ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த நினைவு தினத்தில், அமெரிக்கா ரஷ்யாவுடனான மோதலைத் தீவிரப்படுத்த முனைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியின் தோல்வியை ரஷ்யா கொண்டாடும் மே 9 'வெற்றி தினத்திற்கு' முன்னதாக —சோவியத் ஒன்றியத்தின் செம்படை இதில் தீர்க்கமான பங்களிப்பைச் செய்திருந்தது—அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ரஷ்யா உடனான அவற்றின் போரைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, ஏகாதிபத்திய நாடுகளின் ஜி7 குழு, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்களை அறிவித்தது.

G7 நாடுகள் அவற்றின் அறிக்கையில், இரண்டாம் உலகப் போரின் போது பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை ரஷ்யாவைத் துண்டாடி அதை ஏகாதிபத்தியத்தின் ஓர் அரைக் காலனித்துவ காபந்து அரசாக மாற்றுவதற்கு அமெரிக்க தலைமையிலான முயற்சியுடன் அபத்தமாக ஒப்பிட்டது.

'இன்று, மே 8 இல், நாங்கள், ஜி7 (G7) அமைப்பின் தலைவர்கள், உக்ரேன் மற்றும் பரந்த உலகளாவிய சமூகத்துடன் இணைந்து, ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததையும் பாசிசத்திலிருந்தும் தேசிய சோசலிச பயங்கர ஆட்சியிலிருந்தும் விடுதலை அடைந்ததையும் கொண்டாடுகிறோம், இவை அளவிட முடியாத அழிவுகளையும், சொல்லவியலா பயங்கரங்களையும், மனித அவலங்களையும் ஏற்படுத்தின,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

யதார்த்தத்தில் G7 முன்மொழிந்த நடவடிக்கைகள் அடிப்படையில் ரஷ்யாவை ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ் நிருபர் ரோஜர் கோஹனின் வார்த்தைகளில் கூறுவதானால், 'ரஷ்ய பொருளாதாரத்தை அதன் காலில் மண்டியிடச் செய்வதே' குறிக்கோளாக உள்ளது.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தை அழித்து ரஷ்யாவில் முதலாளித்துவத்தை மீட்டமைத்த அதேவேளையில், இறுதியில் இன்று ஏகாதிபத்திய சக்திகளின் இந்தக் கொள்கைகள் 81 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் மீது ஹிட்லர் படையெடுத்த போது ஜேர்மன் ஏகாதிபத்தியம் பின்பற்றிய போர் நோக்கங்களின் பாரம்பரியத்தில் நிற்கின்றன.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 77 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று, உலகம் மீண்டுமொருமுறை ஓர் உலகளாவிய இராணுவ மோதலின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

'நமது முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகள் ஏற்கனவே ரஷ்ய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன, நம் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் முக்கிய தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலிகளை ரஷ்யா அணுக முடியாதவாறு குரல்வளையை நெரித்துள்ளன,' என்று ஜி7 உச்சி மாநாட்டு அறிக்கையில், வெள்ளை மாளிகை பெருமிதம் கொண்டது.

இந்த நடவடிக்கைகள் 'ரஷ்யாவில் கடந்த 15 ஆண்டு கால பொருளாதார ஆதாயங்களைத் துடைத்தழிக்கும் உத்தேசத்தில்' உள்ளன. அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிடுகையில், “கிட்டத்தட்ட 1,000 தனியார் துறை நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன, 200,000 க்கும் அதிகமான ரஷ்யர்கள், அவர்களில் பலர் மிகவும் தொழில் திறமை கொண்டவர்கள், நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. விலை கொடுக்கப்பட்டுள்ள இவை அனைத்தும் காலப்போக்கில் ஒன்று சேர்ந்து தீவிரத்தை அதிகரிக்கும்.

'ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்துவது அல்லது தடை செய்வது உட்பட, ரஷ்ய எரிசக்தியை நாம் சார்ந்திருப்பதிலிருந்து வெளியே நாம் பொறுப்பேற்றுள்ளோம்' என்று ஜி7 அமைப்பு அதன் அறிக்கையில் தெரிவித்தது.

வெள்ளை மாளிகையின் வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்யப் பொருளாதாரத்தின் 'முக்கிய தமனியை' வெட்டுவதே நோக்கமாகும். அமெரிக்கா ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற திட்டத்தைத் தீவிரமாக விவாதித்து வருகிறது.

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியைக் காணொளி மூலம் சந்தித்த பின்னரே ஜி7 அமைப்பு அதன் அறிவிப்பை வெளியிட்டது.

G7 அமைப்பு அதன் அறிக்கையில், இந்த போர் தொடங்கியதில் இருந்து உக்ரேனுக்கு அது 25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களும் மற்றும் பிற உதவிகளும் வழங்கி உள்ளதாக தெரிவித்தது.

உக்ரேனில் ரஷ்ய தளபதிகளைக் கொன்றதிலும், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் முதன்மையான போர்க்கப்பல் மொஸ்க்வாவை மூழ்கடித்ததிலும் அமெரிக்கா செயலூக்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது என்பதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் முன்னணி அமெரிக்க பத்திரிகைகளுக்குக் கூறியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது.

ஜி7 உச்சி மாநாடு நடந்த அதே நாளில், ஜனாதிபதியின் மனைவி முதல் பெண்மணி ஜில் பைடென் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியைச் சந்திக்க உக்ரேனுக்குச் சென்றார்; கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டார்.

'உக்ரேனில் முக்கிய தலைவர்கள் வருகை தந்த ஒரு பரபரப்பான நாளில், கனேடியப் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, கியேவ் புறநகர் பகுதியான இர்பினுக்குச் சென்று, ரஷ்யாவின் ஆரம்ப தாக்குதல்களில் மோசமாக பாதிக்கப்பட்ட சில காட்சிகளைப் பார்வையிட்டார். ஜேர்மன் நாடாளுமன்ற தலைவர் Bärbel Bas மற்றும் குரோஷிய பிரதம மந்திரி Andrej Plenkovich ஆகியோரும் ஞாயிறன்று கியேவில் செலென்ஸ்கியைச் சந்தித்தனர்,” என்று தி கார்டியன் குறிப்பிட்டது.

ஜி7 உச்சிமாநாட்டுக்கான அவர் உரையில், பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், 'வெறுமனே உக்ரேன் மண்ணைக் காப்பாற்றி வைப்பதற்காக மட்டுமல்ல, மாறாக அதை மீண்டும் கைப்பற்று[வதற்கும்] அனுமதித்த இராணுவ தளவாடங்களை' உக்ரேனுக்கு ஜி7 உறுப்பு நாடுகள் அனுப்பிய நடவடிக்கைகளைப் பாராட்டினார்.

அந்த பிரதம மந்திரி அலுவலகத் தகவல்களின்படி, 'எந்தெந்த வகையில் சாத்தியமோ அவ்விதத்தில் உலகம் புட்டின் மீது பொருளாதார அழுத்தத்தைத் தீவிரப்படுத்த வேண்டும், போர் ஒரு திக்குமுக்காடும் நிலைக்கு மாற மேற்கு நாடுகள் அனுமதிக்கக்கூடாது' என்பதில் ஜோன்சன் உடன்பட்டார்.

இதற்கிடையே, அமெரிக்கா உக்ரேனுக்கான ஆயுத ஏற்றுமதிகளை அதிகப்படுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உக்ரேனுக்கு 150 மில்லியன் டாலர் கூடுதல் ஆயுதப் பொதியை அறிவித்தார். அவர் முன்மொழிந்த உக்ரேனுக்கான பத்து மில்லியன் கணக்கான டாலர் ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு அவர் காங்கிரஸை வலியுறுத்தினார், 'போர்க்களத்தில் உக்ரேனைப் பலப்படுத்த கேட்கப்படும் நிதியை காங்கிரஸ் சபை விரைவாக வழங்க வேண்டும்' என்றவர் வலியுறுத்தினார்.

போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா ஏற்கனவே 3.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது, டாங்கி-தகர்ப்பு ஆயுதங்கள், கமிகேஜ் (kamikaze) ரக ட்ரோன்கள், விமான-தகர்ப்பு ஆயுதங்கள், அத்துடன் டாங்கிகள் மற்றும் போர்விமானங்கள் ஆகியவையும் அதில் உள்ளடங்கும். ஜாவ்லின் ஏவுகணைகளின் அதன் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க செயல்பட்டு வருவதாக ஞாயிற்றுக்கிழமை லாக்ஹீட் மார்ட்டின் அறிவித்தது.

ரஷ்ய ஊடகங்கள் அமெரிக்க விளம்பரங்களைப் பெறுவதைத் தடுத்தும், அத்துடன் ரஷ்ய நிறுவனங்கள் அமெரிக்க ஆலோசனை சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்தும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா தொடர்ச்சியான புதிய தடைகளை அறிவித்தது. இதற்கும் கூடுதலாக, அமெரிக்கா ஆயிரக்கணக்கான ரஷ்ய மற்றும் பெலாருஷ்ய அதிகாரிகளுக்கு நுழைவனுமதி கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது, அத்துடன் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிவாயுவை கொள்முதல் செய்யும் Gazprombank நிறுவனம் மீதும் தடையாணைகளை விதித்துள்ளது.

'அமெரிக்காவின் மதிப்பார்ந்த தொழில்முறை சேவைகளை அணுகுவதிலிருந்து ரஷ்யாவைத் தடுப்பது கிரெம்ளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் அமெரிக்கா மற்றும் நம் கூட்டாளிகள் விதிக்கும் தடையாணைகளைத் தவிர்ப்பதற்கான அதன் திறனைத் துண்டிக்கிறது' என்று அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஜெனெட் யெலென் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

'ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், இன்றைய நடவடிக்கைகள் உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார அமைப்புமுறையில் இருந்து ரஷ்யாவை முறையாகவும் திட்டமிட்டும் அகற்றுவதன் ஒரு தொடர்ச்சியாகும். ரஷ்ய பொருளாதாரத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இருக்காது என்பது தான் செய்தி” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Loading