மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சுவீடன் தனது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை 2022க்கும் 2028 க்கும் இடையில் 64 சதவிகிதத்தால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட இந்த அதிகரிப்பினால், 2028 க்குள் இந்த சிறிய நாடு பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர்கள் செலவழிக்கும்.
இது மே மாதத்தில் நேட்டோவில் சேர பின்லாந்து மற்றும் சுவீடன் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட அதிகரிப்பாகும். இரண்டு ஸ்காண்டிநேவிய நாடுகளும் இராணுவக் கூட்டணியில் சேருவதற்கு எதிரான தனது வீட்டோவை துருக்கி ஜூன் மாதம் திரும்பப் பெற்றாலும், துருக்கி மற்றும் ஹங்கேரி ஆகிய இரண்டும் இன்னும் தங்கள் அங்கத்துவத்திற்கு கையெழுத்திடவில்லை.
உக்ரேனின் போர், அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ஒருபுறமும், மறுபுறம் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடி மோதலாக வளர்ச்சியடைந்துள்ளது. நேட்டோவில் ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்வதற்கும் அதன் ஆயுதப் படைகளை கணிசமாக விரிவுபடுத்துவதற்கும் நீண்டகாலமாக நிலவிய மக்கள் எதிர்ப்பை சமாளிக்க, உக்ரேனில் புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை சுவீடிஷ் ஆளும் உயரடுக்கால் சாதகமாக பயன்படுத்த முடிந்தது.
சுவீடனின் முன்மொழியப்பட்ட இராணுவ வரவு-செலவுத் திட்டம் ஒரு புதிய வலதுசாரி கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களுக்குப் பின்னர் வருகிறது. வலதுசாரி கூட்டணி அரசாங்கம் தீவிர வலதுசாரி சுவீடன் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்கிறது. இது சுவீடனின் நவ-நாஜி இயக்கத்தில் இருந்து தோன்றி இப்போது பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.
சுவீடன் தனது பாரிய பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை அதிகரிப்பதாக அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், சுவீடனின் உக்ரேனுக்கான இராணுவ உதவிப் பொதி 287 மில்லியன் டாலர் மதிப்பிலானதாகின்றது. இது அதன் கடந்தகால உதவிகளை விடவும் அதிகமாகும்.
சுவீடனின் பாதுகாப்பு அமைச்சரும் வலதுசாரி மிதவாதிகளின் உறுப்பினருமான பௌல் ஜோன்சன், உதவிப் பொதியில் 'வான் பாதுகாப்பு மற்றும் குளிர்கால உபகரணங்களும் உள்ளன. ஏனென்றால் உக்ரேனியர்களுக்கு இதுவே தேவை' என்று கூறினார். மேம்பட்ட ஆயுத அமைப்புகளை கொடுப்பது உட்பட உக்ரேனுக்கான பொருளாதார, இராணுவ, அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவை அதிகப்படுத்துவது தனது அலுவலகத்தின் 'முதல் முன்னுரிமை' என்று அவர் கூறினார்.
நேட்டோவுடன் இணைந்த சர்வதேச ஆயுதத் தொழிற்துறை சுவீடனின் பாரிய இராணுவச் செலவு அதிகரிப்பை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது.
'உக்ரேனுக்காக சுவீடன் தனது மிகப்பெரிய இராணுவ உதவிப் பொதியை அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், அதன் முன்னணி பாதுகாப்பு அதிகாரிகள் நேட்டோவின் உறுப்பினராக ஸ்டாக்ஹோமில் இருந்து நோர்டிக் நாட்டின் பங்களிப்புகளை எதிர்பார்ப்பதற்கு ஒரு உதாரணம்' என்று Defense News குறிப்பிட்டது.
அவர்கள் தொடர்ந்தனர், “பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் விளைவே, சுவீடனுக்கு கையடக்க டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களிலிருந்து கனரக விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்கு உதவியை சமீபத்தில் அதிகரிப்பதாகும். 200 ஆண்டுகாலமாக அணிசேரா நாடாக இருந்த பின்னர், சுவீடன் இப்போது நேட்டோவில் இணைவதில் ஆர்வமாக உள்ளது. அதன் பாதுகாப்பு மூலோபாயத்தை விரைவாக மீண்டும் திருப்பி எழுதத் தூண்டுகிறது. மற்றும் அதன் புதிய மத்திய-வலது அரசாங்கத்திலிருந்து ஒரு பெரிய பாதுகாப்பு வரவு-செலவுத் திட்ட ஊக்குவிப்பும் வருகின்றது.
உலகளாவிய ஆயுதத் தொழிற்துறையில் சுவீடன் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அரச குடும்பம், முதன்மையாக ரஷ்ய எண்ணெய் வயல்கள் மற்றும் சுரங்கங்களைச் சொந்தமாக வைத்திருப்பதன் மூலம் அதன் செல்வத்தைப் பெற்றுள்ளது. மேலும் வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை உற்பத்தி செய்வதில் ஒரு பெரும் இலாமடைகின்றது. ஆல்பிரட் நோபல் டைனமைட் கண்டுபிடிப்பை மேற்பார்வையிட்டார். அவர் இறந்தபோது, அவரது நிறுவனம் உலகம் முழுவதும் வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்யும் 90 தொழிற்சாலைகளை வைத்திருந்தது.
20 ஆம் நூற்றாண்டில் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை உருவாக்குவதில் சுவீடன் முக்கிய பங்கு வகித்தது. இப்போது Saab நிறுவனம் தயாரித்த Carl Gustaf M ரக ராக்கெட் லாஞ்சர் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கையடக்க தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றாகும்.
இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கான தனது செய்தியாளர் கூட்டத்தில், ஜோன்சன் உலகளாவிய ஆயுதத் தொழிலில் சுவீடனின் முக்கிய பங்கைப் பற்றி குறிப்பிடுகையில், “நீர்மூழ்கிக் கப்பல்கள், மேற்பரப்புப் போர்க்கப்பல்கள், மேம்பட்ட பீரங்கி அமைப்புகள், போர் வாகனங்கள் மற்றும் போர் விமானங்களை உற்பத்தி செய்யக்கூடிய 10 மில்லியன் மக்கள் கொண்ட வேறு எந்த நாடும் இல்லை. ஒரு சிறிய நாடான நாம், எங்களிடம் மிகவும் துடிப்பான பாதுகாப்புத்துறை தொழில்துறை அடித்தளம் உள்ளது” என்றார்.
சுவீடனின் முக்கிய பாதுகாப்பு நிறுவனமான Saab, சமீபத்தில் காலாண்டு வருவாயில் 13.6 சதவீதம் உயர்ந்துள்ளதை அறிவித்தது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் ஜோஹன்சன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், 'இது ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் குறைந்தது 2030 வரை நாம் பல ஆண்டு வளர்ச்சி வாய்ப்பை காண்கின்றோம்' எனக் கூறினார்.
சுவீடன் பல ஆண்டுகளாக நேட்டோவில் நெருங்கிய ஒத்துழைப்பாளராகவும் பங்கேற்பாளராகவும் இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் உறுதியான கூட்டாளியான ஸ்டாக்ஹோமின் 'நடுநிலைமை' பனிப்போர் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் பல தசாப்தங்களாக ஒத்துழைத்ததன் மூலம் பொய்யாகிவிட்டது. ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் நடந்த போர்களில் சுவீடன் ஈடுபட்டுள்ளது.
சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு அதன் முறையான விண்ணப்பத்திற்கு முன்பே பல ஆண்டுகளாக நேட்டோ இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளது. இந்த ஆண்டு சுவீடன் நடத்திய BALTOPS - நேட்டோவின் வருடாந்த பால்டிக் நடவடிக்கை பயிற்சியில் 1985 இல் இருந்து இது முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியில் சுவீடனின் ஒருங்கிணைப்பு மற்றும் இராணுவ செலவினங்களில் பாரிய அதிகரிப்பு ஆகியவை முழு அரசியல் ஸ்தாபகத்தால் ஆதரிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வரவு-செலவுத் திட்டம் ஒரு வலதுசாரி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முந்தைய சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் 2014 இல் மற்றொரு பெரிய பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை தொடங்கி 2017 இல் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தியது. சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி மாக்டலீனா ஆண்டர்சன், நேட்டோவில் சேருவதற்கான ஸ்டாக்ஹோமின் விண்ணப்பத்தை விரைந்து பெறுவதற்காக, உக்ரேன் மீதான அமெரிக்க/நேட்டோ-தூண்டப்பட்ட ரஷ்ய ஆக்கிரமிப்பை பயன்படுத்திக்கொண்டார். முன்னாள் ஸ்ராலினிச இடது கட்சி உக்ரேனுக்கு இராணுவ உபகரணங்களை அனுப்புவதை ஆதரித்ததுடன், சுவீடனின் நேட்டோ உறுப்பினர் பற்றிய விவாதத்தின் போது தேசியவாதத்தையும், இராணுவவாதத்தையும் ஊக்குவித்தது.
சுவீடனின் இராணுவ செலவினங்களில் பெரும் அதிகரிப்பு பிரதான ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் போர் வரவு-செலவுத் திட்டங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருவதால் வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை பாரிய புதிய இராணுவச் செலவுத் திட்டங்களை வெளியிட்டன, இது மூன்றாம் உலகப் போருக்கான முன்னேறிய தயாரிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அத்தகைய போரில் சுவீடன் ஒரு முன்னணி போர் முனை நாடாக வெளிப்படலாம். ஏனெனில் அது பின்லாந்துடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ திறக்கக்கூடிய ஒரு வடக்கு முன்னணியை உருவாக்குகிறது.
சுவீடன் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட வரைவில், இராணுவச் செலவு 2023 இல் மட்டும் 800 மில்லியன் டாலர்கள் அதிகரிக்கும். இந்தப் பணத்தில் இராணுவத்தினரை அதிகரிப்பதற்கான கணிசமான தொகை அடங்கும். இந்த இலையுதிர்காலத்தில், ஸ்டாக்ஹோமின் முக்கிய சுரங்கப்பாதை நிலையங்கள் சுவீடிஷ் பாதுகாப்புப் படையில் சேரக்கோரும் விளம்பரங்களால் நிரப்பப்பட்டன. வரவு-செலவுத் திட்டத்தில் இணைய பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் புதிய ஆயுதங்களுக்கான புதிய நிதியளிப்பும் உள்ளது.
புதிய வரவு-செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், சுவீடனின் சிறப்பு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை போலீசார் (SAPO) ஸ்டாக்ஹோமில் இராணுவத்திடம் கடன் வாங்கி Black Hawk வானூர்திகளைக் கொண்டு சோதனை நடத்தினர். AP இன் படி, 'அதிகாரிகள் இந்த வழக்கைப் பற்றி சில விவரங்களையே கொடுத்தனர். ஆனால் சுவீடிஷ் ஊடகங்கள் சாட்சிகளை மேற்கோள் காட்டி, ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாகக் கூறப்படும் ஒரு ஜோடியை கைது செய்ய இரண்டு Black Hawk வானூர்திகளில் இருந்து விஷேட போலீஸ் பிரிவு கயிற்றில் இறங்கியதை விவரித்தது.'
ரஷ்ய இராணுவத்திற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் பிறந்த இருவர் நவம்பரில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் முன்பு சுவீடனின் உளவுத்துறை சேவையான SAPO இல் உறுப்பினராக இருந்துள்ளார்.
மேலும் படிக்க
- ரஷ்யாவிற்கு எதிரான அணுஆயுதப் போருக்காக F-35 போர் விமானங்களை வாங்க ஜேர்மன் பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது
- ஏகாதிபத்திய சக்திகள் மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகின்றன: அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி மிக அதிகபட்ச இராணுவச் செலவுகளுக்குத் திட்டமிடுகின்றன
- அமெரிக்கா உக்ரேனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்ப உள்ளது: “இது வரையில் இல்லாத மிகவும் விரிவாக்கப்பட்ட நடவடிக்கை"
- அமெரிக்காவின் மிக அதிகபட்ச இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு "சீனா உடனான எதிர்கால மோதலுக்கு" தயாரிப்பு செய்கிறது
