முன்னோக்கு

நெதன்யாகுவின் நீதித்துறை சதியும், சியோனிசத்தின் முட்டுச்சந்தும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம், இஸ்ரேல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், வெகுஜன மக்கள் எதிர்ப்புக்கு முன்னால், அதற்கு வரையறையற்ற அதிகாரங்களை வழங்கும் சட்டமசோதாவை நிறைவேற்றியது.

இந்தப் புதிய சட்டம், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் முடிவுகளை, “நியாயமில்லை” என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தடுப்பதற்கான அதன் அதிகாரத்தை நீக்குவதுடன், ஒரு பெரும்பான்மை இருந்தாலே நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுவதற்கான அதிகாரத்தை கென்னெட்டுக்கு (இஸ்ரேல் நாடாளுமன்றம்) வழங்குகிறது. இது சட்டமன்றத்திற்கும், நிர்வாகத்துறைக்கும் மற்றும் நீதித்துறைக்கும் இடையே பிரிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை ஒரே அடியில் அகற்றுகிறது.

இனி மேல் நீதிபதிகளின் தேர்வுமுறையை அரசாங்கத்தால் அரசியலாக்க முடியும் என்பதோடு, தண்டனைப் பெற்ற குற்றவாளிகளை அரசின் உயர்மட்ட பதவிகளில் நியமிக்க முடியும். மேலும் நெதன்யாகுவைப் பல ஆண்டுகளுக்குச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைக்கக் கூடிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீதான தற்போதைய வழக்கில், தண்டனைப் பெறாமல் தப்பிக்க அவரை இது அனுமதிக்கும்.

பாலஸ்தீனியர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதிலும், குடியேற்றவாசிகளின் வன்முறைக்கு கவசமாக இருந்து பலமுறை ஒத்துழைத்துள்ளதும், இஸ்ரேல் “யூத மக்களின் தேசம்” என்று வரையறுத்த 2018 தேசிய அரசு சட்டத்தை மேற்பார்வை செய்து, அதன் அரபு மக்களை இரண்டாம் தர குடிமக்களாக உறுதிப்படுத்தியதுமான ஓர் அமைப்பை, அதாவது உச்ச நீதிமன்றத்தை, நெதன்யாகு இலக்கு வைத்துள்ளார்.

நெதன்யாகுவின் அதிதீவிர தேசியவாதிகள் மற்றும் மதவாத சியோனிசவாதிகளின் அரசாங்கத்திற்கு இதுவுமே கூட போதுமானதில்லை. மேற்குக் கரை ஆக்கிரமிப்பை முழுமையாக இணைத்துக் கொள்வது, இஸ்ரேல் முழுவதும் இனச் சுத்திகரிப்பு செய்வது, கடுமையான சமூக சமத்துவமின்மையால் குணாம்சப்பட்ட ஒரு சமூகம் மீது எதேச்சதிகார ஆட்சியைத் திணிப்பது, இராணுவவாதம் மற்றும் கலாச்சாரப் பிற்போக்குத்தனத்தை அதிகரிப்பது ஆகியவை அவர்களின் நோக்கமாக உள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு, இஸ்ரேல் அரசுக்கு உயிர்பிழைப்புக்கான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அங்கே ஏழு மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் தூண்டப்பட்டு இருப்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வக்கிரமான பொலிஸ் தாக்குதல்கள் காட்சிகளுக்கு மத்தியிலும் நூறாயிரக் கணக்கானவர்கள் அணி திரண்டனர். பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் பிரதம மந்திரி இகுட் ஓல்மெர்ட் (Ehud Olmert), “இதுவொரு தீவிர அச்சுறுத்தல். இதற்கு முன்னர் இதுபோல ஒருபோதும் நடந்ததில்லை, நாம் இப்போது ஓர் உள்நாட்டு போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,” என்று இப்போது எச்சரிக்கிறார்.

இப்போது ஜனநாயகமாக இல்லாத ஓர் அரசாங்கத்திற்காக தங்கள் உயிர்களைத் தொடர்ந்து ஆபத்திற்குட்படுத்த விரும்பவில்லை என்று கூறி, 10,000 இக்கும் அதிகமான இராணுவப் பாதுகாப்புப் படையினர், நீதித்துறை சதி நடந்தால் அவர்கள் பணியாற்றப் போவதில்லை என்று அறிவித்திருப்பது, இந்த எதிர்ப்பலையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இளம் யூத இஸ்ரேலியர்களுக்கு பல ஆண்டுகள் கட்டாய இராணுவ சேவை மற்றும் வருடாந்திர ரிசர்வ் கடமையை இராணுவம் கோருகிறது. 56 ஆண்டுகளாக, இராணுவச் சேவை என்பது பாலஸ்தீனிய மற்றும் சிரிய மண்ணில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அமுலாக்குவது, தேடல் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வது, பலவந்தமாக வெளியேற்றுவது, இடித்து தரைமட்டமாக்குவது மற்றும் பிற தண்டிக்கும் விதமான நடவடிக்கைகளுடன், தான்தோன்றித்தனமான தாக்குதல்களை நடத்தும் குடியேற்றவாசிகளுக்கு மூடிமறைப்பை வழங்குவது ஆகியவற்றையே அர்த்தப்படுத்தி உள்ளது.

ஈரானுக்கு எதிராகவும், சிரியா மற்றும் லெபனானில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கு எதிராகவும் நெதன்யாகு இரகசியப் போரை அதிகரித்திருக்கின்ற நிலையில், காத்திருப்போர் பட்டியல் படையினர் சேவையாற்ற மறுப்பதானது, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக முழுமையாக போர் தொடுப்பதற்கான அதிவலது மற்றும் தீவிர குடியேற்றவாசிகளின் முயற்சிகளுக்கு தொழிலாளர்கள் மத்தியிலும் மற்றும் தொழில்ரீதியான நடுத்தர வர்க்க அடுக்குகளிலும் கவலை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. ஆழமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பெருந்தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் டெல் அவிவ்வை அதன் முக்கிய வேட்டை நாயாக வைத்து உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராகவும் மற்றும் அதன் அப்பிராந்திய கூட்டாளிகளான ஈரான் மற்றும் சிரியாவுக்கு எதிராகவும் போரை விரிவாக்குவதற்கான அமெரிக்க தலைமையிலான திட்டங்களால் ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கும் நிலைகுலைந்துள்ள நிலைமைகளில், இஸ்ரேல் ஒரு சமூக மற்றும் அரசியல் வெடி உலையாக இருக்கின்ற நிலைமைகளின் கீழ் இது நடக்கிறது. “ஒரு பலமான மற்றும் ஒன்றுபட்ட பாதுகாப்புப் படை” இல்லாமல், இஸ்ரேல் “அந்தப் பிரதேசத்தில் இனி ஒரு நாடாக இருக்க முடியாது” என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெர்சி ஹலெவி எச்சரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள், தளபதிகள், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவர்கள் என நெதன்யாகுவின் நீதித்துறை சதியை எதிர்க்கும் தலைவர்களாக காட்டிக்கொள்பவர்களிடம் இருந்து இத்தகைய கவலைகள் தான் வெளிப்படுகின்றன. பாலஸ்தீனியர்களை விலையாக கொடுத்து இஸ்ரேல் எல்லைகளை விரிவாக்குவதில் இந்த எதிர்தரப்பு தலைவர்களும் பொறுப்பாகாமல் இல்லை. ஆனால் பகிரங்கமாக சர்வாதிகாரத்தன்மைக்குத் திரும்புவது இஸ்ரேலின் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களைச் சீர்குலைக்கும் என்று அஞ்சி, அவர்கள் “சமரசத்திற்காக” நெதன்யாகுவிடம் மன்றாடுகிறார்கள்.

குறிப்பாக 1967 இல் அரபிய இராணுவங்களுக்கு எதிரான அதன் வெற்றிக்குப் பின்னர் இருந்து, அதன் உயிர்பிழைப்புக்காக, இஸ்ரேல், மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொலிஸ்காரராக செயல்படுவதற்காக, அமெரிக்காவிடம் இருந்து பாரியளவில் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை நீண்டகாலமாகச் சார்ந்திருந்துள்ளது. இப்போது, ஒரு திறம்பட்ட பொலிஸ்காரராக இருப்பதற்குப் பதிலாக, நெதன்யாகுவின் நடவடிக்கைகள், மத்தியக் கிழக்கில் அரபு ஆட்சிகளுடனான கூட்டணியைத் தக்க வைப்பதற்கான வாஷிங்டனின் நீண்ட முயற்சிகளைப் பலவீனப்படுத்துவதுடன், ஈரானைத் தனிமைப்படுத்தி நசுக்குவதற்கான அதன் திட்டங்களை அச்சுறுத்துகின்றன, மேலும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அதன் நடப்பு போரை நடத்துவதற்காக, ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் அதன் மோசடி வாதங்களை அம்பலப்படுத்துகின்றன.

இதற்கும் கூடுதலாக, இஸ்ரேலிலும் மற்றும் அந்தப் பிராந்தியம் முழுவதிலும் நீடித்த சமூக எழுச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு, சர்வதேச முதலீட்டாளர்களை அச்சுறுத்துகிறது. மோர்கன் ஸ்டான்லி அதன் இறையாண்மைக் கடனை “விரும்பத்தகாத நிலைக்கு” குறைத்திருப்பதுடன், கடன் மதிப்பீட்டு நிறுவனமான Moody, இஸ்ரேலின் பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கு “குறிப்பிடத்தக்க ஆபத்து” மற்றும் “எதிர்மறை விளைவுகள்” குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பொங்கி வரும் பரந்த எதிர்ப்பானது, முக்கியமாக, இஸ்ரேல் மீதான விமர்சனத்தை யூத-எதிர்ப்புவாதத்துடன் ஒப்பிடுபவர்களின் மோசடி வாதங்களை அரசியல்ரீதியில் மதிப்பிழக்கச் செய்துள்ளது. இது, பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவர்களையும் மற்றும் இந்த அரசின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் பரந்த நோக்கங்களை எதிர்ப்பவர்களையும் மவுனமாக்க மற்றும் அவமதிக்க, உலகளவில் இடதுசாரிகள் மீதான வேட்டையாடலைக் கீழறுக்கிறது.

அதே நேரத்தில், இஸ்ரேல் அரசாங்கத்தின் குற்றங்களுக்கு மொத்த இஸ்ரேலியர்கள் மீதும் பழிசுமத்தும் பிரச்சாரமான, புறக்கணிப்பு, முதலீடு அகற்றுதல் மற்றும் தடையாணைகள் பிரச்சாரத்தின் (Boycott, Divestment and Sanctions Campaign) மையக் கருவையும் இது மறுத்தளிக்கிறது. இந்தப் போராட்ட இயக்கத்தின் சியோனிச-ஆதரவு தலைமையைச் சுட்டிக்காட்டி, எண்ணற்ற போலி-இடது மற்றும் தாராளவாத பத்திரிகைகள் குறிப்பிடுகையில், நடப்பவை அனைத்தும் எதிர்விரோத சியோனிச குழுக்களுக்கு இடையிலான சண்டை என்றும், யூதத் தொழிலாளர்களுக்கு தனிச்சலுகையுடன் கூடிய இருப்பு வழங்கும் “குடியேற்ற காலனிய அரசுக்கு” அவர்கள் விசுவாசமானவர்கள் என்பதால், அவர்களை ஒருபோதும் பாலஸ்தீனியர்கள் உடனான ஒன்றுபட்ட போராட்டத்திற்கு வென்றெடுக்க முடியாது என்றும் வலியுறுத்துகின்றன.

நெதன்யாகுவின் பாசிச திட்டநிரலுக்கு ஓர் உண்மையான சோசலிச எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதில் சிக்கலான பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய, யூத, மதசார்பற்ற, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ தொழிலாள வர்க்கம், ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசு எந்திரத்திற்கும் எதிரான போராட்டத்தில் புறநிலைரீதியாக உந்தப்பட்டு வருகிறது.

தொழிலாள வர்க்கமும் அதன் இளைய தலைமுறையும், இஸ்ரேல் நிறுவப்பட்டதில் இருந்து அதன் வரலாற்றின் மைய அரசியல் படிப்பினைகளைப் பெறுவது அவசியமாகும்.

சியோனிசத் திட்டத்தின் மையக் கட்டுக்கதைகள், சரியாக அடி வாங்கி உள்ளன. அதிலிருந்து அவை ஒருபோதும் மீள முடியாது. சியோனிசம் எதில் தங்கி உள்ளதோ, அந்த “தேசிய ஒற்றுமை” என்ற வலியுறுத்தலில் எதுவும் மிச்சமில்லை. 75 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதன் மூலம் நிறுவப்பட்ட அது, நாஜி ஜேர்மனியின் கொடூரங்கள் மற்றும் யூத இனப்படுகொலைகளுக்குப் பின்னர் யூத மக்களுக்கு ஒரு ஜனநாயகப் புகலிடத்தை வழங்கும் என்று கூறப்பட்ட கூற்றுக்கள், நிறைவேறாத கனவாக மாறியுள்ளன.

யூத முதலாளித்துவ அரசை நிறுவுவதை நியாயப்படுத்துவதற்காக, இனரீதியான, மதரீதியான மற்றும் மொழிரீதியான பிரத்யேக பிரிவினைவாதக் கருத்துருக்கள் அடிப்படையில், சியோனிசம் 19 ஆம் நூற்றாண்டில் ஒரு வலதுசாரி இன-தேசியவாத இயக்கமாக உருவானது. அறிவொளி இயக்கம் பின்னர் சோசலிச இயக்கத்தில் ஆழமாக வேரூன்றியவர்களிடையே அதன் செல்வாக்கு வளர்ந்ததற்குக் காரணம், நாஜி யூத இனப்படுகொலைகளில் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்டதில் உச்சத்தை அடைந்த, 1930 கள் மற்றும் 1940 களில் ஐரோப்பிய யூதர்களை நசுக்கிய பேரழிவுகளாகும். பாசிசத்தால் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் இவ்வாறு தோற்கடிக்கப்படுவதற்கு, சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவும், உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் சோவியத் அதிகாரத்துவக் காட்டிக்கொடுப்பும் ஒத்துழைத்தன.

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனியத்திற்குக் குடிபெயர்வதன் மூலம், ஒரு யூத அரசை உருவாக்கலாம் என்று வலியுறுத்தி, யூதர்களிடையே இருந்த பரந்த அரசியல் மாயையை சியோனிசம் அரசியல்ரீதியில் பயன்படுத்தியது. ஏறக்குறைய ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாகவும் மூர்க்கமாகவும் வெளியேற்றியும், அவர்களின் நிலங்களைப் பிடுங்கியும், இஸ்ரேல் 1948 இல் நிறுவப்பட்டது.

இந்த அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட ஓர் அரசும் மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகளும், எப்போதுமே ஓர் உண்மையான ஜனநாயக சமுதாயத்தை உருவாக்க இலாயக்கற்று இருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பொலிஸ் அரசாக, அதன் அரபு அண்டைநாடுகளுடன் மீண்டும் மீண்டும் போர் தொடுக்கும் அரசாக, பாலஸ்தீனியர்களுடன் நிரந்தரமாக போரில் இருக்கும் ஓர் அரசாக; ஒரு விரிவாக்கவாத “மாபெரும் இஸ்ரேல்” கொள்கையைப் பின்பற்றும் அரசாக; மிக அதிகளவில் உறுதியாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் வலதுசாரி குடியேற்றவாசிகளைச் சார்ந்திருந்த ஓர் அரசாக; உலகிலேயே மிக அதிகபட்ச கடுமையான சமூக சமத்துவமின்மை மட்டங்களின் நிலைகுலைக்கும் பாதிப்பைச் சமாளிக்க அமெரிக்க இராணுவ உதவிகளை நம்பியிருக்கும் ஓர் அரசாக, அதன் பரிணாமம் தான், நெதன்யாகு அரசாங்கம் எனும் பிராங்கென்ஸ்டீன் அசுரனுக்குப் பாதை அமைத்தது.

யூத மற்றும் பாலஸ்தீனிய ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரான ஒரு பொதுவான ஒடுக்குமுறையாளருக்கு எதிராக, ஓர் ஒன்றுபட்ட சோசலிச போராட்டத்தில் அவர்களை வென்றெடுக்க, ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கான நிலைமைகள் இப்போது உருவாகி உள்ளன. இன்று அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவம் செய்யும் நான்காம் அகிலம் மட்டுமே இந்த முன்னோக்கிற்காக போராடுகிறது.

இப்போது நடந்து வரும் இந்தப் போராட்ட அலையின் தொடக்கத்திலேயே, உலக சோசலிச வலைத் தளம், “இந்த அலைக்கு எதிராக” (Against the Stream) என்றவொரு அறிக்கையில், இஸ்ரேலை உருவாக்குவதற்கு இட்டுச் சென்ற, ஐக்கிய நாடுகள் சபையின் 1947 பாலஸ்தீன பிரிவினைக்கு, நான்காம் அகிலம் காட்டிய முன்னுணர்ந்த விடையிறுப்பு மீது கவனத்தைக் கொண்டு வந்தது. அந்த அறிக்கை பின்வருமாறு எச்சரித்தது:

யூதப் பிரச்சினைக்கு இந்த “சியோனிச தீர்வை”, நான்காம் அகிலம், கற்பனாவாதமாக மற்றும் பிற்போக்குத்தனமானதாக நிராகரிக்கிறது. யூதத் தொழிலாளர்களின் போராட்டங்களை, அரபு உழைக்கும் மக்களின் சமூக, தேசிய மற்றும் விடுதலை போராட்டங்களுடன் இணைப்பதற்கு, சியோனிசத்தை முற்றிலுமாகக் கைத்துறப்பது இன்றியமையாத நிபந்தனையாகும்…

பிரிவினையின் மூலம் அரேபிய மற்றும் யூத தொழிலாளருக்கு இடையே பிளவு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஆத்திரமூட்டும் வரையறைகளுடன் இந்த சியோனிச அரசு, இரண்டு தரப்பிலும் அபகரிப்பு (பழிவாங்கும்) இயக்கங்களைக் கொண்டு வரும். இஸ்ரேலின் மண் (Eretz Israel) என்ற வரலாற்று எல்லைகளுக்குள், ஒரு “யூத அரசுக்கும்” ஒரு “அரபு பாலஸ்தீனியத்திற்கும்” சண்டைகள் நடக்கும். இதன் விளைவாக, இவ்விதத்தில் உருவாக்கப்பட்ட பேரினவாத சூழல் மத்தியக் கிழக்கில் உள்ள அரபு உலகை நச்சுத்தன்மைக்கு உள்ளாக்கி, பெருந்திரளான மக்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டங்களைத் திணறடிக்கும், அதேவேளையில் சியோனிசவாதிகளும் அரபு நிலப்பிரபுத்துவவாதிகளும் ஏகாதிபத்திய ஆதரவிற்காகப் போட்டியிட்டுக் கொண்டிருப்பார்கள்.

உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு விளங்கப்படுத்தியது:

சியோனிசத்தின் முட்டுச்சந்து என்பது, எல்லா தேசிய இயக்கங்களது தோல்வியின் ஒரு வெளிப்பாடாகவும், மற்றும் பெருந்திரளான உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் எந்தவொரு அடிப்படை பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக அவை உருவாக்கிய அரசுகளது தோல்வியின் ஒரு வெளிப்பாடாகவும் மட்டுமே உள்ளது. மிகப்பெரும் சமூக சமத்துவமின்மை மட்டங்களுக்கு மத்தியில், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் மூர்க்கமான ஒடுக்குமுறை ஆட்சி வடிவங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, அப்பிராந்தியத்தின் எல்லா மக்களுக்கும் இதே பிரச்சினைகள் முன் வருகின்றன.

இந்த எதிர்ப்பு வெடிப்பதில் தனித்துவமான விஷயம் எதுவும் இல்லை. இலங்கையில் இருந்து பிரான்ஸ் வரையில், தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய மேலெழுச்சியின் நீண்டகால அரசியல் விளைவுகளில், இஸ்ரேல் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக அமைகிறது.

மற்ற இடங்களைப் போலவே, இஸ்ரேலின் ஆளும் உயரடுக்கும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதானது, அடிப்படையில் முதலாளித்துவத்தின் மரணப் படுக்கையில் ஏற்படும் அதன் இரண்டு விளைவுகளான சமூக சமத்துவமின்மையின் தீவிர அதிகரிப்பு மற்றும் போர் விரிவாக்கத்தில் வேரூன்றி உள்ளது. எதிர்விரோத முதலாளித்துவக் கன்னைகளுக்கு இடையே “பேரம்பேசுவதன்” மூலம் இதைத் தடுக்க முடியாது, மாறாக உலகெங்கிலும் விரிவடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தைச் சோசலிசத்திற்கான ஒரு நனவுப்பூர்வமான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்வதன் மூலமாகவே இதைத் தடுக்க முடியும்.

இந்த சியோனிச அரசையும் அரபு முதலாளித்துவத்தையும் தூக்கியெறிந்து, ஐக்கிய மத்தியக் கிழக்கு சோசலிச அரசுகளைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் தலைமை வழங்க, இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பிரிவுகள் உட்பட, ICFI இன் பிரிவுகளை, சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளாக கட்டியெழுப்புவதே தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுத்து வரும் முக்கியப் பணியாகும்.

Loading