முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அனைத்து 34 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நியூ யோர்க் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2016 தேர்தலில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துவதற்கான திட்டத்தில் வணிக பதிவுகளை பொய்யாக்கியதற்காக ஜூரி அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த பின்னர், நியூயோர்க்கில் உள்ள மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்து செல்கிறார், வியாழக்கிழமை, மே 30, 2024 [AP Photo/Steven Hirsch]

வியாழன் மதியம், நியூயோர்க் நடுவர் மன்றம், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் 2016 தேர்தலுக்கு முன் ஆபாச திரைப்பட நடிகைக்கு ஆறு இலக்கப் பணம் கொடுத்தது தொடர்பாக 34 வணிகப் பதிவுகளை பொய்யாக்கிய குற்றச்சாட்டில், அவரை குற்றவாளி என அறிவித்தது. செவ்வாய்க் கிழமை கலந்தாய்வு தொடங்கிய பிறகு, ஜூரிகள் அனைத்து விஷயங்களிலும் ஒருமனதாக முடிவெடுக்க 10 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஆனது.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவாளி என வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் தற்போதைய நெருக்கடியை தீவிரப்படுத்தும். நவம்பர் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தற்போது தண்டனை பெற்ற குற்றவாளியான ட்ரம்ப் அல்லது பெருகிய முறையில் முதிர்ச்சியடைந்த மற்றும் வெறுக்கப்படும் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி பைடென் ஆகிய இருவரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அனைத்து 34 குற்றச்சாட்டுகளிலும் ட்ரம்ப் குற்றவாளி என்று கண்டறியப்பட்டு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றாலும், நீதிபதி மெர்ச்சன் டிரம்புக்கு சிறைத்தண்டனை விதிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, ஜூலை 11 ஆம் தேதி தண்டனை அறிவிப்பை நீதிபதி அறிவிக்க உள்ளார். எந்த தண்டனை வழங்கப்பட்டாலும், ட்ரம்ப் மேல்முறையீடு செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வார்.

அவரது தண்டனைக்குப் பிறகு, ட்ரம்ப் நீதிமன்ற அறைக்கு வெளியே ஒரு சுருக்கமான பாசிச அறிக்கையை வழங்கினார். 'சோரோஸ் ஆதரவிலான வழக்குத்தொடுனர்' ஆல்வின் பிராக் (Alvin Bragg) (ஒரு யூதரும் ஜனநாயகக் கட்சியின் நிதியியல் ஆதரவாளருமான ஹங்கேரிய அமெரிக்க பில்லியனர் ஜோர்ஜ் சோரோஸ் (George Soros) பற்றிய குறிப்பு) மற்றும் 'ஊழல் நீதிபதி' ஜுவான் மெர்ச்சன் (Juan Merchan) ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மோசடி விசாரணைக்கு' அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஒவ்வொரு பிரச்சார உரையிலும் அவர் செய்வதைப் போலவே, ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்களைத் தாக்கியதுடன், 'சிறைச்சாலைகள் மற்றும் மனநல நிறுவனங்களில் இருந்து' 'மில்லியன் கணக்கானவர்கள்' நம் நாட்டிற்குள் பாய்வதற்கு பைடென் அனுமதித்ததாக குற்றஞ்சாட்டினார்.

ட்ரம்ப் வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில், அவர் புகார் அளித்தார், 'அவர்கள் எங்களுக்கு ஒரு இடம் மாற்றத்தை கொடுக்கவில்லை' என்றும் 'உண்மையான தீர்ப்பு நவம்பர் 5 அன்று மக்களால் வழங்கப்படும்' என்றும் கூறினார்.  அவரது யூத-விரோத அவதூறை மீண்டும் கூறி, 'இங்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியும், இங்கு என்ன நடந்தது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். உங்களுக்கு சோரோஸ் ஆதரவு வழக்கறிஞர் இருக்கிறார், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை' என்று தனது அறிக்கையில் ட்ரம்ப் எழுதியிருந்தார்.

பல முக்கிய குடியரசுக் கட்சியினர் தீர்ப்புக்குப் பிறகு தங்கள் எதிர்கால தலைவரை (Fuhrer) ஆதரித்து அறிக்கைகளை வெளியிட்டனர். பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் (Mike Johnson) இந்த விசாரணையை 'முற்றிலும் அரசியல்ரீதியான, சட்டபூர்வமானதல்ல' என்று அழைத்ததுடன், ட்ரம்பைப் பின்பற்றி, 'நமது நீதித்துறை அமைப்புமுறையின் இராணுவமயமாக்கல்' குறித்து புலம்பினார்.

ஜோர்ஜியா குடியரசுக் கட்சியின் பிரதிநிதி மைக் காலின்ஸ் (Mike Collins) ட்வீட் செய்தார், 'சிவப்பு மாநில ஏஜிக்கள் [அட்டார்னி ஜெனரல்கள்] மற்றும் டிஏக்கள் [மாவட்ட வழக்கறிஞர்கள்] மும்முரமாக செயல்பட வேண்டிய நேரம் இது,' அதாவது, ஜனநாயகக் கட்சியினர் மீது வழக்கு தொடுப்பதன் மூலமாக பதிலடி கொடுப்பதாகும். சக ஜோர்ஜியா பிரதிநிதியும், மற்றும் QAnon பாசிஸவாதியுமான மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) தொகுப்பாளரான டக்கர் கார்ல்சனின் (Tucker Carlson) புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அறிக்கையை மறு ட்வீட் செய்தார். அதில், 'மூன்றாம் உலகத்தை இறக்குமதி செய்யுங்கள், மூன்றாம் உலகமாக மாறுங்கள். … இந்த தீர்ப்பை ஆதரித்து வாதாடும் எவரும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆபத்தானவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப் ஒரு குற்றவாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவரது நிஜமான குற்றங்களுடன், குறிப்பாக 2021 ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியுடன் ஒப்பிடுகையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மங்கலானவை.

45,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற மற்றும் 80,000 க்கும் அதிகமானவர்களைக் காயப்படுத்திய காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அசைக்க முடியாத அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவின் காரணமாக தற்போதைய தலைமைத் தளபதி உலகெங்கிலும் பொதுவாக 'இனப்படுகொலை' ஜோ பைடென் என்று குறிப்பிடப்படுகிறார்.

தண்டனைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் ஜோசப் கிஷோர், நடுவர் மன்றத்தின் முடிவை 'பொருத்தமானது' என்று குறிப்பிட்டதுடன் மேலும் சேர்த்துக் கொண்டார்:

இந்த தீர்ப்பை பலர் வரவேற்பார்கள், இது ஒரு அரசியல் அரக்கனுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அடி, அவருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை அவர் பெற்றுவிட்டார். ஆனால் அமெரிக்க ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ட்ரம்ப் என்ற அறிகுறியை காரணம் என்று எடுத்துக்கொள்வது தவறாகும்.

ட்ரம்ப்பைப் போன்ற ஒரு பாசிஸ்ட் அமெரிக்க அரசியலின் உச்சிக்கு உயர முடியும் என்ற உண்மையே ஜனநாயக ஆட்சி வடிவங்களின் ஆழமான சீரழிவை வெளிப்படுத்துகிறது. அவை, பல தசாப்தங்களாக முடிவில்லாத போர் மற்றும் எப்போதும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையால் வெற்றுத்தனமாக உள்ளன. ட்ரம்ப் மீதான இந்த தண்டனையைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளராக பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், குடியரசுக் கட்சியில் அவரைப் பின்பற்றும் எவரும் குறைவான பிற்போக்குவாதியாக இருக்க மாட்டார்கள்.

கிஷோர் தொடர்ந்தார்:

'இரண்டு தீமைகளில் சிறியது' என்ற வாதம் இனி இருக்க முடியாது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சர்வாதிகாரத்தை நோக்கி அக்கறை காட்டும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்ப் அரசியலமைப்பை மாற்றியமைக்க முயன்றார், அதேவேளையில், பைடென் காஸாவில் பாரிய கொலைகளுக்கு ஒப்புதல் அளித்து ஆதரவளித்து, ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போரை நோக்கி விரைகிறார். அதே நேரத்தில், அமெரிக்கா எங்கிலும் கல்லூரி வளாகங்களில் அமைதியான மாணவர் போராட்டக்காரர்கள் மீது முன்னொருபோதும் இல்லாத ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகிறார்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், அரசியல் கட்சிகள் மற்றும் முழு சமூக-பொருளாதார அமைப்பு மீதும் பரந்த அதிருப்தி உள்ளது. புளூபிரிண்ட் (Blueprint) மூலம் பதிவுசெய்யப்பட்ட இளம் வாக்காளர்களின் (வயது 18 முதல் 30 வரை) சமீபத்திய கருத்துக் கணிப்பில் செமாஃபோர் (Semafor) அறிக்கை அளித்தது, பதிலளித்தவர்களில் 51 சதவீதம் பேர் அமெரிக்க அரசியல் அமைப்பு 'என்னைப் போன்றவர்களுக்கு வேலை செய்யாது' என்று ஒப்புக்கொண்டனர்.

'அநேகமாக அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் மலிந்தவர்கள், அவர்கள் அரசியல் அதிகாரத்திலிருந்து பணம் சம்பாதிக்கிறார்கள்' என்று 65 சதவீதத்தினர் கடுமையாக அல்லது ஏதோவொரு விதத்தில் உடன்பட்டனர்—வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே உடன்படவில்லை' என்று அந்த கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.

வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய வன்முறையின் பாரிய வெடிப்பிற்கு மத்தியில் இந்த குற்றவாளி மீதான தீர்ப்பு வந்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம், அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன், காஸாவில் அதன் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையைத் தொடர்கிறது.

வியாழக்கிழமை, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்கள் தலைநகர் சனா உட்பட யேமனில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஜனவரி 12 ஆம் திகதி முதல் யேமனில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவங்கள் மேற்கொண்ட ஐந்தாவது கூட்டு நடவடிக்கை இது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய இராணுவத் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வியாழனன்றும், பல ஊடக நிறுவனங்கள், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவில் உள்ள 'நகரங்கள்' உட்பட இலக்குகளைத் தாக்க பைடென் உக்ரேனுக்கு பச்சைக்கொடி காட்டியதை உறுதிப்படுத்தின. இது அணுஆயுத போர் அபாயத்தை பெரிதும் தீவிரப்படுத்துகிறது.

Loading