மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கிறிஸ்டோபர் நோலன் எழுதிய இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைய்மரின் (1904-1967) வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ஓப்பன்ஹைய்மர், ஜூலை 21, 2023 அன்று திரையரங்க வெளியீட்டிற்கு முந்தைய வாரங்களில் தீவிர சந்தைப்படுத்தலுக்கு உட்பட்டது. பேட்மேன் (Batman) போன்ற பெரிய அளவிலான மூன்று தொகுப்புத் தொடரின் இயக்குனரிடமிருந்து ஒரு புதிய சிறப்புப் பண்பு விளைவுக் களியாட்டங்களைக் காணப் போகிறோம் என்று நினைத்ததற்காக பல பார்வையாளர்களை மன்னித்துவிடலாம்.
ஆரம்பத்தில் என்ன தவறான புரிதல்கள் ஏற்பட்டிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஓப்பன்ஹைமய்ரின் தொடர்ச்சியான வெற்றி, பார்வையாளர்கள் காட்சியை விட அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது. திரைப்படத்தின் காட்சிப்படுத்தல் வியக்க வைக்கிறது, ஒரு அதிவேக அனுபவத்திற்காக IMAX கேமராக்களுடன் படமாக்கப்பட்டது, ஆனால் ஓப்பன்ஹைமய்ர் அணுவாயுதங்கள் மற்றும் அணுவாயுத போர் பற்றிய தீவிரமான மற்றும் பொருத்தமான திரைப்படமாக இருக்கிறது. இது பார்வையாளர்களை உலுக்கி எடுக்கும் நோக்கத்தில் அது வெற்றி பெற்றிருக்கிறது.
திரைப்படத்தின் உண்மையான பலவீனம் தனிப்பட்ட எழுத்தாளர்-இயக்குநரின் தோல்விகள் அல்ல. அவை இரண்டாம் உலகப் போர் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி அரசியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதுடன் பின்னிப்பிணைந்துள்ள மிகவும் பொதுவான பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன.
ஹிரோஷிமா (Hiroshima), எனது காதல் (1959, Mon Amour ), கடற்கரையில் (1959, On the Beach), டாக்டர் ஸ்ட்ரேஞ்சலோவ் (1964, Dr. Strangelove ) மற்றும் பாதுகாப்புத் தோல்வி (1964, Fail Safe ) போன்ற திரைப்படங்களை உருவாக்கிய சகாப்தமான 1950 களின் பிற்பகுதி மற்றும் 1960 களின் முற்பகுதியில் இருந்து அணுவாயுத பேரழிவின் ஆபத்துகள் மற்றும் பயங்கரங்கள் குறித்த சக்திவாய்ந்த அச்சங்களை நோலன் சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்திக் கொண்டார். பைடென் நிர்வாகமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் அணுவாயுத மோதலின் அச்சுறுத்தலால் அவை “தடுக்கப்படாது” என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. மேலும் அதன் சாத்தியக்கூறு அமெரிக்க செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது.
ஓப்பன்ஹைய்மர் பரந்த பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என்பது பொது மக்களிடையே வேறுபட்ட உணர்வைப் பேசுகிறது, அணுகுண்டுகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளால் ஒருவர் ஆழமாகத் அதிர்ச்சியடைந்துள்ளார். நோலனின் திரைப்படத்தை ஒருவர் பல கோணங்களில் விமர்சிக்கலாம், ஆனால் அது அந்த மனநிலையை ஊக்குவிக்கவில்லை மற்றும் ஆழப்படுத்தவில்லை என்று எந்த புறநிலை பார்வையாளரும் வாதிட முடியாது. Cillian Murphy, Matt Damon, Robert Downey Jr., Emily Blunt, Florence Pugh, Kenneth Branagh, Gary Oldman, Rami Malek மற்றும் பலர் உட்பட மிகச்சிறந்த நடிகர்களின் அர்ப்பணிப்பு தெளிவாக ஒரு போர்-எதிர்ப்பு திட்டத்திற்கு அர்ப்பணித்திருப்பது பாராட்டப்பட வேண்டும்.
தொடக்கக் காட்சியானது இளம் இயற்பியலாளர் ஓப்பன்ஹைய்மர் (மர்பி) கையாளும் தத்துவார்த்த அறிவியல் முரண்பாடுகளின் ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. குளத்தில் பெய்யும் மழைத்துளிகள் அலையலையாகப் பரவுகின்றன. துகள்கள் மற்றும் அலைகள், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றுகள், ஒரு பெரிய வெடிக்கும் நெருப்புப்பந்து, இடையிடையே சிறிய மின்னும் நட்சத்திரங்கள், ஒருவேளை சூரியனாக இருக்கலாம், வரவிருக்கும் அணு வெடிப்புகளாக இருக்கலாம். இந்த உருவப் படங்கள் திரைப்படம் முழுவதும் மீண்டும் நிகழ்கின்றன, ஒவ்வொரு முறையும் ஓப்பன்ஹைய்மரின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எதிரொலிக்கிறது.
நோலன் உடனடியாக ஓப்பன்ஹைய்மரின் இளமைப் பருவத்தின் புரட்சிகர கோட்பாடுகளை அவர்களின் காலத்தில், கலை, இலக்கியம் மற்றும் இசை மற்றும் அறிவியலில் புதுமையான பரிசோதனைகளின் காலகட்டத்திற்கு கொண்டு செல்கிறார். திரைப்படம் பார்வையாளர்களை ஒரு சுவாரஸ்யமான கதையில் ஈடுபடுத்தினாலும், அது ஒருபோதும் நேர்கோட்டில் இல்லை. அடிப்படையில் மூன்று பின்னிப்பிணைந்த இழைகள் உள்ளன: அதாவது 1930 களின் பிற்பகுதியிலும் 1940 களின் முற்பகுதியிலும் ஓப்பன்ஹைய்மரின் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை, 1943 மற்றும் 1945 க்கு இடையில் நியூ மெக்ஸிகோவின் லாஸ் அலமோசில் அணுகுண்டை உருவாக்குவதில் அவரது பங்கிற்கு வழிவகுத்தது. 1954 அணு சக்தி ஆணையம் (AEC) விசாரணையானது ஓப்பன்ஹைமரின் பாதுகாப்பு அனுமதியை பறிக்கிறது, அமெரிக்க அரசாங்கத்துடனான அவரது வாழ்க்கையை முடித்தது; மற்றும் 1958 ஆம் ஆண்டு லூயிஸ் ஸ்ட்ராஸ் (டவுனி ஜூனியர்), ஓபன்ஹைய்மரின் எதிரியின் வீழ்ச்சியாகும்.
நோலனின் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசு பெற்ற சுயசரிதையான அமெரிக்கப் புதுமைப் படைப்பாளர் (American Prometheus): ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைய்மரின் வெற்றியும் துயரும் (The Triumph and Tragedy of J. Robert Oppenheimer) என்பதை எழுதிய காய் பேர்ட் மற்றும் மார்ட்டின் ஷெர்வின் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டது. பேர்ட் மற்றும் ஷெர்வின் ஆகியோர் திரைப்படத்தின் திரைக்கதையின் இணை எழுத்தாளர்களாக பாராட்டப்படுகிறார்கள்.
1954 இல் அணு சக்தி ஆணையம் (AEC) ஆல் நடத்தப்பட்ட கம்யூனிச-விரோத வேட்டையாடலின் ஊடாக இந்த விவரிப்புக் கதை விரிவடைகிறது, இந்த மிருகத்தனமான விசாரணையின் வெவ்வேறு அம்சங்களின் மூலம் கதையின் சட்டகத்தை மாற்றுகிறது. முக்கிய இழையானது ஓப்பன்ஹைய்மரின் பார்வையில் இருந்து சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், நோலன் திரைக்கதையை தனது பார்வையில் இருந்து எழுதினார், சம்பந்தப்பட்ட பெரும்பாலான நடிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
1942 ஆம் ஆண்டில், பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வளர்ந்து வரும் குவாண்டம் இயக்கவியல் துறையில் பேராசிரியராக இருந்தபோது, இடதுசாரி கருத்துக்கள் மற்றும் தொடர்புகளுடன், ஓப்பன்ஹைய்மர் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்ஸ் (டாமன்) என்பவரால் “மன்ஹாட்டன் திட்டம்” என்று அழைக்கப்படும் அணுகுண்டை உருவாக்குவதற்கான ஒரு இரகசிய இராணுவ நிறுவலை ஏற்பாடு செய்ய பணியமர்த்தப்பட்டார்.
ஓப்பன்ஹைய்மர் தனது மற்றும் அவரது சகாக்களின் இடதுசாரி உறவுகள், 1930 களில் ஸ்பானிஷ் குடியரசுக் கட்சியினருக்கான அவரது ஆதரவு மற்றும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது நெருங்கிய “சக பயணம்” (ஓப்பன்ஹைய்மர் எப்போதாவது கட்சியின் உறுப்பினராக இருந்தாரா என்பது பற்றிய விவாதங்கள் தொடரும் அளவுக்கு நெருக்கமாக உள்ளது: அண்ணன், அண்ணி, மனைவி, காதலி எல்லாருமே அப்படித்தான் இருந்தனர்). எவ்வாறாயினும், ஓப்பன்ஹைய்மர் திட்டத்திற்கு இன்றியமையாதவர் என்று க்ரோவ்ஸ் வலியுறுத்துகிறார் மற்றும் அதற்கு தேவையான பாதுகாப்பு அனுமதியை வழங்குகிறார்.
இந்தப் பேரழிவு ஆயுதத்தை உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை விட நாஜிக்கள் 18 மாதங்கள் முன்னால் இருப்பதாக நம்பிய ஓப்பன்ஹைய்மர் மற்றும் க்ரோவ்ஸ் ஆகியோர் உயர்மட்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் சர்வதேச குழுவை “எங்கும் வெறிச்சோடிய பகுதி” ஆக நியூ மெக்ஸிகோவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொண்ட நகரமாக மாற்றுகிறார். இங்குதான் ஓப்பன்ஹைய்மர் “அணுகுண்டின் தந்தை” என்று வெளிப்படுகிறார்.
பங்கேற்க மறுக்கும் ஒரு புகழ்பெற்ற இயற்பியலாளர் நீல்ஸ் ஃபோர் (பிரானாக்). “அவர்களுக்கு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் சக்தியைக் கொடுத்த மனிதர் நீங்கள், உலகம் தயாராக இல்லை” என்று ஃபோர் கூறுகிறார்.
ஓப்பன்ஹைய்மர் ஒரு நம்பிக்கையான, மிகவும் மரியாதைக்குரிய தலைவர் மற்றும் திட்டத்தின் அமைப்பாளராக மாறுகிறார். ஐரோப்பாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனிக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்தப்படும் என்று கிட்டத்தட்ட தனது அனைத்து சகாக்களுடன் சேர்ந்து, அவரும் உறுதியாக நம்புகிறார். இருப்பினும், பேர்லினுக்கு எதிராக சோவியத் முன்னேறியதாலும், ஏப்ரல் 1945 இறுதியில் ஹிட்லரின் தற்கொலையாலும், ஜேர்மனி சரணடைகிறது. வெடிகுண்டின் வளர்ச்சியில் முழுமையாக முதலீடு செய்யப்பட்ட ஓப்பன்ஹைய்மர் அதை ஜப்பான் மீது வீசுவதற்கான உற்சாகமான குரல்கொடுப்பவராக மாறுகிறார். உண்மையில், ஒரு குண்டு அனைத்து போர்களையும் என்றென்றைக்குமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்ற வீண் நம்பிக்கையில், அதிகபட்ச உயிரிழப்புகளுக்காக ஒரு பெரிய நகரத்தை இலக்கு வைப்பதை அவர் ஆதரிக்கிறார்.
குண்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான நிலையான அழுத்தத்தின் கீழ், ஓப்பன்ஹைய்மரும் அவரது கூட்டாளிகளும் ஜூலை 16, 1945 ஐ முதல் பரிசோதனைக்கான தேதியாகத் தேர்ந்தெடுக்கின்றனர், டிரினிட்டி என்று அதற்கு குறியீட்டு பெயரிடப்பட்டது, இதனால் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை அடுத்த நாள் தொடங்கவுள்ள போட்ஸ்டாம் மாநாட்டில் அதன் அதிகாரத்துடன் அச்சுறுத்த முடியும்.
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான உண்மையான குண்டுவீச்சு மற்றும் அதன் பின்விளைவுகளின் சித்தரிப்புக்கு டிரினிட்டி பரிசோதனையை நடத்துவது திருப்தியற்ற மாற்றாக மாறுகிறது. இருப்பினும், இது ஒரு உறைய வைக்கும் காட்சியாகும்.
இளம் ஸ்வீடிஷ் இசையமைப்பாளர் லுட்விக் கோரன்சனின் வினோதமான இசை, இது ஒன்றோடொன்று பின்னப்பட்ட கதைகளை முன்னெடுத்துச் செல்கிறது, ஒலிக்கு முன் மாபெரும் வெடிப்பிலிருந்து ஃபிளாஷ் வருவதால் முற்றிலும் அமைதியின் மிகவும் பதட்டமான தருணத்திற்கு வழிவகுக்கிறது. இது கொடுங்கனவுகளின் காட்சியாக மாறுகிறது. அமெரிக்க புதுமைப் படைப்பாளர் (American Prometheus) ஆசிரியர்கள் எழுதுகிறார்கள், “டிரினிட்டிக்குப் பிறகு, இந்தக் கருவி ஒரு ஆயுதமாக மாறியது என்பதையும், ஆயுதங்கள் இராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டன என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.” ஓப்பன்ஹைய்மரின் மனநிலை மாறத் தொடங்குகிறது.
ஆகஸ்ட் 6, 1945 அன்று ஹிரோஷிமாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டதைக் லாஸ் அலமோஸில் கொண்டாடும் நூற்றுக்கணக்கான கால்களை தரையில் இடித்து மகிழ்விக்கும் வரை ஒரு அச்சுறுத்தும் தாளமானது மேற்பரப்பிற்கு அடியில் எதிரொலிக்கிறது. ஓபன்ஹைய்மர் ஒரு மேடையில் தயக்கத்துடன் உரை நிகழ்த்துகிறார்: “இந்த நாளை உலகம் நினைவில் வைத்திருக்கும்...” என்று அவர் மனம் விட்டுப் பேசுகிறார். அணுகுண்டு என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும், “ஜப்பானியர்கள் அதை விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன்” என்று அவர் அலட்சியத்துடன் குறிப்பிடுகிறார். கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
ஆனால், விரைவில், காட்சியின் மனநிலை மாறுகிறது. மற்றொரு கலைத்துவத் தேர்வில், நோலன், குண்டுவெடிப்புகளின் பயங்கரத்தை, தோல் எரிந்த உடல்கள், ஜப்பானில் பல்லாயிரக்கணக்கான இறந்தவர்கள் பற்றிய ஓப்பன்ஹைய்மரின் தரிசனங்கள் மூலம் குண்டுவீச்சின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்துள்ளார். லாஸ் அலமோஸில் கொண்டாட்டம் ஆண்களும் பெண்களும் அழுது வாந்தி எடுக்கும் ஒரு நிகழ்வாக மாறுகிறது. காய் ஃபேர்டின் கூற்றுப்படி, நியூ மெக்ஸிகோவில் அந்த இரவு காட்சியின் இந்தச் சித்தரிப்பில் அதிக உண்மை உள்ளது.
நாகசாகி குண்டுவீச்சு நடந்த ஒரு வாரத்திற்குள், போர்ச் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சனுக்கு அணு ஆயுதங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதத்தை ஓப்பன்ஹைய்மர் வழங்குகிறார். அக்டோபர் 1945 இல், ஓப்பன்ஹைய்மருக்கும் ட்ரூமனுக்கும் (கேரி ஓல்ட்மேன்) இடையே நன்கு அறியப்பட்ட சந்திப்பு ஓவல் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஆயுதப் போட்டியானது நன்மைக்காக நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை நம்ப வைக்க முயன்ற ஓப்பன்ஹைய்மர், “என் கைகளில் இரத்தம் இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறுகிறார். ட்ரூமன் அவரைத் வெளியேற்றி, “அந்த அழும் குழந்தை விஞ்ஞானியை நான் மீண்டும் ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை” என்று அறிவிக்கிறார்.
ஓப்பன்ஹைய்மர் இப்போது அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்பிற்குரிய விஞ்ஞானியாக உள்ளார். ஆனால் பனிப்போர் ஏற்கனவே இரண்டாம் உலகப் போரின் முடிவில் தொடங்கிவிட்டது, சோவியத் ஒன்றியத்துடனான போர்க்காலக் கூட்டணி முடிந்துவிட்டது, அதேபோல் முன்னாள் அல்லது நீடித்த ஸ்ராலினிச அனுதாபம் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களுக்கு தற்காலிக பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓப்பன்ஹைய்மரின் அரசியலின் கடந்த காலம் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் உறவுகள் திடீரென்று புதுப்பிக்கப்பட்ட ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அணு ஆயுதங்களை முன்கூட்டியே தாக்குவதற்கு பயன்படுத்துவது உட்பட, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு எதிராக “பின்வாங்குவதற்கு” அழுத்தம் கொடுக்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்கில் உள்ள மிகவும் வலதுசாரி கூறுகளுடன் சேர்ந்து கொள்ளுகிறார். மோசமான எட்வர்ட் டெல்லர் (பென்னி சாஃப்டி), இப்போது மிகவும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை (H-குண்டு) உருவாக்க வாதாடுகிறார், அவரது எதிரிகளில் ஒருவராக மாறுகிறார்.
1954 நிறைவுற்ற AEC விசாரணையின் காட்சிகள், இதன் விளைவாக ஓப்பன்ஹைய்மரின் பாதுகாப்பு அனுமதி அகற்றப்பட்டது மற்றும் அமெரிக்க முதலாளித்துவ பொதுக் கருத்தின் பார்வையில் அவரது அரசியல் அவமானம், தங்களுக்குள்ளேயே பயமுறுத்துகின்றன. நோலன் அரசாங்க விசாரணையாளர்களை சர்வாதிகார மற்றும் கோட்பாடற்ற வாய்வீச்சாளர்களாக சித்தரிக்கிறார். இந்த முழு நிகழ்ச்சிப்போக்கும், 1950 களில் அமெரிக்காவை “சுதந்திர உலகின் தலைவராக” உத்தியோகபூர்வமாக முன்வைத்ததை கீழறுக்கிறது. மாறாக, அமெரிக்க அரசு பாசிசவாதிகளால் பீடிக்கப்பட்டதாக சித்தரிக்கப்படுகிறது.
மூன்று அரசாங்க வழக்கறிஞர்கள் ஓப்பன்ஹைய்மர், அவரது மனைவி மற்றும் சகாக்கள், நண்பர்கள் மற்றும் எதிரிகள், ஒரு தீய மெக்கார்த்திய வேட்டையில், கொடுமைப்படுத்துதல், மிரட்டுதல், அவரைத் தடுமாறச் செய்தல் ஆகியவற்றைக் கொண்டு வறுத்தெடுக்கின்றனர். FBI ஆனது 1938 முதல் ஓப்பன்ஹைய்மரின் ஒரு ஆவணக் கோப்பை வைத்திருந்தது, அவரது தொலைபேசியையும் அவரது உரையாடல்களையும் ஒட்டுக்கேட்டது, கூட்டங்கள் மற்றும் சமூக விழாக்களில் அவரையும் அவரது கூட்டாளிகளையும் பின்தொடர்ந்தது. அவரது வழக்கறிஞர் (மாக்கன் பிளேர்) பதிவுகளை அணுகக் கோரும்போது, அவர் மறுக்கப்படுகிறார். இந்தக் கங்காரு நீதிமன்றத்தை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அரசாங்க நபர் பிற்போக்குத்தனமான ஸ்ட்ராஸ் ஆவார் அணு சக்தி ஆணையத்தின் ஆணையாளர் என்ற முறையில் அவர் உள்ளார்.
நோலனின் திரைப்படம், சோவியத் ஒன்றியத்திற்காக விசுவாசமின்மை மற்றும் உளவுபார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட விஞ்ஞானிகள் மீதான மெக்கார்த்திய வேட்டையாடலுக்கும், மற்றும் உட்குறிப்பாக, 1950 களின் வெறித்தனமான கம்யூனிச-விரோதத்திற்கு பலியாகியிருந்த ஹாலிவுட் இயக்குனர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் மீதான இதேபோன்ற வேட்டைகளுக்கும் தெளிவாக விரோதமாக உள்ளது. எட்கர் ஹூவர் மற்றும் AEC இன் ஸ்ட்ராஸ் ஆகியோரின் முயற்சிகள் இருந்தபோதிலும், ஓப்பன்ஹைய்மர் சோவியத் ஒன்றியத்திற்காக உளவு பார்த்ததாக ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை. அந்த நேரத்தில், அமெரிக்காவில் இருந்த மில்லியன் கணக்கான மற்றவர்களுடன் சேர்ந்து, அவர் சோவியத் ஒன்றியத்தை கூட்டணியாகப் பார்த்தார். அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் கிரெம்ளின் கொள்கையின் நலன்களுக்காக போரையும் அமெரிக்க-சோவியத் கூட்டணியையும் ஊக்குவித்தனர்.
ராபர்ட் ஓப்பன்ஹைய்மரின் வாழ்க்கையில் உள்ள பல கனமான வரலாற்றுப் பிரச்சினைகளை நேர்மையுடனும் அவசரத்துடனும் கையாண்டதற்காக நோலன் பாராட்டப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, 1930கள் மற்றும் 40களில் இடதுசாரி புத்திஜீவித வாழ்வின் காட்சிகள் கம்யூனிச-எதிர்ப்பின் ஒரு சிறு குறிப்பும் இல்லாமல், நேர்மையாக, விரிவாக கையாளப்படுகின்றன. புக்கின் ஜீன் டாட்லாக்கின் (ஓப்பன்ஹைய்மரின் காதலி - Pugh’s Jean Tatlock) மகிழ்ச்சியின்மையும் மரணமும் குறிப்பாக நெகிழ்ச்சியூட்டுகிறது.
திரைப்படத்தின் சிக்கல்கள் அவரது கதையின் பெரும்பகுதியை அவரது கதாநாயகனின் கண்கள் மூலம் சொல்ல இயக்குனர் எடுத்த முடிவிலிருந்து எழுகின்றன, இதனால் பார்வையாளர்கள் திரையில், கற்பனையான ஓப்பன்ஹைய்மரைப் போலவே சிந்திக்கவும் உணரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். நோலன் தனது திரைக்கதையை தனது பார்வையை எழுத முடிவு செய்திருப்பது (ஓப்பன்ஹைய்மரின் கண்ணோட்டத்தில்) இதைப் பிரதிபலிக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்ட ஸ்ட்ராஸைச் சுற்றியுள்ள 1958 நிகழ்வுகளைத் தவிர, ஓப்பன்ஹைய்மர் கிட்டத்தட்ட ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறார்.
விஞ்ஞானி-அரசியல்வாதி பற்றிய கடுமையான, புறநிலையான பார்வை அவசியம் ஆகும். தொழிலாள வர்க்கம் ஓப்பன்ஹைய்மரை அதன் ஹீரோக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள முடியாது. 1930 களின் பிற்பகுதியில் அவர் நேர்மையான இடதுசாரி கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், ஓப்பன்ஹைய்மர் அமெரிக்க இராணுவ-உளவுத்துறை இயந்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நபராக ஆனார். முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அமெரிக்காவில் உள்ள “இடது” ஆனது, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி எரித்து சாம்பலாக்கப்படுவதை உற்சாகப்படுத்தியது, மேலும் ஓப்பன்ஹைய்மர், ரூஸ்வெல்ட் சார்பு மக்கள் முன்னணிவாதத்திலிருந்து போர் இயந்திரத்தில் நேரடியாக பங்கேற்பதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தடையின்றி கடந்து செல்ல முடிந்தது, இவை எதுவும் அவரது பாத்திரத்தை மன்னிக்கவில்லை.
1950 களின் முற்பகுதியில், ஓப்பன்ஹைய்மர், அமெரிக்க புதுமைப் படைப்பாளர் (American Prometheus) கூற்றுப்படி, “கொரியாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஆதரிக்கவில்லை,” அவர் “ஒரு போர்க் களத்தில் பயன்படுத்தக்கூடிய சிறிய, தந்திரோபாய அணு ஆயுதங்களுக்கான ‘வெளிப்படையான தேவை’ இருப்பதாக வாதிட்டார். ... இனப்படுகொலை போருக்கு மாற்று மருந்தாக தந்திரோபாய அணு ஆயுதங்களுக்கான ஓப்பன்ஹைய்மரின் விருப்பம் திட்டமிடப்படாத விளைவுகளை ஏற்படுத்தியது. ‘போரை மீண்டும் போர்க் களத்திற்குக் கொண்டு வருவதன் மூலம்’ அணு ஆயுதங்கள் உண்மையில் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறையும் அவர் அதிகமாக்கிக் கொண்டிருந்தார்.”
மன்ஹாட்டன் திட்டத்தில் ஓப்பன்ஹைய்மரின் பாத்திரம் குறித்து நோலனின் பொதுவாக ஒப்புதல் மனப்பான்மை, குறைந்தபட்சம் மே 1945 இல் நாஜிக்கள் சரணடைதல் வரையில், இரண்டாம் உலகப் போர் குறித்த ஒரு தவறான கருத்தில் இருந்து எழுகிறது: அதாவது உலக சோசலிச வலைத் தளம் கருத்துரைத்ததைப் போன்று, அதாவது “ஒரு ஐக்கியப்பட்ட மற்றும் ஜனநாயக அமெரிக்கா ஆழங்காண முடியாத சில வெளிநாட்டு தீமைக்கு எதிராக போரில் இருந்தது” என்பது பாசாங்குத்தனம் ஆகும்.
மில்லியன் கணக்கானவர்கள் “ஹிட்லரையும் பாசிசத்தையும் தோற்கடிக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு போருக்குச் சென்ற அதேவேளையில், இரண்டாம் உலகப் போர், அதன் சமூக மற்றும் பொருளாதார சாராம்சத்தில், ஒரு ஏகாதிபத்திய போராக, உலகைப் பங்கிட்டுக் கொள்வதற்கும் மறுபங்கீடு செய்வதற்குமான வல்லரசு அணிகளுக்கு இடையிலான ஒரு போராட்டமாக இருந்தது.” அமெரிக்க முதலாளித்துவமானது, அதன் பெரும் தொழில்துறை வலிமை மற்றும் இருப்புக்களைக் கொண்டு, “1930 களில் ரூஸ்வெல்ட்டின் சீர்திருத்தவாத பரிசோதனைகளை நடத்த முடிந்தது, ஆனால் அது அமெரிக்க ஆளும் உயரடுக்கின் போர் நோக்கங்களையோ அல்லது போருக்குப் பிந்தைய உலகத்திற்கான அதன் திட்டங்களையோ கொள்ளையடிப்பதை அல்லது குற்றகரத்தை குறைத்ததாக ஆக்கிவிடவில்லை.”
குருதி கொட்டும் முறையில் மிருகத்தனமான போரை நடத்திய, அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் 1945ல் ஜேர்மனியின் டிரெஸ்டன், டோக்கியோ மற்றும் பிற ஜப்பானிய நகரங்களின் மீது கொடூரமான நெருப்புக் குண்டுவீச்சு நடத்தப்பட்டதில் இது ஓரளவு நிரூபணமாயிற்று. அது நூறாயிரக்கணக்கான குடிமக்களின் இறப்பிற்கு வழிவகுத்தது, அதேபோல் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டதும் நடந்தது.
மன்ஹாட்டன் திட்டத்தில் அவரது பணிக்கு ஓப்பன்ஹைய்மரின் உணர்ச்சியான மற்றும் அறிவார்ந்த பதில் போருக்குப் பிறகு அவரைப் பெருகிய முறையில் கசக்கியது, ஆனால் அவர் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது வருத்தம் தெரிவிக்கவில்லை. ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது ஒரு போர்க் குற்றமாகும், அதில் அவர் முழுமையாக பங்கேற்றார். அவரது கைகளில் இரத்தக் கறை படிந்திருந்தது.
வரலாற்றாசிரியர் காப்ரியல் ஜாக்சன் பொருத்தமாக இவ்வாறு வாதிட்டார், அதாவது “அணுகுண்டின் பயன்பாடு, உளவியல்ரீதியாக மிகவும் இயல்பான மற்றும் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி, நாஜி சர்வாதிகாரி பயன்படுத்தியதைப் போலவே அந்த ஆயுதத்தைப் பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டியது. இவ்விதத்தில், அமெரிக்கா —வெவ்வேறு வகையான அரசாங்கங்களில் உள்ள தார்மீக வேறுபாடுகள் குறித்து அக்கறை கொண்ட எவருக்கும்— பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மழுங்கடித்தது.”
ஒரேயொரு அரசியல் போக்குதான் யுத்தத்தை ஏகாதிபத்திய படுகொலை என்றும் பூகோள மேலாதிக்கத்திற்கான போராட்டம் என்றும் கண்டனம் செய்தது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சைத் தொடர்ந்து, அப்போது அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கமாக இருந்த சோசலிச தொழிலாளர் கட்சியின் வெளியீடான மிலிட்டன்ட் இதழ், “சமாதானம் இல்லை! உலக சோசலிசம் மட்டுமே மற்றொரு ஏகாதிபத்திய போரில் மனிதகுலத்தை அணு அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்! அமெரிக்கத் தொழிலாளர்களே! அதிகாரத்தை நீங்களே உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்!” என்று அழைப்பு விட்டது.
ஹிரோஷிமா மீதான குண்டுவீச்சின் 75 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், உலக சோசலிச வலைத் தளமானது ஆகஸ்ட் 22, 1945 இல் ட்ரொட்ஸ்கிச தலைவர் ஜேம்ஸ் பி. கனனை மேற்கோள் காட்டியது:
இரண்டு திட்டமிட்ட அணுகுண்டுத் தாக்குதல்களில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அரை மில்லியன் மனிதர்களைக் கொன்றது அல்லது காயப்படுத்தியது. இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், தொட்டிலில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்கள், புதிதாக திருமணமானவர்கள், நலமுடனிருந்தவர்கள் மற்றும் நோயாளிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் - வால் ஸ்ட்ரீட்டின் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஜப்பானில் உள்ள அதேபோன்ற கும்பலுக்கும் இடையிலான ஒரு சண்டையின் காரணமாக அவர்கள் அனைவரும் இரண்டு குண்டு வெடிப்புகளில் இறக்க வேண்டியிருந்தது... சொல்ல முடியாத கொடுமை இது! ஒரு காலத்தில் நியூயோர்க்கில் சுதந்திர தேவி சிலையை வைத்து உலகை ஒளிரச் செய்த அமெரிக்காவுக்கு எவ்வளவு அவமானம் வந்துவிட்டது. இப்போது அவள் பெயரைக் கேட்டாலே உலகமே பீதியில் பின்வாங்குகிறது. ...
நீண்ட காலத்திற்கு முன்பே புரட்சிகர மார்க்சிஸ்டுகள், மனிதகுலத்தை எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு மாற்று சோசலிசமா அல்லது ஒரு புதிய காட்டுமிராண்டித்தனமா, முதலாளித்துவம் அழிவில் வீழ்ந்து நாகரீகத்தை அதனுடன் இழுத்துச் செல்ல அச்சுறுத்துகிறது என்று கூறினர். ஆனால் இந்தப் போரில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்திற்காக முன்வைக்கப்படுவதன் வெளிச்சத்தில், மனிதகுலம் முகங்கொடுக்கும் மாற்றீடு சோசலிசமா அல்லது அழித்தொழிப்பா என்பதை இன்னும் துல்லியமாக கூற முடியும் என்று இப்போது நாம் கூற முடியும் என்று நான் நினைக்கிறேன்...
கிறிஸ்டோபர் நோலன் இன்று செயற்கை நுண்ணறிவில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தற்போது தங்கள் “ஓப்பன்ஹைய்மர் தருணத்தை” அனுபவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். ஆனால் பூமிக் கிரகத்தின் முழு மக்களும் ஓப்பன்ஹைய்மரின் மரபின் நிழலில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். நோலன் இதை நன்கு அறிந்திருக்கிறார், அவர் போதனைவாதத்தைத் தவிர்த்தாலும், “ஒரு எச்சரிக்கைக் கதை” என்று அவர் குறிப்பிடும் திரைப்படத்தின் முடிவு அதன் செய்தியில் மிகவும் கூர்மையாக உள்ளது.
போருக்குப் பிறகு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் ஓப்பன்ஹைமருக்கும் இடையிலான தொடர்ச்சியான, புதிரான சந்திப்புக்கு திரைப்படம் திரும்புகிறது. உரையாடல் இறுதியில் வெளிப்படுத்துகிறது, ஓப்பன்ஹைய்மர் தனது விஞ்ஞானிகள் குழுவின் ஆரம்பகால பயத்தைப் பற்றி ஐன்ஸ்டீனுடன் கலந்தாலோசிப்பதைக் குறிப்பிடுகிறார், ஒரு சங்கிலித்தொடரான எதிர்வினை, ஒருமுறை பற்றவைக்கப்பட்டால், வளிமண்டலத்தில் கட்டுப்பாடின்றி பரவக்கூடும்.
அமைதி மற்றும் சோசலிசத்தின் ஆதரவாளரான மாபெரும் விஞ்ஞானியிடம் அவர் கூறுகிறார்: “அந்தக் கணக்குகளுடன் நான் உங்களிடம் வந்தபோது, முழு உலகத்தையும் அழிக்கக்கூடிய ஒரு சங்கிலித் தொடர் எதிர்வினையைத் தொடங்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். ... நாங்கள் அதை செய்தோம் என்று நம்புகிறேன்.”
அணு ஆயுதங்களின் கொடூரங்களையும், முதலாளித்துவத்தின் மரண வேதனையில் மனிதகுலத்திற்கு அவை பிரதிநிதித்துவப்படுத்தும் அச்சுறுத்தலையும் அம்பலப்படுத்திய பெருமை நோலன் மற்றும் ஓப்பன்ஹைய்மருக்கு உரியது.