பிரான்சில் வர்க்கப் போராட்டமும் போருக்கு எதிரான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.

சர்வதேச பாட்டாளி வர்க்க ஐக்கியத்திற்கான இந்தச் சர்வதேச மே தினப் பேரணிக்கு பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் சகோதரத்துவ வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 2024 இல், ஐரோப்பாவிலும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மூன்றாம் உலகப் போர் தொடங்குவதைத் தடுக்க ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கின்றனர்.

பெப்ரவரியில், பாரிஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு தனது துருப்புகளை அனுப்ப அச்சுறுத்தினார். நேட்டோவின் ஆக்கிரமிப்புக் கொள்கையானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏகாதிபத்தியம் ரஷ்ய மக்களை மட்டுமல்ல, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தையும், அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு போரைக் கொண்டு அச்சுறுத்துகிறது.

மக்ரோனும் அவரது நேட்டோ கூட்டாளிகளும் ஐரோப்பிய மக்களின் விருப்பத்தை மீறி தமது போரைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். பிரெஞ்சு மக்களில் 68 சதவிகிதத்தினர், ஜேர்மனியர்களில் 80 சதவிகிதத்தினர் மற்றும் போலந்து மக்களில் 90 சதவிகிதத்தினர் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவதை நிராகரிக்கின்றனர் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. ஆனால், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள வெகுஜன ஊடகங்கள், உக்ரேனில் தற்போதைய போர் போன்ற “அதி-தீவிர மோதல்களை” நடத்த ஒரு “போர்த் தொழில்துறையை” கட்டியெழுப்ப அழைப்பு விடுத்து வருகின்றன.

பிப்ரவரி 16, 2024 அன்று பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் நடந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, இடதுபக்கம், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கைகுலுக்கின்றனர். [AP Photo/Thibault Camus]

1914 மற்றும் 1939 இல் உலகப் போர்களின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே, முதலாளித்துவ அமைப்புமுறையானது ஒரு மரண நெருக்கடியினூடாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்களானது முகங்கொடுக்கும் சர்வதேச மற்றும் சமூக மோதல்களை எவ்வாறு தீர்ப்பது என்று தெரியாத, இனியும் தவிர்க்க முயற்சிக்காத ஒரு பேரழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.

2019 இல், மக்ரோன் பிரிட்டனின் எகனாமிஸ்ட் இதழுக்கு கூறுகையில், நேட்டோ சிரியாவில் ரஷ்யாவுடன் போர் அபாயத்தை எதிர்கொண்டதால் அது “மூளைச்சாவு அடைந்துவிட்டது” என்று தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டில், அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை வெர்சாய் அரண்மனைக்கு நட்புரீதியான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், இப்போது “மூளைச்சாவு அடைந்த” நிலையில் உள்ள மக்ரோன், ஐரோப்பாவின் முன்னணி போர்வெறியரின் பாத்திரத்தை வகிக்க விரும்புகிறார்.

சியோனிச ஆட்சியால் காஸாவில் நடத்தப்படுகின்ற இனப்படுகொலைக்கு நேட்டோவின் ஆதரவானது, மக்ரோனையும் அவரது கூட்டாளிகளையும் அம்பலப்படுத்துகிறது. பாரிஸ் ஏற்கனவே நூறு மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்களை 2012 இல் இருந்து இஸ்ரேலுக்கு விற்றுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையானது, நிராயுதபாணியான காஸா மக்கள் மீது குண்டுவீசியபோது, மக்ரோன் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதனியாகுவை அரவணைக்க இஸ்ரேலுக்குச் சென்றார். அவரை ஒரு “நண்பர்” என்று மக்ரோன் அழைத்தார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வலதுபுறம், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஜெருசலேமில் பேச்சுவார்த்தைக்கு முன் வரவேற்கிறார். செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24, 2023

மருத்துவமனைகள் அல்லது அகதி முகாம்களில் பத்தாயிரக் கணக்கான காஸா மக்கள் படுகொலை செய்யப்படுவதை ஊக்குவிப்பதன் மூலமாக, நேட்டோ வெறுமனே பாலஸ்தீனர்களை மட்டும் இலக்கில் வைக்கவில்லை. அதன் இலக்குகளானது லெபனான், சிரியா மற்றும் ஈரானுக்கும் அப்பால் விரிவடைகின்றன, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அவைகள் மீதும் குண்டுவீசி வருகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் உலகின் எஞ்சிய பகுதிகள் மீதும், அனைத்திற்கும் மேலாக சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் மீதும் போர் பிரகடனம் செய்கின்றன.

பாரிஸ், குறிப்பாக ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் இயக்கத்தின் மீது, சீற்றமடைந்துள்ளது, இது சாஹேலில் இருந்து அதன் துருப்புகளைத் திரும்பப் பெற நிர்பந்தித்துள்ளது. மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜரில் உள்ள இராணுவ சர்வாதிகாரங்கள், மக்கள் கோபத்தின் வெடிப்புக்கு அடிபணிந்து, பிரெஞ்சு இராணுவத்தைத் திரும்பப் பெறக் கோரி உள்ளன. பிரான்சுடன் கூட்டு சேர்ந்துள்ள ஆபிரிக்க அரசாங்கங்களின் படையெடுப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக, வாக்னர் படைக் குழுவில் இருந்து ரஷ்ய துருப்புகளை அவர்கள் அழைத்துள்ளனர்.

பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய மூலதனத்தின் முதலீடுகள் இன்னும் ஆபிரிக்க நிதியியலில் மேலாதிக்கம் செலுத்துகின்றன, அவை ஆபிரிக்காவை ரஷ்ய துருப்புக்களுக்கோ அல்லது சீன நுகர்வுப் பொருட்களுக்கோ விட்டுவிடாது. மக்ரோன் மாஸ்கோவை அச்சுறுத்துகிறார் என்றால், அதற்குக் காரணம் பிரெஞ்சு வங்கிகள் ரஷ்யாவின் ஆதார வளங்களையும், மேலும் அவற்றின் முன்னாள் ஆபிரிக்க “கொல்லைப்புறத்தையும்” கட்டுப்பாடின்றி சூறையாடுவதற்குக் கனவு காண்கின்றன.

உலகப் போர் மனிதயினத்தை அழிப்பதற்கு முன்பாக தொழிலாளர்களால் இந்த தீவிரப்பாட்டை தடுத்து நிறுத்த முடியும். ஒன்றிணைந்து, காஸாவில் இனப்படுகொலைக்கு உதவும் வகையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதை தடுக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஜனாதிபதிகள் அவர்களின் இராஜதந்திரத்தை மாற்றிக் கொள்ள அவர்களிற்கு முறையிடும் தேசியரீதியான நோக்கில், அல்லாமல், மாறாக போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டும் சர்வதேசரீதியிலான ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு பிரான்சில் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான இயக்கம் போன்ற சமீபத்திய வர்க்கப் போராட்டங்களின் அனுபவங்களில் இருந்து வளமான அரசியல் படிப்பினைகள் பிறக்கின்றன.

மக்களுக்கு எதிராக பகிரங்கமாக ஆட்சி செய்கின்ற மக்ரோன், இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கிற்காக பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை விடுவிக்க தனது வெட்டுக்களைத் திணித்தார். பிரெஞ்சு மக்களில் நான்கில் மூன்று பங்கினர் இந்த வெட்டுக்களை எதிர்த்தனர், ஆனால் அவர் ஒரு வாக்கெடுப்பும் இல்லாமல் பாராளுமன்றத்தில் அவற்றைத் திணித்தார். உள்நாட்டில் வர்க்கப் போரை நடத்துவதன் மூலமாக வெளிநாடுகளில் உலகப் போருக்குத் தயாரிப்பு செய்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தக்காரர்கள், மற்றும் பார்வையாளர்களையும் கூட தாக்குவதற்கு அவர் கலகம் ஒடுக்கும் பொலிஸை அனுப்பினார்.

தொழிலாள வர்க்கம் போராட விரும்பியது, ஆனால் மக்ரோன் அந்த இயக்கத்தை நெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளைச் சார்ந்திருந்தார். பிரெஞ்சு மக்களில் அறுபது சதவீதத்தினர் ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முடக்குவதை ஆதரிப்பதாக தெரிவித்தனர். ஆனால், தொழிற்சங்கத் தலைவர்கள் மக்ரோனைக் காப்பாற்றினர். “வன்முறை மட்டுமின்றி, மிக ஆழமான சமூக சீற்றத்துடனும் இந்த நாட்டைக் கைப்பற்றக்கூடிய பைத்தியக்காரத்தனம்” என்று அவர்கள் குறிப்பிட்டதைக் கண்டு அஞ்சிய அவர்கள், மேலதிக போராட்டங்களை தொடராமல் கைவிட்டனர்.

பிரான்சின் பாரிஸில் உள்ள The Panthéon முன் வெகுஜன ஆர்ப்பாட்டம்.

யதார்த்தத்தில், சமகால சமூகத்தின் பைத்தியக்காரத்தனம் தொழிலாளர்களின் கோபத்தில் இருந்து வரவில்லை, மாறாக முதலாளித்துவத்தின் பகுத்தறிவின்மையில் இருந்து வருகிறது. மக்ரோனுக்கு எதிரான இயக்கத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக, தொழிற்சங்கத் தலைவர்கள் இராணுவ விரிவாக்கத்துக்கு பாதை வகுத்துள்ளனர்.

இந்த இயக்கத்தின் அனுபவம் முன்வைக்கும் தீர்க்கமான கேள்வி இதுதான்: அதாவது ட்ரொட்ஸ்கிசப் போக்கு என்றால் என்ன?, அதாவது முதலாளித்துவம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டிற்கும் புரட்சிகர மாற்றீடு என்ன? அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும், பிரான்சில் அதனுடைய பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஆகும். ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான இயக்கத்தின் போது, சோசலிசத்திற்கான போராட்டத்தின் முதல் படியாக, மக்ரோனையும் அவரது பொலிஸ் அரசையும் வீழ்த்த தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (PES) அழைப்பு விடுத்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களுக்கு புரட்சிகரத் தலைமையை வழங்கும் என்று வாதிட்டு, 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்ட பப்லோவாதிகளின் வழித்தோன்றல்களின் நிலை என்னவாக இருந்தது?

பிரெஞ்சு பப்லோவாத இயக்கத்தின் மொரெனிச கன்னையான நிரந்தரப் புரட்சிக் (Révolution permanente) குழு, “நிலைமை புரட்சிகரமானதல்ல” என்று எழுதியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே “முதலாளித்துவ அதிகாரத்திற்கு ஒரு உண்மையான எதிர்-எடையை” கட்டியெழுப்புவதற்கு நிரந்தரப் புரட்சிக் குழு அழைப்பு விடுத்தது.

ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் ஒன்றியம் ஸ்ராலினிச பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை வெட்டுக்களை விமர்சித்து ஒரு கடிதத்துடன் ஜனாதிபதியின் எலிசே அரண்மனைக்கு அனுப்பியது. இந்த கையாலாகாத சைகை மெலோன்சோனின் பிற்போக்குத்தனமான அரசியல் அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஜனாதிபதித் தேர்தல்களில் 8 மில்லியன் வாக்குகளைப் பெற்ற பின்னர், அவர் அவர்களுடைய வாக்காளர்களுக்கு எந்தவொரு புரட்சிகர முறையீடுகளையும் செய்வதைத் தவிர்த்துக் கொண்டார். மக்ரோனின் கீழ் அல்லது ஒரு நவ-பாசிசவாத ஜனாதிபதி பதவியின் கீழ் அவர் பிரதம மந்திரியாக சேவையாற்றவிருப்பதாக அவர் அப்பட்டமாக தெரிவித்தார்.

ஜோன்-லூக் மெலோன்சோன், ஜூன் 10, 2022 வெள்ளிக்கிழமை, தெற்கு பிரான்சின் மார்சேயில் ஒரு உரை நிகழ்த்துகிறார் [AP Photo/Daniel Cole]

தொழிலாளர்களை முதலாளித்துவம் மற்றும் போருக்கு அடிபணிய வைக்கும் இந்த ஊழல் நிறைந்த அரசியல் சக்திகளுக்கு மூலோபாய மாற்றீடு என்ன? 1936 பொது வேலைநிறுத்தம் வெடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர், சூழ்நிலை புரட்சிகரமானதல்ல என்று வாதிட்ட ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

தொழிலாள வர்க்கக் கட்சிகளின் புரட்சிகரமற்ற கொள்கைகளை எடுத்துக்கொண்டால், சூழ்நிலை புரட்சிகரமானது, அது எவ்வளவு புரட்சிகரமானதாக இருக்க முடியுமோ அவ்வளவு புரட்சிகரமானது. இன்னும் சரியாகச் சொன்னால், நிலைமை புரட்சிக்கு முந்தையதாக இருக்கிறது. நிலைமையை அதன் முழு முதிர்ச்சிக்கு கொண்டு வருவதற்கு, சோசலிசத்தின் பெயரால் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற முழக்கத்தின் கீழ், வெகுஜனங்களின் ஒரு உடனடி, தீவிரமான, இடைவிடாத அணிதிரட்டல் இருக்க வேண்டும். …

தற்போது, ‘புரட்சிகரமல்லாத நிலைமை’ என்ற சொற்றொடரின் புனிதமான முணுமுணுப்புகள் செய்யக்கூடியதெல்லாம் தொழிலாளர்களின் மனங்களை நசுக்கி, அவர்களின் விருப்பத்தை முடக்கி, அவர்களை வர்க்க எதிரியிடம் ஒப்படைப்பதுதான்.

இந்த பகுப்பாய்வானது, ஒன்பது தசாப்தங்களுக்குப் பின்னரும், இன்றைய புறநிலைரீதியிலான புரட்சிகர நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான பாதை இதுவேயாகும்.

Loading