மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மார்ச் 14-17ம் திகதிகளில் நடைபெற்ற, ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில், 2000 ஆண்டில் முதன்முதலில் ஜனாதிபதியான விளாடிமிர் புடின், எதிர்பார்த்த படி, ஐந்தாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ், இறுதியில், புட்டின் ஆட்சியின் நடவடிக்கைகளை ஆதரிப்பவராக இருப்பதோடு, ஏகாதிபத்தியத்துடனான கொடுக்கல் வாங்கலுக்கு மிகவும் வெளிப்படையாகவும், சத்தமாகவும் வாதிடுவதில் புடினிடமிருந்து சிறிதே வேறுபட்டார். மற்ற வேட்பாளர்கள் புட்டினுடன் பெரிய வேறுபாடுகள் எதையும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய கூட்டமைப்பின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CPRF) வேட்பாளரான நிகோலாய் கரிடோனோவ், ஒரு பழைய கோமாளி பொம்மையாக இருந்தார். அவருடைய வேட்புமனு ஆரம்பத்திலிருந்தே தெளிவாக்கியது என்னவென்றால், கால் நூற்றாண்டு கால புடின் ஆட்சியின் முக்கிய தூணாக விளங்கிய CPRF, புடினின் வெற்றியை தங்களுடைய வெற்றியாக வரவேற்கும் என்பதாகும். ரஷ்யாவின் அரை-பாசிச லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDPR) வேட்பாளரான லியோனிட் ஸ்லட்ஸ்கி, புடினின் ஆட்சியின் பிரதான பாசிச கோமாளியாக மட்டுமே இருந்த மறைந்த விளாடிமிர் ஷிரினோவ்ஸ்கியின் மங்கலான நிழலாக இருந்தார். நேட்டோ ஆதரவு எதிர்கட்சியின் வேட்பாளரான போரிஸ் நடேஷ்டின் போட்டியிடுவது தடுக்கப்பட்டது.
உக்ரேனில், ரஷ்யாவிற்கு எதிராக அதிகரித்து வரும் நேட்டோ பினாமி யுத்தத்தால் தேர்தல்களின் முக்கியத்துவம் குறைத்து காட்டப்படுகிறது. ஒரு மாதத்திற்குள், உக்ரேனுக்கு துருப்புக்களை நேரடியாக அனுப்புவது குறித்து நேட்டோ கலந்துரையாடி வருவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். கடந்த ஆண்டு எந்த பலன்களும் இல்லாமல், பெரும் இழப்புகளைச் சந்தித்த உக்ரேனிய இராணுவத்தின் மீதான எதிர்த்தாக்குதலின் பேரழிவுகரமான சரிவுக்குப் பிறகு, நேட்டோவிற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது. இந்த பயங்கரமான சகோதர யுத்தத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் 400,000 உக்ரேனியர்கள் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ரஷ்யர்களிடையே இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 100,000 க்கும் அதிகமாக இருக்கலாம்.
நேட்டோ, இந்த தேர்தலுக்கு முன்னும் பின்னும் சில நாட்களில், ரஷ்ய பிரதேசத்தின் மீது, அதன் தாக்குதலை தீவிரப்படுத்தி, குறைந்தபட்சம் ஐந்து பேரைக் கொன்றதுடன் டஜன் கணக்கானவர்களை காயப்படுத்தியது. தொடர் தாக்குதல்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமை முதல் பெல்கொரோட் எல்லைப் பகுதியில் உள்ள பாடசாலைகளையும் வணிக வளாகங்களையும் மூட வேண்டியிருந்தது. சனிக்கிழமையன்று, உக்ரைனில் உள்ள கியேவ் ஆட்சியுடன் இணைந்த நவ-நாஜிப் படைகள் மற்றும் நேட்டோ படைகள் ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவலைத் தொடங்கின. இந்த நடவடிக்கை இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தின் மீது நாஜி படையெடுப்பிற்குப் பின்னர், ஒரு வெளிநாடு, ரஷ்ய மண்ணில் டாங்கிகளை முதன்முதலில் நிலைநிறுத்தியுள்ளதை காட்டுகிறது. அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிரதான ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸ், இந்த பாசிஸ்டுகளை அவர்களின் “தைரியமான தாக்குதல்களுக்காக” “கிளர்ச்சிக்கார ரஷ்யர்கள்” என்று போற்றியது.
நேட்டோ-சார்பு ஊடகங்களில் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு இதேபோன்று போர் வெறிமிக்கதாக இருந்தது. ஏகாதிபத்திய சக்திகள் விளாடிமிர் புட்டினின் தொடர்ச்சியான ஆட்சியை சகித்துக் கொள்ளாமல் மேலும் அவர்களின் ஆட்சி மாற்ற முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்பதை தெளிவுபடுத்தும் வகையில், பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் “புடினுக்கு ஐந்தாவது பதவிக்காலம்” “ஐரோப்பாவிற்கும் உலகிற்கும் அச்சுறுத்தல்” என்று விவரித்தது.
நேட்டோவின் அசாதாரணமான ஆக்கிரோஷ பிரச்சாரத்துடன் ஒப்பிடுகையில், நேட்டோ ஆதரவுப் படைகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஊடுருவல்களுக்கு புடினின் பிரதிபலிப்பு குறிப்பிடத்தக்க வகையில் மந்தமாக உள்ளது. பெப்ரவரி தொடக்கத்தில், ரஷ்யாவில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட அமெரிக்காவின் தீவிர வலதுசாரி ஊடக ஆளுமை, டுக்கர் கார்ல்சன் உடனான தனது நேர்காணலின்போது புடின், நேட்டோ நாடுகளின் ஆளும் உயரடுக்குகளிடம் “சமாதான சகவாழ்வுக்காக” வேண்டுகோள் விடுப்பதில் கிட்டத்தட்ட முழு கவனத்தையும் செலுத்தினார். பெப்ரவரி 29 அன்று தேசிய சட்ட சபையில் ஆற்றிய ஒரு நீண்ட உரையில், புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தனது அச்சுறுத்தலை மீண்டும் வலியுறுத்திய போதிலும், நேட்டோ தனது துருப்புக்களை நேரடியாக உக்ரேனுக்கு அனுப்பும் அச்சுறுத்தலைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பை மட்டுமே தெரிவித்தார். அவர் மீண்டும் ஏகாதிபத்திய சக்திகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
நேட்டோவின் மற்றும் புட்டினின் அச்சுறுத்தல்களை வெற்று வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள முடியாது. ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் தீவிரமடைந்து விரிவடைந்து வருவது, முன்னாள் சோவியத் ஒன்றிய மற்றும் முழு உலகத் தொழிலாளர்களுக்கும் உயிர் வாழ்வு சம்பந்தமான அச்சுறுத்தலை முன்வைக்கிறது. ஏகாதிபத்தியம் முன்வைக்கும் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுவதோ, அல்லது ஆளும் தன்னலக் குழுக்களில் ஏதாவதொரு பிரிவால் அணுசக்தி பேரழிவை முன்கூட்டியே தடுக்க முடியும் என்று நம்புவதைப் போன்ற ஆபத்தானது வேறு எதுவுமில்லை.
புட்டின் ஆட்சி: தன்னல ஆளும் கும்பலின் பொனபார்ட்டிச ஆட்சி
ரஷ்ய அரசியலின் தற்போதைய நிலைமையையும் உக்ரேனில் நடைபெறும் போரையும் பற்றி புரிந்துகொள்வதற்கான அடிப்படை, கடந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளிலேயே தங்கியுள்ளது. 1917 அக்டோபர் புரட்சியில் அடையப்பெற்றவற்றை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததன் உச்சக்கட்ட விளைவாக, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் அழிக்கப்பட்டமை, ரஷ்ய கூட்டமைப்பு உட்பட 15 தேசிய முதலாளித்துவ அரசுகளின் தோற்றத்துக்கு வழிவகுத்த நிகழ்வாகியது.
ரஷ்ய தன்னல கும்பல் அதன் பிரசவ வேதனையுடன் ஒரு வளமான ஜனநாயக ரஷ்யா பற்றிய முழக்கங்களுடனும் ஏகாதிபத்தியம் பற்றிய சமாதானவாத மாயைகளுடனும் இருந்தது. அதே நேரத்தில், ஏகாதிபத்தியத்தின் தன்மை பற்றி “போல்ஷிவிக்குகளின் தவறான நம்பிக்கைகள்” என்று அது அழைத்ததை கண்டனம் செய்தது. ஆனால் முதலாளித்துவ மறுசீரமைப்பின் பேரழிவுகரமான முடிவுகள், லியோன் ட்ரொட்ஸ்கியின் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி (1936) புத்தகத்திலும் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 1986-1991ல் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியின் போது தலையிட்டதிலும் விடுக்கப்பட்ட அனைத்து எச்சரிக்கைகளையும் முழுமையாக உறுதிப்படுத்தியது.
வெகுஜனங்கள், ரஷ்ய முதலாளித்துவத்தின் அடுத்த 33 ஆண்டுகளில் செழிப்பு, ஜனநாயகம் மற்றும் அமைதிக்கு மாறாக, மேலும் ஒடுக்குமுறை, வானளாவ உயர்ந்த சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகார ஆட்சியையுமே பெற்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பானது உலகம் முழுவதும் ஏகாதிபத்திய வன்முறையின் வெடிப்பின் தொடக்கத்தைக் குறித்ததுடன் முழு முன்னாள் சோவியத் ஒன்றியத்தையும் ஏகாதிபத்தியத்தின் வளர்ந்து வரும் தாக்குதலுக்குத் திறந்து விட்டதுடன், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான வெளிப்படையான போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
இந்த நிலைமைகளின் கீழ் தான், புட்டின் ஆட்சி தன்னலக் குழுவின் நலன்களைப் பாதுகாக்கின்ற, ஒரு பொனபார்ட்டிச ஆட்சியாக உருவானது. லியோன் ட்ரொட்ஸ்கி தனது காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலில் விளக்கியது போல்:
இரண்டு முகாம்களின் கூர்மையான போராட்டத்தின் போது, வரலாற்றின் அத்தகைய தருணங்களில் பொனபாடிசம் களத்தில் இறங்கி, குறிப்பாக சொல்வதெனில், தேசத்துக்கு மேலாக அரச அதிகாரத்தை உயர்த்தி, வெளிப்படையாக வர்க்கத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக இருப்பதாக காட்டிக்கொள்கின்ற போதிலும், உண்மையில், அது சலுகைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சுதந்திரத்தை மட்டுமே வழங்குகிறது… பொனபார்டிசம் என்பது முதலாளித்துவ ஆட்சியின் முக்கியமான காலகட்டத்தில் அதன் அரசியல் ஆயுதங்களில் ஒன்றாகும்.
ட்ரொட்ஸ்கி தொடர்ந்தார்:
வரலாறு சாட்சியமளிப்பது போல, போனபார்டிசம் ஒரு உலகளாவிய, மற்றும் ஒரு இரகசிய வாக்குச்சீட்டுடன் கூடவே வியக்கத்தக்க வகையில் இணைந்து செல்கிறது. பொனபார்டிசத்தின் சம்பிரதாய பூர்வமான ஜனநாயகம் என்பது சர்வஜன வாக்கெடுப்பாகும். அவ்வப்போது, தலைவருக்கு ஆதரவா அல்லது எதிரா என்ற கேள்வியை பிரஜைகள் முன் வைக்கின்றது. மேலும் வாக்காளர் தனது தோள்களுக்கு இடையே ஒரு துப்பாக்கி குழாய் இருப்பதை உணர்கிறார்.
அதன் வரலாற்று தோற்றம் மற்றும் சமூக செயல்பாட்டில், புட்டின் ஆட்சி முதலாவதாக, தன்னலக் குழுக்களின் சலுகைகளின் பாதுகாப்பளானாக தோன்றி செயல்பட்டு வருகிறது. முதலாளித்துவத்தின் மறு ஸ்தாபிதம், ஜனத்தொகையின் பரந்த வெகுஜனங்களை அசாதாரணமான ஏழ்மை நிலைக்குள் தள்ளிய அதே நேரம், உளவுத்துறை, இரகசிய சேவை, KGB, ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் வெளிப்படையான குற்றவாளிகள் உட்பட முன்னாள் அதிகாரத்துவத்திலிருந்து சேர்க்கப்பட்ட தன்னலக் குழுக்களின் ஒரு சிறிய கும்பல் நம்ப முடியாத செல்வத்தை குவித்தது. புட்டின் தொடர்ந்து சமூக அமைதியின்மைக்கு வேண்டுகோள் விடுக்க முயல்வதோடு தன்னை ஒரு வெகுஜனங்களின் மனிதனாக காட்டிக் கொள்கின்ற போதிலும், அவரது ஆட்சியின் கீழ் சமூக சமத்துவமின்மை உண்மையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
2000 ஆம் ஆண்டில் புடின் முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தபோது, ஃபோர்ப்ஸ் பட்டியலில் ஒரு ரஷ்ய கோடீஸ்வரர் கூட இல்லை. 2023 இல், 83 பேர் இருந்தனர். உக்ரேனில் போர் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, 2021 இல், 500 தன்னலக்குழுவினர் மக்கள் தொகையில் 99.8 சதவீதத்தை விட அதிகமான செல்வத்தைக் கட்டுப்படுத்தினர் – இது 640 பில்லியன் டொலர், அல்லது மொத்த குடும்பங்களின் செல்வத்தில் 40 சதவீதம் ஆகும். இந்த சமூக வர்க்கத்திற்காகத்தான் புட்டின் ஆட்சி ஏகாதிபத்திய சக்திகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அதன் தொடர்ச்சியான மற்றும் அவநம்பிக்கையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
ரஷ்ய தன்னலக்குழுவின் நிலைப்பாட்டில் இருந்து, ஒரு பொனபார்ட்டிச நபராக புடினின் சமூக மற்றும் அரசியல் செயல்பாடு, அவர் முதலில் தொழிலாள வர்க்கத்திற்கும் தன்னலக்குழுவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதில் அடங்கியுள்ளது; இரண்டாவதாக, தன்னலக்குழுவின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே; மூன்றாவது, தன்னலக்குழுவின் தேசிய மற்றும் பொருளாதார நலன்களுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கும் இடையிலுமாகும். எந்த ஒரு பொனபார்ட்டிச ஆட்சியைப் போலவே, புட்டின் ஆட்சியும் ஒரு ஆழமான நிலையற்ற நெருக்கடியான ஆட்சியாகும். அது தவிர்க்க முடியாமல் ஆற்றொணா நிலையில் மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் அதே வர்க்கம், அரசியல் மற்றும் சர்வதேச முரண்பாடுகளால் வெடித்து சிதறும்.
ஏகாதிபத்தியம் மற்றும் “பன்முனை அதிகாரத்துக்குமான” புடினின் அழைப்புகள் முட்டுச்சந்தில்
வரலாற்று ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், புட்டின் ஆட்சியும், தன்னலக்குழுவும் ஒட்டுமொத்தமாக ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெற்றதில்லை. சோவியத் யூனியனை அழிப்பதில், முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினர் அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்து வேலை செய்தனர்.
அத்துடன், அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் புடினை ஒரு “எதேச்சதிகாரி” என்று தொடர்ந்து விமர்சிக்கும் அதே வேளை, உண்மை என்னவென்றால், 2000 ஆம் ஆண்டில் அவர் முதல் தடவையாக ஜனாதிபதியாவது குறித்து பொரிஸ் யெல்ட்சினுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே மூடிய கதவுகளுக்குப் பின்னால் பில் கிளிண்டனின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. புடின் “தேர்தலில் வெற்றி பெறுவார்” என்று முன்கூட்டியே யெல்ட்சின் கிளிண்டனினிடம் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியாக தனது முதல் பதவிக்காலத்தில், புடின் ஏகாதிபத்திய சக்திகளிடம் ஒத்துழைப்பிற்கு விண்ணப்பிக்க பின்னோக்கி வளைந்ததோடு, தனது சொந்த ஒப்புதலின் மூலம் நேட்டோவில் ரஷ்யாவை அனுமதிக்க முயன்றார். ஆனால் தன்னலக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எதுவும் ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தளவில் போதுமானதாக இருக்கவில்லை. தீர்க்க முடியாத சர்வதேச நெருக்கடிகளால் உந்தப்பட்டு, ஏகாதிபத்திய சக்திகள் முழு பிராந்தியத்தையும் அதன் முழுமையான மற்றும் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு குறைவாக வேறெதையும் விரும்பவில்லை.
டக்கர் கார்ல்சனுடனான அவரது சமீபத்திய நேர்காணலில், கடந்த 25 ஆண்டுகளில் ஏகாதிபத்தியத்தை நோக்கிய அவரது முழு வெளியுறவுக் கொள்கையும் முற்றிலும் தோல்வியடைந்ததாக புட்டின் நடைமுறையில் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், புடின் இந்த நோக்குநிலையை இரட்டிப்பாக்கியதை மட்டுமே செய்ததோடு மேற்கு நாடுகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன என்று தனக்கு “புரியவில்லை” என்று தொடர்ந்து மீண்டும் கூறினார். நேர்காணல் பற்றிய எங்கள் அறிக்கையில் நாங்கள விளக்கியது போல், முன்னாள் KGB அதிகாரிக்கு ஏகாதிபத்தியத்தின் இயல்பை “புரிந்துகொள்ள” இயலாமை என்பது தன்னலக்குழுவின் வரலாற்று தோற்றம் மற்றும் முழு சமூகக் கண்ணோட்டத்தில் வேரூன்றியுள்ளது.
ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான அதன் முயற்சிகளுடன், ரஷ்ய தன்னலக்குழு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் “சமாதான சகவாழ்வு” பற்றிய பிற்போக்கு கருத்தை பிரதிபலிக்கிறது. அக்டோபர் புரட்சியில் சோவியத் ஒன்றியத்தின் புரட்சிகர மற்றும் சர்வதேசிய அடித்தளங்களை காட்டிக்கொடுத்ததில், ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை காண முயன்ற அதிகாரத்துவம், எல்லா இடங்களிலும் புரட்சிகர இயக்கங்களின் கழுத்தை நெரித்தது,
இந்த பாரம்பரியத்தில் இருந்து தான் புடின் ஆட்சியின் “பன்முனை” உலக ஒழுங்கை மேம்படுத்துவது உருவாகிறது. ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் தோன்றுவதையிட்டு மட்டுமே அஞ்சிய கிரெம்ளின், ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு எதிர் எடையை உருவாக்கி பேச்சுவார்த்தை மேசையில் பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதற்காக மட்டுமே எல்லா இடங்களிலும் உள்ள தேசியவாத ஆட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த முன்னோக்கு சாத்தியமற்றதும் திவாலானதும் மட்டுமன்றி, பல போர்களையும் ஏற்படுத்துகிறது. 2023 இல் WSWS மற்றும் ICFI இன் சர்வதேச மே தினக் கூட்டத்தில் டேவிட் நோர்த் கூறியது போல்,
“பன்முனை” உலகத்தை அடைய வேண்டுமாயின் தனது தவறான தத்துவார்த்த அடித்தளங்களை ஒதுக்கி வைத்து விட்டு இன்றைய மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா அதை சமாதான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு யதார்த்தமான வாய்ப்பு அல்ல. “ஒருமுனை” மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலைத் தடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா அனைத்து வழிகளிலும் எதிர்க்கும். எனவே, “ஒருமுனை” என்பதை “பன்முனை” உலகமாக மாற்றுவதற்கான கற்பனாவாத முயற்சி அதன் சொந்த திரிக்கப்பட்ட தர்க்கத்தால், மூன்றாம் உலகப் போருக்கும், கிரகத்தின் அழிவுக்கும் இட்டுச் செல்கிறது.
ரஷ்ய தன்னலக்குழுவில் உள்ள நேட்டோ ஆதரவு எதிர்த் தரப்பின் பிற்போக்குப் பண்பு
போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பானது பொரிஸ் நடேஷ்டின், மைக்கல் கோடர்கோவ்ஸ்கி, மறைந்த அலெக்ஸி நவல்னி மற்றும் அவரது விதவை யூலியா நவல்னாயா போன்ற சக்திகளை நேட்டோ சார்பு ஊடகங்கள் மற்றும் போலி இடதுகள் “சமாதானத்திற்காக” நிற்கும் புடினுக்கு ஒரு “ஜனநாயக” மாற்றாக ஊக்குவிப்பதை நிராகரிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களுக்காக அன்றி, ரஷ்ய தன்னலக்குழுவின் பிரிவுகள், அரசு எந்திரம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகின்ற இந்த நபர்கள், ஏகாதிபத்தியத்தால் அப்பிராந்தியம் கூறு போடப்படுவது தங்களின் சொந்த செழுமைப்படுத்தலுக்கு மேலும் அடிப்படையாக இருக்கும் என்று கருதுகின்றனர். இந்த சமூக மற்றும் அரசியல் தொகுதியின் மூலம் தான் ஏகாதிபத்திய சக்திகள் புட்டின் ஆட்சியைத் தூக்கி எறிந்து, அதற்குப் பதிலாக ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மை ஆட்சியைக் கொண்டுவர முற்படுகின்றன.
தேர்தல்களுக்காக, இந்த “எதிர்ப்பாளர்கள்” ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்தில் “புடினுக்கு எதிரான மத்தியானம்” என்றழைக்கப்படும் நிகழ்வாக வாக்குச் சாவடிக்கு வந்து, பின்னர் செல்லாத வாக்குகளை போடும்படி மக்களை அழைத்தனர். இந்த அழைப்பு ரஷ்ய சோசலிச இயக்கம் எனப்படுவதின் பப்லோவாதிகள் மற்றும் பிற போலி-இடது சக்திகளால் ஆதரிக்கப்பட்டது. அத்தகைய முறைகளை நாங்கள் மறுக்கிறோம். “புடினுக்கு எதிரான மதியம்” போன்ற நடவடிக்கைகள் மக்களை கைது செய்வதற்கும் பிற வகையான அரச அடக்குமுறைகளுக்கும் மட்டுமே உதவும். நேட்டோவின் போர் பிரச்சார இயந்திரத்திற்கு தேவையானவற்றை வழங்கும் அதே வேளை, தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியூட்டவோ அவர்களை அணிதிரட்டவோ எதுவும் செய்யவில்லை. இது “தாராளவாத எதிர்ப்பு” என்று அழைக்கப்படுவதன் பிற்போக்கு இலக்குகள் மற்றும் சமூக அடித்தளத்தை ஒத்திருக்கிறது.
“சமாதானம்” மற்றும் “ஜனநாயகம்” பற்றிய அவர்களின் கூக்குரல் எதுவாக இருந்தாலும், எதிர்க்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைத்திட்டம் மற்றும் சமூக சக்திகள் “சமாதானம்” அல்ல, மாறாக போரை உள்ளடக்கியதாகும்: ஏகாதிபத்தியத்தின் கைகளாலும், பாசிச சக்திகளின் உதவியுடனும் முழு பிராந்தியத்தையும் வன்முறையில் சிதைப்பதாகும். பல ஆண்டுகளாக பாசிச மற்றும் பிரிவினைவாத போக்குகளுடன் உறவுகளைப் பேணி வந்த அவரது இறந்த கணவரான நவல்னியைப் போலவே, நவல்நயாவும் ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலியாக உள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலுக்கு தலைமை தாங்கிய மற்றும் சியோனிச ஆட்சியால் காசாவில் பாலஸ்தீனிய மக்களின் இனப்படுகொலைக்கு நிதியுதவி செய்யும் பைடென் நிர்வாகத்தால் அவர் வெளிப்படையாக ஆதரிக்கப்படுகிறார்.
“புடினுக்கு எதிரான மத்தியானம்” நடவடிக்கையை ஆதரித்த கோடர்கோவ்ஸ்கி, ரஷ்யாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், 2003ல் புடினால் சிறையில் அடைக்கப்படும் வரை ரஷ்ய எண்ணெய் வளங்களின் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவராகவும் இருந்தார். மறைந்த நவல்னியைப் போலவே, கோடர்கோவ்ஸ்கியும் பிராந்தியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரிக்கிறார். சிறிய-துண்டு அரசுகளை அமைப்பதன் மூலமும் ஏகாதிபத்திய சக்திகளுடன் அதிக நேரடி உறவுகளை ஏற்படுத்துவதன் மூலமும் ரஷ்யாவின் பரந்த வளங்களின் மீது நேரடிக் கட்டுப்பாட்டைப் பெற முடியும் என்று நம்பும் உள்ளூர் உயரடுக்கின் நலன்களுக்காகவும் அவர்கள் பேசுகின்றனர். நேட்டோ-ஆதரவு எதிர்க்கட்சியில் உள்ள இலியா பொனோமரியோவ் போன்ற மற்ற நபர்கள் ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவல்களில் ஈடுபட்டுள்ள நவ-நாஜி துணை இராணுவப் படைகளுடன் நேரடி உறவுகளைக் கொண்டுள்ளனர்.
இந்த பிற்போக்கு பிரமுகர்கள் மற்றும் அவர்களின் “புடினுக்கு எதிரான மத்தியானம்” என்பவற்றின் அரசியலுக்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக ரஷ்ய சோசலிஸ்ட் இயக்கத்தின் பப்லோவாதிகள் மற்றும் பிற போலி-இடது சக்திகள் தம்மைத் தாமே ஏகாதிபத்தியத்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களாக காட்டிக் கொள்கின்றனர். புட்டின் ஆட்சிக்கும் உக்ரேனில் போருக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம், முற்றிலும் வேறுபட்ட பாதையில் தொடர வேண்டும்:
வர்க்கப் போராட்டத்தின் தர்க்கம்
1917 போல்ஷிவிக் புரட்சியின் பயங்கர தோற்றம் தன்னலக்குழுவின் அனைத்து பிரிவுகளையும் அச்சுறுத்துகிறது. அவர்கள் வேறு எதையும் விட முதல் உலகப் போரைப் போலவே உக்ரேனில் நடக்கும் போரும் இறுதியில் வெகுஜனங்களின் புரட்சிகர இயக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதையிட்டே பீதியடைந்துள்ளனர். இதுவே தான் விளாடிமிர் புடினின் நிலைப்பாடாகவும் அதே அளவில் தன்னலக்குழுவிலுள்ள அவரது நேட்டோ ஆதரவுடைய எதிரிகளதும் அரசு எந்திரத்தினதும் நிலைப்பாடாகவும் இருக்கிறது.
உக்ரேனில் நேரடி நேட்டோ தலையீட்டின் வாய்ப்புகள் குறித்து புடின் கூட்டாட்சி சட்டமன்றத்தில் தனது நீண்ட சாதனை உரையில் மேலோட்டமாக மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தாலும், அவர் “வெகுஜனங்களுக்கும் வணிகங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதை” இலக்காகக் கொண்டிருக்கக் ஐந்து தேசிய திட்டங்கள் மற்றும் டசின் கணக்கான நடவடிக்கைகள் பற்றி நீண்ட நேரம் பேசினார். 2030க்குள் தேசிய திட்டங்களுக்கான செலவு 8 முதல் 15 டிரில்லியன் ரூபிள் வரையானதாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். இதன் பொருள் அரசு வரவுசெலவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 1.4 முதல் 2.5 டிரில்லியன் ரூபிள் வரை கூடுதல் சுமையாகும். புடின் இந்த திட்டங்களுக்கு எவ்வாறு நிதியளிக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ரஷ்யா ஏற்கனவே வரவுசெலவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
2021 உடன் ஒப்பிடும்போது ரஷ்யாவின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரிக்கவுள்ளது என்பதையும், முதன்முறையாக சமூக செலவினங்களை விட பெரியதாக இருக்கும் என்பதையும் நினைவு கூருவோம். அத்தகைய இராணுவ செலவினங்களைத் தக்கவைக்க, புட்டினின் ஆட்சி தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்களின் ஏற்கனவே மோசமான சமூக நிலைமைகள் மீது ஒரு தாக்குதலைத் தொடங்கும். இது அடிநிலையில் உருவாகியுள்ள குறிப்பிடத்தக்க சமூக பதட்டங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 2023 இன் இரண்டாம் பாதியில், 10.2 சதவீத ரஷ்யர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். உதாரணமாக, அவர்களின் வருமானம் 14,000 ரூபிளுக்கு (சுமார் $155) மேல் இல்லை. இவர்கள் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 15 மில்லியன் பேர் ஆவர். அதற்கு மேல், ரஷ்யர்கள் இப்போது விலை உயர்வுகளின் புதிய அலையை எதிர்கொள்வதுடன், மேலும் நுகர்வோர் கடன்களில் ரஷ்யர்களின் மொத்த கடன் அதிகரித்து வருகிறது. ஜூலை 2023 நிலவரப்படி, இது 32 டிரில்லியன் ரூபிள் ($353 பில்லியனுக்கு மேல்) ஆகும். 2022 ஜூலைக்கும் 2023 ஜூலைக்கும் இடையில் கடனாளி குடும்பங்களின் தொகையும் வளரத் தொடங்கி 19.4 சதவீதத்தில் இருந்து 21.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், புட்டினின் சொந்த ஒப்புதலின் மூலம், பெருநிறுவன இலாபம் 24 சதவீதத்தால் உயர்ந்ததுடன் வங்கித் துறை, 2023 இல், 3 டிரில்லியன் ரூபிளுக்கு ($33 பில்லியன்) மேல் ஈட்டியுள்ளது.
ரஷ்யாவில் சமூக சமத்துவமின்மை 1995ல் இருந்து மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 2021 இல், 1 சதவீதமான ரஷ்ய அதி செல்வந்த குடும்பங்கள் நிகர குடும்பச் செல்வத்தில் 47.6 சதவீதத்தைக் கொண்டிருந்தன. அதே நேரம், ஏழ்மையான 50 சதவீத குடும்பங்கள் 3.1 சதவீதத்தை மட்டுமே வைத்திருந்தனர். இந்த நிலை பெரும் சமூக வெடிப்புக்கு வித்திடுகிறது.
ரஷ்யாவில் வர்க்கப் போராட்டம் ஒரு வெற்றிடத்தில் உருவாகவில்லை. சர்வதேச அளவில், குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய மையங்களிலும், அதே போல் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியின் தொடக்கத்தை நாம் கண்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஏகாதிபத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு இயக்கம் தோற்றம் பெறுவது, ரஷ்யாவிலும் உக்ரைனிலும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் மீது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
இச்சூழலில், ரஷ்யாவிலும், சர்வதேச அளவிலும், தீவிர வலதுசாரிகளுக்கு புட்டின் மிகவும் வெளிப்படையாக அழைப்புவிடுப்பது குறித்து தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும். ஒரு வலது சாரி நபராக பிரசித்திபெற்ற டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் மக்கள் பேரவையின் தலைவரான ஆர்டியோம் ஸ்கோகாவின் “கோரிக்கைக்கு” பதிலளிக்கும் விதமாக, டிசம்பர் 8 அன்று புடின் தனது வேட்புமனுவை அறிவித்தார். ஸ்கோகா, ஷ்ய ஏகாதிபத்திய கொடியையும் மற்றும் அதன் முத்திரையில் எஸ்.எஸ். சின்னத்தை ஒத்த மின்னல் வெளிச்சத்தையும் கொண்டுள்ள ஸ்பார்டா படையணியின் தளபதியும் ஆவார்,
ரஷ்யாவில் தீவிர வலதுசாரி, எதிர்ப்புரட்சி மற்றும் யூத எதிர்ப்பு போக்குகளின் அரணாக, வரலாற்று ரீதியாக வெளிப்பட்ட வைதீக ரஷ்ய திருச்சபையை, “மக்களின் ஆன்மீகத்தை அதிகரிப்பதற்கான” மதச்சார்பற்ற நிறுவனங்களாக ஒருங்கிணைக்க கிரெம்ளின் பெருகிய முறையில் ஆதரவளித்து வருகிறது. மேலும், புடின் கருக்கலைப்பு எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இயக்கத்தை பகிரங்கமாக ஆதரித்துள்ளார். தீவிர தேசியவாதத்தை ஊக்குவிப்பதும் தீவிர வலதுசாரி சக்திகளை கட்டியெழுப்புவதும் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்படுகின்றன. தொழிலாள வர்க்கத்தில் வளரும் எந்தவொரு இயக்கத்திற்கும் எதிராக, தனது நலன்களைப் பாதுகாக்க தான் நம்பியிருக்கும் தீவிர வலதுசாரி சக்திகளை ஊக்குவித்து, கட்டியெழுப்பும் அதே நேரம், தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதும் குழப்புவதுமே தன்னலக்குழுவின் நோக்கம் ஆகும்.
முன்னோக்கி செல்லும் பாதை
விளாடிமிர் புட்டினின் ஐந்தாவது பதவிக்காலமானது, விரிவடைந்து வரும் போராலும், முன்னெப்போதும் இல்லாத பெரிய சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாலும் வகைப்படுத்தப்படும். அதற்கு அவரது ஆட்சியிடம் எந்த பதிலும் இல்லாததுடன் இருக்கவும் முடியாது. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அழிவில் இருந்து எழுந்த முழு ஆளும் வர்க்கத்தினதும் சமூக அமைப்பினதும் முட்டுச்சந்திலேயே அவரது ஆட்சியின் முட்டுச்சந்தும் உள்ளது.
உக்ரேன் மீதான படையெடுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டுக்குச் செல்வதற்கான புடினின் திவாலான கணக்கீடுகள் எதுவாக இருந்தாலும், ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரானது இறுதியில் பார்க்கையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவினதும் முதலாளித்துவம் மீள ஸ்தாபிக்கப்பட்டதனதும் விளைவு ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரினால், ரஷ்யா, உக்ரைன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழிலாளர்களிடையே யுத்தத்தின் தொடர்ச்சி மற்றும் விரிவாக்கம் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. சோவியத் ஒன்றியத்தில் குறைந்தபட்சம் 27 மில்லியன் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் மற்றும் பாசிசத்தின் பயங்கரமான அனுபவங்கள் மறக்கப்படவில்லை. ஆனால் அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எப்படி ஒரு வழியைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை.
நாங்கள் பின்வருமாறு வலியுறுத்துகிறோம்: உக்ரேனில் போர் நிறுத்தப்பட வேண்டும், ஆனால் பிராந்தியத்தை ஏகாதிபத்தியம் கூறு போடுவதன் மூலம் மற்றும் மொஸ்கோவில் நேட்டோ ஆதரவு ஆட்சி மாற்றத்தின் மூலம் அல்ல. தேசிய எல்லைகளை மறுவடிவமைப்பதன் மூலமும், அணுசக்தி அச்சுறுத்தல்கள் விடுப்பதன் மூலம் மற்றும் “பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காகப்” பிச்சையெடுப்பதன் மூலமும் ஏகாதிபத்தியத்துடன் ஒரு பேச்சுவார்த்தை உடன்பாட்டைக் காண்பதற்கான புட்டின் ஆட்சியின் அவநம்பிக்கையான முயற்சிகளையும் தொழிலாள வர்க்கம் நம்பக் கூடாது. தொழிலாள வர்க்கத்தின் பணி, தேசிய எல்லைகளை மறுசீரமைப்பது அல்லது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் தன்னலக்குழுவின் ஏதாவதொரு பிரிவுக்கு வேண்டுகோள் விடுப்பது அல்ல, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர போராடுவது தான். ரஷ்ய, உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தை வளர்ப்பதே இந்தப் போரை நிறுத்துவதற்கும் அணுசக்தி பேரழிவை முன்கூட்டியே தடுப்பதற்குமான ஒரே வழி.
போருக்கு வழிவகுக்கும் அதே முரண்பாடுகள் புரட்சிக்கும் வழிவகுக்கும் என்பதை வரலாறு, குறிப்பாக 1905 மற்றும் 1917 ரஷ்ய புரட்சிகளின் வரலாறு காட்டுகிறது. ஆனால் போருக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களதும் அத்தகைய புரட்சிகர இயக்கமானது, அதற்குள் ஒரு புரட்சிகர முன்னோக்கு மற்றும் மார்க்சிசத்திற்காக போராடக் கூடியவாறான ஒரு முன்னணி கட்சியை தொழிலாள வர்க்கத்தினுள் கட்டியெழுப்புவதன் மூலமே தயார்செய்யப்பட முடியும்.
பல தசாப்தங்களாக மார்க்சிசத்துக்கு எதிராகவும் சோவியத்திலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் இருந்த மார்சியக் காரியாளர்களுக்கு எதிராகவும் ஸ்ராலினிசம் முன்னெடுத்த போரில் அது அழிக்க முயன்ற, போல்ஷிவிசத்தின் மற்றும் மார்க்சிச சர்வதேசியவாதத்தின் புரட்சிகர மரபுகளை, மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு ஸ்ராலினிசம், அனைத்து வகையான குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கும் எதிராக, ட்ரொட்ஸ்கிசம் முன்னெடுத்த நூற்றாண்டு நீண்ட போராட்டத்தின் படிப்பினைகளின் அடிப்படையில், ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும். ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு, முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தலைதூக்கிவரும் உலகப் போருக்கு எதிராகப் போராடுவதில் உறுதியாக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்தப் போராட்டத்தில் இணையுமாறு நாங்கள் அழைக்கிறோம்.