முன்னோக்கு

மே தினம்: மக்ரோனை வீழ்த்துவதற்கான சர்வதேச மூலோபாயம் என்ன?

பின்வருவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் அலெக்சான்டர் லாந்தியே அவர்களின் மே தின உரையாகும்.

***

இந்த சர்வதேச மே தின இணையவழி கூட்டத்துக்கு பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து சகோதரத்துவ வாழ்த்துக்களை வழங்குகிறேன்.

மே தினத்தன்று, ஜனாதிபதி மக்ரோன் மற்றும் முக்கால்வாசி பிரெஞ்சு மக்களால் எதிர்க்கப்படும் அவரது சட்டவிரோத ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அணிவகுப்பு நடத்துவார்கள்.

மக்ரோனுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து நாடுகளிலும், தொழிலாளர்கள் ஒரே அடிப்படையான நிலைமைகளையே எதிர்கொள்கின்றனர்.

முதலாளித்துவ அரசுகள் இராணுவ போலீஸ் வன்முறையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை மீறுகிறது மற்றும் தொழிலாளர்களை வறுமையில் ஆழ்த்துகிறது.

மேலும், மக்களுக்கு எதிராக திட்டம் தீட்டிவரும் இந்த அரசாங்கங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களை திசைதிருப்பவும் மற்றும் கழுத்தை நெரிக்கவும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நம்பியுள்ளன.

இதற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, மக்ரோனை வீழ்த்துவதற்காக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சாராமல், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்ப வாதிடுகிறது.

உள்நாட்டில் இருக்கும் நிதிய தன்னலக்குழுவை வளப்படுத்தவும், வெளிநாடுகளில் போரை நடத்தவும் மக்ரோன் ஓய்வூதியங்களை வெட்டுகிறார்.

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரரான பேர்னார்ட் ஆர்னோல்ட் உட்பட பிரெஞ்சு கோடீஸ்வரர்களின் செல்வத்தை 200 பில்லியன் யூரோக்களுக்கு மேல் அதிகரிக்க மக்ரோன் உதவியுள்ளார்.

பிரெஞ்சு ஆளும் வர்க்கம் உக்ரேனில் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ள நிலையில், வாஷிங்டன் சீனாவின் மீது போரைத் தூண்டினால் என்ன செய்வது என்று விவாதம் செய்து கொண்டிருக்கும் மக்ரோன் 'ஐரோப்பியப் போர்ப் பொருளாதாரத்திற்கு' அழைப்பு விடுக்கிறார்.

பிரெஞ்சு இராணுவ செலவினங்களை வருடத்திற்கு 15 பில்லியன் யூரோக்களை அதிகரிக்க, அவர் வருடத்திற்கு 13 பில்லியன் யூரோக்களை ஓய்வூதியத்திலிருந்து குறைக்கிறார்.

ஜனவரியில் மக்ரோன் ஓய்வூதிய வெட்டுக்களை அறிவித்தபோது, பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் அவரை எதிர்த்தனர். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பிரான்சின் அனைத்து தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கூட்டணியால் அழைக்கப்பட்ட நாடு தழுவிய போராட்டங்களில் அணிவகுத்தனர். 

மக்ரோன் ஒரு ஜனநாயக ஆட்சியின் ஜனாதிபதியாக அல்ல மாறாக ஒரு பொலிஸ் அரசின் சர்வாதிகாரியாக இப்போராட்டங்களுக்கு பதிலளித்தார். 

அவர் பலத்த ஆயுதம் ஏந்திய கலகத் தடுப்புப் பொலிஸாரை அனுப்பி, எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையைப் பயன்படுத்துகின்ற மில்லியன் கணக்கான மக்களைத் தாக்கவும், வேலைநிறுத்தம் செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்துகின்ற தொழிலாளர்களின் மறியல் போராட்டங்களை நசுக்கவும் செய்தார்.

தற்போதுள்ள முதலாளித்துவ அரசின் கட்டமைப்பிற்குள் மக்ரோனின் வெட்டுக்களை எதிர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆளும் வர்க்கம் மூடியுள்ளது.

மக்ரோன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் தனது வெட்டுக்களை திணித்தார். மார்ச் மாதம், பாராளுமன்றம் அவரை கண்டிக்க மறுத்தது. ஏப்ரலில், பிரெஞ்சு அரசியலமைப்பு சபை ஓய்வூதிய வெட்டுக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

அரசியலமைப்பு சபை அதை அங்கீகரித்த பிறகு, மக்ரோன் தனது வெட்டுக்களுக்கான சட்டத்தை கட்டாயப்படுத்திய பின்னர் பிரான்ஸ் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசுடன் அரசியல் போராட்டத்தில் உள்ளது. புறநிலை ரீதியாக பிரான்ஸ் ஒரு புரட்சிகரமான சூழ்நிலையில் இருக்கிறது. 

முதலாளித்துவ ஊடக கருத்துக் கணிப்புகள், மூன்றில் இரண்டு பங்கு பிரெஞ்சு மக்கள் பொருளாதாரத்தை முடக்கவும் மக்ரோனை வீழ்த்தவும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை விரும்புகின்றனர்.

மக்ரோன் பாராளுமன்றத்தில் தனது வெட்டுக்களை திணித்த பிறகு, பிரான்ஸ் முழுவதும் மக்ரோனின் கட்சி அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. கருத்துக் கணிப்புகள் மக்ரோனுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைக்கு 62 சதவீதமான மக்களின் ஆதரவைக் கண்டறிந்தன.

பிறகு ஏன் மக்களின் விருப்பம் நிறைவேறவில்லை? மக்ரோன் ஏன் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறார்?

மக்ரோன் மக்களின் விருப்பத்தை காலால் மிதிப்பது போல், தொழிற்சங்க அதிகாரத்துவமும் தொழிலாள வர்க்கத்தின் விருப்பத்தை மிதித்து தள்ளுகிறது.

'இடது' என்று முதலாளித்துவ ஊடகங்களால் பொய்யாக விளம்பரப்படுத்தப்படும் அரசியல் சாணக்கியர்களின் ஆதரவுடன் தொழிற்சங்க முதலாளிகள் மக்ரோனைக் காப்பாற்ற வேலை செய்தன

மக்ரோனின் சட்டவிரோத ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக கலவரங்கள் வெடித்ததால், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் 'வன்முறை' மற்றும் 'அரசியல் பைத்தியம்' ஆகியவற்றுக்கு எதிராக எச்சரித்தனர். அவர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை கைவிட்டு மக்ரோனிடம் மத்தியஸ்தம் செய்யுமாறு வேண்டினர்.

ஜோன்-லூக் மெலன்சோனுடைய புதிய மக்கள் யூனியனின் ஒரு சில ஸ்ராலினிச பிரதிநிதிகள், 'எலிசே ஜனாதிபதி மாளிகையை நோக்கி அணிவகுப்பு' ஒன்றை நடத்தி, மக்ரோனை மறுபரிசீலனை செய்யுமாறு  வேண்டுகோள் விடுத்து ஒரு மனுவை அளித்தனர்.

உண்மையில், வங்கிகளின் தெய்வீக ராஜாவாகக் காட்டிக் கொள்ளும் ஜனாதிபதியான மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை.

பாஸ்டில் கோட்டை மீது தாக்குதல் நடத்தி முழுமையான முடியாட்சியை தெய்வீக உரிமையால் வீழ்த்திய சோன்-குலோட்டுகளை (சமத்துவத்துக்கு முன்னுரிமை கோரி 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அடித்தட்டு மக்கள்) எங்கள் கட்சி நினைவில் கொள்கிறது.

தொழிலாளர்கள் இன்று மக்ரோனை வீழ்த்தும் பணியை எதிர்கொள்கின்றனர் என்று எமது கட்சி கூறுகிறது.

இந்த நெருக்கடி 1871 பாரிஸ் கம்யூனின் மகத்தான மற்றும் சோகமான அனுபவத்திலிருந்து மார்க்சும் போல்ஷிவிக்குகளும் பெற்ற படிப்பினைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. முதல் முறையாக தொழிலாளர்கள் எழுச்சிபெற்று ஆட்சியை பிடித்து உருவான முதல் தொழிலாளர் அரசை, முதலாளித்துவ குடியரசு இரத்தத்தில் மூழ்கடித்தது.

அரசு என்பது வர்க்கங்களுக்கிடையில் ஒரு மத்தியஸ்தம் அல்ல, அது வர்க்க மோதல்களின் சமரசமின்மையின் விளைவாகும்.

முதலாளித்துவ அரசு முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை திணிக்கிறது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பணியானது முதலாளித்துவ அரசை சீர்திருத்துவது அல்ல, மாறாக அவர்களின் சொந்த சுயாதீனமான போராட்ட அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பி, சோசலிச புரட்சியில் இந்த அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது ஆகும்.

எனவே சோசலிச சமத்துவக் கட்சி தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, கீழிருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட அழைப்பு விடுக்கிறது.

மக்ரோனை தூக்கியெறிவதற்கும் பிரெஞ்சு ஜனாதிபதியின் கொடூரமான அதிகாரங்களை ஒழிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூக மற்றும் தொழில்துறை சக்திகள் அணிதிரட்டப்பட வேண்டும். 

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த சாமானிய தொழிலாளர் இயக்கம் மட்டுமே மக்களின் விருப்பத்தை உணர முடியும்: மக்ரோனை வீழ்த்த பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்யுங்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் பொதுக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, மக்ரோனின் பதவி நீக்கத்தைக் கோரும் தீர்மானங்களை நிறைவேற்ற பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கவும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் சாராத சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர்களின் கூட்டுப் பலத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதும்தான் எங்களது குறிக்கோள் ஆகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களின் கவனத்தை வென்றெடுக்க போராடுகிறது. அவர்களின் சொந்த நாட்டிற்கு வெளியே கட்டவிழ்ந்துவரும் வர்க்கப் போராட்டங்களுக்கு, சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமையின் நாளான மே தினத்தில், ஒவ்வொரு கண்டத்திலும் வெகுஜனப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. 

ஊழல் அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக இந்தப் போராட்டங்களை வழி நடத்துவதற்கு உலகம் முழுவதும் சாமானிய தொழிலாளர் அமைப்புகள் உருவாகி வருகின்றன.

இந்த சக்திவாய்ந்த போராட்டங்கள் மற்றும் மக்ரோனுக்கு எதிரான இயக்கம் என்பது ஒரு ஜனாதிபதியை மற்றொரு ஜனாதிபதியால் பதிலீடு செய்வதற்கான போராட்டம் அல்ல என்பதையும், அல்லது அவருக்குப் பதிலாக ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை ஒன்றிணைப்பதற்கான போராட்டம் அல்ல என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. 

சாமானிய தொழிலாளர் அமைப்புகள், முதலாளித்துவத்திற்கு எதிராக, தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும், சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கும் ஒரு மாபெரும் வரலாற்றுப் போராட்டத்தின் ஒரு பாகமாக உள்ளனர்.

Loading