இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்க (UAW) தேசிய நிர்வாகிகளின் தேர்தலில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால், UAW தேசிய நிர்வாகிகள் தேர்தலை வாக்குச்சீட்டில் இடம் பெற்ற அனைத்து வேட்பாளர்களின் பெயர்களோடு மீண்டும் நடத்த வேண்டுமென கோரி, சோசலிசவாதியும் சாமானிய வாகனத்துறை தொழிலாளருமான வில் லெஹ்மன், திங்கட்கிழமை, ஜூலை 3 இல், பைடென் நிர்வாகத்தின் தொழிலாளர் துறை மீது வழக்கு தொடுத்தார்.
லெஹ்மன் எழுப்பிய வாதங்களுக்கும் அல்லது அவர் முன்வைத்த ஆதாரத்திற்கும் பதில் கூற தொழிலாளர் துறை முயற்சி கூட செய்யாமல், வெறும் மூன்று வரியில், UAW தேர்தல் நடத்தை மீது அவர் விடுத்த சவாலை மறுத்துரைத்து முடிவை அறிவித்த ஒரு சில நாட்களுக்குப் பின்னர், லெஹ்மன் மிச்சிகன் கிழக்கு மாவட்டத்தின் பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். “இந்த முடிவுக்கான அடித்தளத்தை விளக்கும் காரணங்களுடன், வரவிருக்கும் நாட்களில் உங்களுக்கு மின்னஞ்சலில் ஓர் அறிக்கை அனுப்பப்படும்,” என்று குறிப்பிட்டு அந்த மறுப்புரை நிறைவடைகிறது.
சாமானியத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஒரு வருடத்திற்குள் லெஹ்மன் இரண்டாவது முறையாக கூட்டாட்சி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். முதல் சுற்று வாக்கெடுப்புக்கு முன்னர், நவம்பர் 2022 இல், தேர்தல் தேதியைத் தள்ளி வைக்க வேண்டுமென்றும், உறுப்பினர்களுக்குத் தேர்தல் அறிவிப்பை வழங்க UAW நடவடிக்கைகள் எடுக்குமாறு நீதிபதி டேவிட் லாசன் கோர வேண்டுமென்றும் கோரி, லெஹ்மன் ஒரு வழக்கு தொடுத்தார்.
“நவம்பர் 28 இறுதி தேதி வரை, வாக்குச்சீட்டுக்களை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இந்த விகிதத்தில் அனுப்பினால், இது கடந்தாண்டு பொது வாக்கெடுப்பின் வாக்குகளை விட 40,000 குறைவாக, மொத்த வாக்குப்பதிவானது சுமார் 104,000 ஆக இருக்கும்,” என்று அந்த 2022 வழக்கின் போதே லெஹ்மன் எச்சரித்தார்.
இந்த முன்கணிப்பை லெஹ்மன் இந்த மிகச் சமீபத்திய வழக்கிலும் மேற்கோளிட்டதுடன், பின்வருமாறு குறிப்பிட்டார்:
நவம்பரில் லெஹ்மன் எழுப்பிய பிரச்சினைகளில் ஊகங்கள் எதுவும் இல்லை. வஞ்சகம், போட்டியிடும் திறமையின்மை மற்றும் காலை வாரிவிடும் நடவடிக்கைகள் மூலமாக, இந்தத் தேர்தல் திறம்பட பெருந்திரளான சாமானிய சங்க உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முதுகுக்குப் பின்னால் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் “பெருமளவில் UAW வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு” இருப்பதாக வெளியேறவிருந்த UAW தலைவர் ரே கர்ரியே கூட மார்ச் 16, 2023 இல் ஒப்புக் கொண்டார். இந்தத் தேர்தல் நெடுகிலும் வில் லெஹ்மன் முன்வைத்த எண்ணற்ற ஆட்சேபணைகளை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், இது அதிகாரத்துவ தலைமையின் ஓர் அசாதாரண ஒப்புதலாக உள்ளது.
லெஹ்மனின் புதிய வழக்கு பின்வருமாறு விவரித்து தொடங்குகிறது, “ஒரு தேர்தல் நடப்பதைக் குறித்து வேண்டுமென்றே போதுமானளவுக்குத் தெரியப்படுத்தாமல், ஆழமாக வேரூன்றிய அதிகாரத்துவம் திட்டமிட்டு முறையாக நூறாயிரக் கணக்கான சாமானிய சங்க உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது. ஒரு தேர்தல் நடந்தது குறித்தும், அதில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்ததைக் குறித்தும் இன்று வரை பல உறுப்பினர்களுக்குத் தெரியாது. மொத்தம் 1.1 மில்லியன் தகுதியுடைய வாக்காளர்களில், வெறும் 104,776 பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்தனர், அதேவேளையில் சுமார் 1,000,000 பேர் வாக்களிக்கவில்லை. இந்த 9 சதவீத வாக்குப்பதிவு, அமெரிக்க வரலாற்றிலேயே எந்தவொரு தேசியளவிலான தொழிற்சங்க தேர்தலில் பதிவான வாக்குப் பதிவுகளிலேயே மிகவும் குறைவானதாகும்.”
UAW அதிகாரத்துவம் ஏன் மற்றும் எப்படி திட்டமிட்டு முறையாக வாக்குகளை ஒடுக்கியது என்பதை லெஹ்மனின் புகார் மிகவும் கவனமாக விவரிக்கிறது.
இந்த நேரடித் தேர்தல்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்த தொழிற்சங்க அதிகாரத்துவம், வாக்குகளை ஒடுக்க நோக்கம் கொண்டிருந்தது. பல தலைமுறை தொழிலாளர்களின் சந்தா பணத்தில் திரட்டப்பட்ட, தொழிற்சங்க சொத்துக்கள் மீது முன்னர் அது கொண்டிருக்கும் கேள்விக்கிடமற்ற கட்டுப்பாட்டை எதிர்க்கவும், அத்துடன் அதிகாரத்துவத்தின் தனிச் சலுகைகள் மற்றும் பெருநிறுவன நிர்வாகத்துடனான அதன் நல்லுறவைத் தொந்தரவுக்கு உள்ளாக்கவும், வில் லெஹ்மன் போன்ற சாமானிய தொழிலாளர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பை வழங்கி விடுமோ என்று தொழிற்சங்க அதிகாரத்துவம் அஞ்சியது.
தேர்தல் குறித்து அதிகாரத்துவத்திற்குத் தகவல் வழங்கிய UAW, ஆனால் முடிந்தவரை எவ்வாறு சாமானியத் தொழிலாளர்களுக்கு தகவல் அளிக்காமல் இருக்க முயன்றது என்பதை அந்தப் புகார் விவரிக்கிறது.
தொழிற்சங்க அதிகாரத்துவம் அந்தத் தேர்தலை ஒரு தனிப்பட்ட, உள்விவகாரமாகக் கையாண்டது. முதல் சுற்று வாக்குப்பதிவில், தேர்தல் நடத்தப்படுவதைக் குறித்து உள்ளூர் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் தேசியளவிலான நிர்வாகிகளின் ஆதரவு வட்டத்திற்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுத்த அது, அதேவேளையில் சாமானியத் தொழிலாளர்கள் சாத்தியமானளவுக்குக் குறைவாக வாக்களிப்பதை உறுதி செய்தது. இந்த மூலோபாயத்தைச் செயல்படுத்துவதற்கு, தேர்தல் குறித்து தகவல் வழங்கும் உள்ளூர் கிளைகளுக்கான தகவல் வழங்கல் முறையை (“LUIS”) அது பலமாகச் சார்ந்திருந்தது. இந்த தகவல் வழங்கல் முறை, வரலாற்று ரீதியில் தேசிய மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு இடையிலான தகவல் தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் லெஹ்மன் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திய இந்த மூலோபாயம், ரே கர்ரி தலைமையிலான “நிர்வாகக் குழு” (Administration Caucus) மற்றும் ஷான் ஃபெயின் தலைமையிலான “ஒன்றுபட்ட உறுப்பினர்கள்” (Members United) குழு என அதிகாரத்துவத்தின் இரண்டு முக்கிய கன்னைகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான ஒரு போட்டியாக அந்தத் தேர்தலை மட்டுப்படுத்தியது.
தேசியளவிலான UAW உம் மற்றும் உள்ளூர் கிளைகளும் மின்னஞ்சல் பட்டியலைப் புதுப்பிக்கவில்லை என்பதோடு, தொழிலாளர்கள் அவர்களுக்கான வாக்குச்சீட்டுக்களைப் பெறும் வகையில் அவர்களின் முகவரிகளைப் புதுப்பிக்குமாறு தொழிலாளர்களுக்கு நினைவூட்டுவதையும் அது திட்டமிட்டு முறையாக நிராகரித்தது. இந்த ஆதாரமும், அத்துடன் மொத்த உள்ளூர் கிளைகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான கிளைகளில் இருந்து 100 இக்கும் அதிகமான உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் பதில்களும், தேர்தல் கண்காணிப்பாளராலும், UAW அல்லது தொழிலாளர் துறையாலும் ஒருபோதும் மறுக்கப்படவில்லை.
UAW தொழிற்சங்க அதிகாரத்துவம் சாமானிய சங்க உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்த அந்த நிலைப்பாட்டுக்கும், “முதல் சுற்று தொழிற்சங்க தேர்தல் நடந்த அதே நேரத்தில் நவம்பர் 22 இல் நடத்தப்பட்ட இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பதற்காக, சங்க உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வாக்குரிமையைக் குறித்து தகவல் வழங்க அது நவீன முறையில் மேற்கொண்ட தொழில்ரீதியான முயற்சிகளுக்கும்” இடையிலான முரண்பாடு, அந்த வழக்கு வலியுறுத்திய புள்ளிகளில் ஒன்றாகும்.
தேர்தலைக் கண்காணிக்க UAW அதிகாரத்துவத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு சட்ட நிறுவனங்களான, ஜென்னர் & பிளாக் மற்றும் குரோவெல் & மோரிங் ஆகியவை வகித்த பாத்திரத்தையும் இந்தப் புகார் அம்பலப்படுத்துகிறது. “தேர்தல் மேற்பார்வைக்காக அமர்த்தப்பட்ட இந்த ஜென்னர் & பிளாக் மற்றும் குரோவெல் & மோரிங் சட்ட நிறுவனங்கள், நீண்ட காலமாகவே வாகனத்துறை பெருநிறுவனங்களுக்கு வழக்கு ஆலோசகர்களாகவும், பேரம்பேசுபவர்களாகவும் இருந்துள்ளன,” என்று அது குறிப்பிடுகிறது. “ஜிஎம், டானா, CAT, போஸ்ச், பிரிட்ஜ்ஸ்டோன் மற்றும் இதர பிற நிறுவனங்கள் உட்பட பத்தாயிரக் கணக்கான சாமானிய சங்க உறுப்பினர்கள் பணியாற்றும் நிறுவனங்களை இந்த சட்ட நிறுவனங்கள் தற்போது பிரதிநிதித்துவம் செய்கின்றன. இந்த சட்ட நிறுவனங்களின் பெருநிறுவன வாடிக்கையாளர்கள், சாமானியத் தொழிலாளர்களின் நலன்களை ஒடுக்கி, பெருநிறுவன இலாபங்களை அதிகரிப்பதில், பெருநிறுவனத்துடனான UAW இன் தசாப்த கால கூட்டுறவைத் தொடரும் ஒரு நெகிழ்வான தலைமை தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில், தேர்தல்களில் சாமானியத் தொழிலாளர்களின் வாக்குகள் ஒடுக்கப்படுவதில் நேரடி நலன்களைக் கொண்டுள்ளன.”
லெஹ்மனின் புகார் ஏன் நிராகரிக்கப்படுகிறது என்று எடுத்துக் கூறுவதற்குக் கூட அக்கறை காட்டாமல், லெஹ்மனின் புகாரை நிராகரிப்பதென்ற தொழிலாளர் துறையின் முடிவு, அமெரிக்காவிலும், உக்ரேனிலும் அல்லது வேறெந்த இடத்திலும் “ஜனநாயகத்தை” பாதுகாப்பதற்காக என்ற பைடென் நிர்வாகத்தின் வாதங்களை அம்பலப்படுத்துகிறது. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் என்று வரும் போது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அவமதிப்பைத் தவிர வேறெதுவும் காட்டுவதில்லை.
அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் லேபர் நோட்ஸ் போன்ற அமைப்புகள், அவற்றின் பங்கிற்கு, “தொழிற்சங்கங்களில் ஜனநாயகத்திற்கு” போராடுவதாகப் பொய்யாக கூறி வருகின்றன. ஆனால், சாமானியத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை மூடிமறைப்பதில் முக்கிய பாத்திரம் வகித்துள்ள அவை, இந்தப் பிரச்சாரம் நெடுகிலும் ஒரு நியாயமான வாக்கெடுப்பை உறுதிப்படுத்த லெஹ்மன் எடுத்த முயற்சிகள் மீது குற்றஞ்சாட்டும் அளவிற்கு மவுனமாக இருந்துள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்காக பேசும் இந்த உயர்மட்ட நடுத்தர வர்க்க சக்திகள், அதிகரித்தளவில் அதன் முன்னணி ஆட்களை வழங்கி, ஜனநாயகக் கட்சியின் பாகமாகச் செயல்படுகின்றன.
அந்தப் புகார் வலுவாகக் குறிப்பிடுவதைப் போல, “இந்தத் தேர்தலை மேற்பார்வைச் செய்வதில் பங்கு வகிக்கும் அனைத்து அமைப்புகளின் பாகத்தில் இருந்து, வில் லெஹ்மன் போன்ற சாமானியத் தொழிலாளர்களின் உரிமைகள் முற்றிலும் முக்கியமற்றதாக இந்தத் தேர்தலில் குணாம்சப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மிகவும் அடிப்படை உரிமை — அதாவது, வாக்குரிமை — முற்றிலும் முக்கியத்துவமற்றதாக கையாளப்பட்டுள்ளது…”
வழக்குத் தாக்கல் செய்த பின்னர் லெஹ்மன் உலக சோசலிச வலைத்தளத்திற்குக் கூறுகையில், “சங்க உறுப்பினர்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும் அல்லது மொத்தத்தில் தேர்தல் நடத்தப்பட்டது குறித்து அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் சரி தெரியாமல் இருந்திருந்தாலும் சரி, அதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இந்தச் சட்ட வழக்கு 1.1 மில்லியன் மொத்த உறுப்பினர்களுக்குமானது. வாக்காளர்கள் ஒடுக்கப்பட்டதற்கும் தேர்தலில் UAW இன் தலையீடு குறித்தும் அதிகரித்தளவில் ஆதாரங்கள் இருந்தும், என் புகார் மீது பைடென் நிர்வாகம் செயல்பட மறுப்பது ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாளர்கள் முகத்தில் விழுந்த அடியாகும். இந்த தேர்தல் மோசடியானது, அனைவருக்கும் உண்மையாகவே தகவல் தெரிவித்து இந்தத் தேர்தலை மீண்டும் நடத்தாவிட்டால், இந்த தேர்தலின் விளைவாக பதவிக்கு வந்த தலைமை சட்டவிரோதமானதாகப் பார்க்கப்படும்,” என்று தெரிவித்தார்.
வாக்குப்பதிவை அதிகரிப்பதற்குப் போதிய கால அவகாசம் இருந்த போதும், கடந்த நவம்பரில் லெஹ்மனின் வழக்கு நீதிமன்றத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட உண்மையை வைத்து பார்த்தால், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றம் தலையிடும் என்ற எந்த பிரமையிலும் தொழிலாளர்கள் இருக்கக் கூடாது. இப்போது நீண்டகால அதிகாரத்துவவாதியான ஷான் ஃபெயின் தலைமையில் உள்ள இந்த இற்றுப் போன UAW அதிகாரத்துவத்தைப் பலப்படுத்துவதே, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் முக்கிய அக்கறையாக உள்ளது.
இந்த செப்டம்பரில், மூன்று மிகப்பெரிய வாகனத்துறை நிறுவனங்களில் உள்ள 178,000 அமெரிக்க மற்றும் கனேடிய வாகனத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் மூலம், வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு பெரும் அடியை வழங்குவதே இந்தப் பெருநிறுவன-அரசாங்க சூழ்ச்சியின் நோக்கமாகும். கிளாரியாஸ் ஆலையில் வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தி, ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முன்னெடுத்ததன் மூலமாகவும், வரிசையில் நிற்க நிர்பந்திக்கப்பட்டு கனேடிய காட்டுத் தீ புகையால் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யாததன் மூலமாகவும், கர்ரி போலவே ஃபெயினும் ஏறக்குறைய தானும் பெருநிறுவனத்தின் ஒரு கருவியே என்பதை ஏற்கனவே வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த தொழிற்சங்க எந்திரத்தை ஒழித்து, தொழிலாளர்களே கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி, சாமானியத் தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டத்தை லெஹ்மனின் பிரச்சாரம் அடித்தளத்தில் கொண்டிருந்தது. இது, பெருநிறுவனங்கள் மற்றும் ஆளும் உயரடுக்கிற்கு எதிரான ஓர் உண்மையான போராட்டத்தை நடத்துவதற்கு அடிப்படை முன்நிபந்தனையாகும். அதிகாரத்துவம், பைடென் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்த பெருநிறுவன சட்ட நிறுவனங்கள் ஆகியவை முறையாக திட்டமிட்டு தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்ததன் மூலம், இந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதமே, இத்தகைய ஓர் இயக்கத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.