ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதல்களை அங்கீகரிக்க வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

செவ்வாயன்று, பிரதிநிதிகள் சபையின் இருகட்சி உறுப்பினர்களின் குழு ஒன்று, அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரேனை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்தது. இந்த நகர்வானது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே போரைத் தூண்டும் என்று ரஷ்ய அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.

இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (ATACMS) [AP Photo/John Hamilton/U.S. Army]

காங்கிரஸின் ஐந்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களான —லிண்டா சான்சேஸ், ரிக் லார்சன், பிரெண்டன் பாயில், ஜேசன் குரோ மற்றும் ஆண்ட்ரே கார்சன்— ஆகியோர், ஐந்து குடியரசுக் கட்சியினரான —டாரின் லாஹூட், நீல் டன், பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக், பிரெஞ்சு ஹில் மற்றும் ஆஸ்டின் ஸ்காட்— ஆகியோருடன் இணைந்து இந்த நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்தனர்.

போரில் அமெரிக்க ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான அழைப்பின் உடனடி பின்னணியானது, கார்கிவில் ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரேனிய ஆயுதப் படைகளுக்கு தொடர்ச்சியான பெரும் பின்னடைவுகள் ஆகும். பிபிசி (BBC) இன் தகவலின்படி, ரஷ்ய துருப்புக்கள் பாதுகாப்பற்ற உக்ரேனிய தற்காப்பு நிலைகளை தாண்டி வெறுமனே 'உள்ளே நுழைந்தன'.

இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டன் வெளியுறவு மந்திரி டேவிட் கேமரூன் ராய்ட்டர்ஸிடம், பிரிட்டன் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்ய பிராந்தியத்தைத் தாக்க உக்ரேனால் பயன்படுத்தப்படலாம் என்று கூறினார். உக்ரேனுக்கு அது வழங்கிய நீண்டதூர ஆயுதங்களை ரஷ்யாவிற்குள் தாக்குவதற்கு பயன்படுத்த பிரிட்டன் அனுமதிக்கிறதா என்று கேட்கப்பட்ட போது, 'அது உக்ரேனுடைய ஒரு முடிவு, உக்ரேனுக்கு அந்த உரிமை உள்ளது,' என்று அவர் பதிலளித்தார்.

ஏப்ரல் மாதம், பைடென் நிர்வாகம் 190 மைல்களுக்கும் அதிகமான தூரத்திற்கு தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு ரகசியமாக அனுப்பியதை உறுதிப்படுத்தியது. இந்த மாத தொடக்கத்தில் கிரிமியாவில் உள்ள ஒரு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்த உக்ரேன் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியது. அசோவ் கடலில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தைத் தாக்கவும் இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

மார்ச் மாதத்தில் அமெரிக்கா இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதை உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், 'அவைகள் இப்போது சில காலமாகவே உக்ரேனில் உள்ளன' என்று கூறினார்.

மே 2022 இல், பைடென், 'உக்ரேன் அதன் எல்லைகளைத் தாண்டி தாக்குவதை நாங்கள் ஊக்குவிக்கவோ அல்லது உதவவோ இல்லை' என்று அறிவித்தார். செப்டம்பர் 2022 இல், பைடென், 'ரஷ்யாவைத் தாக்கும் ராக்கெட் அமைப்புகளை நாங்கள் உக்ரேனுக்கு அனுப்பப் போவதில்லை' என்று அறிவித்தார்.

உக்ரேனில் அதன் சொந்த ஈடுபாட்டிற்காக வெள்ளை மாளிகை வகுத்துள்ள 'சிவப்புக் கோடுகளை' அது கடந்து சென்ற முந்தைய நகர்வுகளைப் போலவே, இந்த தொடர்ச்சியான அறிவிப்புகளும் வெறுமனே ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த, அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கான தயாரிப்பு மட்டுமே என்பது தெளிவாகி வருகிறது.

அதுபோன்றவொரு அறிவிப்புக்கான முன்னோட்டம் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனின் உக்ரேன் விஜயத்தின் போது வந்தது. அதில், 'நாங்கள் உக்ரேனுக்கு வெளியே தாக்குதல்களை சாத்தியமாக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை, ஆனால் இறுதியில், உக்ரேன் இந்த போரை எவ்வாறு நடத்தப் போகிறது என்பது குறித்து தனக்குத்தானே முடிவுகளை எடுக்க வேண்டும்' என்று அவர் அறிவித்தார்,

புதனன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் சாங்கர், இந்த அறிக்கையானது உக்ரேனில் அமெரிக்கா விநியோகித்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதன் மீது வெள்ளை மாளிகைக்குள் நடக்கும் ஒரு 'விவாதத்தின்' பாகமாக இருந்தது என்று எழுதினார்.

அதிர்ச்சியூட்டும் வகையில், அமெரிக்க இராணுவ/உளவுத்துறை இயந்திரத்தின் ஒரு முன்னணி வடிகாலான சாங்கர், இந்த 'விவாதத்தை' வெறுமனே ஈடுபாட்டின் மர்மமான விதிகள் மீது மட்டுமல்ல, மாறாக பைடென் நிர்வாகம் 'மூன்றாம் உலக போரைத் தவிர்க்க வேண்டுமா' என்பதன் தகுதிகள் மீதும் இருப்பதாக வடிவமைத்தார்.

டைம்ஸ் இவ்வாறு எழுதியது:

உக்ரேனுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா முதன்முதலில் அனுப்பியதிலிருந்து, ஜனாதிபதி பைடென் ஒருபோதும் ஒரு தடை மீது ஊசலாடவில்லை: ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அவைகளை ஒருபோதும் ரஷ்ய எல்லைக்குள் சுடுவதற்கு பயன்படுத்த மாட்டேன் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது, இது 'மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பதற்கு' திரு. பைடெனின் ஆணையை மீறுவதாக இருக்கும் என்று வலியுறுத்துவதாகும்.

ஆனால் அந்தக் கொள்கையைச் சுற்றியுள்ள ஒருமித்த கருத்து சிதைந்து வருகிறது. வெளியுறவுத் துறையால் உந்தப்பட்டு, ரஷ்யாவின் எல்லைக்குள் சற்று உள்ள ஏவுகணை மற்றும் பீரங்கி ஏவுதளங்களைத் தாக்க உக்ரேனியர்களை அனுமதிக்கும் வகையில் தடையை தளர்த்துவது குறித்து நிர்வாகத்திற்குள் இப்போது ஒரு தீவிரமான விவாதம் நடந்து வருகிறது — இந்த இலக்குகள் மாஸ்கோவின் சமீபத்திய பிராந்திய வெற்றிகளுக்கு உதவியதாக திரு. செலென்ஸ்கி கூறுகிறார்.

அது இவ்வாறு நிறைவு செய்தது:

கடந்த வாரம் கியேவிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்திற்குப் பிறகு வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ஜே. பிளிங்கன் வலியுறுத்திய இந்த முன்மொழிவு, இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, மேலும் திரு. பைடெனின் உள் வட்டத்தில் உள்ள அவரது சகாக்களில் எத்தனை பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாரம்பரியமாக மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் ஜனாதிபதிக்கு இது இன்னும் முறையாக வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேனிய தாக்குதல்கள் மீதான 'விவாதத்தின்' பரந்த உள்ளடக்கமானது, ரஷ்யாவிற்குள் நேரடியாக நேட்டோ துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான நீண்டகால திட்டங்களாகும். கடந்த வாரம், முப்படைகளின் அமெரிக்கத் தளபதி சார்ல்ஸ் கியூ. பிரவுன் டைம்ஸ் க்கு கூறுகையில், நேட்டோ இராணுவக் கூட்டணி 'இறுதியில்' கணிசமான எண்ணிக்கையில் செயலூக்கத்துடன் செயல்படும் என்றும், நேட்டோ துருப்புகளை உக்ரேனுக்கு அனுப்பும் என்றும், இந்த நிலைநிறுத்தல் 'தவிர்க்க முடியாதது' என்றும் அப்பத்திரிகை குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

சாங்கரின் டைம்ஸ் கட்டுரை இத்திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களைத் தருகிறது:

உக்ரேன் துருப்புகளை ஜேர்மனியில் உள்ள ஒரு பயிற்சி தளத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, நாட்டிற்குள் பயிற்சி அளிப்பது குறித்து அமெரிக்கா இப்போது பரிசீலித்து வருகிறது. அதற்கு உக்ரேனில் அமெரிக்க இராணுவ சிப்பாய்களை அனுப்ப வேண்டும், திரு. பைடென் இதுவரை தடை செய்த மற்றொரு விஷயம் இதுவாகும். மேற்கு நகரமான எல்விவ் அருகே பயிற்சித் தளத்தில் இருக்கக்கூடிய பயிற்சியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் அமெரிக்கா எப்படி எதிர்கொள்ளும் என்ற வினாவை இது எழுப்புகிறது.

ரஷ்யாவைத் தாக்க நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனுக்கு சுதந்திரம் உள்ளது என்ற கேமரூனின் அறிவிப்புகளுக்கும், உக்ரேனில் நேட்டோ அதன் சொந்த துருப்புகளை நிலைநிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அழைப்புகளுக்கும் விடையிறுப்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இம்மாத தொடக்கத்தில் ரஷ்யா உக்ரேனுடனான அதன் எல்லைக்கு அருகே தொடர்ச்சியான அணு ஆயுத பயிற்சி ஒத்திகைகளை நடத்துமென அறிவித்தார்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத பயிற்சிகளை அச்சுறுத்தல்களாக பயன்படுத்தியிருந்தாலும், பொதுவாக இந்த அச்சுறுத்தல்கள் மறைமுகமானவையாக இருக்கின்றன. மேலும் பயிற்சிகள் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட நிகழ்வுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்றத் தரப்பால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு குறுகிய கால பதிலிறுப்புகளாக அல்ல. ஆனால் இந்தப் பயிற்சிகளை அறிவிக்கையில், அவை 'தனிப்பட்ட மேற்கத்திய அதிகாரிகளின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு' ஒரு விடையிறுப்பு என்பதை கிரெம்ளின் தெளிவுபடுத்தியது.

'இஸ்கந்தர் செயல்பாட்டு-தந்திரோபாய ஏவுகணை அமைப்புமுறைக்கான சிறப்பு வெடிபொருட்களைப் பெறுவது, ஏவுகணைகளை அதனுடன் பொருத்துதல், மற்றும் ஏவுகணை ஏவுவதற்கு நியமிக்கப்பட்ட இடத்திற்கு இரகசியமாக முன்னேறுதல் போன்ற போர் பயிற்சி' பணிகளை கிரெம்ளினின் தெற்கு இராணுவ மாவட்ட துருப்புக்கள் செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின.

துருப்புகள் 'கின்ஜால் ஏரோபாலிஸ்டிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட சிறப்பு போர் ஆயுதங்களுடன் விமான ஆயுதங்களை ஏந்தியும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன, மேலும் நியமிக்கப்பட்ட ரோந்து பகுதிகளுக்குள் பறக்கின்றன' என்பதையும் கிரெம்ளின் சேர்த்துக் கொண்டது.

ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கலாமா என்பது குறித்த 'விவாதத்தை' வடிவமைக்கையில், சாங்கர் விளக்குகையில், நிர்வாகத்திற்குள் குறைந்தபட்சம் சிலராவது இந்த நடவடிக்கை ஒரு அணு ஆயுத போரைத் தூண்டக்கூடும் என்று நம்புவதாக விளக்கினார். சாங்கர் பின்வருமாறு எழுதினார்:

இந்த வாரம் தி நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், திரு. செலென்ஸ்கி, ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் வி.புட்டின் ஏற்கனவே போரைத் தீவிரப்படுத்திவிட்டார் என்று கூறினார். அணுவாயுதத்தைக் கட்டவிழ்த்து விடப் போவதாக விடுக்கும் மிரட்டலானது திரு.புட்டின் ஒருபோதும் நல்லெண்ணத்தை காட்ட முடியாது என்று அவர் அதைக் கருதினார்.

திரு. பைடெனும் அவரது சில உதவியாளர்களும் சந்தேகத்துடன் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஓராண்டாக, திரு. புட்டினிடம் இருந்து இன்னும் கடுமையான எதிர்வினையைக் கட்டவிழ்த்துவிடும் வகையில் சில சிவப்புக் கோடு இருப்பதாக அவர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர். அது எங்கே இருக்கிறது, அல்லது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெள்ளை மாளிகையானது, அமெரிக்க மக்களுக்குத் தெரியாமல், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியூட்டும் மற்றும் தொலைநோக்கு விளைவுகளுடன் கூடிய ஒரு நடவடிக்கையை தயார் செய்து வருகிறது.

Loading