இஸ்ரேல் ரஃபா மீது கடும் தாக்குதலை நடத்த தயாராகி வரும் நிலையில், போர்நிறுத்தத் தீர்மானத்தை இரத்துச் செய்ய அமெரிக்கா சபதம் பூண்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரஃபா மீதான இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு பைடென் நிர்வாகம் வழங்கும் முழு ஆதரவின் சமீபத்திய வெளிப்பாடாக காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா இரத்துச் (வீட்டோ) செய்யும் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் சனிக்கிழமை தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள் இப்போது சிக்கிக்கொண்டுள்ள காசா பகுதியின் தெற்கு நகரமான ரஃபாவிற்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் முழு அளவிலான தரைவழித் தாக்குதலைத் தொடங்கும் தறுவாயில் உள்ளன. பாலஸ்தீனிய மக்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் நோக்கில் நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான குண்டுவீச்சு, ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதல் பிரச்சாரத்தால் அவர்கள் வலுக்கட்டாயமாக அங்கே இடம்பெயரத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்று அல்ஜீரியா சனிக்கிழமை அழைப்பு விடுத்தது. ஒரு அறிக்கையில், “இந்த வரைவு தீர்மானத்தின் மீதான நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. அந்த வரைவு வாக்கெடுப்புக்கு வந்தால், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என தாமஸ்-கிரீன்ஃபீல்ட் அறிவித்தார். அதன் மூலம் அமெரிக்கா அதை இரத்துச் செய்யும் என்று அறிவித்தது.

“எதிர்வரும் நாட்களில் நாங்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் மேசையில் உள்ள முன்மொழிவை ஏற்க ஹமாஸ் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை சபைக்கு உள்ளது,” என கிரீன்ஃபீல்ட் மேலும் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பை உடைக்க இஸ்ரேலின் இராணுவ தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்க கிரீன்ஃபீல்ட் அழைப்பு விடுத்தார்.

ரஃபா மீதான இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் செய்திருந்த பின்னணியில், தாமஸ்-கிரீன்ஃபீல்ட் பெப்ரவரி 10 அன்று பேசும்போது ரஃபா மீதான தாக்குதல் “தொடர முடியாது” என்று கூறினார். அந்த நிலைப்பாடு பின்னர் பைடெனால் மாற்றப்பட்டது. அவர், காஸா மக்களை இடமாற்றம் செய்வதற்கான “திட்டம்” ஒன்று இல்லாமல் ஒரு தாக்குதலை தொடர முடியாது என்று அறிவித்தார்.

இறுதியில், அமெரிக்க அதிகாரிகள், குடி மக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும், ரஃபா மீதான தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கும் என்று சுட்டிக்காட்டினர். “பொதுமக்களுக்கு என்ன நடக்கும்” என்பதை இஸ்ரேல் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்று கேட்டபோது, “நாங்கள் தொடர்ந்து இஸ்ரேலை ஆதரிப்போம்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி பதிலளித்தார்.

மத்திய கிழக்கு முழுவதுமான அமெரிக்க இராணுவத் தலையீட்டின் பின்னணியில், ரஃபா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு அமெரிக்க ஆதரவு பெருகிய முறையில் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க இராணுவம் யேமன் மீது மற்றொரு சுற்று தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்தது.

12 பெப்ரவரி 2024 திங்கட்கிழமை, ரஃபாவில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட உறவினர்களுக்காக பாலஸ்தீனியர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர். [AP Photo/Fatima Shbair]

அமெரிக்க இரத்து குறித்து விளக்குகையில், தாமஸ்-கிரீன்ஃபீல்ட், சண்டையில் ஆறு வார இடைவெளியைப் பெறுவதற்காக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

ஆனால், இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஹமாஸின் அழைப்புகளை “கேலிக்கூத்து” எனக் கூறிய இஸ்ரேலிய அதிகாரிகள், கடந்த வாரக் கலந்துரையாடலில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து அத்தகைய ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது.

வார இறுதியில் ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ரஃபாவில் செயல்பட வேண்டாம் என்று எங்களிடம் கூறுபவர்கள், நாங்கள் போரில் தோற்க வேண்டுமென்று எங்களிடம் சொல்லுகின்றனர்” என்று அறிவித்து, ரஃபா மீதான திட்டமிட்ட தாக்குதலைத் தொடரப்போவதாக உறுதியளித்தார்,

காசாவில் இருந்து வரக்கூடிய சுமார் 100,000ம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக சுவர்களைக் கொண்ட ஒரு பகுதியை எகிப்து நிர்மாணிப்பதாகக் கடந்த வாரம் வோல் ஸ்றீட் ஜேர்னல் அறிவித்தமை, காஸாவில் வசிப்பவர்களை எல்லைக்கு அப்பால் உள்ள சினாய் பாலைவனத்திற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்ற இஸ்ரேலுக்குத் தயார் செய்து கொடுக்கிறது என்ற எதிர்பார்ப்பை எழுப்புகிறது.

இனப்படுகொலைக்கு அரசியல் ஆதரவை வழங்குவதற்கும் மேலாக, அக்டோபர் 7 முதல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் தளவாட ஆதரவையும் வழங்கியுள்ளதுடன், பைடன் நிர்வாகம் காஸாவில் போருக்கு மேலும் 12 பில்லியன் டொலர்களை வழங்கும் நிதி மசோதாவை நிறைவேற்றுவதை ஆதரிக்கிறது.

இதற்கிடையில் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சனிக்கிழமை, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில், இஸ்ரேலிய முற்றுகைக்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறையால் ஆக்சிஜனை நிறுத்துவதற்கு மருத்துவமனை நிர்ப்பந்திக்கப்பட்ட போது ஏழு நோயாளிகள் இறந்தனர். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ஜெனரேட்டர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் மருத்துவமனைக்குள் நுழைவதைத் தடுத்ததை அடுத்து இந்த மரணங்கள் நிகழ்ந்தன என்றார்.

“நேற்று மற்றும் அதற்கு முந்தைய நாள், உலக சுகாதார அமைப்பின் குழு, நோயாளிகளின் நிலைமைகள் மற்றும் முக்கியமான மருத்துவ தேவைகளை மதிப்பிடுவதற்காக மருத்துவமனைக்குள், உதுவியாளர்களுடன் சேர்ந்து எரிபொருளை வழங்க மருத்துவமனை வளாகத்தை வந்தடைந்த போதிலும், அவர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை” என்று டெட்ரோஸ் கூறினார். “மருத்துவ பரிந்துரை என்பது ஒவ்வொரு நோயாளியின் உரிமை. அதன் தாமதித்தால் ஏற்படும் செலவு நோயாளிகளின் உயிர்களாகும்,” என மேலும் தெரிவித்தார்.

காஸாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை, “முழுமையாக சேவை இழந்துள்ளது” என்றும் “தற்போது நான்கு மருத்துவ ஊழியர்கள் மட்டுமே நோயாளிகளைக் கவனித்து வருகின்றனர்” என்றும் சுகாதார அமைச்சகம் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் தொடர்ந்த இஸ்ரேலிய தாக்குதல்களால் சனி மற்றும் ஞாயிறு இடையே 18 பேர் கொல்லப்பட்டனர். வார இறுதியில் ரஃபாவில் நடந்த ஒரு தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஐந்து ஆண்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 28,858 ஆக உயர்ந்துள்ளது என்றும் மேலும் 7,000 பேரைக் காணவில்லை என்றும் கூறியது. மொத்தத்தில், உண்மையான இறப்பு எண்ணிக்கையை 35,000 பேருக்கு அதிகமாகும்.

இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதல்கள் மற்றும் இன்றியமையாத மனிதாபிமான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையின் தாக்கத்தினால், காஸாவின் மொத்த, சுமார் 2.3 மில்லியன் மக்களும், போதுமான உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் இல்லாமல் உள்ளனர்.