மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
செவ்வாயன்று, அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, 2024 தேர்தல்களில் அதன் ஜனாதிபதி வேட்பாளராக ஜோசப் கிஷோரையும், துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜெர்ரி வைட்டையும் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக socialism2024.org என்ற வலைத்தளத்தை அணுகுவதற்கு உருவாக்கியுள்ளது.
44 வயதான கிஷோர், 1999 முதல் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் முதன்முதலில் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் அப்பதவியில் இருந்து பணியாற்றி வருகிறார். அவர், 2020 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
64 வயதான ஜெர்ரி வைட், உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியர் ஆவார். அவர் 2008, 2012 மற்றும் 2016 இல், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தலைவர் டேவிட் நோர்த், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் நோக்கத்தை தனது அறிக்கையில் விளக்கினார்:
சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தலில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துவதற்கும், முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமே தவிர, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்ற அதன் புரிதலை வளர்ப்பதற்கும் தலையிடுகிறது. அத்தோடு, உலக முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்ட ஒரு விரிவான மூலோபாயத்தை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை நிறைவேற்ற முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டதாக இருக்கும் என்று நோர்த் வலியுறுத்தினார். “அமெரிக்காவில் நடப்பது உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. அமெரிக்க தேர்தல்களின் உலகளாவிய தாக்கத்தை கருத்தில் கொண்டு, உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் நவம்பர் மாதத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்” என்று நோர்த் குறிப்பிட்டார். சோசலிச சமத்துவக் கட்சி சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முற்படுகிறதுடன், “முதலாளித்துவ கட்சிகளின் தீய பேரினவாதத்திற்கு எதிராக போராடும்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், “சோசலிச சமத்துவக் கட்சி, பெருநிறுவன நிதிய சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நிதிய பெருநிறுவன கூட்டு நிறுவனங்களின் மீது ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட பொது உடைமையை நிறுவுவதற்கும், பரந்த இராணுவ தொழிற்துறை வளாகத்தை கலைப்பதற்கும் அழைப்பு விடுக்கும் ஒரு திட்டத்தை முன்னெடுக்கும்” என்று நோர்த் குறிப்பிட்டார்.
சோசலிச சமத்துவக் கட்சி “வெறும் வாக்குகளை கைப்பற்றி, வாய்வீச்சு முழக்கங்களைக் எழுப்பி, வஞ்சகத்தை உச்சரித்து அதன் வேலைத்திட்டத்தை மிகக் குறைந்த பொதுவான தரத்திற்கு மாற்றியமைக்கும் அமைப்பு அல்ல”. மாறாக, “சோசலிச சமத்துவக் கட்சியானது தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறைப் பணிகளைக் கொண்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்சியாகும்... ஒரு நூற்றாண்டுக்கும் மேலான புரட்சிகரப் போராட்டத்தின் பரந்த அனுபவத்தை இக்கட்சி அடிப்படையாகக் கொண்டுள்ளது.” கட்சியின் பணி, “ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், பிற்போக்கு தேசியவாதம் மற்றும் எண்ணற்ற நடுத்தர வர்க்க அரசியலுக்கு எதிராக, 1923 இல் நிறுவப்பட்ட, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட, மார்க்சிச சோசலிசத்தின் சர்வதேச கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தில் வேரூன்றியுள்ளது” என்று நோர்த் விளக்கினார்.
ஜனாதிபதி வேட்பாளராக சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட கிஷோர் பின்வருமாறு கூறினார்:
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களான ஜனாதிபதி பைடென் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர், முதலாளித்துவ பெருநிறுவன நிதிய தன்னலக்குழுவின் இரண்டு பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் பில்லியனர்கள், பெரும் செல்வந்த வோல் ஸ்ட்ரீட் பங்குதாரர்கள், பெருநிறுவன நலன்கள் மற்றும் இராணுவ தொழிற்துறை வளாகம், மற்றும் அவர்களின் போர், சர்வாதிகாரம், சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றின் வேலைத்திட்டத்திற்காக பேசுகிறார்கள் மற்றும் செயல்படுகிறார்கள். சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களாக, ஜெர்ரியும் நானும் மக்களில் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.
தற்போதைய இரு கட்சி அமைப்பின் முக்கிய பிரமுகர்களின் அத்தியாவசிய அம்சங்களை கிஷோர் விளக்குகையில், “ட்ரம்ப், சர்வாதிகாரி பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை”. குடியரசுக் கட்சியினர், “பிற்போக்கு தேசியவாதத்தின் பாம்பு தைலமான ஏமாற்று மோசடிகளை சந்தைப்படுத்துவதன் மூலம், சமூகக் குறைகளை சுரண்டவும் தவறாக வழிநடத்தவும் முயல்கின்றனர். உலகெங்கிலும் உள்ள நமது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராக அவர்கள் அமெரிக்க தொழிலாளர்களை முன்நிறுத்துகின்றனர்” என்று குறிப்பிட்டார்.
பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை, “போரை விரிவுபடுத்துதல், பைடெனின் ஆத்திரமூட்டல் மற்றும் இப்போது மூன்றாவது ஆண்டில் சென்றுகொண்டிருக்கும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் விரிவாக்கம், மற்றும் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கான ஆதரவு, மனிதகுலத்தை அணு ஆயுத அழிவின் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் உலக ஏகாதிபத்திய மற்றும் இராணுவவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, அவர்களின் மைய வேலைத்திட்டம் உள்ளது” என்று கிஷோர் குறிப்பிட்டார்.
“ஜனநாயகக் கட்சியினரோ அல்லது குடியரசுக் கட்சியினரோ தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்க எதுவும் இல்லை. போருக்காகவும், செல்வந்தர்களின் பிணை எடுப்பிற்காகவும் முடிவற்ற தொகைகள் கிடைக்கப்பெறும் அதே வேளையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் உணவை மேசையில் வைக்க போராடி வருகிறார்கள்” என்று கிஷோர் குறிப்பிட்டார்.
சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலின் மூலம் மட்டுமே தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க முடியும் என்று கிஷோர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
சோசலிசம் என்பது அனைத்து மக்களிடையேயும் உண்மையான சமூக சமத்துவத்தை குறிக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பை ஒழிப்பதாகும். இதில் பிரமாண்டமான செல்வம், பணக்காரர்களான 1 சதவீதத்தினரிடம் குவிந்துள்ளது. மேலும், ஒரு தொழிலாளி ஒரு வருடம் முழுவதும் சம்பாதிக்கும் வருமானத்தை விட, தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO க்கள்) மற்றும் வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் ஒரு நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். சோசலிசம் என்பது அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாளி வர்க்கத்தால் நடத்தப்படும் சமூகம் ஆகும். உலக அளவில் உற்பத்தியின் மீது தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டை நிறுவுவதன் மூலம், ஜனநாயகத்தின் மகத்தான விரிவாக்கத்தை இது குறிக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி செல்வந்தர்களை அபகரிப்பது என்பது இதன் பொருளாகும்.
துணை ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட ஜெர்ரி வைட்டின் அறிக்கையில், அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றை கவனத்தில் கொண்டு, அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
அமெரிக்கத் தொழிலாளர்கள் மத்தியில் சோசலிசத்தால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று ஒரு மில்லியன் முறை கூறப்படும். இது பொய். 1860 களில் ஹேமார்க்கெட் விவகாரத்தில் உச்சக்கட்டத்தை எட்டிய எட்டு மணி நேர இயக்கம் முதல் 1894 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிசத்தின் ஸ்தாபகப் பிரமுகரான யூஜின் டெப்ஸ் தலைமையிலான மாபெரும் புல்மேன் வேலைநிறுத்தம் வரையிலான போராட்டங்கள் வரை, வர்க்கப் போராட்டம் வேறு எங்கும் இவ்வளவு வெடித்ததாக இருந்ததில்லை. 1930 களில், சோசலிச எண்ணம் கொண்ட சாமானியத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்துறை தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கும், 1960 களில் ஒடுக்கப்பட்ட கறுப்பினத் தொழிலாளர்களின் வெகுஜன சிவில் உரிமைகள் இயக்கத்திற்கும், அமெரிக்க தொழிலாள வர்க்கம் அதன் பங்கை விட, வெற்றிகள் மற்றும் தோல்விகளில் மாவீரர்கள் மற்றும் தியாகிகளை உருவாக்கியுள்ளது.
“ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் மற்றும் அவற்றின் பல்வேறு மத்தியதர வர்க்க துணை அமைப்புக்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுதான் மையப் பிரச்சனையாகும். அமெரிக்க தொழிலாளர்களுக்கு நாம் யூஜின் டெப்ஸுடன் சேர்ந்து கூறுவோம்: முதலாளித்துவ கட்சிகளில் இருந்து வெளியேறு. நீங்கள் அங்கு இல்லை” என்று ஜெர்ரி வைட் கூறினார்.
சோசலிச சமத்துவக் கட்சி “அனைத்து மூன்றாம் தரப்பினரையும், குறிப்பாக சோசலிசக் கட்சிகளையும் பார்க்கவோ அல்லது கேட்கவோ தடை செய்ய முற்படும் அமெரிக்க முதலாளித்துவத் தேர்தலின் கட்டுப்பாடுகளுக்குள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும். ஆனால், நமது தேர்தல் பிரச்சாரம் இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டே நடைபெறும். இது சர்வதேச அரங்கில், வரலாற்று அடித்தளத்தில் மேற்கொள்ளப்படும். ட்ரொட்ஸ்கிசத்திற்காக, அதாவது உண்மையான சோசலிசத்திற்காக மேற்கொள்ளப்படும்” என்று கூறி முடித்தார்.
உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவல்களைக் காணலாம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு இணையத்தளமான socialism2024.org இல் பதிவு செய்யலாம்.