ஜேர்மன் நாடாளுமன்றம் ரஷ்யா மீது போர் அச்சுறுத்தல்விடுக்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வியாழன் அன்று, ஜேர்மனியின் நாடாளுமன்றம் (Bundestag) உக்ரேனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியது.

இந்த பிரேரணை ஆளும் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பசுமைக் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள் (FDP) மற்றும் எதிர்க்கட்சிகளான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியால் (CDU/CSU) களால் கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதரவாக 586 வாக்குகளும் எதிராக 100வாக்குகள் மற்றும் ஏழு பேர் வாக்களிக்காமலும் நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணை ரஷ்யாவின் மீதான போர் பிரகடனமாகும்.

வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபொக் (பசுமைக் கட்சி) ஏப்ரல் 27 அன்று நாடாளுமன்றத்தில் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று வாதிடுகிறார் (Photo: DBT / Florian Gaertner / photothek)

பத்து பக்க பிரேரணை ஜேர்மன் அரசாங்கத்தை 'தொடர்ந்து, சாத்தியமானால் கனரக ஆயுதங்கள் மற்றும் சிக்கலான ஆயுதங்களின் விநியோகம் உட்பட, எடுத்துக்காட்டாக மோதிர பரிமாற்றத்தின் கட்டமைப்பின் கீழ் உக்ரேனுக்கு தேவையான தளபாடங்களை விரைவுபடுத்துங்கள் என அழைப்புவிட்டது. 'மோதிர பரிமாற்றம்' என்பது கிழக்கு ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்கள் உக்ரேனுக்கு சோவியத் கால ஆயுதங்களை வழங்கும் ஒரு செயல்முறையைக் குறிக்கிறது. பின்னர் இது ஜேர்மனியால் அதி நவீன உபகரணங்களுடன் நிரப்பப்படுகிறது.

இந்த பிரேரணையானது 'விரிவான பொருளாதார தனிமைப்படுத்தல் மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து ரஷ்யாவை துண்டித்தல்' என்று பரிந்துரைக்கிறது. 'ஜேர்மனியின் கனரக ஆயுதங்கள் மற்றும் சிக்கலான அமைப்புகள் உட்பட பயனுள்ள விநியோகத்தை தீவிரப்படுத்துதல் மற்றும் விரைவுபடுத்துதல்,' 'ரஷ்ய முன்னேற்றத்தை நிறுத்துவதற்கான மிக முக்கியமான மற்றும் பயனுள்ள வழிமுறையாகும்' என்று அது கூறுகிறது.

அதன்படி, ஜேர்மன் அரசாங்கம் 'ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகளுக்கான வெளியேறும் பாதையுடன் கூடிய விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தால் முடிவெடுக்கப்பட்ட நிலக்கரி மீதான தடையை பின்தொடர வேண்டும்' மற்றும் 'SWIFT சர்வதேச வங்கி பரிமாற்றமுறையில் இருந்து அனைத்து ரஷ்ய வங்கிகளையும் வெகுதூரம் விலக்குவதைத் தொடங்க வேண்டும்' என்கிறது. ஜேர்மனி 'ரஷ்யா மற்றும் பெலாருஸ் உடனான பொருளாதார உறவுகளை மேலும் கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும்'. மேலும் 'ரஷ்யாவிற்கு எதிரான தொலைநோக்குடனான தடைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், அவற்றை தேர்ந்தெடுத்து விரிவுபடுத்த வேண்டும் மற்றும் இறுக்க வேண்டும்' என்று அந்த பிரேரணை கூறுகிறது.

அமெரிக்க அரசாங்கம் ரைன்லாந்து பலரினேற் மாநிலத்தில் உள்ள ரம்ஸ்ரைன் விமானத்தளத்தில் 40 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அடுத்த கட்ட விரிவாக்கத்தைத் திட்டமிடுவதற்காக ஒரு போர் உச்சிமாநாட்டை நடத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர் நாடாளுமன்றம் அதன் போர்ப் பிரகடனத்தை நிறைவேற்றியது. நேட்டோ தான் ரஷ்யாவுடனான போரில் உந்து சக்தி என்பதில் எந்த சந்தேகத்தையும் இந்த மாநாடு விட்டுவைக்கவில்லை.

'போரின் நோக்கங்கள் இப்போது தெளிவாக உள்ளன,' என்று உலக சோசலிச வலைத் தளம் அக்கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தது. 'உக்ரேனில் இந்த இரத்தக்களரியானது நேட்டோவில் இணைவதற்கான அதன் சட்டபூர்வ உரிமையைப் பாதுகாப்பதற்காக தூண்டப்படவில்லை, மாறாக ரஷ்யாவை ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ சக்தி என்பதிலிருந்து அழித்து அதன் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்காக தயாரிக்கப்பட்டது, தூண்டிவிடப்பட்டது மற்றும் பாரியளவில் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் உக்ரேன் ஒரு கைப்பாவை, அதன் மக்கள் பீரங்கிக்குத் தீவனமாக ஆக்கப்பட்டுள்ளனர்.”

இதற்கிடையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இருதரப்பினரும் பகிரங்கமான மனப்பான்மையுடன் உள்ளனர். ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இருவரும் ரஷ்யா தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக உணர்ந்தால் இந்த வழிமுறையை நாடுவோம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

'நடக்கும் நிகழ்வுகளில் வெளியில் இருந்து யாராவது தலையிட்டு எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத மூலோபாய அச்சுறுத்தல்களை உருவாக்க முடிவு செய்தால், இந்த வரவிருக்கும் தாங்கங்களுக்கு நமது பதில் விரைவாகவும், மின்னலாகவும் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்' என்று புட்டின் புதன்கிழமை ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். விரைவான எதிர்த் தாக்குதலுக்கான 'அனைத்து கருவிகளும்' ரஷ்யாவிடம் இருப்பதாக அவர் கூறினார், 'நாங்கள் அவற்றைப் பற்றி நீண்டகாலமாக பெருமை காட்டிக்கொண்டிருக்கமாட்டோம்: தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்துவோம். அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

அமெரிக்காவும் தனது அச்சுறுத்தல்களை அதிகரித்து வருகிறது. ரம்ஸ்ரைன் சந்திப்பு ரஷ்யாவுடனான மோதலை 'வெற்றி பெற' அழைக்கப்பட்டது என்ற பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டினின் அறிக்கையிலிருந்தும், 'ரஷ்யாவின் முதுகை உடைக்க' அமெரிக்கா தயாராக உள்ளது என்ற ஐரோப்பாவின் முன்னாள் அமெரிக்க இராணுவத் தளபதி பென் ஹோட்ஜஸின் அறிவிப்பு வரை அவை பற்றிய விவாதங்கள் உள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் அணு ஆயுதப் போரில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றது.

அந்த செய்தித்தாளில், பாதுகாப்புத் துறையின் முன்னாள் உயர் அதிகாரியான சேத் குரொப்ஸி, “அணுவாயுதப் போரில் வெற்றிபெற முடியும் என்பதை அமெரிக்கா காட்ட வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அழித்து, அதன் மூலம் ரஷ்யாவின் இரண்டாவது தாக்கும் திறனை அதாவது, அமெரிக்க அணுவாயுத தாக்குதலுக்குப் பின்னர் திருப்பித் தாக்கும் திறனைக் குறைக்கும் என்று அவர் பரிந்துரைத்தார்.

ஐரோப்பா முழுவதையும் மற்றும் உலகின் பெரும் பகுதிகளையும் அணுசக்தி பாலைவனமாக மாற்ற அச்சுறுத்தும் இந்த அபாயகரமான விரிவாக்கத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, ஜேர்மன் அரசாங்கமும் நாடாளுமன்றமும் தொடர்ந்து அதற்கு எரியூட்டுகின்றன.

ரம்ஸ்ரைனில் நடந்த கூட்டத்தில், பாதுகாப்பு மந்திரி கிறிஸ் ரீன லம்பிரைக்ட் (SPD) ஜேர்மன் அரசாங்கம் இப்போது உக்ரேனுக்கு கனரக ஆயுதங்களையும் வழங்குவதாகவும், அதற்கு “Gepard” விமான எதிர்ப்பு டாங்கிகளை வழங்குவதாகவும் அறிவித்தார். நான்கு நாட்களுக்கு முன்பு, அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (SPD) Der Spiege இதழுக்கு அணுசக்தி போர் குறித்து எச்சரித்து, அணுசக்தி நாடான ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இப்போது அவர் தனது சொந்த எச்சரிக்கையை காற்றில் தூக்கி வீசியுள்ளார்.

இந்த ஆபத்தான போக்கை நாடாளுமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் முடிவு வரலாற்றை மூச்சடைக்கும் பொய்களுடன் இணைந்துள்ளது. ஜேர்மன் டாங்கிகளை மீண்டும் ரஷ்யாவிற்கு எதிராக இயக்குவதற்கு, 'எங்கள் சொந்த வரலாற்றிலிருந்து' எழும் பொறுப்பு செயல்படுத்தப்படுகிறது. ஜேர்மனி 'ஐரோப்பாவிலும் உலகிலும் ஆக்கிரமிப்பு தேசியவாதமும் ஏகாதிபத்தியமும் 21 ஆம் நூற்றாண்டில் இனி ஒரு இடத்தைப் பெறாது என்பதை உறுதிப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்ய ஒரு சிறப்புப் பொறுப்பு உள்ளது' என்று அந்த பிரேரணை கூறுகிறது. அதன்படி, உக்ரேனின் தற்பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை நாடாளுமன்றம் முழுமையாக ஆதரிக்கிறது என்று அந்த பிரேரணை கூறுகிறது.

பல பொய்களை ஒரே பத்தியினுள் பொருத்துவதற்கு அதிக முயற்சி தேவை. இரண்டு முறை கண்டத்தை உலகப் போரில் மூழ்கடித்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஏகாதிபத்திய சக்தி, ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்த உக்ரேனிய தேசியவாதிகளுடன் கூட்டு சேர்ந்து 'தேசியவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு' எதிராக போராடுகிறதாம்!

உண்மையில், நாஜிகளின் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அழிப்புப் போரிலும் அதற்கு முன், போல்ஷிவிக் ரஷ்யாவிற்கு எதிரான போரில் கைசரின் ஏகாதிபத்திய இராணுவம் உக்ரேனிய தேசியவாதிகளுடன் ஒத்துழைத்தனர். அவர்கள் உக்ரேனின் சுதந்திரத்தை 'தங்குதடையற்று' ஆதரித்ததுடன் மேலும் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களின் இனப்படுகொலை குற்றங்களிலும் பங்குகொண்டனர்.

கியேவில் உள்ள இன்றைய ஆட்சியாளர்கள் இந்த ஒத்துழைப்பாளர்களை வீரர்களாக மதித்து மற்றும் அவர்களுக்கு நினைவுச்சின்னங்களை அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, பேர்லினில் உள்ள உக்ரேனிய தூதர் ஆண்ட்ரே மெல்னிக் பல்லாயிரக்கணக்கான யூதர்கள், போலந்துமக்கள் மற்றும் ரஷ்ய மக்களைக் கொன்றதற்கு காரணமான உக்ரேனிய தேசியவாதிகளின் பாசிச-பயங்கரவாத அமைப்பின் (OUN) தலைவரான ஸ்டீபன் பண்டேராவின் ஆதரவாளர் ஆவார்.

பண்டேராவின் சுயசரிதை எழுதியவதும் வரலாற்றாசிரியருமான Grzegorz Rossoliński-Liebe, Der Spiegel இன் சமீபத்திய இதழில் பண்டேராவின் குற்றங்களை விரிவாக விவரித்த பிறகும், மெல்னிக் பண்டேராவை தனது முன்மாதிரியாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். நாஜி ஒத்துழைப்பாளருக்கான தனது அபிமானத்தைப் பாதுகாப்பதில், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியர்கள், 'நாங்கள் உக்ரேனியர்கள் யாருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது பற்றிய விரிவுரையாற்றுவதை தவிர்க்கவேண்டும்' என்று அவர் ட்வீட் செய்தார்.

அனைத்து இடங்களிலும், நாடாளுமன்றத் தீர்மானம் 'ரஷ்ய பிரச்சார சேவைகள் ஒளிபரப்புவதற்கான தடையை' வரவேற்கிறது. 'பத்திரிகை சுதந்திரம் ஜனநாயக நாடுகளின் தற்காப்புத் திறன்களுக்கு முக்கியமானது' என்ற அடிப்படையில் அது செய்கிறது. எனவே, ஒருவர் தனது சொந்த அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மட்டுமே செவிசாய்க்க அனுமதிக்கப்பட்டு, மறுபக்கத்தின் பிரச்சாரம் நசுக்கப்படும் இடங்களில் 'பத்திரிகை சுதந்திரம்' நிலவுகிறது!

நாடாளுமன்றத்தின் போர்ப் பிரகடனம், உக்ரேனுக்கு எதிரான பிற்போக்குத்தனமான ரஷ்யப் போருக்கான தன்னிச்சையான பிரதிபலிப்பு அல்ல. இது பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது. 2014 இல், அவர்களைச் சார்ந்து ஒரு ஆட்சியை நிறுவ அமெரிக்காவும் ஜேர்மனியும் கியேவில் ஒரு வலதுசாரி சதியை ஏற்பாடு செய்தபோது, ஜேர்மன் இராணுவவாதத்தை புதுப்பிக்கவும் வரலாற்றிற்கு மறுவிளக்கம் கொடுக்கவும் ஜேர்மனியில் கடுமையான பிரச்சாரம் நடந்தது.

ஜேர்மனி அதன் பொருளாதார பலத்திற்கு ஏற்றவாறு வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ விவகாரங்களில் மீண்டும் ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது. அரசியல் விஞ்ஞானி ஹேர்பிரீட் முங்லர், முதல் உலகப் போருக்கான ஜேர்மனியின் பொறுப்பை குறைத்துக்காட்டி, '[ஐரோப்பாவின்] மையத்தில் ஒரு சக்தியாக' ஜேர்மனி மீண்டும் 'ஐரோப்பாவின் கட்டளையிடுபவராக' வேண்டும் என்று அறிவித்தார். வரலாற்றாசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி, ஹிட்லர் கொடூரமானவர் அல்ல என்றும், அவரது அழிவுப் போர் வேர்மாஹ்ட்டின் (Wehrmacht) மீது கட்டாயமாக திணிக்கப்பட்டது என்றும் அறிவித்தார்.

கியேவில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரஷ்யா பதிலளித்துது, ரஷ்ய மக்கள் அதிகம் வசிக்கும் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டபோது ஜேர்மனி முதல் தடைகளை விதித்தது. ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு பின்னர் கிட்டத்தட்ட முற்றிலுமாக உடைந்து போன உக்ரேனிய இராணுவம், அந்த நேரத்தில் பலமற்றதாக நிரூபிக்கப்பட்டிருந்தது. ஜேர்மனியும் பிரான்சும் மின்ஸ்க் உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தி, ரஷ்ய மக்கள் வசிக்கும் கிழக்கு உக்ரேன் மீதான மோதலை நிறுத்தியது.

இதற்கிடையில், உக்ரேனிய இராணுவம் திட்டமிட்டு ஆயுதமயப்படுத்தப்பட்டது. ஜேர்மனி 2014ல் இருந்து 'இரண்டு பில்லியன் யூரோக்கள் நிதி உதவியை வழங்கியுள்ளது' என்று நாடாளுமன்ற தீர்மானம் பெருமையடிக்கிறது. 'சமீப ஆண்டுகளில் உக்ரேனுக்கு எந்த நாடும் அதிக நிதி உதவியை வழங்கவில்லை' என்று அது மேலும் கூறுகிறது. இதில் இராணுவத் திட்டங்களுக்கு எவ்வளவு சென்றுள்ளது என்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

The reactionary response of the Putin regime, which reacted to NATO encirclement with war, is now being used to advance the militarist and imperialist goals of 2014, for which there is little popular support.

புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான விடையிறுப்பு போர் மூலம், நேட்டோவால் சுற்றிவளைக்கப்பட்டதற்கான எதிர்வினையாகும். இப்போது மக்கள் ஆதரவு குறைவாக உள்ள2014 இன் இராணுவவாத மற்றும் ஏகாதிபத்திய இலக்குகளை முன்னெடுப்ப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

உக்ரேன் பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, நாடாளுமன்றம் 100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் முதல் வாசிப்பை விவாதித்தது. இது இந்த ஆண்டு பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை ஒரேயடியாக மூன்று மடங்காக உயர்த்தியது. இங்கேயும், அனைத்து தரப்பினரும் அதற்காக ஒன்றிணைந்தனர். எங்கிருந்து அதை எடுப்பது என்ற விவரங்கள் பற்றிய வேறுபாடுகள் பற்றியே சர்ச்சைகள் இருந்தன.

விவாதத்தில், 100 பில்லியன் யூரோக்கள் ஆரம்பம் மட்டுமே என்பது தெளிவாகியது. பாதுகாப்பு மந்திரி லம்பிரைக்ட், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்கு நிதி தேவைப்படும் குறைபாடுகளின் நீண்ட பட்டியலை பட்டியலிட்டார். வெடிமருந்து பற்றாக்குறைக்கு மட்டும் 20 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும். அணுசக்தி திறன் கொண்ட F-35 போர் விமானங்களை வாங்குவது உட்பட திட்டமிடப்பட்ட ஆயுதத் திட்டங்களுக்கு 100 பில்லியன் சிறப்பு நிதி விரைவில் தீர்ந்துவிடும் என்று அவர் கூறினார்.

துருப்புக்களின் பலத்தை இரட்டிப்பாக்க சேமப்படைகளின் (Reservists) சங்கம் வலியுறுத்துகிறது. 'சுமார் 200,000 சிப்பாய்களுடன், இராணுவம் மிகவும் சிறியது' என்று சங்கத்தின் தலைவர் பற்றிக் சென்ஸ்பேர்க் Rheinische Post பத்திரிகையிடம் கூறினார். தேசப் பாதுகாப்பிற்காக, சுமார் 340,000 படையினர் மற்றும் பெண்கள் மற்றும் 100,000 தொடர்ந்து பயிற்சியில் உள்ள சேமப்படையினர்களும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

ஆயுதங்களை வழங்குவதற்கான நாடாளுமன்றத்தின் முடிவுக்கு எதிராக வாக்களித்த இடது கட்சி மற்றும் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீடு (AfD) இன் பெரும்பாலான பிரதிநிதிகள் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு போக்கை ஆதரித்தனர். நான்கு AfD பிரதிநிதிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர், மூன்று பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

தற்சமயம் அதன் குரல்கள் எடுபடாதுள்ள இடதுகட்சி, கடுமையான பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் கடுமையாகத் முன்தள்ளும் அதே வேளையில், தமது தோற்றத்தை பாதுகாத்துக்கொள்ள ஆயுத விநியோகத்திற்கு எதிராக உத்தியோகபூர்வமாகப் பேசுகிறது.

துரிங்கியாவின் பிரதம மந்திரி போடோ ராமலோ (இடது கட்சி) Thüringer Allgemeine பத்திரிகை இடம், “ரஷ்யா எரிவாயு குழாயை அணைக்கும் முன், நாங்கள் படி படியாக பணக் குழாயை அணைக்கிறோம். புட்டின் தீவிரமடைவதற்கு முன், நாம் தீவிரமடையவேண்டும். ஜேர்மனியில் ரஷ்யா வைத்திருக்கும் முழு எரிசக்தி உள்கட்டமைப்பும் அறங்காவலர் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட வேண்டும், என்றார்.

சுரண்டல், போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கத்தால் மட்டுமே ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை மற்றும் அணுவாயுத போர் அச்சுறுத்தலை நிறுத்தப்பட முடியும். இந்த முன்னோக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேதினப் பேரணியில் விவாதிக்கப்பட்டது.

Loading