நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்பும் என்று அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வியாழன் அன்று, உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரின் ஒரு பெரிய விரிவாக்கத்தில், அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி சார்லஸ் கியூ பிரவுன் நியூ யோர்க் டைம்ஸிடம் நேட்டோ இராணுவக் கூட்டணி கணிசமான எண்ணிக்கையிலான செயலூக்கமுள்ள நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்பும் என்று கூறியுள்ளார். இந்த படைக் குவிப்பு, “தவிர்க்க முடியாதது” என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சார்ல்ஸ் கியூ. பிரெளன் ஜூனியர். [AP Photo/Kevin Wolf]

நேட்டோ துருப்புகளை அனுப்புவது “தவிர்க்கவியலாதது” என்று வலியுறுத்துவதன் மூலம், முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது என்பதையும், பொதுமக்களுக்கு இந்த தீவிரத்தன்மையை எவ்வாறு சிறப்பாக அறிவிப்பது என்பதன் மீதான தீர்மானத்திற்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்பதையும் டைம்ஸ் பத்திரிகை அர்த்தப்படுத்துகிறது.

“மூன்றாம் உலகப் போருக்கு” இட்டுச் செல்லும் என்பதால் அதுபோன்றவொரு நகர்வை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் திட்டவட்டமாக நிராகரித்து அறிவித்த பின்னர், நேட்டோ உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பும் என்ற பிரௌனின் அறிக்கையானது ஒரு பாணியை தொடர்கிறது: அதாவது ஒவ்வொரு முறையும் வெள்ளை மாளிகை உக்ரேனில் அது ஏதோவொன்றைச் செய்யாது என்று கூறும், பின்னர் அதனையே அது செய்து வருகிறது.

ஜனாதிபதி ஜோ பைடென் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, உக்ரேனில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்களை அனுப்ப முடிவு செய்துள்ளது என்றும், இது போரின் பாரிய விரிவாக்கம் என்றும், இது ஒரு அணுவாயுத போருக்கு இட்டுச் செல்லும் அதிக நிகழ்தகவு உள்ளதால், அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். இது நடந்தால் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள்.

அமெரிக்க அரசாங்கமோ அல்லது அதில் எஞ்சியிருப்பதோ, நாட்டின் பெரும்பகுதி அழிக்கப்படுவதை எவ்வாறு கையாளும் என்பதையும் பைடென் விளக்க வேண்டும். நேட்டோவில் உக்ரேன் சேர்க்கப்படுவது ஏன் அதுபோன்றவொரு விளைவு அபாயத்தை நியாயப்படுத்துகிறது என்பதையும் அவர் தெளிவாக விளக்க வேண்டும்.

அனுப்பப்படும் துருப்புகள், போர் முன்னரங்கில் நிலைகொள்ளும் துருப்புகளாக சேவையாற்றுவதற்கு பதிலாக வெறுமனே உக்ரேனிய படைகளுக்கு “பயிற்சியளிப்பதாக” இருக்கும் என்ற வாதம் அர்த்தமற்றது. உக்ரேனுக்குள் நுழைந்ததும், அவை ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும், இது நேட்டோ படைகளால் ரஷ்ய விமானங்கள் மற்றும் வானிலிருந்து தரையில் உள்ள தளங்களுக்கு எதிராக நேரடி பதிலடிக்கு இட்டுச் செல்லும்.

டைம்ஸ் பத்திரிகை இதை தெளிவுபடுத்துகிறது: அதாவது “நேட்டோவின் ஒரு பாகமாக, பயிற்சியாளர்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிரான பாதுகாப்பில் உதவ, கூட்டணியின் உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா கடமைப்பட்டிருக்கும், இது அமெரிக்காவை போருக்குள் இழுத்துவிடும்.”

“இறுதியில்” மற்றும் “காலப்போக்கில்” முடிவு எடுக்கப்படும் என்ற பிரவுனின் கூற்று, அமெரிக்கத் துருப்புக்கள் மீதான நேரடித் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ள ஒரு நடவடிக்கையை, அமெரிக்காவின் முன்னணி இராணுவ அதிகாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார் என்ற உண்மையை முற்றிலும் மறைப்பதே நோக்கமாக உள்ளது.

உண்மையில், நேட்டோ போர் முயற்சியில் ஏதாவது குறை இருக்குமானால், அது அதற்கான நேரம்தான். டைம்ஸ் கட்டுரை இதனை ஒப்புக் கொள்கிறது, “உக்ரேனின் மனிதவள பற்றாக்குறை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, ரஷ்யா அதன் முன்னேற்றங்களை விரைவுபடுத்தியுள்ளதால், சமீபத்திய வாரங்களில் போர்க்களத்தில் உக்ரேனின் நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது,” என்று அறிவித்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “ரஷ்யாவை கடைசி உக்ரேனியர் இருக்கும் வரை எதிர்த்துப் போரிடுவது” என்ற அமெரிக்காவின் மூலோபாயம் தன்னைத்தானே விளையாடிக் கொண்டிருக்கிறது. மேலும் போர்முனையை வைத்திருக்க போதுமான உக்ரேனிய துருப்புகள் இனி எஞ்சியிருக்கவில்லை. உக்ரேனிய நிலைகளை மீட்கும் எந்தவொரு முயற்சிக்கும் வெறுமனே நேட்டோ “பயிற்சியாளர்களை” மட்டுமல்ல, மாறாக முன்னரங்கில் சண்டையிட செயலூக்கமான போர் படைகளையும் துரிதமாக நிலைநிறுத்துவது அவசியமாகும்.

உக்ரேனுக்குள் நேட்டோ நிலைநிறுத்தங்களுக்கான திட்டமிடல் ஏற்கனவே மிகவும் முன்னேறியுள்ளது என்பதை டைம்ஸே ஒப்புக் கொண்டுள்ளது. “கடந்த மாதம் நேட்டோ ஐரோப்பாவிற்கான அதிஉயர் கூட்டணி தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் ஜி. கவோலியை உக்ரேனுக்கு உதவ கூட்டணிக்கு ஒரு வழியைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டது” என்று அது தெரிவிக்கிறது.

அமெரிக்க கூட்டுப்படைத் தலைமைத் தளபதியின் அறிவிப்பானது, உக்ரேனுக்கு நேட்டோ துருப்புக்களை அனுப்புவது என்ற கருத்துருவை நெறிப்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கையில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. இதனை அனைத்து அமெரிக்க மற்றும் பிற நேட்டோ அரசியல்வாதிகளும் வாய்மொழியாக அறிவித்திருந்தனர்.

மக்ரோனும் பைடெனும் உக்ரேனுக்கு தரைப்படைகளை அனுப்ப மாட்டோம் என்று திட்டவட்டமாக உறுதியளித்த போதிலும், கடந்த பிப்ரவரியில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவது குறித்து நேட்டோ பரிசீலிக்க வேண்டும் என்று அறிவித்தார். சில வாரங்களுக்குள்ளாக, பிரான்ஸ், கனடா, லித்துவேனியா, நெதர்லாந்து மற்றும் போலந்தின் அதிகாரிகளும் மக்ரோனுடன் இணைந்து கொண்டனர். கடந்த வாரம், எஸ்தோனியாவில் இருந்து வந்த அதிகாரிகள் மக்ரோனின் இந்த அறிக்கைகளை எதிரொலித்தனர்.

இப்போது, ஒரு அமெரிக்க அதிகாரி மக்ரோனையும் விட ஒருபடி மேலே சென்று, நேட்டோ துருப்புகளை அனுப்புவது பரிசீலிக்கப்பட வேண்டும் என்று மட்டும் அறிவிக்கவில்லை, மாறாக அது “தவிர்க்கவியலாதது” என்றும் அறிவித்துள்ளார்.

உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான அமெரிக்க முடிவின் கவனமாக அரங்கேற்றப்பட்ட சித்தரிப்பானது, கவச வாகனங்கள், டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்புவதை அறிமுகப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதே வாசகத்தைப் பின்பற்றுகிறது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முதல் கட்டம் ஒரு திட்டவட்டமான மறுப்பாகும். மார்ச் 2022 இல், “நாங்கள் தாக்குதல் ஆயுத உபகரணங்களை அனுப்பப் போகிறோம், விமானங்கள் மற்றும் டாங்கிகள் மற்றும் ரயில்களை அமெரிக்க விமானிகள் மற்றும் அமெரிக்க பணியாளர்களுடன் அனுப்பப் போகிறோம் என்ற யோசனை—நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்களை நீங்களே கிண்டல் செய்யாதீர்கள், அது மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கப்படுகிறது” என்று பைடென் அறிவித்தார்.

ஜூன் 2022 இல், “நாங்கள் போருக்குள் நுழையவில்லை. … இதனால், தாக்குதல் விமானங்கள் அல்லது டாங்கிகள் உட்பட சில ஆயுதங்களை வழங்குவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது” என்று மக்ரோன் இந்த உணர்வுகளை எதிரொலித்தார்.

ஜனவரி 2023 க்குள், மக்ரோன் “பிரான்ஸ் இலகுரக யுத்த டாங்கிகளை வழங்கும் மற்றும் வான் பாதுகாப்பில் அதன் ஆதரவைத் தொடரும்” என்று அறிவித்தார், அதைத் தொடர்ந்து “அமெரிக்கா உக்ரேனுக்கு 31 ஆப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்பும்” என்று பைடென் அறிவித்தார்.

உக்ரேனுக்கு நீண்டதூரம் பாயும் ஆயுதங்களை அனுப்புவது மற்றும் கிரிமியா மற்றும் ரஷ்யாவின் பிற பகுதிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பது என்ற முடிவு இந்த எழுத்துவடிவில் மீண்டும் கூறப்பட்டது.

மே 2022 இல், பைடென், “உக்ரைன் அதன் எல்லைகளைத் தாண்டித் தாக்குவதை நாங்கள் ஊக்குவிக்கவோ அல்லது உதவவோ இல்லை” என்று அறிவித்தார். செப்டம்பர் 2022 இல், பைடென் “ரஷ்யாவைத் தாக்கும் ராக்கெட் அமைப்புகளை உக்ரேனுக்கு அனுப்பப் போவதில்லை” என்று அறிவித்தார்.

ஆனால் கடந்த மாதம், ரஷ்யா தனது சொந்தப் பிரதேசம் எனக் கூறும் கிரிமியாவைத் தாக்குவதற்கு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீண்ட தூர ATACMS ஏவுகணைகளை உக்ரேனுக்கு ரகசியமாக அனுப்பியதாக பைடென் நிர்வாகம் அறிவித்தது. இந்த மாதத் தொடக்கத்தில், பிரிட்டன் வெளியுறவு மந்திரி டேவிட் கேமரூன், ரஷ்ய பிராந்தியத்தின் எந்தப் பகுதியையும் தாக்க நேட்டோ வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனுக்கு “உரிமை” இருப்பதாக அறிவித்தார்.

உக்ரேனுக்கு அமெரிக்கா துருப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளது என்ற டைம்ஸின் அறிவிப்புக்கும் அப்பால், அக்கட்டுரை இன்னுமொரு அதிர்ச்சியூட்டும் ஒப்புதலையும் வழங்கியது: அதாவது, நேட்டோ நாடுகள் அனுப்பும் அதிநவீன ஆயுதங்களை சேவையில் ஈடுபடுத்த அமெரிக்கா ஏற்கனவே உக்ரேனுக்கு பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை அனுப்பியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களில் “ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள்” “பட்ரியோட் வான் பாதுகாப்பு போன்ற குறிப்பிட்ட ஆயுத அமைப்புமுறைகளில் வேலை செய்வதற்கு வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கீழ் ஏற்கனவே [உக்ரேனுக்கு] அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அக்கட்டுரை அறிவிக்கிறது.

உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க போரின் ஒரு முன்னணி சிற்பியான அலெக்சாண்டர் எஸ். விண்ட்மன் அறிவித்ததை அக்கட்டுரை மேற்கோளிடுகிறது, “உக்ரேனுக்கு ஏராளமான மேற்கத்திய உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம், ஆனால் அதைத் தக்கவைப்பதற்கான ஆதாரங்களை அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதில் நட்பு நாடுகளின் முறைகேட்டின் ஒரு கூறு உள்ளது” என்றார்.

கடந்த ஆண்டு, அமெரிக்கா உக்ரேனுக்கு எம்1 ஆப்ராம்ஸ் யுத்த டாங்கிகளை அனுப்புவதாக அறிவித்த போது, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது, “பைடெனின் அறிவிப்பின் முக்கியத்துவம் டாங்கிகளை நிலைநிறுத்துவதன் பின்விளைவுகளைக் காட்டிலும் அவற்றின் போர்க்கள தாக்கத்தில் குறைவாகவே உள்ளது.” இந்த ஆயுதங்களுக்கு “உக்ரேனுக்குள் பெரும் எண்ணிக்கையிலான நிபுணத்துவம் வாய்ந்த அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாரிய தளவாட வலையமைப்பு அவசியப்படும்” என்று நாங்கள் எச்சரித்தோம். இந்த விநியோக வலையமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் டாங்கிகளுக்கு சேவை செய்யும் அமெரிக்க சிப்பாய்கள் மீதான தாக்குதல்கள் பின்னர் “பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலத்தை” செயல்படுத்துவதற்கும் உக்ரேனில் அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகளை நிலைநிறுத்துவதற்கும் அழுத்தமளிக்க பயன்படுத்தப்படும்.”

உக்ரேனிய போர்முனை வீழ்ச்சியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ், இத்திட்டங்கள் கணிசமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடிப் போரை துரிதமாக தீவிரப்படுத்தும் அச்சுறுத்தலை உயர்த்தியுள்ளது.

Loading