாளர்களின் ஒரு ட்ரொட்ஸ்கிச போராட்டம் இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது.

Loading