நிதியச் சரிவு அச்சத்திற்கு மத்தியில் Credit Suisse வங்கி கையகப்படுத்தப்பட்டது 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய மற்றும் உலகளாவிய நிதிய அமைப்புமுறையின் சரிவைத் தடுக்கும் நோக்கத்திலான ஒரு அவசர நடவடிக்கையாக, சுவிஸ் அரசாங்கம், சுவிஸ் தேசிய வங்கி மற்றும் நாட்டின் நிதி ஆணையமான FINMA ஆகியவை நெருக்கடிக்குள்ளான Credit Suisse வங்கியை UBS வங்கிக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளன.

மார்ச் 16, 2023, வியாழக்கிழமை, இலண்டனில் உள்ள Credit Suisse வங்கியின் தலைமையகம் [AP Photo/Frank Augstein]

எந்தவொரு நிறுவனத்தையும் கையகப்படுத்துவதற்கு முன்பு அதற்கு பங்குதாரர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்று அதிகாரம் மூலம் மீறி எடுக்கப்பட்ட இந்த முடிவானது, திங்களன்று ஆசிய சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் கூட்டத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Credit Suisse வங்கிக்கு மத்திய வங்கியால் 54 பில்லியன் டாலர் பணப்புழக்க ஏற்பாடு செய்து தந்தது உட்பட, கடந்த வாரம் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குப் பிறகு இது நடந்துள்ளது. பின்னர் இது சுமார் 100 பில்லியன் டாலர் வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், வங்கியிலிருந்து பணம்வெளியேறும் போக்கைத் தடுக்க அது தவறியது. அதாவது கடந்த வாரம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 பில்லியன் டாலர் பணவெளியேற்றம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

Credit Suisse வங்கியை UBS வங்கி 3.25 பில்லியன் டாலர் விலைக்கு கையகப்படுத்தும் முடிவை அறிவித்து, சுவிஸ் ஜனாதிபதி அலைன் பெர்செட்  “வெள்ளியன்று பண வெளியேற்றமும், சந்தை ஏற்ற இறக்கமும் சந்தை நம்பிக்கையை மீட்டெடுப்பது இனி சாத்தியமில்லை என்பதையும், ஒரு விரைவான மற்றும் உறுதிப்படுத்தும் தீர்வு முற்றிலும் அவசியம் என்பதையும் காட்டியது”எனக்கூறினார்.

“Credit Suisse இன் கட்டுப்படுத்தமுடியாத சரிவானது நாட்டுக்கும், சர்வதேச நிதிய அமைப்புக்கும் கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தகூடும்” என்று அவர் எச்சரித்தார்.

வார இறுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான நெருக்கடிக் கூட்டங்களில் நன்கு விவாதிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுவிஸ் அரசாங்கமானது, UBS வங்கி இதன் விளைவாக சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்டும் வகையில் 9 பில்லியன் டாலருக்கு அதிகமான நிதியை அதற்கு வழங்கும். மேலும், நெருக்கடியை எளிதில் சமாளிக்க UBS வங்கிக்கு 100 பில்லியன் டாலர் கிடைப்பதற்கு மத்திய வங்கி ஏற்பாடு செய்யும். 

இருப்பினும், சுவிஸ் நிதி அமைச்சரான காரின் கெல்லர்-சுட்டர், இது ஒரு பிணையெடுப்பு அல்ல, மாறாக ‘வணிக தீர்வாகும்’ என்று கூறினார்.

அவரது செய்தியாளர் சந்திப்பின் கருத்துக்களில், Credit Suisse வங்கி நெருக்கடியின் உலகளாவிய தாக்கங்கள் பற்றி அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த திவாலான நிலைமை சுவிஸ் நிதியச் சந்தையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதோடு, அது சர்வதேச அளவில் தொற்றிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. இந்த தீர்வுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் மிகுந்த நன்றியுணர்வுடன் உள்ளன… அவர்கள் உண்மையில் Credit Suisse வங்கியின் திவால்நிலை குறித்து அஞ்சினார்கள்.”

இதே செய்தியை நிதிய ஒழுங்குபடுத்தும் நிறுவனமான FINMA உம்  வழங்கியுள்ளது. அதாவது, Credit Suisse வங்கி ‘நம்பிக்கை நெருக்கடியை’ எதிர்கொண்டுள்ளதாகவும், “அது இன்னும் வங்குரோத்தடைவதிலிருந்து மீளக்கூடியதாக இருந்தாலும், அதில் பணப்புழக்கம் குறையும் அபாயம் உள்ளது. எனவே, சுவிஸ் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளில் கடுமையான சேதங்கள் ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று அது கூறியுள்ளது.  

Credit Suisse வங்கியின் நிர்ப்பந்திக்கப்பட்ட விற்பனையானது, 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் வங்கி அமைப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதனால் மேலதிக பாதிப்புக்கள் தவிர்க்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பைனான்சியல் டைம்ஸ் ஒரு கருத்தில் குறிப்பிட்டுள்ளபடி, “இது ஐரோப்பிய வங்கிகளின் செயல்பாடுகளை நிறுத்துமா என்பது தெரியவில்லை. ஒரு நிதிய பதட்டமான  நிலையின் போது மீளுறுதி அளிப்பது ஒரு ஆபத்தான விளையாட்டாகும். இது முதலீட்டாளர்களின் அச்சத்தை உறுதிப்படுத்தும் அல்லது  அவற்றை அமைதிப்படுத்தும்”.  

Archegos Capital மற்றும் Greensill நிதி நிறுவனங்களின் சரிவின் விளைவாக பல பில்லியன் டாலர் நஷ்டத்தை Credit Suisse வங்கி எதிர்கொண்டுள்ளதாலும், அத்துடன் அதன் சில முதலீட்டு நடவடிக்கைகளில் கிடைத்த குறைந்த இலாபத்தினாலும் அது பலவீனமடைந்தது என்றாலும், அதன் வீழ்ச்சிக்கான தூண்டுதல் அதனுள்ளிருந்து தோன்றவில்லை.

மாறாக, அதன் சரிவு கடந்த ஆண்டு நிதிச் சூழலில் ஏற்பட்ட பரந்த மாற்றத்தின் வெளிப்பாடாகும். அதாவது, அமெரிக்க மத்திய வங்கியின் தலைமையிலான மத்திய வங்கிகள் பல்வேறு வடிவங்களில் ‘அதிகளவு பணத்தை அச்சிட்டு வெளியிடுதலின்’ கீழ் 15 ஆண்டுகளுக்கு அடிப்படையில் குறைந்த வட்டியில் நிதி வழங்கியதன் பின்னர் வட்டி விகிதங்களை விரைவாக உயர்த்தியுள்ளன.  

இது அமெரிக்க Silicon Valley வங்கி சரிவடைந்த போது ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, வங்கி 40 பில்லியன் டாலர் மதிப்புடன் இயங்கத் தொடங்கியதன் பின்னர் Federal Deposit Insurance Corporation ஆல் அது கையகப்படுத்தப்பட்டது. 

Credit Suisse வங்கியில் 10 சதவீத பங்குகளைக் கொண்ட அதன் நிதி வழங்குனர்களில் ஒன்றான சவுதி தேசிய வங்கியானது, அதில் இனி எந்த முதலீடும் செய்யப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து கடந்த வாரம் Credit Suisse கடுமையான அழுத்தத்திற்கு உள்ளானது. பின்னர் சுவிஸ் மத்திய வங்கி இதற்கு 50 பில்லியன் டாலர் கடன் வழங்கியது. ஆனால் இது நெருக்கடியைத் தணிப்பதற்கு பதிலாக இன்னும் தீவிரப்படுத்தியதாகத் தோன்றிய நிலையில், வார இறுதியில் அவசரக் கூட்டங்களை நடத்துவதற்கு இட்டுச்சென்றது. 

Credit Suisse வங்கி பல தசாப்தங்களாக ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த வங்கியாக இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த வங்கி அரை டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வங்கி இருப்புநிலை அறிக்கையை கொண்டிருந்ததுடன், உலகளவில் 50,000 ஊழியர்களைக் கொண்டிருந்தது. தற்போது இந்த வங்கியை UBS கையகப்படுத்துவதால் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.  

இவ்வங்கி கையகப்படுத்தப்படுவதும் மற்றும் அதனால் அது வெளிப்படுத்தும் நெருக்கடியும் நிதி அமைப்பின் பிற பகுதிகளிலும் வெளிப்படும் என்ற அச்சம் தெளிவாக உள்ளது. Credit Suisse இன் முடிவோடு இணைந்து, பெடரல் வங்கியும் மற்ற ஐந்து முக்கிய மத்திய வங்கிகளும் போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்யும் வகையில், உலகளாவிய நிதிய அமைப்பில் டாலர்களின் புழக்கத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. 

ஐரோப்பிய அதிகாரிகளின் கவலைகளில் ஒன்று, “Credit Suisse பங்குதாரர்கள் மற்றும் பத்திரதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான நஷ்டங்களால்” வங்கி கொண்டிருக்கும் கடன் சுமையால் “இந்த வாரம் வங்கி நிதிச் சந்தையில் அழுத்தம் அதிகரிக்கக்கூடும்” என்பதாகும் என்று பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

ஒரு கூட்டறிக்கையில், மத்திய வங்கிகள் இன்று முதல் ‘உலகளாவிய நிதிச் சந்தைகளில் உள்ள அழுத்தங்களைத் தணிக்க’ டாலர்களின் ஏலங்களை வாராந்திரம் அல்லாமல் நாளந்தம் நடத்தும் என்று அறிவித்துள்ளன.

அட்லாண்டிக்கின் மறுபக்கத்தில், Silicon Valley வங்கியின் (SVB) சரிவால் ஏற்பட்ட நெருக்கடி இன்னும் குறையாமல் தீவிரமடைந்து வருவதற்கான அறிகுறிகள் அங்கு உள்ளன. அதாவது, இன்று சந்தைகள் திறக்கும் போது, Silicon Valley இன் அழிவால் ‘தொற்றுதலால்’ முதலில் பாதிக்கப்பட்ட First Republic வங்கியின் மீது கவனம் செலுத்தப்படும்.  

கடந்த வாரம், அமெரிக்க கருவூலச் செயலாளரான ஜேனட் யெல்லனின் ஒத்துழைப்புடன், JPMorgan Chase மற்றும் அதன் தலைமை நிறைவேற்று அதிகாரியான ஜேமி டைமன் ஆல் ஊக்குவிக்கப்பட்ட 11 முக்கிய வங்கிகள், SVB போல, வைப்புத்தொகையாளர்கள் பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற கவலையைப் போக்கும் வகையில், தங்களுக்கு இடையே 30 பில்லியன் டாலர்களை கையிருப்பு நிதியாக வைக்க முடிவு செய்துள்ளன.   

ஆனால் இதுவரை, குறைந்தபட்சம், இந்த திட்டம் செயல்படுவதாகக் கூட தெரியவில்லை. 30 பில்லியன் டாலர் வரவு இருந்தபோதிலும், வங்கியின் பங்குகள் வெள்ளியன்று 30 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்ததானது, SVB சரிவில் இருந்து காணப்பட்ட மொத்த இழப்பை 70 சதவீதத்திற்கும் அதிகமாக்கியுள்ளது.

First Republic வங்கியும் SVB ஐ போன்ற அதே பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்தபோது, அது முதலீடு செய்திருந்த அமெரிக்க கருவூலங்கள் மற்றும் பிற நிதிச் சொத்துக்களின் சந்தை மதிப்பானது, மத்திய வங்கியால் தொடங்கப்பட்ட வட்டி விகித உயர்வுகளின் காரணமாக இப்போது அவற்றின் பதியப்பட்ட மதிப்பைக் காட்டிலும் குறைவாக உள்ளது. அதாவது, வைப்புத் தொகையாளர்களின் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவற்றை விற்க நேரிட்டிருந்தால் அது குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்திக்கும். 

நிதிய ஆய்வாளர்கள் First Republic வங்கி சரிவடையும் என்கிறார்கள். Loomis Sayles நிறுவனத்தின் உலகளாவிய ஆய்வாளரான ஜூலியன் வெல்லஸ்லி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம், “தனித்த ஒரு அலகாக இது சாத்தியமானதா என்பது தெளிவாக இல்லை” என்று கூறினார்.

வங்கி செயல்திறனைக் கண்காணிக்கும் நிதி நிறுவனமான KBW இன் ஆய்வாளர்கள், கடந்த வாரத்தில் First Republic வங்கியின் இருப்புநிலை அறிக்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ‘அதிர்ச்சியூட்டுவதாக’ இருப்பதாகவும், மற்றும் பொதுப்பங்குகளின் ஈவுத்தொகையை நிறுத்துவதற்கான அதன் முடிவையும் வைத்துப் பார்த்தால், நிறுவனம் மற்றும் பங்குதாரர்களின் ‘மிகவும் மோசமான கண்ணோட்டம்’ தெரிய வருவதாகவும் கூறியுள்ளனர்.    

வெள்ளியன்று ஒரு குறிப்பில், Wedbush நிதி நிறுவனத்தின் ஆய்வாளர்கள், எந்தவொரு விற்பனையிலும் வங்கியின் கடன்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்பில் குறிப்பிடப்பட்டதன் காரணமாக வங்கி விற்கப்பட்டால் அதில் ‘குறைந்தபட்சம் அல்லது ஏதேனும் இருந்தாலும்’ அவற்றில் எஞ்சிய மதிப்பு இருக்காது என்று கூறியுள்ளனர்.

வங்கி அமைப்பு முழுவதும், குறிப்பாக ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கிகளில் பிரதிபலிக்கும் SVB நெருக்கடி  ஆனது, காப்பீடு செய்யப்படும் வைப்பு நிதிகளின் தொகையை 250,000 டாலருக்கு உயர்த்துவதற்கான அழைப்புக்களைத் தூண்டியுள்ளது.

இது அரசியல் ஸ்தாபகத்தினுள்ளும் மற்றும் வங்கித் தொழில் ஆதரவாளர்களின் கூடிய பிரிவினரிடையே ஆதரவைப் பெற்றுள்ளது.

அத்தகைய நடவடிக்கையால் பயனடையும் பெரும் பணக்காரர்களின் எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எலிசபெத் வாரன், ஞாயிற்றுக்கிழமை CBS இடம் 250,000 டாலர் அளவிற்கு காப்புறுதியை உயர்த்துவது ஒரு ‘நல்ல நடவடிக்கையாகும்’ என்று கூறினார்.

அவர், புதிய வரம்பு என்பது ‘2 மில்லியன் டாலரா? 5 மில்லியன் டாலரா? 10 மில்லியன் டாலரா?’ என்று கேள்வி எழுப்புகிறார். 

சிறிய நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு ஊதியம் மற்றும் அவற்றின் பயன்பாட்டு செலவுகளுக்கு ஆதரவளிப்பதற்கு மாறாக, பெரும் செல்வந்த முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கக்கூடிய அத்தகைய நடவடிக்கையை வாரன் மூடிமறைக்க முயன்றார். (அதாவது, காப்புறுதி செய்யப்படாத வைப்புத்தொகையாளர்களுக்கு முழுமையாக பணம் செலுத்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்றால், SVB இல் உள்ள வைப்புத் தொகையாளர்களில் ஒருவரான ஆபத்து முதலீட்டாளரான (venture capitalist) பீட்டர் தியேல் போன்றவர் 5 மில்லியன் டாலரை இழக்க நேரிடும்) 

தீவிரமடைந்து வரும் நிதி நெருக்கடியின் மற்றொரு அம்சமான வங்கிகளின் நிலைமைகள் குறித்த தலைப்புச் செய்திகளை போல இல்லாவிட்டாலும், அதைப்போல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது என்னவெனில் உலக நிதிய அமைப்பின் அடித்தளமான 22 பில்லியன் டாலர் அமெரிக்க கருவூலச் சந்தையில் உள்ள நிலைமையாகும். 

வார இறுதியில் வெளி வந்த ஒரு பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை, கடந்த வாரம் அமெரிக்க அரசாங்கக் கடனுக்கான சந்தை 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் அதன் மிகவும் ஸ்திரமற்ற காலகட்டத்தை சந்தித்ததாகக் குறிப்பிட்டது. “SVB இன் தோல்வி அரசகருவூலங்களின் பாதுகாப்புக்கான அலையை தூண்டியுள்ளதால்” தினசரி வர்த்தக அளவுகள் இருமடங்காக அதிகரித்துள்ளன. இதுவரை, ஆய்வாளர்கள் சந்தையின் செயல்பாடுகள் பெரிய அளவில் நடைபெற்றதாகக் கூறியுள்ளனர். ஆனால் அது எந்த நேரத்திலும் மாறக்கூடும். 

TD Securities நிறுவனத்தின் உலகளாவிய விகித ஆராய்ச்சியின் தலைவரான பிரியா மிஸ்ரா, “கருவூல சந்தை பணப்புழக்கத்தின் ஒரு முழுமையான முறிவிலிருந்து நாங்கள் இன்னும் ஒரு நெருக்கடியே தள்ளி இருக்கிறோம்” என்று கூறியதை கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது. 

Loading