இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தைப்பொங்கல் பண்டிகையின் போது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பயணம் நூற்றுக்கணக்கான தமிழர்களின் எதிர்ப்பைத் தூண்டியது. “காணாமல் போன எமது மக்களை மீட்டுக்கொடுங்கள்”, “அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்”, “இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை கைவிடு” போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

15 ஜனவரி 2023 அன்று ஜனாதிபதி விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது, 'காணாமல் போனவர்களின்' உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தயாராகின்றனர். [Photo by Mayurapriyan]

இந்தியா, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையின் போதான விக்கிரமசிங்கவின் விஜயம், இலங்கையின் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் பற்றி பாசாங்குத்தனமாக அக்கறையை வெளிப்படுத்தும் கசப்பான மற்றும் இழிந்த முயற்சியாகும்.

விக்கிரமசிங்கவின் 'கவலைகள்' என்பது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிதிய நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் மீதும் கிராமப்புற மக்கள் மீதும் சுமத்துவதற்கு தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

'காணாமல் போனவர்கள்' என்போர், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 26 வருட இரத்தக்களரி யுத்தத்தின் போது இராணுவத்தால் கடத்தப்பட்ட அல்லது சரணடைந்த தமிழ் இளைஞர்கள் ஆவர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2009 மே மாதம் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில் சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் விக்ரமசிங்கவின் அரசாங்கம் 'காணாமல் போனவர்களுக்கு' இறப்புச் சான்றிதழை வழங்குவதாகவும், அன்புக்குரியவர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100,000 ரூபாய் (270 டொலர்) இழப்பீடு வழங்கும் என்றும் அறிவித்தமையால் இலங்கைத் தமிழர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்.

இராணுவத்தினராலும் அதன் கொலைப் படைகளாலும் கொல்லப்பட்டவர்கள் சம்பந்தமாக அவர்களது குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இன்னமும் உயிருடன் எவரும் இருந்தால், அதன் அர்த்தம் அவர்கள் தொடர்ந்தும் அறியப்படாத இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்பதாகும்.

யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்களாகியும், டஜன் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் வாடுவதோடு, அப்பகுதியை தொடர்ந்தும் ஆட்சி செய்து வரும் இலங்கை இராணுவம் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விக்கிரமசிங்கவின் விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, அங்கு அவரை கொழும்பு அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) தலைவர் டக்ளஸ் தேவனாதா வரவேற்றார். ஸ்ரீ நாக விஹாரய பௌத்த விகாரையின் பிரதம பிக்குவை வழிபடுவதற்காக அங்கு விசேட அதிரடிப்படை (STF) மற்றும் கமாண்டோக்கள் உட்பட பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ஜனாதிபதி பயணித்தார். யாழ்.ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை சந்தித்த அவர் பின்னர் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவிற்கு சென்றார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து 'காணாமல் போனவர்களின்' குடும்ப உறுப்பினர்கள் முன்கூட்டியே போராட்டத்துக்கு அங்கு சென்றிருந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற அரச படைகளை மீறி அவர்கள் முன் சென்றனர். பின்னர் அவர்கள் சுமார் 400 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றுகூடி, விக்கிரமசிங்க தை பொங்கல் சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த நல்லூர் கோவிலை நோக்கி பேரணியாகச் சென்றனர். அதிரடிப்படை அதிகாரிகளும் பொலிசும் வீதித் தடைகளை போட்டு பேரணியை தடுக்க முயன்றனர். போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றி தங்கள் பேரணியை தொடர முயன்ற போதிலும், அவர்கள் பொலிசாரால் நீர்த்தாரை அடிக்கப்பட்டு கலைக்கப்பட்டனர்.

நல்லூர் கோவில் நிகழ்வைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்திற்குச் சென்ற விக்கிரமசிங்க, அங்கு அரசாங்க ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். “அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த” எதிர்பார்ப்பதாக அவர் பார்வையாளர்களிடம் கூறினார்.

15 ஜனவரி 2023 அன்று யாழ்ப்பாணத்தில் அரசடி சந்தியில் போராட்டம் நடத்திய 'காணாமல் போனவர்களின்' உறவினர்கள் மீது பொலிசார் நீர்த்தாரை பிரயோகிக்கின்றனர் [Photo by Tamilnews1-Mayurapriyan]

அடுத்த மாதம், அரசாங்கம் புதிய 'நல்லிணக்க' நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று கூறிய அவர், 'இந்த நாட்டை ஐக்கியப்படுத்தவும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும் உழைக்குமாறு' அனைத்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களிடமும் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.

டிசம்பர் 13 அன்று, விக்கிரமசிங்க நடத்திய அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்குபற்றிய கட்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அடங்கும், அங்கு அவர் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார். இந்த திருத்தம், விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குவதற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் இந்திய இராணுவப் படைகள் வட இலங்கைக்கு அனுப்பப்பட்ட1987 ஜூலை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

13வது திருத்தத்துக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, மாறாக அது இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் உயரடுக்கிற்கு சில அதிகாரங்களை வழங்குவதாக இருந்தது. இணைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி, திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என தமிழ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சிங்கள இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் இந்த அதிகாரங்களை வழங்குவதற்கு விரோதமாக இருந்தன. சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் செயற்பட்ட உயர் நீதிமன்றம், இணைக்கப்பட்ட வடகிழக்கு சபை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்ததோடு, அது 2007 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

விக்கிரமசிங்க தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளரும் பரவலான எதிர்ப்பின் மத்தியில் அரசியல் ரீதியாக பலவீனமான தனது அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக, தமிழ் முதலாளித்துவ மற்றும் சலுகை பெற்ற உயர்-நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக, மீண்டும் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்கிறார்.

'நாம் அனைவரும் ஒரே நாட்டில் வாழ வேண்டியிருப்பதால், நாம் இலங்கையர் என்ற அடையாளத்துக்குத் திரும்பி, 75 ஆண்டுகளுக்கு முன்னர், (இலங்கையின் முதல் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான) மறைந்த திரு. டி.எஸ். சேனாநாயக்க உருவாக்கிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்,” என விக்கிரமசிங்க துர்கா மண்டபத்தில் பார்வையாளர்களிடம் தெரிவித்தார். 'முப்பது ஆண்டுகால யுத்தம் மற்றும் கிளர்ச்சியால்,' நாங்கள் 'பிளவுபடுத்தும், இனவாத, மதவெறி மற்றும் திவாலான அரசியலால் பிரிக்கப்பட்டுள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.

விக்கிரமசிங்க வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளார். சேனநாயக்காவின் முதல் அரசாங்கம் 1948 இல் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இரத்து செய்ததுடன், தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தும் மோசமான இனவாத பாகுபாட்டை ஆரம்பித்து வைத்தது. இந்த இனவாத ஆத்திரமூட்டல்கள் 1983 இல் அப்போதைய ஐ.தே.க. ஆட்சியின் கீழ் புலிகளுக்கு எதிரான போருடன் உச்சக்கட்டத்தை அடைந்தன. அந்த ஐ.தே.க. அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த விக்கிரமசிங்க, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்தக்களரி அட்டூழியங்களுக்கு நேரடிப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கிறார்.

தை பொங்கல் பண்டிகை நாளான 15 ஜனவரி 2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது 'காணாமல் போனவர்களின்' உறவினர்களின் போராட்டத்தை நிறுத்த அணிதிரட்டப்பட்ட இராணுவத்தினர். [Photo by Mayurapriyan]

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு எதிரான போராட்டம் ஒரு தனியான நிகழ்வல்ல. ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கும், தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கையைப் பேரழிவிற்குள்ளாக்கிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திற்கும் விரோதமாக நாடு பூராவும் ஆழமடைந்து வரும் எதிர்ப்பின் வெளிப்பாடாகும்.

கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் கிளர்ந்தெழுந்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேற்றி ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த போது, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை சக்தி வாய்ந்ததாகக் காணப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனோர் அமைப்பும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து நடத்திய போராட்டம் தமிழ் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். கொழும்புக்கு விடுக்கும் வேண்டுகோள்கள், போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக நடந்துவரும் அரச பாகுபாடுகள் மீதான உண்மையான சீற்றத்தை தமிழ் உயரடுக்கிற்கு ஒரு சிறந்த கொடுக்கல் வாங்கலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழ் அரசியல் கட்சிகள், எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் உயரடுக்கிற்கான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இந்தியாவையும் உதவுமாறு வேண்டுகோள் விடுக்கின்றன. புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாதப் போரை முழுமையாக ஆதரித்த வாஷிங்டனுக்கும் புதுடில்லிக்கும் தமிழர்களின் உரிமைகள் பற்றியோ அல்லது உலகில் வேறு எங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் குறித்தோ உண்மையான அக்கறை கிடையாது. அவற்றின் 'கவலை' எல்லாம் சீனாவிற்கு எதிரான தங்களது போர் தயாரிப்புகளில் இலங்கை ஒரு முக்கிய மூலோபாய இராணுவ வளாகமாக பராமரிக்கப்படுவதையும் விரிவுபடுத்தப்படுவதையும் உறுதி செய்வதே ஆகும்.

இலங்கையில் தமிழ் மற்றும் ஏனைய இன மற்றும் மத பாரபட்சங்களுக்கு முடிவு கட்டுவதானது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் ஐக்கியப்பட்டப் போராட்டத்தின் மூலமே வெற்றிபெற முடியும். இந்த முன்னோக்கிற்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.

அரசாங்க-விரோத போராட்டங்களை நசுக்கப் போவதாக இலங்கை ஜனாதிபதி மிரட்டுகிறார்

இலங்கையில் முதலாளித்துவக் கட்சி-தொழிற்சங்க கூட்டணிகள் வேண்டாம்! அரசாங்க-ச.நா.நி. சிக்கன நடவடிக்கைகளை தோற்கடி! ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்பு!

இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை கொடூரமாக தாக்குகின்றது