உக்ரேனில் ஜேர்மன் போர்க் கொள்கையை விமர்சித்ததற்காக சமாதான ஆர்வலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ஜேர்மனியின் போர்க் கொள்கைக்கு எதிராக பகிரங்கமாக பேசியதற்காக, பேர்லின்-ரியர்கார்டன் மாவட்ட நீதிமன்றம் சமாதான ஆர்வலர் ஹென்ரிச் புக்கருக்கு, ஜனவரி மாதம் தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பு அடிப்படை ஜனநாயக உரிமைகளான பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரத்தின் மீதான பாரிய தாக்குதலாகும். இது றைரஸ்வெயர் (ஆயுதப் படைகள்) மறுஆயுதமாக்கப்படுவதை எதிர்த்த கார்ல் வொன் ஒஸிட்ஸ்கியைப் போல வைமார் குடியரசில் இராணுவ-எதிர்ப்புவாதிகள் துன்புறுத்தப்பட்டதை நினைவூட்டுகிறது.

புக்கர் நாஜி ஆட்சியின் துன்புறுத்தப்பட்டவர்களின் சங்கமான பாசிச எதிர்ப்பு குழு (VVN-BdA) மற்றும் இடது கட்சியின் உறுப்பினராக உள்ளார். அவர் பேர்லினில் COOP எனப்படும் போர் எதிர்ப்பு சிற்றுண்டி கடையை நடத்துகிறார், அங்கு இராணுவ எதிர்ப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஜூன் 22, 2022 அன்று, சோவியத் யூனியனின் நாஜி ஜேர்மனியின் படையெடுப்பின் 81வது ஆண்டு தினவிழாவில், பேர்லினின் ட்ரெப்டோ பூங்காவில் உள்ள சோவியத் நினைவிடத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அதில் உக்ரேனில் உள்ள முன்னாள் நாஜி ஒத்துழைப்பாளர்களுடன் ஜேர்மன் அரசியல்வாதிகளின் கூட்டு ஒத்துழைப்பைக் கண்டித்து, ரஷ்ய ஜனாதிபதியின் கருத்துக்ளுடனான தனது புரிந்துணர்வை வெளிப்படுத்தினார். 

சோவியத் யூனியன் மீதான ஜேர்மன் தாக்குதலின் 81வது ஆண்டுதின விழாவில் ஹென்ரிச் புக்கர் உரையாற்றிய போது [Photo by Screenshot AntikriegTV]

இதன் விளைவாக, உள்ளூர் நீதிமன்றத்தின் நீதிபதி ரோபியாஸ் போல்மேன், புக்கருக்கு 2,000€ அபராதம் அல்லது 40 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தார். குற்றவியல் சட்டப்பிரிவு 140ன் கீழ் அவரது குற்றவியல் குற்றம், 'ஒரு கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு குற்றத்தை (சர்வதேச குற்றவியல் சட்டத்தின் பிரிவு 13 இன்படி) பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்டது' என்ற முடிவிற்கு வந்தது.

தீர்ப்பு ஒரு சுருக்கமான தண்டனை உத்தரவாக வெளியிடப்பட்டது. இது பிரதிவாதியின் வாய்வழி விசாரணை மற்றும் சாட்சிகளின் விசாரணைக்கு உரிமை வழங்காது. தண்டனை ஆணை வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் பிரதிவாதி மேல்முறையீடு செய்யலாம்.  அதை புக்கனர் செய்ததாக கூறப்படுகிறது. அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால், தண்டனை உத்தரவு இறுதித் தீர்ப்பாகக் கருதப்படுவதுடன், மேலும் அதற்கு எதிரான மேல்முறையீடுகள் இனி சாத்தியமில்லை.

இந்த தண்டனை ஆணை, புக்கனர் தனது உரையில், 'அவர் சட்டவிரோதம் என அறிந்திருந்த சர்வதேச சட்டத்தை மீறிய உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை' அங்கீகரித்ததாகக் கூறுகிறது. இதை நிரூபிக்க, உரையில் இருந்து ஒரு நீண்ட பத்தி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, அதன் முழு வார்த்தைகளும் இங்கே (ஜேர்மன் மொழியில் https://www.jungewelt.de/artikel/443425.vernichtungskrieg-der-nazis-wir-werden-nicht-vergessen.html) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள் காட்டப்பட்ட பத்தியில், உக்ரேனில் தீவிர வலதுசாரி சக்திகளுடன் ஒத்துழைப்பதை புக்கர் எதிர்க்கிறார்:

1941 இல் ஜேர்மன் [நாஜி] குடியரசில் தனக்கு விரும்பிய உதவியாளர்களைக் கண்டறிந்த அதே ரஸ்ய எதிர்ப்பு சித்தாந்தங்களை ஜேர்மன் அரசியல்வாதிகள் மீண்டும் ஆதரிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்த உதவியாளர்களுடன் நெருக்கமாக இணைந்து கூடிக்கொலை செய்தனர் ஜேர்மன் வரலாற்றின் பின்னணியில், இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான யூதர்கள் மற்றும் மில்லியன் கணக்கான சோவியத் குடிமக்களின் வரலாறு ஆகியவற்றின் பின்னணிக்கு எதிராக உக்ரேனில் உள்ள இந்த சக்திகளுடன் எந்தவொரு ஒத்துழைப்பையும் அனைத்து கண்ணியமான ஜேர்மனியர்கள் நிராகரிக்க வேண்டும். உக்ரேனில் இந்தப் படைகளிடமிருந்து வெளிப்படும் போர்ப் பேச்சுக்களை நாம் கடுமையாக நிராகரிக்க வேண்டும். ஜேர்மனியர்களாகிய நாம் மீண்டும் ஒருபோதும் ரஷ்யாவிற்கு எதிரான எந்தவொரு போரிலும் ஈடுபடக்கூடாது. இந்த பைத்தியக்காரத்தனத்தை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.

இந்த சூழலில், அவர் ரஷ்ய கண்ணோட்டத்தை விளங்கிக் கொள்ள அழைப்பு விடுத்தார்:

உக்ரேனில் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கான ரஷ்ய காரணங்களையும், ரஷ்யாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் அரசாங்கத்தையும் அவர்களின் ஜனாதிபதியையும் ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதையும் நாம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில், நான் ரஷ்யா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பார்வையை புரிந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு ரஷ்யா மீது அவநம்பிக்கை இல்லை. ஏனென்றால் ஜேர்மனியர்கள் மற்றும் ஜேர்மனிக்கு எதிரான பழிவாங்குவதை நிறுத்துவது 1945 முதல் சோவியத்யூனியனினதும் பின்னர் ரஷ்ய கொள்கையையும் தீர்மானித்தது.

எப்படி, ஏன் புக்கர் ரஷ்யாவின் படையெடுப்பை 'ஒப்புக்கொள்கிறார்', என்பதை பேர்லின் மாவட்ட நீதிமன்றம் ஒரு எழுத்து மூலம் விவரிக்கவில்லை. ஏதோவொன்றிற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்கும், விளங்கிக்கொள்வதற்குமான அழைப்பானது சம்மதமளிப்பதிலிருந்து  முற்றிலும் வேறுபட்டது. இல்லையெனில், மனநல மதிப்பீட்டாளர்களின் பணியானது வரலாற்றாசிரியர்கள், சமூகவியலாளர்கள், மத்தியஸ்தர்கள் அல்லது பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கூட சாத்தியமற்றது. மற்றவர்களின் செயல்களைப் புரிந்துகொள்வதற்கான எந்த முயற்சியும் அதற்கு உடந்தையாக இருப்பதாகக் கருதப்படும்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 140 அரசியலமைப்பின் 5 வது பிரிவின் கீழ் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை கடுமையாக பாதிக்கிறது என்பதால், உச்ச நீதிமன்றம் தனது வழக்குத்தீர்ப்பினை  உயர்ந்த மட்டத்தில்  அமைத்துள்ளது. 'உறுதியான காரணங்கள் இல்லாமல்   சாத்தியமான விளக்கங்கள் விலக்கப்பட்ட தண்டனைக்கு வழிவகுக்கும் விளக்கம் ஒரு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டால்' ஒரு அறிக்கை பற்றிய தண்டனை ஏற்கனவே சட்டவிரோதமானது. அவ்வாறு செய்யும்போது, நீதிமன்றங்கள் 'வார்த்தையின் அடிப்படையில் அறிக்கையைச் சுற்றியுள்ள உள்ளடக்கத்தையும் பிற சூழ்நிலைகளையும்' கருத்தில் கொள்ள வேண்டும்.

புக்கர் தனது கருத்தை வெளிப்படுத்திய உள்ளடக்கத்தை மாவட்ட நீதிமன்றமே ஒப்புக்கொண்டது. அதாவது சோவியத் யூனியனுக்கு எதிரான அழித்தொழிப்புப் போருக்கான நினைவு நிகழ்வில், ரஷ்யாவிற்கு எதிராக ஜேர்மனியின் புதுப்பிக்கப்பட்ட போரையும், அந்த நேரத்தில் ஹிட்லரின் உக்ரேனிய கூட்டாளிகளின் பாரம்பரியத்தில் இருக்கும் அதன் நிலையை  மறைக்காத ஆட்சிக்கான ஆதரவையும் அவர் எதிர்த்தார். 

இது மிகைப்படுத்தப்பட்டதல்ல என்பதை நீதிபதி போல்மன் தனது தண்டனை உத்தரவில் கையெழுத்திடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு உக்ரேனின் நாடாளுமன்றமான ராடா அடிக்கோடிட்டுக் காட்டியது. 

பாசிச வெகுஜன கொலைகாரன் ஸ்டீபன் பண்டேராவின் பிறந்தநாளில், ராடா பண்டேராவின் உருவப்படத்தின் கீழ் உக்ரேனிய ஆயுதப்படைகளின் தளபதி வலேரி சலுஷ்னியின் படத்தை வெளியிட்டது. பண்டேரா, 'உக்ரேனிய தேசியவாதத்தின் முழுமையான மற்றும் இறுதி வெற்றி ரஷ்ய சாம்ராஜ்யம் இல்லாதபோது மட்டுமே வெல்லப்படும்' என்று அதில் மேற்கோள் காட்டப்பட்டது. ராடா மேலும் கூறுகையில், “நாங்கள் தற்போது ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கு எதிராக போராடி வருகிறோம். மேலும் ஸ்டீபன் பண்டேராவின் வழிகாட்டுதல்கள் பற்றி தற்போதைய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதிக்கு நன்கு தெரியும்” எனக்குறிப்பிட்டார்.

போர் தொடங்கியதில் இருந்து, ஜேர்மனிய அரசாங்கம் உக்ரேனுக்கு 2 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுத விநியோகத்துடன் ஆதரவளித்ததாகக் கூறுகிறது. மற்றொரு 2.2 பில்லியன் யூரோக்கள் 2023 இல் கொடுப்பதற்கு ஏற்கனவே உறுதியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஊடகங்களிலும் உத்தியோகபூர்வ உரையாடல்களிலும், இந்தப் போர்க் கொள்கையின் மீதான எந்த விமர்சனமும் நசுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான அழைப்பு கூட தேசத்துரோகமாகக் கருதப்படுகிறது.

இந்த பின்னணியில், நீதிமன்றத்தால் மேற்கோள் காட்டப்படாத ஒரு பத்தியில், புக்கர் பின்வருமாறு கூறினார், 'பெரும் முயற்சியுடன் ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும்  இடையே கட்டமைக்கப்பட்ட அனைத்து நட்பு உறவுகளும் இப்போது துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளன, உண்மையில் அவை அழிக்கப்படலாம்.' மேலும் அவர் 'ஐரோப்பாவில் ரஷ்யாவுடன் ஒரு வளமான, நியாயமான மற்றும் அமைதியான அண்டை நாடாக நிற்க வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார்.

ரஷ்யாவுடன் சமாதானத்தை ஆதரித்ததற்காகவும், உக்ரேனில் உள்ள வலதுசாரி, ரஷ்ய-விரோத ஆட்சிக்கான ஆதரவை எதிர்த்ததற்காகவும் புக்கரை மாவட்ட நீதிமன்றம் தண்டித்துள்ளது. இதிலிருந்து, ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஜேர்மன் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் மட்டுமே முன்கொண்டு வர முடியும்.

ஒரு குற்றத்திற்கு 'ஒப்புதலளித்தல்' என்பதற்கு மேலாக குற்றவியல் சட்டத்தின் 140 வது பிரிவின் கீழ் ஒரு தண்டனையானது 'பொது அமைதியை சீர்குலைக்கின்றது' என்பதும் தேவைப்படுகிறது. இதுதான் இப்போதுள்ள வழக்கு என்று, மாவட்ட நீதிமன்றம் சுருக்கமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத மொழியில் இவ்வாறு நியாயப்படுத்தியது:

ஜேர்மனிக்கு யுத்தம் ஏற்படுத்தும் கணிசமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையைக் குலைக்கவும், நீங்கள் ஏற்றுக்கொண்டதைப் போல உங்கள் பேச்சு ஆற்றலைக் கொண்டுள்ளது. உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் நேட்டோ உறுப்பினராக ஜேர்மனிக்கு எதிராக ஜேர்மனியில் தஞ்சம் அடைந்த உக்ரேனில் இருந்து நூறாயிரக்கணக்கான மக்கள் இருப்பதைக் கருத்தில் கொள்ளாது ரஷ்ய தலைமையின் ஒரு பகுதி அச்சுறுத்தலானது  மக்களிடையே உளவியல் சூழலைத் தூண்டிவிடுவதாக இருக்கின்றது. 

புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால், ஜேர்மன் போர்க் கொள்கையை விமர்சிக்கும் எவரும் அரசின் மீதான நம்பிக்கையை அசைத்து மக்களைக் கிளர்ந்தெழச் செய்கிறார்கள் என்பதே இதன் பொருள். அதனால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகும். 

'பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக' புக்கனர் மீது குற்றம் சாட்டுவது வெளிப்படையாக அபத்தமானது. அவரது உரையில், அவர் ரஷ்யாவுடன் அமைதியான சகவாழ்வை ஊக்குவித்தார் மற்றும் பாசிச கருத்துக்களை மறுவாழ்வளிப்பதற்கு எதிராக எச்சரித்தார். 

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக ஜேர்மனியும் நேட்டோவும் நடத்தி வரும் போரை WSWS மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei -SGP) திட்டவட்டமாக நிராகரிக்கின்றன.

எனவே, ரஷ்ய தன்னலக்குழுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் ரஷ்ய தேசியவாதத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான மரபுகளை அடித்தளமாகக் கொண்ட புட்டின் ஆட்சிக்கு எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை.

ஆனால் புக்கருக்கு எதிரான தீர்ப்பு அதுவல்ல. மாறாக, இது ஜேர்மன் இராணுவவாதத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அச்சுறுத்தி மௌனமாக்குவதாகும். எதிரியாகக் குறிக்கப்பட்ட ஒரு தேசத்தை  பேய்த்தனமாக சித்தரிப்பதை  எதிர்ப்பதும்,  அதனுடன் 'புரிந்துகொண்டு' மற்றும் 'அமைதியான அண்டை நாடாக' இருக்கவேண்டும் என்பதும் அவரை குற்றமுள்ளவராக்குகின்றது. எனவே இந்த தண்டனையை நிராகரிக்க வேண்டும்.

புக்கருக்கு எதிரான குற்றவியல் உத்தரவு ஜனநாயக உரிமைகள் மீதான புதிய தாக்குதல்களுடன் இணைகிறது. பேர்லினில், கடந்த ஆண்டு மே 8ம் திகதி, அவுட்விட்ஸ் (நாஜிக்களின் கொடிய சித்திரவதை முகாம்) விடுவிக்கப்பட்ட, பாசிசத்தில் இருந்து விடுதலை பெற்ற நாளில் போது சோவியத் கொடியைக் காட்சிப்படுத்துவது பொலிஸால் தடை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நக்பா தினத்தன்று அனைத்து பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, மத்திய நாளாளுமன்றம் மக்களைத் தூண்டும் சட்டத்தின் பத்தியை இறுக்கியது. இப்போது, பேய் பிடித்த ஒரு நாடாக சித்தரிக்கப்படும் ஒன்றின் மீது செய்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி கேள்வி எழுப்பும் எவரும் தண்டனையை எதிர்கொள்கிறார்கள்.

அரசியலமைப்பைப் பாதுகாக்கும் அலுவலகம் எனக்குறிப்பிடப்படும்  ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை நிறுவனம் 'ஒரு ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்காக' போராடுவதால் 'இடதுசாரி தீவிரவாதி' என்று அவதூறாகப் பேசப்பட்டு, சோசலிச சமத்துவக் கட்சியை உளவு பார்ப்பதற்கு  பேர்லின் நிர்வாக நீதிமன்றமும் உயர் நிர்வாக நீதிமன்றமும் தங்கள் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளன. 

ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி தனது எதிர்ப்பை அறிவித்து, அவதூறான தீர்ப்புகளுக்கு எதிராக அரசியலமைப்புப் புகாரை தாக்கல் செய்துள்ளது. இது 'அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது' என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஜேர்மன் அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராக நடத்தும் பினாமி யுத்தம், ஹிட்லருக்குப் பிறகு மிக விரிவான மறுஆயுதமயமாக்கல், மற்றும் பணவீக்கம், ஊதியக்குறைப்பு மற்றும் பாரிய பணிநீக்கங்களை   எதிர்கொள்ளும் நிலையில் தொழிலாளர்கள் மீதான மூர்க்கத்தனமான வர்க்கக் கொள்கை தாக்குதல்களை எதிர்ப்பவர்களை அல்லது அதை அதன் பெயரால் அழைப்பவர்களையும், இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக பேசும் எவரையும் மௌனமாக்குவதே அதன் நோக்கமாகும். 

புக்கருக்கு எதிரான நடவடிக்கை மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Loading