"காஸாவில் கொலைகளும் ஒடுக்குமுறையும் நிறுத்தப்பட வேண்டும்": கலிபோர்னியா பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை உடைக்கும் ஜனநாயக-விரோத உத்தரவுக்கு பாரிய எதிர்ப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கலிபோர்னியா சாண்டா குரூஸ் பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்ட வரிசையின் ஒரு பகுதி, மே 20, 2024.

கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியா நீதிபதி பிறப்பித்த வேலைநிறுத்த உடைப்பு உத்தரவு, கலிபோர்னியா பல்கலைக்கழக கல்வித்துறை தொழிலாளர்களிடம் இருந்து பரந்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. அவர்கள் காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலையையும் மற்றும் பல்கலைக்கழக வளாக போராட்டங்கள் மீதான போலிஸ் ஒடுக்குமுறையையும் நிறுத்துவதற்கான வரலாற்றுரீதியான வெளிநடப்பைத் தொடர தீர்மானகரமாக உள்ளனர்.

முன்னாள் குடியரசுக் கட்சி ஆளுநர் ஆர்னோல்ட் ஸ்வார்ஸ்நெக்கரால் நியமிக்கப்பட்ட ஆரஞ்சு கவுண்டி உயர் நீதிமன்ற நீதிபதி ராண்டால் ஜே. ஷேர்மன், பல பல்கலைக்கழக வளாகங்களில் இறுதித் தேர்வுகள் நடக்கும் வரை அதாவது ஜூன் 27 வரை தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) உள்ளூர் 4811 கிளைத் தலைவர்கள் ஏற்கனவே வேலைநிறுத்தத்தின் இறுதித் தேதி ஜூன் 30 என்று அறிவித்துள்ளதால், “தற்காலிக தடை உத்தரவின்” விளைவு வேலைநிறுத்தத்தை திறமையுடன் முறியடிப்பதாக இருக்கும்.

இந்த வேலைநிறுத்தம் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு “ஈடுசெய்ய முடியாத சேதத்தை” ஏற்படுத்தி வருவதாக நீதிபதி பாசாங்குத்தனமாக வாதிட்டார், அதேவேளையில் பல்கலைக்கழக கவுன்சில் (UC) நிர்வாகம் முதல் அரசியலமைப்பு திருத்த உரிமைகளை (First Amendment rights) இடைநீக்கம் செய்ததாலும் மற்றும் கல்வித்துறை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது மாணவர்கள் மீதான வன்முறையான தாக்குதல்கள் மற்றும் கைதுகளால் ஏற்பட்ட உண்மையான சேதத்தை அவர் புறக்கணித்தார்.

மே 20 அன்று பொலிசாரும் சியோனிச குண்டர்களும் லோஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA) ஆர்ப்பாட்டக்காரர்களை சரீரரீதியில் தாக்கிய பின்னர் வேலைநிறுத்தம் தொடங்கியது. இந்தப் போராட்டம் சாமானிய தொழிலாளர்களால் தொடங்கப்பட்டதே அன்றி, UAW அதிகாரத்துவத்தால் அல்ல, UAW அதிகாரத்துவம் பைடென் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை அங்கீகரித்துள்ளதுடன், அதன் போலியான “ எழுச்சி பெறு வேலைநிறுத்தக் “ கொள்கையின் கீழ் வெளிநடப்பை ஒன்று அல்லது இரண்டு பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மட்டுப்படுத்த முனைந்துள்ளது.

தன்னிச்சையான வேலைநிறுத்த அச்சுறுத்தல்கள் UAW ஐ வேலைநிறுத்தத்தை 48,000 UC கல்வித்துறை தொழிலாளர்களில் 30,000 பேரை உள்ளடக்கி விரிவாக்க நிர்பந்தித்ததை அடுத்து கடந்த வார இறுதியில் நீதிபதி தலையிட்டார். UAW அதிகாரத்துவமானது நீதிமன்றத் தலையீட்டை வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு ஒரு போலிக்காரணமாக வரவேற்றது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எவ்வாறிருப்பினும், சாமானிய தொழிலாளர்களிடம் இருந்து வரும் மிகப்பெரும் அழுத்தத்தின் கீழ், இந்த சட்டவிரோத தடையாணைக்கு அது தலைவணங்குமா என்பது குறித்து ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் (UAW) சங்கமானது இக்கட்டுரை எழுதும் வரையில் எந்த பகிரங்க அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

ஒரு சுயாதீனமான வேலைநிறுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான கற்பித்தல் உதவியாளர்கள் தொடர்ந்து தேர்ச்சித் தரங்களை நிறுத்தி வைக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு இடையே, கலிபோர்னியா பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி இறுதித் தரங்களை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாணவர்களுக்கான தொழிலாளர்களும் ஆசிரியர்களும் சமீபத்தில் WSWS இடம் தெரிவித்துள்ளனர்.

UCLA இல் உள்ள துணைவேந்தரின் அலுவலகம் அதன் “21 ஆம் நூற்றாண்டு பாதுகாப்புத் தீர்வு” (”21st Century Policing Solution”) மூலம் ஒரு புதிய விசாரணையை அறிவித்துள்ளது, ஆரம்பத்தில் பொலிஸ் வலையில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முகாம்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு மாணவர்களைக் கேட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்களும் மாணவர்களும் தகவல் கொடுப்பவர்களை நியமிக்கும் முயற்சிகளை கண்டித்துள்ளனர்.

பல்கலைக்கழக கவுன்சில் சாண்டா குரூஸ் (UCSC) இல் உள்ள மாணவர்களுக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் உத்தரவை மீறுவதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஒரு வைரல் இடுகையில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது, “கலிபோர்னியா முழுவதும் வேலைநிறுத்தம் செய்யும் பட்டதாரி மாணவர்கள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு பழமைவாத நீதிபதியிடம் இருந்து தற்காலிக தடை உத்தரவை (TRO) எதிர்கொள்கின்றனர். அனைத்து ஆசிரியர்களையும் விரிவுரையாளர்களையும் அழைக்கிறோம், மதிப்பெண்களை நிறுத்தி வையுங்கள், கருங்காலியாக இருக்காதீர்கள்.”

தொழிலாளர்கள் “தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்ய” வேண்டியிருப்பதாக குறிப்பிட்டு மற்றொரு UCSC தொழிலாளர் WSWS க்கு எழுதிய கடிதத்தில், தொழிலாளர்கள் “தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்ய” வேண்டியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக பல்கலைக்கழக கவுன்சிலானது மாணவர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக அவர்களுடன் ஒரு நொடி கூட பேச்சுவார்த்தை நடத்த செலவிடாத நிலையில், வேலைநிறுத்தத்தை நிறுத்துவது அபத்தமானது என்று அந்த தொழிலாளி குறிப்பிட்டார்.

UCLA பட்டதாரி மாணவர் ஒருவர் WSWS க்கு கூறுகையில், “இது UC க்கு ஒரு தற்காலிக வெற்றியாக இருந்தாலும், மாணவர்களுக்கான தொழிலாளர் உரிமைகளுக்காகவும், இனப்படுகொலைக்கு எதிராகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த வார இறுதியில் வரவிருக்கும் பட்டமளிப்பு மற்றும் தொடக்க விழாக்கள் ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மாணவர் ஆர்வலர்களின் வலுவான உணர்வுகளை வெளிப்படுத்த இருக்கின்றன.

அந்த மாணவர் இவ்வாறு எழுதினார், “தற்காலிக தடை உத்தரவினால் சீர்குலைக்க முடிவு செய்யும் மாணவர்களுக்கு குறைவான பாதுகாப்புகள் இருக்கும் என்றாலும், இன்னும் பல திட்டமிட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒத்துழையாமை முறைகள் உள்ளன, அவை இன்னும் நடக்கும். மேலும், மாணவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதுடன், இலையுதிர்கால பள்ளி ஆண்டில் தொழிலாளர்கள் நடவடிக்கையை எடுப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன்.”

ஒரு கலிபோர்னியாவிலுள்ள இர்வின் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பின்வருமாறு எழுதினார், “தீடீர் வேலைநிறுத்த மூலோபாயம் தோல்வியடைந்தது, என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெறுமாறு ஆசிரியர்கள் கூறுவதாகத் தெரிகிறது. தேர்ச்சித் தரங்களை தான் நாம் தயார் செய்கிறோம். அவை நமது அதிகபட்ச அழுத்தத்தை உருவாக்குகின்றன.”

ஆரம்பத்தில் இருந்தே, பேச்சு சுதந்திர உரிமைகளை இடைநீக்கம் செய்ததன் மூலமாகவும் மற்றும் போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவிட்டதன் மூலமாகவும் கலிபோர்னியா UC மாநில தொழிலாளர் சட்டங்களை மீறியுள்ளது என்ற ஒரு தீர்ப்புக்காக பொது ஊழியர் உறவுகள் வாரியத்திடம் (PERB) முறையீடு செய்வதோடு வேலைநிறுத்தத்தை மட்டுப்படுத்த UAW தொழிற்சங்க இயந்திரம் முனைந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், நீதிமன்றங்களின் வேலைநிறுத்தத்தை உடைக்கும் தலையீடு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது எந்தவொரு அரசாங்க நிறுவனத்தாலும் பாதுகாக்கப்படாது. மாறாக, கலிபோர்னியா பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தின் விரிவாக்கம் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கைகள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்கப்பட முடியும் என்பதை நிரூபிக்கிறது.

இதற்கான போராட்டத்திற்கு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்க (UAW) அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டம் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த கலிபோர்னியா கவுன்சில் அமைப்புமுறையையும் மூடுவதற்கும், வாகனத்துறை, விமானத்துறை, பாதுகாப்புத்துறை, சரக்கு விநியோகம் மற்றும் பிற தொழில்துறை தொழிலாளர்களுக்கு நேரடியாக முறையிடுவதற்கும் பல்கலைக்கழக கவுன்சில் (UC) தொழிலாளர்கள் அவர்களின் சொந்த சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இதன் பொருள் UAW தொழிற்சங்க இயந்திரத்தால் UC வேலைநிறுத்தம் பற்றிய தகவல் இருட்டடிப்பை முறியடிப்பது என்பதாகும். அது தீர்மானகரமான போராட்டம் குறித்து ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்க ஏதும் செய்யவில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் மூலமாக வேலைநிறுத்தம் பற்றி அறிந்த வாகனத் தொழிலாளர்கள், அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலை மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்திற்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

“நீதிபதி செய்தது அநீதியானது, ஆனால் இந்த நாட்டின் கோணல் தன்மையைக் கொண்டு நான் ஆச்சரியப்படவில்லை” என்று டெட்ராய்ட் புறநகர் வாரன் டிரக் ஆலையில் ஒரு ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளியான ஜேக் குறிப்பிட்டார். மேலும், “பாலஸ்தீனிய மக்களுக்கு இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது பயங்கரமானது, கொலைகள் மற்றும் அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்” என்று WSWS க்கு அவர் தெரிவித்தார்.

“இஸ்ரேலிய தலைவரை உரையாற்றுவதற்கு அமெரிக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. அரசியல்வாதிகள் மக்களுக்கு சரியானதைச் செய்வதில் அக்கறை காட்டாமல், அரசியல் மற்றும் பெரும் பண நலன்களுக்கு மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். அமெரிக்கா அதன் சொந்த போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேலை கட்டுப்படுத்தாது. இப்போது, அவர்கள் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக இன்னும் பெரிய போர்களை விரும்புகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

நீதிபதியின் வேலைநிறுத்தத்தை உடைக்கும் தடையுத்தரவை ஐக்கிய வாகனத்துறைத் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று வினவிய போது, “ஒவ்வொரு தொழிலாளியும், ஒரு வாகனத்துறை தொழிலாளி, ஒரு செவிலியர், ஒரு தீயணைப்பு வீரர் அல்லது ஒரு ஆசிரியர், அரசியலமைப்பு உரிமைகளுக்காக போராட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மிச்சிகன், வேய்னில் உள்ள ஃபோர்ட் மிச்சிகன் ஒருங்கிணைப்பு ஆலையில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) ஆதரவாளர் ஒருவர் இவ்வாறு கூறினார், “போருக்கு எதிராக, கலிபோர்னிய வேலைநிறுத்தம் குறித்து எனக்குத் தெரியாது. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் அதை அமைதியாக வைத்திருக்கிறது, அது தவறு. தொழிற்சங்கத்தின் எந்தப் பகுதியாவது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அதைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.”

டெட்ராய்டில் வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு முகாம் மீது சமீபத்தில் பொலிஸ் நடத்திய தாக்குதலை சுட்டிக்காட்டி, அவர் கூறினார், “வேய்ன் மாநிலத்தில் மாணவர்களை பொலிஸ் கைது செய்திருப்பதைக் காணும்போது அது அதிர்ச்சியாக இருந்தது. நான் மாணவர்களை ஆதரிக்கிறேன். எங்களில் சிலர் மட்டும் வேலை நிறுத்தம் செய்தால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் நாட்டை முடக்குவதற்கு ஒவ்வொருவரும் சேர்ந்துகொண்டால், அவர்களுக்கு போரை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை”.

“அவர்கள் இந்தப் போர்களுக்காக இவ்வளவு பணத்தையும் செலவழிக்கிறார்கள். நாட்டின் வங்குரோத்து நிலையை நான் அறிவேன். அரசாங்கத்தை முடக்குவோம் என்று அவர்கள் மிரட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய இந்த தகவலை விளம்பரப்படுத்த IWA-RFC ஐ விரிவுபடுத்த வேண்டும். பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் நான் இதில் சேர்ந்தேன். தொழிற்சங்கமும் நிறுவனமும் என்ன நடக்கிறது என்பதை எங்களிடம் சொல்லவில்லை, மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு என் முன்னால், எனது ஷிப்ட் மற்றும் பிற ஷிப்டில் இறந்து கொண்டிருந்தனர். எங்களுக்கென்று ஒரு அமைப்பு தேவை.”

மார்ச் மத்தியில் ரூஜ் மின்சார வாகன மையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், மிச்சிகன் ஒருங்கிணைப்பு ஆலையில் வேலையைத் தொடங்க காத்திருக்கும் ஃபோர்ட் ரூஜ் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவின் ஆதரவாளர் ஒருவர், UC வேலைநிறுத்தம் குறித்து UAW இடம் இருந்து எதுவும் கேள்விப்படவில்லை என்று தெரிவித்தார். “தொழிற்சங்கத்திடம் இருந்து நான் அதைப் பற்றி எதனையும் அறியவில்லை, ஆனால், அவர்கள் பைடெனை ஆதரிக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

“அவர்கள் போரை விரும்புகிறார்கள். அவர்கள் அமைதியை விரும்பவில்லை. இது இனப்படுகொலை. நாம் சும்மா வாழ முடியாது. ஏன் பகிர்ந்து கொள்ள முடியாது? ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கு போதுமானதாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட அவரும் அவரது சக தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் நிலைமைகளை அவர் விவரித்தார்.

“தொழிலாளர்கள் ஏற்கனவே ஒவ்வொரு நாட்டிலும், உள்நாட்டில் ஒரு போரை எதிர்கொள்கின்றனர். நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டோம், நாங்கள் வாழ முயற்சிக்கும் வேலைகளுக்காக போராடுகிறோம். ஒவ்வொருவருக்கும் மேல் கடன்கள் குவிந்து கிடக்கின்றன. பணம் வரவில்லை என்பதற்காக நீங்கள் தொழிற்சங்கத்திற்கு சென்றால், நீங்கள் ஓடிவிடுவீர்கள். நான் அதைக் கேட்க விரும்பவில்லை.

“எங்களுக்கு வீடுகள், வேலைகள் மற்றும் வாழ்வதற்கு போதுமான அளவு பணம் தேவைப்படும்போது, அவர்கள் இந்த போர்களில் சண்டையிடுவதற்காக, எங்கள் பணத்தை அனுப்புகிறார்கள். அரசாங்கத்தை கட்டுப்படுத்துபவர்கள் கேய்மன் தீவுகளில் அமர்ந்து எங்கள் உழைப்பில் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். நான் மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு. பல்கலைக்கழக வளாகம் போருக்கு முன்பு போல் இல்லை. அவர்களைப் பாதுகாக்க நாம் அனைவரும் வேலைநிறுத்தத்தில் இறங்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஒரு பொறியியலாளர், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீதான ஜனாதிபதி பைடெனின் கண்டனங்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்களின் மாணவர்கள் மீதான விரோதம் குறித்து கருத்து தெரிவித்தார். “ஒரு பேராசிரியரை வலுக்கட்டாயமாக தரையில் தள்ளியதுடன், போராட்டம் நடத்த வரும் இளைஞர்களை அடக்கி, குழந்தைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளை தாக்குவதற்கு இங்கு பயன்படுத்தப்படும் பலத்தை நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. அந்த ஆசிரியர் எந்த அச்சுறுத்தலும் விடுக்கவில்லை. ஆசிரியர் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

“காஸாவில் இருந்து வரும் காட்சிகள் மிகவும் பயங்கரமானவை. நான்கு பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக, அவர்கள் கிட்டத்தட்ட 300 பேரைக் கொன்றனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்தினர். அமெரிக்க அரசாங்கம் “சுதந்திரம்”, “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகள்” போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை திரித்துள்ளது. அவர்களின் அளவுகோல் அதிகாரமாக இருக்கிறது. அமெரிக்கா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் பொம்மைகள் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாம் நமது கண்களைத் திறந்து நம்மைச் சுற்றியுள்ள மக்களின் கண்களைத் திறக்க வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கான போராட்டத்திலும் பல்கலைக்கழக கவுன்சில் வேலைநிறுத்தத்தை விரிவாக்குவதிலும் இணைய, கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.