முன்னோக்கு

நேட்டோவின் பொதுச் செயலாளர் மூலோபாய ஆயுத தளவாடங்களை விரிவுபடுத்த முன்மொழிகிறார்

வெள்ளை மாளிகை "எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாமல்" அணு ஆயுதங்களின் "புதிய சகாப்தத்தை" அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த திங்களன்று பிரசுரிக்கப்பட்ட பிரிட்டனின் டெய்லி டெலிகிராப்க்கு அளித்த ஒரு நேர்காணலில், நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் விடையிறுக்கும் வகையில், நிலைநிறுத்தப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை விரிவாக்குவது, கடந்த வார நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சிமாநாட்டில் விவாதத்தின் மைய விடயமாக இருந்தது என்பதை தெளிவுபடுத்தினார்.

அமெரிக்க சிப்பாய்கள் புதுப்பிக்கப்பட்ட அணு ஆயுதத்தை ஒரு மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் (Minuteman III intercontinental ballistic missile) உச்சிக்கு ஏற்றுகிறார்கள். [AP Photo/Eric Draper]

“எத்தனை அணு ஆயுதங்கள் செயல்பட வேண்டும், எவை சேமிக்கப்பட வேண்டும் என்பது குறித்த செயல்பாட்டு விவரங்களுக்கு நான் செல்ல மாட்டேன், ஆனால் இந்தப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஆலோசிக்க வேண்டும். நேட்டோவில் நாங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம், உதாரணமாக நேட்டோவில் ஒரு அணுசக்தி திட்டமிடல் குழுவின் கூட்டங்களில் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், இது [கடந்த வாரம்] பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது நாங்கள் செய்ததைப் போல” என்று ஸ்டோல்டென்பெர்க் கூறினார்.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போர் மீது கவனம் செலுத்தும் பைடெனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஸ்டொல்டென்பேர்க்கின் திட்டமிடப்பட்ட விஜயத்திற்கு முன்னதாக, திங்களன்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, “ஜனாதிபதி அதிக அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்த ஆலோசனைகளில் பங்கெடுத்தாரா” என்று கேட்கப்பட்டபோது, ஸ்டோல்டென்பேர்க்கின் அறிக்கையை மறுத்தார்.

ஒரு பின்தொடர்தல் கேள்வியில், “[ஸ்டோல்டென்பேர்க்கின் அறிக்கை] எப்படி ஆத்திரமூட்டல் அல்லது விரிவாக்கம் என்று கருத முடியாது?” என்று கிர்பியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”நேட்டோ ஒரு தற்காப்புக் கூட்டணி” என்றும், அவர் இந்த மந்திர வார்த்தைகளை உச்சரித்ததால், வரையறையின்படி அதன் செயல்கள் ”ஆத்திரமூட்டலாகவோ” அல்லது ”அதிகரிப்பதாகவோ” இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுத கட்டுப்பாட்டுக்கான மூத்த இயக்குனர் பிரணய் வாடி, ஆயுத கட்டுப்பாட்டு கூட்டமைப்பில் பேசுகையில், அணு ஆயுதங்களுக்கான ஒரு “புதிய சகாப்தம்” என்று அறிவித்து பத்து நாட்களுக்குப் பின்னர் ஸ்டொல்டென்பேர்க்கின் அறிக்கைகள் வந்துள்ளன, அதில் அமெரிக்கா “எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாமல்” அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் என்றார்.

“தேசிய பலவீனத்தை” கண்டித்த வாடி, “வரவிருக்கும் ஆண்டுகளில் தற்போதைய நிலைநிறுத்தப்பட்ட எண்ணிக்கையில் இருந்து அதிகரிப்பு தேவைப்படும் ஒரு புள்ளியை நாம் எட்டக்கூடும்,” என்றார். “எங்களுக்கு வேறு வழியில்லை ... நாங்கள் எங்கள் அணுஆயுத முக்கூட்டின் ஒவ்வொரு காலையும் நவீனப்படுத்துகிறோம், எங்கள் அணுஆயுத கட்டளை கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை புதுப்பித்து வருகிறோம், மேலும் எங்கள் அணுஆயுத நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

பைடென் நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்கு இணங்க, ரஷ்யா மற்றும் சீனாவின் எதிர்பாராத நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான அனைத்து வரம்புகளையும் கைவிடுவதற்கான பைடென் நிர்வாகத்தின் அரை-உத்தியோகபூர்வ முடிவை அமெரிக்க ஊடகங்கள் வடிவமைத்துள்ளன.

அது அப்படியல்ல. மாறாக, அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தை பாரியளவில் விரிவுபடுத்துவதற்கான பல ஆண்டுகாலத் திட்டத்தின் உச்சக்கட்டமாகும். இதை அமெரிக்க சிந்தனைக் குழாம்கள் 2016 இல் “இரண்டாவது அணு ஆயுத யுகம்” என்று பெயரிட்டன, இந்த மொழி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பைடென் நிர்வாகத்தின் அணு ஆயுத “புதிய சகாப்தம்” என்ற பிரகடனத்தில் எதிரொலித்தது.

திங்களன்று பிற்பகல் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட அதன் முன்னணி தலையங்கத்தில், வாஷிங்டன் போஸ்ட், வரவிருக்கும் இந்த அணு ஆயுத தீவிரப்பாட்டின் மீது வலியுறுத்தி, பெரிதும் அறிவிக்கப்படாத வாடியின் உரைக்கு கவனத்தை ஈர்த்தது. போஸ்ட் இன் ஆசிரியர் குழு அறிக்கை, “உங்களுக்கு ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்’ பிடித்திருந்தால், புதிய ஆயுதப் போட்டியை சிலிர்ப்பூட்டுவதாக நீங்கள் காண்பீர்கள்” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது.

வாடி மற்றும் போஸ்ட் தலையங்கம் இரண்டுமே உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பின் விளைவாக ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியின் சாத்தியத்தை “வெடிப்பை” முன்வைக்க முயன்றன. அத்தோடு, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் அழிவு சக்தியால் அது இன்னும் சிறியதாகவே இருந்தாலும், தங்கள் சொந்த அணு ஆயுதங்களின் அளவை கணிசமாக அதிகரிக்க சீன முடிவு செய்துள்ளது என்று அவை சித்தரிக்க முனைந்தன.

நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பின்னர் ஸ்டொல்டென்பேர்க்கின் கருத்துக்கள் மற்றும் அணு ஆயுத விரிவாக்கம் என்பன “வரவிருக்கும் ஆண்டுகள்” குறித்த வெற்றுப் பேச்சு அல்ல. மாறாக, ஏற்கனவே பெருமளவில் இறுதி செய்யப்பட்டுவிட்ட முடிவுகளைக் குறிக்கிறது என்பதை தெளிவுபடுத்துகின்றன. அமெரிக்க அரசியலில் வழமையாக நடப்பதைப் போல, ஒரு முடிவு “பரிசீலிக்கப்படுகிறது” என்பதை பொதுமக்கள் கேட்கின்ற நேரத்தில், அது ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கிறது, பொதுமக்களுக்கு அதை அறிவிப்பதற்கு முறையான ஊடக செய்தி மட்டுமே அவசியமாக உள்ளது.

2016 இல், ஒபாமா நிர்வாகமும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலான காங்கிரசும், அதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகள் தொடங்கி அதன் தொலைதூர ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் வரையில் அணுகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை விநியோகிக்கக்கூடிய போர் விமானங்கள் வரையில், அமெரிக்க அணு ஆயுத தளவாடங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டு நவீனப்படுத்த இருகட்சிகளும் திட்டத்தைத் தொடங்கின.

இந்த “இரண்டாவது அணு ஆயுத யுகத்தில்” போராளிகள் “ஒரு மோதலின் ஆரம்பத்திலும் சரி பாரபட்சமான விதத்திலும் சரி, உண்மையில் ஒரு அணுவாயுதத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை சிந்திப்பார்கள்” என்று ஒரு சிந்தனைக்குழு எழுதியது.

அதற்கடுத்த எட்டு ஆண்டுகளில், ஒபாமாவின் கீழ் தொடங்கப்பட்டு, பின்னர் ட்ரம்ப் மற்றும் பைடெனின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட அணு ஆயுத மீள்ஆயுதமயமாக்கல், அமெரிக்கா அதன் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு திறன்களை மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அவற்றின் இலக்குகளுக்கு முன்பினும் நெருக்கமாக நகர்த்துவதற்கான அதன் திட்டமிட்ட முயற்சிகளை உள்ளடக்கி உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

இந்த காலகட்டத்தில், அணுஆயுத யுத்தம் ஏற்பட்டால் ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட இரண்டு ஏவுகணை தளங்களை கிழக்கு ஐரோப்பாவிலுள்ள போலந்து மற்றும் ருமேனியாவில் நேட்டோ உருவாக்கியது. அத்துடன் அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை கப்பலில் நிலைநிறுத்துவதற்கான சாத்தியமான தகைமையையும் கொண்டிருந்தன.

2019 ஆம் ஆண்டில், ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லைகளுக்கு அணு ஆயுதங்களைத் தள்ளும் திறனை கட்டுப்படுத்திய இடைநிலை-தரப்பு அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அத்துடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்வானில் பாரியளவில் புதிய நீண்டதூர ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு வசதியளித்து, சீனாவை ஏவுகணைகளைக் கொண்டு சுற்றி வளைக்க அமெரிக்கா திட்டமிட்டு வேலை செய்துள்ளது.

ஸ்டொல்டென்பேர்க்கின் கருத்துக்கள் வாஷிங்டன் டி.சி.யில் வரவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டின் தீவிர அபாயகரமான மற்றும் பொறுப்பற்ற குணாம்சத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. இது ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நேரடி பங்களிப்பை பாரியளவில் விரிவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டொல்டென்பேர்க் திங்களன்று வாஷிங்டனுக்கு வந்தடைந்த பின்னர் பேசிய கருத்துக்களில், தற்போதைய காலகட்டம் முதலாம் உலகப் போரில் ஐரோப்பாவிற்கு அமெரிக்க போர் துருப்புகளை அனுப்புவதற்கு அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் எடுத்த முடிவுகளுக்கும் மற்றும் இரண்டாம் உலக போரில் ஐரோப்பா மற்றும் பசிபிக்கிற்கு அமெரிக்க துருப்புகளை அனுப்ப பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் எடுத்த முடிவுகளுக்கும் ஒப்பாக இருப்பதாக மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டார்:

ஜனாதிபதி வில்சன்... அமெரிக்காவை “பெரும் போரிலிருந்து” விலக்கி வைக்க விரும்பினார். ஆனால், ஐரோப்பா சமாதானமாக இல்லாமல் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து இறுதியில் தனது போக்கை மாற்றிக் கொண்டார். வெறும் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அமெரிக்க பையன்களை ஐரோப்பாவில் மற்றொரு போருக்கு அனுப்ப மாட்டேன் என்றும் அமெரிக்காவின் நடுநிலையைப் பேணுவதாகவும் உறுதியளித்தார். ஆனால் பேர்ல் ஹார்பருக்குப் பிறகு, அவர் வேறுவிதமாக முடிவு செய்தார். எனவே இரண்டு முறை ஐரோப்பா போரில் ஈடுபட்டபோது, அமெரிக்கா தனிமைப்படுத்தலைத் தேர்ந்தெடுத்தது. இரண்டு முறையும், இது வேலை செய்யவில்லை என்பதை அது உணர்ந்தது. அது அன்றும் உண்மையாக இருந்தது, இன்றும் உண்மையாக இருக்கிறது.

சமீபத்திய அபிவிருத்திகளின் வெளிச்சத்தில், இந்த அறிக்கைகள் உறைய வைக்கின்றன. கடந்த மாதம், அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதி சார்ல்ஸ் க்யூ. பிரவுன் நியூ யோர்க் டைம்ஸிடம் கூறுகையில், நேட்டோ இராணுவக் கூட்டணி “இறுதியில்” கணிசமான எண்ணிக்கையில் செயலூக்கத்துடன் செயல்படும் நேட்டோ துருப்புகளை உக்ரேனுக்கு அனுப்பும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்ப நேட்டோ அங்கத்துவ நாடுகளின் ஒரு “கூட்டணியை” உருவாக்க முனைந்து வருவதாக அறிவித்தார். மேலும், ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கும் முடிவை அமெரிக்கா எடுத்தது.

ஆகவே, ஸ்டொல்டென்பேர்க்கின் கருத்துக்களின் தாக்கங்கள் என்னவென்றால், முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போரின் போது, ஜனநாயகக் கட்சியானது அமெரிக்க ஜனாதிபதிகள் ஐரோப்பாவில் சண்டையிட நூறாயிரக் கணக்கான அமெரிக்க துருப்புகளை அனுப்பியதைப் போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது.

ஆனால், முந்தைய இரண்டு உலகப் போர்களைப் போலன்றி, ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு எதிராகவும் ஆசியாவில் சீனாவுக்கு எதிராகவும் ஒரு முழு அளவிலான போர் அவற்றின் சொந்த கணிசமான அணு ஆயுத தளவாடங்களைக் கொண்ட நாடுகளுக்கு எதிராக நடத்தப்படும்.

இந்தப் பின்னணியில், பைடென் நிர்வாகமும் நேட்டோவும் தங்கள் நோக்கங்களை அடைய எந்த அளவிற்கும் செல்வோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. அவரது கருத்துக்களில், ஸ்டொல்டென்பேர்க் உக்ரேன் போரில் அமெரிக்க இலக்குகள் குறித்து அப்பட்டமாக இருந்தார்:

உக்ரேனின் வெற்றியை உறுதி செய்வது... அமெரிக்க பாதுகாப்பு நலன்களுக்கு சேவை செய்கிறது. அமெரிக்கா அதன் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு சிறிய பகுதியை ஒதுக்குவதன் மூலம், ஒரு அமெரிக்க சிப்பாயைக் கூட தீங்கு விளைவிக்காமல், ரஷ்யாவின் தாக்குதல் போர் திறன்களில் கணிசமான பங்கை அழிக்க உக்ரேனுக்கு உதவுகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த தந்திரோபாயம் அதன் போக்கை இயக்கியுள்ளது. உக்ரேனில் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது, செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் வார்த்தைகளில் கூறுவதானால், நேட்டோவானது, ரஷ்யாவை “கடைசி உக்ரேனியன் வரை” எதிர்த்துப் போராடியுள்ளது. இப்போது, ரஷ்ய படைகள் போர்முனையில் முன்னேறி வருகின்ற நிலையில், உக்ரேனை ரஷ்யாவுக்கு எதிரான ஒரு கோட்டையாக மாற்றுவதற்கான தசாப்த கால ஏகாதிபத்திய முயற்சி பொறிந்து போவதைத் தடுப்பதற்கு, இந்த மோதலில் அமெரிக்க-நேட்டோவின் நேரடி தலையீட்டை வியத்தகு முறையில் தீவிரப்படுத்துவது அவசியப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த இலக்குகளை அடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான மறைமுக அச்சுறுத்தலுடன் சேர்ந்து, போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நேரடி ஈடுபாட்டிற்கான சாத்தியக்கூறை உயர்த்துவதன் மூலமாக, பைடென் நிர்வாகம், உலக ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்க நோக்கங்களைப் பின்தொடர்வதில் தியாகம் செய்ய தயாராக இருக்கும் உயிர்களின் எண்ணிக்கையில் —உக்ரேனியராக இருந்தாலும் சரி, ரஷ்யராக இருந்தாலும் சரி, ஐரோப்பியராக இருந்தாலும் சரி அல்லது அமெரிக்கராக இருந்தாலும்— வரம்புகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தி வருகிறது.

Loading