இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பத்தாவது இணையவழி மே தினக் கூட்டம், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அதிகரித்து வரும் அமெரிக்க-நேட்டோ போர், மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வேகமான வளர்ச்சி என இரண்டு ஒன்றோடொன்று இணைந்த நிகழ்வுபோக்குகளின் மீது ஒருங்குவிந்திருந்தது. இந்த கூட்டம், ஏகாதிபத்திய போர், சமூக சமத்துவமின்மை, கோவிட்-19 பெருந்தொற்று, காலநிலை மாற்றம், பாசிச அச்சுறுத்தல் மற்றும் நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவத்தின் அனைத்து தீமைகளுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் எதிர்ப்பிற்கு ஓர் அரசியல் திசையை வழங்கியது.
ஐந்து கண்டங்களில் இருந்தும் 19 பேச்சாளர்கள் மூன்று மணி நேர அரசியல் பகுப்பாய்வுகளில் ஓர் ஒருங்கிணைந்த, வரலாற்று அடிப்படையிலான முன்னோக்கை இக்கூட்டத்தில் வழங்கினர். அந்த உரைகள் ஒன்பது வெவ்வேறு மொழிகளில் வழங்கப்பட்டன, 10 மொழிகளில் சப்டைட்டில் வழங்கப்பட்டன. இந்தப் பேச்சாளர்கள், ஒருங்கிணைந்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் மற்றும் அதன் அளப்பரிய சமூக சக்தியை உலகின் பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் அணித்திரட்டவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தனர்.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளத்தால் அரசியல்ரீதியாக கல்வியூட்டப்பட்ட, அதன் முன்னோக்கால் உயிரூட்டப்பட்டு ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்திற்குத் தீர்மானமாக இருந்த உலகெங்கிலுமான இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் நேர்காணல்கள் ஒளிபரப்பப்பட்டன.
WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்தினுடைய ஆரம்ப உரையில், அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளை உக்ரேனில் (30 வருட அமெரிக்க தலைமையிலான இராணுவத் தலையீடுகள் மற்றும் நேட்டோவின் 800 மைல் கிழக்கு நோக்கி விரிவாக்கத்திற்குப் பிறகு) போருக்குத் தள்ளும் ஆழமான சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் சுருக்கத்தையும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் “தூண்டுதலற்ற போர்” என்ற கட்டுக்கதையையும் தகர்த்தெறிந்தார்.
இத்தகைய நெருக்கடிகளுடன் சேர்ந்து, 'தொடர்ந்து அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார அந்தஸ்தின் சரிவு,' 'தொடர்ச்சியான பல பொருளாதார அதிர்ச்சிகள்,' 'அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் முறிவு' மற்றும் 'இந்தப் பெருந்தொற்று மற்றும் ஒரு புதிய பணவீக்க சுழற்சியின் பாதிப்பால் தீவிரப்படுத்தப்பட்ட மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மை மட்டங்களால் சீரழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அதிகரித்த உள்நாட்டு நிலைகுலைவு” ஆகியவையும் உள்ளன என்று நோர்த் விளக்கினார்.
அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள், 'சமாளிப்பதற்கான குறைவான நிதி ஆதாரங்களே கொண்டுள்ள போதினும், அமெரிக்காவைத் தாக்கி உள்ள அதே அரசியல் மற்றும் பொருளாதார நோய்களால் சூழப்பட்டுள்ளன' என்று நோர்த் விளக்கினார்.
இந்த பன்முக நெருக்கடியானது, 'உலகின் செல்வம் மற்றும் வளங்களின் தற்போதைய பங்கீட்டை மாற்றுவதற்கு' ஏகாதிபத்திய சக்திகளை வன்முறையான முயற்சிகளுக்குத் தூண்டுகிறது. இதை, ரஷ்ய புரட்சியாளர்களான விளாடிமிர் லெனினும், லியோன் ட்ரொட்ஸ்கியும் அவர்களின் முதலாம் உலகப் போர் அனுபவத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்திருந்தார்கள்.
இந்தப் போருக்கான எந்த முற்போக்கான பதிலையும் புட்டின் அரசாங்கத்தில் காண முடியாது, அதன் 'தேசிய பாதுகாப்பு” என்ற வரையறையானது, சோவியத் ஒன்றியத்தின் முந்தைய தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களைக் களவாடியும், அதைக் கலைத்ததன் அடிப்படையிலும் செல்வ வளத்தைப் பெற்ற செல்வந்த தன்னல வர்க்கத்தின் பொருளாதார நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.
'போரை முடிவுக்குக் கொண்டு வரக் கோருகையில், நாங்கள் சர்வதேசியவாத சோசலிசக் கொள்கையை வலியுறுத்துகிறோம். தொழிலாள வர்க்கத்திற்கு எந்த நாடும் இல்லை. இந்தப் போரால் உக்ரேனிய அல்லது ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்த நாஜிக்களை வெளியேற்றும் ஒரு போராட்டத்தில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் தோளோடு தோள் நின்று போரிட்டனர். முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதன் விளைவாக, அவர்கள் ஒருசமயம் பாசிசத்திற்கு எதிராகவும் அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்காகவும் தோளோடு தோள் நின்று பாதுகாத்த அதே மண்ணில் இப்போது ஒருவரையொருவர் கொன்று வருகிறார்கள்”என்று நோர்த் குறிப்பிட்டார்,
தேசியவாதத்தின் பேரழிவுகரமான விளைவுகளும் மற்றும் சர்வதேசியவாத சோசலிசத்திற்கான சாத்தியக்கூறுகளும் இரண்டுமே உக்ரேனிய போரின் தற்போதைய இரத்தக்களரியான ஒருமுனைப் புள்ளியாக உள்ள பக்முத் நகரின் வரலாற்றில் உள்ளடங்கி உள்ளன. இந்த நகரம், இருபதாம் நூற்றாண்டில் பத்தாயிரக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த அதிவலது உக்ரேனிய தேசியவாதிகளிடமிருந்து இரண்டு முறை செம்படையால் மீட்கப்பட்டது. 1919 இல், பல தேசத்தைச் சேர்ந்த தொழிலாள வர்க்கமும் முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் விவசாயிகளும் சோவியத் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்ததன் பாகமாக அந்நகரம் விடுவிக்கப்பட்டது.
இந்த வரலாற்றுக்கு உயிரூட்டும் விதத்தில், இந்த கூட்டத்தில் தனித்துவமாக போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பு (YGBL) உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் உக்ரேனின் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அந்நாடுகளின் சொந்த பிற்போக்குத்தனமான அரசாங்கங்களது கொள்கைகளை எதிர்த்த அதேவேளையில் நேட்டோ ஏகாதிபத்திய போரையும் கண்டித்தனர். உக்ரேனில் இருந்து பேசிய ஸ்டீபன் கெல்லரும், ரஷ்யாவில் இருந்து பேசிய ஆண்ட்ரி ரிட்ஸ்கியும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வாரிசுகளாக ரஷ்ய மற்றும் உக்ரேனிய முதலாளித்துவத் தன்னலக் குழுக்களாலும், அவர்கள் மீட்டுயிர்ப்பித்துள்ள தேசிய பேரினவாத, பாசிச பாரம்பரியங்களால் நடத்தப்பட்ட சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராகவும் சோவியத் ஒன்றியத்தின் முற்போக்கான வரலாற்றை வலியுறுத்தினர்.
ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரையும் புட்டின் அரசாங்கத்தையும் எதிர்த்த ரிட்ஸ்கி, தனது கருத்துக்களில், ட்ரொட்ஸ்கிய இயக்கத்தின் வரலாற்று பாரம்பரியங்களைப் பலமாக வலியுறுத்தினார். 'இந்த ஆண்டு, ஸ்ராலின் அதிகாரத்திற்கு வந்ததன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டவாறு, போல்ஷிவிக் கட்சி மற்றும் சோவியத் அரசின் அதிகாரத்துவ மற்றும் தேசியவாதச் சீரழிவுக்கு எதிராக, லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டைக் குறிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
'அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய போராட்டம், வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு, அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ், ரஷ்யாவுக்கு உள்ளேயும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் ட்ரொட்ஸ்கிசத்தின் மீள் எழுச்சியை எடுத்துக்காட்டுகிறது.”
இதே உத்வேகத்துடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மீண்டும் அதன் இலங்கைப் பிரிவின் பிரதிநிதிகளான தீபல் ஜெயசேகர மற்றும் திலக்க்ஷன் மகாலிங்கம் ஆகியோரிடம் இருந்து சிங்களம் மற்றும் தமிழில் உரைகளைச் செவிமடுத்தது — இது அந்நாட்டில் முதலாளித்துவ வர்க்கம் தூண்டிவிட்ட இன மோதல் மற்றும் உள்நாட்டுப் போருக்கு எதிரான அதன் தசாப்த கால போராட்டத்தின் அடையாளமாக இருந்தது.
'முதலாளித்துவ அரசுகளின் ஒரு கூட்டமைப்பு ... உலக வளங்களை மிகவும் அமைதியான முறையில் பங்கீடு செய்வதைக் கூட்டாகவும் இணக்கமாகவும் தலைமை தாங்கும்' விதமான, வரவிருக்கும் 'பல துருவ உலகம்' பற்றிய கருத்துக்களை நோர்த் மற்றும் மற்ற பேச்சாளர்களும் நிராகரித்தனர் — இத்தகைய ஒரு கருத்து ஜேர்மன் சீர்திருத்தவாதி கார்ல் கவுட்ஸ்கியின் நூற்றாண்டு கால பழமையான“அதிதீவிர ஏகாதிபத்திய” கோட்பாட்டை எதிரொலிக்கிறது. இதை லெனின் மிகச் சரியாக “அதிதீவிர முட்டாள்தனம்” என்று முத்திரை குத்தினார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணிப் பிரமுகர்கள் முன்வைத்த எதிர் வேலைத்திட்டமானது, ஏகாதிபத்தியப் போர், சீரழிந்து வரும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான ஒரே நம்பகமான சமூக அடித்தளம், ஒரு சோசலிச தலைமையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும் என்ற புரிதலின் அடிப்படையில் இருந்தது.
பிரான்சில் இருந்து அலெக்ஸ் லான்டியே, பிரிட்டனில் இருந்து டொம் ஸ்கிரிப்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்து கிறிஸ்டோஃப் வாண்ட்ரியர் ஆகியோரின் பங்களிப்புகள் ஐரோப்பாவின் வேகமான மீள்இராணுவமயமாக்கல் குறித்தும், அவை பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவது குறித்தும் விவரித்தன. அங்கே தொழிலாளர்களது போராட்டங்கள் புரட்சிகர அலையாக எழக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதை விவரித்த அவர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள தளைகளில் இருந்து அவற்றை விடுவித்து, சோசலிச சமத்துவக் கட்சிகள் ஒரு சோசலிச போர் எதிர்ப்பு நனவைப் புகுத்த முற்பட்டுள்ளதை விளக்கினர்.
இது சம்பந்தமாக, சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) பிரதிநிதியாக உரையாற்றிய வில் லெஹ்மன், தொழிலாள வர்க்க போராட்டத்தின் ஜனநாயக அமைப்புகள் வடிவில் ஒவ்வொரு நாட்டிலும் ICFI இன் போராட்டத்தை விவரித்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து செர்ல் கிரிஸ்ப் மற்றும் நியூசிலாந்தில் இருந்த டொம் பீட்டர்ஸூம் ஏற்கனவே ஓர் அணுஆயுத போராக உருவெடுக்க அச்சுறுத்தி வரும் ரஷ்யாவுடனான போர், வாஷிங்டனின் முக்கிய பூகோள மூலோபாய போட்டியாளரான சீனாவுடனான ஒரு போருக்கு முதற்படியாக பார்க்கப்படுகிறது என்பதை விவரித்தனர்.
இவான் பிளேக் வழங்கிய கோவிட்-19 பெருந்தொற்று பற்றிய ஓர் அறிக்கையும், இந்தாண்டு துருக்கியின் கிழக்கு பகுதியையும் சிரியாவையும் தாக்கிய நிலநடுக்கம் குறித்து Ulaş Ateşçi வழங்கிய உரையின் ஒரு பகுதியும், ஆளும் வர்க்கம் மனித உயிர்களை மீது கொண்டுள்ள அலட்சியத்தை எடுத்துக்காட்டின. இதே அலட்சியத்துடன் தான் ஆளும் வர்க்கம் மூன்றாம் உலகப் போருக்குள் நுழைகிறது என்றும், எவ்வாறு அடிப்படை ஜனநாயக உரிமைகளும் விஞ்ஞான வளர்ச்சிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் பிடிக்குள் சிக்கி உள்ளன என்பதையும் அவர்கள் விவரித்தனர்.
எந்த ஒரு தேசிய முதலாளித்துவமும், அதன் எந்தப் பிரிவும், உலக ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறவோ அல்லது அதன் போர்களையும் அதிலிருந்து ஏற்படும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களையும் எதிர்க்க இலாயக்கற்றவை என்பதை பிரேசிலின் எட்வார்டோ பராட்டியுடன் சேர்ந்து, அடெஸ்சி, தெளிவுபடுத்தினார். ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலின் தலைமை சித்தாந்த அடித்தளங்களில் ஒன்றாக கனடா வகிக்கும் பாத்திரம் குறித்தும், இதற்கிடையே இந்தப் பெருந்தொற்றின் அனுபவம் ஒரு “கனிவான, மென்மையான முதலாளித்துவத்திற்கான” சாத்தியக்கூறு குறித்த எந்தவொரு கட்டுக்கதையையும் வெடித்து சிதறடித்துள்ளது என்பதையும் கீத் ஜோன்ஸ் பகுப்பாய்வு செய்தார்.
இளைஞர்கள் முகங்கொடுக்கும் எதிர்கால வறுமை, போர் மற்றும் சுற்றுச்சூழல் பேரிடர் ஆகியவை குறித்து பேசிய சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் பிரதிநிதிகள் கிரிகோர் லிங்க் மற்றும் ஆஸ்கர் கிரீன்ஃபீல்டு வழங்கிய பங்களிப்புகள் இந்தக் கூட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு உலகெங்கிலும் போருக்கு எதிராக தொடர்ச்சியாக பல பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தக் கூட்டத்தைத் தொகுத்துரைத்து, அமெரிக்காவிலிருந்து பங்களித்த ஜோசப் கிஷோர், உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தில் உள்ள அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தைக் குறித்தும், சோசலிசத்தின் மீது அதற்கு அதிகரித்து வரும் ஆர்வத்தின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்காளர்கள் ஒடுக்கப்பட்டிருந்த போதும், IWA-RFC இன் வேட்பாளர் வில் லெஹ்மனுக்கு அதில் கிடைத்த 5,000 இக்கும் அதிகமான வாக்குகளில் இது எடுத்துக்காட்டப்பட்டது.
மே தினம் 2023 ஐ அதன் உலக வரலாற்று உள்ளடக்கத்தில் பார்த்தால், அது சுழற்சியாக அதிகரித்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ் ட்ரொட்ஸ்கிசத்தின் அரசியல் வேலைத்திட்டத்துடன் தொழிலாள வர்க்க போராட்டங்கள் குறுக்கிடுவதில் எடுத்துக்காட்டப்படுகிறது.
இந்தக் கூட்டம் அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் இரண்டிலுமே, முற்றிலும் தனித்துவமாக இருந்தது. அனைவரது பங்களிப்புகளின் உயர்ந்த அரசியல் மட்டம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது ஊடகங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினது கட்சிகளின் பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தியது. ரஷ்யாவிற்கு எதிரான போரை விரிவாக்குவதற்கான கோரிக்கைகளோடு முன்னணியில் இருக்கும் பல்வேறு பப்லோவாத மற்றும் போலி-இடது அமைப்புகளின் போர்-சார்பு மற்றும் ஏகாதிபத்திய-சார்பு அரசியலில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டு இருந்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோசலிச சர்வதேசியத்தின் அரசியல் கலாச்சாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த சோசலிச சர்வதேசியம் புரட்சிகர போராட்டங்களின் அலைக்கு, அனைத்திற்கும் மேலாக முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ரஷ்ய புரட்சிக்கு அடிகோலியது.
ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில், போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒழுங்கமைப்பதற்கான முதல் கட்ட உலகந்தழுவிய போராட்டத்தின் உச்சபட்ச விளைவாக இந்த மே தினக் கூட்டம் அமைந்திருந்தது. இதில் உலகெங்கிலும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு நடத்திய கூட்டங்களும் உள்ளடங்கும்.
இந்தப் பணியைச் செய்வதில், நோர்த் தனது உரையில் குறிப்பிட்டவாறு, இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளின்படி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வழிநடத்தப்படுகிறது.
இந்த உலக சோசலிசப் புரட்சிக் கட்சி, அதன் கொள்கைகளை “முதலாளித்துவ அரசாங்கங்கள் மூலமாக அல்ல … மாறாக தனித்துவமான முறையில் கிளர்ச்சிகரமாக பெருந்திரளான மக்களைக் கல்வியூட்டுவதன் மூலம், தொழிலாளர்கள் எதைப் பாதுகாக்க வேண்டும் எதை அவர்கள் தூக்கியெறிய வேண்டும் என்று விளக்குவதன் மூலமாக” நிறைவேற்ற முனைகிறது.
அத்தகைய ஓர் அணுகுமுறை 'உடனடியாக அதிசயமான முடிவுகளை ஏற்படுத்தி விடாது. ஆனால் நாம் அதிசயம் செய்பவர்களாகக் காட்டிக் கொள்ளவில்லை. தற்போதைய நிலையில், நாம் ஒரு புரட்சிகர சிறுபான்மையினர். நாம் செல்வாக்கு பெற்றுள்ள தொழிலாளர்கள், தங்களை அறியாமல் எதிலும் சிக்கிக் கொள்வதை அனுமதிக்காமல், நம்மை எதிர்கொண்டிருக்கும் பணிகளின் புரட்சிகர தீர்வுக்காக அவர்களின் சொந்த வர்க்கத்தின் பொது உணர்வைத் தயாரிப்பு செய்வதற்காக, நிகழும் சம்பவங்களைச் சரியாக மதிப்பிடும் வகையில் அவர்களை வழிநடத்துவதே நம் பணியாகும்.”
இந்தக் கூட்டத்தின் எல்லா உரைகளின் எழுத்து வடிவமும் வரவிருக்கும் வாரத்தில் வெளியிடப்படும். அவற்றை நம் வாசகர்கள் கவனத்துடன் படித்து, முடிந்தவரை அவற்றைப் பரவலாக வினியோகித்து, உங்கள் சக தொழிலாளர்களுடன் அவற்றைக் குறித்து விவாதித்து, சோசலிசத்திற்கான இந்த போராட்டத்தில் இணைவதன் மூலம் இக்கூட்டத்தில் உள்பொதிந்த கோட்பாடுகாளுக்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.