உக்ரேன் போர் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு எதிராக பேர்லினில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமையன்று, சோசலிச சமத்துவக் கட்சி(Sozialistische Gleichheitspartei (SGP, ) பேர்லினில் உள்ள போஸ்டாமர் பிளட்ஸ் இல் ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு பேரணியை நடத்தியுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது பேர்லின் மாநில பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய பேரணியாக  இருந்தது. இப்பிரச்சாரத்தை போர் மற்றும் சமூக செலவின வெட்டுக்களுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்சி நடத்தி வருகிறது.

போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு பரவலான எதிர்ப்புக்கு குரல் கொடுப்பதையும், சோசலிச முன்னோக்குடன் அதை ஆயுதபாணியாக்க போராடுவதையும் பேரணியின் வலுவான பிரதிபலிப்புக் காட்டுகிறது. உக்ரேனில் ஆளும் வர்க்கத்தின் போரையும் அணுவாயுதங்களால் நடத்தப்படும் மூன்றாம் உலகப் போரின் அபாயத்தையும் எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.

இந்த படத்தொகுப்பை பார்க்க அம்புக்குறியை அழுத்தவும்

உலக சோசலிச வலைத் தளத்தின் ஜேர்மன் மொழிப் பதிப்பின் தலைமை ஆசிரியர் ஜோஹன்னஸ் ஸ்டெர்ன் தனது அறிமுகக் குறிப்புகளில், அதே இடத்தில் போருக்கு எதிராகவும் ஜேர்மன் அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட அழைப்பு விடுத்த புரட்சிகர சோசலிஸ்ட் கார்ல் லிப்க்னெக்ட்டை நினைவு கூர்ந்தார்.:

முதல் உலகப் போரின் பாரிய மரணத்தின் மத்தியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், ஒரு சக்திவாய்ந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியாகும். இந்த இயக்கம் ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியிலும், ஒரு வருடம் கழித்து ஜேர்மனியில் நவம்பர் புரட்சியிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது. இது இறுதியாக போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. எங்கள் பேரணி இந்த பாரம்பரியத்தில் உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கிறிஸ்ரோப் வண்ட்ரேயர், மத்திய அரசாங்கத்தின் போர்க் கொள்கையையும், சாரா வாகன்கினெக்ட் போன்ற தேசியவாத பேச்சுவாதிகளின் பிற்போக்குத்தனமான கொள்கையையும் கடுமையாகக் கண்டித்தார். 'உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள போர்வெறியர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே போரை நிறுத்த முடியும்' என்று வாண்ட்ரேயர் கூறினார். 'அன்று லிப்க்னெக்ட்டைப் போலவே, நாங்கள் இன்று சொல்கிறோம்: முக்கிய எதிரி உள்நாட்டில் இருக்கிறார்! ஜேர்மன் ஏகாதிபத்தியம், ஜேர்மன் போர்க் கட்சி, ஜேர்மன் இரகசிய இராஜதந்திரம்! என்பவையே அவையாகும்”

அதே நேரத்தில், வான்ட்ரேயர் முதலாளித்துவ ஊடகங்களின் பொய்யான போர் பிரச்சாரத்தை நிராகரித்து மற்றும் ஜேர்மன் மற்றும் மேற்கத்திய போர் விரிவாக்கத்தால் உக்ரேனில் உள்ள மக்களே முதலில் பாதிக்கப்படுகின்றனர் என்று அறிவித்தார். 'மதிப்பீடுகளின்படி, ஏற்கனவே 100,000 உக்ரேனியர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். போர் டாங்கிகளை அனுப்பும் முடிவு இந்த எண்ணிக்கையைக் குறைக்காது, ஆனால் அதை மேலும் உயர்த்துகிறது!”

அவர் தொடர்ந்தார்: 'கிரிமியாவை உக்ரேன் மீண்டும் கைப்பற்றுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு என்பது ரஷ்யாவிற்கு எதிரான பேரழிவுகரமான அணுசக்தி யுத்தத்தை வேண்டுமென்றே ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறில்லை.'

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, முதலாளித்துவ உயரடுக்கின் நலன்களுக்காகப் போர் நடத்தப்படுகிறது என்று அவர் அறிவித்தார்.

வாண்ட்ரேயர் தொடர்ந்து விளக்கினார்:

DAX (ஜேர்மன் பங்குச் சந்தை) பெருநிறுவனங்கள் சாதனை இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்படுகிறார்கள்! பகல்நேர பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் பயங்கரமான மறுசீரமைப்புக்கு நிதியளிப்பதற்காக தங்கள் வரவு செலவுத் திட்டங்களைக் குறைக்கின்றன.

சமூக ஜனநாயகவாதிகளினதும் பசுமைவாதிகளினதும் போர்வெறி இடது கட்சியால் ஆதரிக்கப்படுகிறது என வாண்ட்ரேயர் வலியுறுத்தினார். அதன் முன்னணி வேட்பாளர் கிளவுஸ் லேடரர் உக்ரேனிய இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று கோருகிறார். மேலும் ஒரு உண்மையான இராணுவவாதியைப் போல இதை விமர்சிக்கும் எவரையும்  'வெளிப்படையாக' புட்டினுடன் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்.” 

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சோசலிச சமத்துவக் கட்சியினதும், அதன் சகோதரக் கட்சிகளின் இளைஞர் மற்றும் மாணவர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) சார்பாகப் பேசிய கிரிகோர் லிங்க், உலகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் இளம் தொழிலாளர்கள் கடந்து வந்த அரசியல் அனுபவங்களை சுருக்கமாகக் கூறினார். 

போர், சமூகச் செலவு வெட்டுக்கள், சுற்றுச்சூழல் அழிவு மற்றும் சர்வாதிகாரம் ஆகிய முதலாளித்துவத் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் பங்கேற்று புரட்சிகர சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் முன்னணிப் பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு அனைத்து போலி-இடது போக்குகளிலிருந்தும் உடைத்துக்கொள்வது தேவையாகும். அப்போக்குகளின் பங்கு இளைஞர்களை முதலாளித்துவ அமைப்புடன் பிணைப்பதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச முன்னோக்கு அதன் சர்வதேச சகோதர கட்சிகளின் பல வாழ்த்து செய்திகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அவை பேரணியில் வாசிக்கப்பட்டன. அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், உக்ரேனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பல தசாப்த கால போர்க் கொள்கையைத் தொடர்கிறது. இன்று ரஷ்யாவை அடிபணிய வைப்பதிலும் சீனாவுக்கு எதிராகப் போரை நடத்துவதிலும் கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.

ரஷ்ய சோசலிஸ்டுகளின் வாழ்த்துக்கள், தூக்கி எறியப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான புட்டின் ஆட்சி அணுவாயுதங்களை நாடக்கூடும் என்று எச்சரித்தது. மேலும் ரஷ்யாவில் உள்ள தொழிலாள வர்க்கமும் போருக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டது.

பிரான்சின் மக்ரோன் மற்றும் பிரித்தானியாவின் சுனக் அரசாங்கங்களின் போர் மற்றும் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய பாரிய வேலைநிறுத்தங்கள் வளர்ச்சியடைந்து வருவதாக பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சிகளின் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றன.

பேச்சாளர்கள் அனைவரும் வலியுறுத்தியதைப் போல, ஜேர்மனியிலும் வேகமாக வளர்ந்து வரும் இந்த எதிர்ப்புக்கள், போரை நிறுத்துவதற்கும் மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதற்கும் அடிப்படையாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின்  ஸ்தாபக உறுப்பினரும் நீண்டகாலத் தலைவருமான உல்றிச் றிப்பேர்ட், உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு 'தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை உடைத்து' சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைப்பது அவசியம் என்று கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணி இதை நிரூபித்ததாக அவர் வலியுறுத்தினார்:

அரசியலிலும் ஊடகங்களிலும் போர்ச் சதியை தொடர்ந்து எதிர்க்கின்ற, அடிபணிந்து செல்லாத, பயமுறுத்தப்படமுடியாத  ஒரு கட்சி இருக்கிறது. ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மூன்றாம் உலகப் போர் மற்றும் அணுசக்தி பேரழிவின் ஆபத்தை எங்கள் கட்சி எதிர்க்கிறது.

மனித வரலாற்றில் மிகப் பெரிய குற்றங்களுக்கு வழிவகுத்த ஹிட்லர் ஆட்சிக்கு வந்து தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ராலினிசத்திற்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் படிப்பினைகள் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற றிப்பேர்ட் மேலும் கூறினார்:

சோசலிசம் கடந்த காலம் அல்ல, எதிர்காலமாகும்! சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை இங்கு கூடி பார்த்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த எதிர்காலம் தங்கியுள்ளது. இன்று, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு புதிய பரந்தளவில் சோசலிசக் கட்சி கட்டப்பட்டால் மட்டுமே மூன்றாம் உலகப் போரைத் தடுக்க முடியும்.

Loading