முன்னோக்கு

ரஷ்ய-உக்ரேனியப் போரில் நேரடியான தலையீட்டிற்கு நேட்டோ தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

உக்ரேனின் நேட்டோ-ஆதரவு ஆட்சி ரஷ்யாவுடனான அதன் போரில் தோல்வியை எதிர்கொண்டுள்ள நிலையில், நேட்டோ சக்திகள் உக்ரேனில் பாரிய இராணுவ விரிவாக்கத்திற்கான தயாரிப்புகளை முடுக்கி விட்டுள்ளன. பல்கேரிய தலைநகர் சோபியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் முடிவு இதுவாகும்.

“உக்ரேனில் ரஷ்யா மூலோபாய தோல்வியை சந்திக்கலாம் மற்றும் அது சந்திக்க வேண்டும்” என்று உச்சிமாநாட்டு அறிக்கை அறிவித்தது. அது “உக்ரேனுக்குத் தேவையான அனைத்தையும், முடிந்தவரை விரைவாகவும், அது வெற்றிபெற எடுக்கும் வரையிலும் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில், தெளிவாகக் கூறப்பட்டுள்ள மூலோபாயத்திற்கு” அழைப்பு விடுத்தது.

அமெரிக்காவின் HIMARS ஏவுகனை அமைப்பு, Pendleton உள்ள கடற்படை தளத்தில் உள்ளது [Photo: US Marines]

நேட்டோ ரஷ்யாவின் மீது ஒரு “மூலோபாய தோல்வியை” ஏற்படுத்த முற்பட்டு, ரஸ்யா இராணுவத்திற்கு பேரழிவு தரும் அடியை ஏற்படுத்தி மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கட்டாயப்படுத்துவதற்கு, நேட்டோ படைகள் போரில் நேரடியாக நுழைவது தேவைப்படும். உக்ரேனிய இராணுவம் அரை மில்லியனுக்கும் அதிகமான படைகளை இழந்து, அனைத்தும் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக போர் முன்னரங்கில் இருந்து பின்வாங்கி வருகிறது.

“ரஷ்யாவில் உள்ள முறையான இலக்குகளைத் தாக்க நேட்டோ நட்பு நாடுகள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சில கட்டுப்பாடுகளை நீக்குமாறு” சோபியா உச்சிமாநாட்டின் அறிக்கை வாதிட்டது. இப்போது வரை, ரஷ்யா இலக்குகளுக்கு எதிரான உக்ரேனிய தாக்குதல்கள், உக்ரேனினால் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் செல்லும் தூரம், அருகிலுள்ள பெல்கோரோட் நகரத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. சோபியா உச்சிமாநாடு, நேட்டோவால் வழங்கப்பட்ட நீண்ட தூர புயல் வேகத்தில் தாக்கும் SCALP, டாரஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்தி ரஷ்யாவின் மையப்பகுதி நகரங்களில் குண்டு வீச அனுமதிக்கிறது.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: நேட்டோ பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போரை பிராமாண்டமான அளவில், பொறுப்பற்ற முறையில் விரிவுபடுத்துகிறது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், உக்ரேன் ரஷ்யா மீது குண்டுவீசுவதற்கு பிரிட்டிஷ் Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம் என்று கூறியதை அடுத்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் பிரிட்டிஷ் தூதர் நைகல் கேசியை அழைத்து, பிரிட்டனில் உள்ள இலக்குகளைத் தாக்கி ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்தது. ஆயினும்கூட, கேமரூனின் அச்சுறுத்தல்களை எதிரொலிப்பதன் மூலம், நேட்டோ ரஷ்யாவுடன் வெளிப்படையான போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்துகிறது.

நேற்று இரவு மெஸ்பேர்க்கில் நடந்த உச்சிமாநாட்டில், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகிய இருவரும் உக்ரேன் ரஷ்யாவை நேட்டோவின் ஏவுகணைகளால் குண்டுவீசித் தாக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். “ஏவுகணைகள் எங்கிருந்து வீசப்படுகின்றன என்று நாம் அவர்களிடம் கூறினால், அவர்களால் தாக்க முடியாது. உண்மையில் நாங்கள் சொல்கிறோம், நாங்கள் உங்களுக்கு ஆயுதங்களைத் தருகிறோம். ஆனால், உங்களால் உங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாது” என்று மக்ரோன் கூறினார்.

பின்லாந்து, போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் ரஷ்ய இராணுவ ட்ரோன்களை எதிர்த்துப் போரிடத் தயாராக, ரஷ்ய எல்லையில் ஒரு ட்ரோன் சுவரைப் பலப்படுத்தி வருகின்றன என்ற அறிவிப்புக்கு மத்தியில் இது வருகிறது.

சனிக்கிழமையன்று, போலந்து வெளியுறவு மந்திரி ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கார்டியனிடம் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் அணுகுண்டுகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதித்து வருவதாகக் கூறினார். மேலும், “நீங்கள் அணுகுண்டை வெடிக்கச் செய்தால், அது யாரையும் கொல்லாவிட்டாலும் கூட, உக்ரேனில் உள்ள உங்கள் இலக்குகள் அனைத்தையும் வழக்கமான ஆயுதங்களால் தாக்குவோம், அனைத்தையும் அழித்து விடுவோம் என்று அமெரிக்கர்கள் ரஷ்யர்களிடம் கூறியுள்ளனர். இது ஒரு நம்பகமான அச்சுறுத்தல் என்று நான் நினைக்கிறேன்” என்று சிகோர்ஸ்கி கூறினார்.

கிரெம்ளின் அணுவாயுதங்களை முதன்முதலில் பயன்படுத்தும் என்ற ஒரு சூழ்நிலையை சிகோர்ஸ்கி குறிப்பிட்டாலும், ​​அவரது கருத்துக்கள் நேட்டோ அவ்வாறு செய்ய அதிக உந்துதல் பெற்றுள்ளதாகக் கூறுகின்றன. உண்மையில், ரஷ்யாவுடனான மரபுவழிப் போரில் ஐரோப்பாவுக்கு பாதகமாக இருக்கும் என்றும், அதன் துருப்புக்கள் இரண்டு ஆண்டுகால போரில் அதிக ஆயுதம் ஏந்திய அனுபவத்தைக் கொண்ட படையினர்களாக உள்ளனர் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்,

1991 ல் சோவியத் யூனியனின் ஸ்ராலினிசக் கலைப்புக்குப் பிறகு, “ஐரோப்பா ஆயுதங்களை மட்டும் களையவில்லை, அது தற்காப்புத் தொழிலில் இருந்து விலகியது. … மற்றும் பின்னோக்கிப் பார்த்தால், அது ஒரு தவறு போல் தெரிகிறது. ஐரோப்பா பின்தங்கியுள்ளது என்பது வெளிப்படை” என்று சிகோர்ஸ்கி கூறினார்.

அவர் மேலும் இதுபற்றி கூறுகையில்,

உயர்-மதிப்பு, உயர் தொழில்நுட்ப தளங்கள் மற்றும் ஆயுதங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். உண்மையில் எங்களுக்கு மில்லியன் கணக்கான குண்டுகள் தேவை என்பதை நாங்கள் இப்போதுதான் மீண்டும் கண்டுபிடித்துள்ளோம். உங்களுக்கு பெரிய அளவிலான குறைந்த தொழில்நுட்ப பொருட்களும் தேவை.

இந்த ஒப்பீடானது, இந்த பலவீனத்தை சமநிலைப்படுத்த நேட்டோ ஒரு போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவு செய்யும் அபாயத்தை இது எழுப்புகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர்த் திட்டங்கள் உலகளாவிய ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுடன் பிணைக்கப்பட்டுள்ளன. சோபியாவில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரேன் போரின் போது ரஷ்யாவுடன் வர்த்தகத்தை மேற்கொண்டுவரும் சீனாவை தாக்கினார். “ரஷ்யாவின் போருக்கு பெலாரஷ்யன், ஈரானிய மற்றும் வட கொரிய ஆட்சிகள் வழங்கி வருகின்ற இராணுவ உதவியை கண்டிக்குமாறு” சோபியா அறிக்கை அழைப்பு விடுத்தது. மேலும், “உக்ரேனுக்கான உதவி ... உக்ரேனின் வெற்றியுடன் தொடர்புடைய மூலோபாய நன்மைகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறிய முதலீடாகும்” என்று அந்த அறிக்கை முடிக்கிறது.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்யாவின் மீது “மூலோபாய தோல்வியை” ஏற்படுத்துவதன் மூலமும், மாஸ்கோவில் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதன் மூலமும், ரஷ்யாவின் பரந்த எண்ணெய், எரிவாயு மற்றும் முக்கியமான மூலோபாய கனிமங்களை அணுகுவதை மட்டும் நேட்டோ நம்பவில்லை. மாறாக, ரஷ்யாவிற்கு எதிரான போர் விரிவாக்கம் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஈரானுக்கு எதிரான போருடன் பிணைந்துள்ளது. காஸாவில் அதன் இனப்படுகொலைக்கு மத்தியில், இஸ்ரேலுக்கு நேட்டோவின் ஆதரவில், இது அதன் கூர்மையான வடிவத்தை எடுக்கிறது.

நேட்டோவை கண்டிப்பதன் மூலம் ஸ்டோல்டன்பெர்க்கின் கருத்துக்களுக்கு மாஸ்கோ பதிலளித்தது. “நேட்டோ இராணுவ வாய்வீச்சுகளுடன் ஊர்சுற்றித் திரிவதோடு, இராணுவ பரவசத்திலும் விழ்ந்துள்ளது” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். நேட்டோ ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு நெருக்கமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு, “அவர்கள் நெருங்கி வரவில்லை, மாறாக அவர்கள் அதில் இருக்கிறார்கள்” என்று அவர் பதிலளித்தார்.

எவ்வாறாயினும், நேட்டோவின் விரிவாக்கம், ரஷ்ய முதலாளித்துவ ஆட்சியின் பிற்போக்குத்தனமான உக்ரேன் படையெடுப்பிற்கு அடியில் இருக்கும் தேசியவாத மூலோபாயத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. ரஷ்யாவின் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி நேட்டோவை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரவும், ரஷ்யாவின் பாதுகாப்புக் கவலைகளை அங்கீகரிக்க கட்டாயப்படுத்தவும் கிரெம்ளின் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. ரஷ்யா இப்போது முழு நேட்டோ கூட்டணியுடன் ஒரு அணுவாயுத மோதலாக விரிவடையக்கூடிய போரின் சாத்தியத்தை எதிர்கொள்கிறது. அது ஒரு அணு ஆயுத மோதலாக அதிகரிக்கக்கூடும்.

இந்தச் சூழ்நிலையில் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால், ஆபத்தின் அளவு மற்றும் உடனடித் தன்மையைப் பற்றி திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதாகும். நேட்டோ அரசாங்கங்கள் இத்தகைய கொள்கைகளின் பேரழிவுத் தாக்கங்களை விளக்காமல், “உக்ரேனுக்கு உதவி” மற்றும் “ஐரோப்பியப் போர்ப் பொருளாதாரம்” பற்றிய சொற்றொடர்களை உச்சரித்து, மக்களின் முதுகுக்குப் பின்னால் இந்த போர் விரிவாக்கத்தைத் தயாரிக்கின்றன.

உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்து போரிட நேட்டோ படைகளை அனுப்பும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டத்திற்கு, ஐரோப்பாவில் பாரியளவு மக்கள் எதிர்ப்பு உள்ளது. 68 சதவீத பிரெஞ்சு மக்களும், 80 சதவீத ஜேர்மனியர்களும், 90 சதவீத போலந்து மக்களும் இந்தக் கொள்கையை எதிர்ப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நேட்டோ கட்டவிழ்த்துவிடத் தயாராகி வரும் போரின் அளவைப் பற்றி, பரந்துபட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அறிந்திருந்தால், இந்த எதிர்ப்பு சந்தேகத்திற்கு இடமின்றி வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், இராணுவவாத அரசாங்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் சதி, மக்களிடம் இருந்து ஆபத்தை மறைக்க மேற்கொள்ளும் போர் பிரச்சாரம் ஆகியவற்றை அம்பலப்படுத்த வேண்டும். ஒரு தேசிய மூலோபாயம் மற்றும் முதலாளித்துவத்தின் அடிப்படையில் போரை நிறுத்த வழி இல்லை. ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போரைத் தவிர்க்க, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

காஸாவில் நேட்டோ ஆதரவு இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் விரிவாக்கம் நடைபெறுகிறது. காஸாவில் இனப்படுகொலை மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் விரிவாக்கம் ஆகியவை, ஏகாதிபத்திய சக்திகள் போர் மூலம் உலகளாவிய மேலாதிக்கத்தை பின்தொடர்வதில் இருந்து உருவாகின்றன என்பதை, இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியப் போரின் பூகோள விரிவாக்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும், உலகெங்கிலும் தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தள்ளியுள்ள சமூக மற்றும் பொருளாதார கோரிக்கைகளுடன் போருக்கு எதிரான போராட்டத்தை இணைப்பதும் அவசியமாகும். போருக்கு எதிரான போராட்டம் என்பது, போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ சமூக அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, அதை சோசலிசத்துடன் மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது.

Loading