இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வியாழக்கிழமை நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், 'உக்ரேனின் சரியான இடம் நேட்டோவில் உள்ளது' என்று அறிவிக்க கியேவுக்குப் பயணித்தார். அதற்கடுத்த நாள், ராம்ஸ்டீன் விமான தளத்தில் உக்ரேன் தொடர்புக் குழுவின் கூட்டத்தில் பேசிய அவர், 'உக்ரேன் நேட்டோவில் உறுப்பு நாடாக ஆவதை நேட்டோ நட்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொண்டுள்ளன' என்று வலியுறுத்தினார்.
உக்ரேன் 'சோவியத் சகாப்த உபகரணங்கள் மற்றும் கோட்பாடுகளில் இருந்து நேட்டோ தரநிலைகளுக்கு மாறுவதற்கும், [நேட்டோ] கூட்டணியுடன் முழுமையாக ஒன்றிணைவதை உறுதி செய்வதற்கும் உறுதியளித்தார் … நேட்டோ இன்றும், நாளையும், எத்தனை காலம் எடுக்குமோ அதுவரை வரையிலும் உங்களுடன் நிற்கிறது,' என்று ஸ்டோல்டென்பேர்க் உறுதியளித்தார்.
தற்போது ரஷ்யாவுடன் ஒரு போரில் உள்ள உக்ரேனுடன் ஓர் இராணுவக் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்தை நேட்டோ பகிரங்கமாக வலியுறுத்துவது, உலகின் மிக சக்தி வாய்ந்த இந்த இராணுவக் கூட்டணியைக் கொண்டு உக்ரேனின் போர் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உறுதியளிப்பதாக உள்ளது. நேட்டோ 'எவ்வளவு காலம் எடுக்குமோ அதுவரை' இதில் ஈடுபட்டிருக்கும் என்ற கருத்தை, இராணுவ மொழியில் கூறினால், எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று அர்த்தமாகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் இராணுவ அதிகாரியான ஸ்டோல்டென்பேர்க், மக்களுக்குத் தெரிவிப்பது அல்லது அவர்களிடம் கேட்பதைக் குறித்து கவலைப்படாமல், ஓர் அணுஆயுதமேந்திய சக்தியான ரஷ்யாவுடன் நேட்டோ திறம்பட போருக்குச் செல்ல உறுதியளித்தார். ஆனால் மக்கள் இந்தப் போரைக் கூடுதலாக விரிவாக்குவதை அதிகரித்தளவில் எதிர்க்கின்றனர்.
இதுவரை பெரும்பாலும் நடைமுறை தன்மையில் உள்ள நேட்டோ, அமெரிக்க மற்றும் நேட்டோ போர்த் துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு நேரடி தலையீட்டுடன், இந்தப் போரில் அதன் ஈடுபாட்டை மாற்றத் தயாராகி வருகிறது என்பதை மட்டுமே இந்த கருத்துக்கள் அர்த்தப்படுத்துகின்றன.
இந்தக் கருத்துக்கள், ரஷ்யாவுக்கு எதிராக நேரடியாக அமெரிக்க இராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்கான போலி-சட்ட அடித்தளத்தை வழங்குகின்றன.
ஊடக செய்திகள் சுட்டிக் காட்டியதை விட உக்ரேன் இராணுவம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதைக் காட்டும் பென்டகனின் கசியவிடப்பட்ட ஆவணங்கள் வெளியானதைப் பின்தொடர்ந்து ஸ்டொல்டென்பேர்க்கின் கருத்துக்கள் வருகின்றன. உக்ரேனில் 'ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிக்க' அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலைமைகளின் கீழ், உக்ரேனில் நேட்டோ நேரடியாக தலையிடாமல் அமெரிக்க இலக்குகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்பது தெளிவாகி வருகிறது.
பெருமை பீற்றலுடன் கூடிய உக்ரேனின் எதிர்த்தாக்குதல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு விமானப்படை மற்றும் தரைப்படைகளை அனுப்ப வேண்டி இருக்கும் நிலைமைகளின் கீழ், ஸ்டோல்டென்பேர்க்கின் கருத்துக்கள் இந்தப் போரில் அமெரிக்க இராணுவத் தலையீடு பற்றிய மிகக் குறைந்தபட்ச வாய்மொழி வரம்புகளைக் கூட கைவிடுகின்றன.
ரஷ்யாவுடனான நேட்டோ எல்லைகளுக்கு பத்தாயிரக் கணக்கான அல்லது நூறாயிரக் கணக்கான துருப்புகளைக் கூட நிலைநிறுத்துவதற்கான நகர்வுகள் குறித்து நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் Politico அறிவிக்கின்ற நிலைமைகளின் கீழ் இது நடக்கிறது. நேட்டோ கூட்டணியில் பின்லாந்து இணைந்ததுடன் இந்த விரிவாக்கத்தின் அளவு இரண்டு மடங்கு ஆகி உள்ளது.
போரை நியாயப்படுத்த அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பயன்படுத்திய மைய பொய்களில் ஒன்றை, குறிப்பிட்டு கூறினால், இந்தப் போருக்கும் நேட்டோ விரிவாக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற கூற்றை ஸ்டோல்டென்பேர்க்கின் வலியுறுத்தல் புரட்டிப் போடுகிறது.
பெப்ரவரி 2022 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கெல் மெக்ஃபால் வலியுறுத்துகையில், அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனை நேட்டோவில் இணைக்க முயல்கின்றன என்ற வாதங்கள் வெறுமனே ரஷ்ய அரசாங்கத்தின் பிதற்றல்கள் என்றார்.
'புட்டினின் போர் பிரகடனத்திற்கான காரணம் அவரின் சொந்த பிதற்றல்,” என்று அறிவித்த மெக்ஃபால் கூறுகையில், 'உக்ரேனிய ஜனநாயகத்தை இன்னும் அதிக நேரடியாக உக்ரேனிய ஜனநாயகத்தைக் கீழறுக்க நேட்டோ விரிவாக்கம் பற்றிய இந்த நெருக்கடியை புட்டின் இட்டுக்கட்டி உள்ளார்,” என்று வலியுறுத்தினார்.
இந்தப் பொய்கள் 2022 இன் தொடக்கத்தில் அமெரிக்க ஊடகங்களால் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன. “நேட்டோ உக்ரேனை விரைவில் இணைய அனுமதிக்காது. ஏனென்றால்,' என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது, 'யதார்த்தத்தில் ஒரு படையெடுப்புக்கான அடித்தளமே இல்லை என்றாலும் கூட, திரு. புட்டின் அதற்கான சாக்குப்போக்கு அடித்தளத்தை அமைக்க நேட்டோ பிரச்சினையை மேலுயர்த்தி வருவதாக தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் கூறினர்,” என்றது.
நேட்டோவை விரிவாக்குவதற்கான முனைவை மறுப்பதற்கான முயற்சிகள், அதாவது இந்தப் போரை ஒரு 'தூண்டுதலற்ற படையெடுப்பாக' சித்தரிப்பதற்கான ஒரு முயற்சி, இந்த மோதலில் நேட்டோ ஈடுபட்டிருக்கவில்லை என்ற அமெரிக்க வாதங்களுடன் கை கோர்த்து சென்றது.
மே 2022 இல், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், “இது ஒரு பினாமி போர் அல்ல … இது ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர். நேட்டோ இதில் ஈடுபடவில்லை,” என்றார்.
கிரிமியாவை மீண்டும் கைப்பற்றுவதற்காக அமெரிக்காவை போரில் இணைப்பதற்கான திட்டம் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில், இதற்காக அமெரிக்க மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட இந்தப் பொய்கள் அனைத்தையும் ஸ்டோல்டென்பேர்க் கருத்து தவுடு பொடியாக்கி உள்ளது.
உக்ரேன் 'நடைமுறையளவில் நேட்டோவின் ஓர் உறுப்பு நாடு' என்று இந்தாண்டு ஜனவரியில் உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் வலியுறுத்தியதை ஸ்டோல்டென்பேர்க்கின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
'உக்ரேன் ஒரு நாடாக, உக்ரேனின் ஆயுதப் படைகளும், அல்லது எங்கள் பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் துறை சட்டப்படி நேட்டோவின் உறுப்பு நாடாக இல்லை என்றாலும், நடைமுறையளவில் நேட்டோவில் உள்ளன, ஏனென்றால் எங்களிடம் ஆயுதங்கள் உள்ளன, ஏனென்றால் எங்கள் பங்காளிகளுடனான தகவல்தொடர்பு மட்டங்கள் ஒன்றிணைந்து உள்ளன என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.”
நேர்காணல் செய்பவர் ரெஸ்னிகோவுக்குப் பதிலளித்தார்,
“இதுவொரு சர்ச்சைக்குரிய கருத்து. உக்ரேன் நடைமுறையளவில் ஒரு நேட்டோ உறுப்பு நாடு என்று நீங்கள் கூறுகிறீர்கள்,” என்று பேட்டி எடுத்தவர் ரெஸ்னிகோவுக்குப் பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த ரெஸ்னிகோவ், “ஏன் சர்ச்சைக்குரியது? இது உண்மையே. இது தான் உண்மை,' என்றார்.
சொல்லப் போனால், ரெஸ்னிகோவின் வலியுறுத்தல் ஓர் 'உண்மை' ஆகும். இந்த 'உண்மை' குறித்து அமெரிக்க அரசும் ஊடகங்களும் ஓராண்டுக்கும் மேலாக பொய்யுரைத்து வருகின்றன என்பதால் மட்டுமே இது 'சர்ச்சைக்குரியதாக' உள்ளது.
ஒரு பொய் மாற்றி ஒரு பொய்யாக மக்களுக்கு நியாயப்படுத்தப்படும் உக்ரேனிய போர், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே முழு அளவிலான போராக மாற அச்சுறுத்தியவாறு, ஓர் உலகளாவிய மோதலாக வேகமாக விரிவடைந்து வருகிறது. மரணங்களைக் குறித்து கவலையின்றி, சமூகச் செலவுகளைக் குறித்து கவலையின்றி, அமெரிக்கா அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை உயர்த்தும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் இந்தப் போரை விரிவாக்கப் பொறுப்பேற்றுள்ளது.
விரிவடைந்து வரும் இந்த மோதல் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உயிர்பிழைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. இது வரலாற்றில் இரண்டு அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான முதல் போராக மாற அச்சுறுத்துகிறது.
இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும்! ஏப்ரல் 30, ஞாயிற்றுக்கிழமை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், சாமானியத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், உலக சோசலிச வலைத்தளமும் 2023 மே தினத்தைக் கொண்டாட உலகளாவிய இணையவழி பேரணியை நடத்த உள்ளன.
இந்தக் கூட்டம் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும். இந்த 2023 மே தினக் கூட்டணியில் கலந்து கொண்டு போருக்கு எதிரான போராட்டத்தைக் கட்டியெழுப்பி முன்னெடுக்க முயலுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் நாம் வலியுறுத்துகிறோம்!